கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

சாமானியர்களின் நண்பர் மது தண்டவடே

ராமச்சந்திர குஹா
19 Jan 2024, 5:00 am
0

ந்தியாவில் சோஷலிஸ்ட் இயக்கம், கடைசி கட்டத்தில் இருக்கிறது. முன்னர் ஒருகாலத்தில் இந்தியச் சமூகத்தின் மீதும் அரசியல் மீதும் அது மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தியது. இப்போதுள்ள தலைமுறையில் மிகச் சிலருக்குத்தான் அதன் கடந்த கால முக்கியத்துவமும் செயலாற்றல் திறனும் பற்றித் தெரிந்திருக்கிறது.

காங்கிரஸ், ஜனசங்கம் – பாஜகவினர், கம்யூனிஸ்ட்டுகள், மாநிலக் கட்சிகள், அம்பேத்கரியர்கள் என்று அனைவருமே அவரவர்களுக்கென்று புத்தகங்களை எழுதி வெளியிட வரலாற்றாசிரியர்களையும், உற்சாக ஊக்குநர்களையும் வைத்திருக்கின்றனர்; அவர்கள் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைவழிப் பாரம்பரியத்தை அடையாளம் காண்பதுடன், இயக்கத் தலைவர்கள் தொடர்பான வரலாற்று நூல்களையும் படைக்கின்றனர்.

பல சமயங்களில் அவை அவர்களுடைய தலைவர்களின் புகழைப் பாடும் காப்பியம் போன்றும் மாறிவிடுகின்றன. இந்திய சோஷலிஸ்ட் இயக்கத் தலைவர்கள் குறித்து அப்படி ஒரு நூலும் இந்திய வரலாற்றாசிரியர்களால் இதுவரை எழுதப்படவில்லை.

யார் இந்த தண்டவடே?

சோஷலிஸ்ட் தலைவர்கள் குறித்து நூல் எழுதுவதற்கு இதுவே தக்க தருணம் என்று எண்ணுகிறேன். காரணம், அதன் தலைவர்களில் ஒருவரான மது தண்டவடேவின் பிறந்த நாள் நூற்றாண்டு இது; 1923 ஜனவரி 21இல் பிறந்தார் மது தண்டவடே.

மும்பையில் மாணவராக இருந்த காலத்தில் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’ (சிஎஸ்பி) கொள்கைகளாலும், அதன் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, யூசுஃப் மெஹ்ராலி போன்றோரின் ஆளுமைகளாலும் அவர் ஈர்க்கப்பட்டார்.

பொருளாதார நீதியை வழங்குவதிலும் மகளிருக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் காங்கிரஸ் கட்சி தாராளமாக நடந்துகொள்ளாமல் கட்டுப்பெட்டியாகவே இருப்பதாக சிஎஸ்பி நினைத்தது. அதேவேளையில், சோவியத் ஒன்றியத்தின் தாசனாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் அது விலகியே இருந்தது. 1942இல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிர்கொண்ட விதத்தில், சோஷலிஸ்ட் – கம்யூனிஸ்ட் இடையிலான பிளவு அப்பட்டமாக வெளிப்பட்டது. சோஷலிஸ்டுகள் அந்த இயக்கத்தை ஆதரித்தபோது கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சித்தாந்த அடிப்படையில், கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து சோஷலிஸ்ட்டுகள் மூன்று முக்கிய அம்சங்களில் வித்தியாசமானவர்கள்.

முதலாவது, கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் ரஷ்யாவைும் பூஜித்தனர், ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி – ரஷ்யா ஒரு சர்வாதிகார நாடு என்று சோஷலிஸ்ட்டுகள் சரியாகவே அடையாளம் கண்டனர்.

இரண்டாவது, கம்யூனிஸ்ட்டுகள் வன்செயல்களை நியாயமான வழிமுறையாகவே அப்போது கொண்டாடினர், அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அகிம்சையே சரியான வழிமுறை என்று சோஷலிஸ்ட்டுகள் வலியுறுத்தினர்.

மூன்றாவது, நாட்டின் பொருளாதார – அரசியல் அதிகாரங்கள் மையமான ஓர் அரசிடமே இருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் நம்பினர், இது இரண்டுமே பரவலாக்கப்பட வேண்டும் என்று சோஷலிஸ்ட்டுகள் வாதிட்டனர்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்

30 Nov 2022

சோஷலிஸ்டுகளும் காந்தியும்

கம்யூனிஸ்டுகளிடமிருந்து தனித்து விளங்கிய சோஷலிஸ்டுகள், மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டவர்கள். ‘மார்க்ஸும் காந்தியும்’ என்ற தன்னுடைய நூலில் தண்டவடே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். “வன்முறைகளுக்கு காந்தி தெரிவித்த எதிர்ப்பானது, மனித உயிரை அவர் எப்படி மதித்தார் என்பதிலிருந்து உருவானது; ஆட்சி நிர்வாக அமைப்பின் முட்டாள்தனங்களுக்கு, அந்த அமைப்பின் உறுப்பாகச் செயல்படும் தனி நபர்களைத் தாக்குவதும் அழிப்பதும் கூடாது” என்றே காந்தி வலியுறுத்தினார்.

வன்முறைகள் நிரம்பிய புரட்சிகளில் மக்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவதில்லை என்பதை காந்தி தன்னுடைய அனுபவத்திலிருந்தே தெரிந்து வைத்திருந்தார். மக்களில் மிகச் சிலர்தான் இப்படி ஆயுதமேந்தி புரட்சி செய்கின்றனர், அவர்களிலும் மிகச் சிலர்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுடைய பெயரால் சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றனர் என்பதை காந்தி உணர்ந்திருக்கிறார் என்று எழுதியிருக்கிறார் தண்டவடே.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து விலகிய சோஷலிஸ்ட்டுகள் தங்களுக்கென்று தனிக் கட்சியைத் தொடங்கினர். அடுத்து வந்த ஆண்டுகளில் இந்தக் கட்சி உடைவதும் பிறகு மீண்டும் இணைவதுமாகத் தொடர்ந்தது. பிரிந்திருந்தாலும் – சேர்ந்திருந்தாலும், ஆட்சியில் இருந்தாலும் – ஆட்சியிலிருந்து வெளியேறியிருந்தாலும், ஒன்றிய அரசில் பங்கேற்றபோதும் – மாநில அரசுகளில் இடம்பெற்றபோதும் 1950கள், 1960கள், 1970களில் மக்களுக்கு நன்மை தரும் கருத்துகளைச் செறிவாகத் தெரிவித்து அரசியல் விவாதங்களைத் தரமாக நடத்த உதவினர் சோஷலிஸ்ட்டுகள்.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

சோஷலிஸ்டுகளின் பங்களிப்பு

ராம் மனோகர் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் நாடு முழுவதும் மதிக்கப்பட்டனர். ஆண் – பெண் சமத்துவத்தை சோஷலிஸ்ட்டுகள் பெரிதும் ஆதரித்தனர். காங்கிரஸ், ஜனசங்கம், கம்யூனிஸ்ட்டுகளைவிட அக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் மிகச் சிறந்த பெண் தலைவர்களை உருவாக்கியதில் சோஷலிஸ்ட் கட்சிகள் சிறந்து விளங்கின. கமலாதேவி சட்டோபாத்யாய, மிருணாள் கோர், மது தண்டவடேவின் மனைவி பிரமிளா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கலாச்சாரத் துறையிலும் சோஷலிஸ்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர், நாடகத் தயாரிப்புகளிலும் இசையிலும் பங்களிப்புகளைச் செய்தனர், மக்களுடைய உரிமைகளைக் காக்கும் இயக்கங்களிலும் சுற்றுச்சூழல் காக்கும் போராட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

தான் மிகவும் மதித்த ஜெயப்பிரகாஷ் நாராயணைப் போலவே மது தண்டவடேயும் நேர்மையாளர், நெஞ்சுரம் மிக்கவர். லோகியாவைப் போல நன்கு கற்றவர். பேராசிரியர் என்.ஜி.கோரே, எஸ்.எம்.ஜோஷி, சானே குருஜி போன்றவர்களைப் போலவே மகாராஷ்டிரத்தின் மீதான பாசத்தையும் தேசத்தின் மீதான பற்றையும் நன்கு பிணைத்தவர். மற்ற சோஷலிஸ்ட்டுகளிடமிருந்தும் தண்டவடே தனித்து விளங்க இன்னொரு முக்கியக் காரணம், கோடிக்கணக்கான சாமானியர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பங்களிப்பை ஒன்றிய அரசின் அமைச்சர் பொறுப்பில் அவர் நிறைவேற்றியதுதான்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கட்சித்தாவலைத் தடுக்க என்ன வழி?

யோகேந்திர யாதவ் 12 Jul 2022

மக்களுக்கான மந்திரி

மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில், ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற மது தண்டவடே குறுகிய அந்த இரண்டாண்டு காலத்துக்குள் ரயில்வேயின் சேவையை மக்களுக்கு நன்மைகள் தரும் வகையில் வெகுவாக விரிவுபடுத்தினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பகல் நேர விரைவு ரயில்களை அறிமுகப்படுத்தினார் தண்டவடே. ரயில் நிர்வாகத்தில் கணினிப் பயன்பாட்டைப் புகுத்தினார். இரண்டாவது வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணிகளின் இருக்கைகளில் மெல்லிய ரப்பர் மெத்தையை முதுகுக்குப் பொருத்துவதைக் கட்டாயமாக்கி, கோடிக்கணக்கான பயணிகளின் முதுகுவலியைப் போக்கினார். அவர் அறிமுகப்படுத்திய இந்த மனிதாபிமான மாற்றம் வளர்ந்து, நூறு கோடிக்கும் மேற்பட்ட ரயில் பயணிகளுக்கு இன்றளவும் பயன்படுகிறது.

வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இருக்கைகளால் ஆன முதல் ரயிலை 1977 டிசம்பர் 26இல் தொடங்கி வைத்தார். பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்குச் சென்ற அந்த ரயிலுக்கு ‘கிழக்கு எக்ஸ்பிரஸ்’ என்று பெயரைச் சூட்ட ரயில்வே வாரியம் விரும்பியது. ‘கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்’ என்று அதன் பெயரை மாற்றி, ரயில் பெட்டிக்குள் ரவீந்திரநாத் தாகூரின் புகைப்படத்தை மாட்டச் சொன்னார் தண்டவடே. தாகூரின் கவிதைத் தொகுப்புக்கு கீதாஞ்சலி என்று பெயர்.

கண்டுகொள்ளப்படாத சோஷலிஸ்டுகள்

இந்தியாவுக்கு இதுவரையில் வாய்த்த ரயில்வே அமைச்சர்களில் மிகச் சிறந்த நிர்வாகி தண்டவடே. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட, தான் வகித்த ரயில்வே துறையை மிகச் சிறப்பாகக் கையாண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களை நாட்டுடன் இணைத்த உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேல் (1947-1950), பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்த வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் (1964-1967), அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நிதியமைச்சர் மன்மோகன் சிங் (1991-1996) ஆகியோர் வரிசையில் இடம்பெறத்தக்கவர் தண்டவடே.

பிற்கால ஜனதா அரசில் 1990இல் நிதியமைச்சராகப் பதவி வகித்த தண்டவடே, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் ஆபத்துகளைக் குறித்து அப்போதே எச்சரித்திருக்கிறார். “சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் அபாயங்களை நம்மால் இனி புறக்கணிக்க முடியாது… மக்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான காற்று, நீர் மிகவும் அவசியம், அவையே வளர்ச்சிக்கும் அடிப்படை. ஊரக வளர்ச்சிக்கும் அதிகாரப் பரவலுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும்; வளர்ச்சித் திட்டங்களில் சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகளுக்கும் இனி இடம் வேண்டும்!”

சமகாலத்துக்குப் பொருத்தமான, எதிர்வினைகளை உருவாக்கவல்ல ஒரு மேற்கோளை தண்டவடே வாழ்க்கையிலிருந்தே காட்ட விரும்புகிறேன். தன்னுடைய எண்பதாவது வயதில் நினைவுக் குறிப்புகளை நூலாக்கியபோது, 2005 ஜூலை 1இல் எழுதிய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். “1984இல் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, அதற்குப் பிறகு நடந்த தீயிடல் சம்பவங்கள், குஜராத்தில் நிகழ்ந்துள்ள கொலைகள் – சூறையாடல்கள், சமீபத்திய வகுப்புக் கலவர படுகொலைகள் அனைத்துமே மதச்சார்பின்மைக்குப் பெரிய அடியாகும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மிகுந்த அக்கறையோடு வளர்க்கப்பட்ட மத சகிப்புத்தன்மை இப்போது பலமாக அடிபட்டு குற்றுயிரும் குலையுருமாகிவிட்டது. இந்த சாம்பலிலிருந்து ஒரு நாள் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான உத்வேகம் ஏற்படும் என்று நம்புகிறேன். உணர்ச்சி வேகத்தில் செயல்களைச் செய்வது தாற்காலிகமானது – இரக்கத்தோடு செயல்களைச் செய்வது நிலைத்து நிற்பது!”

இந்துத்துவம் மேலாதிக்கம் செய்யும் இந்தத் தருணத்தில் இரக்கம், தோழமை உணர்வு மிக்கவர்கள் தண்டவடேவின் இந்த நல்ல நம்பிக்கை உண்மைதான் என்பதை நிரூபிக்கக் கடுமையாக பாடுபட வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர்கள் ஆகியோருக்கு வரலாறுகளை எழுதும் அறிஞர்கள், சோஷலிஸ்டுகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதை கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு இருக்கக்கூடிய ஒரு காரணம், சோஷலிஸ்டுகளின் அண்மைக்கால வரலாறு அவ்வளவு சிறப்பாக இல்லை!

வரலாற்றுப் பதிவு அவசியம்

சோஷலிஸ்டுகளில் ஒரு பிரிவு இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்க்கும்போது, இன்னொரு பிரிவு அவர்களுடன் தோழர்களாக ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்கின்றனர்; இந்துத்துவத்தை எதிர்க்கும் சோஷலிஸ்ட்டுகளும், அப்பா – மகன் – மகள் என்று பரம்பரையாக ஆட்சி நடத்தும் குடும்ப அரசியலுக்கும் ஆலவட்டம் சுற்றுகின்றனர்.

இந்த உண்மைகள் கசப்பாக இருந்தாலும், நாடு சுதந்திரம் அடைவதற்குப் பத்தாண்டுகள் முன்பும் அதற்குப் பிறகு சுமார் முப்பதாண்டுகளும் இந்திய சோஷலிஸ்ட்டுகள் தங்களுடைய அறிவார்ந்த தலைமையாலும் தனிப்பட்ட நெஞ்சுரம் காரணமாகவும் இந்திய சமுதாய வளத்துக்கு மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

இந்திய சோஷலிஸ்ட் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, பொது வாழ்க்கைக்கு அது அளித்த பங்களிப்பு, அதன் சரிவு, வீழ்ச்சி என்று அனைத்துமே வரலாறாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். சில தனிப்பட்ட சோஷலிஸ்ட் தலைவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர்பாக நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தெரிகின்றன. ஜார்ஜ் பெர்னாண்டஸின் சுவையான வாழ்க்கை சம்பவங்களைக் கொண்ட நூலை ராகுல் ராமானுஜம் 2022இல் கொண்டுவந்தார். கமலா தேவி சட்டோபாத்யாய பற்றி நிகோ ஸ்லேட் எழுதியுள்ள புத்தகம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்து அக்ஷய முகுல் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு நூல் எழுதிவருகிறார். திறமையும் ஆர்வமும் உள்ள பிற வரலாற்றாசிரியர்கள் இவற்றால் ஊக்கம் பெற்று, மது தண்டவடே பற்றியும் அல்லது அவருடன் மனைவி பிரமிளாவையும் சேர்த்து இரட்டையரின் வாழ்க்கை வரலாறாகவும் எழுத முன்வருவர் என்று எதிர்பார்க்கிறேன்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்
கட்சித்தாவலைத் தடுக்க என்ன வழி?
மீண்டும் தலையெடுக்குமா இந்திய சோஷலிஸ இயக்கம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

6


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கூகுள் ப்ளேஸ்டார்இரண்டாம்தர மாநிலம்ஊடகர் வினோத் துவாபயிற்சி மையங்கள்அஸ்ஸாம் துப்பாக்கி சூடு75வது சுதந்திர தினம்மக்களின் மனவெளிதலித் அரசியலின் எதிர்காலம்நீலம் புயல்வாசகர் கடிதம்காஷ்மீர் அரசியல்வந்தே பாரத் ரயில்பிரெக்ஸிட்தமிழ் உரையாடல் ஒரு பயணம்இந்திரா காந்திநமஸ்தே ராஜஸ்தான்அரசு நிறுவனங்கள்திசு ஆய்வுப் பரிசோதனைசண்முகநாதன் பேட்டி அர்த்தம்தொழிற்சங்கங்கள்பிளாக்செயின்செங்கோல் ‘கதை’யை வாசித்தல்நம்மை ஆள்வது பெரும்பான்மையா? சிறுபான்மையா?அரவிந்த் பனகாரியாகலைஞர் மு கருணாநிதிதேர்தல் நிதிசமஸ் கட்டுரைகள்வரி வசூல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!