கட்டுரை, கலாச்சாரம், பொருளாதாரம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டு முதியவர்களின் எதிர்காலம்?

ஜீன் டிரேஸ் எஸ்தர் டஃப்ளோ
27 Sep 2022, 5:00 am
5

விடுதலை பெற்ற காலத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுள் 32 ஆண்டுகளாக இருந்தது. இன்று சராசரி ஆயுள் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பல நாடுகள், இதைவிட மேம்பட்ட உயர்வை அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதே காலகட்டத்தில், பெண்களின் மகப்பேறு சராசரி எண்ணிக்கை 6 குழந்தைகளில் இருந்து 2 குழந்தைகளாகக் குறைந்திருக்கிறது. இதனால் பெண்களுக்கு, அதிக மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற சுமைகள் பெருமளவு குறைந்தன. இது மிக நல்ல செய்தி என்றாலும், இதனால் சமூகத்தில் புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது. அது இந்தியச் சமூகத்தில், முதியவர்களின் எண்ணிக்கை உயர்வு என்பதாகும்.

இந்திய மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை (60 வயதுக்கு மேலானவர்கள்) 2011இல் 9%ஆக இருந்தது. அது வேகமாக வளர்ந்து, 2036இல், 18% ஆகலாம் என்று தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருங்காலத்தில், வயதானவர்களுக்கான கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டுமானால், அதற்கான திட்டமிடுதல் மற்றும் நிதியாதாரங்கள் ஒதுக்குதல் முதலானவற்றை அரசு இன்றே தொடங்க வேண்டும்.

ஓய்வூதியங்களின் அவசியம்!

அண்மையில் நம் நாட்டில் முதியவர்கள் மனநலம் தொடர்பில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு, அவர்களது வாழ்க்கையின் இக்கட்டான நிலை தொடர்பான புதிய அறிதல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அப்துல் லத்தீஃப் ஜமால் வறுமை ஒழிப்புச் செயல் ஆய்வகமும் (J-Pal) தமிழக அரசும் இணைந்து, முதியவர்களிடையே நிலவும் மனச்சோர்வு (Depression) தொடர்பில் நடத்திய ஆய்வின் முடிவுகள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

60 வயதுக்கு மேலான முதியவர்களில், 30% முதல் 50% வரையிலானவர்களுக்கு (பால் மற்றும் வயதின் அடிப்படையில்) மனச்சோர்வு நிலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆண்களைவிடப் பெண்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க, மனச்சோர்வு சதவீதம் மிகவும் வேகமாக அதிகரிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு மனச்சோர்வு கண்டறியப்படுவதும் இல்லை; சிகிச்சைகளும் தரப்படுவது இல்லை.

நாம் பொதுவாக நினைப்பதுபோல மனச்சோர்வு என்பது வறுமை மற்றும் உடல் நலக் குறைவு போன்ற விஷயங்களுடன் மட்டுமே தொடர்புள்ளது அல்ல. முதிய வயதில் தனிமையினாலும் வருகிறது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், தனியே வசிக்கும் முதியவர்களில், 74% பேருக்கு லேசான மனச்சோர்வு முதல் மிக மோசமான முதுமை தொடர்பான மனச்சோர்வுக்கான அறிகுறிகள் வரை தென்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், முக்கியமாக விதவைகள்.

முதுமையின் கஷ்டங்கள் வறுமையினால் மட்டுமே வருவதல்ல என்றாலும், பணம் பல சமயங்களில் உதவியாக இருக்கிறது. அது, முதுமை தொடர்பான உடல்நலக் குறைகளைத் தீர்க்க உதவுகிறது. சில சமயங்களில் தனிமையைத் தவிர்க்கவும் உதவுகிறது. முதியவர்களுக்கான கௌரவமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதன் முதல்படி, அவர்களை வறுமையிலிருந்தும், அது தொடர்பான போதாமைகளிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் காப்பதுதான். அதனால்தான், உலகெங்கும், முதியவர்களுக்கான ஓய்வூதியம், மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் முதியவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு இலவச ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன.  இத்திட்டங்கள் ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறையின் ‘தேசிய சமூக உதவித் திட்ட’த்தின் கீழ்  நிர்வகிக்கப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக, இத்திட்டங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்களுக்கு மட்டுமே தரப்படுகின்றன.  வறுமைக்கோட்டைத் தீர்மானிக்கும் அளவுகோல்களும் திருப்திகரமானவை இல்லை. சில பட்டியல்கள் 20 ஆண்டுகளுக்கும் முந்தயவை. மேலும், முதியோர் ஓய்வூதியத்தில், ஒன்றிய அரசின் பங்கும் குறைவு (முதியோருக்கு மாதம் ரூ.200; விதவைகளுக்கு ரூ.300). இந்தத் தொகையும் 2006க்குப் பின்னர் உயர்த்தப்படவே இல்லை.

பல மாநிலங்கள், ஒன்றிய அரசின் தேசிய சமூக உதவித் திட்டத்தைப் பரவலாக்கி ஒன்றிய நிதியுடன் மாநில நிதி மற்றும் திட்டங்களை இணைத்து ஓய்வூதியத் தொகையை உயர்த்தியும் வழங்குகின்றன. சில மாநிலங்கள், கிட்டத்தட்ட அனைவருக்குமான ஓய்வூதிய அளவையும் (75-80% முதியவர்கள், விதவைகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்படுதல்) எட்டிவிட்டன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இதுதான் தற்போதைய நிலை. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு விதிவிலக்காக இருக்கிறது.

இலக்குகளுக்கு அப்பால்...

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயனாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு, பயன்களை அவர்களுக்கு மட்டுமே சேர்ப்பது என்னும் இலக்கை அடைவது, எப்போதுமே கடினமான காரியமாக இருந்திருக்கிறது. ஓய்வூதியம் தேவைப்படும் பலருடைய பெயர்கள் இதற்கான பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளைக் கண்டறிவதில் உள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால், வறுமையில் இருப்பவரை அடையாளம் காணும்போது, தனிநபர்களாக அல்லாமல் குடும்பம் வழியாக அடையாளம் காணும் அணுகுமுறை. இது சரியல்ல. உண்மை என்னவெனில், ஓரளவு வசதியான வீடுகளிலும்கூட முதியவர்களும், விதவைகளும் போதாமைகளால் கஷ்டப்படுவது நிகழ்கிறது. உறவினர்கள் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்களோ இல்லையோ, முதியவர்களுக்கெனெ ஒரு ஓய்வூதியம் இருப்பது, அவர்கள் தம் உறவினர்களை அதீதமாக சார்ந்திருக்காமல் வாழ உதவும். வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதென்பது, உறவினர்களும் அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஒரு கண்ணியமான நிலையையும் ஏற்படுத்தும்.

பயனாளிகளை அடையாளம் கண்டறிதல் அரசு நிர்வாகத்தில் சிக்கலான விஷயம். அரசின் உதவிகளைப் பெற வேண்டும் என்றால், வறுமைக்கோட்டுக்குக் கீழே தாம் இருப்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ்கள், ஆவணங்களை வறியவர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. உண்மையாக ஓய்வூதியம் தேவைப்படும் ஏழைகள் மற்றும் கல்வியறிவில்லா முதியவர்களுக்கு இந்த நிர்வாக நடைமுறைகள் பெரும் தடைகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில், இதுபோன்ற தடைகளால் விடுபட்டுப்போன பயனாளிகள், ஓய்வூதியம் பெறும் முதியவர்களைவிட ஏழ்மையான நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் விடுபட்டுப் போன உண்மையான பயனாளிகளின் தரவுகள் திரட்டப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டபோதும்கூட, அதில் மிகச் சிலருக்கே ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டது. தற்போதைய திட்டங்களில் உள்ளுறையாக உடைக்கவே முடியாத தடையரண்கள் இருப்பதை இது உறுதி செய்கிறது.

இதில் பிரச்சினை என்பது, திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு அலுவலர்களின் முயற்சியின்மையோ அல்லது நல்லெண்ணம் இல்லாமையோ இல்லை. அவர்களில் பலரும், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் தகுதியற்ற மனிதர்கள் சேர்க்கப்பட்டு, அதனால் அரசு நிதி வீணாகிவிடக் கூடாது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டால், ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் முதியவருக்கு, அதே ஊரில் நல்ல உடல்நிலையில் மகன் இருந்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அந்த முதியவருக்கு அவரது மகனிடம் இருந்து உதவி கிடைக்கிறதா, இல்லையா என்னும் தரவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

நிர்வாக மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஓய்வூதியம் பெற வேண்டிய முதியவர்களை அனுமதிப்பதில் பிழைகள் (Inclusion Errors) இல்லாமல் பார்த்துக்கொள்ள கொடுக்கும் அக்கறையை, உண்மையாக ஓய்வூதியம் தேவைப்படும் பலர் திட்டத்தில் விடுபட்டுப்போகும் பிழைகள் (Exclusion Errors) நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள அலுவலர்கள் கொடுப்பது இல்லை.

அப்படியென்றால், எத்தகைய அணுகுமுறை தேவை? முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் அனைவருமே ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள் எனத் தீர்மானித்துகொண்டு, அதில் விலக்கப்பட வேண்டியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்க எளிமையான, வெளிப்படையான அளவுகோள்களை உருவாக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது ஆகும்.

ஓய்வூதியம் பெறத் தகுதி என்பது, ஓய்வூதியம் பெற விரும்பும் பயனாளிகள் தங்களின் தகுதிகளை சுய விண்ணப்பம் மூலம் அறிவித்தல் என்னும் எளிமையான விதியே போதும். காலப்போக்கில் அவர்கள் உண்மையிலேயே ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள்தானா என்பதைச் சரிபார்க்கும் பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் வசம் ஒப்படைத்துவிடலாம்.  இப்படிச் செய்கையில், சிலர் ஏமாற்றலாம். ஆனால், தகுதியுடையோர் விடுபடும் அவலம் நேராது.

அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பு

பயனாளிகளைச் சரியாக அடையாளப்படுத்திய பின்னர் அளிக்கப்படும் ஓய்வூதிய முறையைவிட்டு, கிட்டத்தட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் என்பதை நோக்கிச் செல்ல வேண்டும் என்னும் அணுகுமுறை முற்றிலும் புதியதல்ல. மேலே சொன்னதுபோல ஏற்கனவே இது பல மாநிலங்களில்  நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றுதான். மேலும் தொகை சிறியதாக இருந்தாலும், அதுவும்கூட கணிசமான மக்களுக்கு குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கிறது (இந்தியா முழுவதும் 4 கோடிப் பேர் சமூக நலத் திட்டங்களின் உதவிகளைப் பெறுகிறார்கள்).  

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் விதவைகளில் மூன்றில் ஒருவருக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி  செலவிடுகிறது. இனி இந்த எண்ணிக்கையை உயர்த்தி – அதாவது முதியவர்கள் / விதவைகளில் 80% பேருக்குக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். இதற்கான செலவு, ஆண்டுக்கு ரூ.10,000 கோடி ஆக அதிகரிக்கும். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து முதியோருக்கும் ஓரளவு சமூகப் பாதுகாப்பு எனும் இலக்கைத் தமிழக அரசு அடைந்திருக்கும். அப்படிப் பார்கையில் இது அரசுக்கு சிறு செலவுதான்.

தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு ரூ.40,000 கோடியை ஓய்வூதியமாகத் தருகிறது. அவர்களின் எண்ணிக்கை தமிழக மக்கள்தொகையில் 1% என்பதை கணக்கில் கொண்டால், அனைத்து முதியவர்களுக்கான ஓய்வூதியம் என்பது ஒரு சிறு சதவீதம்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தை ஒரேயடியாக நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், இதை அனைத்து வயதான மகளிர் மற்றும் விதவைகளுக்குத் தொடங்கலாம் என்பதற்கு வலுவான காரணம் உள்ளது. முதிய மகளிரும், விதவைகளும் வயதான காலத்தில் ஆண்களைவிட மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே அது. தமிழ்நாடு அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கான உதவித்தொகை மாதம் ரூ.1,000 என்பதை நிறைவேற்றும் முதல் படியாகவும் அது இருக்கும்.

தென் மாநிலங்கள் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டவையாக இருந்தபோதிலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களான ஒடிஷா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான், கிட்டத்தட்ட அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒன்றிய அரசும் தன் சமூக உதவித் திட்டத்தைச் சீரமைத்து மேம்படுத்தினால், அனைத்து மாநிலங்களும் இதை எளிதில் நடைமுறைப்படுத்திவிட முடியும். சமூக உதவித் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.9,652 கோடியை இந்திய அரசு ஒதுக்க்கியுள்ளது. இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே அளவில்தான் உள்ளது. பத்தாண்டுப் பணவீக்கத்தைக் கணக்கில்கொண்டால், இது மிகவும் குறைவு. இந்தியப் பொருளாதார அளவில் 0.05%கூட இல்லை.

ஓய்வூதியம் என்னும் சமூகப் பாதுகாப்புத் திட்டம், முதியவர்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கித் தருவதன் முதல் படிதான். இதைத் தாண்டி, அவர்களுக்கு மருத்துவ உதவி, இயங்குதிறன் மேம்பாட்டுக் கருவிகள், தினசரிப் பணிகளில் உதவி, பொழுதுபோக்கு வாய்ப்புகள், மகிழ்ச்சியான சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கான ஆதரவும், கட்டமைப்புகளும் தேவைப்படுகின்றன. வருங்காலத்தில், இந்தத் தளத்தில் ஆராய்ச்சிகள், கொள்கைகள், திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது மிக முக்கியமான தேவைகள் ஆகும்!

© தி இந்து ஆங்கிலம்

ஜீன் டிரேஸ்

ஜீன் டிரேஸ், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர். ராஞ்சி பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையின் வருகை தரு பேராசிரியர்.

எஸ்தர் டஃப்ளோ

எஸ்தர் டஃப்ளோ, பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிப் பொருளியல் பேராசிரியர்.

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி

3

2

பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Srinesh   1 year ago

Correct me if iam wrong. This is very different from what PTR was being saying so far Identify the qualified beneficiaries and provide the wellfare schemes But our economic advisors are now saying to cover as maximum as beneficiaries as possible in this scheme and then scrutinize their qualifications later.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Abi   1 year ago

உண்மையாக ஓய்வூதியம் தேவைப்படும் ஏழைகள் மற்றும் கல்வியறிவில்லா முதியவர்களுக்கு இந்த நிர்வாக நடைமுறைகள் பெரும் தடைகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில், இதுபோன்ற தடைகளால் விடுபட்டுப்போன பயனாளிகள், ஓய்வூதியம் பெறும் முதியவர்களைவிட ஏழ்மையான நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.. // 100 சதம் உண்மை...

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Abi   1 year ago

5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் oap மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடு ம்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

கடைசிவரை தமது 'கண்ணியம்' குன்றாமல் வாழ இது ஒரு வகையில் ஓரளவு உதவும். கண்ணியமான வாழ்வு நமது அடிப்படை உரிமை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KANNAN   1 year ago

தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர் நிலை வேதனை அளிக்கிறது

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சோஷலிஸ்ட் இயக்கத் தலைவர்சமஸ் கி.ரா. பேட்டிநியமன நடைமுறைஆளுநர்களின் செயல்களும்தென்னாப்பிரிக்கஆசிரியர் பணியிடங்கள்அன்னி எர்னோ: சின்ன அறிமுகம்வார்த்தை ஜாலம்பரிபாடல்சித்ரா பாலசுப்பிரமணியன்தண்டிக்கப்படாத செயல்கள்கேஸ்ட்ரொனொம்சீனா - ஆவணமும் அக்கறையும்புதிய பயணம்டிஜிட்டல்சோ எழுதிய குறிப்புமருதன் கட்டுரைநிரந்தரமல்லஅலுவலகப் பிரச்சினைஅரசியல் நகர்வுபன்னிரெண்டாம் வகுப்புபொருளாதார இடஒதுக்கீடுஎப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?எதிர்க்கட்சிகள் ஒற்றுமைஆட்சி நிர்வாகம்கைவிட்ட ஊடகங்கள்கிராண்ட் கபேஆராய்ச்சிமார்க்சிஸ்ட்கே.சந்திரசேகர ராவ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!