கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

தர்மத்தில் எது சனாதனம்?

சுந்தர் சருக்கை
26 Sep 2023, 5:00 am
0

னாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம், நன்கு நிறுவப்பட்ட கருத்தாக்கங்களாக இருந்தாலும்கூட, அதுவும் அது மதம் தொடர்பானதாக இருந்தாலும்கூட, அது குறித்துக் கேள்விக் கேட்க வேண்டிய முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டவதாக இருக்க வேண்டும். வரலாற்றுரீதியாக, மதத்தில் தத்துவார்த்தக் கருத்துகள் இப்படியான விமர்சனத்தின் ஊடாகத்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

எது நிலையானது?

பொதுவாக, சனாதன தர்மமானது இந்து மதத்தோடு சமன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதன் ஊடாக, இவ்வுலகம் சார்ந்த இந்து மத நடைமுறைகளின் நம்பிக்கைகளோடு நிலையான (சனாதன) தார்மீக நெறிமுறைகள் சமன்படுத்தப்படுகின்றன. ஆனால், சனாதன தர்மத்தை இந்து மதத்தோடு மட்டுமே சமன்படுத்த முடியும் என்று நம்புவதற்கு எத்தகைய காரணங்களும் இல்லை. ஒவ்வொரு மதமும் நிலையானது என்ற கருத்தமைவையும், தார்மீக நெறிமுறைகளையும் அதிக அளவில் சார்ந்திருப்பதாகதான் இருக்கின்றன. மானுடச் செயல்களுக்கு இவை வழிகாட்டியாகவும் இருக்கின்றன. ஆக, சிலர் கோருவதுபோல், உதயநிதியின் விமர்சனம் இந்து மதத்தை அழிப்பதற்கான அறைகூவலாக இருக்க முடியாது.

சனாதனம் என்ற சொல் பொதுவாக நிலையான ஒன்றாக மொழியாக்கம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே சனாதன தர்மத்தில் நிலையானது எது? குறிப்பிட்ட சில தார்மீக நெறிமுறைகள் / கடமைகள் (தர்மம்) நிலையானவை என்பது நாம் இப்போது கொண்டிருக்கும் அர்த்தமாக இருக்கிறது. இந்த நெறிமுறைகள் எல்லாம் இந்து நம்பிக்கையின் பகுதியாகப் பார்க்கப்படுகின்றன. சாதி, பாலினம், சமூக நடைமுறைகள் குறித்து ஒருவிதமான பார்வைகள் நிலையானவையாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், முந்தைய காலங்களில் (ஒரு சிலருக்கு) ‘சரியானது’ போல் தோன்றிய நடைமுறைகள் எல்லாம் இன்றும் அப்படியாக இருக்க முடியும் என்று நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? எது இந்த நடைமுறைகளை எல்லாம் ‘நிலையான’தாக்குகிறது?

மாற்றமடையா பண்பே நிலையானதன் எளிமையான அர்த்தமாகிறது. மாற்றம் என்றால் என்னவென்று விவரிக்க முயல்வதிலிருந்துதான் தத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் தொடங்குகிறது. நம்முடைய பெளதீக உலகத்தில் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய உடலுக்கு வயதாகிறது, அழுகிப்போகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இயற்கை நிகழ்வுகளின் மிக அடிப்படையாகவும் மிகப் பொதுவானதாகவும் இருக்கும் மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம் என்றால், தத்துவத்தின் (மற்றும் நவீன அறிவியலின்) மையமான செயல்பாடு மாற்றத்தை விவரிப்பதற்கான முயற்சியாகத்தான் இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 18 நிமிட கவனம்

சனாதனம் என்றால் என்ன?: சமஸ் பேட்டி

05 Sep 2023

இதுவே நிலையானது!

மாற்றத்தை விவரிக்க நிலையான ஒன்றைக் கொண்டிருப்பது அவசியத்தைத் தத்துவவியலாளர்கள் உணர்ந்துகொண்டார்கள். நம்முடைய உடல் மாறிக்கொண்டு இருக்கிறது என்றாலும்கூட, ஏதோ ஒன்று மாறாமல் இருந்துவருகிறது. பல மரபுகளில், ஆன்மா மாறாத ஒன்றாக இருக்கிறது. அதனால், ஆன்மா நிலையானதாகப் பார்க்கப்படுகிறது. நவீன காலத்தில், நம்முடைய உடலும் மனமும் மாறிக்கொண்டே இருந்தாலும்கூட, சுயம் என்பது மாறாத ஒன்றாக நினைத்துக்கொள்கிறோம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கடவுள் நிலையானவர். அதாவது, மானுடர்கள்போல், கடவுளுக்கு வயது கூடுவதில்லை. அவர் அழுகிப்போவதில்லை; இறந்துபோவதில்லை. மாற்றத்துக்கு உள்ளாகும் அறிகுறிகள் எதையும் நிலையான கடவுள் வெளிப்படுத்துவதில்லை. கடவுள் குறித்து இப்படியான புரிதல் பொது அறிவாக இருந்துவருகிறதென்றால், வேறு இரண்டு எடுத்துக்காட்டுகள் உண்மையிலேயே ஒளிபாய்ச்சுவதாக இருக்கின்றன. 

எண்கள், தொகைகள் போன்ற கணிதவியல் உருப்படிகள் நிலையானவை என்ற நம்பிக்கை காணப்படுகிறது. மேற்கத்தியத் தத்துவத்தின் பிரதான மரபு ஒன்று, கணிதவியல் உருப்படிகள் நிலையானவை என்றும், நம்முடைய பெளதீக உலகத்திலிருந்து சுதந்திரமான இருப்பைக் கொண்டவை என்றும் பார்க்கிறது.

எண்கள் மாற்றமடைவதில்லை. வேறொன்றாக மாறி அழுகிப்போவதில்லை. நம்மால் நினைத்துப் பார்க்க முடிந்த கால அளவுக்கு 1 எப்போதும் 1ஆகவே நிலைத்திருக்கிறது. இந்த அர்த்தத்தில் இன்றும்கூட கணிதவியல் பொருட்களை நவீன அறிவியல் நிலையானவையாகப் பார்க்கிறது. சுவாரஸ்யமாக, இந்திய மற்றும் சீனக் கணிதவியலாளர்களும் தத்துவவியலாளர்களும் எப்போதும் எண்களை நிலையானதாகவோ மாறாத்தன்மையிலானதாகவோ பார்க்கவில்லை. மேற்கத்தியத் தத்துவத்தில் மட்டுமல்லாமல், பெரும் தாக்கம் செலுத்திவரும் ஐரோப்பியக் கணிதவியலாளர்களிடமும்கூடக் கணிதவியல் தெய்வீகத்தன்மையோடு ஆழமாக உறவுகொண்டிருக்கும் ஒன்றாக இருந்துவருவதில் நாம் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை.

காலமும் வெளியும்

இரண்டாவது, மாற்றத்துக்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டான இயக்கம். பெரும்பாலும் இயக்கம் என்பது ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், நிலையில் ஏற்படும் மாற்றமாக முன்வைக்கப்படும் இயக்கம் குறித்த விவரிப்பு, மாற்றமடையாத ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இயக்கத்தை விவரிக்க ஐசக் நியூட்டனுக்கு இரண்டு உருப்படிகள் தேவைப்பட்டன: காலமும் வெளியும். ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றத்தை நாம் அடையாளம் காண்பதற்கு, அதன் பின்னணியில் மாறாத காலமும் வெளியும் தேவைப்படுகின்றன. ஆக, மிகச் சாதாரண இயக்கத்தைப் புரிந்துகொள்ள நாம் காலத்தையும் வெளியையும் நிலையானதாகப் பார்க்க வேண்டியுள்ளது. நியூட்டனும்கூடக் காலத்தின், வெளியின் நிலைத்தத்தன்மையைக் கடவுளின் பண்போடு தொடர்புபடுத்தியே பார்க்கிறார்.

இப்படித்தான், மாற்றம் எப்படியானதாக இருந்தாலும் அதைப் புரிந்துகொள்வதற்கு, நிலையானது என்ற கருத்து மிக அவசியமானதுபோல் தோன்றுகிறது. ஆக, ஏன் நிலையானது — சனாதனம் — தர்மத்தோடு சேர்க்கப்படுகிறது? இப்படிச் சேர்ப்பதன் மூலம், தார்மீக நெறிமுறைகள் எல்லாம் மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியவையாக இருக்கின்றன என்று ஏற்றுக்கொள்வதாக இருக்கிறதா? மிக முக்கியமான ஒன்றான இதைப் புரிந்துகொள்ள நாம் இந்து, பெளத்த, சமணத் தத்துவங்களுக்கு அப்பால் பார்க்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

மாற்றமடையா நெறிமுறைகளில் தார்மீகம் குடிகொண்டிருக்க முடியாது. எந்த மதமாவது நமக்கு இதைக் கற்றுக்கொடுக்க முடியும் என்றால் அது இந்து மதமாகத்தான் இருக்க முடியும். மிகப் பிரபலமான இந்துப் பிரதிகள் எல்லாமும், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற கற்பிக்கும் இலக்கியங்கள் அல்லது புத்த ஜாதகக் கதைகள் அல்லது சமணப் பிரதிகள் உட்பட எல்லாமும், நிலையான தார்மீக நெறிமுறைகள் என்று எதையும் முன்வைக்கவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?

சமஸ் | Samas 08 Sep 2023

தார்மீகமும் கோட்பாடும்

தார்மீகச் செயல்கள் எல்லாம் சூழ்நிலை சார்ந்ததாகவே இருக்கின்றன. இதனால்தான், இந்தத் தத்துவங்கள் தார்மீகம் குறித்து ‘கோட்பாடுகள்’ எதையும் உருவாக்கவில்லை. மாறாக, தார்மீகம் குறித்து மிகவும் சக்திவாய்ந்த, ஆழமான பார்வையைக் கொடுக்கக்கூடிய கதைகளை மட்டுமே முன்வைக்கின்றன. (முறையான தார்மீக நடத்தைகளுக்கான விதிகளை முன்வைக்கும் பிரதிகள், மக்கள் மீது சில நெறிமுறைகளைச் சுமத்த முயல்கின்றனவே தவிர, அவை எதுவும் தார்மீகம் குறித்து ‘கோட்பாடுக’ளை முன்வைக்கவில்லை). சூழ்நிலை சார்ந்திருப்பதாக சொல்லும்போது, அது நிலையானதாக இருக்க முடியாது; எப்போதும் மாற்றத்தை வரவேற்கக்கூடிய ஒன்றாகவே இருக்க முடியும். இதனால்தான், குறிப்பிட்ட தார்மீகச் செயல்கள் எதையும், குறிப்பாக இந்து மதத்தில், நிலையானவையாகப் பார்க்க முடியாது.

சனாதன தர்மத்தை நாம் வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. உண்மையிலேயே தார்மீகரீதியாகச் செயல்படும் தேவையே நிலையானது என்ற எளிமையான உண்மையைத்தான் சனாதன தர்மம் என்ற சொல் வெளிப்படுத்துகிறது. இது, குறிப்பிட்ட விதிகளை, கடமைகளை எக்காலத்திற்கும் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கவில்லை. நாம் இந்தக் கருத்தை உதறித்தள்ளிவிடக் கூடாது. ஏனெனில், மானுட வாழ்க்கையில் மிகச் சரியான தார்மீக விதிகள் என்று எது ஒன்றையும் குறிப்பிடாமல், தார்மீகரீதியாகச் செயல்படுவதற்கான ஆற்றலே உண்மையான சனாதனம் என்று இந்த வெளிப்பாடு முன்வைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சமூகங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும்போது, நாம் புதிய நெறிமுறைகளைக் கண்டெடுக்க வேண்டியுள்ளது. சனாதன தர்மம் என்பது, முதலாவதாகவும் முக்கியமாகவும், மதத்தை வரையறுப்பதாக இல்லாமல், மானுடராக இருப்பது என்றால் என்னவென்று வரையறுப்பதாகவே இருக்க முடியும்.

இன்றைய சூழலில், எப்படியான தார்மீக நெறிமுறைகள் மிக முக்கியமாகின்றன? அம்பேத்கரின் மைத்ரி என்ற அடிப்படையான விழுமியத்திலும் அகிம்சைக் கொள்கையிலும் பொறிக்கப்பட்டுள்ளன ஜனநாயக கொள்கைகளே முக்கியமான தார்மீக நெறிமுறைகளாக இருக்கமுடியும். சமூத்தில் எந்த நிலையில் இருந்தாலும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் சமமாகவும் சுயமரியாதையோடும் நடத்தப்படுவதற்கான வழியை இதுவே உத்தரவாதப்படுத்த முடியும்.

உதயநிதியின் கேள்வி

சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவர்கள் யாராக இருந்தாலும், எந்த வடிவத்திலுமான தீண்டாமையையும், சாதியப் படிநிலைகளையும், ஆணாதிக்கத்தையும், இருப்பு என்று அவர்கள் ஒன்றைக் கொண்டிராததுபோல் ஏழைகள் நடத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்க முடியாது. சாதியக் கடமைகள் தார்மீகக் கடமைகளாக இருக்க முடியாது; அவை நிலையானவையாகவும் இருக்க முடியாது. அவற்றை நிலையானவையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆக, நாம் நம்முடைய இன்றைய சமூகத்துக்குப் பொருத்தமான தார்மீக நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோருவதாக உதயநிதியின் விமர்சனத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

உதயநிதி சரியான கேள்வியையே கேட்டிருக்கிறார். இது, தலித் (மற்றும் அதுபோன்ற பிற) அடையாளங்களை, தேவைகளை திராவிட அரசியலுக்குள் அறரீதியாக உள்ளிணைத்துக்கொள்ள முடியாத போதாமையைக் கேள்விக் கேட்க கொண்டுவிடும் என்று நம்புவோம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்
சனாதனம் என்றால் என்ன?: சமஸ் பேட்டி
சனாதனத்தை எப்படிப் பார்ப்பது? சமஸ் பேட்டி
காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சுந்தர் சருக்கை

சுந்தர் சருக்கை, பேராசிரியர். தத்துவவியலாளர். தமிழில், ‘இரண்டு தந்தையர்’, ‘சிறுவர்களுக்கான தத்துவம்’, ‘விரிசல் கண்ணாடி’ ஆகிய சருக்கையின் நூல்கள் மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கின்றன.

தமிழில்: சீனிவாச ராமாநுஜம்

2

1





முதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்என்எஃப்டிபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாதிருமாவளவன்பட்டப் பெயர்மவுத் வாஷ்திராவிட மாடல்பண்டிதர் 175இந்திய நதிகள்அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது?சுந்தர் பிச்சை அருஞ்சொல்தேவ கௌடாஆல்-ரவுண்டர்வடக்கு - தெற்குவிவியன் போஸ்பார்வதிஇழிவுவடவர் ஆதிக்கம்தொல்லியல் துறைபேராசிரியர் கல்யாணிகடவுளின் விரல்விற்க முடியாத நிலை!முத்தலாக்படைப்புச் சுதந்திரம்வரிமுறைபொங்கல் கொண்டாட்டம்எல்.இளையபெருமாள்மொழிப்போர் தியாகிகள்சிந்த்வாரா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!