கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்

ப.சிதம்பரம்
09 Oct 2023, 5:00 am
0

பாரதிய ஜனதா கட்சிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கும் இடையே தேர்தலில் விவாதிக்கபடக்கூடிய மக்கள் பிரச்சினைகள் பற்றிக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதன் சுருக்கப் பெயரான ‘என்டிஏ’ என்பதைக் குறிப்பிடவில்லை, ஏனென்றால் முக்கியமான அரசியல் கட்சி ஏதும் இப்போதைக்கு அந்தக் கூட்டணியில் இல்லை. 

கடந்த 2019 மக்களவை பொதுத் தேர்தலின்போது அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருந்த முக்கிய கட்சிகள்  சிவசேனை, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக அனைத்துமே விடைபெற்றுக்கொண்டுவிட்டன. அதேசமயம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ 2019ஆம் ஆண்டைவிட மேலும் பல தோழமைக் கட்சிகளுடன் வலிமை பொருந்தியதாகக் காட்சி தருகிறது.

கூட்டணிகளின் வலிமை

நான் எதிர்பார்த்தபடியே, பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய பிரச்சாரத்தை சனாதன தர்மம், மதமாற்றம், லவ் ஜிகாத், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவுகள் ஆகியவற்றைச் சுற்றியே தொடங்கியிருக்கிறது. நான்கு மாநிலங்களில் ஆறு நாள்களில் எட்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் பேசியிருக்கிறார்.

பிரதமர் பாஜக அல்லாத கட்சி ஆளும் மாநிலங்களில் பேசும்போது, மாநில அரசைக் கடுமையாக சாடியிருக்கிறார். அந்த மாநில முதல்வரை, ‘இதுவரை இருந்தவர்களிலேயே மிகவும் மோசமான ஊழல் பேர்வழி’ என்று பட்டம் சூட்டியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் பேசியபோது, ‘அனைத்து மாநில அரசுகளிலும் இதுதான் மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலம்’ என்று பாராட்டியிருக்கிறார். மோடி எப்போதும் எதையும் குறைத்தே பேச மாட்டார்!

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரம் முழுக்க - விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியே பேசினர்; கடந்த வாரம் அவர்கள் தங்களுடைய இலக்கை மேலும் விரிவுபடுத்தினர். ஆளும் கட்சியின் வெறுப்பை வளர்க்கும் பேச்சு (ரமேஷ் பிதூரி எம்.பி.), கருத்துச் சுதந்திரத்தைத் தாக்கும் நிகழ்வுகள் (‘நியூஸ் கிளிக்’ விவகாரம் அதன் ஆசிரியர் கைது), மாநிலங்களுடைய உரிமைகளை மறுப்பது (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு நிதி தர மறுப்பது), மாநிலங்களின் உரிமைகளில்கூட ஆக்கிரமிப்பது (தமிழ்நாட்டுக்கு இனி புதிய மருத்துவக் கல்லூரிகளோ, இருக்கும் கல்லூரிகளில் கூடுதல் இடங்களோ கிடையாது எனும் அறிவிப்பு), நீதித் துறையின் முக்கியத்துவத்தைக் குறைப்பது (கொலீஜியத்தின் 70 பரிந்துரைகள் ஏற்கப்படாமல் நிறுத்திவைப்பு), சீன ராணுவத்தின் ஊடுருவல் (தொடர் மௌனம்), பயங்கரவாதச் செயல்கள் அதிகரிப்பு (காஷ்மீர்), பொருளாதார வளர்ச்சி வீதம் மந்தமடைவது (2022-23இல் 7.2%ஆக இருந்த வளர்ச்சி 2023-24இல் 6.3%ஆகக் குறையும் என்ற மதிப்பீடு), ஒன்றிய அரசின் உளவுத் துறை – புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது (எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிடுவது), தனிமனித வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு (ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையிலும் மோடிதான் கட்சியின் முகமாக இருக்கப் போகிறார்) என்று பல்வேறு அம்சங்களை விவரித்துப் பேசினர்.

எல்லாவற்றுக்கும் மத்தியில், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தத் தேசமே வியக்கும்படியாக, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். பிஹார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) 63% அளவுக்கு இருக்கின்றனர் என்பதைச் சொல்லும் இந்தக் கணக்கெடுப்பு புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்

ப.சிதம்பரம் 02 Oct 2023

‘ஒரே தேசம் – ஒரே தேர்தல்’, ‘அனைத்து மக்களுக்கும் ஒரே (மாதிரியான) சிவில் சட்டம்’ என்ற ஆளுங்கட்சியின் திசைதிருப்பும் உத்திகள் எல்லாம் இந்த அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பில் அடிபட்டுப் போய்விட்டன. ‘உற்ற நேரம் வரும்போது நாங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுவோம்’ என்று கர்நாடக மாநில (காங்கிரஸ்) அரசு அறிவித்திருக்கிறது. ‘நாங்களும் சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திவருகிறோம்’ என்று ஒடிஷா அரசும் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தோழமைக் கட்சிகளே சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கிவிட்டன. ‘பாஜக கொண்டுவந்துள்ள மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்கு எதிரானது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு உரிய திருத்தங்களைக் கொண்டுவருவோம்’ என்று இந்தியா கூட்டணி அறிவித்திருக்கிறது. ‘இந்தியா கூட்டணி அரசின் முதல் செயல்திட்டமே சாதிவாரி கணக்கெடுப்புதான்’ என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பதிலடிக்குத் தேடுகிறார்கள்!

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்குப் பிறகு பாஜக இந்த அளவுக்கு இதுவரை அச்சத்தில் இப்படி கலகலத்ததே கிடையாது. பாஜகவின் பல தலைவர்கள் (பேசவும் சிந்திக்கவும் கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர்கள்), மோடி அடுத்து என்ன பேசப் போகிறார் என்று அவருடைய கண்ணசைவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மைப் பிரிவினருக்கு எதிராக, தான் எழுப்ப விரும்பிய ‘இந்து’ என்ற ஒற்றை வாக்கு வங்கி திட்டத்துக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது என்பதை மோடி உணர்ந்துவிட்டார். ‘ஒபிசிக்காகப் பாடுபடுகிறவர்’ என்று தன்னைப் பற்றி அவர் கூறிக்கொண்டதற்கு இப்போது சோதனை வந்துவிட்டது. ‘அரசின் அனைத்து திட்டங்களிலும் சாதி அல்ல - ஏழைகளுக்குத்தான் முன்னுரிமை’ என்று அவர் சமாளித்தது சிறிதுகூட எடுபடவில்லை.

ஏழைகளை அவருடைய அரசுதான் இதுவரை வெகு அலட்சியமாக நடத்திவந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஏழைகளையும் ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு இதுவரை அவருடைய அரசு பதில் சொல்லவே இல்லை. ‘ஒபிசி’ பெயரில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு தகுந்த விடை தரப்பட்ட பிறகு, அதற்கு பதிலடியாக எதைக் கூறுவது என்று இன்னமும் யோசித்துக்கொண்டே இருக்கிறார்.

இன்னொரு பிரச்சினையையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார் மோடி. தேசிய அளவில் சாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று பாஜகவின் பிஹார் கிளையிலிருந்து எதிர்ப்பு வரவேயில்லை, எதிர்ப்பு பாஜகவின் மையத் தலைவர்களிடமிருந்துதான். பிஹார், உத்தர பிரதேச பாஜக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும்கூட, ‘தேசிய அளவில் சாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேவையில்லை’ என்று எதிர்ப்பது மோடிக்கு இனி மிகப் பெரிய அரசியல் ஆபத்தாகவே இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்

ப.சிதம்பரம் 25 Sep 2023

பொருளாதாரப் பங்களிப்பு

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகிய இருவரும், ‘சாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும்’ என்பதை வலிமையாக ஆதரித்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) என்பது ஒரே தன்மையுள்ள சமூகக் குழு அல்ல; சில மாநிலங்களில் அவையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) என்று பகுக்கப்பட்டுள்ளன, வேறு சில மாநிலங்களில் ஒபிசி – ஈபிசி (மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) என்றும் பகுக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப காலங்களில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ அனைவரையும் ‘தமிழர்கள்’, ‘பிராமணர் அல்லாதவர்கள்’ என்ற பொது அடையாளத்தில் ஒற்றுமைப்படுத்தி திரட்டிவிட்டனர். இதன் விளைவாகத்தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றனர்.

பிற்பாடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமையை மு. கருணாநிதி அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. ஆனால், இப்படி ஒபிசியை வெவ்வேறு விதமாக பிரித்துக்கொண்டேபோனால் அணுவைப் பிளப்பதுபோல ஆகி, வலிமை இழக்கச் செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

சாதி என்பது இணைக்கவும் செய்கிறது - பிரிக்கவும் செய்கிறது. ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக – குறிப்பாக பொருளாதாரச் சந்தையில் தங்களுக்குரிய வருமானம், மூலதனம், கடன் உதவி, ஒப்பந்தங்கள், உரிமங்கள், வேலைவாய்ப்புகள், இதர பொருளாதார வாய்ப்புகளுக்காக எவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், வெகுவாக பிற்படுத்தப்பட்டவர்கள் நிலைமை என்ன? எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற ஒரே தீர்வு எப்போதுமே சாத்தியமில்லை. ஒபிசி ஒதுக்கீட்டிலேயே பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கும் துணை ஒதுக்கீட்டை அளிக்கலாம். இந்த யோசனையைக்கூட அனைவரும் விரிவாக விவாதித்து செம்மைப்படுத்துவது அவசியம்.

ஆக, இனி பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையிலான அரசியல் மோதல் சுவாரசியமாக இருக்கப்போகிறது. இப்போதைக்கு வாக்காளர்களில் பெரும்பாலானவர்களின் எண்ணிக்கையும் ஆதரவும் ‘இந்தியா’ கூட்டணி பக்கம் இருப்பதைப் போலவே தெரிகிறது!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்
மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்
சொன்னதைச் செய்திடுமா இந்தியா?
ஒரே நாடு, ஒரே துருவம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






இல்லாத கட்டமைப்புகள்கருணாநிதிதனியார் மருத்துவக் கல்லூரிகள்இட ஒதுக்கீடுசிறுதெய்வங்கள்அருண் நேருஐக்கிய அரபு சிற்றரசு பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிசாலிகிராமம்சமஸ் புதிய தலைமுறைப் பேட்டிஜூம்சட்ரஸ்விதிகளே இல்லாத போர்கள்!தாமஸ் ஃப்ரீட்மன்சத்ரபதி சிவாஜிஹெப்பாடிக் என்கெபலோபதிஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?பிளாக்செயின்கிறிஸ்தவம்விலைவாசிஎஸ்.வி.ராஜதுரைராஜன் குறை சமஸ்சுதீப்த கவிராஜ் உரைashok selvan keerthi pandian marriageபொரு:ளாதாரம்தாதுப் பொருள்பாதுகாப்புப் படைகுடியுரிமைச் சட்டத் திருத்தம்பிரதம மந்திரிமிகைல் கோர்பசெவ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!