கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

வளையக் கூடாதது செங்கோல்!

ப.சிதம்பரம்
05 Jun 2023, 5:00 am
0

திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஔவையார் மற்றும் பிற சங்க காலப் புலவர்கள் அனைவரும் தங்களுடைய சமாதிகளில் நிம்மதியின்றிப் புரண்டிருப்பார்கள், செங்கோலுக்கு நம்முடைய மாண்புமிகு பிரதமரும், பாரதிய ஜனதாவின் திரிபாளர்களும் அளித்த விளக்கங்களைக் கேட்டிருந்தால்; அவர்களுடைய வியாக்கியானப்படி செங்கோல் என்பது ஆட்சியதிகாரத்துக்கான அடையாளம்! கற்பனையான ராஜகுரு ஒருவர் - முந்தைய ஆட்சியர் பயன்படுத்திய செங்கோலை புதிய ஆட்சியாளரிடம் ஒப்படைப்பதே ஆட்சியதிகார மாற்றத்துக்கு அடையாளம் என்கின்றனர்.

வரலாற்றையும் நீதிநெறி சார்ந்த கொள்கைகளையும் வெட்கமின்றி எப்படியெல்லாம் திரிக்க முடியும் என்பதற்கான காட்சி விளக்கம்தான் மே 28இல் அரங்கேறியது. எக்காளக் கலைஞர்கள் உற்சாகமாக எக்காளங்களை முழங்கினார்கள், அரசவையில் இடம்பெற்றவர்கள் ஆட்சியாளரைத் துதிக்கக் கூடினார்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உள்ளடக்கிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை ஒரு முடிசூட்டு விழாவைப் போலவே நடத்தினார்கள். ஜனநாயக குடியரசுக்கு சற்றும் பொருத்தமில்லாத - மன்னராட்சிகளுக்கே உரித்தான சடங்குகளுக்கு, மவுண்ட்பேட்டன் பிரபுவையும் சி.ராஜகோபாலாச்சாரியாரையும் (ராஜாஜி) சாட்சிகளாக வரவழைத்துக்கொண்டார்கள். மிகவும் அடக்கமும், எளிமையும் வாய்க்கப்பெற்ற சைவ ஆதீனகர்த்தர்கள் வரவழைக்கப்பட்டு, மதச்சார்பற்ற முறையில் நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சிக்கு - மத உணர்வைப் புகுத்தி நிகழ்த்தினார்கள்.

தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிகளில் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நிகழ்ச்சியைப் பார்த்த மக்கள், குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25இல் திரௌபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி எவ்வித ஆடம்பரமும் மத அடையாளமும் இன்றி அமெரிக்கையாக நடந்ததை மனதில் ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்கள். மக்கள் அதிலும் குறிப்பாக கர்நாடக மக்கள், ‘அதிகாரத்தை யார் – யாரிடம் ஒப்படைக்கிறார்கள்?’ என்று வியப்போடு கேட்டிருப்பார்கள்! 

செங்கோலுக்குப் புலவர் விளக்கம்

பொது ஆண்டுக்கு முந்தைய (கி.மு.) 31இல், திருவள்ளுவர் என்கிற தமிழ்ப் புலவர் – மெய்யியலாளர், காலத்தால் அழிக்க முடியாத திருக்குறள் என்ற அறநூலை இயற்றினார். பொருட் பாலில் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற இரண்டு அதிகாரங்களைச் சேர்த்தார். அதில் குறள் எண் 546 வருமாறு:

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

போரில் மன்னருக்கு வெற்றி தருவது அவருடைய கையில் உள்ள வேல் அல்ல, நேர்மை – நடுநிலைமை தவறாமல் செய்யும் ஆட்சியால் வளையாத அவருடைய செங்கோல்தான் என்று கூறியிருப்பார். மன்னருடைய செங்கோல் யாருடைய பக்கமும் வளைந்து, சார்பாக நடந்துகொள்ளக் கூடாது. இதே சிந்தனைதான் பிரதமரின் பதவியேற்பு உறுதிமொழியிலும் இடம்பெற்றுள்ளது. “… அரசமைப்புச் சட்டப்படியும் நாட்டின் சட்டங்களின்படியும் கடமைகளை நிறைவேற்றுவேன், யாருக்கும் அஞ்சாமலும், சட்டத்துக்கு முரணாக செயல்படாமலும், விருப்பு – வெறுப்பு இன்றியும் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று உறுதியேற்க வேண்டும். கோல் என்பது இங்கே நீதி, நேர்மை, நல்லொழுக்கப்படி ஆட்சி நடத்துவதாகும். வளையாமல் இருந்தால்தான் அது செங்கோல், யாருக்காவது சார்பாக வளைந்துவிட்டால் அது கொடுங்கோல்.

செங்கோல் என்பது நேர்மை தவறாத ஆட்சியைக் குறிப்பது அதிகாரத்தைக் குறிப்பதல்ல. செங்கோல் ஏந்திய மன்னன் நேர்மையாக நடப்பேன் என்று உறுதி கூறுகிறான். ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய நான்கு அறங்களுள் ஒன்றாக செங்கோலைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

தானம் செய்தல், அடுத்தவர்களுடைய கருத்துக்கு செவிமடுத்தல், நடுநிலை தவறாமல் ஆட்சிசெய்தல், நாட்டு மக்கள் அனைவரையும் காத்தல் ஆகிய நான்கு குணங்களும் ஒருங்கே பெற்றவரே ஆட்சியாளர்களில் ஒளிபொருந்தியவர்கள் என்கிறார் இக்குறளில். செங்கோன்மைக்கு எதிரானது கொடுங்கோன்மை, நீதி – நியாயமற்ற ஆட்சியே கொடுங்கோன்மை, அதை நிகழ்த்துபவர் கொடுங்கோலர்.

சங்கம் புகழும் செங்கோல்

சோழ மன்னர்களில் தலைசிறந்தவரும் தொடர்ந்து புகழப்படுபவருமான கரிகாலனை சங்கப் புலவர் ஒருவர் ‘அறநாடு புணர்ந்த திமரி செங்கோல்’ என்கிறார். கரிகாலனின் நல்லாட்சி நீதிநெறியோடு இணையப்பெற்றது என்கிறார். இன்னொரு சங்கப் புலவர் ‘ஏருக்கு நிழந்தர கோலின்’ என்கிறார். உணவு தானிய விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள் அல்லல்படாமல் காத்தவன் மன்னன் என்று இதற்குப் பொருள். சமணத் துறவியான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை இயற்றினார். அதில் கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சாடி, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ (நீதிநெறி தவறிய மன்னனுக்கு, அந்தத் தவறே கூற்றுவனாகி உயிரைப் பறித்துவிடும்) என்கிறார். செங்கோலை வளைத்த மன்னனுக்கு வளமான எதிர்காலம் இல்லை என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.

மக்கள் கவிஞரான ஔவையார் எளிமையான சொற்களில் பொருள் நிரம்பப் பாடினார்.         

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”              

நெல் சாகுபடி நடைபெறும் வயலின் வரப்பு உயர்த்தப்பட்டால், அதில் தேங்கும் நீரின் அளவு அதிகமாகும். நீர் அதிகரித்தால், அந்த வயலில் நெல் விளைச்சலும் அதிகமாகும். நெல் விளைச்சல் அதிகமானால், மக்களுடைய பசி நீங்கி - வாழ்க்கைத் தரமும் உயரும். மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்தால், மன்னவன் கையில் உள்ள செங்கோலும் நிமிர்ந்து நிற்கும் என்பது இதன் பொருள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடியின் செங்கோல் வணக்கம்

பெருமாள்முருகன் 03 Jun 2023

‘செங்கோல் வளைந்தது’ என்றால் மன்னன் நீதியற்ற முறையில் ஆள்கிறான், கொடுங்கோலனாக இருக்கிறான் என்று பொருள். தன்னால் ஆளப்படும் மக்களில் ஒரு பிரிவினருக்குச் சாதகமாகவும், இன்னொரு பிரிவினருக்கு பாதகமாகவும் மன்னன் நடக்கக் கூடாது. சமுதாயம் மதம், மொழி அடிப்படையில் தன்னுடைய நாட்டு மக்களை பாகுபடுத்திப் பார்த்துச் செயல்பட மன்னராட்சியிலேயே இடமே கிடையாது.

இதற்கு மாறாக, நம் நாட்டில் இப்போது நடைபெறும் சம்பவங்களில் சிலவற்றை நினைவில் கொள்வோம். மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு இடமில்லை, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் வேலையை மக்களில் ஒரு சிலர் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, லவ் ஜிகாத் என்று குற்றஞ்சாட்டி இரு மத இளையோருக்கு இடையிலான காதலைத் தடுக்க வேண்டியதில்லை, சட்டத்தை மீறிவிட்டார் அல்லது சமூக விரோதச் செயலில் ஈடுபட்டார் என்று கூறி சிலரின் வீடுகளையும் இதர கட்டுமானங்களையும் புல்டோசர்களால் இடித்துத் தள்ளி நீதி வழங்க வேண்டியதில்லை. பக்கத்து நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும், நேபாளத்து முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா தேவையில்லை. பெரு நிறுவனங்கள், ஏகபோக முதலாளிகளின் தயவில் விவசாயிகளை வைத்திருக்க உதவும் வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு இடமே இல்லை. 

மகாராஷ்டிரத்திலிருந்து ஒரு தொழில் திட்டத்தைப் பறித்து அதை குஜராத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தவரைத் தங்களுடைய கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்த மறுப்பது நடுநிலையான ஆட்சி நடத்தும் ஆள்வோரின் கட்சியாக இருக்க முடியாது. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தவறு செய்தவரைக் கைதுசெய்யக் கோரி அமைதியாகவும் நீதிக்கு உள்பட்டும் போராட்டம் நடத்தும், நாட்டுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த விளையாட்டு வீரர்களுடைய எதிர்ப்பை காவல் துறையைக் கொண்டு முரட்டுத்தனமாக பலத்தைப் பிரயோகித்து உடைக்க வேண்டிய அவசியமே இல்லை.

இதையும் வாசியுங்கள்... 30 நிமிட கவனம்

அது சோழர் செங்கோலே இல்லை

26 May 2023

செங்கோலைக் களங்கப்படுத்தாதீர்

செங்கோலை அதிகாரத்தின் அடையாளமாகச் சித்தரிப்பது செங்கோன்மை என்ற தத்துவத்தையே களங்கப்படுத்துவதாகும். மவுண்ட்பேட்டன் பிரபுவையும் ராஜாஜியையும் இந்நிகழ்ச்சிக்குக் காரணர்களாக சித்தரிப்பது வரலாற்றைத் திரிப்பது மட்டுமல்ல, தெளிவான முடிவுகளை எடுக்கவல்ல மவுண்ட் பேட்டனையும், கற்றறிந்த அறிஞர் - ராஜதந்திரியான ராஜாஜியையும் - பொதுப்புத்தி சிறிதும் அற்றவர்களாக எண்ணவைக்கும்.

மக்களவைத் தலைவர் அமரும் இடத்துக்கு அருகிலேயே அந்தச் செங்கோல் இருக்கட்டும். அவை நிகழ்ச்சிகளுக்கு அது மௌன சாட்சியாகட்டும். அவையில் சுதந்திரமான, கட்டுப்படுத்தப்படாத வகையில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டால் அந்தச் செங்கோல் நிமிர்ந்து நிற்கும்; அப்படிப் பேச விடாமல் தடுக்கப்பட்டாலும், எதிர்க் கருத்துகளையும் மாற்றுக்கருத்துகளையும் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும், நீதியற்ற – அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்போது அதற்கு எதிராக சுதந்திரமாக வாக்களிக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்தச் செங்கோல் எதற்காக அங்கு நிறுவப்பட்டதோ அதை நிறைவேற்றும் என்று நம்புவோம்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?
மோடியின் செங்கோல் வணக்கம்
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
அது சோழர் செங்கோலே இல்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அறிவியல் மாநாடுநேதாஜிதீ விபத்துசாதிக் கொடுமைகளைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கைபாரத் சாது சமாஜ்சூப்பர் ஸ்டார்மயிர்தான் பிரச்சினையா?எதிர்கால அரசியல்கலைஞரின் முதல் பிள்ளைவிவசாயிகள் போராட்டம் எப்படித் தொடர்கிறது?வர்ண கோட்பாடுஇந்தியர்கள்வெறுப்புத் துறப்புபூனா ஒப்பந்தம்கேரலின் ஆர். பெர்டோஸிஉயிர்ப்பின் அடையாளம்சூர்யா ஞானவேல்சிறுபான்மைகால் பாதிப்புmidsகால் குடைச்சல்உள்ளத்தைப் பேசுவோம்அயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!கேஜிஎஃப் 2ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்தாமஸ் பிராங்கோவழக்கறிஞர்கடுமையான வார்த்தைகள்பினராயி விஜயன்சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!