கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு
செயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 98வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே (80). சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் நடந்த தேர்தலில், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் ஐ.நா.சபையில் இருந்தவர், அரசியலில் பின்னர் சேர்ந்து அவருடைய கல்வியாலும் ஆங்கிலப் புலமையாலும் புகழ் அடைந்தவர். அதேசமயம், கள அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர். கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட கார்கேவின் அனுபவம் காங்கிரஸுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
கர்நாடக மாநிலத்தில் நிறைய மாற்றங்களுக்கு வித்திட்டவர், சிறந்த நிர்வாகி கார்கே. முதல்வராகவே வந்திருக்க வேண்டியவர். கர்நாடகத்துக்கே உரிய சாதி அரசியல் காரணமாக செல்வாக்கு மிக்க சாதிகளை சாந்தப்படுத்த அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் முழு விசுவாசமாக இருப்பவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அரசு நிர்வாகத்திலும் கட்சி அரசியலிலும் நீண்ட அனுபவம் உள்ள கார்கே காங்கிரஸை வழிநடத்தத் தகுதியானவர் என்பதில் ஐயம் இல்லை. கர்நாடக சட்டப்பேரவைக்குத் தொடர்ந்து ஒன்பது முறையும் (1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008, 2009) மக்களவைக்கு 2014லுமாக தொடர்ந்து 10 பொதுத் தேர்தல்களில் வென்றவர் (ஒரே தோல்வி 2019 மக்களவைத் தேர்தல்).
யார் இந்த கார்கே?
கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் வராவட்டி கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் 1942 ஜூலை 21இல் கார்கே பிறந்தார். குல்பர்கா நகரில் நூதன் வித்யாலயத்தில் பள்ளிக்கல்வியை முடித்த பிறகு, அதே நகரில் அரசினர் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், சேத் சங்கர்லால் லகோட்டி சட்டக் கல்லூரியில் இளம் சட்டவியல் பட்டத்தையும் படித்தார். பின்னாளில் நீதிபதியான சிவராஜ் பாட்டீலிடம் வழக்கறிஞராகத் தொழில் பயின்றார். தொழிற்சங்க வழக்குகளில் ஆரம்ப காலத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
அரசினர் கலை கல்லூரியில் பயின்றபோது மாணவர் சங்க பொதுச் செயலரானார். 1969இல் எம்எஸ்கே ஆலைத் தொழிலாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகரானார். சம்யுக்த மஸ்தூர் சங்கத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கினார். 1969இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து குல்பர்கா நகர காங்கிரஸ் கட்சித் தலைவரானார். 1972இல் குர்மிட்கல் பேரவைத் தொகுதியில் வென்று அரசியல் வெற்றிகளைத் தொடங்கினார்.
செயல் வீரர்
கார்கே 1973இல் ‘ஆக்ட்ராய்’ என்று அழைக்கப்படும் சுங்க நுழைவு வரி குறித்து பரிசீலிக்க, அந்தக் குழுவின் தலைவராக அரசால் நியமிக்கப்பட்டார். அவருடைய பரிந்துரையை ஏற்று ‘ஆக்ட்ராய்’ (நகர நுழைவு வரி) ரத்துசெய்யப்பட்டது. 1974இல் மாநில அரசின் தோல் வளர்ச்சி கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். தோல் பதனிடும் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய ஷெட்கள் கட்டித் தரப்பட்டு அதனுடனேயே குடியிருப்பும் சேர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன் அடைந்தனர்.
அடுத்து, 1976இல் தொடக்கக் கல்வித் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தலித்துகள் – பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருந்த 16,000 இடங்களுக்கு உரிய தகுதி பெற்றவர்களை நேரடி நியமனம் மூலம் பணி அமர்த்த அப்போது நடவடிக்கை எடுத்தார். கார்கேவின் நிர்வாகத் திறமைக்காகவே 1978இல் தேவராஜ அரசு தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1980இல் குண்டுராவ் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சரானார். நிலச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த மாநிலம் முழுவதும் 400 நில உரிமை வழக்கு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தினார். ஆனால், பணி முழுமை அடையவில்லை. 1990இல் பங்காரப்பா அரசில் வருவாய்த் துறை அமைச்சரானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் உபரி நிலங்களை அடையாளம் கண்டு, நிலமற்ற ஏழைகள் பட்டா பெற உதவினார்.
வீரப்ப மொய்லி தலைமையிலான அரசில் 1992-94இல் தொழில் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரானார் கார்கே. 1994இல் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 1999இல் முதல்வர் பதவிக்கான போட்டியில் அவர் பெயரும் இருந்தது. ஆனால், இறுதியில் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். அப்போதுதான் சந்தனக் கடத்தல் தொடர்பாக பேசப்பட்ட வீரப்பனால் கன்னட திரைப்படத்தின் முன்னணிக் கலைஞர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக கர்நாடகத்தில் கலவரங்களும் மூண்டன. மிகவும் நெருக்கடியான காலம் அது. திறம்பட இந்தப் பிரச்சினைகள் கையாளப்பட அவரும் பங்காற்றினார்.
பேரவைக்கு 2004இல் எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நிச்சயம் இந்த முறை கார்கேதான் முதல்வர் என்று பலரும் பேசிவந்த நிலையில், கர்நாடகத்தில் குடியேறிய ராஜஸ்தானியும், நண்பருமான தரம் சிங் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்கே அந்த அரசில் போக்குவரத்து – தண்ணீர் வளத் துறை அமைச்சரானார்.
2005இல் கர்நாடக பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று வலிமை பெற்றது. அடுத்து, 2008 தேர்தலில் சைதாபூர் தொகுதியிலிருந்து பேரவைக்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கார்கே. ஆனால், காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள் பலர் அந்தத் தேர்தலில் தோற்றுவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இரண்டாம் முறையாக கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குல்பர்கா எம்பி
2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் குல்பர்காவிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2019இல், முன்னாள் காங்கிரஸ்காரரும் பாஜக வேட்பாளருமான உமேஷ் யாதவிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆயினும், 2020 ஜூனில் மாநிலங்களவை உறுப்பினராகக் கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 பிப்ரவரியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
என்ன செய்வார்?
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சோனியாவும் ராகுலும் முதலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டைத்தான் விரும்பினர். அவர் தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டார். ஆனால், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முறையை ராகுல் வலியுறுத்தியதால், அசோக் கெலாட் பின்வாங்கினார். ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தர அவருக்கு மனமில்லை. அப்படியே விடுவதாக இருந்தாலும் அந்த இடத்துக்கு சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதனால் கட்சித் தலைமையின் கட்டளையையும் மீறத் தயாரானார். அவரை மேற்கொண்டு வற்புறுத்தினால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேருமோ, அவர் கட்சியிலிருந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கேரளத்தவரான சசி தரூரும் போட்டியிட முன்வந்தார்.
கட்சித் தலைமை தொடக்கத்தில் அவரை வரவேற்றாலும், சசி தரூர் சுயமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் என்னாவது என்று கவலையும் இருந்தது. எனவே, விசுவாசியான கார்கே களம் இறக்கப்பட்டார். கூடவே. கார்கேவைக் களம் இறக்கியதன் வழியாக ‘தலித்துகள் அணுக்கக் கட்சி’ எனும் பெயரை வாங்கிக்கொள்ள காங்கிரஸ் தலைப்பட்டது. ஆனால், அந்தப் பேச்சு உடனே அடி வாங்கியது. ‘தலித்துகளை காங்கிரஸ் எப்போதுமே பலியாடாகத்தான் பயன்படுத்துகிறது’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டினார். ‘இத்தனை ஆண்டுகளாக கார்கே கண்ணில் படவில்லையா? ஏன் அவரை முதல்வர் ஆக்கவில்லை?’ என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
கார்கே தனக்கு இடும் கட்டளைக்கேற்ப இனி கட்சிப் பணி செய்யப்போகிறேன் என்று முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். என்ன பணி உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டுக்கொண்ட பிறகே அந்தப் பணியை கார்கே அளிப்பார் அல்லது பணியைச் செய்ய ராகுலுக்கு மட்டும் முழுச் சுதந்திரம் அளிப்பார் என்பது எவருக்கும் தெரியும். ‘சோனியா குடும்ப ஆலோசனையைக் கேட்டு நடப்பேன்’ என்றே கார்கே பேட்டியளித்தார். முதல் குடும்பத்தை அனுசரித்தபடி எவ்வளவு சுதந்திரமாக அவரால் செயல்பட முடியும் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. கார்கே நல்ல செயல் வீரர். ஆனால், முழுப் பொறுப்புடன் உரிய சுதந்திரமும், அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற குரலையே பலரும் ஒலிக்கின்றனர்.
வரலாற்றிலேயே காங்கிரஸ் மிகவும் பலவீனப்பட்டிருக்கும் காலகட்டம் இது. பெரும் சீர்திருத்தங்களை அந்தக் கட்சி கோரும் காலம். கட்சிக்குள் முழு அதிகாரமும், நாடு தழுவிய மக்கள் செல்வாக்கோ இல்லாத சூழலில் இவ்வளவு பெரிய பணி கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது உண்மையில் பெரும் சுமை என்றுதான் சொல்ல வேண்டும். முள் கிரீடம். கார்கே என்ன செய்வார்? வரலாறு காத்திருக்கிறது!
![](https://www.arunchol.com/images/like.png)
5
![](https://www.arunchol.com/images/love.png)
1
![](https://www.arunchol.com/images/care.png)
![](https://www.arunchol.com/images/haha.png)
![](https://www.arunchol.com/images/wow.png)
![](https://www.arunchol.com/images/sad.png)
![](https://www.arunchol.com/images/angry.png)
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
PRASANNA R 2 years ago
அன்புள்ள ஆசிரியருக்கு.. இந்தக் கட்டுரையை நேற்று மாலை படித்தேன்.. இப்போது இன்றைய கட்டுரையாகவும் இதுவே இருக்கிறதே...ஏதேனும் தொழில்நுட்ப கோளாறா ..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி கார்கேயை தலைவராகத் தேர்ந்தெடுத்தது மிகச்சிறந்த முடிவு. 2024 மக்களவைத்தேர்தலில், பாஜகவை எதிர்க்க அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ள இக்காலகட்டத்தில், வயதில் மூத்தவரும், அரசியலில் முதிர்ச்சியும், நிர்வாகத்தில் நீண்ட அனுபவமும் உள்ள ஒருவரே பொருத்தமானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சவால்: கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துதலும், இளைஞர்களை ஈர்த்தலுமே! இப்பணியை, மேற்கொள்ள, ராகுல் காந்தி மற்றும். பிரியங்கா காந்தியுடன் மன ஒற்றுமையோடு இணைந்து செயல்படக்கூடிய ஒருவரே பொறுத்தமானவராக இருக்கமுடியும். இதன் அடிப்படையிலும் காங்கிரஸ் கட்சியினர் மிகப்பெரும்பான்மையாக கார்கேகைக்கு ஆதரவாக வாக்களித்ததைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல. கார்கேகைக்கு முன்னால் உள்ள சவால் மிகப்பெரிது. ராகுல் காந்தி அடிக்கடி சொல்வதுபோல இரண்டு இந்தியாவின், ஏழை மற்றும் நடுத்தர மக்களைக்கொண்ட மறுபகுதி மக்களை ஈர்க்கிற சக்தியும் காங்கிரஸுக்கு உண்டு என்பதை நிருபிக்க கார்கேவின் தேர்வு ஒரு வாய்ப்பெனக் கருதுவதில் தவறில்லை.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.