கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்

ப.சிதம்பரம்
02 Oct 2023, 5:00 am
0

‘மிகைப்படுத்தல்’ அல்லது ‘உயர்வுநவிற்சி’ என்ற வார்த்தைக்கு சரியான பொருள் கூற வேண்டும் என்று எந்த ஆசிரியராவது விரும்பினால், இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 2023க்காக தயாரித்த மாதாந்திர அறிக்கையை வாசித்தாலே போதும்!

“செப்டம்பர் 2023இல் புவியின் ஈர்ப்பு விசை மையம் இந்தியாவுக்கு நகர்ந்துவிட்டது, ஜி20 மாநாட்டுக்காக உலகத் தலைவர்களும் செல்வாக்கான நாடுகளைச் சேர்ந்த தலைமை நிர்வாகிகளும், அணியணியான நாடுகளும், உலக அமைப்புகளும் புதுத்தில்லியில் குவிந்திடக் கண்டோம்” என்கிறது ரிசர்வ் வங்கியின் அந்த அறிக்கை.

இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றை அப்படியே எடுத்துக்கொள்வதாக இருந்தால், புவி ஈர்ப்பு மையம் ரோம் (2021) நகரிலிருந்து பாலி (2022) நகருக்கு நகர்ந்து, அப்படியே புதுதில்லிக்கு (2023) இடம்பெயர்ந்துவிட்டது; அடுத்து ரியோ டி ஜெனிரோ நகரத்துக்கு 2024இல் போய்ச் சேர்ந்துவிடும்!

புவிஈர்ப்பு விசை மையமே புதுதில்லிக்கு இடம்பெயர்ந்ததால்தான் நாம் அதன் அதிர்வுகளைப் பல்வேறு நிகழ்வுகள் மூலம் உணர்ந்தோம்: 2023 மே மாதம் மணிப்பூரில் பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னமும் அணைக்கப்படாமல் தொடர்கிறது; காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றனர்;  இமாச்சலப் பிரதேசத்திலும் வேறு சில  மாநிலங்களிலும் நிலச் சரிவுகளும் வெள்ளங்களும் பெருமளவுக்கு சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன; தமிழ்நாட்டில் அஇஅதிமுக சிறிதுகூட மட்டு மரியாதையின்றி பாரதிய ஜனதாவைக் கூட்டணியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டது! 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்

ப.சிதம்பரம் 25 Sep 2023

‘ஜூம்லா’ அணிவகுப்பு

இப்படிப் புவிஈர்ப்பு விசை மையமே நகர்ந்துவிட்டதால் நாம் மேலும் பல வினோதமான அறிவிப்புகளையும் சம்பவங்களையும் ஒன்றிய அரசை ஆள்வோரிடமிருந்து எதிர்பார்க்கலாம். அப்படியொன்று செப்டம்பர் 20-21இல் நடந்தேவிட்டது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. 2029 பொதுத் தேர்தலுக்குப் பிறகே அது அமலுக்கு வரலாம். அடுத்தடுத்து அரங்கேறவிருக்கும் தேர்தல் நேர ஏமாற்று அறிவிப்புகள் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’, ‘அனைவருக்கும் பொது சிவில் சட்டம்’.

ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்று இப்போது போட்டி ஏற்பட்டிருக்கிறது (கோவிந்த் குழு ‘எதிர்’ சட்ட ஆணையம்), பொது சிவில் சட்ட வரைவு வாசகம் (உத்தராகண்ட் ‘எதிர்’ அசாம் ‘எதிர்’ மத்திய பிரதேசம்).

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘சர்சங்கசாலக்’ என்ற தலைமைப் பதவி வகிக்கும் மோகன் பாகவத், மதமாற்றங்கள் அதிகரிப்பது குறித்தும், ‘லவ் ஜிகாத்’ என்ற (இஸ்லாமிய ஆண் – பிற மதப் பெண்) காதல் திருமணங்கள் பெருகுவது குறித்தும் கவலைப்பட்டு, இவற்றைத் தகுந்த வகையில் எதிர்க்குமாறு ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

எனவே கிறிஸ்த தேவாலயங்கள், மத போதகர்கள், கல்வி – சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் அதிகமாகும் என்பதால் தயாராகுங்கள்; மதம் கடந்து காதலித்துத் திருமணம் செய்ய விரும்பும் இளையோர், இந்துப் பெண்களின் கௌரவத்தைக் காக்க, தங்களைத் தாங்களே ‘தார்மிக காவலர்களாக’ நியமித்துக்கொண்டுள்ள குண்டர்களின் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிக மிக அவசியம். (இந்து இளைஞர்களைக் காதலிக்கும் பிற மதப் பெண்களுக்கு யார் தார்மிகக் காவலர்களாக இருக்கப்போகிறார்கள்?)

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஏன் கூடாது ஒரே தேர்தல்?

சமஸ் | Samas 28 Sep 2023

ஆதாரம் எங்கே?

மத மாற்றம் குறித்தும் ‘லவ்-ஜிகாத்’ குறித்தும் ஆதாரங்கள் இல்லாமல் கூறப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாகுகின்றன. கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் (காரணம் அவர்கள் நடத்தும் கல்வி நிலையங்கள்தான் தரத்தில் ஆகச் சிறந்ததாக இருக்கின்றன) கேளுங்கள், அவர்களில் எத்தனை பேரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முயற்சிகள் நடந்தன என்று? கடந்த ஓராண்டில் உங்கள் ஊரில் எத்தனை மதம் கடந்த திருமணங்கள் நடந்துள்ளன என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்?

‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிய நாராயண மூர்த்தி ஒருமுறை வேடிக்கையாகக் குறிப்பிட்டார், “கடவுளை நான் முழுமையாக நம்புகிறேன், மற்றவற்றுக்கெல்லாம் எனக்கு தரவுகள் முக்கியம்.” மதமாற்றங்கள் குறித்தும் ‘லவ் ஜிகாத்’ குறித்தும் ஆர்எஸ்எஸ் தலைவர் தரவுகளை அளிப்பாரா?

மாண்புமிகு பிரதம மந்திரி (தேர்தல்) களத்தில் பிரவேசித்துவிட்டார். ‘சனாதன தர்மம்’ தாக்கப்படுகிறது என்று போர்க் குரல் கொடுத்திருக்கிறார். மத மாற்றம், லவ் ஜிகாத் என்கிற பழைய ஆயுதங்களை மோகன் பாகவத் ஆயுதசாலையிலிருந்து எடுத்துவந்திருக்கிறார். இந்திய மகளிருக்கு மோடியின் சீதனமாக, ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ பேசப்படும் (உண்மையில் அது மூழ்குகிற வங்கிக்கு கொடுத்த, பின் தேதியிட்ட காசோலை!) உலகத்துக்கே இந்தியா ‘விஸ்வ குரு’வாக மாறிவிட்டதாக நம்ப வைக்க ‘ஜி-20’ உச்சி மாநாட்டு புகைப்படங்களும் காணொலிகளும் தாராளமாகவும் - கட்டாயமாகவும் அனைத்து வகை ஊடகங்களிலும் இனி திரும்பத் திரும்பக் காட்டப்படும்.

ஒற்றுமை – செயல்திட்டம்

அதேசமயம் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இன்டியா’ (I.N.D.I.A) கூட்டணியில் மக்களுக்கு அவசியமான தேவைகளையும், மக்களை மிகவும் பாதிக்கின்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தி, தேர்தல் களத்தைச் சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரித்துவரும் இன–மத மோதல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள், வெறுப்புப் பிரச்சாரத்தால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள், மக்களுடைய சுதந்திரமான இயல்பான பேச்சு – கருத்து சுதந்திரத்துக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் அவலம், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்தைத் தொடர்ந்து அரித்துவரும் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீதே நடத்தப்படும் தாக்குதல்கள், நீதித் துறையையும் நீதிமன்றங்களையும் அதிகாரமிழக்க வைக்கும் முயற்சிகள், இந்திய எல்லைக்குள் சீனம் நிகழ்த்திவரும் எல்லையோர ஆக்கிரமிப்புகள், அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், மந்தமாகிக்கொண்டேவரும் பொருளாதார நடவடிக்கைகள், மக்களிடையே வருமானம் – செல்வ வளத்தில் அதிகரித்துக்கொண்டேபோகும் ஏற்றத்தாழ்வுகள், அரசால் ஊக்குவிக்கப்படும் சலுகைசார் முதலாளியம், மக்கள் நல நடவடிக்கைகளில் ஏற்படும் தேய்வுகள், தேசியக் கடன் சுமை அதிகரித்துவரும் நிலை, உளவு – புலனாய்வுப் பிரிவுகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரிப்பது, நாடாளுமன்ற நிறுவனங்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பது - நடைமுறைகளை உதாசீனப்படுத்துவது, அதிகாரங்களை மையத்தில் குவிக்கும் போக்கு அதிகரிப்பது, தனிநபர் துதி பாடுவதை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய எதிர்க்கட்சிகள் உத்தி வகுத்துவருகின்றன.

பண பலம், அடியாள் பலம், சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது ஆகிய உத்திகளால் எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை மழுங்கச் செய்துவிடலாம் என்று பாரதிய ஜனதா நம்பிக்கொண்டிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?

சமஸ் | Samas 08 Sep 2023

இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய சிக்கலில் ஆழ்ந்திருக்கிறது, அது மிகவும் தவறாக நிர்வகிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் சில அடையாளங்களைக் காண்போம்.

வேலையில்லாத் திண்டாட்டம்: 2023 ஆகஸ்ட்டில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 8.1%, 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடையே வேலை கிடைக்காத அளவு 2022-ல் 23.22%. பட்டதாரிகளிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 42% என்று இந்திய வேலைவாய்ப்பு நிலவரம் பற்றிய 2023 அறிக்கை தெரிவிக்கிறது. 2023 ஆகஸ்டில் மட்டும் 1,91,60,000 குடும்பங்கள், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி’ திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலை வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

விலைவாசி உயர்வு – பணவீக்கம்: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் 23 அறிக்கையின்படியே நுகர்வோர் விலை குறியீட்டெண் 6.8%, எரிபொருள் பணவீக்கம் 4.3%, உணவுதானியங்களின் பணவீக்கம் 9.2%. 2022 பிப்ரவரி முதலே ‘நுகர்வோர் விலை குறியீட்டெண்’ (சிபிஐ) என்பது மக்களால் தாங்க முடிந்த வரம்பான 6% என்பதைவிட அதிகமாகவே இருக்கிறது.

குடும்ப நிதி இருப்பு: குடும்பத்தினர் செலவு போக சேமிக்கும் அல்லது உபரியாக கையில் வைத்திருக்கும் தொகையின் அளவு ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் 15.4%லிருந்து (2020-21) 10.9% (2022-23)ஆக சரிந்துவிட்டது. இதே காலத்தில் குடும்பங்களின் நிதிப் பொறுப்பு அல்லது கடன் சுமை 3.9%லிருந்து 5.8%ஆக அதிகரித்துவிட்டது. நிகர நிதி சொத்துகளின் மதிப்பு 11.5%லிருந்து 5.1%ஆகக் குறைந்திருக்கிறது.

மக்களுடைய நல்வாழ்வுக்கு அடையாளமாகக் கருதப்படும் மூன்று மோடி முக்கியமான அம்சங்களிலும் மோடி தலைமையிலான அரசு படுமோசமாக தோல்வியடைந்துவிட்டது. 1977க்குப் பிறகு, பொதுத் தேர்தலில் இந்த அளவுக்குத் தெளிவான மோதல் களம் ஏற்பட்டதேயில்லை.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்
சமூகநீதியுடன் நிறையட்டும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
சொன்னதைச் செய்திடுமா இந்தியா?
மகிழ்ச்சி சரி, எக்காளம் கூடாது
ஏன் கூடாது ஒரே தேர்தல்?
ஏன் கூடாது ஒரே நாடு ஒரே தேர்தல்?
ஒரே நாடு, ஒரே துருவம்!
தர்மத்தில் எது சனாதனம்?
காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இரக்கத்துடன் துடிக்கும் இந்திய மனச்சாட்சி நயன்தாராஉட்கார்வதற்கான உரிமைமென்பொருள்ஹார்வர்ட் பல்கலைக்கழகம்அலைக்கற்றை விவகாரம்ஞானவேல் அருஞ்சொல் பேட்டிஸ்வாந்தே பேபுநடப்புப் பொருளாதாரம்மொழித் திறன்பத்தாம் வகுப்புபழச்சாறுகேசவ் தேசிராஜு காம்யுசில்க்யாராபிரதீப்டெல்லி வாழ்க்கைஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவுசாதியற்ற சமூகம்40 சதவீத சர்க்கார்கர்ப்பப்பைக் கட்டிகள்வன்முறையற்ற இந்துமொழி அவரவர் முன்னுரிமைடிசம்பர் 6வினைச்சொல்டயபடிக் நியூரோபதிஆண்களுக்கே உண்டான அவதி!அணுக்கருவிஜய் வரட்டும்… நல்லது!பரத நாட்டியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!