கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் 2 நிமிட வாசிப்பு
அதிகாரிகளா, பண்ணையார்களா?
மூன்று நாட்களுக்கு முன்பு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற டிஜிபிகள், தங்கள் வீடுகளில் பணியாட்களை அமர்த்திக்கொள்ள மாதம் ரூ.10,000 சம்பளத்தில் ஆட்களை நியமித்துக்கொள்ளலாம் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ்நாட்டில் 70 ஓய்வுபெற்ற டிஜிபிகள் உள்ளனர் என்றும், அதற்கான செலவு வருடம் ரூ.74 லட்சம் ஆகும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
இந்த உதவித்தொகை 2020 ஜூன் மாதத்தில் இருந்தே வழங்கப்பட்டுவருகிறது என்பதும் இந்தச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்த உதவித்தொகை ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் / கூடுதல் உதவிச் செயலாலர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
கூடுதல் சலுகை எதற்கு?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்றதும் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பின்னே எதற்கு இந்தக் கூடுதல் சலுகை?
ஏற்கெனவே பணியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள், ஒன்றிரண்டு கடைநிலைக் காவலர்களைத் தங்கள் சொந்தப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அவலநிலை இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவே தவறு என்னும்போது, ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு எதற்கு இந்தச் சலுகை?
அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்தில், அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியமும், ஓய்வுபெற்ற பின் ஒய்வூதியமும் இருக்கையில், அந்த ஆடம்பரத்தின் தேவை என்ன?
இதில் ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.74 லட்சம் ஒரு சிறிய செலவுதானே எனத் தோன்றலாம். அதைவிட, இதுபோன்ற சலுகைகளின் பின்னால் இருக்கும் ஒரு நிலவுடமை மனநிலையை நாம் கவனிக்க வேண்டும்.
பணியில் இருக்கும்போது ஆங்கிலேயே கவர்னர்களைப் போல ரதகஜ துரக பதாதிகள் சகிதம் சகல உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கும் இவர்கள். ஓய்வுபெற்ற பின்னும் அந்தச் சமூக மேலாதிக்க மனப்பான்மையை விட்டுக்கொடுக்காமல் வாழ விரும்பும் மேட்டிமைத்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சரிதானா இந்தத் திட்டம்?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், எல்லோருக்கும் எல்லாமும்’ எனச் சொல்லிக்கொள்ளும் திராவிட சித்தாந்தம் ஏன் இப்படி ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலைக்குச் செலவுசெய்ய வேண்டும்?
அப்படியே தேவைப்பட்டால், தங்களுக்கு லட்சக்கணக்கில் கிடைக்கும் ஓய்வூதியத்தில் இருந்து ஒரு பத்தாயிரம் செலவுசெய்யட்டுமே?
மக்கள் நலக் குறியீடுகளில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நாட்டின் தலைவர்கள்கூட சைக்கிளில், பொதுப் போக்குவரத்தில் அலுவலகத்திற்குச் செல்கிறார்கள்.
இங்கேயோ, பதவியில் இருக்கையில், ராஜ மரியாதைகளுடன் இருந்துவிட்டு, பதவி முடிந்த பின்னும் தங்கள் ரதங்களில் இருந்து இறங்கிச் சாதாரண மனிதர்களைப் போல வாழ விரும்பாத ஒரு மனநிலைக்கு, ஏன் மக்கள் அரசு செலவுசெய்ய வேண்டும்?
இது முடிவுக்கு வரட்டும்
மேலும், 2022 - 2023ஆம் ஆண்டில் மாநிலத்தின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான செலவு மாநிலத்தின் வரி வருவாயில் 47.5% இருந்தது. அது 2024 - 2025ஆம் ஆண்டில், மாநில வரி வருவாயில் 62%ஆக உயரப்போவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். மாநிலத்தின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியம் குறைவாக இருப்பதாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பல லட்சம் விவசாயிகளும், முறைசாராத் தொழிலாளர்களும், சமூகப் பாதுகாப்பு இல்லாத முதியவர்களும் சரியான வருமானம் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வரிப் பணத்தில் சம்பளமும் ஒய்வூதியமும் வாங்கிக்கொண்டு, அதற்கு மேலும் சலுகைகளைக் கேட்டுப் பெறுவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டாமா?
ஆதிக்கமானது எந்த வகையில் சமூகத்தை ஆட்கொண்டாலும் எதிர்க்கப்பட வேண்டியது; எளிய மக்கள் நலனே முக்கியமானது என்பதே திராவிட சித்தாந்தம் என்று பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளைத் தனித்த வர்க்கமாக்கும் இந்த அநாகரிகத்துக்கு உடனே முடிவு கட்ட வேண்டும். ஒய்வுபெற்ற பின்னர் இந்த அதிகாரிகள், தாங்கள் அமர்ந்திருக்கும் உயர்பீடத்தில் இருந்து இறங்கி, சாதாரண மனிதர்களைப் போல வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள தமிழகம் கற்றுக்கொடுக்க வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
மக்கள் நல பட்ஜெட், கவலை தரும் நிதி நிர்வாகம்!
தமிழ்நாட்டு முதியவர்களின் எதிர்காலம்?
அரசு ஊழியர்களைக் கொஞ்சியது போதும்
கட்டுக்குள் வரட்டும் அரசு ஊழியர்க்கான செலவு

5

1





பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Raja 12 months ago
மிக சரியான கருத்து. அனைவரும் படிக்கப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய பதிவு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.