கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
மகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா (128வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்) நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. ‘ஒன்றுமில்லாததற்கு ஏதோ கொஞ்சம்’ (சம்திங் ஈஸ் பெட்டர் தன் நத்திங்) என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டச் சீர்திருத்தங்களிலேயே மிக மிக கேலிக்கூத்தானது இந்த மசோதா.
பதிமூன்று ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு, திடீரென விழித்துக்கொண்டதைப் போல, அவசர அவசரமாக – அதிலும் குழப்பம் தரும் வாசக அமைப்புகளுடன் - இதை நிறைவேற்றிவிட்டார்கள்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதைப் பற்றித்தான் விவாதிக்கப்போகிறார்கள் என்பதை கடைசி வரை மர்மமாக வைத்திருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை உடனே அமல் செய்யப்போவதில்லை என்பது தெரிந்த பிறகு இது கேலிக்கூத்துதான் என்பது விளங்கிவிட்டது.
அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்து – நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் (சீரமைப்பு) மறு வரையறை அதன் அடிப்படையில் நடந்து முடிந்த பிறகு இது அமலுக்கு வரப்போகிறது!
அக்கறை காட்டவில்லை
மசோதா மீது நடந்த விவாதங்கள் செறிவாகவோ சுவாரசியமாகவோ இல்லை; மகளிர் நலனுக்காகத் தங்களுடைய கட்சி என்ன செய்தது அல்லது என்ன தீர்மானித்தது, தங்களுடைய தலைவர் எப்போது என்ன பேசினார் என்றெல்லாம் அவரவர் கட்சிகளின் மகளிர் அக்கறை பற்றித்தான் பேசினர். இந்த மசோதாவின் சிடுக்குகள் குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு, தெளிவான பதிலைக் கூற முடியாமல் ஒன்றிய சட்ட அமைச்சர் திக்கினார் – திணறினார்; உள்துறை அமைச்சரோ, எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைகளை ஆதிக்க உணர்வோடு, அதிகாரத் தொனியில் நிராகரித்துக்கொண்டே வந்தார்.
மசோதாவை ‘வெளிப்படை’யாக தயாரித்துவிட்டதைப் போல காட்டிக்கொண்டாலும், அதிலே பல ‘ரகசியங்கள்’ புதைந்திருக்கின்றன; ‘பெருந்தன்மை’யோடு நடந்துகொள்வதைப் போல ஆரம்பத்தில் பேசினாலும், ‘சிறுபிள்ளைத்தனம்’தான் போகப்போக வெளிப்பட்டது. வரலாற்றில் இடம்பெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் கூடவே கேலிக்கூத்தாக ஒரு நிழலும் படிந்துவிடுகிறது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்குள்ளும் பொய் நம்பிக்கையும், நயவஞ்சகமும், கபடமும்தான் நிரம்பியிருக்கிறது.
ஆணாதிக்கமே புரையோடிக்கிடக்கும் இந்திய அரசியலில், மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், கடந்த 27 ஆண்டுகளாக அதே நிலைமைதான் தொடர்கிறது: பெண்களுக்கான இடத்தைத் தருவதைப் போல தோற்றம் தந்துவிட்டு – தனக்கான இடத்தைத் தராமல் தக்க வைக்கும் ஆணாதிக்க உத்தியே இங்கும் கையாளப்பட்டிருக்கிறது. நோக்கம் என்ன என்று காட்டும்போது மகளிருக்கு ஆதரவாகவும், செயல்படுத்தவரும்போது அதற்கு நேர் எதிராகவும்தான் நடவடிக்கைகள் இருக்கின்றன.
மகளிர் மசோதாவை ஆதரிப்பவர்களும் - எதிர்ப்பவர்களும், மகளிருக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தரும் வகையில் நாடாளுமன்றத்தை மாற்றினால் ஏற்படப்போகும் அரசியல் விளைவுகள் குறித்து ஆராய்வதில் அக்கறை காட்டவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டால் ஏற்படப்போகும் பயன் என்ன என்பதற்கு விடை அளிக்கும் எந்த வடிவமும் இந்த அலங்கோலமான மசோதாவில் இல்லை என்பதில் வியப்பேதும் இல்லை.
மகளிர் மசோதாவால் இப்போது என்ன ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?
இது எப்படி நிறைவேற்றப்படப்போகிறது?
எப்போது?
தெளிவின்மை!
இப்போது எதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, அதாவது நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் மூன்றில் ஒரு பகுதி மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவசரக்கோலத்தில் தயாரான இந்த மசோதாவின் தெளிவில்லாத முக்கிய அம்சம் ஒன்றை, ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பர்த்ருஹரி மஹதாப் சுட்டிக்காட்டியிருக்கிறார்; ‘மக்களால் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது என்றுதான் வாசகம் சொல்கிறது’ என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும்கூட இப்படி மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும் என்று அது கூறவில்லை. ஒருவேளை ஒரு மாநிலத்தின் மொத்த மக்களவை இடங்களில் சரிபாதி மகளிருக்கும் இன்னொரு மாநிலத்தில் ஓரிடம்கூட இல்லாமலும்கூட இடங்கள் கணக்கிடப்படவும் வாய்ப்பிருக்கிறது! இதைக் கேட்டபோதுதான் பதில் அளிக்க சட்ட அமைச்சர் திணறினார்.
தொகுதி மறுவரையறை ஆணையமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்று கூறி, மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்துவிட்டார் உள்துறை அமைச்சர்.
மூன்றில் ஒரு பங்கு மகளிர் இடம் எந்த அடிப்படையில் பிரிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதுவும் புதிதல்ல. மசோதா மீது நடந்த விவாதத்தில் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. சமூக நீதியை நிலைநாட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுதான் கருவியாக இருப்பதைப் போல, பாலின சமத்துவத்தை எட்டவும் புவியியல் அடிப்படையில் ஒதுக்கீடு தேவை என்ற கருத்து வலுத்துவருகிறது.
பிரதேச அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமைய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு மகளிர் மசோதா ஆதரவாளர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக செவிமடுக்கவே இல்லை. மகளிருக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் மாற்றப்படாவிட்டாலும் நியாயமற்றதாகவும் எதேச்சாதிகாரமாகவும் போய்விடும்.
‘இந்தத் தேர்தலில் மட்டும் இது மகளிர் தொகுதி - அடுத்த தேர்தலுக்கு இல்லை’ என்றால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கு இந்தத் தொகுதிக்கு நன்மைகள் செய்தாக வேண்டும் என்பது அவசியமாகக்கூட இல்லாமல் போய்விடும்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மாற்று வழிகள்
மகளிருக்குப் பிரதிநிதித்துவம் தர மாற்று வழிகளும் உள்ளன, ஆனால் அவற்றில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடத்தை மகளிர் வேட்பாளர்களுக்கு ஒதுக்குவது அதில் ஒரு முறை. இதனால் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கிடைத்துவிடும் என்பதும் நிச்சயமில்லை. (பெண் வேட்பாளரை ஒரு கட்சி நிறுத்தி, அவருக்கு எதிராக ஆண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் எல்லா தொகுதிகளிலும் பெண்கள் தோற்கடிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது).
ஆனால், கட்சிக்குள் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புகளை இது அதிகப்படுத்தும். என்னுடைய இந்த யோசனையை லோக்சட்டாவின் ஜெயப்பிரகாஷ் நாராயண், ‘மனுஷி’ அமைப்பின் மது கிஷ்வர் ஆகியோரும் ஆதரித்தனர், ஆனால் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு பெண் வேட்பாளர் தேர்தலில் வென்றால் அடுத்த தேர்தலில் இன்னொரு கூடுதல் தொகுதியை பெண்களுக்குக் கட்சியே ஒதுக்கலாம் என்றும் கூறினேன். (இது முட்டாள்தனமான யோசனையாகத் தோன்றும், ஆனால் போகப்போக நன்றாக வேலை செய்யும் என்றே கருதுகிறேன்).
ஆனால் இதையும் கட்சிகளிடம் பேசிப் புரியவைப்பது மிகவும் கடினம். ‘எவ்வளவு தேவையோ அதற்கும் சற்றுக் குறைத்து - இடங்களை ஒதுக்குவது’ என்ற யோசனையை எல்லா கட்சிகளுமே ஏற்றதால் மூன்றில் ஒரு பங்கு இடம்!
இப்போது நிறைவேறியுள்ள மசோதாவில் இதற்கும்கூட நியாயம் வழங்கிவிடவில்லை. மாநிலங்களவையில் 2010இல் நிறைவேறிய மசோதாவில் பிரதேசவாரியான ஒதுக்கீடும், சுழற்சி முறையிலான மகளிர் தொகுதிக்கும் வழியிருந்தது. ‘இறுதி விவரங்களை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்’ என்றே அந்த மசோதா கூறியது. முதல்முறையாக எந்தெந்தத் தொகுதிகள் மகளிருக்கு என்பது திருவுளச் சீட்டு மூலம் சாதாரணமாக முடிவுசெய்யப்படுவதாக இருந்தது.
இப்போதைய மசோதாவில் இது எப்படி தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்படவில்லை. அது மட்டுமல்லாமல் ‘மகளிர் ஒதுக்கீடு அமலுக்கு வருவதிலிருந்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு…’ என்று வரம்பு நிர்ணயித்திருக்கிறது. ஒவ்வொரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகுதான் தொகுதிகள் சுழற்சி அடிப்படையில் மாற்றப்படும் என்கிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இருபது ஆண்டுகளுக்கு அல்லது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கிறது. அப்படியென்றால், மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் சுழற்சிக்கும் வாய்ப்பு இல்லை!
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
சமூகநீதியுடன் நிறையட்டும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
21 Sep 2023
ஆள்வோரின் சாமர்த்தியம்
இறுதியாக, இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்ற கேள்விக்கான விடையில்தான் ஆள்வோரின் சாமர்த்தியமே இருக்கிறது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும், தொகுதிகள் மறுவரையறைக்கும் மகளிர் தொகுதிகள் ஒதுக்கீட்டுக்கும் சட்டப்பூர்வமாகவோ, தர்க்கரீதியிலோ எந்தவிதத் தொடர்பும் இல்லாவிட்டாலும் மசோதா அந்த இரண்டுடனும் இதை இணைத்திருக்கிறது. தொகுதிகள் மறுவரையறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதே அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று உள்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார்.
இந்த அரசை எளிதல் நம்பிவிடுகிற மக்கள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த விளக்கமெல்லாம் அவசியமே இல்லை. 2029இல் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டம் அமலுக்கு வந்துவிடுமா என்றால், ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு. அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு, மக்கள்தொகைக் கணக்கீட்டை வெகு விரைவாக – 2025 பிப்ரவரிக்குள் – முடிக்கிறது என்றே கொண்டாலும், அரசமைப்புச் சட்டத்தின் 82வது கூறு, தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள விதிக்கும் நிபந்தனை காரணமாக அது தள்ளிப்போகவே வாய்ப்பிருக்கிறது. அந்தச் சட்டக்கூறின்படி 2026க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை பிரசுரமான பிறகே தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். அப்படியென்றால் 2031 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டும்.
அதன் இறுதி அறிக்கை 2032க்கு முன்னால் வராது. தொகுதி மறுவரையறை ஆணையம் தன்னுடைய பணியை இரண்டு ஆண்டுக்குள் விரைந்து முடித்தால்தான் அதுவும் சாத்தியம். (கடந்த முறை அதற்கு ஐந்தரை ஆண்டுகள் பிடித்தன!) தொகுதிகள் திருத்தியமைக்கப்பட்ட பிறகே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தில் வழக்கத்துக்கு மாறான சாதகமான சட்டப் பிரிவு இருந்தால்தான், மகளிர் மசோதா உடனே அமலுக்கு வரும்; இல்லாவிட்டால் 2039இல் அமலாவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சட்ட அம்சம் பற்றி மேலும் பிறகு ஆராய்வோம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிய வேண்டும், அதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது ஆணாதிக்க அரசியலர்களின் உண்மையான நோக்கங்களுக்கு வசதியாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, மூன்றில் ஒரு பங்கு இடம் மகளிருக்கு ஒதுக்கியாயிற்று!
இப்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு இதனால் இழப்பு ஏதுமில்லை, அதேசமயம் மகளிருக்காக பாடுபட்டவர்கள் என்ற நல்லெண்ணமும் ஆதரவும் அவர்களுக்குக் கூடிவிடும். மகளிருக்கு அதிக இடங்கள் தருவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள், எதிர்கால (ஆண்) அரசியலர்களுக்குத்தான்!
அரசியல் அதிகாரத்தைப் பெண்களுக்கு விட்டுக்கொடுப்பதற்கு முன்னால்கூட நிபந்தனைகளும் நடைமுறை ஏற்பாடுகளும் அதை இயன்றவரை தாமதப்பப்படுத்தவே பயன்படுகின்றன.
மகளிர் குரல்
உண்மை நிலவரம் இப்படி இருந்தாலும், முக்கியமான ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைவு என்பது நாட்டளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் - பக்கத்து நாடுகளுடன் ஒப்பிட்டாலும் - குறைவுதான்.
இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு நிலைமை மேம்பட்டுவிட்டதைப் போலத் தோன்றினாலும், 2039 வரையில் இது முழுமையாக அமலுக்கு வர வாய்ப்பில்லை. அரசமைப்புச் சட்டத்தையே மேலும் திருத்தும் வகையில் இன்னொரு சட்டம் இயற்றினால்தான் இது உடனடியாக அமலுக்கு வர முடியும். இப்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கைப்படி மூன்றில் ஒரு பங்கு என்றாலும்கூட அது தேவைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
ஆனால், சீர்திருத்தச் சட்டங்களைப் பொருத்தவரை தொடரும் ஒரு நல்ல அம்சம் எதுவென்றால், பின்னாளில் ஆட்சிக்கு வரும் யாராலும் அதை ரத்துசெய்துவிட முடியாது. இதை மேலும் திருத்தி, மேம்படுத்தி, வலுப்படுத்தத்தான் முடியும்.
இது உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியது. நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் அதிக பெண்கள் இடம்பெறுவதால் இந்திய மகளிருடைய நிலைமை ஒரேயடியாக மாறிவிடப்போவதில்லை. இன்றைய அரசியல் உலகில் பரவியிருக்கும் தீமைகள் எதிலிருந்தும் பெண்கள் விலகி நிற்பார்கள் என்றும் நாம் அப்பாவிகளாக எதிர்பார்க்கக் கூடாது.
பெண்கள் அதிகம் இருப்பதால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களின் நலன்களுக்கு எதிரான சட்டங்களையோ திட்டங்களையோ கொண்டுவரவிடாமல் தடுப்பார்கள், உணவு, சுகாதாரம், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள்.
பெண்களுக்கு அதிக இடங்களைத் தருவதால் நாட்டின் தலைமைப் பதவிக்கு தகுதி வாய்ந்த பல பெண்கள் போட்டிக்கு வருவார்கள். அப்படி எதுவுமே நடக்காவிட்டாலும்கூட, நம்மில் பாதி எண்ணிக்கையில் மகளிர் இருக்கின்றனர் என்ற உண்மையை ஆண்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஆகிவிடும்; அதைவிட முக்கியம், ‘அந்தப் பாதி எண்ணிக்கை பெண்களுக்கு ஒரு குரல் இருக்கிறது, அது கேட்கப்பட வேண்டும்’ என்பதாவது நடைமுறைக்கு வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்
சமூகநீதியுடன் நிறையட்டும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்
தமிழில்: வ.ரங்காசாரி
4
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 12 months ago
இரண்டு தொகுதிகளுக்கு மேல் நிற்கும் அனைத்து கட்சிகளும் 40% இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று நாளையே சட்டம் இயற்றலாம். இதை 2024 இலேயே அறிமுகப்படுத்திவிடலாம். குறைபாடுகளை அடுத்தடுத்த தேர்தல்களில் சரிசெய்து கொள்ளலாம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 12 months ago
என்னைக்கு bjp நல்லது பன்னி இருக்கு
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.