கட்டுரை, கல்வி 10 நிமிட வாசிப்பு
ஏன் மதவெறிக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் பேசுவது அவசியம்?
கணேசன்தான் ஆரம்பித்து வைத்தான். அவன் ஆறு வருடங்கள் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவன். எல்லா ஆசிரியர்களையும் அவனால் நினைவுகூர முடிந்தது. "வியாழக்கிழமை பின்மதியம் வேத வகுப்பும் நீதி போதனை வகுப்பும் ஒரே நேரத்தில் நடக்கும். மாணவர்கள் எந்த வகுப்புக்கு வேண்டுமானாலும் போகலாம். கட்டாயமா? மதமாற்றமா? நான் கேட்டதேயில்லையே" என்று தன் பதிவை முடித்திருந்தான்.
சேவல் பண்ணை
கணேசன்தான் அந்த வாட்சப் குழுமத்தை நிறுவியவன். ஒருகாலத்தில் நாங்கள் மதுரையில் ஒரே லாட்ஜில் வசித்தோம். சென்னையில் மேன்ஷன், மதுரையில் லாட்ஜ். ஸ்ரீதரன் தனது பதிவுகளில் எங்கள் லாட்ஜை, 'சேவல் பண்ணை' என்று அழைப்பார். அந்த லாட்ஜ்வாசிகள் எல்லோரும் ஆண்கள். எல்லோருக்கும் ஒரு வேலை இருந்தது. சம்பாத்தியம் இருந்தது. பலரும் மணமாகாதவர்கள். சிலர் மாநகரத்தில் வேலையும் சிற்றூர்களில் குடும்பமுமாக இருந்தவர்கள். எல்லோருக்கும் நேரம் நிறைய இருந்தது. அது நட்பாக விளைந்தது.
காலம் பலரையும் பல கரைகளுக்குக் கொண்டுசென்றது. எனினும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு நெருக்கமானவர்களோடு நட்பாங்கிழமை தொடர்ந்தது. அதைப் பிடித்துக்கொண்டு பத்தாண்டுகளுக்கு முன்னால், முன்னாள் லாட்ஜ் நண்பர்களைத் திரட்டி ஒரு வாட்சப் குழு அமைத்தான் கணேசன். அந்த லாட்ஜில் எங்கள் காலத்திற்கு முன்னாலும் பின்னாலும் வசித்தவர்கள் பலரும்கூட இணைந்து கொண்டார்கள்.
கணேசனுக்கு அடுத்துப் பதிவிட்டவர் சுந்தரம். ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறார்; ஆசிரியர். அவர் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்ததில்லை. ஆனால் பணியாற்றினார். சமீபத்தில் ஓய்வுபெற்றார். எல்லா ஆசிரியர் கூட்டங்களிலும் மாணவர்களின் படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சி, போட்டிகள் என்றுதான் பேசுவோம், மதமும் மாற்றமும் ஒரு காலத்திலும் பேசுபொருளாக இருந்ததில்லை என்றார்.
ஹாங்காங்கில் மதம்
தொடர்ந்து பலரும் அவரவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நானும் சேர்ந்துகொண்டேன். நான் படித்த காலத்தில் பதினோராம் வகுப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் புகுமுக வகுப்பு இருந்தது. அதை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு வருடப் படிப்புதான். அந்த நினைவுகளின் சுகந்தம் வாழ்நாளெல்லாம் தொடர்கிறது. சிவப்புச் சுவர்களாலான கலைக் கோயில்களுக்கு இடையே ஒரு தேவாலயமும் இருந்தது. காலை இடைவேளையின்போது தேவாலயத்தில் ஒரு சர்வீஸ் இருக்கும். உடன் படித்த கிறிஸ்துவ மாணவர்கள்கூட அங்கு போய்ப் பார்த்ததில்லை, அவர்கள் எங்களுடன் தேநீர் அருந்திக்கொண்டிருப்பார்கள்.
நான் என் ஹாங்காங் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டேன். எனது இரண்டு பிள்ளைகளும் ஹாங்காங்கில்தான் படித்தார்கள். இருவரும் அரசு உதவியுடன் இயங்கும் தனியார் பள்ளிகளில் படித்தார்கள். இரண்டும் கிறிஸ்தவப் பள்ளிகள். ஹாங்காங்கில் மதம் பிறப்பால் வருவதில்லை. தாத்தா தாவோயிஸத்தைப் பின்பற்றுவார். அப்பாவுக்கும் மகளுக்கும் மதம் இராது. அம்மா புத்த மதத்திலும் மகன் கிறிஸ்துவத்திலும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். பண்டிகைகள் இனம் சார்ந்தவை. மதம் சார்ந்தவை அன்று. எனது பிள்ளைகள் படித்த பள்ளிகளில் வேதாகமம் ஒரு பாடமாக இருந்தது. வேண்டாதவர்கள் வேறு பாடத்தைத் தெரிவுசெய்துகொள்ளலாம். யாரும் யாரையும் மதம் மாற்றவில்லை. அங்கு மதம் கட்டாயமில்லை. அதனால் யாருக்கும் மதம் பிடிக்கவுமில்லை.
கல்வியும் கைவிளக்கும்
அடுத்து, குழுமத்தில் சிலர் சமூக ஊடகங்களில் சுற்றிவரும் சில பதிவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். பலரையும் கவர்ந்தது ஒரு பதிவு. அதை எழுதியவர் பெயர் ராம்குமார். மருத்துவர். மன்னார்குடி ஃபின்லே மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பள்ளிப் படிப்பைத் தாண்டாத வேளாண் குடும்பம். அந்தப் பள்ளி வழங்கிய கைவிளக்குதான் அவரைப் பின்னாளில் சென்னை எம்.எம்.சி-க்கும் லண்டன் ராயல் மருத்துவக் கல்லூரிக்கும் நடத்திச்சென்றது என்று எழுதியிருந்தார். எஸ்தர் டீச்சர் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டிருக்காவிட்டால் அறிவியல் பாடத்தின் கதவுகள் தனக்கு எப்போதைக்குமாக அடைபட்டுப் போயிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். டீச்சரின் கணவர் - போதகர் கிறிஸ்டோபர் செல்லையா. டீச்சரோ, ஃபாதரோ, பள்ளியில் வேறு யார் ஒருவருமோ எந்தக் காலத்திலும் மதமாற்றத்தைப் பற்றிப் பேசியதில்லை என்ற ராம்குமார், தான் ஒரு நாத்திகன் என்று பதிவை முடித்திருந்தார்.
இந்தப் பதிவை முகநூலில் ஏற்றியவரின் பெயர் தாமஸ் ஜெயசீலன். பின்னூட்டம் இட்டவர்களில் ராம்குமாருடன் பள்ளியில் படித்த சிராஜூதின் யூசுப் என்பவரும் இருந்தார்.
மதமும் மாற்றமும்
எங்கள் லாட்ஜ் குழுமத்தில் இருந்த பலருக்கும் கிறிஸ்துவக் கல்விச்சாலைகளுடன் தொடர்பு இருந்தது. சிலர் கணேசனைப் போல் கிறிஸ்துவப் பள்ளிகளிலேயே படித்திருந்தார்கள். சிலர் அவர்களது பிள்ளைகளைப் படிக்கவைத்திருந்தார்கள். சிலரது மாமா மகனோ, பெரியப்பா மகளோ, விளையாட்டுத் தோழனோ அங்கு படித்திருந்தார்கள். எல்லோருக்கும் சொல்வதற்குச் செய்திகள் பல இருந்தன. ஒரு தகவலில் ஒற்றுமை இருந்தது. மதமாற்றம் என்றொரு சொல் அந்த வளாகங்களில் புழக்கத்தில் இருந்ததில்லை என்பதுதான் அந்த ஒற்றுமை.
லாட்ஜ் குழுமத்தில் பலரும் பதிவிட்ட பிறகு ஸ்ரீதரன் ஒரு கேள்வி கேட்டார். "நாம் ஏன் நமக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்? யாரோ சொன்ன அவதூறைப் பொய் என்று நாம் ஏன் நிரூபிக்க வேண்டும்?" பலரும் உடன்பட்டார்கள். அடுத்து, உரையாடல் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரையை நோக்கித் திரும்பியது.
கை நழுவிய செல்வம்
ஸ்ரீதரன் சொன்னது சரிதானா? நாம் ஏன் நமக்குத் தெரிந்த உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் எனக்கு அடுத்த நாள் ஒரு செய்தி வடிவில் கிடைத்தது. அந்தச் செய்தி மதமாற்றத்தைப் பற்றியதல்ல. இந்தியாவைப் பற்றியதே அல்ல. அது ஹாங்காங்கைப் பற்றியது.
ஹாங்காங்கில் வெளியாகும் 'மிங் போ' எனும் ஒரு புகழ் பெற்ற சீன நாளிதழில், ஜனவரி மாதத்திலிருந்து அதன் செய்திப் பக்கத்தில் ஒரு பொறுப்புத் துறப்பு வாக்கியம் இடம்பெறுகிறது. "இந்தச் செய்திகள் அரசின் மீதும், மக்களின் எந்தப் பிரிவினர் மீதும், வெறுப்பையோ அதிருப்தியையோ பகைமையையோ தூண்டிவிடும் நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை." படித்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஊடகச் சுதந்திரம் கொடி கட்டிப்பறந்த ஹாங்காங்கில் இப்படியெல்லாம் தற்காப்புக் கவசங்களைத் தரித்துக்கொண்டு பத்திரிகைகள் செய்தி வெளியிடுகிற காலமொன்று வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை.
150 ஆண்டு காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது ஹாங்காங். 1997-ல் சீனாவுக்குக் கைமாறியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஹாங்காங்கில் நடப்பிலிருந்த கட்டற்ற வணிகமும் சுயேச்சையான நீதித்துறையும் சுதந்திரமான ஊடகங்களும் முன்னைப் போலவே அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு இயங்கும் என்று வாக்குறுதி நல்கியது சீனா. அவ்விதமே நடந்தும்வந்தது.
2019-ம் ஆண்டு விசாரணைக் கைதிகளை ஹாங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்த ஏதுவாக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு எதிராகவும், கூடுதல் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டக் காட்சிகள் ஊடகங்களில் நேரலையாக வெளியாயின.
2020-ல் கரோனா வந்தது. 2021-ல் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. கடுமையான விதிகளுடன் கூடிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமலாகியது. ஜூன் 2021-ல் 'ஆப்பிள் டெய்லி' நாளிதழும், டிசம்பர் 2021-ல் 'ஸ்டாண்ட் நியூஸ்' நாளிதழும் நின்றுபோயின. உரிமையாளர்கள் கைதாகினர். இந்தச் சூழலில்தான் 'மிங் போ' நாளிதழ் தன்னைச் சுற்றி மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தை வனைந்துகொண்டது.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். 2004-ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை. சென்னையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது ஹாங்காங்கில் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. பலரும் ஹாங்காங்கின் ஜனநாயகத்தைப் பற்றியும் கருத்துச் சுதந்திரம் பற்றியும் கேட்டார்கள். நான் சொன்னேன்: 'ஹாங்காங்கின் ஊடகங்கள் சுதந்திரமானவை. சீனாவில் தடைசெய்யப்பட்ட நூல்கள் ஹாங்காங்கில் கிடைக்கும். எந்த இணையதளமும் அங்கு தடைசெய்யப்படுவதில்லை. ஹாங்காங்கில் கருத்துச் சுதந்திரத்தை 2047 வரை பேண வேண்டிய கடமை சீனாவின் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. அதற்குப் பிறகு மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.'
இப்படிப் பேசினேன். அப்படித்தான் நம்பினேன். ஆனால், அது அப்படி நடக்கவில்லை.
இன்றைய தினம் நாம் ஒரு பொருளுக்கு உரிமையாளராக இருக்கிறோம்; ஆனால் நாம் கவனமாக இருந்தாலொழிய, அது காலாகாலத்திற்கும் நம் கைகளிலேயே தங்கியிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஹாங்காங்கின் செய்தி அதுதான்.
மைக்கேல்பட்டியில் இருப்பது பழம்பெரும் பள்ளியாக இருக்கலாம். அங்கு இத்துணை காலமும் மதமாற்றம் பற்றிய குற்றச்சாட்டு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது ஒரு பள்ளி நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டு மட்டுமில்லை. ஒரு சமூகமாகப் பன்னெடுங்காலமாக நாம் பேணிவந்திருக்கும் நல்லிணக்கத்தின் மீதான குற்றச்சாட்டு. இப்போது எதிர்வினை ஆற்றாவிட்டால் காலக்கிரமத்தில் இந்த இணக்கம் கை நழுவிப் போகக் கூடும்.
காந்தியும் கோட்சேயும்
நமது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான அவதூறு நேரடியாக மட்டுமில்லை, மறைமுகமாகவும் நைச்சியமாகவும்கூட வைக்கப்படுகிறது. அப்படியான ஒன்றையும் நான் சமீபத்தில் எதிர்கொண்டேன். ஜனவரி 30, காந்தியின் நினைவு நாள். ஐந்தாண்டுகளுக்கு முன்னால்கூட இந்த நாளில் காந்தியின் கொலையாளியைப் பற்றி யாரும் பேசியதாக எனக்கு நினைவில்லை. ஆனால், இந்த முறை பலரும் பேசினார்கள். கோட்சேவைச் சிலர் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் பலரும் எதிர்வினை ஆற்றினார்கள்.
இந்தக் களேபரத்தில் கடந்த மாதம் வெளியான ஓர் ஊடகரின் கட்டுரை ஒன்றையும் வாசித்தேன். மிக மென்மையான கட்டுரை. கட்டுரையாளர் காந்தியடிகளையும் கோட்சேவையும் எதிரெதிராக நிறுத்தி ஒப்பிடுகிறார். "தன் மனதிற்கு சரியென்று பட்டதை எத்தனை எதிர்ப்புக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகச் சொல்லும் நேர்மை இருவருக்கும் இருந்தது. இருவரும் தத்தம் கருத்துகளுக்காகப் பத்திரிகை நடத்தினார்கள். காந்தி பிரம்மச்சாரியத்தை வலியுறுத்தினார். கோட்சே பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். காந்தி எளிமையை விரும்பினார். கோட்சே எளிய வாழ்க்கை வாழ்ந்தார்" என்று கட்டுரையாளர் அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் இருவருக்கும் இடையிலான முரண்களை கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்.
எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நாட்டின் மீது சம உரிமை இருக்கிறது என்று காந்தி நம்பினார். ஆனால் இந்த நாடு இந்துக்களுக்கானது, முஸ்லிம்களைவிட, கிறிஸ்தவர்களைவிட இந்த நாட்டை மேலாதிக்கம் செலுத்தும் தகுதி இந்துக்களுக்கு இருக்கிறது என்று கோட்சே கருதினார். காந்தியின் இந்தியா பன்முகத்தன்மை கொண்டது, அனைவருக்குமானது.
அனைவருக்குமானது. கோட்சேவின் இந்தியாவோ இந்துக்களுக்கானது. காந்தி கொல்லப்பட்டவர். கோட்சே கொன்றவர். இந்த இருவேறு துருவங்களைத்தான் கட்டுரையாளர் சாதுரியமாகச் சமன்படுத்துகிறார்.
கட்டுரையாளர் தொடர்ந்து, 'காந்தி படுகொலை செய்யப்பட்டதில் தனக்கு உடன்பாடில்லை' என்கிறார். அதேவேளையில், 'கோட்சேவின் வாதங்களைப் பரிசீலிக்காமல் அவரை இகழ்வது நியாயமில்லை' என்றும் சேர்த்துக்கொள்கிறார். கோட்சேவை நேரடியாக ஆதரிப்பவர்களைப் போலவே இந்த தொழுத கையுள் வாள் வைத்திருப்பவர்களும் ஆபத்தானவர்கள்.
கருகத் திருவுளமோ?
இங்கே டாக்டர் ராம்குமாரின் பதிவை தாமஸ் ஜெயசீலன் வெளியிடுகிறார், சிராஜூதின் யூசுப் பின்னூட்டமிடுகிறார். இந்த இணக்கம் தற்செயலானதல்ல. அது பல்லாண்டு கால நல்லெண்ணத்தில் உருவானது. இதைச் சிறுகச் சிறுகச் சிதைத்துவிடும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டும். எங்கள் லாட்ஜ் குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் சொல்வதுபோல் நாம் அவற்றைப் புறக்கணித்துவிட்டுக் கடந்து போகலாகாது.
"எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது, மடியத் திருவுளமோ?" இந்த வண்ண விளக்கை அணைத்துவிட முயற்சிப்பவர்கள் நேராக வரலாம், மறைந்திருந்து தாக்கலாம், வன்மையாகப் பேசலாம், மென்மையாக வார்த்தையாடலாம், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த வண்ண விளக்கைக் காக்க வேண்டும். அது மைக்கேல்பட்டியோ, உடுப்பியோ; அதை அணைக்கும் முயற்சிகள் சிறிதாகிலும் பெரிதாகிலும் எதிர்க்க வேண்டும்!
4
5
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Latha 3 years ago
பூமியில் எல்லாம் உயிரினமும் இருக்கனும். ஒரே ஒரு உயிரினம் மட்டும் தான் இருக்கு ன்னா, அது அதோட கடைசி காலத்துல இருக்குன்னு அர்த்தம்
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Kumaresan Prabhakaran 3 years ago
அருமையான கட்டுரை, நடுநிலையுடன் எழுதுவது சிரமமான காரியம். ஆசிரியர் அந்த பணியை வெகு திறமையுடன் கையாண்டிருக்கிறார். நன்றி
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
JOHN SATHIYASEELAN 3 years ago
மிகச்சிறந்த கட்டுரைரையை எழுதியிருக்கிறார் இராமநாதன் சார் அவர்கள்.ஆசிரியர் குறிப்பிடுவது போல வெறுப்பை விதைப்பவர்கள் எந்த வடிவத்திலும் வரலாம்.நாம் கவனமாக இருக்க வேண்டும்
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Ilango D 3 years ago
இந்த வண்ண விளக்கை காக்க வேண்டும் அதை அணைக்கும் முயற்சிகள் சிறிதானாலும் பெரியதானாலும் எதிர்க்கவேண்டும் என்கிற கருத்துக்கள் மிகவும் அருமை! எளிமையாகவும் நளினமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.