கலை, மொழிபெயர்ப்பு, இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

இப்படிச் சொன்னால்தான் புரியுமா?

சாரு நிவேதிதா
03 Oct 2021, 5:00 am
0

தன்னுடைய தளத்தில், ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியான கார்வரின் கதை தொடர்பில் ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தார் சாரு நிவேதிதா. அதற்கு ஜி.குப்புசாமி ஒரு எதிர்வினையை எழுதியிருந்தார். அதற்குத் தன்னுடைய தளத்தில் எதிர்வினை ஆற்றியிருந்தார் சாரு. ‘அருஞ்சொல்’ தொடர்பில் முன்வைக்கப்படும் ஆளுமைகளின் குறிப்புகள், விமர்சனங்கள் எதுவாயினும் அவற்றில் முக்கியமானவற்றை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக சாருவின் இரு பதிவுகளையும் வெளியிடுகிறோம்.

ரேமண்ட் கார்வர் கதை பற்றி…

ன்று மாலை அராத்து போன் செய்து, ‘ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர் என்ற சிறுகதையைப் படித்தேன்’ என்றார். ‘அருஞ்சொல்’ இதழில் வந்திருந்ததை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  அதனால் படித்ததாகச் சொன்னார்.  நான் அந்தக் கதையை குப்புசாமியின் தேர்வுக்காகவும் அவரது மொழிபெயர்ப்புக்காகவும் அருஞ்சொல் இதழுக்காகவும் மட்டுமே பகிர்ந்திருந்தேன்.  நான் படிக்கவில்லை.  படிக்கவும் நேரம் இல்லை.  அதோடு ரேமண்ட் கார்வர்பற்றி அதிகம் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  உலக அளவில் மிகவும் பிரபலமானவர்.  நான் அவருடைய ஒரு கதையைக்கூடப் படித்ததில்லை.  இன்று அராத்து பேசியபோது, கதையின் முடிவில் ஒரு குழப்பம் இருப்பதாகவும் அது மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த குழப்பம்போல் தெரிவதாகவும் சொன்னார்.  மொழிபெயர்ப்பில் குழப்பம் என்றால் மொழியில் இல்லை; கதையில் ஏதோ பிசகு நடந்திருப்பதுபோல் தெரிவதாக.  அச்சுப் பிழையா, வேறு ஏதாவது கதை இதில் சேர்ந்துவிட்டதா, என்னவென்று புரியவில்லை என்றார்.

அதன் காரணமாக, ஔரங்கசீப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் படித்தேன்.  கடைசிப் பத்தியில் பெரும் குழப்பமாகத்தான் இருந்தது.  சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு கடைசி வாக்கியம் இருந்தது.  உடனே என்னிடம் இருந்த ரேமண்ட் கார்வரின் புத்தகத்தில் கதையின் மூலத்தைப் படித்தேன்.  அதில் இருந்தது இவ்வளவுதான்.  அது சரியான முடிவாகவும் இருந்தது.

B A C K home, Stuart sits at the table with a drink of whiskey in front of him. For a crazy instant I think something’s happened to Dean.

“Where is he?” I say. “Where is Dean?”

“Outside,” my husband says.

He drains his glass and stands up. He says, “I think I know what you need.”

He reaches an arm around my waist and with his other hand he begins to unbutton my jacket and then he goes on to the buttons of my blouse.

“First things first,” he says.

He says something else. But I don’t need to listen. I can’t hear a thing with so much water going.

“That’s right,” I say, finishing the buttons myself, “Before Dean comes. Hurry?”

டீன் என்பது ஸ்டூவர்ட் மற்றும் க்ளேர் தம்பதியின் குழந்தை.  மூலத்தில் கதை இதோடு முடிகிறது.  ஆனால், குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் ஒரு அத்தியாயமே புதிதாக இருக்கிறது.  கடைசி அத்தியாயம்.  அதிலும் குப்புசாமியின் கடைசி வாக்கியம் கதைக்குப் பொருந்தவே இல்லை. 

“அவர் வேறு ஏதோ சொல்கிறார். கேட்டுக்கொண்டே மெதுவாகத் தலையசைக்கிறேன். தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்தவுடன், ‘கடவுளே அவள் ஒரு குழந்தை, ஸ்டூவர்ட்’ என்கிறேன்.”

இங்கே ‘அவள்’ என்பது யார்?  ஏன் இந்த அத்தியாயமே என் புத்தகத்தில் இல்லை?  அது மட்டும் அல்ல.  இணையத்தில் கிடைக்கும் இதே கதையில் என்னிடம் உள்ள மூல நூலில் இருப்பதுபோல்தான் உள்ளது.  குப்புசாமியின் கடைசி அத்தியாயம் இணையத்திலும் காணவில்லை.  புதிராக உள்ளது.  இரண்டு இணைப்பையும் தருகிறேன்.

அருஞ்சொல்லில் வந்த குப்புசாமி மொழிபெயர்ப்பு:

வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்

இணையத்தில் கிடைக்கும் மூலக் கதை

என்னிடம் உள்ள புத்தகத்திலும் கதையின் இதே வடிவம்தான் உள்ளது.  என்னிடம் உள்ள புத்தகம் Collected Stories.  The Library of America வெளியிட்டது.

மற்றபடி இது ஒன்றும் மொழிபெயர்க்கத் தகுந்த அளவுக்கு விசேஷமான கதை இல்லை.  இம்மாதிரியான கதைகளையெல்லாம் நம் தமிழர்களுக்கே உள்ள Xenomaniaவின் காரணமாகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறோம்.  இருபத்து இரண்டு வயதில் சிறுகதை எழுதிப் பழகும் நம் பையன்களே இதைவிட நல்ல கதை எழுதுகிறார்கள்.  ஸ்டூவர்ட், க்ளேர் தம்பதி.  ஸ்டூவர்ட் தன் நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காகத் தொலைதூரம் செல்கிறான்.  வார இறுதி.  அங்கே ஒரு பெண் நதியில் வன்கலவி செய்யப்பட்டு கொலையுண்டு கிடக்கிறாள்.  நதியில் அடித்துச் சென்றுவிடாமல் அவளை ஒரு கயிறால் கட்டி விட்டு நண்பர்கள் மீன் பிடித்து, விஸ்கி குடித்துக் கொண்டாடிவிட்டு மூன்று தினங்கள் சென்று திரும்பும்போது போலீஸுக்கு போன் செய்கிறார்கள்.  க்ளேர் கடும் கோபம் அடைகிறாள்.  இந்த அளவுக்கு சுரணையுணர்வு மழுங்கி இருக்கிறார்களே என்று.  இது ஒரு கதையா? ஸ்டுப்பிட்! 

ஆனால், இந்த ஒரு கதையை வைத்து நான் ரேமண்ட் கார்வர் பற்றி முடிவுக்கு வர மாட்டேன்.  ஆனால், மோசமான எழுத்தாளர் என்ற முடிவையும் எடுக்க மாட்டேன்.  என்னுடைய நேர நெருக்கடியில் ரேமண்ட் கார்வரை இனிமேலும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை.  முதல் கதையே இத்தனை சாதாரணம்.  அவரை ஏன் மேலும் படிக்க வேண்டும்?  இனிமேல் எதையும் படித்துப் பார்க்காமல் பகிரக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். 

 

எது எப்படியிருந்தாலும் கதையின் முடிவு பற்றிய குழப்பத்தை குப்புசாமிதான் விளக்க வேண்டும்.

இப்படிச் சொன்னால்தான் புரியுமா?

புதுவை ஞானம் என்று ஒரு நண்பர். 35 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பழக்கம். எல்ஐசியில் வேலை. அப்போதைய எல்ஐசி சம்பளம் எங்கள் அரசாங்க சம்பளத்தையெல்லாம்விட மூன்று மடங்கு ஜாஸ்தி. பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர்தான் அந்தப் பத்திரிகையை எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு நான் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிப் போட்டு, அந்தப் பத்திரிகை பல காலம் எனக்கு வந்துகொண்டிருந்தது. ஏழை எழுத்தாளன், சந்தாவெல்லாம் அனுப்ப முடியாது என்று எழுதி என் விலாசம் எழுதியிருந்தேன். ‘Granma’ என்று பெயர். இன்னமும் அப்பிரதிகள் என்னிடம் உண்டு.

அதில் இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத அரிதான தென்னமெரிக்கப் படைப்புகளை ஸ்பானிஷிலிருந்து முதல்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அப்படித்தான் எனக்கு அலெஹோ கார்ப்பெந்த்தியர் போன்றவர்கள் வாசிக்கக் கிடைத்தார்கள்.

அதில் ஒருமுறை ஒரு கவிதையைப் படித்து 1980-லோ என்னவோ நான் எழுதிய  ‘லத்தீன் அமெரிக்க சினிமா’ நூலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். சற்றே நீண்ட கவிதை. Rigoberto Lopez Perez. நிகாராகுவாவைச் சேர்ந்த கவி. 25 வயதில் அவன் ஒரு விஷயத்தை வெளியே சொன்னான். தேசத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த சர்வாதிகாரி சொமாஸாவை இன்னும் ஒரு ஆண்டில் சுட்டுக் கொல்லுவேன் என்றான். சொல்லிவிட்டுத் தலைமறைவாகி விடவில்லை. சொன்னதுபோலவே அடுத்த ஆண்டுக்குள் சுட்டுக் கொன்றான். அவன் சொமாஸாவைச் சுட்டதுமே பாதுகாவலர்கள் அவனைச் சுட்டார்கள்.

அந்தச் செயலுக்கு முன் அவன் தன் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினான். கவிதை வடிவிலான கடிதம். ரிகபெர்த்தோ பெரஸ் பற்றி இப்போதுகூட கூகிளில் நாலு வரிதான் இருக்கும். நான் 1980-ல் மொழிபெயர்த்தேன். என்னுடைய நாற்பது ஆண்டுக் கால மொழிபெயர்ப்புப் பணி என்பது இத்தகைய அரசியலை உள்ளடக்கியது.

அப்துர் ரஹ்மான் முனிஃப் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். நோபல் பரிசு பெற்ற நகிப் மெஹ்ஃபூஸைவிடவும் சிறந்த எழுத்தாளர். சவூதி அரசர் அவர் நண்பர். அரசரைக் கிண்டல்செய்து எழுதினார். சவூதி அவரை நாடு கடத்தியது. வேறொரு தேசத்தில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற பிறகு சவூதி அவரை அழைத்தது. போய்யா என்று மறுத்துவிட்டார். அவரை மொழிபெயர்த்தேன்.

இப்படி 500 பேர்.

‘அ-காலம்’ படித்துப் பாருங்கள். ‘தப்புத் தாளங்கள்’ படித்துப் பாருங்கள். நான் மொழிபெயர்த்த ‘ஊரின் மிக அழகான பெண்’ என்ற தொகுதியையாவது படித்துப் பாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் மொழிபெயர்ப்புத் துறையைச் சார்ந்தது. எத்தகைய எழுத்தாளர்களை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று புரியும். எதையுமே படிக்காமல் என்னிடம் பேசவே பேசாதீர்கள்.

எல்லோரும் மொழிபெயர்ப்பு என்று சொல்லிக்கொண்டு மூல ஆசிரியனையும் தமிழையும் கொலைசெய்யும் வேளையில் குப்புசாமி மட்டும்தான் இருப்பவர்களில் நன்றாகச் செய்கிறார் என்று சுமார் இருபது ஆண்டுகளாக அவரை ப்ரமோட் செய்துகொண்டிருக்கிறேன். இப்போதுகூட மானே தேனே என்றெல்லாம் அடைமொழி சேர்த்த பிறகுதான், ‘என் புத்தகத்தில் ஒரு பக்கம் குறைவாக இருக்கிறதே, என்ன விஷயம் என்று விளக்குங்கள்!’ என்றுதான் எழுதினேன். வெறுமனே இது மட்டும்தான் என்றால் போன் செய்து கேட்டிருப்பேன். அந்தக் கதை வேறு குப்பையாக இருந்ததால், அதை எழுதவும் செய்தேன். 

இதில் என்னய்யா பிரச்சினை இருக்க முடியும்? 

ஒரு நண்பர் குப்புசாமியை மோசமாக விமர்சித்து, இது மொழிபெயர்ப்பே இல்லை என்று எழுதியதால் மனம் மிகவும் நொந்த குப்புசாமி மூன்று மாதம் எதுவுமே செயல்பட முடியாமல் போய் நான் அவருக்கு போன் செய்து திட்டினேன். நானெல்லாம் பாராட்டிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு அவர் திட்டினதுதான் பெரிதாகப் போயிற்றா என்று உரிமையுடன் கண்டித்தேன்.  ஆனால் இப்போது தோன்றுகிறது, அவர்கள்தான் இவருக்கு லாயக்கு என்று.

நான் செய்தது இரண்டு காரியங்கள். கார்வரின் கதையை விமர்சித்தேன். அதில் தலையிட குப்புசாமிக்கு உரிமை இல்லை. கதையின் முடிவு பற்றி விளக்கம் கேட்டேன். அதிலும் மானே தேனே எல்லாம் போட்டுத்தான். விளக்கம் கொடுத்துவிட்டு போயிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என் எழுத்து எதையுமே படிக்காமல், எனக்குப் பாடம் எடுக்கிறார் குப்புசாமி. போதும். எனக்கு வேறு வேலை கிடக்கிறது!

தொடர்புடைய பதிவுகள்

வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர் - ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த சிறுகதை

சாருவுக்கு ஒரு பதில்: குறுகத் தரித்தவரா கார்வர்? - ஜி.குப்புசாமி சாருவுக்கு எழுதிய எதிர்வினை

முன்னதாக ‘அருஞ்சொல்’ இதழுக்கான சாருவின் வாழ்த்து

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா, தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் செயலாற்றுபவர். ‘ஸீரோ டிகிரி’, ‘எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் பேன்ஸி பனியனும்’, ‘கோணல் பக்கங்கள்’, ‘புதிய எக்ஸைல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.








பாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிபெரியாரின் கருத்துரிமை: தான் குற்றங்களும்எம்ஐடிஎஸ்பொதுவுடமை இயக்கம்வின்னி: இணையற்ற இணையர்!உடல் எடைமத்திய பிரதேசம்: காங்கிரஸுக்குச் சாதகம்வர்க்க பிளவுஆதிநாதன்முதலிடம்புதிய பயணம்சரோஜ் பதிரானா கட்டுரைதீண்டத்தகாதவர்மூட்டழற்சி நோய்கள்போரும் உளவியலும்புற்றுநோய்பென் ஸ்டோக்ஸ்நம்மை ஆள்வது பெரும்பான்மையா? சிறுபான்மையா?குற்றவியல் நடைமுறைச் சட்டம்தங்க ஜெயராமன்தமிழகக் காவல் துறை அருஞ்சொல் தலையங்கம்மாவட்டம்இரண்டாவது முறை வெற்றி சமூக மாற்றமும்!கால் பாதிப்புவள்ளலார்நீர் ஆணையம்நுரையீரல் புற்றுநோய்எழுத்தாளன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!