கட்டுரை, அரசியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

சொன்னதைச் செய்திடுமா இந்தியா?

ப.சிதம்பரம்
18 Sep 2023, 5:00 am
0

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த ‘காட்சித் தலைவர்’. ஜி20 உச்சி மாநாட்டின்போது உலகத் தலைவர்கள் முன்னிலையில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இயல்பாகவே ஆளுமை கொண்ட தலைவராகத் தன்னை வெளிப்படுத்தினார். அவர் பேசுவதில் ஒரு வார்த்தைக்கூட தவறாகப் பொருள் கொண்டுவிட முடியாத அளவுக்கு உரைகளைத் தயாரிக்கும் திறமையான அணியை வைத்திருக்கிறார். தன்னுடைய அமைச்சரவை சகாக்களுக்குக் கேமரா திரையில் அங்குலம் அளவுக்குக்கூட இடம் கிடைத்துவிடாதபடிக்கு முழுக்க தானே ஆக்கிரமிப்பது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர், இந்த மாநாட்டின்போதும் தனது சுபாவத்துக்கு ஏற்ப, செய்தி ஊடகர்களைச் சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டார். ஊடகர்களின் கேள்விகளிலிருந்து தான் மட்டும் தப்பிக்கவில்லை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் எந்த ஊடகரையும் சந்திக்க முடியாதபடிக்குத் தடுத்துவிட்டார். இதனால் எரிச்சலும் விரக்தியும் அடைந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவினர், “இந்த ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக, அடுத்து வியட்நாம் பயணத்தின்போது கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் பைடன்” என்று தெரிவித்தனர்.

கவர்ச்சியே அவரின் பாணி!

இந்த மாநாட்டை நடத்துவதற்கு அரசுக்குப் பணத் தட்டுப்பாடு இருந்ததாகவே தெரியவில்லை. தில்லி மாநகரத்தின் அனைத்து முக்கிய சாலைகளும் மீண்டும் தார் போட்டு மெழுகப்பட்டன, சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டன, செடி – கொடிகள் பூத்துக் குலுங்கச் செய்யப்பட்டன, சிற்பங்களும், விளம்பரப் பலகைகளும் நகரெங்கும் நிறுவப்பட்டன. ஒரு மாநகரத்துக்குத் தேவைப்படுவதைவிட அதிகமான அளவுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

இதில் மிஞ்சிய பொருள்களை ரியோடி ஜெனிரோ நகரில் அடுத்து நடைபெறவுள்ள மாநாட்டுக்கு தாரளமாக அனுப்பிவைக்கும் அளவுக்குப் பொருள்கள் உபரியாகவே இருந்தன. ஆனால், எல்லா இடங்களிலும் ‘ஒரேயொரு முகம்’ மட்டுமே தென்பட்டது. இந்த நாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களில் ஒருவருடைய புகைப்படத்துக்குக்கூட அதில் இடம்பெறும் பேறு கிட்டவில்லை!

கொஞ்சம் சாரமும் உண்டு

எல்லா சர்வதேச மாநாடுகளுக்குப் பிறகும் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ பிரகடனத்தைப் போல, தில்லி உச்சி மாநாடும் மிக உயரிய லட்சியங்களை முன்வைத்து அறிவித்தது. உதாரணத்துக்கு, “மிகவும் முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் நாம் சந்தித்திருக்கிறோம்; இப்போது நாம் எடுத்துள்ள முடிவுகள் நம்முடைய மக்களின் இந்தப் புவிக் கோளத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்கிறது. கடந்த கால உச்சி மாநாடுகளிலும் இதே போன்ற வாசகங்கள்தான் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும்; சந்தேகமே வேண்டாம் – அடுத்த உச்சி மாநாட்டிலும் இதே போன்ற வாசகங்களே இடம்பெறும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மகிழ்ச்சி சரி, எக்காளம் கூடாது

ப.சிதம்பரம் 04 Sep 2023

மாநாட்டின் ஆக்கப்பூர்வமான சில விளைவுகள்:

  • ‘உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சொல்லாமலே, ‘உக்ரைன் போர் குறித்து’ பிரகடனம் பேசுகிறது. இந்தக் கூட்டறிக்கையை ரஷ்யாவும் அமெரிக்காவும் (அதன் தோழமை நாடுகளும் சேர்ந்து) ஏற்கத்தக்கதாகக் கருதியது மிகப் பெரிய சாதனைதான். ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாநாட்டுக்கு வராமலிருந்தது இதற்கு உதவியிருக்கிறது. உக்ரைன் விவகாரத்தை ஒதுக்கி வைப்பது என்றே மாநாட்டுத் தலைவர்கள் விரும்பியதைப் போல உணர்கிறேன், அதனால்தான் ஜி20 அமைப்பு நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மட்டும் பேசப்பட்டிருக்கிறது. 
  • உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யுடிஓ) அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மாநாடு மிகவும் வலிமையான உறுதிமொழியை அளித்திருக்கிறது. அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் 2024க்குள் எல்லா பிரச்சினைகளையும் முழுமையாகவும் விரைவாகவும் தீர்க்க புகார்களுக்குத் தீர்வுகாணும் அமைப்பை ஏற்படுத்துவோம் என்றும் அனைவரும் வர்த்தகம் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் உற்ற சூழ்நிலையை அமைப்பு நாடுகளுக்குள் உருவாக்குவோம் என்றும் உறுதி தரப்பட்டிருக்கிறது. 2019இல் இந்த அம்சம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் சிறுபிள்ளைத்தனமாக சீறியதிலிருந்து, மாறுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் நகோசி ஒகாஞ்சோ இவேலா மாநாட்டில் இருந்தது இதற்கு உதவியிருக்கலாம். 
  • பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் நேரடிப் பங்களிப்பில் ஏற்பட்டுவிட்ட இடைவெளி குறைக்கப்படும் (அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்), அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், உற்பத்தியில் ஆண்கள் மட்டும் அதிகம் ஈடுபடும் பாலின அசமத்துவம் சீர்செய்யப்படும், பாலின அடிப்படையிலான வன்செயல்களும் மகளிருக்கு எதிரான வல்லுறவுகளும் ஒழிக்கப்படும், மகளிரை அலைக்கழிப்பது, அவதூறாகப் பேசுவது, அவர்களிடம் தவறாக நடந்துகொள்வது, பாரபட்சமாக நடத்துவது, பெண்கள் என்றாலே மட்டமாகப் பார்ப்பது போன்ற அனைத்து தீச் செயல்களும் ஒடுக்கப்பட்டு பாலின சமத்துவம் நிலைநாட்டப்படும் என்றும் மாநாட்டுப் பிரகடனம் அறிவிக்கிறது.
  • அனைத்து விதமான, அனைத்து வகையிலான பயங்கரவாதச் செயல்களும் கண்டிக்கப்படுகின்றன; வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, இனவாதம், இதர வகையிலான சகிப்புத்தன்மையற்ற செயல்கள், மதம் அல்லது வழிபாட்டு நம்பிக்கைகள் அடிப்படையிலான விரோதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களும் கண்டிக்கப்படுகின்றன. அனைத்து மதத்தவரும் உலகின் எல்லாப் பகுதியிலும் சமாதானத்துடன் இணக்கமாக வாழ வழிசெய்யப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்படுகிறது.
  • 34 பக்கம் கொண்ட இந்த அறிக்கையின் 83வது பத்தியில் இடம்பெற்றுள்ள அறிவிப்பானது, கடந்த காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள், இப்போது மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் அடிப்படையிலானது.  

வழுக்குப் பாறை     

‘ஜி 20 நாடுகளிடையே இந்தியா முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது, 2023இல் இந்தியாவின் தலைமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வு’ என்று இந்தியா பெருமை பாராட்டிக்கொள்கிறது, அதை ஊடகங்களும் அப்படியே (கேள்வி கேட்காமல்) வெளியிட்டன; ‘அசாதாரணமான பொருளாதார வளர்ச்சியாலும், பிரதமரின் தலைசிறந்த வழிகாட்டலாலும்’ இந்த நிலை ஏற்பட்டதாகவும்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜி20 மாநாட்டுத் தலைமை என்பது போட்டி நடத்தி அளிக்கப்படுவதல்ல என்பது அனைவருக்குமே தெரியும். இந்தத் தலைமை ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும், சுழற்சி அடிப்படையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது அடுத்து பிரேசில் (2024), அதற்கடுத்து தென்னாப்பிரிக்கா (2025) என்று போய் 2026இல் அமெரிக்காவிடமிருந்து புதிய சுற்றில் மீண்டும் ஆரம்பிக்கும்.

அது மட்டுமல்லாமல் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி நன்றாக இல்லை; இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் மிகவும் மிதமானது (சராசரியாக 5.7%). இந்தியா இந்த வளர்ச்சியை அடைந்ததாகக் கூறுவதற்குக்கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் டாக்டர் அசோக் மோடியும் ஒரு காரணம்; ‘உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வருமானம்’ என்ற அடிப்படையில் 2023-24இன் முதல் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்; செலவுகள் அடிப்படையில் பார்க்கும்போது இதே வளர்ச்சி 1.4% மட்டுமே, இத்தனை பெரிய அளவுக்கு வேறுபாடு ஏன் என்று விளக்கப்படவில்லை. தேசியத் தரவுகள் அலுவலகம் (என்எஸ்ஓ), இதில் முதல் கணிப்பு சரியென்றும், அடுத்த கணிப்பை காலப்போக்கில் சரி செய்துவிடலாம் என்றும் கூறுகிறது! “பொருளாதார ஆய்வுக்கான தனிப்பிரிவின் வழிமுறையைப் பயன்படுத்தினால், சமீபத்திய வளர்ச்சி வேகம் 7.8%லிருந்து 4.5%ஆக சரிந்துவிடுகிறது” என்கிறார் பேராசிரியர் மோடி.

பேராசிரியர் மோடியின் கருத்தோடு நாம் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், வளர்ச்சி வேகம் சரிகிறது, மக்களிடைய வருமானம் – செல்வம் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டேவருகின்றன, வேலைவாய்ப்புகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பவை உண்மையல்ல என்று யாருமே மறுக்க முடியாது.

வளர்ச்சி வீதம் தொடர்பான இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும்; இந்திய அரசு அளித்துள்ள சில வாக்குறுதிகள் குறித்தும் நிறைவேற்றப்போவதாகக் கூறியுள்ள கடமைகள் குறித்தும் எனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பே ஏற்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படும்; நடுத்தர – சிறு தொழில் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றன, வேலைவாய்ப்புகளைப் பெருக்குகின்றன; உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தை பாதுகாக்கும் (காப்புவரி விதிப்பு) நடவடிக்கைகளை அரசு ஊக்குவிப்பதில்லை; சந்தையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்குத் துணை போகப்போவதில்லை; சமூக பாதுகாப்பு பலன்களை எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவோம், எவருக்கும் எந்தப் பயனும் கிடைக்காமல் போக விட்டுவிடமாட்டோம்’. இப்படிப்பட்ட செறிவான செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் இப்போதைய அரசு தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இந்த அரசையே மக்கள் மாற்ற வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய நிலையில் ஜி20 அமைப்பில் உள்ள முன்னணி நாடுகளின் அருகிலேயே இந்தியா இல்லை. தனிநபர் வருமான சராசரி அடிப்படையில் பார்த்தால் அந்தப் பட்டியலின் கடைசி நாடாக இருக்கிறது. மனித வள ஆற்றல் வளர்ச்சி, உற்பத்தியில் தொழிலாளர்கள் நேரடிப் பங்களிப்பு விகிதம், உலக அளவிலான பட்டினிக் குறியீட்டெண் இன்னும் இவை போன்ற சில வரையறைகளிலும் இந்தியாவின் நிலை உயர்வாக இல்லை. ஜி20 மாநாட்டில் பெருமைபடப் பேசியவற்றையெல்லாம் அரசு இனியாவது நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

 

தொடர்புடைய கட்டுரை

மகிழ்ச்சி சரி, எக்காளம் கூடாது

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அனைத்தையும் பற்றியக் கோட்பாடுஇரட்டை என்ஜின்கோயில்களில் என்ன நடக்கிறது?புற்றுநோய்த் தாக்கம்தலைமறைவு வரலாற்றினர்உழவர் சந்தைகள்மகா.இராஜராஜசோழன் கட்டுரைபொருளாதர முறைமைஎழுத்துசமஸ் கி.ரா. பேட்டிதொழிலாளர் கட்சிசீமாறுகலைஞர் செல்வம்தாத்தாஜோ பைடன்நாசிஸம்இரண்டில் ஒன்று... காந்தியமாசமூக உரசல்கள்காது இரைச்சல்சோழர்கள்எழுத்தாளர் கி.ரா.அசோகர் கல்வெட்டுகள்தமிழக காங்கிரஸ்கருணாநிதிபடிப்படியான மாற்றங்கள்பாலியல் வல்லுறவுதமிழ் இதழியல்பல்லடம்யோகேந்திர யாதவ் கட்டுரைராமச்சந்திர குஹா அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!