‘உங்களைப் பொருத்தவரை மிகவும் முக்கியமான விஷயம் அல்லது பிரச்சினை எது?’ என்று பலரிடம் கேட்டேன்; அனேகமாக எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்டவற்றை – அதாவது இரண்டு அல்லது மூன்று - முக்கியமானதென்று கருதுவதாக, பதிலில் தெரிவித்தார்கள். அன்னையாக இருப்பவர் (அவரே குடும்பத் தலைவியுமாகிறார்) விலைவாசி உயர்வை மட்டும் பிரச்சினையாகக் குறிப்பிட்டுவிட்டு குழந்தையின் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிடாமல் எப்படி விடுவார்?
ஆலையில் வேலை செய்யும் தொழிலாளி தனக்கு வேலை நிரந்தரமாக நீடிக்குமா என்பதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு தன்னுடைய குடியிருப்பில் நடக்கும் வன்முறை வெறியாட்டம் குறித்து எப்படிக் குறிப்பிடாமல் இருப்பார்? காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் சோடிகள் எப்படி தங்களுடைய பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு, தார்மிக ஒழுக்க குண்டர் கும்பல்கள் தங்களைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற அச்சத்தை எப்படித் தெரிவிக்காமல் இருப்பார்கள்?
இந்த விடைகள் அனைத்தும் இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளையே எதிரொலிக்கின்றன? இந்தப் பிரச்சினைகள் பல பத்தாண்டுகளாகவே - நூற்றாண்டுகளாக இல்லையென்றாலும் - இருந்தன என்பது இவை தொடருவதை நியாயப்படுத்திவிடாது. இதற்கு முன்னால் எது தொடர்ந்ததோ அது அப்படியே இருக்கும், இனியும்கூட தொடரும் என்றால் மூன்று தலைமுறை மக்கள் எதற்காக இந்திய விடுதலைக்காகவும் சுயராஜ்யத்துக்காகவும் போராடினார்கள், சிறை சென்றார்கள்?
பல்வகை மாதிரிகள்
கடந்த 250 ஆண்டுகளாகவே, ‘மக்களால்’ – ‘மக்களுக்காக’ – ‘மக்களே’ தங்களை ஆட்சிசெய்துகொள்ளும் (ஜனநாயக) முறை மிகவும் விரும்பப்பட்ட ஆட்சிமுறையாக இருக்கிறது; பொருளாதாரம், செல்வ வளம், மனித உரிமைகள் பாதுகாப்பு, மதச் சுதந்திரம், கலாச்சார முன்னேற்றம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்து, வளர்ச்சிப் பாதையில் நாடு நடைபோட ஜனநாயக முறை ஆட்சி அவசியம். இந்தக் குறிக்கோள்கள் எல்லாவித சமூகங்களுக்கும் ஒரு சவாலாகவே திகழ்கிறது.
ஒரே இன மக்களைக் கொண்டவை (ஜப்பானைப் போல), மிகவும் பன்மைத்துவம் உள்ளவை (அமெரிக்கா, இந்தியா போல). நல்ல ஜனநாயக முறை நிலவுவதற்கான சவாலை நிறைவேற்ற, ‘ஒற்றுமையை வலியுறுத்தும் மக்களைக் கொண்ட’, ‘தன்னலமற்ற மக்களால்’, ‘அனைவருக்குமான’ ஆட்சியைத் தருவது அவசியம் என்று கருதுகிறேன்.
அரசு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்தன. இன்றைய உலகில் சீன நாடானது ஒரே கட்சி ஆளும் - மேலாதிக்க அரசைக் கொண்டிருக்கிறது; ரஷ்யாவில் ராணுவத்துக்கு முக்கியத்துவம் தந்து, நாட்டு எல்லையை விரிவுபடுத்துவதில் ஆர்வமுள்ள அரசு ஆள்கிறது. மியான்மரிலும் வேறு பல நாடுகளிலும் ராணுவ ஆட்சிமுறை நடக்கிறது; ஈரான், ஆப்கானிஸ்தானிலும் வேறு சில நாடுகளிலும் மதத்துக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சி நடக்கிறது; அமெரிக்காவில் நாட்டின் அதிபருக்கு அதிக அதிகாரங்களைத் தரும் ஜனநாயகம் நிலவுகிறது, அதேசமயம் அங்கு நாட்டின் எல்லா உயர் அமைப்புகளுக்கும் அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட்டிருப்பதுடன் அவை மீறப்படாமலிருக்க கடுமையான கண்காணிப்பும், சமநிலை ஏற்பாடுகளும் உள்ளன; ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகள் பிரிட்டனில் நிலவும் நாடாளுமன்ற ஜனநாயக முறையே பின்பற்றப்படுகிறது. அங்கு நாட்டின் உயர் பதவியில் இருப்பவர் (பிரதமர்) நாடாளுமன்றத்துக்கு அன்றாடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவரான ஆட்சிமுறை நடக்கிறது.
இந்தியாவும் பிரிட்டனில் நிலவும் அதே ஆட்சிமுறையைத்தான் பின்பற்றப்படுகிறது. பன்மைத்துவமும், பலவித வேறுபட்ட பின்னணிகளும் உள்ள நாட்டின் வெவ்வேறு இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள், வரலாறு, கலாச்சாரம் கொண்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிரதிநிதித்துவமுள்ள அரசைத் தர இதைவிடச் சிறந்த ஏற்பாடு இல்லை. பிரிட்டிஷ் நாட்டு (வெஸ்ட்மின்ஸ்டர்) முறையே நமக்கு உற்றது என்றே நம்புகிறேன்.
ஒற்றைத்துவ திட்டம்
இன்றைய ஆட்சியாளர்கள் – பாரதிய ஜனதா, அதன் தோழமைக் கட்சியினர், பாரதிய ஜனதாவின் ‘ரகசிய’ ஆதரவாளர்கள் – இதற்கு நேரெதிரான ஆட்சி முறையை இப்போது முன் வைக்கிறார்கள். ‘இந்தியர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்களே, அனைத்து வேறுபாடுகளும் இந்த ஒற்றைத் தன்மையில் கரைந்துவிட வேண்டும்’ என்கிறார்கள். கடந்த 75 ஆண்டுக்கால ஆட்சி அனுபவத்திலும் வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையிலும் - இந்தியர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்ற கருத்து தவறென்று நிரூபணமாகிவிட்டது - என்ற வாதத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த ஒற்றைத்தன்மையை அவர்கள் மொழி, உணவு, உடைகள், சமூக நடத்தை, தனிப்பட்ட சட்டங்கள், பழக்க வழக்கங்களில்கூட திணிக்க விரும்புகிறார்கள்.
எனவே, இனி ‘இந்தி’ மட்டுமே நாட்டின் தேசிய மொழியாக ஏற்றம் பெறும் – நாட்டின் ‘பிற மொழிகள்’ இந்தியைவிடப் பழமையானதாக இருந்தாலும், தொன்மையான இலக்கண அமைப்பும், செறிவான இலக்கிய வளங்களும் அவற்றுக்கு இருந்தாலும் – இந்தியே முதன்மையைப் பெறும்.
பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பெரும்பான்மைச் சமூகத்தினர் அணியும் வகையிலான உடைகளே, சீருடைகளாக அறிவிக்கப்படும். சாதி மறுப்புத் திருமணங்கள், மதம் கடந்த திருமணங்கள் அனைத்தும் இனி பேரினவாத அரசின் சட்டக் கட்டளைகளுக்கேற்பவே அனுமதிக்கப்படும். இளம் ஜோடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை (உரிமம்) இனி ஒழுக்க அமலுக்கான குண்டர் கும்பல்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அனைவருக்குமான பொது சிவில் சட்டம் - சிறுபான்மைச் சமூகத்தவர், பழங்குடிகளுக்குள்ள கலாச்சாரங்களையும் தனிச் சட்டங்களையும் புழக்கத்திலிருந்து நீக்கிவிடும்.
நாடு முழுவதற்கும் ஒற்றைத்தன்மையைப் புகுத்துவதன் ஒரு முயற்சியாகத்தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்க ‘ஆதார்’ அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ‘வயர்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை, இந்தத் திட்டத்தில் வேலை செய்துள்ள 14.34 கோடித் தொழிலாளர்களில் 11.72 கோடித் தொழிலாளர்கள்தான் ஊதியம் பெறத் தகுதியுள்ளவர்கள் என்று 2023 ஆகஸ்ட் 28 வரையிலான நிலவரத்தை இணையதளத்தில் பார்த்ததாகத் தெரிவிக்கிறது. தாங்கள் வசிக்கும் பகுதியில் வேறெந்த வேலையும் கிடைக்காமல் அரசு தரும் இந்த வேலைத் திட்டத்தில் சேர்ந்த ஏழைகளிலும் பரம ஏழைகள் இவர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
‘ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை’ (ஓஎன்ஓஆர்சி) திட்டம் மற்றொரு உதாரணம். நாட்டுக்குள்ளேயே வேலைவாய்ப்பு தேடி இடம்பெயரும் தொழிலாளர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 45 கோடி, அவர்களில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்வோர் எண்ணிக்கை 5.4 கோடி. ஓஎன்ஓஆர்சி திட்டப்படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் தனக்கு வேண்டிய அவசியப் பொருள்களைப் பெற உரிமையுள்ளவர்.
‘இன்டியா ஸ்பெண்ட்’ என்ற ஊடகத்தின் தகவல்படி, 2019 முதல் 2023 வரையில் சராசரியாக 14 லட்சம் முறை மட்டுமே இப்படி அவசியப் பொருள்கள் நியாயவிலைக் கடையில் பெறப்பட்டுள்ளன. ஒரே நாடு – ஒரே அட்டை திட்டத்தால் ஏன் 5 கோடி ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க முடியவில்லை? காரணம் இந்தத் திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்குவது எந்த மாநிலத்துக்கும் பொறுப்பாக்கப்படவில்லை; அது ஏன் என்பதற்கும் யாரும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களும் அல்ல!
திட்டவட்டமான கட்டம்
நாட்டின் உள்ள எல்லா முக்கிய அம்சங்களையும் ஒற்றைத்தன்மைக்கு உட்படுத்தும் செயல்களில் நாம் இப்போது முக்கியமான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம், அதுதான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’.
அதாவது, ஒரே நாடு – எல்லா மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல். மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்னால், அரசமைப்புச் சட்டத்துக்கு ஐந்து திருத்தங்களைச் செய்வது அவசியம் என்று சட்ட ஆணையமும் பல குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன; இது இப்போதைக்கு தேவையில்லை என்று அரசியல் கட்சிகள் எதிர்த்துள்ளன, நிர்வாகரீதியில் சாத்தியமில்லை என்று அரசு அதிகார வட்டாரங்களும் கூறியுள்ளன. இவ்வளவுக்கும் நடுவில் இதை விரைவுபடுத்த, கைப்பாவையாகச் செயல்படக்கூடிய ஒரு குழுவை அரசு நியமித்திருக்கிறது.
இதன் நோக்கம் ஒரே சமயத்தில் தேர்தல் அல்ல – ஒரு துருவத்தில் மக்களை அணி சேர்க்க வேண்டும் என்பதுதான். மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களையும், அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களையும் வென்றுவிடலாம் என்று பாரதிய ஜனதா நம்புகிறது.
அப்படி மட்டும் நடந்துவிட்டால் அரசமைப்புச் சட்டத்திலேயே பெரும் மாறுதல்களைச் செய்யவும் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரம்’ என்று அறிவிக்கவும் வழியேற்பட்டுவிடும். இது மிகவும் துணிச்சலான அரசியல் சூதாட்டம். இதில் வெற்றிபெறப் போவது நரேந்திர மோடியா அல்லது நாட்டு மக்களா?
தொடர்புடைய கட்டுரைகள்
சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்
சமத்துவம், துயரம், பன்மைத்துவம்
சரியும் சமூகப் பாதுகாப்பு
சனாதனத்தை எப்படிப் பார்ப்பது? சமஸ் பேட்டி
தமிழில்: வ.ரங்காசாரி
4
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.