சிறுகதை, கலை, மொழிபெயர்ப்பு 30 நிமிட வாசிப்பு

வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்

ரேமண்ட் கார்வர்
29 Aug 2021, 12:00 am
0

ன் கணவர் வயிராறச் சாப்பிடுபவர். ஆனால், இப்போது சோர்வாக, சிடுசிடுப்பாகக் காணப்படுகிறார். வாயிலிட்ட உணவை மெதுவாக மென்றுகொண்டிருக்கிறார். மேசை மீது கையை வைத்துக்கொண்டு எதையோ இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருக்கிறார். என்னைப் பார்க்கிறார். உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டு நாப்கினால் வாயைத் துடைத்துக்கொள்கிறார். தோள்களைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சாப்பிடத் தொடங்குகிறார். எங்களுக்கு இடையே ஏதோ வந்துவிட்டிருக்கிறது, அது ஒன்றுமில்லை என்பதைப் போல அவர் நடந்துகொண்டிருக்கிறார்.

“எதற்காக என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என்கிறார். “என்ன விஷயம்?” என்று முட்கரண்டியைக் கீழே வைக்கிறார்.

“நான் முறைக்கிறேனா?” என்றபடி தலையை முட்டாள்தனமாக, முட்டாள்தனமாக ஆட்டுகிறேன்.

தொலைபேசி ஒலிக்கிறது. “எடுக்காதே” என்கிறார்.

“உங்கள் அம்மாவாக இருக்கலாம்” என்கிறேன். “டீன் – ஏதாவது டீனைப் பற்றிய விஷயமாக இருக்கும்.”

“அதெல்லாம் இருக்காது. எடுத்துக் கேள்.”

ஒலிவாங்கியை எடுக்கிறேன். ஒரு நிமிடம் அமைதியாகக் கேட்கிறேன். அவர் சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறார். உதடுகளைத் கடித்துக்கொண்டு ஒலிவாங்கியை வைக்கிறேன்.

“நான் சொன்னேனா இல்லையா?” என்கிறார். மீண்டும் சாப்பிடத் தொடங்குகிறார். பின் கைக்குட்டையைத் தட்டில் எறிந்துவிட்டு, “காட்டாமிட்! இவர்களெல்லாம் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போக மாட்டார்களா? நீயே சொல்லு, நான் செய்ததில் என்ன தப்பு என்று. நான் கேட்டுக்கொள்கிறேன்! இது நியாயமே இல்லை. அந்தப் பெண் ஏற்கெனவே செத்துப்போயிருந்தாள், இல்லையா? என்னைத் தவிர வேறு சிலரும் இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தோம். நாங்கள் அந்த இடத்துக்கு அப்போதுதான் வந்துசேர்ந்திருந்தோம். மணிக்கணக்காக நடந்துவந்திருந்தோம். எங்கள் காரை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தோம். உடனே திரும்பிச் சென்றிருக்கவும் முடியாது. அதுதான் முதல் தினம். வாட் த ஹெல்! எனக்கொன்றும் எதுவும் தப்பாகத் தெரியவில்லை. இல்லை நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை. அப்படி என்னைப் பார்க்காதே. சொல்வது கேட்கிறதா? நீ ஒன்றும் என் மீது தீர்ப்பு எதுவும் எழுத வேண்டாம். பேசாமல் இரு.”

“உங்களுக்குத் தெரியும்” என்றபடி தலையை ஆட்டுகிறேன்.

“என்ன தெரியும், க்ளேர்? சொல்லு. எனக்கு என்ன தெரியும் என்று சொல்லு. ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது. நீ இதற்காக ரொம்பவும் அலட்டிக்கொள்ள வேண்டாம்.” அர்த்தபுஷ்டியோடு பார்ப்பதாக நினைத்துக்கொண்டு என்னைப் பார்க்கிறார். ஒரு நிமிடத்துக்குப் பின் “அவ செத்துட்டா, செத்துட்டா, செத்துட்டா. காதில் விழுந்ததா?” என்கிறார்.

“இது ரொம்பவும் பரிதாபம்தான், ஒப்புக்கொள்கிறேன். அவள் ஒரு சின்னப் பெண். பாவம். வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லோரையும் போல நானும் வருத்தப்படுகிறேன். ஆனால், அவள்தான் செத்துப்போயாச்சே, க்ளேர், அவ செத்துப்போயிட்டா. இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிடுவோம். ப்ளீஸ், க்ளேர். இதை இத்தோடு விட்டுவிடுவோம்.”

“அதேதான். அவள் செத்துத்தான் போயிருந்தாள் – ஆனால் உங்களுக்குத் தெரியவில்லையா? அவளுக்கு உதவியிருக்க வேண்டும்.”

“என்னால முடியல” என்று இரண்டு கைகளையும் உயரத்தூக்கிக்கொள்கிறார். மேசையிலிருந்து நாற்காலியைப் பின்னால் தள்ளிவிட்டு, சிகரெட்டுகளையும் ஒரு பியர் குப்பியையும் எடுத்துக்கொண்டு உள்முற்றத்துக்குச் செல்கிறார். முன்னும்பின்னுமாக ஒரு நிமிடம் நடந்துவிட்டு, புல்தரையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மீண்டும் ஒருமுறை செய்தித்தாளை எடுத்துப் பார்க்கிறார். முதல் பக்கத்திலேயே அவருடைய பெயர் மற்ற நண்பர்களோடு சேர்ந்து இருக்கிறது. ‘அச்சமூட்டும் காட்சியைக் கண்டவர்கள்’ என்ற தலைப்பில்.

நான் கண்களை ஒரு நிமிடம் மூடிக்கொண்டு பாத்திரக்கூடையை இறுக்கமாகப் பிடிக்கிறேன். இதற்கு மேல் என்னால் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. இதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும், எண்ணம் செயல் எல்லாவற்றிலிருந்தும் இதை விரட்ட வேண்டும், எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும். கண்களைத் திறக்கிறேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கூடிக்கொண்டே வர, என்னவெல்லாம் இனி நடக்கப்போகிறது என்று நிச்சயமாக மனதில் தோன்ற, பாத்திரக்கூடையை ஓங்கி அடிக்கிறேன். அதில் இருந்த பாத்திரங்களும் கண்ணாடிக் கோப்பைகளும் தரையில் விழுந்து நொறுங்கிச் சிதறுகின்றன.

அவர் அசையவே இல்லை. இவ்வளவு பெரிய சத்தம் அவர் காதில் விழாமல் இருந்திருக்காது. தலையை மட்டும் லேசாக உயர்த்துகிறார். ஆனால், திரும்பிப் பார்க்கவில்லை. நகராமல் இருந்ததற்காக அவர் மீது எனக்கு வெறுப்பு அதிகரிக்கிறது. ஒரு நிமிடம் காத்திருக்கிறார். பின் சிகரெட்டைப் பற்றவைத்து, நாற்காலியில் சாய்ந்துகொண்டு புகையை வெளிவிடுகிறார். காற்று அவர் வாயிலிருந்து வெளிவரும் புகைக்கற்றையை மெல்லிய நூலாக்குகிறது. நான் எதற்காக இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறேன்? அவர் இதைப் போல அசையாமல் உட்கார்ந்துகொண்டு, சத்தங்களைக் கேட்டுக்கொண்டு, வாயிலிருந்து புகையை ஊதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என்று அவருக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை.

நினைவேந்தல் தின வார இறுதிக்கு முந்தைய வார ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் நண்பர்களோடு மலைப்பிரதேசத்தில் மீன் பிடிக்கத் திட்டமிட்டார். அவரும் கார்டன் ஜான்சன், மெல் டார்ன், வெர்ன் வில்லியம்ஸ் என்று மூன்று நண்பர்களும். அவர்கள் எப்போதும் ஒன்றாக போக்கர், பவுலிங் ஆடுவதுண்டு, மீன் பிடிக்கச் செல்வார்கள். முன்வசந்த காலமும், கோடைக் காலமும் ஆரம்பிப்பதற்கு முன்பு குடும்பத்தோடு செல்ல வேண்டிய விடுமுறைக் காலப் பயணங்கள், லிட்டில் லீக் பேஸ்பால் போட்டி தினங்கள், உறவினர்கள் வருகை போன்றவை குறுக்கிடாத வகையில் பயணத்திட்டம் வகுத்துக்கொள்வார்கள். அவர்கள் எல்லோருமே நாகரிகமானவர்கள், குடும்பஸ்தர்கள், பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள். எங்கள் மகன் டீனுடன் அவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வார்கள். வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த நண்பர்கள் நால்வரும் நேச்சஸ் ஆற்றில் மீன்வேட்டைக்காக மூன்று நாட்கள் பயணமாகக் கிளம்பினார்கள். காரை ஒரு மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டுப் பல மைல் தூரம் நடந்து அவர்கள் மீன் பிடிக்க உத்தேசித்திருந்த இடத்துக்குப் படுக்கை, உணவுப்பொருட்கள், சமையல் பாத்திரங்கள், சீட்டுக்கட்டு, விஸ்கி பாட்டில்கள் சகிதம் சென்றிருக்கிறார்கள். முதல் நாள் மாலை ஆற்றோரத்தில் அவர்கள் முகாம் அமைப்பதற்கு முன்பே அந்தப் பெண், ஆற்றின் ஓரத்தில் கவிழ்ந்து, நிர்வாணமாக மரக்கிளைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருப்பதை மெல் டார்ன் பார்த்திருக்கிறார். மற்ற நண்பர்க்ளையும் கூப்பிட, எல்லோரும் வந்து பார்த்திருக்கிறார்கள். என்ன செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் – அது யாரென்று என் கணவர் ஸ்டூவர்ட் சொல்லவில்லை – அநேகமாக அது அந்தக் குண்டான, எதற்கெடுத்தாலும் உரக்கச் சிரிக்கிற வெர்ன் வில்லியம்ஸாகத்தான் இருக்கும் – அவர்கள் உடனே திரும்பி காருக்குச் சென்றுவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் தமது காலணிகளை மணலில் கிளறிக்கொண்டு, தயங்கிக்கொண்டு, அவரோடு உடன்படாமல் அங்கேயே தங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள்: ‘மிகவும் அசதியாக இருக்கிறது’, ‘இருட்டத் தொடங்கிவிட்டது’, அப்புறம் அந்தப் பெண் ‘எங்கேயும் போய்விடப் போவதில்லை’. கடைசியில் அவர்கள் எல்லோரும் அங்கேயே முகாமிட்டுத் தங்குவது என்று முடிவெடுத்துக் கூடாரம் அமைத்தார்கள், தீ மூட்டினார்கள், விஸ்கி குடித்தார்கள். நிலவு உதித்து மேலேறி வந்ததும் மேலும் குடித்தார்கள், அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசினார்கள். அவர்களில் யாரோ ஒருவர், தண்ணீரில் அடித்துக்கொண்டு அந்தப் பெண் போய்விடாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னாராம். இரவில் அவள் உடல் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டால் அது பிற்பாடு அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைத்தார்கள். டார்ச் விளக்குகளை எடுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி ஆற்றில் இறங்கினார்கள். காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. குளிர்க்காற்று. அலைகள் ஆற்றங்கரையில் அடுத்தடுத்து மோதிக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவர் – அது ஸ்டூவர்ட்டாகத்தான் இருக்கும், அவர் அப்படிச் செய்யக்கூடியவர்தான் – மிதந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அருகே சென்று ஒரு நைலான் கயிறை அவளுடைய மணிக்கட்டைச் சுற்றிக் கட்டிவிட்டு, கரையில் இருந்த ஒரு மரத்தோடு அந்தக் கயிறைக் கட்டியிருக்கிறார். இந்த வேலை நடக்கும்போது மற்ற நண்பர்கள் அனைவரும் டார்ச் வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிறகு, அனைவரும் கரையேறி, கூடாரத்துக்குச் சென்று விஸ்கி குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு, தூங்கச் சென்றிருக்கிறார்கள். அடுத்த நாள், சனிக்கிழமை, காலை உணவு சமைத்துச் சாப்பிட்டு, காபி குடித்து, மேலும் மேலும் விஸ்கியும் குடித்துவிட்டு, இரண்டிரண்டு அணியாகப் பிரிந்து ஆற்றின் இரண்டு திசைகளிலும் மீன் வேட்டைக்குச் சென்றிருக்கின்றனர்.

அன்றிரவு அவர்கள் பிடித்திருந்த மீனையும் உருளைக்கிழங்கையும் சமைத்துச் சாப்பிட்ட பின் காபியும் விஸ்கியும் குடித்துவிட்டு, பாத்திரங்களை ஆற்றுக்கு எடுத்துச் சென்று தண்ணீரில் அந்தப் பெண் கிடந்த இடத்துக்கு சில கெஜங்கள் தள்ளி அவற்றைக் கழுவினார்கள். முகாமுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் குடிக்கத் தொடங்கினார்கள். கண்கள் இருட்டும் வரை சீட்டாடினார்கள். வெர்ன் வில்லியம்ஸ் தூங்கச் சென்றார். மற்றவர்கள் ஆபாசக் கதைகள், அவர்களுடைய நேர்மையற்ற தவறான கடந்த கால அனுபவங்கள் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவரும் அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை. கார்டன் ஜான்ஸன் பிடித்த ட்ரௌட் மீன் எவ்வளவு கெட்டியாக இருந்தது என்றும், ஆற்றுநீர் எவ்வளவு பயங்கரமாகச் சில்லிட்டிருந்தது என்றும் குறிப்பிட்டபோது அனைவரும் பேசுவதை நிறுத்தி மௌனமாகினர். ஆனால், தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் எழுந்து கால் இடறிக் கீழே விழுந்து, லாந்தர் விளக்கைத் திட்டினார். பின் எல்லோரும் எழுந்து தூங்குவதற்குச் சென்றனர்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை தாமதமாக எழுந்தனர். மேலும் விஸ்கி குடித்தார்கள், குடித்துக்கொண்டே இருந்ததால் அதிகமாக மீன் பிடிக்கவுமில்லை. மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்கள், அவர்கள் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே. கூடாரத்தைக் கழற்றி, படுக்கைகளைச் சுருட்டி, பாத்திரங்கள், மீன்கள், மீன் பிடிப்புச் சாதனங்கள் எல்லாவற்றையும் கட்டி காருக்குள் வைத்தார்கள். கிளம்புவதற்கு முன் அந்தப் பெண்ணைப் பார்ப்பதைத் தவிர்த்தார்கள். நெடுஞ்சாலையில் காரில் போகும்போது யாரும் எதுவும் பேசாமல் முழு மௌனத்தில் இருந்தார்கள். வழியில் ஒரு பொதுத் தொலைபேசியைக் கண்டதும் வண்டியை நிறுத்தினார்கள். ஷெரீஃபினுடைய அலுவலகத்துக்கு ஸ்டூவர்ட் அழைத்தார். மற்றவர்கள் காரிலிருந்து இறங்கி கொளுத்தும் வெய்யிலில் நின்றபடி அவர் போனில் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்டூவர்ட் அவர் பேசிக்கொண்டிருந்த நபரிடம் அவர்கள் நால்வருடைய பெயர்களையும் சொன்னார் - அவர்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, அவர்கள் அவமானப்படுவதற்கும் எதுவும் இல்லை – இதைப் பற்றி மேலதிக விவரங்கள், அந்தப் பெண் இறந்துகிடக்கும் இடத்துக்குச் செல்வதற்கான வழி ஆகியவற்றை அவர்களிடம் கேட்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரிகள் வரும் வரை அனைவரும் அந்த இடத்திலேயே காத்திருப்பதாகச் சொன்னார்.

அன்றிரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தார். தூங்கிக்கொண்டிருந்த எனக்கு சமையலறையில் அவரது சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. ஒரு பியர் குப்பியை வைத்துக்கொண்டு ரெஃப்ரிஜிரேட்டர் மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்தார். அவருடைய கனமான கைகளால் என்னை அணைத்து என் முதுகில் மேலும் கீழும் தடவினார். இரண்டு தினங்களுக்கு முன் என்னைவிட்டுச் சென்ற அதே கைகள் என்று நினைத்தேன்.

படுக்கையில் மீண்டும் என் மீது கைகளை வைத்தார். பின் எதையோ யோசிப்பதைப் போல காத்திருந்தார். நான் மெதுவாகத் திரும்பிக் கால்களை அசைத்தேன். அப்புறம் அவர் வெகுநேரம் விழித்திருந்தார். நான் தூங்கிய பிறகும் விழித்திருந்தார். ஏதோ மெல்லிய சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்து கண்விழித்தேன். பறவைகளின் ஒலி. விடியத் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மென்வெளிச்சம் சன்னலில் இருந்தது. அவர் மல்லாந்து படுத்தபடியே புகைத்தபடி, திரையிட்டிருந்த சன்னலை வெறித்துக்கொண்டிருந்தார். பாதித் தூக்கத்துடன் அவரை அழைத்தேன். பதிலளிக்கவில்லை. மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் நான் எழுவதற்குள் அவர் எழுந்து நடமாடிக்கொண்டிருந்தார். செய்தித்தாளில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக இருக்கலாம். எட்டு மணி சுமாருக்கு தொலைபேசி அடிக்கத் தொடங்கியது.

தொலைபேசியைப் பார்த்து, “போய்த்தொலை” என்று சத்தமிட்டது கேட்டது. ஒரு நிமிடம் கழித்து மீண்டும் அடித்தது. நான் வேகமாக வந்தேன். “நான் ஏற்கனவே ஷெரீஃபிடம் சொன்னதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆமாம். அதுதான்!” அவர் ஒலிவாங்கியை அடித்து வைத்தார்.

நான் பயந்து, “என்ன ஆச்சு?” என்றேன்.

“உட்கார்” என்றார் மெதுவாக. சவரம் செய்யப்படாத கன்னத்தை, மீசையை அவர் விரல்கள் சொறிந்துகொண்டே இருந்தன. “உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும், நாங்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தபோது ஒன்று நடந்தது.” உணவு மேசையில் நாங்கள் எதிரெதிரே உட்கார்ந்தோம். அவர் சொன்னார்.

அவர் அதை சொல்லிக்கொண்டிருந்தபோது நான் அவரை வெறித்தபடியே காபி குடித்துக்கொண்டிருந்தேன். சொல்லி முடித்துவிட்டு செய்தித்தாளை மேசையில் எறிந்தார். அந்தச் செய்தியைப் படித்தேன்………… பதினெட்டிலிருந்து இருபத்திநான்கு வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்………… மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை தண்ணீரில் இருந்திருக்கலாமென்று………… வன்புணர்வு நோக்கமாக………… ஆரம்பக் கட்ட சோதனையில் கழுத்தை நெரித்து………… வெட்டுக்காயங்களும் அடிபட்ட காயங்களும்………… மார்பிலும் இடுப்பிலும்………… பிரேதப் பரிசோதனை………… வன்புணர்வு………… மேலும் புலன்விசாரணை…………

“நீ சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். “அதைப் போல என்னைப் பார்க்காதே. ஜாக்கிரதை. நிதானமாக இரு, க்ளேர்.”

“நீங்கள் ஏன் நேற்று இரவே சொல்லவில்லை?” என்று கேட்டேன்.

“அதுவந்து... சொல்லலை. நீ என்ன சொல்ல வருகிறாய்?”

“நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.” அவர் கைகளைப் பார்த்தேன். தடிமனான விரல்கள், மயிர் அடர்ந்த கைமுட்டிகள், அந்தக் கைகள் இப்போது அசைந்துகொண்டிருந்தன. சிகரெட்டைப் பற்ற வைத்தன. நேற்று இரவு என் மேல் படர்ந்த விரல்கள்.

அவர் நெளிந்தார். “என்ன பெரிய வித்தியாசம் நேற்று இரவுக்கும், இன்று காலைக்கும்? நீ தூங்கிக்கொண்டிருந்தாய். காலையில் சொல்லலாம் என்றிருந்தேன்.” உள்முற்றத்தை நோக்கினார். ஒரு குருவி தோட்டத்திலிருந்து பறந்து வந்து பிக்னிக் மேசை மீது வந்தமர்ந்து சிறகுகளைக் கோதியது.

“இது உண்மையல்ல” என்றேன். “அவளை அப்படியே நீங்கள் விட்டுவிட்டு வரவில்லை?”

அவர் வேகமாகத் திரும்பினார். “நான் என்ன செய்திருப்பேன்? கவனமாகக் கேட்டுக்கொள். முதலும் கடைசியுமாகச் சொல்லிக்கொள்கிறேன். எதுவும் நடக்கவில்லை. நான் வருத்தப்படுவதற்கோ தப்பு செய்துவிட்டதாக நினைப்பதற்கோ எதுவுமில்லை. புரிகிறதா?”

உணவு மேசையிலிருந்து எழுந்து மகன் டீனின் அறைக்குச் சென்றேன். அவன் விழித்துக்கொண்டுதான் இருந்தான். இரவு உடையை மாற்றாமல் புதிர் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மாற்று உடைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு சமையலறைக்குத் திரும்பிவந்து அவனுக்குக் காலை உணவை மேசை மேல் எடுத்து வைத்தேன். தொலைபேசி இரண்டு மூன்று முறை அடித்தது. ஒவ்வொரு முறையும் ஸ்டூவர்ட் எடுத்துக் கோபமாகக் கத்திவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார். மெல் டார்னையும் கார்டன் ஜான்சனையும் அழைத்து மெதுவான குரலில் தீவிரமாகப் பேசினார். பிறகு, ஒரு பியரை எடுத்துத் திறந்து அருந்திக்கொண்டே சிகரெட் பிடித்தார். சாப்பிட்டுக்கொண்டிருந்த டீனிடம் அவன் பள்ளியைப் பற்றி, நண்பர்களைப் பற்றியெல்லாம் எதுவுமே நடக்காததுபோல இயல்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

டீன் அவர் வெளியில் சென்றிருந்தபோது என்ன செய்ததாகக் கேட்டான். ஸ்டூவர்ட் ஃபிரீஸரிலிருந்து அவர் பிடித்த சில மீன்களை எடுத்துவந்து காட்டினார்.

“இவனை உங்கள் அம்மா வீட்டுக்கு இன்று கூட்டிச்செல்கிறேன்” என்றேன்.

“சரி” என்று டீனைப் பார்த்தார். அவன் உறைந்திருந்த ட்ரௌட் மீனை எடுத்து ஆராய்ந்துகொண்டிருந்தான். “உனக்கு அவசியம் என்று தோன்றினால், அவனுக்கும் இஷ்டம் என்றால் செல்லுங்கள். ஆனால், என்னைக் கேட்டால் தேவையில்லை என்பேன். இங்கே ஒரு பிரச்சினையும் இல்லை.”

“நான் எப்படியும் போக வேண்டும்” என்றேன். 

“நான் அங்கே நீச்சலுக்குப் போக முடியுமா?” என்றான் டீன். விரல்களை பேன்ட்டில் துடைத்துக்கொண்டான்.

“முடியும் என்றுதான் நினைக்கிறேன். வானிலை நன்றாகத்தான் இருக்கிறது. நீ உன் நீச்சல் உடைகளை எடுத்துக்கொள். உன் பாட்டி உன்னை நீச்சலுக்கு அனுப்புவார்” என்றேன்.

ஸ்டூவர்ட் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு எங்களை உற்றுப்பார்த்தார்.

டீனும் நானும் நகருக்கு மறுபுறத்தில் இருந்த ஸ்டூவர்டின் அம்மா வீட்டுக்குச் சென்றோம். அவர் வசிக்கும் அடுக்ககத்தில் ஒரு நீச்சல்குளமும் நீராவிக் குளியலறையும் உண்டு. காதரீன் கேன் அவர் பெயர். எனது இரண்டாவது பெயரும் கேன்தான். ஆச்சரியம். ஸ்டூவர்ட் அவருடைய அம்மாவை கேண்டி என்று நண்பர்கள் அழைப்பார்கள் என்று பல வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறார். அவர் நல்ல உயரமான பெண்மணி. வெண் – பொன்நிறக் கூந்தல். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாத இறுக்கமானவர். அவரைப் பார்க்கும்போதெல்லாம் எதிரில் இருப்பவரை அவர் இடைவிடாமல் எடைபோட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றும். என்ன நடந்தது என்பதை மெல்லிய குரலில் அவரிடம் விவரிக்கிறேன். (அவர் இன்னும் செய்தித்தாள்களைப் பார்த்திருக்கவில்லை. டீனை மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்கிறேன். “அவன் நீச்சல் உடைகளை எடுத்து வந்திருக்கிறான்” என்கிறேன். “ஸ்டூவர்டும் நானும் சிலவிஷயங்கள் குறித்துப் பேச வேண்டும்” என்கிறேன் எதையும் குறிப்பிடாமல். மூக்குக்கண்ணாடியைத் தழைத்துக்கொண்டு அவர் என்னை அசையாமல் பார்க்கிறார். பின் மெதுவாகத் தலையசைக்கிறார். டீனிடம், “எப்படி இருக்கிறாய் என் குட்டி மனுஷா?” என்று குனிந்து அவனை அணைத்துக்கொள்கிறார். கிளம்புவதற்காக நான் கதவைத் திறக்க, அவர் மீண்டும் என்னை உற்றுப் பார்க்கிறார். எதுவும் பேசாமல் தனிவிதமாகப் பார்க்கும் பார்வை அவருக்கு.

வீட்டை அடைந்தபோது ஸ்டூவர்ட் மேசையில் எதையோ சாப்பிட்டபடியே பியர் அருந்திக்கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து உடைந்த பீங்கான், கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கித்தள்ளி சுத்தம் செய்துவிட்டு வெளியே செல்கிறேன். ஸ்டூவர்ட் புல்தரையில் படுத்துக்கொண்டு வானத்தை வெறித்துக்கொண்டிருக்கிறார். கைக்கெட்டும் தூரத்தில் பியரும் செய்தித்தாளும் இருக்கின்றன. காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தாலும் வெப்பம் அதிகமாகத்தான் இருக்கிறது. பறவைகள் குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றன.

“ஸ்டூவர்ட், நாம் வெளியில் செல்வோமா? எங்காவது?”

அவர் புரண்டு, தலையை உயர்த்தி என்னைப் பார்க்கிறார். தலையை அசைக்கிறார். “கொஞ்சம் பியர் எடுத்துக்கொண்டு போகலாம்” என்கிறார். “இப்போது உன் மனநிலை சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். நான் உன்னிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், என்னைப் புரிந்துகொள் என்பதுதான். “அவர் எழுந்து என்னைக் கடந்து செல்கையில் என் இடுப்பைத் தொட்டுவிட்டுச் செல்கிறார். “ஒரு நிமிடத்தில் தயாராகிவிடுவேன்.”

எதுவும் பேசிக்கொள்ளாமல் நகரத்தைக் கடந்து செல்கிறோம். புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு சாலையோர அங்காடியில் பியர் வாங்குவதற்காக நிறுத்துகிறார். அந்தக் கடையின் கதவுக்குப் பின்னால் ஏராளமான செய்தித்தாள்கள் நிலையடுக்கில் இருப்பது தெரிகிறது. மேல் படிக்கட்டில் எழுத்துகள் அச்சிட்ட உடையணிந்திருக்கும ஒரு குண்டுப் பெண்மணி லிக்கோரைஸ் குச்சிமிட்டாயை ஒரு சின்னப் பெண்ணுக்குத் தந்துகொண்டிருந்தாள். சில நிமிடங்களில் எவர்ஸன் க்ரீக்கைக் கடந்து மிக அழகான பகுதி ஒன்றுக்குத் திரும்புகிறோம். அங்கே ஆற்றங்கால் ஒரு சிற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. சில அடிதூரத்தில் தண்ணீர். ஆற்றங்கால் ஒரு பாலத்தின் அடியில் ஓடி, சில நூறு அடிகள் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய குளத்தில் சென்று இணைகிறது. குளக்கரையில் பிக்னிக் வந்திருக்கும் பத்துப் பன்னிரண்டு பேர் ஆண்களும் பெண்களுமாக அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டும், மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கின்றனர்.

வீட்டுக்கு இவ்வளவு அருகிலேயே இவ்வளவு தண்ணீர் இருக்கும்போது எதற்காக இவர் மீன் பிடிப்பதற்கு அவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருந்தது?

“எதற்கு இந்த இடத்தைவிட்டு அவ்வளவு தூரத்துக்குச் சென்றீர்கள்?” என்கிறேன். 

“நேச்சஸ் ஆற்றுக்குத்தானே? நாங்கள் எப்போதுமே அங்குதான் செல்வோம். ஒவ்வொரு வருடமும், குறைந்தது ஒரு முறையாவது.” ஒரு பெஞ்சில் அமர்கிறோம். நல்ல வெய்யில். இரண்டு பியர் கேன்களை உடைத்து என்னிடம் ஒன்றைத் தருகிறார். “இப்படி நடக்குமென்று எப்படி எனக்குத் தெரியும்?” தலையை ஆட்டிக்கொண்டு உடம்பைக் குலுக்கிக்கொள்கிறார், இது எல்லாமே பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததைப் போல, அல்லது யாருக்கோ நிகழ்ந்திருப்பதைப் போல. “இந்தப் பிற்பகல் பொழுதை அனுபவி, க்ளேர். வானிலை எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது பார்.”

“அவர்களும் தங்களை அப்பாவிகள் என்றுதான் சொன்னார்கள்.”

“யார்? எதைப் பற்றிச் சொல்கிறாய்?”

“அந்த மேடாக்ஸ் சகோதரர்கள். நான் வளர்ந்த ஊருக்குப் பக்கத்தில் ஆர்லீன் ஹப்லி என்ற ஒரு பெண்ணை அவர்கள் கொன்றார்கள். தலையைத் துண்டாக்கி, அவளை க்ளே எலெம் ஆற்றில் வீசிவிட்டார்கள். நானும் அவளும் ஒரே உயர்நிலைப் பள்ளியில்தான் படித்தோம். என் இளம்வயதில் நடந்த சம்பவம் அது.”

“அடச்சே! எவ்வளவு அபாண்டமாக யோசிக்கிறாய்!” என்கிறார். “இதோ பார், இப்படியெல்லாம் பேசாதே. எனக்கு எரிச்சலாக இருக்கிறது. அதுவும் இப்போது இந்தப் பேச்சை எடுக்கிறாய், எதற்காக? க்ளேர்?”

ஆற்றங்காலைப் பார்க்கிறேன். அந்தக் குளத்தை நோக்கி மிதக்கிறேன், கண்கள் திறந்திருக்க, முகம் கவிழ்ந்திருக்க, பாறைகளையும் ஆற்றங்காலின் ஆழத்தில் படர்ந்திருக்கும் பாசியையும் வெறித்தபடி, அந்த ஏரி வரைக்கும் காற்றால் அடித்துச்செல்லப்படுகிறேன். ஏரிக்குள் தள்ளப்படுகிறேன். எல்லாம் அப்படியே. எதிலும் மாற்றமில்லை, நாம் அப்படியே சென்றுகொண்டே, சென்றுகொண்டே, சென்றுகொண்டே இருக்கலாம். எதுவுமே நடக்காததைப் போல இப்போதும் நாம் போய்கொண்டே இருக்கலாம். பிக்னிக் மேசையில் எதிரே உட்கார்ந்திருக்கும் அவரை நான் பார்க்கும் பார்வையின் உஷணத்தைத் தாங்க முடியாமல் அவர் முகம் வெளிறுகிறது.

“உனக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை” என்கிறார். “எனக்கு___”

என்ன செய்கிறோம் என்று உறைப்பதற்கு முன்பே அவரை ஓங்கி அறைகிறேன். கையை உயர்த்தி, ஒரு நொடி தயங்கி, அவர் கன்னத்தில் பலமாக அறைகிறேன். அடிக்கிற அந்தக் கணத்தில் அது அபத்தமாகத் தோன்றுகிறது. விரல்களை ஒன்றுசேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். எதிராளியும் முகத்தை அசைக்காமல் வாகாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதைச் சரியாக நிறைவேற்ற முடியும். அபத்தம்.

நான் மீண்டும் அடிப்பதற்கு முன் அவர் என் மணிக்கட்டைப் பிடிக்கிறார். தன்னுடைய கையையும் உயர்த்துகிறார். குனிந்துகொள்கிறேன். காத்திருக்கிறேன். அவருடைய கண்களில் ஏதோவொன்று வந்து சட்டென்று வெளியேறுவதைப் பார்க்கிறேன். அவர் கைகளைத் தாழ்த்துகிறார். நான் அந்தக் குளத்தில் மேலும் வேகமாக, வேகமாக, அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

“எழுந்திரு, காருக்குப்போ” என்கிறார். “வீட்டுக்குப் போகலாம்.”

“முடியாது, முடியாது” அவரிடமிருந்து பின்னால் நகர்கிறேன்.

“கமான், காட்டாமிட்!”

காரில் செல்லும்போது, “நீ என்னிடம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை” என்கிறார். சன்னலுக்கு வெளியே வயல்களும் மரங்களும் பண்ணை வீடுகளும் பறக்கின்றன. “அநியாயமாக நடந்துகொள்கிறாய். இது நம் இரண்டு பேருக்குமே நியாமல்ல. டீனுக்கும் நியாயமல்ல என்று சொல்வேன். டீனைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப்பார். என்னைப் பற்றி நினைத்துப்பார். உன் இடத்தில் வேறு யாரையாவது வைத்து அவர்களை நினைத்துப்பார்.”

இப்போது அவரிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. சாலையில் கவனமாக இருந்தாலும் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் அவ்வப்போது பார்த்துகொண்டே இருக்கிறார். இரண்டு கால்களையும் மடித்துச் சப்பணமிட்டு நான் உட்கார்ந்திருப்பதை ஓரக்கண்ணால் பார்க்கிறார். வெயில் சுரீரென்னு என் கையிலும் முகத்தின் பக்கவாட்டிலும் அடிக்கிறது. ஓட்டிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பியரைத் திறந்து குடிக்கிறார். அந்த டப்பாவைக் கால்களுக்குக் கீழே எறிந்துவிட்டுப் பெருமூச்செறிகிறார். அவருக்குத் தெரிகிறது. அவர் முகத்தைப் பார்த்துவிட்டு என்னால் சிரிக்க முடியும். அழ முடியும்.

 

2

ன்று காலை அவர் எழுப்பாமல் விட்டிருப்பதால்தான் நான் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதாக ஸ்டூவர்ட் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், நான் அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்துவிட்டேன். அவருடைய மயிரடர்ந்த கால்கள், தடிமனான தூங்கும் விரல்களிலிருந்து தூரமாகத் தள்ளி, படுக்கையின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு, யோசித்தபடி படுத்துக்கொண்டிருக்கிறேன். அவர் டீனை பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புகிறார், சவரம் செய்துகொள்கிறார், உடையணிந்துகொள்கிறார், வேலைக்குக் கிளம்பிச் செல்கிறார். இரண்டு முறை படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்துத் தொண்டையைச் செருமிக்கொள்கிறார். நான் கண்களைத் திறக்காமல் இருக்கிறேன்.

சமையலறையில் அவர் வைத்துவிட்டுச் சென்ற குறிப்புச்சீட்டில் ‘Love’ என்று எழுதப்பட்டிருக்கிறது. வெய்யிலில் சிற்றுண்டி மேசையில் அமர்ந்து காபி அருந்திவிட்டு கோப்பையை அந்தச் சீட்டின் மீது வைக்க, அதில் ஒரு காபி வளையம் உண்டாகிறது. என்னவோ தெரியவில்லை, தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டிருந்தது. நேற்றிரவிலிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. மேசையில் இருக்கும் செய்தித்தாளை அப்படியும் இப்படியுமாகப் புரட்டுகிறேன். பின் அதில் என்னதான் வந்திருக்கிறது என்று படிக்கிறேன். அந்த உடல் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை, யாரும் உரிமைகோரவில்லை, யாரும் அவளைத் தேடத் தொடங்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், கடந்த இருபத்திநான்கு மணிநேரமாக அந்த உடலை சிலர் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள், வெட்டி, துண்டாக்கி, சில பொருட்களைச் சேர்த்து, எடைபோட்டு, அளந்து, மீண்டும் எல்லாவற்றையும் உள்ளே வைத்து, தைத்து, மரணத்துக்கான காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பார்கள். வன்புணர்வுக்கான ஆதாரங்களைத் தேடுவார்கள். வன்புணர்வு என்றால் கொலையைப் புரிந்துகொள்வது எளிதாகிவிடும். விசாரணைகளும் பிணக்கூராய்வும் முடிந்ததும் அவள் உடல் கீத் & கீத் ஈமச்சடங்கு நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்று செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இரண்டு விஷயங்கள் உறுதியாகின்றன: 1) மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மனிதர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. 2) எதுவும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். ஆனாலும், ஸ்டூவர்டுக்கும் எனக்கும் எதுவும் மாறப்போவதில்லை. உண்மையான மாற்றத்தைச் சொல்கிறேன். நாங்கள் இருவரும் வயதாகிப்போவோம். குளியலறைக் கண்ணாடியில், காலைநேரங்களில் எங்களது முகங்களில் ஏற்கனவே தெரிந்துகொண்டிருக்கிறது. எங்களைச் சுற்றியிருக்கும் சில விஷயங்கள் மாறலாம், சில எளிதாக, சில கடினமாக. எப்படியானாலும் எதுவும் உண்மையில் பெரிதாக மாற்றம் அடைந்திருக்காது. நிச்சயமாக. நான் அப்படித்தான் நம்புகிறேன். சில முடிவுகளை எடுக்கிறோம். வாழ்க்கை ஓடுகிறது. வாழ்க்கை நிற்காமல் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதுவாக நிற்கும் வரை. இது உண்மைதான் என்றால், அதற்குப் பிறகு என்ன? அதாவது, இதை நீங்கள் நம்புவதாக இருந்து, ஆனால் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டிருப்பவராக இருந்தால், ஒருநாள் ஏதோவொன்று நிகழ்ந்து அது எதையோ மாற்றிவிடுகிற பட்சத்தில், எதுவுமே எப்போதுமே மாறப்போவதில்லை என்பதைக் கண்டுகொள்கிறீர்கள். அதன் பிறகு என்ன? இதற்கிடையே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை நேற்று இருந்த, அல்லது நேற்றிரவு இருந்த, அல்லது ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இருந்த அதே மனிதராகக் கருதி பேசியும் பழகியும் வருவார்கள். ஆனால், நீங்கள் உண்மையில் ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கிறீர்கள், உங்கள் இதயம் அது சிதைந்திருப்பதை உணர்கிறது…

கடந்த காலம் தெளிவற்று இருக்கிறது. அந்த ஆரம்ப வருடங்களின் மீது ஏதோவொரு படலம் மூடியிருப்பதைப் போல. எனக்கு நிகழ்ந்ததாக ஞாபகத்தில் இருப்பவையெல்லாம் உண்மையில் நடந்தவைதானா என்று உறுதியாகத் தெரியாமல் இருக்கிறது. முன்பு ஒரு பெண் இருந்தாள். அவளுக்குத் தாயும் தந்தையும் இருந்தார்கள். அவளுடைய தந்தை ஒரு சிறிய உணவகம் நடத்திவந்தார். அவளுடைய தாய் அதில் பரிமாறுபவராகவும் காசாளராகவும் இருந்தாள். அந்தப் பெண் தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கும், பின் ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து செயலகப்பணிப் பயிற்சிக் கல்லூரிக்கும் கனவில் நடப்பதைப் போல மாறிமாறிச் செல்கிறாள். பிறகு – அதற்கு வெகுகாலத்துக்குப் பிறகு – இதற்கிடையிலான காலத்தில் மின்னணுச் சாதன நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிகிறாள். அங்கு அவளுக்கு ஒரு பொறியாளரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவன் அவளை வெளியே ‘டேட்டிங்’ வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய நோக்கம் அவளுக்குப் புரிகிறது. தன்னை அவன் துய்ப்பதற்கு அனுமதிக்கிறாள். அச்சமயத்தில் அவளுக்கு ஓர் உள்ளுணர்வு – அந்த வழுவல் நிகழப்போவதைக் குறித்து – வேலைசெய்தது. அது நிகழ்ந்த பிறகு, அவள் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த நுண்ணறிவு அதற்குப் பின் அவளுக்கு வாய்க்கவே இல்லை. சில நாட்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். ஆனால், கடந்த காலம், அவளது கடந்த காலம், நழுவிக்கொண்டே சென்றது. எதிர்காலம் அவளால் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருந்தது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது, ஏதோ ஒரு ரகசியத்தை வைத்திருப்பவளைப் போல புன்னகைக்கிறாள்.

அவர்களுக்குத் திருமணமாகி சுமார் ஐந்து வருடங்களான பிறகு ஒருநாள் ஏற்பட்ட மோசமான வாக்குவாதத்தின்போது, அது எதற்காக ஏற்பட்டது என்று அவளுக்கு நினைவில் இல்லை, அவன் அவளிடம் இந்த உறவு (அவன் “இந்த உறவு” என்ற சொற்களைத்தான் பிரயோகித்தான்) வன்முறையில்தான் முடியப்போகிறது என்கிறான். இதை அவள் நினைவில் வைத்திருக்கிறாள். ஏதோ ஓரிடத்தில் இதைப் பத்திரமாகப் பொதித்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது எடுத்து உரக்கச் சொல்லிக் காட்டுகிறாள். சில நேரங்களில் கார் ஷெட்டின் பின்புறத்தில் டீனுடன் அவனுடைய நண்பர்கள் ஒன்றிரண்டு பேரோடும் காலைநேரம் முழுக்க மணல் விளையாட்டு விளையாடுகிறாள். ஆனால், ஒவ்வொரு நாளும் பிற்பகல் நான்கு மணிக்கு அவளுடைய தலை வலிக்கத் தொடங்குகிறது. நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொள்கிறாள். வலியில் மயக்கம் வருகிறது. ஸ்டூவர்ட் அவளை மருத்துவரிடம் சென்று பார்க்கச் சொல்கிறான். அவள் செல்கிறாள். அந்த மருத்துவரின் கரிசனத்தையும் அக்கறையையும் ரகசியமாக ரசிக்கிறாள். அவர் பரிந்துரைக்கும் ஓர் இடத்துக்கும் சென்று சில நாட்கள் தங்குகிறாள். அவனுடைய அம்மா குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக ஓஹியோவிலிருந்து அவசரமாக வருகிறார். ஆனால், அவள், க்ளேர், எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டு சில வாரங்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள். அவனுடைய தாய், அந்த வீட்டிலிருந்து வெளியேறி, நகரின் மறுபுறத்தில் ஓர் அடுக்ககத்தில் தொற்றிக்கொள்கிறார், எதற்காகவோ காத்துக்கொண்டிருப்பதைப் போல. ஒருநாள் இரவு அவர்கள் இருவருக்கும் தூக்கம் தழுவும் நேரத்தில் அந்த டேவெட் மருத்துவமனையில் சில பெண் நோயாளிகள், ஆணுறுப்பை சுவைப்பதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்ததைக் கேட்டதாகச் சொன்னாள். அதை அவனிடம் சொல்ல வேண்டுமென்று அவள் நினைத்துக்கொண்டிருந்ததாகச் சொன்னாள். இருட்டில் புன்னகைத்தாள். ஸ்டூவர்ட் இதைக் கேட்டதும் மகிழ்ந்து, அவள் கையை வருடுகிறான். எல்லாம் சரியாகிவிடும் என்கிறான். இப்போதிலிருந்து எல்லாமே நல்ல விதமாக மாறி அவர்களுக்கு சிறப்பாக அமையப்போகிறது என்கிறான். அவனுக்குப் பதவி உயர்வும் கணிசமான ஊதிய உயர்வும் கிடைக்கப்போகிறது, அவர்கள் இன்னொரு காரும் - அவளுக்காக ஸ்டேஷன் வாகன் - வாங்கப்போகிறார்கள். அவர்கள் இந்தக் கணத்தில் வாழப்போகிறார்கள். பல வருடங்கள் கழித்து முதன்முறையாக அவன் இறுக்கம் தளர்ந்து லேசாக உணர்வதாகச் சொல்கிறான். இருட்டில் அவள் கைகளைத் தடவிக்கொண்டே இருக்கிறான்... பவுலிங் விளையாட்டிலும் சீட்டாட்டத்திலும் மீண்டும் ஈடுபடத் தொடங்குகிறான். அவனுடைய மூன்று நண்பர்களோடு மீன்வேட்டைக்குச் செல்கிறான்.

அன்று மாலை மூன்று விஷயங்கள் நடக்கின்றன: டீனுடைய பள்ளி நண்பர்கள் அவனுடைய அப்பா மீன் பிடிக்கச் சென்றபோது ஒரு பிணத்தைப் பார்த்ததாகக் கேள்விப்பட்டார்களாம். அதைப் பற்றி அவன் தெரிந்துகொள்ள விரும்புகிறான்.

ஸ்டூவர்ட் வேகமாக விவரிக்கிறார். நடந்ததை முழுசாகச் சொல்லாமல், சுருக்கமாகச் சொல்கிறார். ஆம், அவரும் மூன்று நண்பர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது ஒரு பிணத்தைப் பார்த்தார்கள்.

“அந்தப் பிணம் எப்படியிருந்தது? அது ஒரு பெண்ணா?” டீன் கேட்கிறான். 

“ஆமாம், அது பெண்தான், ஒரு பெண்மணி. அப்புறம் நாங்கள் ஷெரீஃபைக் கூப்பிட்டுச் சொன்னோம்.” ஸ்டூவர்ட் என்னைப் பார்க்கிறார்.

“அவர் என்ன சொன்னார்?”

“அவர் அந்த விஷயத்தை கவனித்துக்கொள்வதாகச் சொன்னார்.”

“அது பார்ப்பதற்கு எப்படி இருந்தது? பயங்கரமாக இருந்ததா?”

“சரி, இந்தப் பேச்சு இத்தோடு போதும்” என்கிறேன். “உன் தட்டைக் கழுவிவிட்டு வா.”

“அது எப்படி இருந்தது? எனக்குத் தெரிய வேண்டும்.”

“நான் உன்னிடம்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். காதில் விழுந்ததா, டீன்? டீன்?” அவனைப் பிடித்து உலுக்க வேண்டும்போல் இருக்கிறது. அவன் அழும் வரை உலுக்க வேண்டும்.

“உன் அம்மா சொல்வதைச் செய்.” ஸ்டூவர்ட் மெதுவாகச் சொல்கிறார். “அது வெறும் உயிரற்ற உடல். அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.”

மேசையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது ஸ்டூவர்ட் பின்னால் வந்து என் கையைத் தொடுகிறார். அவர் விரல்கள் எரிகின்றன. எனக்குத் திடுக்கிடுகிறது. கையில் இருந்த தட்டு தவறி விழப்பார்க்கிறது.

“உனக்கு என்ன ஆயிற்று?” அவர் கையை எடுத்துவிடுகிறார். “சொல்லு, க்ளேர், என்ன இது?”

“நீங்கள் பயமுறுத்திவிட்டீர்கள்.” 

“அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் தொட்டால் உனக்கு ஏன் தூக்கிவாரிப்போடுகிறது?” என் முன்னால் நின்றுகொண்டு லேசாகப் புன்னகைக்கிறார். அவர் கண்களைச் சந்திக்க மறுக்கிறேன். என் இடுப்பில் கையை வைக்கிறார். இன்னொரு கையால் என் கையைப் பிடித்து அவர் பேன்ட்டின் முன்புறத்தில் வைக்கிறார்.

“ப்ளீஸ், ஸ்டூவர்ட்” என்று கையைப் பிடுங்கிக்கொண்டு பின்னால் நகர்கிறேன்.

“எப்படியாவது அழிந்துபோ” என்று கத்துகிறார். “நீ இப்படித்தான் இருப்பாய் என்றால் அப்படியே இரு. ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்.”

“எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?” என்கிறேன் வெடுக்கென்று. மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவரை முறைக்கிறேன்.

“சரி, ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு விரல்களை நெட்டி முறிக்கிறார்.

அன்று மாலை நடந்த இரண்டாவது விஷயம், நாங்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அவர் சாய்விருக்கையில் இருந்தார். நான் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு கையில் ஒரு பத்திரிக்கையோடு சோபாவில் இருந்தேன். டிவியின் சத்தத்தைத் தவிர வீட்டில் வேறு எந்த ஒலிகளும் இல்லை. ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நிகழ்சியை வெட்டிக்கொண்டு அவரசச் செய்தியாக ஒரு குரல் ஒலிக்கிறது. கொலையுண்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. முழு விவரங்கள் இரவு பதினோரு மணிச் செய்திகளில்.

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். சில நிமிடங்கள் கழித்து அவர் எழுந்து, தூங்குவதற்கு முன் சற்று குடிக்கப்போவதாகச் சொல்கிறார். எனக்கு வேண்டுமா?

“வேண்டாம்” என்கிறேன்.

“தனியாகக் குடிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. உன்னைக் கேட்கலாம் என்று நினைத்தேன்” என்கிறார்.

அவர் புண்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நான் பார்வையைத் திருப்பிக்கொள்கிறேன், அவமானத்துடன், அதேசமயத்தில் கோபத்துடனும்.

சமையலறைக்குச் சென்றவர் அங்கேயே வெகுநேரமாக இருக்கிறார். செய்திகள் ஆரம்பிக்கும்போது கையில் கோப்பையுடன் வருகிறார்.

செய்தி வாசிப்பவர் முதலில் மீன் பிடிக்கவந்த உள்ளூர்வாசிகள் நான்கு பேர் அந்தச் சடலத்தைக் கண்ட செய்தியை விவரிக்கிறார். பிறகு, ஒரு பெண்ணின் புகைப்படம் திரையில் காட்டப்படுகிறது. உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் எடுத்த புகைப்படம். அடர்ந்த கரிய கேசத்தோடு வட்டமான முகமும், புன்னகைக்கும் முழுமையான உதடுகளும். அடுத்ததாக அந்தப் பெண்ணின் பெற்றோர் சவக்கிடங்குக்கு அடையாளம் காட்டுவதற்காக வருகின்றனர். சோகமாக, தட்டுத்தடுமாறி மெதுவாக நடந்துவந்து சவக்கிடங்கு வாசற்படிக்கட்டுகளை அவர்கள் அடையும்போது கருப்பு சூட் அணிந்து காத்திருந்த ஓர் அலுவலர் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். அவர்கள் உள்ளே சென்ற காட்சி முடிந்த அடுத்த நொடி அவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வரும் காட்சி வருகிறது. அந்தப் பெண்மனி கண்ணீரோடு வருகிறார். கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்கிறார். அம்மனிதர் தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்குப் பதிலளிப்பதற்காக நிற்கிறார். “இது அவள்தான். என் மகள் சூசன். என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. இந்தக் காரியத்தை செய்தவன், அல்லது செய்தவர்கள் யாரோ அவர்களை உடனே பிடிக்க வேண்டும். இனி இதுபோல மறுபடியும் நடக்கக் கூடாது. இப்படிப்பட்ட கொடூரம்...” அதற்கு மேல் பேச முடியாமல் தொலைக்காட்சி காமிராவைப் பார்த்து பலவீனமாகக் கையை ஆட்டுகிறார். பிறகு, அவர்கள் ஒரு பழைய காரில் ஏறி பிற்பகல் போக்குவரத்தில் சேர்ந்துகொள்கின்றனர்.

எங்கள் நகரத்துக்கு 120 மைல்கள் வடக்கே இருக்கும் சம்மிட் என்ற ஊரில் உள்ள திரையரங்கத்தில் இந்தப் பெண் சூசன் மில்லர் காசாளராகப் பணிபுரிந்து வந்ததாகவும், அவள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு பச்சைநிற கார் அந்தத் திரையரங்கத்தின் முன் வந்து நின்று அவளை அழைத்துக்கொண்டு சென்றதாகவும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறுவதாகச் செய்தி அறிவிப்பாளர் சொல்கிறார். அந்தப் பெண் அந்த காருக்காகக் காத்திருந்ததையும் சகஜமாக காரில் சென்றதையும் பார்க்கும்போது காரில் இருந்த மனிதர் அவளுக்குத் தெரிந்தவராகவோ நண்பராகவோதான் இருக்க முடியும் என்று சாட்சிகள் கருதுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். அந்தப் பச்சை கார் ஓட்டுநரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

ஸ்டூவர்ட் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, நாற்காலியில் சாய்ந்து பியரை உறிஞ்சுகிறார்.

நிகழ்ந்த மூன்றாவது விஷயம், செய்திகள் முடிந்ததும் ஸ்டூவர்ட் சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, என்னைப் பார்த்தது. நான் எழுந்து சோபாவில் என் படுக்கையைத் தயாரிக்கத் தொடங்குகிறேன்.

அவர் குழம்பி, “என்ன செய்கிறாய்?” என்கிறார்.

அவர் கண்களைத் தவிர்த்தபடி, “எனக்குத் தூக்கம் வரவில்லை” என்கிறேன். “கொஞ்ச நேரம் விழித்திருந்து எதையாவது படித்துக்கொண்டிருக்கப் போகிறேன், தூக்கம் வரும் வரை.”

சோபாவில் பெட்ஷீட்டை விரிப்பதை அவர் கண்கொட்டாமல் பார்க்கிறார். தலையணையை எடுக்கப் போகும்போது படுக்கையறை வாசலை மறித்துக்கொண்டு நிற்கிறார்.

“நீ எதை சாதிக்கப்போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

“இன்று இரவு நான் தனியாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசிப்பதற்கு எனக்கு நேரம் தேவை.”

அவர் நீண்ட பெருமூச்செறிகிறார். “நீ இப்படி நடந்துகொள்வது பெரிய தப்பு. நீயே நிதானமாக நினைத்துப்பார். க்ளேர்?”

என்னால் பதிலளிக்க முடியவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரும்பி நின்று படுக்கைவிரிப்பின் ஓரங்களை உள்ளே செருகுகிறேன். அவர் என்னையே முறைத்துக்கொண்டு ஒரு நிமிடத்துக்கு அதிகமாக நின்றுகொண்டிருக்கிறார். அவர் தோள்களை உயர்த்துவது தெரிகிறது. “உன் சௌகரியப்படியே நடந்துகொள். நீ என்ன செய்தாலும் எனக்குக் கவலையோ அக்கறையோ இல்லை.” அவர் கழுத்தைச் சொறிந்துகொண்டே கூடத்துக்குத் திரும்பிச் செல்கிறார்.

 

ன்று காலை செய்தித்தாளில், சூசன் மில்லரின் இறுதிச்சடங்கு சம்மிட் நகரில் ‘சேப்பல் ஆஃப் தி பைன்ஸ்’ஸில் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெறும் என்று செய்தி வந்திருக்கிறது.

அவள் ஏறிச்சென்ற பச்சைநிற ஷெவ்ரலே காரைப் பார்த்த மூன்று பேரிடம் காவல் துறை வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும், காரின் பதிவு எண்ணை அவர்கள் கவனித்திருக்கவில்லை என்றும் அந்தச் செய்தி மேலும் சொல்கிறது. விசாரணை தீவிரமாக நடைபெறுகிறதாம். செய்தித்தாளைக் கையில் வைத்துக்கொண்டு வெகுநேரம் யோசனையில் அமர்ந்திருக்கிறேன். சிகை அலங்கார நிலையத்துக்கு அழைத்து அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கொள்கிறேன்.

 

டி மீது ஒரு பத்திரிக்கையை வைத்துக்கொண்டு சிகை உலர்த்தியின் அடியில் உட்கார்ந்திருக்கிறேன். மில்லி என் விரல் நகங்களைச் சீரமைத்துக்கொண்டிருக்கிறாள்.

அங்கு வேலை செய்துகெண்டிருந்த ஒரு பெண்ணைப் பற்றி விசாரிக்கிறேன். ”நாளை ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறேன்” என்கிறேன்.

மில்லி என்னை நிமிர்ந்து பார்க்கிறாள். நகங்களை நீவிக்கொண்டே, “மிகவும் வருந்துகிறேன். மிஸஸ் கேன்” என்கிறாள். 

“ஒரு சின்னப் பெண்ணின் இறுதிச்சடங்கு” என்கிறேன்.

“அடப்பாவமே” என்கிறாள். ஒரு நிமிடம் கழித்து, “நான் சின்னவளாக இருந்தபோது என் சகோதரி இறந்துவிட்டாள். இன்று வரை அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. இறந்தது யார்?” என்கிறாள்.

“ஓர் இளம்பெண். எனக்கு அவ்வளவு நெருக்கமில்லை, இருந்தாலும்...”

“ரொம்பவும் பரிதாபம். உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. கவலைப்பட வேண்டாம். சடங்குக்கு ஏற்ற வகையில் சிகையமைப்பு செய்துவிடுகிறேன். இது எப்படி இருக்கிறது?”

“இது… பரவாயில்லை. மில்லி, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உனக்கு எப்போதாவது நீ வேறு யாராகவோ இருந்திருக்கலாம் என்றோ, அல்லது யாராகவும் இல்லாமல், அடையாளமற்று வெற்றாக இருந்திருக்கலாம் என்றோ தோன்றியிருக்கிறதா?”

அவள் என்னைப் பார்க்கிறாள். “அதுபோல எப்போதும் எனக்குத் தோன்றியதில்லை. இல்லை, நான் வேறு யாராகவோ இருந்தால் அந்த என்னை எனக்குப் பிடிக்காது என்றே நினைக்கிறேன்.” அவள் என் விரல்களைப் பிடித்துக்கொண்டு எதையோ யோசிப்பதுபோல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். “எனக்குத் தெரியவில்லை, இல்லை, எனக்குத் தெரியவில்லை... சரி, மிஸஸ் கேன் இன்னொரு கையைக் காட்டுங்கள்.”

அன்றிரவு பதினோரு மணிக்கு சோபாவில் மீண்டும் படுக்கையை அமைக்கிறேன். இம்முறை ஸ்டூவர்ட் வெறுமனே என்னைப் பார்க்கிறார், உதடுகளுக்குப் பின்னால் நாக்கைத் துழாவுகிறார். கூடத்தைக் கடந்து படுக்கையறைக்குச் செல்கிறார். நள்ளிரவில் தூக்கம் கலைந்தபோது வேலியின் மீது காற்று கதவை அறைந்துகொண்டிருக்கிறது. எழுந்திருக்க விருப்பமில்லாமல் கண்களைத் திறக்காமல் வெகுநேரம் படுத்திருக்கிறேன். கடைசியில் எழுந்து, தலையணையை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் செல்கிறேன். எங்கள் படுக்கையறையில் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. ஸ்டூவர்ட் வாயைத் திறந்து கனமாக மூச்சு விட்டுக்கொண்டு மல்லாந்து படுத்திருக்கிறார். டீனின் அறைக்குச் சென்று அவனுக்குப் பக்கத்தில் படுத்துக்கொள்கிறேன். தூக்கத்திலேயே நகர்ந்து எனக்கு இடம் கொடுக்கிறான். ஒரு நிமிடம் அப்படியே படுத்திருக்கிறேன். அவனைக் கட்டிப்பிடித்து என் தலையை அவன் கேசத்தில் அழுத்திக்கொள்கிறேன். 

“என்னம்மா?” என்கிறான்.

“ஒண்ணும் இல்லைடா, செல்லம். தூங்கு. ஒண்ணும் இல்லை.”

ஸ்டூவர்டின் அலாரம் ஒலிப்பதைக் கேட்டு எழுந்திருக்கிறேன். காபி வைத்துவிட்டு, காலை உணவு தயாரிக்கிறேன். அவர் சவரம் செய்துகொண்டிருக்கிறார். 

சட்டை இல்லாமல் தோளில் துண்டோடு வந்து சமையலறை வாசலில் நின்று என்னை எடைபோடுகிறவர்போல் பார்க்கிறார்.

“காபி எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறேன். “முட்டை இன்னும் ஒரு நிமிடத்தில் தயாராகிவிடும்.”

அவர் தலையசைக்கிறார்.

டீனை எழுப்புகிறேன். மூவரும் காலை உணவருந்துகிறோம். ஒன்றிரண்டு முறை ஏதோ பேச யத்தனிப்பவரைப் போல ஸ்டூவர்ட் நிமிர்ந்து பார்க்க, அப்போதெல்லாம் நான் டீனின் பக்கம் தலையைத் திருப்பி அவனுக்கு பாலோ ரொட்டியோ வேண்டுமா என்று கேட்கிறேன். 

ஸ்டூவர்ட் புறப்படுகிறார். கதவைத் திறக்கும்போது, “உனக்கு அப்புறம் போன் செய்கிறேன்” என்கிறார்.

நான் அவசரமாக, “நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்” என்கிறேன். “இன்று எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இரவு உணவுக்கே தாமதமாகத்தான் வருவேன் என்று நினைக்கிறேன்.”

“சரி, ஆகட்டும்.” அவர் என்ன விஷயம் என்று கேட்க நினைக்கிறார். பிரீஃப்கேசை ஒரு கையிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக்கொள்கிறார். “இரவு உணவுக்கு வெளியில் செல்லலாமா? என்ன சொல்கிறாய்?” என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை முற்றிலுமாக மறந்துவிட்டிருக்கிறார் என்று புரிகிறது. “உனக்கு... உடம்புக்கு ஒன்றுமில்லையே?”

அவருடைய கழுத்தில் டையை நேராக்கிவிடுவதற்காகத் தன்னிச்சையாகச் சென்ற என் கையை இழுத்துக்கொள்கிறேன். விடைபெறுவதற்காக முத்தமிட முயல்கிறார். நான் ஒரு அடி பின்னால் நகர்ந்துகொள்கிறேன். “சரி, போய்வருகிறேன்” என்கிறார். திரும்பி காருக்குச் செல்கிறார்.

நான் கவனமாக உடையணிந்துகொள்கிறேன். பல வருடங்களாக நான் அணிந்திராத ஒரு தொப்பியை எடுத்துப் போட்டுக்கொள்கிறேன். கண்ணாடி முன் நின்று பார்க்கிறேன். தொப்பியை அகற்றிவிடுகிறேன். மெலிதாக ஒப்பனை செய்துகொள்கிறேன். டீனுக்கு ஒரு சிறிய குறிப்பு எழுதிவைக்கிறேன்.

செல்லமே, அம்மாவுக்கு இன்று பிற்பகல் சில வேலைகள் இருக்கின்றன. இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன். நீ வீட்டிலேயே இருக்க வேண்டும். பின்கட்டில்கூட இருக்கலாம். நானோ அப்பாவோ வரும் வரை வீட்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- Love

என்று எழுதிவிட்டு அந்த Love என்ற சொல்லைப் பார்க்கிறேன். அதை மட்டும் அடிக்கோடிடுகிறேன். இந்தக் குறிப்பை எழுதும்போது ‘பின்கட்டு‘ என்பது ஒரே சொல்லா, இரண்டா என்று தெரியவில்லை. இதற்கு முன் இதை யோசித்ததுமில்லை. இப்போது யோசித்து அந்தச் சொல்லின் நடுவே கோடிட்டு இரண்டாக்குகிறேன்.

பெட்ரோல் நிரப்புவதற்காக வண்டியை நிறுத்தி, சம்மிட் செல்வதற்கு வழி கேட்கிறேன். எனக்குப் பழக்கமான பேரி என்ற நாற்பது வயதான மீசைக்கார மெக்கானிக் ரெஸ்ட்ரூமிலிருந்து வந்து காரின் முன்பக்கத்தில் சாய்ந்துகொண்டு, “சம்மிட்டுக்கா போகிறீர்கள்?” என்று கேட்கிறான். இன்னொரு மெக்கானிக் லூயிஸ், குழாயை பெட்ரோல் டேங்கில் செருகிவிட்டு கார்கண்ணாடியைக் கழுவித் துடைக்கிறான். 

பேரி தன் மீசையின் இரண்டு பக்கங்களையும் விரல்களால் அழுத்தித் தேய்த்துக்கொண்டே என்னை உற்றுப் பார்க்கிறான். “இதைக் கேளுங்கள் மிஸஸ் கேன், சம்மிட் செல்வதற்கு நல்ல சாலை எதுவும் கிடையாது. எந்த வழியில் சென்றாலும் இரண்டு – இரண்டரை மணிநேரமாகிவிடும். மலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். பெண்கள் காரோட்டிச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். சம்மிட்? என்ன வேலை, மிஸஸ் கேன்?”

“கொஞ்சம் வேலை இருக்கிறது” என்கிறேன் மையமாக. லூயிஸ் இன்னொரு காரைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

“ஆ, எனக்கு மட்டும் இங்கே தலைக்கு மேல் வேலை இல்லாவிட்டால்” - உள்ளே பணிமனையைச் சுட்டிக்காட்டுகிறான் - “நானே சம்மிட்டுக்கு காரை ஓட்டிக்கொண்டு வருவேன். சாலைகள் சரியில்லை. அதாவது நன்றாகத்தான் இருக்கும், ஆனால் ஏராளமான திருப்பங்கள், கொண்டைஊசி வளைவுகள்.”

“பரவாயில்லை, போய்விடுவேன், நன்றி.” கார் பம்பர் மீது சாய்ந்துகொள்கிறான். பர்ஸைத் திறக்கும்போது அவன் பார்வையை உணர முடிகிறது.

பேரி கடன்அட்டையை வாங்கிக்கொள்கிறான். “இரவில் பயணிக்காதீர்கள்” என்கிறான். “அதுவொன்றும் நான் சொன்னதைப் போல நல்ல சாலை அல்ல. உங்கள் கார் எதுவும் தொல்லை தராது என்றுதான் நினைக்கிறேன். இந்த காரைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், டயர் வெடிப்பது, பங்க்ச்சர் ஆவதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது. எதற்கும் முன்னெச்சரிக்கையாக டயர்களை சோதித்துப் பார்த்துவிடுகிறேன்.” அவன் முன்சக்கரங்களை ஷூவால் தட்டிப்பார்க்கிறான். “ஜாக்கி போட்டு தூக்கிப் பார்க்கலாம். அதிக நேரமாகாது.”

“வேண்டாம், வேண்டாம், தேவையில்லை. எனக்கு நேரமில்லை. டயர்கள் நன்றாகத்தான் இருக்கின்றன.”

“ஒரு நிமிடம்தான் பிடிக்கும். எதற்கும் முன்னெச்சரிக்கையாக.”

“வேண்டாம். வேண்டாம், வேண்டவே வேண்டாம்! எல்லாம் சரியாத்தான் இருக்கு. நான் போகணும், பேரி...”

“மிஸஸ் கேன்?”

“நான் போகணும்.”

நான் எதையோ கையெழுத்திடுகிறேன். அவன் ரசீதையும் கடன்அட்டையையும், சில ஸ்டாம்புகளையும் தருகிறான். எல்லாவற்றையும் என் பர்ஸுக்குள் வைக்கிறேன். “நிதானமாகச் செல்லுங்கள்” என்கிறான். “போய்வாருங்கள்.”

சாலைப் போக்குவரத்தில் நுழைவதற்கு முன் திரும்பிப் பார்க்கிறேன். அவன் அங்கேயே நின்று கவனித்துக்கொண்டிருக்கிறான். நான் என் கண்களை மூடுகிறேன். பின் திறக்கிறேன். அவன் கையசைக்கிறான். 

முதல் வலதில் திரும்பி, மீண்டும் திரும்பி நெடுஞ்சாலையை அடையும்போது அந்த அறிவிப்புக்குறி தெரிகிறது. சம்மிட் 117 மைல். அப்போது மணி பத்து முப்பது. இதமான வானிலை.

நகரத்தின் விளிம்பில் சரிகைபோல நெடுஞ்சாலை கிராமங்களை, ஓட்ஸ், கரும்பு, பீட்ரூட் வயல்களை, ஆப்பிள் தோட்டங்களை, வெட்டவெளிகளில் அங்குமிங்கும் மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகளைத் தாண்டிச் செல்கிறது. சற்றுநேரத்தில் எல்லாமே மாறுகின்றன. வயல்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன. வீடுகளைவிடக் குடில்கள் அதிகமாக வந்துவிட்டன. திடீரென மலைகள் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. வலதுபுறத்தில் படுபாதாளத்தில் நேச்சஸ் நதி கண்ணாமூச்சி காட்டுகிறது.

சற்றுதூரம் சென்றதும் ஒரு பச்சைநிற மினிலாரி எனக்குப் பின்னால் தெரிகிறது. கடந்து செல்லாமல் பிடிவாதமாகப் பல மைல் தூரத்துக்கு பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அவன் தாண்டிச் செல்லட்டும் என்று தப்பான இடங்களில் வேகத்தைக் குறைக்கிறேன். தப்பான இடங்களில் கூட்டுகிறேன். விரல் வலிக்கும் வரை ஸ்டீயரிங் வீலை அழுத்திப் பிடிக்கிறேன். பிறகு, வளைவுகளற்ற நீண்ட சாலைப்பகுதி ஒன்றில் அவன் வேகமாக நெருங்கிவந்து கொஞ்ச நேரத்துக்கு என் காருக்கு இணையாகவே ஓட்டிக்கொண்டு வருகிறான். நீலநிறத் தொழிற்சாலைச் சீருடையில் ஒட்ட வெட்டப்பட்ட முடியோடு ஆரம்ப முப்பதுகளில் இருப்பவன். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம். கையசைத்துக் காட்டுகிறான். ஹாரனை இரண்டு முறை அடித்துவிட்டு என்னைக் கடந்து போகிறான்.

நான் வேகத்தைக் குறைத்து, பக்கவாட்டில் பிரிந்த ஒரு புழுதிச் சாலைக்குள் திருப்பி வண்டியை நிறுத்துகிறேன். அடர்ந்திருந்த மரங்களுக்குக் கீழே அதலபாதாளத்திலிருந்து நதியின் சலசலப்பைக் கேட்க முடிகிறது. எனக்கெதிரே புழுதிச்சாலை மரங்களுக்கிடையே புகுந்து மறைகிறது. அந்த மினிலாரி திரும்பிவரும் சத்தம் கேட்கிறது.

வண்டியைக் கிளப்ப முயலும்போது அந்த வண்டி பின்னால் வந்து நிற்கிறது. கதவுகளைப் பூட்டிவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிடுகிறேன். கியர் போடும்போது முகத்திலும் கைகளிலும் வியர்வை முத்துகள் துளிர்க்கின்றன. ஆனால், வண்டியை எடுப்பதற்கு இடம் இல்லை. 

அவன் லாரியிலிருந்து இறங்கி காருக்கு அருகே வந்து, “ஏதாவது பிரச்சினையா?” என்கிறான். “ஹலோ, ஹலோ. இங்கே பாருங்கள்.” கண்ணாடியைத் தட்டுகிறான். “உங்களுக்கு ஒன்றுமில்லையே?” அவன் காரின் கதவில் கைகளை ஊன்றிக்கொண்டு முகத்தைக் கண்ணாடிக்கு அருகில் கொண்டுவருகிறான். 

அவனை முறைக்கிறேன். வார்த்தைகள் வரவில்லை.

“தாண்டிச் சென்றதும் கொஞ்சதூரம் கழித்து வேகத்தைக் குறைத்தேன். உங்கள் வண்டி பின்னால் தெரியாததைப் பார்த்து சில நிமிடங்கள் காத்திருந்தேன். அதன் பிறகும் நீங்கள் வராததால் என் வண்டியைத் திருப்பிக்கொண்டு வந்து பார்க்கலாம் என்று நினைத்தேன். எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது? ஏன் இந்த இடத்தில் வண்டியை நிறுத்தியிருக்கிறிர்கள்? 

ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டுகிறேன்.

“சரி, சன்னல் கண்ணாடியை இறக்குங்கள், ஹே, உங்களுக்குப் பிரச்சினை ஏதும் இல்லையே? ம்? இப்படி வனாந்திரத்தில் ஒரு பெண் தனியாக இருப்பது நல்லதல்ல என்று உங்களுக்குத் தெரியாதா?” அவன் தலையை ஆட்டிக்கொண்டு எதிரே நெடுஞ்சாலையைப் பார்க்கிறான். பிறகு என்னிடம் திரும்பி, “சரி, கண்ணாடியை இறக்குங்கள், சரியா? இப்படியே நம்மால் பேசிக்கொண்டிருக்க முடியாது.”

“ப்ளீஸ், நான் போக வேண்டும்.”

“கதவைத் திறங்கள், சரியா?” என்கிறான். சொன்னதைக் கேட்காததுபோல. “கொஞ்சம் கண்ணாடியை இறக்குங்கள். மூச்சு திணறிவிடும். “அவன் என் மார்புகளையும் கால்களையும் நோட்டம் விடுகிறான். என் பாவாடை முட்டிக்கு மேலே வந்துவிட்டிருக்கிறது. அவன் கண்கள் என் கால்களின் மீது அலைகின்றன. நான் பயத்தில் அசையாமல் அமர்ந்திருக்கிறேன். 

“நான் மூச்சு திணறிக்கொண்டுதான் இருக்கிறேன், தெரியவில்லையா?” என்கிறேன்.

“எக்கேடும் கெட்டுப்போங்கள்” என்று பின்னால் நகர்கிறான். திரும்பி அவன் லாரிக்குச் செல்கிறான். எனது சைடு மிரரில் அவன் திரும்பிவருவது தெரிகிறது. என் கண்களை மூடிக்கொள்கிறேன்.

“சம்மிட்டுக்கோ அல்லது வேறு எங்கே நீங்கள் போகும் வரை உங்களுக்குப் பாதுகாப்பாக நான் பின்னாலேயே வருகிறேன். எனக்கு ஒன்றும் அவசர வேலை எதுவும் இல்லை. வரட்டுமா?”

நான் மீண்டும் தலையாட்டி மறுக்கிறேன்.

அவன் தயங்கி தோள்களைக் குலுக்கிக்கொள்கிறான். “அப்படியானால் போய்க்கொள்ளுங்கள்” என்கிறான்.

அவன் நெடுஞ்சாலையை அடையும் வரை காத்திருக்கிறேன். வண்டியைக் கிளப்புகிறேன். அவன் கியர்களை மாற்றி மெதுவாக வேகமெடுக்கிறான். ரியர்வியூ மிரரில் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறான். நான் அந்தப் புழுதிச்சாலையின் முடிவில் வண்டியை நிறுத்தி, ஸ்டீயரிங் வீலில் தலையைச் சாய்த்துக்கொள்கிறேன். 

 

வப்பெட்டி மூடப்பட்டு மலர்கள் தூவப்படுகின்றன. தேவாலயத்தின் பின்வரிசையில் ஓர் இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே ஆர்கன் இசைக்கத் தொடங்குகிறது. மக்கள் வரிசையாக வந்து இருக்கைகளைத் தேடி அமர்ந்துகொண்டிருக்கின்றனர். நடுத்தர வயதினரும் முதியவர்களும் அங்கங்கே தென்பட்டாலும் பெரும்பாலும் ஆரம்ப இருபதுகளிலும், அதைவிடக் குறைவான வயதிலும் இருப்பவர்கள். சூட் - டையிலும், ஸ்போர்ட்ஸ் கோட், ஸ்லாக்குகளிலும், கருப்புக் கண்ணாடிகளிலும், கையுறைகளிலும் அசௌகரியமாக சிலர் இருப்பதைக் காண முடிகிறது. பளீரிடும் வண்ணத்தில் பேன்ட்டும், கையில்லாத மஞ்சள் சட்டையும் அணிந்திருந்த பையன் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து உடனே நகத்தைக் கடிக்கத் தொடங்குகிறான். தேவாலயத்தின் பக்கவாட்டுக் கதவு ஒன்று திறக்க, வெளியே தெரிந்த வாகன நிறுத்துமிடம் எனக்கு ஒரு புல்வெளியை நினைவூட்டுகிறது. கார்களின் சன்னல் கண்ணாடிகளில் சூரியன் பளீரிடுகிறது. அந்தக் குடும்பத்தினர் ஒரு குழுவாக உள்ளே நுழைகிறார்கள். பக்கவாட்டில் திரையிட்டிருந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் உட்காரும் இருக்கைகள் கிறீச்சிடுகின்றன. சில நிமிடங்கள் கழித்து கருப்பு சூட் அணிந்த, பொன்நிறக் கேசத்தில் இருந்த ஒரு பருமனான ஆள் தோன்றி எங்களைத் தலைதாழ்த்திக்கொள்ளச் சொல்கிறார். உயிரோடு இருக்கும் எங்களுக்காக சுருக்கமாக ஒரு பிரார்த்தனை சொல்கிறார். அதை முடித்ததும் காலம்சென்ற சூசன் மில்லரின் ஆத்மாவுக்காக அமைதியாகப் பிரார்த்திக்கக் கேட்டுக்கொள்கிறார். கண்களை மூடி, செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த அவள் படத்தை நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பெண் திரையரங்கிலிருந்து வெளிவந்து பச்சைநிற ஷெவ்ரலே காரில் ஏறிக்கொள்வது என் கண்ணுக்குள் தெரிகிறது. பிறகு, அவள் நதியில் மிதப்பது தெரிகிறது. அந்த நிர்வாண உடல் பாறைகளில் மோதி, மரக்கிளைகளில் சிக்கி, மிதந்து, தண்ணீரில் சுழன்றுகொண்டிருக்க, ஓடும் ஆற்றில் அவள் கூந்தல் அவிழ்ந்து அலையலையாக நெளிகிறது. பிறகு, ஆற்றின் மீது தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கிளைகளில் அவள் கைகளும் தலைமுடியும் சிக்கிக்கொள்கின்றன. அப்புறம், நான்கு மனிதர்கள் வருகின்றனர். அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நல்ல போதையில் இருக்கும் ஒரு மனிதன் (ஸ்டூவர்ட்) நீரில் இறங்கி அவள் மணிக்கட்டைப் பற்றி இழுத்துவருவது என் மனக்கண்களில் தெரிகிறது. இங்கு இருக்கும் யாருக்காவது அதைப் பற்றித் தெரிந்திருக்குமா? இவர்களுக்குத் தெரிந்திருந்தால் என்ன? அந்த முகங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறேன். இந்த விஷயங்கள், இந்தச் சம்பவங்கள், இந்த முகங்கள் எல்லாவற்றோடும் ஓர் இணைப்பு இருப்பதை என்னால் கண்டுகொள்ள முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி யோசிக்க யோசிக்க என் தலை வெடித்துவிடும்போல வலிக்கிறது.

அவர் சூசன் மில்லரின் திறமைகளைப் பற்றிப் பேசுகிறார்: எப்போதும் உற்சாகமான, அழகான, நளினமான, சுறுசுறுப்பான பெண். மூடிய திரைக்குப் பின்னால் யாரோ செருமுவது கேட்கிறது. யாரோ விம்முகிறார்கள். ஆர்கள் இசை தொடங்குகிறது. வழிபாடு நிறைவடைகிறது.

மற்றவர்களோடு சேர்ந்து நானும் சவப்பெட்டியை மெதுவாகச் சுற்றிவருகிறேன். முன்வாசற்படிகளில் மெதுவாக இறங்கிப் பிரகாசமான பிற்பகல் வெயிலுக்குள் நுழைகிறேன். எனக்கு முன்னால் படிக்கட்டுகளில் தட்டுத்தடுமாறி இறங்கி வந்த அந்த நடுத்தரவயதுப் பெண்மணி கீழே நடைவழியில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள். என் மீது பார்வை திரும்பியதும், ”அவனைப் பிடித்துவிட்டார்கள்” என்கிறாள். “அதுமட்டும்தான் ஒரே ஆறுதல். இன்று காலை அவனைக் கைது செய்திருக்கிறார்கள். இங்கே வருவதற்கு முன் வானொலியில் கேட்டேன். இதே ஊரில் இருப்பவன்தான். நீளமாகத் தலைமயிர் வைத்திருந்தானாம்.” கொதிக்கும் நடைவழிப் படிக்கட்டுகளில் சில தப்படிகள் செல்கிறோம். கார்களைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். வண்டி நிறுத்திடக் கட்டணத்துக்கான நாணயத்தை உண்டியலில் போடுகிறேன். சூரிய வெளிச்சம் கார்களின் கூரைகளிலும் பம்பர்களிலும் பளீரிடுகிறது. எனக்குத் தலைசுற்றுகிறது. “அன்று இரவு அவளோடு உறவுகொண்டதை ஒப்புக்கொள்கிறான். ஆனால், அவளைக் கொல்லவில்லையாம்.” அவள் சீறுகிறாள். “இதற்கப்புறம் என்ன நடக்கப் போகிறது என்று நம் எல்லோருக்கும்தான் தெரியுமே. அவனைப் பிடித்துச் சிறையில் போடுவார்கள். அப்புறம் விட்டுவிடுவார்கள்.”

“அவன் மட்டும் தனியாகச் செய்திருக்க மாட்டான்” என்கிறேன். “அவர்கள் சரியாக விசாரிக்க வேண்டும். அவன் வேறு யாரையோ சகோதரனையோ அல்லது நண்பர்களையோ காட்டிக்கொடுக்காமல் மூடிமறைக்கிறான் என்று நினைக்கிறேன்.”

“அந்தப் பெண் குழந்தையாக இருந்ததிலிருந்து எனக்குத் தெரியும்” என்கிறாள். அவள் உதடுகள் துடிக்கின்றன. “வீட்டுக்கு வந்து குக்கீஸ் தயாரிப்பாள். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவாள்.” அவள் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு தலையைக் குலுக்கிக்கொள்கிறாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிகிறது.

 

3

மேசையில் மதுக்கோப்பையுடன் ஸ்டூவர்ட் அமர்ந்திருக்கிறார். அவர் கண்கள் சிவந்திருக்கின்றன. அவர் அழுதுகொண்டிருக்கிறாரோ என்று ஒரு நிமிடம் தோன்றுகிறது. எதுவும் பேசாமல் நிமிர்ந்து பார்க்கிறார். திடீரெனத் தோன்றிய ஒரு கலவரக் கணத்தில் டீனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று ஓர் எண்ணம் வெட்டி என் இதயம் கவிழ்கிறது. 

“எங்கே இருக்கிறான்? டீன் எங்கே?”

“வெளியே” என்கிறார்.

“ஸ்டூவர்ட், எனக்கு ரொம்ப பயமா இருக்கு, பயமா இருக்கு.” கதவில் சாய்கிறேன். 

“எதற்காக உனக்கு பயம், க்ளேர்? சொல்லு, அன்பே, நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நான் உனக்கு உதவுவேன். நம்பு. கணவனிடம் சொல்வதற்கென்ன?”

“என்னால் சொல்ல முடியவில்லை” என்கிறேன். “எனக்கு பயமா இருக்கு, எனக்கு, எனக்கு…”

கோப்பையைக் காலிசெய்துவிட்டு, என் மீது பதித்திருந்த பார்வையை விலக்காமல் எழுந்து நிற்கிறார். “அன்பே, உனக்கு என்ன வேண்டியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான்தான் உனக்கு டாக்டர், சரியா? டேக் இட் ஈஸி.” அவர் என் இடுப்பைச் சுற்றி அணைத்துக்கொண்டு, மற்றொரு கையால் என் மேல்கோட்டின் பட்டன்களையும், அதன் பின் என் ஜாக்கெட்டின் பட்டன்களையும் அவிழ்க்கத் தொடங்குகிறார். “முதலில் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்ய வேண்டும்” என்கிறார். ஜோக் அடிக்கிறாராம்.

“இப்போது வேண்டாம். ப்ளீஸ்” என்கிறேன்.

“இப்போது வேண்டாம். ப்ளீஸ்” என்று என்னைப் போலவே பேசி கிண்டல் செய்கிறார். “ப்ளீஸாவது ஒன்றாவது” என்றபடி என் பின்னால் சென்று கையை இடுப்பிலிருந்து ஜாக்கெட்டுக்குள் நுழைத்து என் பிரேஸியரை அவிழ்க்கிறார்.

“வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” அவர் கால்களை ஓங்கி மிதிக்கிறேன். 

அவர் அப்படியே என்னைத் தூக்கி, தொப்பென்று கீழே போடுகிறார். அலங்கோலமாக விழுந்து, தடுமாறி எழுந்து தரையில் உட்கார்ந்து அவரை ஏறிட்டுப் பார்க்கிறேன். கழுத்து கடுமையாக வலிக்கிறது. என் பாவாடை முட்டிக்கு மேல் வழிந்திருக்கிறது. அவர் குனிந்து என்னிடம் கத்துகிறார். “எக்கேடும் கெட்டுப்போ, நாயே. உன் யோனி அழுகி கீழே விழும் வரை உன்னை நான் தொட மாட்டேன்.” அவர் தேம்புகிறார். நான் ஒன்றும் செய்வதற்கில்லை. அவரும் எதுவும் செய்வதற்கில்லை. அங்கிருந்து அவர் வேகமாக வசிப்பறைக்குப் போவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.

 

நேற்றிரவு அவர் வீட்டுக்கு வரவில்லை.

இன்று காலை மலர்கள் வருகை புரிந்தன. சிவப்பிலும் மஞ்சளிலும் கிரைஸாந்தீமம் மலர்கள். காபி அருந்திக்கொண்டிருக்கும்போது அழைப்புமணி அடிக்கிறது.

“மிஸஸ் கேன்?” மலர்க்கொத்துகள் பொட்டலத்தை வைத்திருக்கும் இளைஞன் கேட்கிறான்.

நான் தலையசைத்து, இரவு உடையின் கழுத்து நாடாவை இறுக்கிக்கொள்கிறேன். 

“இதை அனுப்புமாறு தொலைபேசியில் ஒருவர் ஆர்டர் செய்தார். தன் பெயரைச் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரியும் என்றார்.” அந்தப் பையன் என் உடையைப் பார்க்கிறான். கழுத்தில் சற்று திறந்திருப்பதைப் பார்க்கிறான். தொப்பியை சரிசெய்துகொள்கிறான். முன்படியில் கால்களை அழுத்தமாகப் பரப்பிவைத்து நின்றுகொண்டிருக்கிறான், ஏதோ நான் அவனைக் குனிந்து தொட வேண்டும் என்பதைப் போல. “உங்களுக்கு நல்ல தினமாக அமையட்டும்” என்கிறான். 

சிறிது நேரம் கழித்து தொலைபேசி அடிக்கிறது. ஸ்டூவர்ட். “அன்பே, எப்படி இருக்கிறாய்? வீட்டுக்குச் சீக்கிரம் வந்துவிடுவேன். ஐ லவ் யூ. நான் சொல்வது கேட்கிறதா? ஐ லவ் யூ, ஐ அம் ஸாரி. நான் இனி உனக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறேன். குட்பை. நான் வேலைக்கு ஒட வேண்டும்.”

மலர்களை ஒரு ஜாடியில் செருகி சமையலறை மேசையின் நடுவில் வைக்கிறேன். என் பொருட்கள் எல்லாவற்றையும் கூடுதலாக இருக்கும் மற்றொரு படுக்கையறைக்கு மாற்றிக்கொள்கிறேன்.

நேற்றிரவு, நள்ளிரவில் ஸ்டூவர்ட் எனது அறையின் பூட்டை உடைக்கிறார். அவர் கதவைத் தள்ளியபோது திறக்காததால் பூட்டை உடைத்துக்கொண்டு வர முடியும் என்று எனக்குக் காட்டுவதற்காக என்று நினைக்கிறேன். வெறும் அண்டர்வேருடன் முகத்தில் வியப்பும் முட்டாள்தனமும் தெரிய நிற்கிறார். முகத்தில் இருந்த கோபம் விலகுகிறது. மெதுவாகக் கதவை மூடிவிட்டுச் செல்கிறார். சில நிமிடங்கள் கழித்து சமையலறையில் ஐஸ்கட்டிகளை ட்ரேயிலிருந்து பெயர்த்தெடுக்கும் சத்தம் கேட்கிறது.

இன்று என்னை அழைக்கிறார். அவர் அம்மாவை எங்களுடன் சில நாட்கள் தங்குவதற்காக அழைத்திருப்பதாகச் சொல்கிறார். ஒரு நிமிடம் பதில் பேசாமல் அதைப் பற்றி யோசித்துவிட்டு, அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே போனை வைத்துவிடுகிறேன். சிறிது நேரம் கழித்து, அவரது அலுவலக எண்ணுக்கு அழைக்கிறேன். இணைப்பில் அவர் வந்ததும், “அதற்கு அவசியமில்லை, ஸ்டூவர்ட், அது எந்த விதத்திலும் பலனளிக்கப் போவதில்லை” என்கிறேன்.

“ஐ லவ் யூ” என்கிறார்.

அவர் வேறு ஏதோ சொல்கிறார். கேட்டுக்கொண்டே மெதுவாகத் தலையசைக்கிறேன். தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்தவுடன், “கடவுளே அவள் ஒரு குழந்தை, ஸ்டூவர்ட்” என்கிறேன்.

தமிழில்: ஜி.குப்புசாமி

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

பருவநிலை மாற்றம்மெக்காலேமார்க்கண்டன்திராவிட நிலம்ராஜஸ்தானில் பிராமணர்ஜெய்பீம் ஞானவேல்சென்னை போக்குவரத்து நெரிசல்வருவாய் பற்றாக்குறைகாவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழிமுதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்கடலூர்பிரேசில் அதிபர்ரவிச்சந்திரன் அஸ்வின்இந்திய அறிவியல்தமிழகக் காவல் துறைகாஷ்மீர் 370மொழிச் சிக்கல்நிலக்கரி தட்டுப்பாடுமாவட்ட ஆட்சியர்மோடி குஜராத்கிசுமுடால்ஸ்டாய்சுட்டுரைகள்கான்ஷிராம்தன்னிலைஅலுவலகப் பிரச்சினைபிரதமரின் மௌனம்சிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிமத்திய கிழக்கு நாடுகள்பைஜூஸ் ஊழியர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!