கட்டுரை, அரசியல், பொருளாதாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!
செய்தி ஊடகங்கள், ‘இந்தியா பணக்கார நாடாகிவிட்டது’ என்று குதூகலிக்கின்றன. ஆண்டுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,40,000 அல்லது அதற்கும் மேல் வருவாய் ஈட்டுபவர்கள் பணக்காரர்களாகக் கருதப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட செல்வந்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருவதாக ஊடகங்கள் உற்சாகம் பொங்க கூவுகின்றன; ‘செல்வந்தர்களின் இந்தியா’ நுகர்வைப் பல மடங்காக உயர்த்துகிறது என்றும் இன்னும் ஓராண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களையும் தாண்டிவிடும் (இந்த இலக்கு இன்னும் முடிவாகவில்லை, காரணம் வளர்ச்சி எவ்வளவு என்ற இலக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது) என்றும் அவை பூரித்துப் புளகாங்கிதம் அடைகின்றன.
செல்வவளம் மிக்க இந்தியா குறித்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன் - ஆனால் ஒரு நிபந்தனையுடன்: கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி 2026ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் வளமான செல்வந்தர்களின் எண்ணிக்கை 10 கோடியாகிவிடும், அதாவது மொத்த மக்கள்தொகையில் 7%. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஏன் இந்திய செல்வந்தர்கள் மீது மட்டும் அக்கறை காட்டுகிறது, இதர 93% இந்தியர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? காரணம், கோல்ட்மேன் சாக்ஸ் என்பது பணக்காரர்களுக்கான வங்கி, செல்வந்தர்களைக் கொண்ட இந்தியா மட்டும் தனி நாடாக இருக்குமென்றால், நடுத்தர வருவாயுள்ள நாடாக - உலகின் பணக்கார நாடுகள் வரிசையில் 15வது இடத்தில் இருக்கும்.
பணக்கார இந்தியர்கள்தான் (சில விதிவிலக்குகளைத் தவிர) அதிகம் நுகர்கிறார்கள் (செலவழிக்கிறார்கள்), சேமிக்கிறார்கள், முதலீடு செய்கிறார்கள், ஆடம்பரமாக வாழ்கிறார்கள், வீண் செலவுகளையும் மேற்கொள்கிறார்கள், தங்களுடைய வருமானம் குறித்தும் சொத்துகள் குறித்தும் இவற்றை ஒட்டிய இதர சாதனைகள் குறித்தும் பீற்றிக்கொள்கிறார்கள். பணக்காரர்கள் மட்டுமே நுகர்வதும் செலவழிப்பதும் எல்லா இந்தியர்களும் வாங்குவது, செலவழிப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய பணக்காரர்கள், ஒட்டுமொத்த நாட்டுக்குமான அடையாளப் பிரதிநிதிகளாகிவிட்டனர். எஞ்சியுள்ள 93% இந்தியர்கள், மிதமான வருமானமே பெறுகின்றனர். அவர்களிலும் மிகச் சிலரால்தான் திருப்திகரமாக வாழ முடிகிறது, எஞ்சியவர்கள் செலவுகளைச் சமாளிக்க வருமானம் போதாமல் திண்டாடுகின்றனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மேல் பாதி – கீழ் பாதி
வருமான அடிப்படையில் இந்தியர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவோம்:
- பணக்கார இந்தியா: ரூ.8,40,000க்கும் மேல்
- நடுத்தர இந்தியா சராசரி: ரூ.3,87,000
- நபர்வாரி தேசிய நிகர வருமானம்: ரூ.1,70,000
ஒட்டுமொத்த நாட்டில் ‘பணக்கார இந்தியா’ என்பது மிகச் சிறிய துண்டுதான். நபர்வாரி நிகர தேசிய வருவாய் (என்என்ஐ) என்பதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை, காரணம் வளமான இந்தியர்களின் மொத்த வருமானம்தான் தேசிய சராசரி வருவாயை உயர்த்திக் காட்டுகிறது; ஓரளவுக்குப் பொருத்தமான வருவாய் நடுத்தரமாக உள்ள சராசரி வருமானம்தான். இந்தியர்களில் சரிபாதிப்பேர் (71 கோடி) ஆண்டுக்கு ரூ.3,87,000 அல்லது அதற்கும் குறைவாகத்தான் ஈட்டுகின்றனர். இதில் கீழே இருக்கும் 10% அல்லது 20% மக்களால் மாதாந்தோறும் எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது?
சமுதாயத்தின் கடைக்கோடியில் இருப்பவர்கள் மாதந்தோறும் ரூ.6,000 அல்லது அதற்கும் கீழேயும், 11-20% பேர் ரூ.12,000 அல்லது அதற்கும் குறைவாகவும் ஈட்டுகின்றனர். அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கின்றனர், எந்த வகையிலான உணவை அவர்களால் பெற முடிகிறது, அவர்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதிகள் எப்படிப்பட்டவை, அவர்களுடைய இதர தேவைகள் எப்படிப் பூர்த்தியாகின்றன என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சி திட்ட (யுஎன்டிபி) அறிக்கையின்படி 22.8 கோடி இந்தியர்கள், அதாவது மொத்த மக்கள்தொகையில் 16% வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். (ஆனால், ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அது - 11.28% அதாவது 16.8 கோடிப் பேர்தான் என்கிறது).
மறக்கப்பட்டுவிட்ட ஏழைகள்
இந்தியாவில் வாழும் 7 கோடி பணக்காரர்கள் குறித்து பெருமைப்படும் அதேவேளையில், அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 22.8 கோடி) உள்ள ஏழைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏழைகளை அடையாளம் காண்பது அப்படியொன்றும் கடினமில்லை:
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை கேட்டுப் பதிவுசெய்துகொண்டவர்கள் எண்ணிக்கை 15.4 கோடி. ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு நிச்சயம் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக அவர்களுக்கு 49 முதல் 51 நாள்கள் மட்டுமே வேலை தரப்படுகிறது;
- இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளில் ஆண்டுக்கு சராசரியாக 3.7 சமையல் எரிவாயு உருளைகளை மட்டுமே விலை கொடுத்து வாங்க முடிந்தவர்கள்தான் ஏழைகள்;
- ஒன்று முதல் இரண்டு ஏக்கர் வரை நிலத்துக்கு உரிமையாளராக இருப்போர், அல்லது குடிவாரதாரராக பயிர் செய்வோர் 10.47 கோடி விவசாயிகள் (இந்த எண்ணிக்கையும் 2023 நவம்பர் 15க்குப் பிறகு 8.12 கோடியாகக் குறைந்துவிட்டது). அவர்கள் ‘கிசான் சம்மான்’ திட்டப்படி ஆண்டுக்கு ரூ.6,000 அரசு உதவித்தொகை பெறுகின்றனர்;
- விவசாயத் தொழிலாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வோரில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்தான்.
- முதியோர் ஓய்வூதியம் பெறும், தனித்து வாழும் மகளிரும் ஏழைகளே.
- கழிவுநீர் வாய்க்கால்கள், புதைக் கழிவுநீர் வாய்க்கால்கள், பொதுக் கழிப்பறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள், பிராணிகளின் தோலை உரிக்கும் தொழில் செய்வோர், காலணிகளைத் தைத்துத் தருவோர் அல்லது புதிதாக செய்து தருவோரும் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகள்தான்.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565
பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
சராசரி நடுத்தர வருமானத்துக்கும் கீழே ஈட்டுகிறவர்களில் 21% முதல் 50% வரை உள்ளவர்கள், அதே வருமான அடுக்கின் கடைசியில் உள்ள 20% பேரைவிட, ‘ஓரளவு பரவாயில்லை’ என்கிற நிலையில்தான் வாழ்கின்றனர். உண்ண உணவும், தங்க இடமும் இல்லாமல் அவர்கள் அவதிப்படவில்லை என்றாலும், ‘எதுவும் நிரந்தரம் இல்லை’ என்ற நிலையில்தான் வாழ்கின்றனர். தனியார் துறையில் பெரும்பாலான வேலைகளுக்கு உத்தரவாதமும் இல்லை, அவை நிரந்தரமும் இல்லை; அவர்களுக்கு வேலை போனாலோ – விபத்தைச் சந்தித்தாலோ உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச வருவாயைத் தரும் எந்தவித சமூகப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.
அரசு ஏற்படுத்தியுள்ள ‘இ-ஷ்ரம்’ என்கிற இணையதளத்தில் பதிந்துகொண்டு வீட்டு வேலை செய்வோர் 2.8 கோடிப் பேர், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தையும்விட குறைவாகவே இவர்கள் பெறுகின்றனர் (ஆனால் உண்மையில் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம்). ஒன்றிய – மாநில அரசுகளிலும் அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலை செய்வோரைத் தவிர்த்து எஞ்சிய அனைவருமே, எப்போது வேலையிலிருந்து நீக்குவார்களோ என்ற அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.
2023ஆம் ஆண்டில் மட்டும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கல்வித் தகுதி உள்ளவர்களில் 2,60,000 பேரை வேலையிலிருந்து நீக்கின. புத்தொழில் நிறுவனங்கள் 100 மொத்தமாக 24,000 பேரை வேலையைவிட்டு நிறுத்தின.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
13 Nov 2023
கண்களை மறைக்கும் மினுமினுப்பு
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவு – மதுபான வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள், பல்பொருள் விற்பனை வணிக வளாகங்கள் (மால்கள்), ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்ட கேளிக்கை வளாகங்கள், தனிப் பயன்பாட்டுக்கான விமானங்கள், விரும்பிய வெளியூர் அல்லது வெளிநாட்டுத் திருமண ஏற்பாடுகள், லம்போகினி மகிழுந்துகள் (ரூ.3.22 கோடி முதல் ரூ.8.89 கோடி விலையுள்ளவை – 2023இல் 103 விற்பனை) போன்றவற்றுக்கு இந்திய செல்வந்தர்களின் ஆதரவு அதிகம். இந்திய செல்வந்தர்களால் இப்படி அதிகம் செலவழிக்க முடிவதற்குக் காரணம் நாட்டில் உள்ள தனி உடைமைகளில் 60% அவர்களுக்குச் சொந்தம், தேசிய வருமானத்தில் 57% அவர்களால் ஈட்டப்படுகிறது.
இப்படிப் பணக்காரர்கள் பெரும், பெறும் வருமானம் ஆளும் பாஜக ஒன்றிய அரசின் கண்ணை மறைத்துவிட்டது, வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் 20% மக்களைப் பற்றி அது கவலையே படவில்லை காரணம் தேர்தலில் அதற்கு வாக்குகளைப் பெற்றுத்தர ஆர்எஸ்எஸ் என்ற எஃகு சட்டகம் தயாராக இருக்கிறது; அதன் கருவூலம் நிரம்பி வழிகிறது காரணம், பகாசுர பெருநிறுவனங்களும், தேர்தல்கால நன்கொடை விற்பனைப் பத்திரங்களும் அப்படி நிரப்புகின்றன; மதப்பற்றையும் உச்சபட்ச தேசிய உணர்வையும் எப்படிக் கலந்துகொடுத்து அரசியல் களத்தில் அறுவடை செய்வது என்பதை பாஜக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. இது பணக்கார்களுக்காகவே நடத்தப்படும் அரசு.
சமூக – பொருளாதார ஜனநாயகத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்திலிருந்து நாடு பின்னோக்கி இழுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் இதைக் கவனிக்காமல் போகலாம், ஆனால் 93% மக்கள் இதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், தகுந்த எதிர்வினைக்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
பணக்கார நாடா இந்தியா?
பொருளாதாரம் எப்போது மீளும்?
தமிழில்:
வ.ரங்காசாரி
![](https://www.arunchol.com/images/like.png)
7
![](https://www.arunchol.com/images/love.png)
![](https://www.arunchol.com/images/care.png)
![](https://www.arunchol.com/images/haha.png)
![](https://www.arunchol.com/images/wow.png)
![](https://www.arunchol.com/images/sad.png)
![](https://www.arunchol.com/images/angry.png)
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.