கட்டுரை, விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், நிர்வாகம், தொழில் 5 நிமிட வாசிப்பு

பஞ்சாபின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள்

லக்வீந்தர் சிங் நிர்விகார் சிங் பிரகார்ஷ் சிங்
28 Jul 2024, 5:00 am
0

ஞ்சாபின் இப்போதைய பொருளாதாரமானது மந்தமான வளர்ச்சி, சமூகத்தின் புதிய பிரச்சினைகள், சுற்றுச்சூழலில் சீரழிவு ஆகியவற்றால் முடங்கிக்கொண்டிருக்கிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் இருப்பதாலும், நிலத்தடி நீர் வற்றிவருவதாலும் அதன் வளர்ச்சிப் பாதை சரிந்துகொண்டிருக்கிறது. பஞ்சாபின் தண்ணீர் வளம், தேசப் பிரிவினையின்போது 1947இல் முதலில் வெகுவாக (பாகிஸ்தானுக்கு) இழக்கப்பட்டது. பிறகு மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது பஞ்சாபிலிருந்து இமாச்சலம், ஹரியாணா பிரிக்கப்பட்டபோது மேலும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

1970களில் ‘தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை’ அறிவிக்கப்பட்ட பிறகு மாநில வேளாண் சாகுபடி முறையே மாறியது. கோதுமை – நெல் ஆகிய பயிர்களை அடுத்தடுத்து சாகுபடி செய்யத் தொடங்கினர். அதற்கு அதிகமாக தண்ணீரும் ரசாயன உரங்களும் பயன்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச எல்லைக்கு அருகில் இருப்பதாலும், 1980கள், 1990களில் ஏற்பட்ட அமைதியின்மையாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வெகு அருகில் உள்ள மாநிலமாக இருந்ததாலும் பெரிய தொழில் நிறுவனங்கள் பஞ்சாபில் அமையவில்லை. இதனால் தொழில் துறையில் அதிக அளவில் முதலீடு, வேலைவாய்ப்பு, உற்பத்தி போன்றவை பிற தொழில்வள மாநிலங்களைப் போல விரிவடையவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பஞ்சாபில் வேளாண் துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் உணவுதானிய உற்பத்தியில் பாதுகாப்பை ஏற்படுத்தின. கோதுமை, நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்கள் பயன்படுத்தப்பட்டன. பசுமைப் புரட்சி என்று அதை அழைத்தார்கள். இதனால் ஏற்பட்ட வளர்ச்சியால் பஞ்சாபின் தனிநபர் வருமானம் உயர்ந்தது, பற்றாக்குறை நீங்கியது, சுகாதார சேவைகளை அரசால் அதிகரிக்க முடிந்தது, மனிதவள ஆற்றலும் பெருகியது.

பசுமைப் புரட்சிக்குப் பிறகு நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் பஞ்சாப் மாநிலம்தான் 2000வது ஆண்டு வரை முதலிடம் பெற்றது. ஆனால், அதன் பிறகு குறைந்துகொண்டேவந்து 2021 – 2022இல் பத்தாவது இடத்துக்கு வந்துவிட்டது.

4 தொடர்புள்ள காரணிகள்

பஞ்சாபின் பொருளாதாரம் மேற்கொண்டு வளர முடியாமல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள 4 காரணிகள் இழுக்கின்றன.

முதலாவதாக, ஒன்றிய அரசின் உணவு தானியக் கொள்முதல் கொள்கையையே பஞ்சாப் அரசு பெரிதும் நம்பியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் வருமானத்தை மேற்கொண்டு உயர்த்த முடியாததால் நிதி நிர்வாகம் செயலற்றுவிடுகிறது. மாநிலத்தின் வேளாண் சூழலும், மாநில அரசியலும்கூட இதற்கு முக்கிய காரணங்கள். 

இரண்டாவதாக, பொது நிதி நிர்வாகக் கோளாறுகளால் மாநிலக் கட்டமைப்பின் வடிவமும் அடித்தளக் கட்டமைப்பும் எதிர்மறையான பலன்களையே பெறுகின்றன. 

மூன்றாவதாக, ஒன்றிய அரசு பொருளாதார தாராளமயக் கொள்கையை கடைப்பிடித்தபோது மாநில அரசியலும் பிராந்திய அரசியல் நடவடிக்கைகளும் சேர்ந்து மாநிலத்தின் உற்பத்தித் தொழில் நசியக் காரணங்களாகிவிட்டன. அதனால் புதிய தொழில் உற்பத்திப் பிரிவுகளும் பஞ்சாபில் ஏற்படவில்லை.

நான்காவதாக, மாநிலத்தின் மனிதவள ஆற்றல் தனிப்பட்டும் வளரவில்லை; நிறுவனங்கள் மூலமான முதலீடும் அமைப்புகள் மூலமான முதலீடும்கூட பெருகத் தவறிவிட்டன. சமீபத்திய பத்தாண்டுகளில் வீழ்ச்சிகூட ஏற்பட்டுவிட்டன. எனவே, பஞ்சாபில் தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்படுவதில்லை, புதிய முதலீடுகளையும் மாநிலத்தால் ஈர்க்க முடியவில்லை.

பொருளாதாரக் கட்டமைப்பு

பஞ்சாபில் 2022 – 2023இல் மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்விஏ) விவசாயத்தின் பங்களிப்பு 26.7%, வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்களிப்பு 24.6%. 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்தே மாநிலப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு, இதே அளவு நபர்வாரி வருமானம் உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறையவில்லை. (விவசாயத்தின் பங்களிப்பும், விவசாயத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கையும் குறைந்தால்தான் மாநிலம் விவசாயத்தையே பெரிதும் நம்பவில்லை என்று பொருள்).

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் பஞ்சாப் 1.5%தான் வைத்திருக்கிறது, ஆனால் நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 31.2%, கோதுமையில் 46.2% என்று ஒன்றிய அரசின் கொள்முதலுக்கு வழங்குகிறது. பஞ்சாப் விவசாயத்தின் மையப் பிரச்சினையே இதுதான். விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் புன்செய் தானியங்களின் சாகபடிக்கோ அல்லது அதிக விலை பெற்றுத்தரும் வணிகப் பயிர்கள் சாகுபடிக்கோ மாற மறுக்கிறார்கள். கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கு திட்டங்களுக்குக்கூட அதிகம் முன்வருவதில்லை.

நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கொண்டுவர உதவிய அரசுகள், விவசாயத் தேவைக்கு இலவச மின்சாரம் வழங்கின. இதனால் தொடர்ந்து நெல் – கோதுமையையே சாகுபடி செய்து நிலத்தடி நீரையும் வெகுவாக வற்றச்செய்துவிட்டனர். உரம், பூச்சிக்கொல்லிகள், நிலத்தடி நீர் பயன்பாடு ஆகியவை மிதமிஞ்சிப் போனதால் நிலம் சாரமிழந்ததுடன் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் பெருகிவிட்டன. கோதுமை, நெல் சாகுபடியின் முக்கிய வேலைகளுக்கு இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.

மாநிலப் பொருளாதாரத்தில் (ஜிஎஸ்விஏ) தொழில்துறை பங்களிப்பு 27.4%, வேளாண் துறையின் பங்களிப்புக்கு கிட்டத்தட்ட சமம். தேசிய அளவில் தொழில் துறை சராசரி என்னவோ அதுவே பஞ்சாபிலும் நிலவுகிறது. ஆனால், இவை நடுத்தர – சிறு தொழில் பிரிவுகள். இவை 34.3% வேலைவாய்ப்பை அளிக்கின்றன. தொழில் துறையில் மொத்த முதலீட்டு மதிப்பு 31%. இதுவும் தேசிய சராசரிதான், ஆனால் இப்போது உற்பத்திப் பிரிவுகளிலிருந்து கட்டுமானத் தொழில் துறைக்கு மாறிவருகிறது.

பஞ்சாப் தொழிலுற்பத்திப் பிரிவுகளில் பதிவுசெய்துகொண்டவையும் பதிவுசெய்துகொள்ளாதவையும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்கின்றன. முதலீடு, தொழில்நுட்பப் பயன்பாடு, உற்பத்தித் திறனில் வளர்ச்சி ஆகியவை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. நிறுவனங்கள் சிறியவையாகவும் அருகருகில் இல்லாமல் சிதறியதைப் போல வெவ்வேறு பகுதிகளில் இருப்பதாலும் முதலீடுகள் போதிய அளவு செய்யப்படுவதில்லை.

நம்பத்தகுந்த மின்சார சப்ளை, மின்கட்டண அளவு, தொழில் திறமையுள்ள தொழிலாளர்கள் ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறைகளும் தொழில் துறையை பாதிக்கின்றன. தொழிலுற்பத்திப் பிரிவுகளுக்கு நல்ல அடித்தளக் கட்டமைப்பும், வலிமையான சந்தை வாய்ப்புகளும் இல்லை என்பதும் பெரிய குறைகள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சரியும் சமூகப் பாதுகாப்பு

ஜீன் டிரேஸ் 26 Jan 2023

சேவைத் துறை பெரியது

சமீப காலமாக நாட்டின் பல மாநிலங்களில் நிலவுவதைப் போல பஞ்சாபிலும் சேவைத் துறை - விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளைவிட - பெரிதாகிவருகிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 45.9% சேவைத் துறையிலிருந்தே கிடைக்கிறது, வேலைவாய்ப்பும் 41.1% ஆக இருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் சேவைத் துறை விரிவடைந்துள்ளது. ஆனால், நபர்வாரி (தனிநபர்) வருமானம் தேசிய சராசரி 54%ஐவிட பஞ்சாபில் குறைவாக இருக்கிறது.

பிற மாநிலங்களைவிட பஞ்சாப் சேவைத் துறை அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பஞ்சாபின் வேளாண் துறையில் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதே. பஞ்சாபின் சேவைத் துறையில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், அதிகம் பேர் வியாபாரத்திலும் பழுதுபார்ப்பிலும்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நிதிச் சேவைகள், நிர்வாக சேவைகளில் குறைவான எண்ணிக்கையிலேயே ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுக்கு அதிக ஊதியமும் தரப்படுவதில்லை. சேவைத் துறையில் சார்பு அலகுகள் வளர்ச்சி அடையும் விதத்தில் நகர்ப்புற அடித்தளக் கட்டமைப்பும் மனிதவள ஆற்றலும் வளரவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பசுமைப் புரட்சியின் முகம்

ஆர்.ராமகுமார் 30 Sep 2023

தொழிலாளர்கள் - வேலைவாய்ப்பு

பஞ்சாபில் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு (2022-23) தேசிய சராசரி 57.9%ஐவிட குறைவு 53.5%. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரி 3.2% என்பதைப் போல கிட்டத்தட்ட இரட்டிப்பு 6.1%. மொத்த மக்கள்தொகையில் தொழிலாளர் எண்ணிக்கையும் தேசிய சராசரி 56%ஐவிட குறைவு 50.2%. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம், அதுவும் கிராமப்புறங்களில் மேலும் அதிகம். பஞ்சாபிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அதேசமயம், பிற மாநிலங்களிலிருந்து வேலைதேடி பஞ்சாப் வருவோர் எண்ணிக்கையும் அதிகம். அப்படி வருவோர், வருவாய் குறைவான மாநிலங்களிலிருந்து வருகின்றனர், அவர்கள் முறையான தொழில் பயிற்சி பெற்றவர்களும் அல்ல. தொழில் துறையில் பெண்கள் பங்களிப்பு தேசிய சராசரி 23.5% என்பதற்கு கிட்டத்தட்ட சமமாகவே பஞ்சாபிலும் 23.2% இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இது 26.3% ஆகவும் கிராமங்களில் 40.7% ஆகவும் இருக்கிறது.

வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு கிராமங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமில்லை. இளம் பெண்கள், இளைஞர்கள் எண்ணிக்கையும் விவசாய வேலைகளில் குறைந்துவருகிறது. விவசாய வேலைகளைச் செய்ய சமூக அளவில் புதிய தலைமுறை முன்வருவதில்லை, அவர்களை ஈர்க்கும்வகையில் விவசாய வேலைகளும் இல்லை.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

கல்வி - சுகாதாரம்

பஞ்சாப் மக்கள்தொகை 3 கோடிக்கும் மேல். இவர்களில் ஐந்தில் ஒரு பகுதி 5 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள், பள்ளிக்கூட மாணவர்கள். பள்ளிகளில் சேர்க்கை விகிதம் உச்சபட்சம், தொடக்கக் கல்வியில் படிப்பைப் பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. பள்ளிக்கூட மாணவர்களில் பாதிக்கும் மேல் அரசு பள்ளிக்கூடங்களில்தான் படிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களின் அடித்தளக் கட்டமைப்புகளுக்கு அரசு அதிகம் செலவிடுவதால் இது சாத்தியமாகியிருக்கிறது. மாணவர்கள் தேர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றில் பஞ்சாப் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. மொழிப்பாடம், கணிதம், அறிவியல் ஆகியவற்றை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு அவர்களுடைய திறமைக்கேற்ப ஊக்க ஊதியம் அதிகரிக்கப்பட்டால் மேலும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், முதுகலை பட்ட வகுப்பில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட குறைவாக இருக்கிறது. பஞ்சாபில் உயர்கல்வியில் அதிகம் சேருவது மாணவிகளாகத்தான் இருக்கின்றனர்.

மருத்துவம் – சுகாதாரம்

மருத்துவம் – சுகாதாரத் துறைகளில் தேசிய சராசரியைவிட பஞ்சாப் சிறந்து விளங்குகிறது. ஆனால், பணக்கார மாநிலங்களைவிட அதிகமாக இல்லை. சராசரி தேசிய ஆயுளைவிட பஞ்சாபியர்களுக்கு ஆயுள் அதிகம். மகப்பேறுக்கு முன்னால், மகப்பேறுக்குப் பிறகு இறப்பு தடுப்புகள், தடுப்பூசிகள் போடப்படுவது ஆகியவற்றில் மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கேற்ற எடையுடன் ஆரோக்கியமாகவே வளர்கின்றன. இவற்றுக்கு முக்கிய காரணம் கடந்த சில பத்தாண்டுகளில் பஞ்சாப் பெற்ற செல்வ வளமும் மக்களுடைய வாழ்க்கை முறையும்தான். ஆனால், அப்படி இருந்த மாநிலம் இப்போது அடைந்திருக்க வேண்டிய அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை.

இப்போது மக்களிடையே உணவுப் பழக்கங்கள் மாறுவதாலும் நொறுக்குத் தீனிகள் உண்பது அதிகரிப்பதாலும் சுகாதாரம் குறைந்துவருகிறது. பெண்கள், சிறுமிகள் வலிமையிழந்துவருகின்றனர்.

நிதி வளமும் நிர்வாகமும்

1980கள் தொடங்கி 1990களின் மத்திய காலம் வரையில் பஞ்சாபில் பெருமளவு அரசியல் – சமூகக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. பெரும்பாலான காலம், குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சியின் கீழ் மாநிலம் இருந்தது. எனவே வளர்ச்சிக்கான நிதியை சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்காக அதிகம் செலவிட்டனர். ஆனால், அத்தகைய செலவுகளுக்கு கட்டுப்பாடுகளோ தணிக்கையோ இல்லாததால் நிறையப் பணம் வீணடிக்கப்பட்டது.

சமூகத்தில் அமைதி குலைந்ததால் வருவாய் வசூல் குறைந்தது. மாநிலம் செலவுகளுக்காக அதிகம் கடன் வாங்கியது. வருவாய் கணக்கில் உபரியாக இருந்த மாநிலம், வருமானம் போதாமல் பற்றாக்குறையைத் தொடர்ந்து சந்தித்தது. 1990 – 1991இல் அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.544 கோடியாக இருந்தது, 2022 – 2023இல் ரூ.24,588 கோடியாக - கிட்டத்தட்ட ஐந்து மடங்கு - அதிகரித்துள்ளது.

மாநிலத்தின் கடன் சுமை 2024 மார்ச் நிலவரப்படி மாநில ஜிஎஸ்டிபி மதிப்பில் 47.6% ஆக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் பஞ்சாபில்தான் கடன் சுமை அதிகம். 2017 முதல் மாநிலத்தின் கடன், சராசரியாக 9% அதிகரித்துவருகிறது. புதிதாக வாங்கும் கடனில் 92.2% பழைய கடன்களுக்கு வட்டி கட்டவே செலவிடப்படுகிறது.

மாநிலம் கடன் பொறியில் சிக்கியிருக்கிறது. அரசின் வருவாய் வசூல் ஆண்டுதோறும் இலக்கை எட்ட முடியாமல் தோற்கிறது. அதிகம் வரிவிதிக்க முடியவில்லை என்பதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க முடியவில்லை. பஞ்சாப் பெரிதும் வேளாண்மையையே நம்பியிருக்கிறது, வேளாண் வருவாய் மீது வருமான வரி உள்பட எந்த வரிகளும் விதிக்கப்படுவதில்லை.

பிற துறைகளில் கிடைக்கும் வருமானத்திலும் கணிசமாக வரி ஏய்க்கப்படுகிறது. வரியில்லாத இனங்களிலும் வருவாய் குறைந்துவிட்டது. நகர்ப்புற கட்டமைப்பு போதாமையால் வீட்டு வரி உள்ளிட்டவற்றையும் உயர்த்த முடியவில்லை. அரசு நிர்வாகத்தின் தரமும், திறனும் மேம்படவில்லை.

தேவைப்படும் கொள்கை மாற்றம்

வேளாண் துறை உற்பத்தியில் விரிவாக்கம் தேவைப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சி அதிகரிக்க புதிய வகை துறைகளில் முதலீடு தேவைப்படுகிறது. பிற மாநிலங்களுடன் தொழில், வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் வளர ஒன்றிய அரசுடனும் பக்கத்து மாநிலங்களுடனும் உறவு சுமுகமாக வேண்டும். ஒன்றிய அரசின் பெருந்துணை இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்.

தேசிய உணவு கொள்முதல் கொள்கையில் புன்செய் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்காச் சோளம், பருப்பு வகைகளை வாங்க ஒன்றிய அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் கோதுமை, நெல் சாகுபடியிலிருந்து மாற வேண்டும். அதற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு மட்டும் போதாது, மேலும் ரொக்க ஊக்குவிப்புகள் அவசியம். கடந்த காலத்தில் தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதிசெய்த மாநிலம் பஞ்சாப் என்பதால், இன்றைய ஒன்றிய அரசு அதற்கு நன்றிக் கடனாக பெரும் தொகையை வழங்கி உதவ வேண்டும். மாநிலத்தின் நிதி பற்றாக்குறையைப் போக்க ஆண்டுக்கு 20% என்று ஐந்தாண்டுகளுக்கு நிதியை ஒன்றிய அரசு வழங்கினால் போதும்.

தொழில் துறையிலும் புதிய தயாரிப்புகளுக்கு முதலீடுகள் மாற்றப்பட வேண்டும். பஞ்சாபில் மின்கட்டணம் அதிகம், மாநில அரசின் வரிவிகிதங்களும் வரிக் கட்டமைப்புகளும்கூட அதிகம். இவற்றைச் சீர்திருத்தம் செய்தால்தான் முதலீடு பெருகும். இப்போதுள்ள தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதுடன் எதிர்காலத் தொழில் துறைக்கும் சேர்த்து திட்டமிட வேண்டும். இனி வருங்காலங்களில் மூளைத் திறன்தான் அதிகம் தேவைப்படும் என்பதால் மாநிலத்தின் கல்வி, தொழில், நிர்வாகக் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும்.

வேளாண் துறையில் குறைந்த ஊதியம், குறைந்த உற்பத்தித் திறன், அதிக இடுபொருள் முதலீடு ஆகியவை நிலவுகின்றன. இவை முதலில் மாற்றப்பட வேண்டும். பஞ்சாபில் வேளாண் உற்பத்தி அதிகமென்றாலும் கோதுமை, நெல் ஆகியவை நேரடியாக கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன, அவற்றையெல்லாம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றினால் வருவாயும் பெருகும்.

தொழில் துறை ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு மாநிலம் மிகக் குறைவாகவே செலவிடுகிறது. அரசுத் துறை தனியார் துறை மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களும் இதில் பின்தங்கியிருக்கின்றன. பஞ்சாபில் உயர்கல்வி, நகர்ப்புற கட்டமைப்புக்கு அதிக முதலீடு அவசியம். உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் அவசியப்படுகின்றன.

சமூக நிலை

பஞ்சாபில் மதுப்பழக்கமும் போதைப்பொருள் பழக்கமும் அதிகமாக இருப்பது மாநில வளர்ச்சியைப் பெரிதும் தடுக்கின்றன. அரசியலர்கள் மதத்தைத் தொடர்ந்து ஆயுதமாக பயன்படுத்துவதும் மாநில நலனைப் பாழ்படுத்துகிறது.

பசுமைப் புரட்சியின்போது கோதுமை - நெல் சாகுபடியில் ஈடுபட்ட வேளாண் துறை அதிலிருந்து விடுபட மறுக்கிறது. ஒன்றிய அரசின் காலத்துக்கு ஒவ்வாத கொள்முதல் கொள்கையும் பஞ்சாப்பை சீரழிக்கிறது.

ஆழ்துளைக் கிணறுகளாலும் இலவச மின்சாரத்தாலும் நிலத்தடி நீர் வற்றி மாநிலத்தின் பெரும்பகுதி பாலை நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இது பஞ்சாபை மட்டுமல்ல, நாட்டையே வெகுவாக பாதிக்கும்.

1970களில் உணவுப் பற்றாக்குறையிலிருந்து நீங்கி தன்னிறைவு பெற பசுமைப் புரட்சி பெரிதும் கை கொடுத்தது. ஆனால், அதே கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மாநிலத்தின் அரசியல், சமூக, பொருளாதார நலனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்திவருகிறது. இது பஞ்சாபின் தனிப் பிரச்சினை மட்டுமல்ல, தேசியப் பிரச்சினையுமாகும். எனவே, மாநில – ஒன்றிய அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்.

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்திய வேளாண் சிக்கல் – மூன்றாவது வழி
பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்
சரியும் சமூகப் பாதுகாப்பு
பசுமைப் புரட்சியின் முகம்
நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி
குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்
ஊட்டச்சத்து உணவு: தேவை முழு அணுகுமுறை!
சம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






அமரத்துவம்மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாகாணொலிமக்கள்தொகை: எந்த இடத்தில் நிற்கிறது இந்தியா?பிளவு எச்சரிக்கையான பதில்கள்ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத்தின் கண்டனம்கிளாம்பாக்கம் ஏன் கிந்தனார்களே?கோத்தபய ராஜபக்சமதுப் பழக்கம்சீனப் பிள்ளையார்காலவெளிசிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ்பாஜக எம்பிஆரோக்கியத் தொல்லைகள்மார்க்சிஸ்டுகள் செய்த தவறு?சுதேச சமஸ்தானம்திராவிட முன்னேற்ற கழகம்நார்வேடெல்லி வழக்குஉள்ளாட்சி மன்றங்கள்தீர்ப்புஐந்து மையங்கள்சுயாட்சித்தன்மைசமஸ் வி.பி. சிங்சண்முகநாதன் கலைஞர் பேட்டிஎஸ்.சிவக்குமார்சோனோவால்தீன் மூர்த்தி பவன்ஷனா ஸ்வான் ‘கவுன்டவுன்’

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!