கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தில் புதிய அணுகுமுறை தேவை

புலப்ரே பாலகிருஷ்ணன்
23 Jun 2024, 5:00 am
0

மீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவை, நாட்டின் பொருளாதார நிலைமையால் ஏற்பட்ட அதிருப்தியைக் காட்டும் மக்கள் தீர்ப்பு என்று ஓரளவுக்குக் கூறலாம். இந்தியாவில் அதிக கிராமங்களையும் ஏழைகளையும் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறது. 

அதிருப்தியும் - அதன் மூலமும்

வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் தொடர்ச்சியாக இருக்கும்போது ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி ஏற்படுவது இயல்பு; உணவுப் பொருள்களின் விலை உயர்வு கடந்த ஐந்தாண்டுகளாகவே தொடர்கிறது. உணவில் அவசியம் இருக்க வேண்டிய பருப்பு, சிறுதானியங்களில் இந்த விலை உயர்வு அதிகம். வறுமையில் வாழும் மக்களுடைய குடும்பச் செலவில் பாதிக்கும் மேல் உணவுக்குத்தான் போகிறது. தேர்தல் முடிவைத் தீர்மானிப்பவை, சாப்பாட்டுக்காகும் செலவுதான் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பண்டங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து, வாஜ்பாய் ஆட்சியின் ஆறாவது ஆண்டுக்கால முடிவில் உச்சபட்சமானதால், 2004இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிழந்தது.

வேலையில்லாத் திண்டாட்டமானது 2014 முதலே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நிரந்தர வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், சுய வேலைவாய்ப்பில் இருக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் பெறும் ஊதியத்தின் உண்மை மதிப்பு, கணிசமாகக் குறைந்துவிட்டதைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, ஊதியம் தொடர்பாக அரசுத் துறை தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளும் சுட்டுகின்றன. இந்தக் காரணங்களால் பாஜகவுக்கு ஆதரவு குறைந்திருக்கக்கூடும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஜனநாயகத்தில் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி அடிக்கடி பேசுகிறார், இப்போது இந்தத் தீர்ப்பின் மூலம் மக்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர் செயல்பட வேண்டும். மக்கள் ஏன் நம்முடைய அரசின் மீது அதிருப்தி கொண்டார்கள் என்று ஆராய வேண்டும். கடந்த பத்தாண்டு கால பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகுகூட அரசு தனது நிலையில் மாற்றம் செய்யப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. ‘சீர்திருத்தங்கள் செய்யப்படும்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார். ‘வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை’ என்று அரசை ஆதரித்து எழுதும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ‘சீர்திருத்தம்’ என்று அவர்களே சொல்லியிருப்பதால் இரண்டு அம்சங்கள் நினைவுக்கு வருகின்றன.

சீர்திருத்தத்தின் இரண்டு அம்சங்கள்

முதலாவதாக, மிகவும் பாராட்டப்பட்ட மோடியின் சீர்திருத்த ஆர்வத்தால் 2014க்குப் பிறகு நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி எந்த வகையிலும் உயரவேயில்லை. சந்தையில் ‘கேட்பு – அளிப்பு’ (Demand – Supply) ஆகியவற்றில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டால் மட்டுமே சீர்திருத்தங்கள் நடந்திருப்பதாகக் கூற முடியும். இந்த அரசு எத்தகைய சீர்திருத்தத்தை மேற்கொண்டதாகக் கூறினாலும் பொருளாதாரத்தில் வலிமையாகவோ, பரவலாகவோ எந்த மாறுதலையும் ஏற்படுத்திவிடவில்லை.

இரண்டாவதாக, அரசு கூறும் பொருளாதார வளர்ச்சியானது மக்கள் விரும்பும் எந்த நன்மையையும் 2014 முதல் கொண்டுவந்துவிடவில்லை. உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்ந்துவருவதைப் பார்த்தோம்.

இந்திய மக்களில் 75% பேர் சத்துள்ள உணவைச் சாப்பிட முடியாமல், குறைந்த வருமானமும் விலைவாசி உயர்வும் தடுக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு – வேளாண்மைக்கான (எஃப்ஏஓ) அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக நிலவும் விலைவாசி உயர்வும், நாட்டு மக்களிடையே நிலவும் வருமான ஏற்றத்தாழ்வும் இந்த மதிப்பீடு குறித்து வியப்பை ஏற்படுத்தவில்லை. வாங்கிச் சாப்பிடும் விலையில் உணவு தானியங்கள் இருப்பதுடன், வாழ்க்கை மேம்பட சமூக - உடல்சார்ந்த அடித்தளக் கட்டமைப்புகளும் உதவியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மருத்துவ வசதி – கல்வி ஆகியவை ‘சமூக’ அடித்தளக் கட்டமைப்பு; மற்றொன்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘உடலுடன்’ தொடர்புள்ளது. இரண்டுமே வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உற்சாகம் தராத பொருளாதார வளர்ச்சி வேகம்

ப.சிதம்பரம் 26 Feb 2024

சீர்திருத்தத் தெளிவு வேண்டும்

கடந்த பத்தாண்டுகளாக இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையானது அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது, எல்லாத் துறைகளிலும் எண்ம பரிமாற்ற முறையை அமல்படுத்துவது, மானிய ஊக்குவிப்பு மூலம் தொழில் துறை உற்பத்தியைப் பெருக்குவது, தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்குப் பெருமளவில் செலவுசெய்வது (கடந்த மூன்றாண்டுகளில் இது மேலும் அதிகரித்தது) ஆகியவையே.

விவசாயிகளுக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் உதவித் தொகைகளை வழங்குவது, பரம ஏழைகளுக்கு விலையில்லாமல் அரிசி – கோதுமை ஆகியவற்றைப் பொது விநியோக முறை மூலம் வழங்குவது ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. இவை தேர்தலில் வெற்றி பெறும் உத்தியாக இருக்கலாம், ஆனால் இவற்றால் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியவில்லை. இதே கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவது, மக்கள் வழங்கிய தீர்ப்பைப் புறக்கணிப்பதாகத்தான் அர்த்தம்.

மக்களுடைய தீர்ப்பை மதிப்பதாக இருந்தால், சீர்திருத்தங்கள் தொடர்பாக தெளிவில்லாமல் பேசுவதையும் செயல்படுவதையும் நிறுத்த வேண்டும். அரசின் நிதிநிலை இடம் தருகிறது என்றாலும், சமூக நலத் திட்டங்களுக்கான செலவை மேலும் அதிகப்படுத்துவது கூடாது. பேரியியல் பொருளாதாரக் காரணிகள் வலுவாகத்தான் இருக்கின்றன என்று வாதிடுவதும் சரியல்ல. கோவிட்-19 பெருந்தொற்று தாக்கும் வரை அரசின் வரவு – செலவு மேலாண்மை வெற்றிகரமாகவே இருந்தது, அதேசமயம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது.

கோவிட்-19 வருவதற்கு முன்னதாகவே பொருளாதார வளர்ச்சி சரிவதைத் தடுக்க அரசால் முடியவில்லை. பேரியியல் பொருளாதாரக் காரணிகளும் நிலையற்றுப் போக வேண்டும் என்று நாம் கூறவில்லை, அதேசமயம், அவற்றால் வளர்ச்சியையும் கொண்டுவர முடியவில்லை, மக்களுடைய விருப்பங்களும் நிறைவேறவில்லை.

பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டுமென்றால் முதலீடும் அதிகமாக வேண்டும். சந்தையில் கேட்பு எப்படி இருக்கும் என்பதைப் பொருத்துத்தான் தனியார் துறையில் முதலீடுகள் இருக்கும்.

கடந்த பத்தாண்டுகளாக தனியார் துறையின் முதலீட்டு விகிதம் சிறிதுகூட உயரவேயில்லை. அத்துறையினர் பெரிதும் ஆதரித்த மோடிக்கு மக்களவையிலேயே பெரும்பான்மை வலிமை இல்லை என்னும்போது அந்த முதலீடு முன்பைவிட பெரிய துள்ளலுடன் அதிகமாகிவிடுமா என்றும் பார்க்க வேண்டும்.

கண்ணில் படும் பற்றாக்குறைகள்

வாக்காளர்களின் முடிவுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் பழைய சீர்திருத்தத்தை இனியும் தொடரக் கூடாது; அப்படியானால் புதிய பொருளாதாரக் கொள்கை அல்லது அணுகுமுறை என்னவாக இருக்க முடியும்?

பொருளாதாரத்தின் எந்தெந்த துறைகளில் நெருக்கடியும் அழுத்தமும் தென்படுகின்றனவோ அங்கு மட்டும் அரசு தலையிட்டு சரிசெய்தால் போதும். ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி முதலில் வருவது, உணவு தானியங்களின் விலை உயர்வு. 

தினை வகைகளுக்கு அரசு ஆதரவு தந்தாலும் மோடி அரசின் பொருளாதார ஊக்குவிப்புகளில் அதிகம் அலட்சியம் செய்யப்பட்ட துறை வேளாண்மையே. முக்கியமான உணவு வகைகளின் தொடர் விலைவாசி உயர்வானது பொருளாதாரம் நன்றாக வளரவில்லை என்பதற்கான அறிகுறி. இந்த நிலையில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவது எளிதல்ல. 

கோதுமை விளைச்சல் சில ஆண்டுகளில்தான் குறைகிறது ஆனால் பருப்பு – சிறு தானியங்களின் விளைச்சல் பல பத்தாண்டுகளாகவே மக்களுடைய தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் இல்லை. பருப்பு, சிறுதானியங்கள்தான் மக்களை ஆரோக்கியமாக வாழவைக்கும். 

பருப்பு மற்றும் தினை வகைகளில் இந்தியா தன்னிறைவு பெற இலக்கு நிர்ணயித்து தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும். போதிய குளிர்பதன கிடங்கு வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாததால் பழங்கள், காய்கறிகள் மக்களுக்குக் கிடைப்பதில் தொடர்ந்து பற்றாக்குறை நிலவுகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பணக்கார நாடா இந்தியா?

ப.சிதம்பரம் 06 Mar 2023

ரயில்வே துறை

அடுத்த அழுத்தப் புள்ளி, ரயில்வே துறையில் நிலவுகிறது. இந்தியத் தொழிலாளர்கள் நாட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்வதை ரயில்வே துறையின் தலைமை உணர்ந்ததைப் போலவே தெரியவில்லை. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளிலும், முன்பதிவு செய்யாமலேயே வந்த நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் ஆக்கிரமிக்கும் காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ‘வந்தே பாரத்’, ‘புல்லட் ரயில்’ போன்றவற்றின் மீது ரயில்வே கவனம் செலுத்துவது, மக்களுடைய தேவை என்ன என்பதை கவனிக்கத் தவறியதையே – பொறுப்பின்மை என்று கருதாவிட்டாலும் – காட்டுகிறது.

அடுத்த அழுத்தப் புள்ளி, நாட்டின் பெருநகரங்களிலும்கூட குடிநீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு. முதலில் பெங்களூருவும் இப்போது டெல்லியும் தண்ணீர் இன்றித் தவிக்கின்றன. இவைதான் நாட்டின் மிகப் பெரிய நகரக் குடியிருப்புகள் இங்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் சமூக ஒற்றுமையையும் குலைத்துவிடும்.

அரசு நிறுவனங்கள் முக்கியம்   

பற்றாக்குறை நிலவும் சில அம்சங்களை மட்டும்தான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன், பெரிய பட்டியல் தானாக புலப்படும் என்ற நம்பிக்கையில். நகரங்களை இணைக்கும் விரைவு நெடுஞ்சாலைகளுக்கும் எண்ம பரிமாற்றத்துக்கும் பாஜக அரசு பெரிய முக்கியத்துவம் தருகிறது, இவற்றை வேண்டாமென்று கூறவில்லை, ஆனால் இவற்றைவிட உடனடியாக கவனிக்க வேண்டியவை பல இருக்கின்றன.

நாட்டு மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களுக்கும் அடித்தளக் கட்டமைப்பு அவசியம். இதில் முதலாவது எளிதில் புரிந்துகொள்ளப்படும், அடுத்தது பற்றிய புரிதல் குறைவாகவே இருக்கும். சுய வேலைவாய்ப்புள்ள நிறுவனங்களுக்குக்கூட போக்குவரத்து வசதி, தொடர் மின்சார அளிப்பு, கழிவு நீர் அகற்றல், திடக் கழிவு மேலாண்மை ஆகிய சேவைகள் அவசியம். இவை கிடைக்காவிட்டால் சுயதொழில் பிரிவுகளால் இயங்க முடியாது. அதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் பெருகாது உற்பத்தியும் சரியும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

ப.சிதம்பரம் 22 Jan 2024

கடந்த 25 ஆண்டுகளாகவே நாட்டில் நிலவும் உயர் பொருளாதார வளர்ச்சி இந்த சேவைகளை போதிய அளவுக்கு அளிக்கவில்லை. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இவையெல்லாம் தனியார் துறை மூலம் கிடைக்காது. மிகப் பெரிய அளவில் அனைவருக்கும் வழங்க அரசால் – அரசுத் துறைகளால் மட்டுமே முடியும். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு இது வெளிப்படையாகவே தெரிந்திருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறை தலைமை தாங்க வேண்டும் என்று அவர் நினைத்தார். கடந்த பத்தாண்டுகளில் இது நடக்கவில்லை, இனியும் நிலைமை மாறாது.

அரசு இப்போதாவது தவறைத் திருத்திக்கொள்ள முடியும். தாராளமயச் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம் என்று உறுதி அளிப்பதைவிட, அமல் செய்வதைவிட, நாட்டின் பொருளாதாரத்தை வளரவிடாமல் செய்யும் அழுத்தப் புள்ளிகள் எவை என்று அவற்றின் மீது கவனத்தைத் திருப்ப வேண்டும். 2047இல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் இந்தியா எந்த அளவுக்கு வளருமோ தெரியாது, மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவக்கூடிய துறைகளில் அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் விட்டால், இந்தியா ‘வளரும் நாடாகவே’ நீடிக்கும்.

© தி இந்து

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வேலைவாய்ப்பின்மை, வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவுகள்
உற்சாகம் தராத பொருளாதார வளர்ச்சி வேகம்
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
பணக்கார நாடா இந்தியா?
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






சாப்பாட்டுப் புராணம்ஹார்மோன்கள்இந்தியாவின் குரல்வருவாய்ப் பகிர்வுஐக்கிய ஜனதா தளம்சாவர்க்கர் பெரியார் காந்திமாமாஅண்ணா அருஞ்சொல்அறம் – உண்மை மனிதர்களின் கதைஜாக்ஸன் கொலைஉப்புஉலக நாடுகளைப் பின்பற்றலாம்!பஸ் பாஸ்பொதுப் பயண அட்டைஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஷமீம் மொல்லா1962 மக்களவை பொதுத் தேர்தல்கூத்தாடிமக்கள் நலத் திட்டங்கள்பொன்னியின் செல்வன்: ஓர் எதிர்விமர்சனம்காலம்தோறும் கற்றல்Agaramஆர்.எஸ்.நீலகண்டன்ஒன்றிய நிறுவனங்கள்மருத்துவம்நேபாளம்மேடைக் கலைவாணர்அசுர இயந்திரம்பட்டாபிஷேகம்த.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!