கட்டுரை, ஆரோக்கியம், விவசாயம், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

ஊட்டச்சத்து உணவு: தேவை முழு அணுகுமுறை!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
05 Jan 2023, 5:00 am
1

ந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில், இந்திய வேளாண்மைத் துறை, இந்த ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி 31.5 கோடி டன்னாக (31,500 கோடி கிலோ) இருக்கும் என்னும் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மக்கள்தொகை 134 கோடி எனில், இது ஒரு தனிநபருக்கு வருடம் 235 கிலோ உணவு தானியமாகும். 

ஒரு நாடாக நாம் உணவுத் தன்னிறைவை அடைந்து பல காலமாகிவிட்டது. பெரும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என்னும் நிலையை நாம் 1969இல் கடந்துவிட்டோம். ஆனால், இன்னும் அனைவருக்கும் வயிறார உணவு தானியங்கள் கிடைக்கிறதா எனில், இல்லையென்றே சொல்ல வேண்டும். பெரும் முரணாக, வற்றாத ஜீவநதிகள் பாயும் உத்தர பிரதேச, பிஹார் மாநிலங்களில்தாம் இன்றும் கணிசமான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இது நேரடியான பற்றாக்குறை.

இதைத் தாண்டி, கண்ணுக்குத் தெரியாத இன்னொரு பற்றாக்குறை, இந்திய மக்களில் பெரும்பான்மையினரைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. அது சரிவிகித ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு. 1996ஆம் ஆண்டு, உலக உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாடு, உணவுப் பாதுகாப்பு என்பதற்கான தெளிவான வரையறையைத் தந்துள்ளது. 

‘நாட்டு மக்கள் அனைவருக்கும், தங்களுக்கு விருப்பமான, வாழ்க்கை முறைக்குத் தேவையான சத்துகளைக் கொண்ட உணவை பொருண்மையாகவும், பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் அணுகும் வகையிலும் இருக்கும் சூழல் உருவாகிவருவதே ஒரு நாடு உண்மையான உணவுப் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது என்பதன் அடையாளம்’ என்பதே அது.

இந்த வரையறையை முன்வைத்து நோக்குகையில், இந்தியாவின் நிலை கடந்த 40 ஆண்டுகளில் மோசமடைந்து வந்துள்ளது எனத் தரவுகள் சொல்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், இந்நிலையை சிறிதும் மாற்றவில்லை.

இந்தியச் சிக்கல்

பொருளாதார அடித்தட்டில் இருக்கும் 30% மக்களின் உணவு தானிய நுகர்வு மிகவும் குறைவு. இம்மக்களின் காய்கறி, பழங்கள் மற்றும் மாமிச நுகர்வு 1985ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறைந்துவருகின்றன என ஆய்வுகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதில் 2014ஆம் ஆண்டு தகவலின்படி, இந்தியாவில் 39% குழந்தைகள், உணவுப் பற்றாக்குறையால், சத்துக் குறைபாட்டால், வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 50%க்கும் அதிகமான பெண்களும், பெரும்பாலான குழந்தைகளும் ரத்தசோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என திட்டக் கமிஷனின் முன்னாள் செயலர் என்.சி.சக்சேனா தன் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார்.

பசியும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், மனிதச் செயல்திறனை, சிந்திக்கும் திறனை, நோய் எதிர்ப்புச் சக்தியை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த அலகில் இந்தியா, நேப்பாளம், வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளைவிடக் கீழே உள்ளது. பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் உண்ணும் நாடு இந்தியா. நெல்லை அரிசியாக்கும் முறையில், நெல் வெகுவாகத் தீட்டப்பட்டு, அரிசியின் மேல் அடுக்கில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. மைதா உற்பத்தியிலும் இதே பிரச்சினை உள்ளது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

எப்படி இருக்கிறது தேசிய குடும்ப நலம்?

ப.சிதம்பரம் 16 May 2022

அரசின் உணவுத் தன்னிறைவுக் கொள்கைகள், அரிசி, கோதுமை என்னும் இரண்டே இரண்டு தானியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், சிறுதானியங்கள் காலப்போக்கில், மக்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது மறைந்தே போயின. இன்று இந்தியா போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஒன்று உண்டென்றால், அது ஊட்டச்சத்துக் குறைபாடுதான். தமிழகத்திலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் கணிசமாக உள்ளார்கள். பிள்ளை பெறும் வயதில் உள்ள பெண்களில் ரத்தசோகை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

தீர்வுகள்

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இரண்டு முக்கிய அணுகுமுறைகள் அரசு தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றன:

அ. ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவன அணுகுமுறை

உணவுப் பொருட்களில் செயற்கையாக ஊட்டச்சத்துக்களைச் சேர்த்து, உணவு தானியங்களைத் தயாரிப்பதை ஒரு முக்கியமான தீர்வாக ஊட்டச்சத்து ஆராய்ச்சி வட்டாரங்கள் முன்வைக்கின்றன. இந்தியாவில் மிக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட செறிவூட்டும் திட்டம் என்பது உப்பில் அயோடின் செறிவூட்டுதல் என்பதாகும். இன்று இந்தியாவில் நுகரப்படும் உப்பு என்பது அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பாகும். தமிழகத்திலும், தமிழ்நாட்டு உப்பு வளர்ச்சிக் கழகம் செறிவூட்டப்பட்ட உப்பை மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கிவருகிறது. இதைத் தவிர, மிக மலிவான விலையில் பொது விநியோகத் திட்டம் மூலமாக விற்பனை செய்துவருகிறது.

தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களில் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துகளைச் செறிவேற்றும் பரிசோதனைகள் நிகழ்ந்துவருகின்றன. சமையல் எண்ணெயில் ஏற்கெனவே வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்து செறிவூட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாலிலும் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டம் கட்டாயம். 

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள், ஊட்டச்சத்து செறிவூட்டம் தொடர்பான பல பரிசோதனைகளை இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தியுள்ளன.

இவற்றில் பல பரிசோதனகளில் நேர்நிலை முடிவுகள் காணப்பட்டிருந்தாலும், சில எதிர்மறை விளைவுகளும் விமரிசனங்களும் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, வைட்டமின்கள் செறிவூட்டப்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்படும் விதத்தில், அதில் செறிவூட்டப்பட்ட வைட்டமின்கள் உண்மையிலேயே மக்களுக்கு நலம் பயக்கிறதா என்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, சமையல் எண்ணெய் உணவுப் பொருட்களைப் பொரிக்க உபயோகிக்கையில், எண்ணெய் மிக உயர் வெப்பத்தை அடைகின்றது. அந்த வெப்பநிலையில் வைட்டமின்கள் ஆவியாகிவிடும் அபாயம் உள்ளது. மேலும், நமது சமையல் முறையில், எண்ணெய் பல முறை பயன்படுத்தப்படும் முறையும் உள்ளது.

அதேபோல, வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை நாம் உபயோகிக்கும் விதம். ஏற்கெனவே, பாஸ்ச்சரைஸ் செய்து வைட்டமின்கள் செறிவேற்றப்பட்ட பாலை கொதிக்கவைத்துப் பயன்படுத்துகிறோம். இதன் விளைவாக, பாலில் உள்ள வைட்டமின்கள் ஆவியாகிப் பயனற்றுப்போகின்றன.

சில இடங்களில், செறிவூட்டப்பட்ட உணவு தானியங்கள், எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில், சில்வர் புல்லட் என அழைக்கப்படும், இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி மதிய உணவு மற்றும் பொது விநியோகக் கட்டமைப்பு வழியே பொதுமக்களுக்குத் தரப்படுவதை எதிர்த்துக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில், சிக்கில் செல் அனீமியா, தலஸேமியா மற்றும் மலேரியா பாதிப்புக்குள்ளான மக்களுக்கு, இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி அளிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு எதிரானது என அங்குள்ள தன்னார்வல நிறுவனங்கள், நிபுணர்கள் சொல்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் செறிவேற்றும் தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்குவது என்பது, பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகிவிடும் அபாயம் உள்ளது, அது உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்தியாளர்களை எதிர்மறையாகப் பாதிக்கும் எனவும் இன்னொரு கருத்து நிலவுகிறது.  ஊட்டச்சத்து செறிவேற்றம், உணவுப் பொருள் விலைகளை உயர்த்திவிடக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

எனவே, இந்த உணவு தானிய செறிவூட்டல் முறை இந்தியா முழுமைக்குமாகச் சரியாக இருக்குமா என்னும் புள்ளி மேலும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகிறது.

ஆ. பொதுச் சுகாதார அணுகுமுறை

உணவுப் பண்டங்களைச் செறிவூட்டுதல் என்பது, தேவைப்படும், தேவைப்படாத மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்துக்கள் செல்லும் வழி. அது செயல்திறன் மிக்க வழி அல்ல. எனவே, மக்களின் உடல்நிலையில் பற்றாக்குறைகளை அறிந்து, அதைப் போக்க பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகள் வழியாக, (வைட்டமின்கள், இரும்புச் சத்து மாத்திரைகள் முதலியன) தேவைப்படும் பயனாளிகளுக்கு நேரடியாக அரசே இலவசமாகக் கொடுப்பது மிகக் குறைவான செலவு பிடிக்கக்கூடியது என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், இதில் மக்கள் அனைவருக்கும் பற்றாக்குறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சோதித்து, நிவாரணம் வழங்க முடியுமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால், தீர்க்க மாத்திரைகளும், செறிவூட்டப்பட்ட உணவும் வழங்கப்படுகின்றன.

ஆனால், மாணவப் பருவத்தில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படாமல் போகின்றன. அதனால், வளர்ச்சிக் குறைவும், ஊட்டச்சத்துக் குறைவும் ஏற்பட்டு, கல்வி பயின்று மேலெழ வேண்டிய வருங்கால சந்ததிகளின் எதிர்காலம் குறுக்கப்படுகிறது. மொத்த சமூகத்தையும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் தொடர்பாக சோதனை செய்து நிவாரணம் அளிக்க முடியுமா என்பது இக்கட்டமைப்பின் முன் நிற்கும் பெரும் கேள்வி.

அரசு அணுகுமுறையின் குறைபாடுகள்

ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்க அரசு உருவாக்கும் திட்டங்களின் மிக முக்கியமான பலவீனமே, இத்திட்ட உருவாக்கங்களில், பயனாளிகளின் இருப்பும், பங்களிப்பும் இல்லாமல் இருப்பது. உணவு என்பது ஊட்டச்சத்து மட்டுமல்ல. அது நாவிற்கும் சுவையானதாக இருக்க வேண்டும். சமைக்கும் உள்ளூர் மக்களின் பாரம்பரியத்துடன் இணைந்துபோவதாக இருக்க வேண்டும். 

உணவு என்பது, ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே, பிராந்திய வேறுபாடுகளைக் கொண்டது. சாதிய / வர்க்க வேறுபாடுகளைக் கொண்டது. அது மட்டுமல்லாமல், செய்யும் பணிக்கேற்ப மாற வேண்டிய ஒன்று. கடும் உடல் உழைப்பைக் கோரும் பணியாளருக்கும், குளிர்பதன அறைகளில் நாற்காலியில் அமர்ந்து பணி செய்பவருக்கும், வேறு வேறு உணவும் ஊட்டச்சத்தும் வேண்டும்.

மிக முக்கியமாக, அந்த ஊட்டச்சத்துக் குறைபாடு, அவர்களை, அவர்களின் வருங்கால சந்ததிகளை எப்படிப் பாதிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.  

நீடித்து நிலைக்கும் தீர்வுகள்

இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுப் பிரச்சினைக்கு மேலிருந்து கீழ் (தில்லியிலிருந்து, சென்னையில் இருந்து) என்னும் அணுகுமுறையைவிட, கீழிருந்து மேல் (ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள மக்கள் குழுக்களில் இருந்து) என்னும் அணுகுமுறையில், பயன்பெறுபவர்களின் பங்களிப்போடு தீர்வுகள் காணப்படுவது முக்கியம்.

இது தொடர்பான விவாதங்கள் வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் நடைபெற வேண்டும். குழந்தைகள், பெண்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், உள்ளூர் உணவு தானிய உற்பத்தியாளர்கள் என, இந்தப் பிரச்சினையில் அதிகமாகப் பாதிக்கப்படும் குழுக்களிடையே கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்தில், அரசின் முடிவுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என ஒரு கருத்து இருந்தாலும், நடைமுறையில் இது பின்பற்றப்படுவதில்லை. ஆனால், வெளிப்படையான கருத்துக் கேட்பு முறையில் பல சிக்கல்களுக்கு வெற்றிகரமான, நீடித்து நிலைக்கும் தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன.

இதற்கு இரண்டு உதாரணங்கள் நம் அண்மைக்கால வரலாற்றில் உள்ளன. முதலாவது, தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு தான நடைமுறைகள். 2007ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்ற வணிகம் கொடிகட்டிப் பறந்தது. அது பெரும் சமூகச் சிக்கலாக வெடித்தபோது, உடல் உறுப்பு தானத்தை நெறிமுறைப்படுத்த வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கும், சுகாதாரத் துறை நிர்வாகத்துக்கும் ஏற்பட்டது.

அப்போது, அத்திட்டத்தை நிர்வகித்துவந்த அதிகாரிகள் குழு, உடல் உறுப்பு தானம் தொடர்பான அனைத்துத் தரப்பு மக்களையும், நிறுவனங்களையும். பொது நல நிர்வாகிகளையும், தனியார் மருத்துவ நிறுவனங்களையும் இணைத்து, வெளிப்படையான மக்கள் குரல் கேட்பு நிகழ்வுகளை நடத்தியது. பல்வேறு தரப்பின் கருத்துக்களை உள்ளடக்கிய, சமூகத்தில் பொருளாதார வேறுபாடுகளின்றி, அனைவரும் பயன்பெறும் வகையில் நிர்வாக விதிமுறைகளை அதன் வழியே அரசு உருவாக்கியது.

அவ்வாறு உருவான விதிமுறைகள் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், சாதாரண மக்களுக்கும் பயன்படும் வகையிலும் இருந்ததனால், மக்கள் இந்தத் திட்டத்தில், மனமுவந்து பங்குபெற்றார்கள். தமிழ்நாடு, உடல் உறுப்பு தானத் திட்டத்தின் முன்னோடியாக மாறியது.

அதேபோல, 1988ஆம் ஆண்டு தொடங்கிய மக்கள் போராட்டம், மக்கள் குரல் கேட்டல், குடிமைப் பணி அலுவலர்கள் மற்றும் நீதியரசர்களின் பங்களிப்பு என 18 ஆண்டுகள் பயணித்து, பின்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என மலர்ந்தது. அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் உலகின் பலம் வாய்ந்த ஜனநாயக ஆயுதங்களில் ஒன்றாக அது திகழ்ந்துவருகிறது.

இறுதியாக…

எனவே, ஊட்டச்சத்து மிகுந்த உணவுமுறை தொடர்பான திட்டங்கள், ஆய்வறிக்கைகள் இவை அனைத்தும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மக்களால் விவாதிக்கப்பட்டு, தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், சுவைத் தேவைகள் எனப் பலவுக்கும் இடம் இருக்க வேண்டும்.  

இன்று இது தொடர்பான அறிவியல் பரிசோதனைகள் பலவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான முழுமையான அறிவியல் ஆய்வுகள் தமிழகத்தில் வட்டார அளவில் நடைபெற வேண்டும். இவற்றைச் செய்யவும், ஆவணப்படுத்தவும், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துக்கு இணையான தன்னாட்சி பெற்ற மாநில ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு உருவாக்கி, ஆய்வு முடிவுகள் திரட்டப்பட வேண்டும். பிஹாரில் செய்யப்பட்ட ஆய்வுகளை வைத்து தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துத் திட்டம் உருவாக்கப்படுவது போன்ற அறிவியலுக்குப் புறம்பான வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றிவிடக் கூடாது.

அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ‘வறண்ட வெப்ப மண்டலத்துக்கான பன்னாட்டுப் பயிர் ஆராய்ச்சி நிறுவன’த்தில் (International Crop Research Centre for Semi-arid Tropics – ICRISAT – இக்ரிசாட்) பணிபுரியும் அனிதா என்னும் மூத்த ஆய்வாளர், நான்கு நாடுகளில் நடந்த எட்டு பரிசோதனைகளை ஒன்றிணைத்து வெளியிட்டிருந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ஆராய்ச்சிகள் சிறு குழந்தைகள், பால்வாடி செல்லும் குழந்தைகள், மற்றும் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடையே, 3 மாதம் முதல் 4.5 ஆண்டுகள் வரை நடத்தப்பட்டவை.

இந்தப் பரிசோதனைகளில், ராகி, சோளம், சிறுதானியக் கலவை (ராகி, கம்பு, குதிரைவாலி, கோடோ தானியம்) கொண்ட உணவுகளை உண்ட குழந்தைகளின் வளர்ச்சி, அரிசியை உணவாக உண்ட குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டது. அரிசி உணவை உண்ட மாணவர்களைவிட, சிறுதானிய உணவை உண்ட மாணவர்களின், சராசரி உயரம் 28.2%, எடை 26%, புஜத்தின் சுற்றளவு 39%, மார்பளவு 37% அதிகரித்திருந்தன என அந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

தமிழ்நாடு அரசு, இதேபோன்ற ஆராய்ச்சிகளைத் தமிழகச் சூழலில் நடத்த வேண்டும். அரிசி, கோதுமையைத் தாண்டி சிறுதானியங்களை நம் குழந்தைகளின், பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை மேம்படுத்த உபயோகப்படுத்த முடியுமா என ஆராய்ந்து, தமிழ்நாட்டின் சூழலுக்கேற்ற உணவு தானிய உற்பத்தியை, சத்து மிகுந்த சுவையான உணவுமுறைகளை, தமிழ்நாட்டு உணவுப் பாரம்பரியத்தை இணைத்து உருவாக்க வேண்டும்.

வருங்காலத்தில், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அதற்கு மிகவும் முக்கியமான தேவை, குழந்தைகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சரியான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய நல்ல உணவு எளிதில் கிடைக்கும் வகையில் தீர்வுகள்.

தமிழ்நாடு, 2030இல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்னும் இலக்கை தமிழ்நாடு அரசு உருவாக்கி, அதை நோக்கிய பாதையில் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அதேபோல, 2030ஆம் ஆண்டில், தமிழ் நாட்டில் வளர்ச்சிக் குறைபாடுகள் இல்லாத குழந்தைகள், ரத்தசோகை இல்லாத பெண்கள் போன்ற இலக்குகளும் உருவாக்கப்பட்டு நமக்கான திட்டங்களை நாம் தீட்டிச் செயல்படுத்த வேண்டும். நம்மால் முடியும்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

எப்படி இருக்கிறது தேசிய குடும்ப நலம்?
உடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?
எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து விட்டது என்பது அரிசி மற்றும் கோதுமை தானியங்களை வைத்து மட்டுமே கூறப்படுவது ஏற்புடையது அல்ல. மக்களின் உணவில் மிக முக்கிய அம்சங்களான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நாட்டின் தேவையில் 40% கூட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற மோசமான நிலையை பெரும்பாலான உணவுத்துறையில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. உண்மையில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா படிப்படியாக சதவிகித அளவில் குறைந்து கொண்டே செல்கிறது என்பது அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மை. அவற்றில் தன்னிறைவு அடையாமல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டோம் என ஆட்சியாளர்கள் கூறுவதும் அப்படியே பலர் அதை நம்புவதும் நடந்து கொண்டுதான் உள்ளது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

கம்யூனிஸ்ட் கட்சிதேசிய புள்ளிவிவரம்ஜயலலிதாவயற்களம்தில்லிகால்ஆணிகுறட்டை விடுவது ஏன்?ஜெய்மோகன் பண்டிட் கட்டுரைவிசுவ இந்து பரிஷத்ஊர்வசி புட்டாலியாசட்டமன்றத் தேர்தல்மூலிகைகள்ஆவணம்பத்திரிகையாளர் கலைஞர்திருப்பாவைஅ.முத்துலிங்கம்அஞ்ஞானம்சீனப் பிள்ளையார்விஜயநகர அரசுthulsi goudaகைத் தொழில்விழிப்புணர்வுஎண்ணிக்கைகீதிகா சச்தேவ் கட்டுரைவிவசாயிகள் கோரிக்கைநரேந்திர மோடிமங்கோலிய இனத்தவர்சோழ தூதர் மு.கருணாநிதிபகுஜன்ராக்கெட் குண்டுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!