கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

கட்டுக்குள் வரட்டும் அரசு ஊழியர்க்கான செலவு

பாலசுப்ரமணியம் முத்துசாமி
16 May 2022, 5:00 am
12

மிழக அரசு, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு வருடம் ரூ.6,500 கோடி அதிகச் செலவாகும் எனத் தெரிகிறது. அரசு ஊழியர் சங்கங்கள் சிறு முணுமுணுப்புடன் இதை ஏற்றுக்கொண்டன. 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழக நிதியமைச்சர், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள், அரசின் செலவுத் திட்டத்தில் 37.9%ஆக இருக்கும் எனத் திட்டமிட்டுள்ளார். ஆனால், அது கொஞ்சம் புத்திசாலித்தனமான கணக்கு. 

சரியான கணக்கு என்பது, மாநில அரசின் வருவாயில் எவ்வளவு அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகச் (ஒய்வு ஊதியமும் சேர்த்து) செலவிடப்படுகிறது என்பதே ஆகும்; இங்கே வருவாய் வேறு; செலவுத் திட்டம் வேறு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2022-23ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் ரூ.2,31,000 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வருவாயுடன் ஒப்பிட்டால், ஊதியச் செலவுகள் 46.5% ஆகும். கிட்டத்தட்ட வருவாயில் பாதி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவாகிறது.

நாட்டிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்து, அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காகச் செலவிடும் மாநிலம் தமிழகம். இது ஒரு பெரிய தொகை. இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்பதால், தமிழக அரசு இதை ஓரளவு சமாளித்துவருகிறது. 

இந்த அளவு நிர்வாகச் செலவுகள் சரியான அளவுதானா, இத்தகைய நிர்வாகச் செலவு நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமானதா என்பதைப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 16 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஓர் ஊழியர் வீட்டில் 4 பேர் என வைத்துக்கொண்டால், இது தமிழக மக்கள்தொகையில் 8% ஆகும்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகள். ஆனால், தற்போது இந்தியர்களின் சராசரி ஆயுள் 73 ஆண்டுகள். ஊழியர்கள் எவ்வளவு ஆண்டுகாலம் பணிபுரிகிறார்களோ, அதற்கு இணையான காலம் ஓய்வூதியம் வாங்கும் நிலை வந்துள்ளது. இது அரசின் ஓய்வூதியச் செலவினங்களை அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான், பெரும்பாலான அரசுகள் செலவுகளைக் கட்டுப்படுத்த, புதிய ஓய்வூதியக் கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றன.

புதிய ஓய்வூதியக் கொள்கையைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத்துக்கான குரல்கள் தமிழகத்தில் கேட்கின்றன. நியாயமாகப் பார்த்தால், அரசு ஊழியர்களின் ஊதியத்திலேயே கை வைக்க வேண்டிய நிலையிலேயே பொருளாதாரம் இருக்கிறது.

கவலை தரும் வருவாய்ப் பற்றாக்குறை 

பத்தாண்டுகளுக்கு முன்பு, ரூ.2,000 கோடி என இருந்த வருவாய் உபரி, கரோனா ஆண்டில் (2020-21) ரூ.62,000 கோடி வருவாய்ப் பற்றாக்குறையாக உயர்ந்தது. இந்த ஆண்டு பற்றாக்குறை ரூ.55,000 கோடியாகக் குறைந்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.52,000 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை மிகவும் கவலை தரக் கூடியதாகும். 

கரோனாவுக்கு முந்தைய இரு வருடங்களில் (2017-18, 2018-19), இந்திய மாநிலங்களின் சராசரி வருவாய்ப் பற்றாக்குறை பொருளாதாரத்தில் 0.1% ஆக இருந்தபோது, தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது, 1.5%, 1,4% ஆக அபாயகரமான அளவில் இருந்தது.

நிதியமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில், 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில், 5 ஆண்டுகள், தமிழகம் வருவாய்ப் பற்றாக்குறையின்றி இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். மீதி இரண்டு ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணம், 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், அரசு ஊழியர் ஊதியம் அதிகரித்ததே ஆகும்.

2013-14ஆம் ஆண்டு, வருவாய்ப் பற்றாக்குறையானது, மாநிலப் பொருளாதாரத்தில் 0.18% ஆக இருந்தது. ஆனால், 2019-20 (கரோனாவுக்கு முன்பு), 1.95% ஆக உயர்ந்துள்ளது. அதாவது 6 ஆண்டுகளில், வருவாய்ப் பற்றாக்குறையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அளவு வருவாய்ப் பற்றாக்குறை என்பது நீண்ட கால நோக்கில் நல்லதல்ல என்பதையே அரசின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது. 

அதாவது, 2017-18, 2018-19 காலகட்டத்தில், தமிழகத்துடன் ஒப்பிடக் கூடிய மாநிலங்களான மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மிகக் குறைவான வருவாய்ப் பற்றாக்குறையில் இருந்துள்ளன. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது மொத்த நிதிப் பற்றாக்குறையில் 52%ஆக அதிகரித்திருக்கிறது. 

அதேபோல், 2005-2006 ஆண்டில், தமிழக வரி வசூல், தமிழகப் பொருளாதாரத்தில் 12.49%ஆக இருந்தது. 2020-21ஆம் ஆண்டில், இந்த சதவீதம் 8.70%ஆகக் குறைந்துள்ளது. (30% வரி வசூல் வீழ்ச்சி). பொருளாதாரம் வளர்ந்தாலும், வரி வசூல் சதவீதம் வீழ்தல் என்பது நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டுகின்றது. 

வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது, மாநிலம் தன் வருடாந்திரச் செலவினங்களுக்கே கடன் வாங்கிச் செலவிட நேர்கிறது. வருவாய், செலவுகளைவிட உபரியாகவோ அல்லது மிகக் குறைவான பற்றாக்குறையாகவோ இருக்கையில், ஒரு மாநிலம் முதலீட்டுக்காக மட்டுமே கடன் வாங்கும் நிலை உருவாகிறது. முதலீடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பொருளாதார வளர்ச்சி மாநிலத்தின் வரி வருவாயை அதிகரிக்கும். அவ்வாறான பொருளாதார மாதிரிதான் நீடித்து நிலைக்கும்.

முன்செல்லும் வழி

மாநிலத்தின் வருவாயில் பாதி அரசு ஊழியர்களுக்கான ஊதியம் (மற்றும் ஓய்வூதியம்) என்பது நீடித்து நிலைக்கக் கூடியதல்ல. இதைச் சீரமைக்கும் வழிகளை அரசு மிகத் தீவிரத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.

அ) வெள்ளை றிக்கை

தமிழகம் போன்ற மாநிலத்துக்கான சரியான நிர்வாக அமைப்பையும், ஊழியர் தேவையையும் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை முதலில் தயாரிக்கப்பட வேண்டும். அதேபோல, தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் கணக்கீட்டு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆ) செயல்திறன் மேம்பாடு

சாதாரண மனிதர்களைவிட அதிக ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் மனநிலையானது நிர்வாகம் - அதிகாரம் என்னும் தளங்களோடு பெருமளவில் நின்றுவிடுகிறது. அது பெருமளவு மாறி, சேவை என்னும் மனநிலைக்கு வர வேண்டும். 

அரசு நிர்வாகத்தில் இதற்கான முன்னெடுப்பை இந்த அரசு ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். அரசு ஊழியர்களுக்கான பயிற்சி, மேம்பாடு போன்ற தளங்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. 

அதேபோல, அரசின் சேவை தேவைப்படும் மக்களுக்கு எளிதில் சென்றடையும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படுவதையும் (இல்லம் தேடி மருத்துவம்) காண முடிகிறது. சாதாரண மக்களுக்கான அரசின் சேவைகளில் பல இன்று மக்களைத் தேடிச் சென்றடையும் வகையில் உருவாக்கும் முனைப்பில் பல மாநில அரசுகள் உள்ளன. தமிழக அரசும் அந்தத் திசையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவற்றைக் குறைவான செலவில் செய்யும் வழிகள் உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மாநிலம் எங்கும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் அப்படி ஒரு அருமையான திட்டம். 

செயல்திறன் மேம்பாடு என்பது, செலவு செய்யும் பணத்துக்கான சரியான பயன் என்பதேயாகும். இதனால், மக்கள் நலம் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குப் போய்ச் சேரும். நவீன தொழில்நுட்பம் மற்றும் திட்ட உருவாக்கம் மூலம், செயல்திறனை மேம்படுத்துகையில், செலவுகளை மிச்சம் செய்ய முடியும்.

இ) ஒருங்கிணைந்த நிர்வாகம்

ஆனால், இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல. ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம், நீண்ட கால நோக்கில் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்.

  • தொடர்ந்த அதிகப் பொருளாதார வளர்ச்சி.
  • வரி வசூலைப் பொருளாதார அளவில் 12.5%ஆக உயர்த்துதல் (இதில் ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தின் வரி வசூல் குறைந்திருக்கிறதா என்னும் ஒரு ஆய்வுசெய்யப்பட வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், ஜிஎஸ்டியினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்தால், அதை வேறு தளங்களில் முன்னெடுக்க வேண்டியிருக்கும்).
  • மக்கள் நலத் திட்டங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் நிறைவேற்றுதல் – செயல்திறன் மேம்பாடு.
  • சரியான, செயல்திறன் மிக்க நிர்வாக அமைப்பு. அரசு நிர்வாகத்தை சேவை என்னும் மனப்பான்மையுடன் அணுகுதல். 

இந்த நான்கு புள்ளிகளும் ஒன்றிணைந்த ஓர் அணுகுமுறையை, ஐந்தாண்டு கால நோக்கில் செயல்படுத்தினால் மட்டுமே, இன்று இருக்கும் வருவாய்ப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும். இல்லையெனில், தமிழகப் பொருளாதார வளர்ச்சியும், மேம்பாடும் பாதிக்கப்பட்டு, தமிழகத்தின் கடந்த கால வளர்ச்சி என்பது பழங்கதையாகப் போய்விடும்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


321

பின்னூட்டம் (12)

Login / Create an account to add a comment / reply.

செல்வகுமார்    1 month ago

அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 20லட்சம் பேர். இதில் 12லட்சம் பேர் கடைநிலை ஒழியர்கள் தான் இவர்களது சராசரி சம்பளம் எல்ல பிடித்தம் போக 15000/- முதல் 28000/- வரை மட்டுமே. சென்னை உள்ள அரசு ஊழியர்கள் 8,00,000 பேர் இருப்பதாக வைத்துக கொள்வோம். மூன்று நபர் கொண்ட குடும்பத்தின் மாத செலவினம் வீட்டு வாடகை 10000/- (ஒற்றை படுகை ) போக்குவரத்து 2000/- மளிகை 3000/- காய்கறி 1000/-(வாரத்துக்கு 250/-) குடிநீர் 800/- பால் பொருட்கள் 800/- மின்சாரம் 1000/- மருந்துவம் 500/- சொந்த ஊருக்கு சென்று வர 1500/- (மாதம் ஒரு முறை ) தொலைபேசி மற்றும் டிவி 500/- கடன் & வட்டி 5000/- (பள்ளி கட்டணம் கல்லூரி கட்டணம், மருத்துவம் கடன், இரு சக்கர வாகனம், திருமண கடன், இதர கடன்கள் ) வரவு 25000/- செலவு 26100/- மீதம் இல்லை மீண்டும் கடன் அல்லது லஞ்சம். தயவு செய்து கொஞ்சம் ஆராய்ந்து இருக்கும் விலை வாசியை கணக்கில் கொண்டு சமூக பொறுப்புடன் கட்டுரை எழுதுங்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Shanmugasundaram S   1 month ago

தனியார் துறையில் அகவிலைப்படி சந்தை மதிப்பிற்கு ஏற்ப அதிகரித்து அல்லது குறைத்து வழங்கப்படுகிறது ஆனால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பொருளாதார நிலையை வைத்து அகவிலைப்படி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்வதை சுட்டிக் காட்டக்கூடிய ஊடகங்கள் இதர பிரிவினர் அதற்குத் தகுந்தாற்போல் விலைவாசி ஏற்றம் இருப்பதை கவனிக்க மறுக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள இந்த காலத்தில் எந்த ஊதியத்திற்கும் பணியாற்ற தயார் என்ற நிலையில் அதிகம் படித்தவர்கள் கூட இருப்பதால் தனியார் துறையின் உடைய ஊதிய விகிதமும் அரசு ஊழியர் ஊதிய விகிதமும் ஒப்பிட்டுப் பார்க்கையில் வேறுபாடு பெரிதாக தோன்றுகிறது. உதாரணமாக தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்காக ஆசிரியர்கள் பணி புரிகின்றார்கள் என்ற ஒப்பீடு வைக்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் தொகை என்ன? அதை கட்டுப்படுத்த முயற்சிகள் இல்லை. தனியார் பள்ளிகளில் படிக்க குறிப்பிட்ட சதவீதம் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசு நிதியை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரதானத் கோரிக்கை ஓய்வூதியம் தான். அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

Reply 2 2

Login / Create an account to add a comment / reply.

Gunasekar J   1 month ago

அரசு ஊழியர்களின் சம்பளம் அரசு திட்டங்களின் செலவின் ஒரு பகுதிதான். அவர்கள் அன்றி எப்படி திட்டங்களை செயல்படுத்தமுடியும்.

Reply 7 2

Login / Create an account to add a comment / reply.

M.karthikeyan   1 month ago

நுனிபுள் மட்டுமே மேயப்பட்டிருக்கிறது.... அதைவிட வருத்தம் அருஞ்சொல் இதை வெளியிட்டுள்ளது.. அரசு ஊழியரொருவர் சரசரியாக 30 வயதில் பணியில் சேர்ந்தால் 30 வருடம் பணி புரிய வாய்ப்பிருக்கிறது. அவர் 90 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டதுபோல பணிகாலத்திற்க்கு சமமாக ஓய்வூதியம் பெற இயலும்.. தவிர, ஓய்வூதியம் என்பது குடிமக்கள் அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டிய அரசு, அரசுக்காகவே காலம் முழுக்க பணி செய்து, உழைக்க முடியாத வயோதிகத்தில் தெருவில் தட்டை எடுத்து கொண்டு போக சொல்ல வேண்டுமா ? மற்றபடி நிர்வாக சீர்கேடு சரிசெய்யபட வேண்டிய ஒன்றே..

Reply 11 4

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   1 month ago

புதிய மாவட்டங்களை சகட்டுமேனிக்கு உருவாக்குவது தேவையற்ற செலவுகளை அதிகரித்து, வருவாய் பற்றாகுறையை அதிகரிக்க செய்கிறது. இதைப் பற்றி : தென் காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்ட உள்ளன. ஒரு புதிய மாவட்டம் உருவாக எவ்வளவு செலவு ஆகும் ? நிலையான செலவு (Fixed, one time costs like office buildings, furnitures, vehicles, quarters, generators, etc) மற்றும் ஆண்டு தோறும் ஏற்படும் தொடர் செலவுகள் (recurring costs like salaries, pensions, allowances, other annual expenditures) என்று பல கோடிகள் ஆகும். மாவட்ட மருத்துவமனை, புதிய கல்லூரிகள் போன்றவை மக்களுக்கு பெரும் பயன் அளிக்கபவை. அவற்றிற்கு ஆகும் செலவுகள் உருப்படியான செலவுகள். ஆனால் மொத்தம் ஆகும் செலவுகளில் இவற்றின் விகிதம் என்ன ? ஒரு புதிய மாவட்டம் உருவானால் மாவட்ட ஆட்சியர், காவல் துறை எஸ்.பி உள்ளிட்ட சுமார் 59 புதிய உயர் அதிகாரிகளுக்கான பதவிகள் உருவாகும் என்று சொல்கிறார்கள். பிறகு இவர்களுக்கு தேவையான துணை அதிகாரிகள், குமாஸ்த்தாக்கள், அலுவல உதவியாளர்கள், கார்கள், ஓட்டுனர்கள், இன்ன பிற பணியாட்கள் தேவை. சில ஆயிரம் ’அரசு வேலைகள்’ பல கோடி செலவில் உருவாகும். அரியலூர் மாவட்டம் 2001இல் உருவக்கப்பட்டது. பிறகு பொருளாதார செலவுகள் காரணம் கூறி 2002இல் பெரம்பலூருடன் மீண்டும் இணைக்கப்பட்டது. 2007இல் மீண்டும் தனி மாவட்டமானது. இந்த 22 வருடங்களில் பெரம்பலூரில் பல பெரிய அரசு அலுவலக கட்டிடங்கள், அலுவலர்கள் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் மாவட்டத்தின் பெரும் பகுதிகள் அப்படியே, பின் தங்கிய நிலையில் தொடர்கின்றது. கடந்த 22 வருடங்களில் நிர்வாக செலவுகளுக்கு ஆன சுமார் 1000 கோடியை, அரியலூர் பகுதிக்கான special packageஆக, நேரடியாக நலத்திட்டங்களுக்கு, சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு செலவு செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? ’சுண்டக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்’ என்ற முதுமொழி, இதற்கு மிக மிக பொருந்தும். ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு தொகைகளை அளிக்க முடியாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. கடன் ஏறிக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப பணமில்லை. இப்ப புதிதாக ஐந்து மாவட்டங்கள் தேவையா ? இதன் நிகர விளைவுகள் / பலன்கள், செலவுகள் என்ன ? #cost benefit analysis

Reply 14 0

அ.பி   1 month ago

நிதர்சனமான உண்மை ஐயா.

Reply 1 1

Ganeshram Palanisamy   1 month ago

இதை நான் பல வருடங்களாக கூறிவருகின்றேன். அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால் எண்ணிக்கையை தான் குறைக்க வேண்டியிருக்கும். ஆனால் மின்துறை போன்ற உற்பத்திதுறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் தவறில்லை. நிர்வாக துறைக்கு ஒவ்வொரு ஊழியரின் தேவையும் 100% உறுதிப்படுத்தபட வேண்டும். ஒரு நிறுவனத்தில் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் அது வளர்ச்சி. ஆனால் அலுவலக அதிகாரிகள் எண்ணிக்கை அதிகமானால் அந்த நிறுவனம் இலாபம் ஈட்டமுடியாமல் அழிந்துவிடும். ஆனால் அரசு கடன் வாங்கி தன் தவறை தொடர்ச்சியாக செய்துவருகிறது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   1 month ago

My old post : சந்தை நிர்ணியக்கும் சம்பளமும், அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அதீத சம்பளமும் - ஒரு ஒப்பீடு இந்தியாவில் அரசு ஊழியர்கள் வெறும் 2 சதவீதம் தான். ஆனால் அவர்கள் பெறும் ஊதியம் தனியார் துறையோடு ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம். உதாரணமாக் ஒரு அலுவலக எழுத்தர் (clerk குமாஸ்தா) தனியார் துறையில் சராசரியாக மாதம் 15,000 வாங்கினால், அதே வேலையை அரசு அலுவலகத்தில் செய்யும் ஊழியருக்கு சுமார் 35,000 கிடைக்கும். பணி பாதுகாப்பு, விடுப்புகள், சலுகைகள் மிக அதிகம் உண்டு. தனியார் துறையின் சம்பள விகிதங்களை நிர்ணியப்பது ‘முதலாளிகள்’ அல்ல. சந்தை தான். That is the supply and demand for labour in the labour market, productivity levels, inflation rates, etc determine the wages and salaries. that is called market forces. ஆகப்பெரும்பான்மையான மக்கள் தனியார் துறையில், இந்த முறையில் தான் வேலை செய்து வாழ்கின்றனர். மக்கள் அளிக்கும் வரிகள் (மறைமுக வரிகள் தன் அதிகம்) மூலம் தான் அரசு ஊழியர்களுக்கு சந்தை நிலவரத்த விட பல மடங்கு அதீத சம்பளம் என்ற அடிப்படை உண்மையை மறக்கலாகாது. The govt staff and PSU employees live off the labour of the common man. எல்லா நாடுகளிலும் இதே நிலை இல்லை. தனியர் துறை, அரசு துறை இரண்டிலும் ஏறக்குறைய ஒரே அளவு சம்பளம் உடைய நாடுகளும் உண்டு. அதே நிலை இங்கும் வர வேண்டும். அடுத்த முறை சம்பள உயர்வு கேட்டு அரசு ஊழியர்கள் போரட்டம் செய்யும் போது இதை நினைத்து பார்க்கவும்..

Reply 4 1

Ganeshram Palanisamy   1 month ago

Awesome analysis.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   1 month ago

எனது பழைய பதிவு : பாஸ்போர்ட் எடுப்பது இன்று மிக எளிதான விசியமாக மாறிவிட்டது. 15 வருடங்களுக்கு முன்பு வரை நரக வேதனை அளிக்கும், மிக மிக தாமதமான நடைமுறை இருந்தது. 1980களில், 90களில் பாஸ்போர்ட் எடுத்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், ஆவணங்களை process செய்யும் பணிகள் TCS எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு outsource செய்யப்பட்டுள்ளது தான். மிகக்குறைந்த செலவில், மிக விரைவாக பணிகள் நடந்து வருகின்றன. அரசுக்கு பல நூறு கோடிகள் மிச்சமாகிறது. பொதுமக்களுக்கு மிக அருமையான சேவைகள், மிக துரித கதியில் கிடைக்கின்றன. அரசே இதை தொடர்ந்து நடத்தியிருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. அரசு ஊழியர்களை இப்படி வேலை செய்ய வைக்க முடிந்திருக்காது. அதில் Flexible and innovative systems, processes, management set up சாத்தியமில்லை. சம்பளங்களுக்கு ஆகும் செலவுகளும் மிக மிக அதிகமாக ஆகியிருக்கும். இதே போல் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அரசு அலுவலகங்களில், online tendering மூலம் பணிகள், சேவைகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்கனவே இப்படி அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசே அதை நடத்தினால், மாநகர போக்குவரத்து நிறுவனம் போலவே இருந்திருக்கும். உடனுக்குடன் சென்று நோயாளிகளை கூட்டிச் செல்ல முடிந்திருக்காது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் இது போல ஏராளமான பணிகளை அவுட்சோர்ஸ் செய்யலாம். அதன் மூலம் வருடத்திற்கு பல பத்தாயிரம் கோடி ரூபாய் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பொது மக்களுக்கும் தரமான, விரைவான சேவைகளை அளிக்க முடியும். ஆனால் இதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல தரப்பினர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பும். தனியார்மயமாக்கல் எதிர்ப்பு என்ற பெயரில்..

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 month ago

தமிழகத்தில் உழைப்பு கேற்ற ஊதியம் எல்லா துறைகளிலும் (Ratio) இல்லை...revenue dept, registration dept ஊழியர்கள் சேவை சார்ந்த மருத்துவ ஊழியர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நிலை... செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய 5 ஆண்டுகள் (குறைந்த பட்சம்) எடுத்து கொள்கிறார்கள்... இது ஒரு வகை உழைப்பு சுரண்டல்... அதே போல மருத்துவ பணியில் VRS எனபது கடினமான காரியம்.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   1 month ago

மத, ஜாதி வாக்கு வங்கி அரசியல் போலவே அரசு ஊழியர் வாக்கு வங்கி அரசியலும் ஒழிக்கப்பட வேன்டும்.. அப்போது தான் சீர்திருத்தம் மேற்கொள்ள முடியும்...இதை செல்வி ஜெயலலிதா அவர்கள் திறம்பட செய்தார்

Reply 4 2

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!மஹாராஷ்டிர அரசியல்மொழிபெயர்ப்பாளர்ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டுசக்திஇந்தியர்கள்கழுத்து வலிசிறுபான்மையினர்தலைவலி – தப்பிப்பது எப்படி?தமிழ்நாடு 2022கர்ப்பிணிப் பெண்கள்மாநிலப் பட்டியல்ஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்பதென்யா சுப்ஜனநாயகக் கடமைசெமி-கன்டக்டர்பெரியாரும் காந்தி கிணறும்வி.ரமணிதைபத்திரிகைச் சுதந்திரம்தமிழ் வரலாறுஅலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுபஜாஜ் பல்ஸர்ஏனைய மொழிகளை விழுங்கும் இந்திk.chandruபோர்தலைச்சாயம்பக்கவாட்டு பணி நுழைவுமான்டேகு-செம்ஸ்ஃபோர்ட்எல்.ஐ.சி. தனியார்மயம்ஜப்பான்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!