கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு
மீண்டும் தலையெடுக்குமா இந்திய சோஷலிஸ இயக்கம்?
முலாயம் சிங் யாதவின் மறைவு ஆழமான ஒரு கேள்வியை பொதுவெளியில் எழுப்பியிருக்க வேண்டும். நம்முடைய காலத்தில், இந்திய சோஷலிஸ மரபின் அவசியம்தான் என்ன? முலாயம் எரியூட்டப்பட்ட அக்டோபர் 11, சோஷலிஸ தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 120வது பிறந்த நாளாகும்; அதற்கும் முந்தைய நாள், முலாயமின் அரசியல் ஆசான் ராம்மனோகர் லோகியாவின் 55வது ஆண்டு நினைவு நாள்.
சோஷலிஸ அடையாளத்தை வரித்துக்கொண்டவர்
முலாயம் சிங்கின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ச்சியாக இருந்தது என்று ஒன்றைக் கூற விரும்பினால் அது சோஷலிஸ மரபுடன் அவர் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக்கொண்டதுதான்.
தன்னுடைய அரசியல் கட்சிக்கு சமாஜ்வாதி (சமத்துவவாதி) என்று பெயர் சூட்டினார், கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் புரட்சிக்கு அடையாளமான சிவப்பு நிறத் தொப்பியை அணிய வைத்தார். ஆங்கில ஆதிக்கத்தை இடைவிடாமல் எதிர்த்தார். ராம்மனோகர் லோகியாவின் பெயரைச் சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பார். வாழ்நாள் முழுவதும் சோஷலிஸ்டாகவே திகழ்ந்தார். முலாயமின் சோஷலிஸம் என்பது ‘வெளிவடிவம்’தானே தவிர, அது எப்போதும் ‘உள்ளடக்கம்’ ஆகப் பின்பற்றப்பட்டது இல்லை என்று அவருடைய பழைய சகாக்களில் சிலர் விமர்சிப்பார்கள். அதுவும் உண்மைதான். அதனால்தான் இந்திய சோஷலிஸ இயக்கம் ஏற்படுத்தி வைத்துள்ள மரபைப் பற்றி விவாதிப்பது அவசியமாகிறது.
சோஷலிஸம் யாருக்குத் தெரியும்?
இன்றைய இந்திய இளைஞர்களுக்கு சோஷலிஸ மரபு தொடர்பாக எதுவும் தெரிவதில்லை. அவர்கள் எல்லா நேரங்களிலும் இந்துத்துவத்தையே எதிர்கொண்டு வாழ்கின்றனர். தாராளர்கள், இடதுசாரிகள், நக்ஸல்பாரிகள், பெண்ணியர்கள், காந்தியர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் இவர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் அதிகம் கேள்விப்பட்டுள்ளனர். சோஷலிஸ்ட்டுகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று யாரிடமேனும் கேட்டுப் பாருங்கள், பதிலாக மௌனம்தான் கிட்டும்!
ஒரு சிலர், ‘கம்யூனிஸத்துக்கு இணையான வார்த்தை’ என்று சோஷலிஸத்தைக் கூறக்கூடும். படித்த இந்தியர்கள், சோஷலிஸ்ட் என்றாலே பெர்னி சான்டர்ஸைத்தான் நினைத்துக்கொள்வார்கள், நம் நாட்டிலேயே வாழ்ந்த – சோஷலிஸ சிந்தனையாளர்களான ராம்மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆசார்ய நரேந்திர தேவா, யூசுஃப் மெஹரலி, மது லிமாயே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிஷன் பட்நாயக் போன்றோரின் பெயர்கள் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்காது.
கம்யூனிஸம் வேறு - சோஷலிஸம் வேறு என்பதைத் தெரிந்துவைத்திருப்பவர்கள்கூட, இந்திய சோஷலிஸ இயக்கத்தின் தனித்துவம் என்ன என்பதை அறிந்திருப்பதில்லை.
உலகம் எங்கும் உள்ள ஜனநாயக சோஷலிஸ்ட்டுகளைப் போலவே இந்திய சோஷலிஸ்ட்டுகளும் முதலாளித்துவத்தின் அசமத்துவத்தையும் - கம்யூனிஸ்ட்டுகளின் சர்வாதிகாரத்தையும் எதிர்த்தனர். ஆனால், ஐரோப்பாவிலும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள ஜனநாயக சோஷலிஸ்ட்டுகளைப் போல அல்லாமல், இந்திய சோஷலிஸம் நீர்த்துப்போனது மட்டுமல்லாமல், இடதுசாரி கம்யூனிஸத்தின் ‘இளஞ்சிவப்பு’ நிறமாகவும் அது மாறிவிட்டது.
இந்திய சோஷலிஸத்தின் தனித்துவம்
இந்திய சோஷலிஸம் என்பது ஜனநாயக சோஷலிஸத்தின் இந்திய வார்ப்பு மட்டுமல்ல; அது தனித்துவமான அரசியல் சித்தாந்தம் – பொருளாதார சமத்துவம், சாதி – பால் அடிப்படையிலான சம நீதி, அரசியல் – பொருளாதார அதிகாரப் பரவல், காலனியாதிக்கக் கலாச்சாரத்திலிருந்து விடுபடல், வன்முறையற்ற போராட்டங்கள் ஆகியவற்றை லட்சியங்களாகக் கொண்டது. இந்திய சோஷலிஸம் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அரசியல் சிந்தனைகளை ஆதாரமாகக் கொண்டது.
கடந்துபோன சகாப்தத்தைச் சேர்ந்த, மறக்கப்பட்ட வரலாறை ஏன் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்? அரசியல்ரீதியாக வலுவற்றதும் துண்டு துண்டாகச் சிதறிவிட்டதுமான இந்த இயக்கம்தான் இன்றைய இந்திய அரசியலில் எதிர்ப்பு அரசியலுக்கு மிகவும் உதவக்கூடியது. நம்முடைய குடியரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சவாலுக்கு, சோஷலிஸ இயக்க மரபால்தான் மூன்று பெரிய ஆற்றல்களை வழங்க முடியும். நம்முடைய அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தின் மீதே தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து நிற்க விரும்புவோர், இந்த மூன்று பாடங்கள் மூலம் தவறுகளைத் திருத்திவிடலாம்.
உறுதியான தேசியம்
முதலாவது, இந்திய சோஷலிஸ்ட்டுகள் உறுதியான தேசியர்கள். அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடே இதுதான். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு சமயம் சேர்ந்தும் – மறு சமயம் விலகியும் செயல்பட்டுள்ளனர். சோஷலிஸ்ட்டுகளோ காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்தில் தங்களை உறுதியாக பிணைத்துக்கொண்டவர்கள். குறுகிய – துணை தேசிய சிந்தனைகள் அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை.
உலகம் எங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒலித்த முன்னணிக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் அதேசமயம், ஆக்கப்பூர்வமான – முற்போக்கான தேசியர்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அவர்களுடைய தேசியவாதக் கொள்கையானது தேச கட்டுமானம், வகுப்பு நல்லிணக்கம், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றையே வலியுறுத்தியது; அதேசமயம் 1962 போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணமான நேருவின் சீனக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கவும் சோஷலிஸ்ட்டுகள் தயங்கவில்லை. இன்றைக்கு பாஜக – ஆர்எஸ்எஸ் இணைந்து பேரினவாத அரசியல் கொள்கையை நியாயப்படுத்த தாங்களாகவே கற்பித்துக்கொண்ட ‘உள்நாட்டு – வெளிநாட்டு எதிரி’களுக்கு எதிராக எழுப்பும் தேசிய உணர்வைக் கண்டிக்க முடியாமல், கருத்துச் சுதந்திரர்களும் இடதுசாரிகளும் பொறியில் சிக்கிய நிலையில் திகைக்கின்றனர்.
பாஜகவின் ஆவேசமான தேசிய வாதங்களை, எந்தக் காலத்திலும் பலன் தராத சர்வதேச கண்ணோட்ட அடிப்படையிலான எதிர்வாதத்தால் முறியடிக்க முடியாது. இன்றைக்குக் கடைப்பிடிக்கப்படும் போலியான – மதவாதத்தை அடிநாதமாகக் கொண்ட தேசியவாதத்துக்கு சோஷலிஸ்ட்டுகளின் ஆக்கப்பூர்வமான தேசியவாதமே மாற்று மருந்தாக எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றது.
இதற்கு நெருங்கிய தொடர்புள்ளதுதான் பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் கலாச்சாரம் தொடர்பான அரசியலும், சுயமரியாதை தொடர்பான பேச்சுகளும். இந்தியாவின் தொல் நாகரிகம் குறித்துப் பெருமைபடப் பேசி – அதற்குச் சொந்தமும் கொண்டாடுகிறது பாஜக – ஆர்எஸ்எஸ். கடந்த காலத்தில் காலனி நாடாக இருந்த இழிவை எல்லாத் துறைகளிலிருந்தும் துடைத்தெறிய வேண்டும் என்று இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. காலனி ஆட்சியாளர்களுடைய ஆட்சி வரம்பை, அப்படியே முகலாய மன்னர்கள் காலத்துக்கும் நயவஞ்சகமாக முன் தள்ளுகிறது. ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதால் பெரும்பாலான இந்தியர்களை அது ஈர்க்கிறது.
பாஜகவை விமர்சிப்பவர்கள், இவையெல்லாம் வெற்றுத் தோரணைகள், சாதாரணமான அடையாளக் குறியீடுகள், மகோன்னதம் என்று பாஜக பாராட்டும் வரலாறுகள் போலியானவை என்று சுட்டிக்காட்டுகின்றனர். அதேசமயம், கலாச்சாரரீதியாக சுயமரியாதைக்குரிய காலம் என்று பாஜக கூறுவதற்கு மாற்றான எது ஒன்றையும் கூற அவர்களால் முடியவில்லை. ஆங்கில ஆட்சியை ஆதரித்து அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் – காலனியாக இருந்ததில் பெருமை கொள்வோரின் வாதங்களாக அல்ல என்றாலும் மேட்டுக்குடிகளின் வாதங்களாகவே வெகுஜன மக்களால் பார்க்கப்படுகின்றன.
இந்திய சோஷலிஸ்ட்டுகளால் தனித்துவம் மிக்க இந்திய கலாச்சாரப் பாரம்பரியம் குறித்த பதிலை அளிக்க முடியும். ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அதேவேளையில் – இந்தியின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்காமல் - அவர்கள் முன்வைக்கக்கூடிய விமர்சனம், பாஜகவின் கலாச்சாரம் தொடர்பான அரசியலுக்கு சரியான பதிலாக இருக்கும். மதங்கள் மீது சோஷலிஸ்ட்டுகள் கொண்டுள்ள பரிவு – நாத்திகர்களின் மூர்க்கமான மறுதலிப்பாக இல்லாமல் – சாதாரணமான இந்தியர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
மூன்றாவது ஆற்றல், சோஷலிஸ்டுகள் அளிக்கக்கூடிய சமூகநீதி அடிப்படையிலான சமத்துவ அரசியல் கொள்கைகளாகும். சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான தீர்வுகளை அளிக்கவல்லது அவர்களுடைய சமத்துவ அரசியல் கொள்கைகள்.
இந்தியச் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளின் அளவும் – அது விரிவடையும் திசையும் பெரிதாக இருப்பதற்குக் காரணம் சாதிகள் அடிப்படையிலான பிரிவுகளும் அசமத்துவமும்தான் என்று முதலில் அடையாளம் கண்டவர்கள் இந்திய சோஷலிஸ்ட்டுகள்தான். பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் மேம்பட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று முதலில் கோரியவர்களும் சோஷலிஸ்ட்டுகள்தான். (பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர் என்று எல்லோரும் அடக்கம்).
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கப்பட மூல விசையாகச் செயல்பட்டவை சோஷலிஸ்ட் கட்சிகள்தான். இப்போதைய தாக்குதல்களை எதிர்த்து நிற்க, பட்டியல் இனத்தவர் – சாமானிய மக்களின் கூட்டு அவசியம். அதற்கு வழிசெய்யக் கூடியது சோஷலிஸ்ட்டுகளின் அரசியல் மரபே. வாய்ப்பு மறுக்கப்பட்ட இந்திய சமூகத்தவர் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயல்பட கருத்தியல்ரீதியாகவும் அரசியல் அளவிலும் தளமாகச் செயல்பட சோஷலிஸ்ட் இயக்கத்தால் முடியும்.
இந்த மரபுக்குத் தொடர்ச்சி இருக்குமா?
சோஷலிஸ இயக்கத்தால் இப்படி முக்கியமான ஒருங்கிணைப்புப் பணியை ஆற்ற முடியும் என்ற நிலையில், இந்த இயக்கத்துக்குச் சொந்தக்காரர்கள் வரலாற்றில் இடம்பெறக்கூடிய அத்தகைய கடமையை மேற்கொள்வார்களா? சுதந்திர இந்தியாவில் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார ஆட்சியையும் எதிர்த்த மகோன்னதமான வரலாறு சோஷலிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. சோஷலிஸ இயக்கம் உச்சபட்சப் புகழ் பெற்றிருந்தபோது, ஆட்சியாளர்கள் என்ற அதிகார பீடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. எனவே ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பது காங்கிரஸ் எதிர்ப்புணர்வாகவே மாறியது.
இதனாலேயே அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஏனைய சோஷலிஸ்ட்டுகளைப் போலவே முலாயம் சிங்கும் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே பெரும்பாலும் திகழ்ந்தார். சோஷலிஸ மரபுக்குச் சொந்தக்காரர்களான இன்றைய சோஷலிஸ்ட்டுகள், தங்களுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டின் அடித்தளங்களைச் சிதைக்கவும், அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயக உரிமைகளை ஒடுக்கவும் ஆட்சியில் இருக்கும் பாஜக முற்படும் இந்த வேளையில், இந்திய சோஷலிஸ இயக்கம் புதிய பங்கினை ஆற்ற - புதிய பிறவி எடுக்க வேண்டும்!
தமிழில்: வ.ரங்காசாரி
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
R.Sisubalan 2 years ago
சோசலிஸ்ட் இயக்கம் முதலாளித்துவ அரசியலுக்குள் இரண்டறக் கலந்து விட்ட கதை கட்டுரையாளரின் கண்ணுக்கு புலப்படவில்லை போலும்...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.