கட்டுரை, பேட்டி, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்

30 Nov 2022, 5:00 am
3

தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான ஆளுமைகள் சந்திப்புகளில் ஒன்று, திராவிட இயக்கத் தலைவர் பெரியாரும், சோஷலிஸ்ட் இயக்கத் தலைவர் லோகியாவுக்கும் இடையில் நிகழ்ந்தது ஆகும். தமிழகத்தில் திராவிடச் சிந்தனைக்கு வலுவான அடித்தளம் இட்டவர்; அண்ணா, கருணாநிதி என்று அடுத்தடுத்த பெரும் தளகர்த்தர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் பெரியார் என்றால், உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோருக்கு முன்னோடியாக இருந்தவர் லோகியா. காங்கிரஸுக்கு 1970களில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்த ஜனதா கட்சியின் சித்தாந்தத்துக்கு லோகியாவின் கருத்துகள் அடியுரமாக இருந்தன.

1958 ஜனவரி 23இல் நடந்த இந்தச் சந்திப்பின்போது, பெரியார் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருந்தார். பிராமணர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குமாறு தன்னுடைய ஆதரவாளர்களைத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆறு மாதம் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காலம் அது; பெரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பெரியாரை லோகியா சந்தித்ததன் முக்கியமான நோக்கம், பெரியாருடைய சில கொள்கைகளிலிருந்து அவரைத் திருப்புவதே என்பது இந்த உரையாடலில் தெரிகிறது. பெரியார் மென்மையான தொனியில் தன்னுடைய மைய நோக்கம் என்ன என்பதைத் தெரிவிக்கிறார். இரு தனிநபர்கள் அல்லது தலைவர்கள் இடையிலானதாக அல்லாமல் வடக்கு - தெற்கு இடையிலான உரையாடலாகவும் இது வெளிப்படுகிறது. எப்படியும் விரிவாகத் தொடர்ந்திருக்க வேண்டிய நல்ல உரையாடல் இது.

இந்தச் சந்திப்பு தொடர்பான கட்டுரை ‘சௌகம்பா’ இந்தி பத்திரிகையில் வெளியானது. பெரியார் தமிழில் பேச, லோகியா இந்தியில் பேசியிருக்கிறார். ஜி.முராரி இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். ஆங்கிலம் வழி அந்த உரையாடலை இங்கே ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்குத் தருகிறது.

நாயக்கர்: எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது, இந்தி சுத்தமாகத் தெரியாது.

லோகியா: நீங்கள் தமிழில் பேசுங்கள், நான் இந்தியில் பேசுகிறேன். நண்பர் ஜி.முராரி மொழிபெயர்ப்பார்.

நாயக்கர்: மன்னிக்கணும், மன்னிக்கணும். ரொம்ப நல்லது.

லோகியா: நீண்ட காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கைகூடவில்லை. இந்த முறை நான் மதறாஸ் வந்ததே உங்களைப் பார்க்கத்தான்.

நாயக்கர்: உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீண்ட காலமாக என் நெஞ்சில் இருந்த பாரம் நீங்கியதைப்போல உணர்கிறேன்.

லோகியா: உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது?

நாயக்கர்: முன்பைவிட இப்போது பரவாயில்லை. லட்சியங்களுக்காக இப்படிச் சிறைத் தண்டனையை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

லோகியா: உங்களைப் போன்ற முதியவர்கள் இந்த வயதில் சிறையில் இருக்கக் கூடாது.

(நாட்டில் இப்போது சட்டம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று இருவரும் கருத்தொருமித்தனர். நீதியின் அடிப்படையில் அல்ல – மிகச் சிலரின் விருப்பு,  வெறுப்புகள் அடிப்படையில் சட்டம் வளைக்கப்படுகிறது என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்).

நாயக்கர்: வன்முறையில் ஈடுபடுமாறு என்னுடைய ஆதரவாளர்களை எப்போதுமே தூண்டியது இல்லை. “அமைதியான வழிமுறைகளில் பார்ப்பனீயம் களையப்படவில்லை என்றால், மக்கள் வன்முறையில் இறங்கினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை” என்றுதான் பேசினேன். திருச்சிராப்பள்ளி கூட்டத்தில் பேசிய பிரதமர் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்; எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், (பேசியதற்காக) அதிகபட்ச தண்டனை எனக்குத் தரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

லோகியா: உண்மைதான், உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. உங்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போதே இப்படிப் பேசியதற்காக, நேரு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கூடத் தொடுக்கலாம். உங்களைச் சந்திக்க நான் வந்த காரணங்களில் ஒன்று, பிரதமரின் இந்தப் பேச்சுக்கு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கானது; இந்த விவகாரத்தில் வட இந்தியாவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் என்னைப் போலத்தான் நினைக்கிறார்களே தவிர நேருவைப் போல அல்ல. இந்த நாடு இப்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதி முறையை ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதும் அதற்காகப் போராடுவதும் நல்லது. சாதி முறை முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், இந்தப் போராட்டம் தனிப்பட்ட பிராமணர்களுக்கு எதிராக திருப்பிவிடப்படக் கூடாது.

நாயக்கர்: வன்முறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மை என்னவென்றால், மதறாஸ் பத்திரிகைகள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம் இருப்பதால் என் மீது களங்கம் சுமத்த விரும்புகிறார்கள். ‘கல்கி’ இதழில் வந்த ஒரு கட்டுரையே இதற்கு சாட்சி. ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி அதில் தவறாமல் எழுதுகிறார். நாயக்கருக்கு வழங்கிய தண்டனை போதவே போதாது என்று ‘கல்கி’ எழுதுகிறது; இந்த தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சென்னை மாகாண அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அது கோருகிறது.

லோகியா: வன்முறையைத் தூண்டுவதற்காக அப்படிப் பேசவில்லை என்று சொல்வது மட்டும் போதாது, தனிப்பட்ட பிராமணர்களுக்கு எதிராக யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது என்பதையும் (நீங்கள்) தெளிவாகச் சொல்ல வேண்டும்.

நாயக்கர்: வன்முறை என்பது இரு தரப்பையுமே – பிராமணர்களையும் என்னுடைய கட்சியையும் - அழித்துவிடும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி எதுவும் நடக்காது.

லோகியா: சாதி ஒழிய வேண்டும் என்ற போராட்டத்தில் உங்களுடன் இருக்கிறேன், இதற்காக உங்களுடன் சிறை செல்லவும் தயார். பெயர்ப் பலகைகளிலிருந்து சாதிப் பெயர்களை ஒழிக்க இயக்கம் தொடங்கினால் வரவேற்பேன். உங்களுடைய கோரிக்கைகளில் சிலவற்றை நீங்கள் கைவிட்டால்தான் (நான் உங்களோடு போராட வருவது) சாத்தியம்.

  1. வட இந்தியர்களுக்கு எதிரான உங்களுடைய எதிர்ப்புணர்வைக் கைவிட வேண்டும், தனி ‘திராவிட நாடு’ (திராவிடஸ்தான்) கோரிக்கையைக் கைவிட வேண்டும்.
  2. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
  3. காந்திஜியின் உருவப்படங்களை எரிப்பதை நிறுத்த வேண்டும்.
  4. தனிப்பட்ட பிராமணர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும்.

காந்திஜி இந்த நாட்டின் அடையாளம். அவருடைய உருவப்படங்களை எரிக்கக் கூடாது. பொதுவாகவே எவருடைய உருவப்படங்களையும் எரிக்கக் கூடாது என்பது என் கொள்கை. நேருவின் உருவப்படங்களை எரித்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டேன்;  காரணம், அவர் இந்த நாட்டின் அடையாளம் அல்ல. அரசமைப்புச் சட்டப்படி - அதை எரிப்பது முறையற்ற செயல், ஆனால் அதையும் நான் சகித்துக்கொள்வேன்; காரணம், அரசாங்கமே அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தையும் வரம்பையும் மீறுகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

சமஸ் 24 Dec 2017

நாயக்கர்: இவையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடவடிக்கைகள் அல்ல. என்னுடைய முக்கியமான போராட்டம் சாதி அமைப்பு முறைக்கு எதிராகத்தான். மீண்டும் கூறுகிறேன், பிராமணர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் வன்முறையில் இறங்குமாறு என்னுடைய ஆதரவாளர்களை எப்போதுமே தூண்டியது இல்லை. எங்களுடைய கட்சிப் பத்திரிகையான ‘விடுதலை’ கடந்த பத்தாண்டுகளில் வன்முறையை ஆதரித்ததே கிடையாது.

லோகியா: முக்கியத்துவம் இல்லாத இவற்றையெல்லாம் கைவிடுவது குறித்துப் பரிசீலியுங்கள்.

(சிறையிலிருந்து நாயக்கர் விடுதலையானதும் இருவரும் மீண்டும் சந்தித்துப் பேச வேண்டும், இடைப்பட்ட காலத்தில் இவற்றைப்பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொள்கின்றனர். சிறைக் காவலில் இருப்பதால், லோகியாவை உபசரிக்க முடியாமல் போனதற்காக நாயக்கர் மிகவும் வருத்தம் தெரிவிக்கிறார்).

 

இதற்குப் பின் பத்திரிகையில் இதுகுறித்து லோகியா எழுதுகிறார்:

“திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைச் சந்தித்ததன் முக்கிய நோக்கமே, இந்திய ஒருமைப்பாட்டை ஏற்க வேண்டும் என்று அவரை வற்புறுத்தத்தான். அவருடைய மனம் மிகவும் காயப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன், இருந்தும் அவர் தன்னுடைய கசப்புணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

திராவிடர் கழகத்தின் தனிநாடு கோரிக்கைப் பிரச்சாரம் இதே வகையில் தொடர்ந்தால் அது அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று சுட்டிக்காட்டினேன்.

திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளை பிரதமர் கண்டித்துப் பேசிய விதம் எனக்கு கோபத்தை ஊட்டியது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாயக்கரை நேரில் சந்தித்து அவர் மனம் புண்பட்டிருப்பதை உணர்ந்துகொண்டதாகக் கூறி அவருக்கு ஆறுதல் கூறுவேன் என்று உத்தரப் பிரதேச மாநில சிறைத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன்.

நாயக்கரின் இரண்டு குணங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. நாயக்கர் எப்போதும் செயல்வீரர். அடுத்தது, அநியாயத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கருதும் அஞ்சா நெஞ்சர். அதேசமயம், அவருடைய போராட்ட வழிமுறைகளில் எனக்கு உடன்பாடே இல்லை.

திராவிடர் கழகம் தவறான செயல்களில் ஈடுபடுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அரசமைப்புச் சட்டத்தையும் தேசியக் கொடியையும் எரிப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. ஒருவர் அணிந்துள்ள பூணூலை வலுக்கட்டாயமாக கத்தரிப்பதும் கண்டிக்கப்பட வேண்டியதே. சாதி வேறுபாட்டுக்கு அடையாளங்களாக இருக்கும் பூணூல், குடுமி ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில் தயாரித்து, அவற்றை அழித்தால் பாராட்டலாம்.

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடே என்று கழகத் தலைவரிடத்தில் தெரிவித்தேன். வெறும் சாதி சீர்திருத்தப் பேச்சுகள் மட்டும் போதாது. இந்த லட்சியத்துக்காக சட்ட மறுப்பு போராட்டங்களில் ஈடுபடவும், பிரச்சாரத்துக்கு உடன் வரவும் தயார் என்று நாயக்கரிடம் உறுதி அளித்திருக்கிறேன். ஆனால், எந்த தனிநபருக்கும் எதிராக வன்முறையில் இறங்குவதைக் கைவிட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தனி நபருக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளை மீறும் செயல். 

பர்மியத் தலைவரான ஆங்சானிடம் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் சகோதரி குறித்து கேட்டபோது, அவர் சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன்: ‘நான் பர்மாவில் இருக்கிறேன், பர்மியர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள், அவர்கள் விசுவாசமாக இருந்தாலும் சரி - எதிர்த்துக் கிளர்ச்சி செய்தாலும் சரி. தவறுக்காக அவர்களைத் தண்டிப்பேன், இருந்தும் அவர்கள் என் குழந்தைகள்!’

நாமும் இதை உணர வேண்டும், பாரத அன்னை அனைவரையும் நேசிக்கிறாள் – புரட்சிக்காரர்கள் உள்பட. திராவிடர் கழகம் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்தால் காயப்பட்டுவிட்டதாக கருதும் உரிமை நாயக்கருக்கு இருக்கிறது. 

இந்தி மொழி எதிர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு, காந்திஜியின் உருவப்பட எரிப்பு, தனி திராவிட நாடு கோரிக்கை ஆகியவை குறித்து நாயக்கருடன் விவாதித்தேன். தன்னுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதற்காக தேசத்தைத் துண்டாக்கும் செயல் எதிலும் ஈடுபட்டுவிடக் கூடாது என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்க வேண்டும், திராவிடஸ்தான் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினேன். 

இனி வரும் நாள்களில் உங்களிடம் தமிழிலேயே பேசுவேன், நீங்களும் இந்தியிலேயே பதில் சொல்லும் காலம் வரும் என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். இந்த அணுகுமுறையை அவர் வெகுவாக வரவேற்றார். மகாத்மா காந்தி இன்றைக்கு ஒரு புனித அடையாளம், அவருடைய உருவப்படங்களை அவமதிக்கக் கூடாது என்ற என்னுடைய கருத்து சரியென்று ஒப்புக்கொண்டார்.

நாயக்கர் என்னிடம், ‘வன்முறையில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கவே இல்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் இதைச் சுட்டிக்காட்டி, பாராட்டினார். நான் பேசியது திரித்துக் கூறப்பட்டது. சாதி அடையாளங்களுக்கு எதிராகத்தான் நான் பேசினேன். தனிநபர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினால் இரு தரப்புக்குமே அது அழிவைத்தான் தரும்’ என்பதை உணர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஏற்பட்டதைப் போன்ற பிரிவினைச் சூழல் மீண்டும் ஏற்படுவதை அவரும் விரும்ப மாட்டார்.

என்னுடைய கருத்துகளுக்கு உடன்பாடாக நாயக்கரை மாற்றிவிட்டேன் என்று நான் கூற மாட்டேன். செயல்வீரரான அவரை நன்குப் புரிந்துகொள்ள இச்சந்திப்பு உதவியது. நாயக்கருடனான தொடர்பை மேலும் தொடரவும் அவரைப் போன்றவர்களின் சிந்தனையை மாற்றவும் என்னுடைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன். மொழி என்ற ஒரேயொரு பிரச்சினையில், இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகத் தயார் என்று தெற்கு பேசுவது எனக்கு மிகுந்த துயரத்தையே அளிக்கிறது! 

-லோகியா எழுதிய ‘சாதி முறை’ (1964) நூலிலிருந்து…

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

முலாயம் சிங் யாதவ்: ஒரு சகாப்தம்

வ.ரங்காசாரி 11 Oct 2022

இந்தச் சந்திப்பிலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து, ராம் மனோகர் லோகியா பிஹார் தலைநகர் பாட்னாவில், 1961 மார்ச் 31 – ஏப்ரல் 2 வரையிலான நாள்களில் ஒரு சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் இந்தியாவில் சாதி முறையை ஒழிக்க, பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினார். 

  1. சமபந்தி விருந்து: இந்திய மக்கள் அனைவரும் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து சமபந்தி விருந்து – குறிப்பாக கிராமங்களில் – நடத்த வேண்டும்.
  2. திருமணம்: சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்தால்தான் சாதிகள் ஒழியும். இந்தக் கருத்தைப் பிரசாரம் செய்ய விவாதங்கள், நாடகங்கள், கண்காட்சிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக அரசு மட்டும் குரல் கொடுத்தால் போதாது. சாதி மறுப்புத் திருமணம் என்றால் பிராமணர்கள் உள்ளிட்ட இருபிறப்பாளர்களும், பிராமணர்கள் அல்லாதவர்களும், சையதுகளும் ஜுலாஹாக்களும் இணை சேர வேண்டும். ஒரே சாதியின்  இருவேறு கிளைகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது சாதி மறுப்புத் திருமணம் ஆகாது.
  3. பெயர்களுக்குப் பின்னால் வரும் பின்னொட்டுகள் சாதிகளைக் குறிக்கும் சொற்களாக இல்லாதபடிக்கு புதிய முறைக்கு மாற வேண்டும். 
  4. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தப்பட்ட மக்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர, ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். சாதி வேறுபாடுகள் இந்தியச் சமூகத்தின் வலிமையையும் ஆற்றலையும் சிதறவும் கரைந்துபோகவும் வைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கூடாது, தகுதிக்கும் திறமைக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர். ஆனால், இத மாநாட்டில் பின்வரும் கோரிக்கை, தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது: ஆற்றல் மிக்கவர்களோ – இல்லையோ, மகளிர், பிராமணர் அல்லாதவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிவாசிகள், நெசவாளர்களாக இருக்கும் முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு 60% இடங்களை கல்வி – வேலைவாய்ப்பில் அரசு வழங்க வேண்டும்!”

-லோகியா எழுதிய ‘சாதி முறை’ நூலிலிருந்து…

 

தொடர்புடைய கட்டுரைகள்

பெரியாரை ஏன் வட இந்தியா வரித்துக்கொள்ளவில்லை?
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
முலாயம் சிங் யாதவ்: ஒரு சகாப்தம்
மீண்டும் தலையெடுக்குமா இந்திய சோஷலிஸ இயக்கம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

5

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

ஒரு சோசியலிசவாதிக்கே மொழி திணிப்பு தவறென்று புரியவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்ததன் முக்கிய காரணமே அவர்கள் வேற்று மொழிக்காரர்கள் என்பதால்தான். பின் மோடி, அமைத்து வகையறாக்களை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

ஏன் சார், நாயக்கர் என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டுமா?

Reply 3 0

Ganeshram Palanisamy   1 year ago

நமக்கு அது சாதிப்பெயர். ஆனால் வட இந்தியர்களுக்கு அது surname. ஒருவர் surnameஐ பயன்படுத்துவதாலேயே அவர் சாதிப்பற்று உள்ளவர் என்றோ அல்லது பயன்படுத்தாதவர் சாதிப்பற்று இல்லாதவர் என்று கூறமுடியாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிஹாரின் முகமாக தேஜஸ்விபாலியல் துன்புறுத்தல்அரசுகளுக்கிடையிலான கவுன்சில்சமஸ் வடலூர் அணையா அடுப்புபர்வேஸ் முஷாரப்அரசியல் விழிப்புணர்வுஅறிவியல் மாநாடுமூதாதையரைத் தேடி…நிதி மேலாண்மைபொதுப் பயண அட்டைமொழிபெயர்ப்புக் கலைதமிழகக் கல்வித் துறைஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறைமுறைக்கேடுகள்மீனாட்சி தேவராஜ் கட்டுரைப்ளூ சிட்டிமோடியின் காலம்வியூக அறிக்கைராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!ஜீவானந்தம் ஜெயமோகன்க்ளூட்டென்சமந்தா சைதன்யாகலைஜாதியும்ஸ்வாஹிலிஇந்திய மாடல்மக்கள்தொகை கொள்கைதமிழ்ச் சூழல்சமூக விலங்குபொதுவுடமை இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!