கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

கௌரவமான ஓய்வூதியம்: ஏழைகளின் உரிமை

தீபா சின்ஹா
07 Jul 2024, 5:00 am
0

ராசரி ஆயுள்காலம் அதிகரிப்பு, குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் சரிவு ஆகிய இரட்டைக் காரணங்களால் உலகம் முழுவதும் முதியவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருகிறது. பணக்கார நாடுகளில் இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதியவர்களுக்கு மருத்துவ வசதிகளைச் செய்வது, பராமரிப்பது ஆகிய செலவுகளும் அவற்றுக்குக் கூடிவிட்டன. இந்தியாவும் மெதுவாக இந்த நிலையை நோக்கிச் செல்கிறது.

இந்திய மக்கள்தொகையில் அறுபது வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 20% என்ற அளவை 2050இல் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இது 10% என்ற அளவில் இருக்கிறது.

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்புரீதியாக திரட்டப்படாத துறைகளில் (நிரந்தர வேலை, குறிப்பிட்ட நாளில் மாத ஊதியம், பணிக்கொடை - ஓய்வூதிய பலன், குறிப்பிட்ட வேலை நேரம், விடுமுறைச் சலுகை போன்றவை இல்லாத)தான் அன்றாட அல்லது வாரக் கூலிக்கு அல்லது மாத ஊதியத்துக்கு வேலை செய்கின்றனர். எனவே, இவர்கள் முதுமை அடையும்போது அல்லது வேலை செய்ய முடியாத நிலையை அடையும்போது உணவு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்குக்கூட யாரையாவது எதிர்பார்த்திருக்க நேர்கிறது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மக்களுக்குக் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் அரசு மிகவும் பின்தங்கியிருக்கிறது, இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தும் அவர்களுக்கு முழு வேலைவாய்ப்பையும் கௌரவமான நிரந்தர ஊதியத்தையும் வழங்க முடியாமல் இயற்கை அளித்த நல்வாய்ப்பை அரசு வீணடித்துக்கொண்டிருக்கிறது. 

இன்னும் முப்பதாண்டுகளில் இப்போது இளைஞர்களாக இருப்பவர்கள் முதியவர்களாகிவிடுவார்கள். இதே நிலையில் அரசு செயல்பட்டுக்கொண்டிருந்தால், முதுமையிலும் அவர்கள் அரசால் கைவிடப்பட்டவர்களாகிவிடுவார்கள். அனைத்து மக்களுக்கும் எல்லாவிதச் சமூகப் பாதுகாப்புகளும் கிடைக்கும் கொள்கையை விரைவாக வகுத்து அரசு நிறைவேற்ற வேண்டும்.

என்எஸ்ஏபி திட்டம்

முதியவர்கள், ஆண் துணையின்றி தனித்து வாழும் மகளிர், உடல் ஊனமுற்றவர்களுக்கு தேசிய சமூக உதவித் திட்டம் (என்எஸ்ஏபி) மூலம் ஒன்றிய அரசு மிகவும் குறைவான தொகையை, உதவியாக அளிக்கிறது. ‘உணவுபெறும் உரிமை’ அடிப்படையில் தொடர்ந்த வழக்குகளை அடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் சில சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஒன்றிய அரசு சீர்படுத்தியது.

என்எஸ்ஏபி திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கிய ரூ.75, 2007 முதல் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டது. அதுவே பிறகு 2011இல் 79 வயதைத் தாண்டியவர்களுக்கு ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக இந்த உதவித் தொகை உயர்த்தப்படவே இல்லை, ஒன்றிய அரசு இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கும் தொகை ரூபாய் கணக்கில் அப்படியே நீடிப்பதால், விலைவாசி உயர்வு காரணமாக ‘உண்மை மதிப்பில்’ ஒதுக்கீடு, 2011 - 2012 முதல் 2022 - 2023 வரையில் 20% அளவுக்குச் சரிந்திருக்கிறது. இப்போது இத்திட்டத்தின் கீழ் 2.2 கோடி முதியவர்கள் பயன் அடைகிறார்கள், இது மொத்த முதியவர்கள் எண்ணிக்கையில் கால் பங்குக்கும் (25%) குறைவு.

நாட்டில் உள்ள முதியவர்களில் 40% பேர் (முதியவர்களின் மொத்த எண்ணிக்கையை வயது அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரித்தால்) கீழ்நிலையில் உள்ள குழுவில் இடம்பெறும் அளவுக்கு ‘மிகவும் வறியவர்க’ளாக இருக்கிறார்கள். உதவிபெறும் எண்ணிக்கையிலும் உதவித் தொகையிலும் மாநிலத்துக்கு மாநிலம் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. ஒன்றிய அரசு தரும் உதவித் தொகையுடன் அசாம் அரசு ஒவ்வொருவருக்கும் ரூ.50 கூடுதலாக வழங்குகிறது, ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்குள்பட்ட புதுச்சேரியில் அதுவே 3,000 ரூபாய் அதிகமாக இருக்கிறது. வேறு சில மாநிலங்களும் தொகையை உயர்த்தியுள்ளன, பயனாளிகளின் எண்ணிக்கையையும் கூட்டியுள்ளன, இருந்தும் தேசிய அளவில் இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டம் நன்கு வலுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

என்எஸ்ஏபி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் திட்டத்தை ஒன்றிய அரசு நீண்ட காலமாக திருத்தவே இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்தத் திட்டத்தின் கீழ் உதவிசெய்வதற்கு மாநில – யூனியன் பிரதேச அரசுகள் அளிக்கும் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சரியும் சமூகப் பாதுகாப்பு

ஜீன் டிரேஸ் 26 Jan 2023

இதில் மக்கள்தொகைக்கு 2001இல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகவும், வறுமைக் கோடு அளவை 2004 – 2005இல் திட்ட ஆணையம் (கமிஷன்) கடைப்பிடித்த அணுகுமுறை அடிப்படையிலும் தீர்மானித்துள்ளனர். ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்’ என்பதை வரையறுக்க அரசு பின்பற்றிய சில நிபந்தனைகள், உண்மை நிலைமைக்குப் பொருத்தம் இல்லாமலும் ஏழைகளை வஞ்சிக்கும் விதத்திலும் இருந்தன. அது மட்டுமின்றி இன்னாரை வறுமைக் கோட்டுக்கும் கீழே சேர்க்க வேண்டாம் - இத்தனை பேரை மட்டும் வறியவர்கள் என்று அறிவிக்கலாம், மிகக் குறைந்த தொகையே இவர்களுடைய அன்றாடச் செலவுக்குப் போதும் என்றும் அதிகாரிகள் ‘தாங்களாகவே’ நிர்ணயித்த விதிகளும் - வரம்புகளும் ஏராளமானோரை இந்த உதவிகளைப் பெற முடியாமல் விலக்கிவிட்டன.

நல்ல வேளையாக, பொது விநியோக திட்டத்தின் கீழ் (ரேஷன் கடைகளில்) கோதுமை, அரிசி உள்ளிட்ட அவசியப் பொருள்களைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களை அடையாளம் காணும்போது, வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள் என்ற அடிப்படை முற்றாக கைவிடப்பட்டது. கிராமப்பகுதிகளில் வாழ்வோரில் 75%க்கும் நகரங்களில் வாழ்வோரில் 50%க்கும் முன்னுரிமை அடிப்படையில் அரிசி, கோதுமை ஆகியவற்றை நபர் ஒருவருக்கு மாதத்துக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் வழங்குவது என்ற முடிவால், ஏராளமானவர்கள் பயன்பெற முடியாமல் தடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.

இந்தப் பயனாளிகளை அடையாளம் காண சில மாநிலங்கள் ‘சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு - 2011’ (SECC) தரவுகளைப் பயன்படுத்துகின்றன. ‘ஆயுஷ்மான் பாரத்’, ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ (மருத்துவ காப்புறுதித் திட்டம்) ஆகியவற்றுக்கும் இந்த எஸ்இசிசி (SECC) தரவுகளே பயன்படுத்துகின்றன, இவை மிகவும் பழையதாகிவிட்டன. முதியோர் ஓய்வூதிய திட்டம் முழுப் பலனை அளிக்க, ‘என்எஃப்எஸ்ஏ’ (NFSA), ‘என்எஸ்ஏபி’ (NSAP) ஆகிய இரு திட்டங்களிலும் உதவிபெறும் அனைவரையும் சேர்ப்பதுதான் சரியாக இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

ப.சிதம்பரம் 22 Jan 2024

பயனளிக்குமா இந்தச் சேமிப்பு?

இதைவிட மேலும் தீவிரமாக சிந்தித்து இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்தும் அனைத்து முதியவர்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிதாக இயற்றுவதும் அவசியம். ‘இ-ஷ்ரம்’ (e-shram) என்ற வலைதளத்தில், அமைப்புரீதியாக திரட்டப்படாத துறைகளில் வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளர்களும் பதிவுசெய்யப்படுகின்றனர்.

இதில் சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. இந்த வலைதளம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய உழைப்புக் காலத்தில், ஓய்வூதியத்துக்காக சந்தா எதையும் செலுத்துவதில்லை, அவர்களுக்கு என்எஸ்ஏபி திட்டப் பயனாளிகளுக்கு விதிக்கப்படுவதைப் போல நிபந்தனைகளும் கிடையாது.

‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா’ (PM-SYM) என்பது விருப்பம் இருப்பவர்கள் சேர்ந்து, தங்கள் உழைப்புக் காலத்தில் ஊதியத்தில் சிறுபகுதியை (ரூ.55 முதல் ரூ.200 வரை), 18 வயது முதல் 40 வயது வரையில் சந்தாவாக செலுத்தி, 60 வயதை எட்டிய பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் திட்டமாகும். இதில் தொழிலாளி செலுத்தும் தொகைக்கு இணையான தொகையை ஒன்றிய அரசு மானியமாக அவர் கணக்கில் செலுத்தும். இந்தத் திட்டத்தில் இதுவரையில் நாடு முழுவதும் 45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், இது உழைக்கும் மக்கள் தங்களுடைய முதிய வயதில்; ஓய்வூதியம் பெறும் உரிமை’ என்ற கோட்பாட்டிலிருந்து வேறுபட்டது.

உழைக்கும் மக்கள் வேலை செய்யும் காலத்தில் அவர்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்படாமல் சுரண்டப்படுகின்றனர். வேலையை இழந்தாலோ, தகுந்த காரணம் இன்றி வேலையைவிட்டு நீக்கப்பட்டாலோ, பணியிடத்தில் காயம் அடைந்து தாற்காலிகமாகவோ – நிரந்தரமாகவோ ஊனமுற்றாலோ அல்லது மரணமே அடைந்தாலோ அவர்களுக்கு உரிய இழப்பீடுகளும் வாழ்வாதாரத்துக்கான உதவித் தொகைகளும் வழங்கப்படுவதே இல்லை.

அப்படியிருக்க அவர்களைத் தங்களுடைய ஊதியத்தில் ஒரு பகுதியை சந்தாவாகச் செலுத்தினால் அதற்கேற்ப அரசு மானியம் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கும் என்பது பெரிய சலுகையோ, சமூகப் பாதுகாப்புத் திட்டமோ அல்ல. வேலையே நிரந்தரமில்லாத தொழிலாளர்கள், சந்தா செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படிச் சிறு சிறு தொகையாக தொழிலாளர் சேர்த்தாலும் உயரும் விலைவாசி – பணவீக்கம் காரணமாக இறுதியில் அவர் கணக்கில் சேரும் தொகை பெரிய அளவுக்கு முதுமையில் அவருக்குக் கைகொடுத்துவிடாது.

நிதிநிலை அறிக்கையில் கவனம்!

இந்த நிலையில் எது தேவை என்றால் அரசாங்கமே கண்ணியமான, அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைக் குறைவில்லாமல் மேற்கொள்ளும் வகையில் ஒரு தொகையை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் – அவர்களிடம் சந்தாவை எதிர்பார்க்காமல் – வழங்குவதுதான் சரியாக இருக்கும். ஏற்கெனவே பல்வேறு திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் அரசு, அரசுத் துறை, தனியார் துறை ஊழியர்களை இதிலிருந்து விலக்கிவிடலாம்.

முதியவர்களை உறுப்பினர்களாகக்கொண்டுள்ள ‘பென்ஷன் பரிஷத்’ என்ற அமைப்பு கூறும் யோசனை பரிசீலிக்கத்தக்கது; தொடக்கப் புள்ளியாக, குறைந்தபட்சம் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கலாம் என்று அது பரிந்துரை செய்திருக்கிறது.

இப்போது வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தில் மேலும் ரூ.500 உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் சிலர் 2022இல் ஒன்றிய நிதி அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தனர். அப்படி உயர்த்த, ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1,500 கோடியை ஒதுக்கினால் போதும் என்று சுட்டிக்காட்டினர். இப்படி ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதும், பயனாளிகள் எண்ணிக்கையைக் கூட்டுவதும் இந்தச் சமூக நல நடவடிக்கையின் சிறு ஆரம்பமாகத்தான் இருக்கும். வரும் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

முதியவர்களுக்கு ஓய்வூதியம் தருவது தொடர்பாக விவாதம் தொடங்கப்பட இதுவே உரிய காலம், காரணம் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது, வேலைவாய்ப்புகளும் நிரந்தரமற்றதாகிவருகின்றன.

© த வயர்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்நாட்டு முதியவர்களின் எதிர்காலம்?
அதிகாரிகளா, பண்ணையார்களா?
ராஜஸ்தானின் முன்னோடித் தொழிலாளர் சட்டம்
கட்டுக்குள் வரட்டும் அரசு ஊழியர்க்கான செலவு
சரியும் சமூகப் பாதுகாப்பு
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






writer samasகலைத் திறன்பேரறிவாளன்தணிக்கைச் சட்டம்உழவர் சந்தைகள்வங்கதேச வளர்ச்சிகாவிகும்ப்ளே4த் எஸ்டேட் தமிழ்சமஸ் ஜீவாமூன்றாவது மகன்சமஸ் ஜெயமோகன்தொடர் கொலைகள்ஜேம்ஸ் பால்ட்வின்ஹிஜாப் என்பது வித்தியாசமானதல்லஒரே தேர்தல்மற்றமைஸ்கிரீனிங்மனநலம்துயரம் எதிர் சமத்துவம்மது தண்டவடேமாரி!ஏறுகோள்thiruma interviewகேடுதரும் மருக்கள்மொழிப் போராளிகள்குக்கூஸான்ஸிபார்வங்கித் துறைபசுமை விருது

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!