கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது

ராமச்சந்திர குஹா
15 Mar 2022, 5:00 am
0

வ்வொரு தேர்தலுமே வென்றவர்கள், தோற்றவர்களைப் பற்றிய கதைகள்தான்.  சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றிபெற்ற கட்சிகளையும் தலைவர்களையும் விதந்தோதுவதாகத்தான் இருக்கும், இந்தக் கட்டுரை தோற்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியே எழுதப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் மீண்டும் மிக வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார், பாஜகவும் அறுதிப் பெரும்பான்மை வலு பெற்றுவிட்டது; பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) அபாரமான வெற்றி பெற்றிருக்கிறது. மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சியோ மீண்டும் இனி மீளவே முடியாத அளவுக்கு சரிவைச் சந்தித்திருக்கிறது.

அலட்சியத்தின் விளைவு

இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்புகிறது. பிரிட்டிஷாரிடம் நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு மையமான களமாக இருந்தது உத்தர பிரதேசம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் மூன்று பிரதமர்கள் இந்த மாநிலத்திலிருந்துதான் வந்தார்கள். இருந்தும் 1960-களின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநிலத்திலிருந்த அரசியல் செல்வாக்கு லேசாக தளர ஆரம்பித்தது. 1980-களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி இங்கே பிற அரசியல் இயக்கங்களுடன் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நேரு குடும்பத்திலிருந்து வந்தவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, இந்த முறை உத்தர பிரதேசத்தில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் வேலையைத் தானாகவே சுமக்க முற்பட்டார். இதற்காக தில்லியிலிருந்து லக்னௌவுக்குக் குடிபெயரவோ, சட்டப்பேரவைத் தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடவோ முனையாத பிரியங்கா, தொடர்ந்து மாநிலத்துக்குச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். பிரிட்டனில் இப்போதும் அரசுக்குத் தலைமை வகிக்கும் அலங்கார தலைமைப் பீடமான விண்ட்சர் அரண்மனைக்கு விசுவாசமாக இருக்கும் பிரிட்டிஷ் குடிகளைப் போல, ஊடகங்களில் ஒரு பகுதி (சமூக ஊடகங்கள் உள்பட) பிரியங்காவின் பொதுக்கூட்டப் பேச்சுகளையும் மக்களை அவர் சந்தித்த நிகழ்வுகளையும் - மூச்சுவிடக்கூட மறந்த நிலையில் - மிகுந்த பூரிப்போடு பகிர்ந்துகொண்டன. அவருடைய ஒவ்வொரு பயணமும், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும், ஒவ்வொரு அறிவிப்பும் – உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளித்துவிட்ட புது நிகழ்வாகவே இந்த ஊடகங்களால் விதந்தோதப்பட்டன.

எல்லாம் முடிந்த பிறகு பார்த்தால், பிரியங்கா தலைமையிலான காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 2% சொச்ச ஓட்டுகளுடனும் கடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைவிடக் குறைவாகவுமே பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக – எதிர்பார்த்தபடி பலன் தராவிட்டாலும் – சிறிதளவாவது பாராட்டுக்கு உரியவராகிறார் பிரியங்கா. பஞ்சாபில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்பை - மனம்போன போக்கில் செயல்படும் அவருடைய அண்ணன் - ராகுல் காந்தி நாசப்படுத்திவிட்டார்.

பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு இருந்த நிலையில், அனுபவம் வாய்ந்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கைப் பதவியிலிருந்து நீக்கினார். அமரீந்தர் சிங்கை சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒரு பகுதியினருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அரசியலில் நிரம்பிய அனுபவம் பெற்றிருந்த அவர் தொடக்கம் முதலே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவந்தார். பஞ்சாபில் அடுத்துத் தேர்தல் நடந்தால் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இரண்டுக்குமே ஓராண்டுக்கு முன்னால் சமமான அளவிலேயே இருந்தது.

மக்களிடையே அதிகம் பிரபலமில்லாத சரண்ஜீத் சிங் சன்னியை அமரீந்தருக்குப் பதிலாக முதல்வராக்கியது, ‘எடுத்தேன் – கவிழ்த்தேன்’ என்று பேசும் நவ்ஜோத் சிங் சித்துவை பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமித்தது, அமரீந்தர் சிங்கைத் தொடர்ந்து மட்டம் தட்டிப் பேசிவந்த சித்து அதே வேலையை சன்னியிடமும் செய்தது ஆகியவை மாநில காங்கிரஸ் கட்சியைக் கலகலக்க வைத்துவிட்டது. இதன் விளைவாக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துவிட்டது ஆம்ஆத்மி கட்சி.

கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் கதை

அடுத்து கோவா, உத்தராகண்ட் மாநிலங்களைப் பார்ப்போம். இரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆளும் கட்சி, ஆனால், அவ்விரு அரசுகளும் மக்களிடையே அவப்பெயரை நிறையச் சம்பாதித்துவிட்டன. அவை தங்களுடைய பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை, ஊழல் மிகுந்தவை என்று மக்கள் மதிப்பிட்டிருந்தனர்.

உத்தராகண்டில் மக்களுடைய அதிருப்தியை உணர்ந்த பாஜக தலைமை அடுத்தடுத்து இரண்டு முதல்வர்களை அவசர கதியில் மாற்றி, சரிவைத் தடுக்க முயன்றது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. இருந்தும் இரு மாநிலங்களிலும் பாஜக அரசுகளை நீக்கிவிட்டு ஆட்சிக்கு வர கடுமையான முயற்சிகள் எதையுமே எடுக்கவில்லை.

இறுதியாக மணிப்பூர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடும்படியாக நல்ல முடிவுகளைப் பெற முடியவில்லை. ஒரு காலத்தில் மணிப்பூர் என்றாலே காங்கிரஸ்தான் மக்களுடைய ஒரே தேர்வாக இருந்தது. கடந்த தேர்தலைவிட இருபதுக்கும் குறைவான இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது.

வாய்ப்புகளைத் தவறவிட்ட காங்கிரஸ்

தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக மீண்டும் தலையெடுக்கும் ஆற்றல் காங்கிரஸுக்குப் போய்விட்டது என்று எங்களில் சிலருக்கு நீண்ட காலமாகவே தெரிந்திருந்த உண்மை, இப்போது ஐந்து மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மேலும் உறுதியாகியிருக்கிறது. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது கட்சியை மிகப் பெரிய தோல்விக்கு இட்டுச் சென்ற பிறகு, தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி. அவருடைய அன்னை சோனியா காந்தி கட்சியின் தாற்காலிகத் தலைவரானார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன, கட்சி இன்னும் அவருக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கவே இல்லை. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, அதன் விளைவுகளையே இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

2019 பொதுத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தன்னை சீரமைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. கட்சி அதைத் தூர வீசிவிட்டது. இனி கட்சி என்ன செய்யக்கூடும்? காங்கிரஸின் நன்மை கருதியும் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், கட்சியின் தலைமைப் பதவிகளிலிருந்து மூன்று காந்திகளும் விலக வேண்டும், அது மட்டும் போதாது; தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வுபெற வேண்டும்.

மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெல்லக்கூடிய கட்சியாக காங்கிரஸை மாற்றும் திறமை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இல்லை என்பதற்காக இதைக் கூறவில்லை; அவர்கள் முக்கியப் பதவிகளை வகிக்காமல், சாதாரணமாக காங்கிரஸில் தொடர்ந்தால்கூட தங்களுடைய அரசின் தோல்விகளை மக்கள் கவனித்துவிடாமல் எளிதாக திசை திருப்ப மோடிக்கும் பாஜகவுக்கும் எளிதாக இருக்கிறது. இப்போதுள்ள நிலைமை குறித்துப் பேசினால் கடந்த காலச் சம்பவங்களை நினைவுபடுத்தி தப்பிக்க முடிகிறது.

இன்றைய அரசை நோக்கி, ராணுவப் பேரங்களில் ஊழல் நடந்திருக்கிறது என்று பேசினால் - போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ராஜீவ் காந்திக்கு சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் பாஜகவினர். ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கிறார்கள் என்றால் - இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலையை அறிவித்து பத்திரிகைகளுக்குத் தணிக்கையை அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் தள்ளினார்களே என்கிறார்கள். சீன ராணுவ வீரர்கள் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்களே என்று கேட்டால் - ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 1962இல் சீனா நடத்திய படையெடுப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படியே பல குற்றச்சாட்டுகளுக்கும் பழைய சம்பவங்களையே எதிர்க் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள்.

மோடி அரசு தனது எட்டாண்டு கால ஆட்சியில் பல வாக்குறுதிகளை அளித்ததுடன், பலவற்றைச் சாதித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. இருந்தாலும் உண்மையில் அவர்களுடைய ஆட்சியில் செய்த சாதனைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஏமாற்றமே ஏற்படுகிறது.

பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னதாகவே பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. படித்துவிட்டு வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உயர்ந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்தும் வேலை மிக மூர்க்கத்தனமாக நடந்திருக்கிறது. உலக நாடுகளின் கண்ணோட்டத்திலும் அக்கம் பக்கத்து நாடுகளிலும் இந்தியாவின் நிலை தாழ்ந்துவிட்டது. நம் நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் ஊழலுக்கு உள்ளாகிவிட்டன அவற்றின் தனியாற்றல்கள் அரிக்கப்பட்டுவிட்டன. நாட்டின் சுற்றுச்சூழல் நாசமாகிவிட்டது. மொத்தத்தில் மோடி அரசின் செயல்களால் இந்தியா பொருளாதாரரீதியாக, சமுதாயரீதியாக, நிறுவனரீதியாக, சுற்றுச்சூழல்ரீதியாக, தார்மிகரீதியாக கடுமையான பாதிப்பை அடைந்திருப்பதுடன் உலக அரங்கிலும் பெயர் கெட்டுவிட்டது. 

எதிர்கால இந்தியாவின் நிலை? 

இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் மோடியும் பாஜகவும் 2024 மக்களவை பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறும் நிலையில் தொடர முடிகிறது என்றால், அதற்கு முக்கியமான காரணம் நேரு – காந்தி குடும்பத்தவர்கள் தலைமையில் காங்கிரஸ், முதன்மையான தேசிய எதிர்க்கட்சியாக இருப்பது மட்டுமே. திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆஆக ஆகியவை அவற்றுக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் பாஜகவுக்கு வலுவான மாற்று சக்தியாக இருந்து காலூன்ற முடியாமல் தோற்கடிக்க முடிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வலுவான மாநிலங்களில் அப்படிச் செய்ய முடியவில்லை என்பதையே சமீபத்தில் நடந்து முடிந்துள்ள கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உணர்த்துகின்றன. 

நேரு - காந்தி குடும்பத் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி எவ்வளவு வலுவற்றது என்பது ஒவ்வொரு பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. உதாரணம் காட்ட வேண்டும் என்றால் 2019 மக்களவை பொதுத் தேர்தலில் 191 தொகுதிகளில் பாஜகவை நேருக்கு நேர் சந்தித்த காங்கிரஸ் கட்சியால் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. நரேந்திர மோடிக்கு மாற்று பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருந்த நிலையில் காங்கிரஸால் 8% அளவுக்கே பாஜக வேட்பாளர்களைத் தோற்கடிக்க முடிந்திருக்கிறது. 

வரலாற்றுச் சுமை எதிரிக்குப் பிரசாதம்

பாஜகவைப் பொருத்தவரை, காந்தி குடும்பத்தார் அவர்களுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம். ஒரு பக்கம், அவர்கள் பாஜகவுக்கு வலுவான அரசியல் எதிரியாகச் செயல்பட முடிவதில்லை. இன்னொரு பக்கம், தேசிய அரசியல் விவாதங்களில் நடப்பு விவகாரங்கள் குறித்துப் பேசினால் கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டி எதிராளிகளை எளிதில் வாயடைக்க வைக்க முடிகிறது.

நிலப்பிரபுத்துவ செல்வாக்கு குறைந்துவரும் இந்த நாளில், ஒரு பெரிய தேசிய அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பத்திலிருந்து தொடர்ந்து ஐந்தாவது தலைமுறை தலைமை வகிப்பது நிச்சயம் பிரச்சினைதான். ஒருகாலத்தில் இப்படி பரம்பரை ஆட்சி முறை பின்னடைவாக மட்டும்தான் இருந்தது இப்போதோ கட்சியையே முடக்கிவிட்டது.

அரசியல் சாமர்த்தியம் துளிக்கூட இல்லாமல், அந்தக் குடும்பத்தில் பிறந்தார்கள் என்ற காரணத்துக்காக தலைமைப் பதவியையும் சலுகைகளையும் பெறுவது கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே தொடர்கிறது. அன்றாடம் வீட்டுக்கு வந்து முறைவாசல் செய்யும் துதிபாடிகளையே அதிகம் சந்திக்கும் நேரு  குடும்பத்தாருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் சிந்தனை, அரசுகளிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியாமலேயே இருக்கிறது.

ராகுல் குறித்து ஆதிஷ் தசீர் கூறியது சற்றே வருத்தமளிப்பதாக இருந்தாலும் - மிகத் துல்லியமான கணிப்பாகவே இருக்கிறது. ‘எதையுமே கற்றுத்தர முடியாத அளவுக்கு மிகவும் சாதாரணமான அறிவாற்றல் உள்ளவர் ராகுல்’ என்கிறார் தசீர். இக்கால அரசியலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் ராகுல் என்பது அவர் கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா ஆகியோரைப் பற்றியே அடிக்கடி பேசுவதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

நேரு குடும்பத்தாருக்கு இது தெரியுமோ – தெரியாதோ, இதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களோ – இல்லையோ, இந்துத்துவ சர்வாதிகாரம் இந்த மண்ணில் நிலைபெற நேரு குடும்பத்தார்தான் தீவிரமாக வழி செய்துகொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் இருந்து விலகிக்கொண்டால் கட்சி உடைந்து சின்னாபின்னமானாலும் பிறகு வலுவான – நம்பகத்தன்மையுள்ள அரசியல் கட்சி அந்த இடத்துக்கு வரும். இந்துத்துவத்தைத் தொடர்ந்து எதிர்க்கும் என் போன்றவர்கள் நன்கு சிந்திக்கவும் போராடவும், எதிர்கால இந்தியாவை இப்போதுள்ள நிலையிலிருந்து மீட்கவும் வழியேற்படும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





உமர் அப்துல்லா உரைஎலும்பு முறிவுபுரட்சியாளர்கள்மெரினாம்வாலிமுமூளைக்கான உணவுபுதுப் பிறப்புட்விட்டர் சிஇஓதிருவாளர் பொதுஜனம்ராஜ்பவன்எஸ்.வி.ராஜதுரை கட்டுரைகாந்தி - அம்பேத்கர்மது லிமாயிசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைலவ் டுடேமராத்தா இடஒதுக்கீடுசுந்தர ராமசாமிகு.கணேசன்திராவிட அரசியலின் இனவாதம் - ஒரு எதிர்வினைஅதானு பிஸ்வாஸ் கட்டுரைமாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிநவீன் குமார் ஜிண்டால்கொரியா ஹெரால்டுபாடப் புத்தகம்பஜாஜ் ஸ்கூட்டர்நீடித்த வளர்ச்சிவாழ்க்கை வரலாற்று நூல்ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வுகல்விநடிப்புத் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!