கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு

மூன்றே மூன்று சொற்கள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
26 Jul 2023, 5:00 am
0

ந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரம் வரை (24.07.23 மாலை 09.17) இந்தியாவின் பிரதமர் ‘மணிப்பூரில் வன்முறையை நிறுத்துங்கள்’ என்கிற மூன்று சொற்களைச் சொல்லி இருக்கவில்லை. இதைச் சொல்வதற்கு ஒரு விநாடிகூடத் தேவைப்படாது. அவருடைய அரசியல் பயணத்தையும், முந்தைய வன்முறைச் சம்பவங்களின்போது அவர் நடந்துகொண்ட விதத்தையும் நன்கு அறிந்தவர்களால் அவரது மெளனத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.  

ஆயினும் அவரை விரும்பாதவர்கள் உட்பட அவர் பேச வேண்டும் என ஏன் கருதுகிறார்கள் என்றால் இந்த நாட்டின் பிரதமராக அவர் சொல்லக்கூடிய சொற்களுக்கு ஒரு மதிப்பு உண்டு என்று நம்புவதால் மட்டுமே. 

இந்தியாவில்தான் ஒரு ஜிகாபைட்டிற்கான இணையக் கட்டணம் மிகக் குறைவு என்ற செய்தியைப் பரப்புகின்றவர்கள்கூட, இந்தியாதான் இணையத்தை முடக்குவதில் முதலிடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்வதில்லை. இன்று இணையத்தை முடக்கினால் எவ்விதக் கொடூர நிகழ்வுகளையும் நிகழ்த்திவிட முடியும்.  

வழமையான ஊடகங்கள், நம்பகத்தன்மைக்கு இன்றும் அவற்றால் பங்களிக்க முடியும் என்றாலும் அவற்றின் நிலைமை புதிதாக நாம் விவாதிக்கத் தேவை இல்லாத இடத்திற்கு நகர்ந்துவிட்டது. ஆனாலும், மணிப்பூர் வன்முறையை அவை போதிய அளவில் விவாதிருத்திருக்கவில்லை.  ’போதிய அளவு’ என்பதன் வரையறை என்ன?  

இது நெடும் விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்றாலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் மணிப்பூர் ஒரு பெரும் நிகழ்வாக விவாதிக்கப்படவில்லை என்பதை அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றவர்கள் குறைந்த அளவிலேனும் இன்று அறிவார்கள். ஆகவே, ஊடகங்களும் ஏறக்குறைய மெளனத்தில் அல்லது குறைவான சத்தத்தோடு நின்றுவிட்டன.  இந்தியாவின் பிரதமர் பேசினால் அதனை தங்கள் சிரத்தின் மேல் கொண்டு செல்லும் வேலையை அவை செய்யும். 

காந்தியின் இல்லாமை…

நான் காந்தியன் இல்லை என்றாலும், இதைக் காட்டிலும் பல மடங்கு வன்முறைச் சம்பவங்களும், கொடூரங்களும் நிகழ்ந்த பிரிவினைக் காலத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு நடுவே நின்று வன்முறையை நிறுத்தச் சொன்ன ஒரு குரலாக, வெறுமே ஊடகங்களில் அல்லாமல் களத்திற்குச் சென்ற காந்தியைப் போன்ற ஒரு தலைவர் இன்று இல்லாதது, இன்று மட்டுமல்ல, இனிமேல் உருவாகும் வாய்ப்பும் இல்லாமல் போனது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.  

காந்தியால் வன்முறை நின்றதா? அவர் சென்ற பகுதிகளில் குறைந்திருக்கலாம்.  பிரிவினையின் ரத்தக் களறி தொடங்கியதை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால், அதை நிறுத்துவதற்கு அவர் முயலாமலும் இல்லை. தனது குரலை பல தரப்பினரும் கேட்பார்கள் என்று அவர் நம்பினார். இன்று அப்படி ஒரு குரல் இல்லை. ஏனெனில், நமது தலைவர்கள் தோல்வியை விரும்பாதவர்கள். ஆகவே, இப்படியொரு பெருமுயற்சிக்கு விரும்பாதவர்களும்கூட. 

குறைந்தது இந்திய அளவிலான கூட்டமைப்பு ஒன்றை இந்நேரம் ஏற்படுத்தி மணிப்பூர் செல்வதற்கு முயற்சி செய்திருக்கலாம். ஒரு சாதாரணக் குடிமகனாக நான் இதை எளிதாகச் சொல்லிவிடலாம். அதைச் செய்வது கடினமே என்றாலும்கூட கடினமானதைச் சிந்தித்துச் செயலாற்றுவதல்லவா தலைமை!

சமூக ஊடகங்களில் ஊதிப் பெருகிய சாதாரண மக்களின் பிம்பங்களைப் போலவே தலைமைகளும் பிம்பப் பெருக்கம் மட்டுமா?  இந்தியா முழுமைக்குமான தலைமை என்ற ஒன்று இல்லை எனினும் பிரதமரை அனைவரும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.  

பணமதிப்பிழப்புச் செய்தபோது சமூகத்தின் கடையர்களும் தவிர்க்கவே முடியாமல் அவர் பெயரை அறிந்தார்கள். நான் அவரை காந்தியோடு ஒப்பிடவில்லை. ஆனால், அவரது குரல் இந்த நாட்டின் எல்லா மூலைகளையும் அடையும் உச்ச அளவை எட்டியிருக்கிறது.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி

சமஸ் | Samas 06 Jul 2023

குற்றமும் எதிர்வினைகளும்

குற்றங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிற அளவிற்கு குற்றங்களுக்கான எதிர்வினைகளை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ‘க்ரைம் இஸ் யுனிவெர்சல், த ரெஸ்பான்ஸ் இஸ் லோக்கல்’ (Crime is universal, the response is local) என்றே கருதுகிறேன். 

ஒரு குற்றத்திற்கான எதிர்வினை மொழி, இனம், நாடு, கலாச்சாரம், அண்மை, அதன் அளவு இவற்றைப் பொறுத்து மாறும். உதாரணத்திற்கு ஈழப் போரின்போது எழுந்த தமிழர்களின் உணர்வு, உக்ரைன் போரில் இல்லாமல் போனது இயல்பானது.  

வன்முறைக்கு எதிரான சமூகத்தின் எதிர்வினை தேர்ந்தெடுப்பிற்கு உள்ளானது மட்டுமல்ல சமூகக் கட்டமைப்பினால், அதன் கலாச்சார யதார்த்தத்தினால் உருவானதும்கூட. ஆயினும் கடந்த பத்தாண்டுகளில் குற்றத்தை அணுகும் விதம் பிரிவினையினாலும், முன்முடிவுகளாலும் ஆட்பட்டுள்ளதை அறிகிறோம்.  

அடையாளங்களே குற்றமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலை நாம் பார்க்கிறோம். அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான ஒரு கூட்டுக் குரல் இன்று சாத்தியமா? ‘கூட்டு’ என்பதே இன்று சாத்தியம் இல்லையோ என்கிற இடத்தில் இருக்கிறோம். ஆகவே, சூழல் காதைத் துளைக்கும் ஓசைகளால் நிரம்பி இருந்தாலும் அங்கே ஒரு மெளனம் நிலவுகிறது. இது யாருடைய மெளனம்?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

ராமச்சந்திர குஹா 25 Jul 2023

நாகரிகம் எனும் பாவனை

நான் ஓர் ஆண். பெண்களின் மீது எல்லா வன்முறைகளையும் செலுத்துகிற வாய்ப்பைப் பெற்றிருப்பவன். பெண்ணை அச்சத்திற்கு உள்ளாக்கும் இருப்பைக் கொண்டிருப்பவன். நூறு பெண்களின் மத்தியில் ஓர் ஆண் நடமாடுவதற்கும், நூறு ஆண்களின் மத்தியில் ஒரு பெண் நடமாடுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவன். 

எனினும், மணிப்பூரில் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக்கு உள்ளான பெண்களின் மீது நான் கொள்ளும் பரிதாப உணர்ச்சி அர்த்தமுள்ளதா அல்லது பாவனையா என்று யோசிப்பதைக் காட்டிலும் (இவ்வாறு சிந்திப்பதைத்தான் பின்நவீனத்துவமும், ‘தன்னிலை’யை முன்னிலைப்படுத்தியே எதையும் அணுக முடியும் என்ற சிந்தனைகளும் கற்பித்திருக்கின்றன), ‘மணிப்பூரில் வன்முறையை நிறுத்துங்கள்’ என்று நான் சொல்வது பாவனையாகவே இருந்தாலும்கூட, அதுவே நான் சொல்ல வேண்டியது என்று நினைக்கிறேன். நாகரிகமே (Civilization) அடிப்படையில் பாவனைதான்.  

மூன்றே மூன்று சொற்களைக் கேட்பதற்கு, இரு பெண்களின் நிர்வாண ஊர்வலம் நிகழ்த்தப்பட்டு அதை நிகழ்த்தி இருக்கக்கூடியவர்களில் யாரோ ஒருவனின் கைகளில் இருந்து காணொலி பரவ வேண்டி இருக்கிறது. மெளனத்தை நிர்வாணமும் அசைக்க முடியவில்லை என்றால் நாம் நிச்சயமாக ஒரு பெருஞ்சுழலில் சிக்கியிருக்கிறோம்.  

 

தொடர்புடைய கட்டுரைகள்

மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?
மோடி அரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம்
மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி
ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தமிழ் எழுத்தாளர். வங்கியாளர். 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.


1






இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைஎழுத்தாளர்கிளாட் டூ2024: ஆட்டம் முடிந்துவிடவில்லை15வது நிதி ஆணையம்தடுப்புத் தட்டிமாய குடமுருட்டிமுக்கியமானவை எண்கள்ஹிஜாப்சில முன்னெடுப்புகள்வெகுஜன சினிமாகடின உழைப்புபெருந்தொற்றுபன்னி சோலட்டு பிரசாதம்கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்பூர்ணேஷ் மோடிமூன்று மாநிலங்கள்எதிர்க்கட்சிகள்உரம்கேள்விவளமான பாரதம்தொற்றுநோய்கள்இல.சுபத்ராமைய நிலத்தில் ஒரு பயணம்டெல்லி லாபிதமிழகக் கல்வித் துறைபுரட்சியாளர்கள்பத்ரிமுதலாவது பொதுத் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!