கட்டுரை, தொடர், கலாச்சாரம், தொழில்நுட்பம் 5 நிமிட வாசிப்பு

சைபர் வில்லன்கள்: செக்ஸ்டார்சன்

ஹரிஹரசுதன் தங்கவேலு
28 May 2022, 5:00 am
3

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் (The International Council of electronic commerce consultants) அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார்.  சமூக வலைதளங்களில் இது தொடர்பில் தொடர்ந்து எழுதிவரும் இவருக்குப் பெரும் வாசகக் கூட்டம் உண்டு. நம்முடைய ‘அருஞ்சொல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவத் தொடர் வெளிவருவதுபோல சனிக்கிழமைகளில் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கையாள வழிகாட்டும் தொடர் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், மோசடிகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளிலிருந்து அதை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

ஹேக்கிங் தொழில் இன்று எவ்வளவு கோடிகள் புழங்கும், எப்படி ஒரு படைத் தாக்குதல்போல நடக்கும் தனி பிரதேசம் என்பதை இந்தத் தொடரில் எழுதவிருக்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு. இடையிடையே மோசடிகளை எதிர்கொள்ள வாசகர்கள் கேட்கும் வழிமுறைகளுக்கும் யோசனை சொல்லவிருக்கிறார். இனி சனிதோறும் ‘சைபர் வில்லன்கள்’ வெளிவரும். ‘செக்ஸ்டார்சன்’ குற்றத்திலிருந்து தொடங்கிடுவோம்! 

அவினாஷ், எம்.பி.ஏ பட்டதாரி, பெங்களூரில் அம்மா, அப்பா, அக்கா என ஒரு அழகான குடும்பம். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும், தன் குடும்பத்தை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவினாஷுக்கு நிறையக் கனவுகள் உண்டு. ஆனால், அத்தனை கனவுகளையும் சுக்குநூறாய் உடைத்துவிட்டு 2021 மார்ச் 23 அன்று அவினாஷ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

அவினாஷின் குடும்பம் அதிர்ச்சியில் நிலைக்குலைந்தது. அவருக்கு என்ன நடந்தது; ஏன் இறந்தார் எனத் தெரியாமல் குழப்பத்தில் கதறி அழுதார்கள். சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து, அவினாஷின் அக்காவிற்கு போனில் ஓர் அழைப்பு வந்தது. “உன் தம்பி கொடுக்க வேண்டிய மீதித் தொகையைத் தரவில்லை, அதைத் தரவில்லை எனில், அவனது அந்தரங்க வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவோம்! என மிரட்டுகிறார்கள், பதறிப்போன அவினாஷின் அக்கா காவல் துறையில் புகார் செய்ய மொத்தக் கும்பலும் வசமாக சிக்கியிருக்கிறது.

நடந்தது இதுதான்! 

அவினாஷுக்கு பேஸ்புக்கில் நேஹா சர்மா என்கிற பெண் ஐடியில் இருந்து நட்பு கோரிக்கை வந்திருக்கிறது. இது போலிக் கணக்கு எனத் தெரியாமல் அந்த ஐடியில் இருந்த நபருடன் நட்பு பாராட்டியிருக்கிறார் அவினாஷ். நட்பு பேஸ்புக் கடந்து, மெசஞ்சரில் நுழைந்து, வாட்ஸப் வரை வளர்ந்து, வீடியோ அழைப்புகளில் பாலுறவு உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இதைப் பதிவுசெய்துகொண்டு உனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுவேன் பணம் கொடு என மிரட்ட ஆரம்பித்திருக்கிறது  நேஹா சர்மா என்கிற போலிக் கணக்கு.

பதறிப்போன அவினாஷ் தனது நண்பர்களிடமிருந்து பணம் திரட்டி மிரட்டல்காரனிடம் கொடுத்திருக்கிறார். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே அழுத்தம் தாளாது தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்தது தெரியாமல் போன் தொடர்பில் இல்லையே என அவரது அக்காவுக்கு மிரட்டலைத் தொடரவே சிக்கியிருக்கிறது இக்கும்பல்.

ருவரது அந்தரங்கப் புகைப்படங்களையோ, காணொளியையோ வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிப் பணம் பறிப்பதுதான் ‘செக்ஸ்டார்சன்’ (Sextortion) குற்றம். இது முதலில் பெண்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டாலும், இப்போது இக்குற்றத்தின் முதன்மை இலக்கு ஆண்கள்தான். காரணம், அவர்களே சுலபமான இலக்கு!

குடும்பம் மற்றும் சமூகத்தில் தனது பெயர் கெட்டுவிடுமே எனக் கேட்ட பணத்தைக் கொடுப்பது மட்டுமின்றி, காவல் துறைக்கும் செல்ல மாட்டார்கள் என்பதுதான் இக்குற்றங்களுக்குப் பக்க பலமாக நிற்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தானில் ஒரு செக்ஸ்டார்சன் கும்பலைக் கைது செய்தது டெல்லி காவல் துறை. 14 வங்கிக் கணக்குகளை வைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் 200 பேரை இவ்வகையில் மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தைப் பறித்திருக்கிறது இக்கும்பல். பாதிக்கப்பட்ட இருநூறு பேரில் ஒருவர் துணிந்து புகார் கொடுக்கவே இந்த நடவடிக்கை சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல எண்ணற்றக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரை மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இவர்கள் இதை எப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்!

  1. இலக்கு ஆண் என்றால், பெரும்பாலும் 20 - 30 வயது மற்றும் 45 - 60 வயது ஆண்களுக்கு, பெண்கள் பெயரில் போலிக் கணக்குகளைத் துவங்கி பேஸ்புக், டின்டர், இன்ஸ்டா உட்பட சமூக வலைத்தளங்களில் நட்பு அழைப்பு விடுக்கிறார்கள். 
  2. நட்புக் கோரிக்கை ஏற்கப்பட்டவுடன் பெண்கள் அனுப்புவதுபோல செய்திகள் அனுப்பி, பழகி, வாட்ஸப் வீடியோ அழைப்புகளில் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள். பெண்போல செய்தி அனுப்பலாம், குரல் மாற்றும் செயலிகளைக் கொண்டு பெண்போலவும் பேசலாம். ஆனால், காணொளி அழைப்புகளில் போலி எனத் தெரிந்துவிடுமே! 
  3. இதை தவிர்க்க, வீடியோ அழைப்புகளின்போது இருவழிகளைக் கையாளுகிறார்கள். மிரட்டல் குழுவில் ஒரு பெண்ணும் இருக்கிறார். எதிர்முனையில் இருக்கும் ஆணிடம் பேசி அவரது அந்தரங்கச் செயல்களைப் பதிவுசெய்வது முதல் வழி. அல்லது போர்ன் தளங்களில் பெண்கள் பேசுவதுபோல இருக்கும் வீடியோவைத் தரவிறக்கி, அதன் ஆடியோவை சம்பந்தப்பட்ட நபரின் பெயரை உச்சரிப்பதுபோல் மாற்றி வீடியோ அழைப்புபோல் ஒளிபரப்புவது இரண்டாவது வழி. இதை உண்மை என நம்பி உல்லாசத்தில் ஈடுபடும்போது பதிவுசெய்துகொள்வார்கள். 
  4. இல்லை! நான் சும்மா பழகுவேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என மறுத்தாலும் தப்பிக்க முடியாது. வீடியோ காலில் தெரியும் உங்களது ஒரு நொடி முகம் போதும். அதைப் பதிவுசெய்துகொண்டு, ஏற்கனவே தயாராக இருக்கும் பெண் வீடியோவின் வலது புற மேல்முனையில் சிறியதாக எடிட் செய்துவைத்தால் போதும். பார்ப்பதற்கு அந்தப் பெண்ணிற்கும் உங்களுக்கும் நீண்ட நாள் தொடர்பு இருப்பதுபோலவும், அவரது செயல்களை வீடியோ அழைப்பில் பார்த்து நீங்கள் ரசிப்பதுபோலவும் சித்தரித்துவிட முடியும். 
  5. தெரியாத நபர்களிடமிருந்து பெண்களுக்குத் திடீரென மெசெஞ்சரில் வரும் வீடியோ அழைப்புகளுக்கு இப்படியும் ஒரு பின்னணி உண்டு. யார் என்ன என்பது தெரியாமல் எடுத்தால் எதிர்முனையில் ஒரு ஆண் நிர்வாணமாக நிற்பது போன்று இருக்கும். இதைப் பார்த்து, பதறி கைவிரல்கள் நடுங்க வீடியோ அழைப்பைத் துண்டிக்கும் உங்கள் அந்த நொடி முகம் போதும். மேற்சொன்னபடி எடிட் செய்து மிரட்ட!
  6. இந்த எடிட் அல்லது அந்தரங்கப் பதிவு முடிந்தவுடன் மிரட்டலைத் துவங்குகிறார்கள். ஏற்கனவே உங்கள் வலைதளக் கணக்குகளிலிருந்து உங்கள் நண்பர்கள், குடும்பம், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் என உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டியிருப்பார்கள். அவர்களுக்கு அனுப்பி, உங்கள் பெயரைச் சமூகத்தில் காலி செய்துவிடுவேன் என மிரட்டுவார்கள். உங்களால் எவ்வளவு தொகை எளிதாகத் தர முடியும் என்பதையும்கூட கணித்திருப்பார்கள். ஒருமுறை தந்தால் இதிலிருந்து தப்பித்துவிடலாம் என சொன்னதை நம்பி நீங்கள் தந்தால், மிரட்டல் தொடரும். உங்கள் வங்கி கணக்கு, வாழ்நாள் சேமிப்பு என அனைத்தும் காலியாகும் வரை இது தொடரும். 

மிரட்டல்களை எப்படித் தவிர்ப்பது? தப்பிப்பது?

சமூக வலைத்தளங்களில் நட்பு கோரிக்கைகளை ஏற்கும்போது கவனமாகச் செயல்படுங்கள். அது புதிய கணக்கா, எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள், புகைப்படம் இதெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள். இதை வைத்தே போலிக் கணக்கா இல்லை நம்பகமானதா எனக் கண்டுபிடித்துவிடலாம். இது தவிர்த்து கோரிக்கையை ஏற்றவுடன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுடன் பேச வேண்டும் என செய்தி வந்தால் சரிதான் நம்மதான் டார்கெட் என உஷாராகிவிடுங்கள். போலிப் புகைப்படத்தைப் பார்த்து ஏமாறாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டாவது பிளாக் செய்துவிடுங்கள்.

இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. காவல் துறையில் புகார் செய்வது!

அந்தரங்க மிரட்டல்களில் இருக்கும் ஒரு பிரச்சினை பாதிக்கப்பட்டோர் புகார் செய்ய முனைவதில்லை. ஆகவேதான் ஒரு புகாரில் இருநூறு பேர் ஏமாந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுபோன்ற நிலை மாற வேண்டும். சைபர் குற்றங்களுக்கு காவல் எல்லை இல்லை. எல்லா பிரத்யேக சைபர் செல்களிலும் புகார் செய்யலாம். நேரில் புகார் தர இயலாத நிலை என்றால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் ஆன்லைனிலும் புகார் செய்யலாம்..

மேலும் நம் அந்தரங்கப் புகைப்படமோ காணொளியோ இணையத்தில் கசிந்துவிட்டால் அத்தனையும் முடிந்ததது என உடைந்துவிடாதீர்கள். இந்த பலவீனமான மனநிலைதான் சைபர் மிரட்டல்களின் ஆதார அச்சு. இது ஒரு பெருங்குற்றம். இது போன்ற மிரட்டல்களுக்கு காவல் துறை மட்டுமே உங்களுக்கு உதவிட முடியும். மேலும் உடலைவிட இங்கு உயிர் வாழ்தல் மிக முக்கியம். நீங்கள் அளிக்கும் புகார் பாதிக்கப்பட இருக்கும் பல உயிர்களைக் கூடக் காப்பாற்றலாம். ஆகவே துணிந்து புகார் செய்யுங்கள்.

(இணையம் சார்ந்து நடக்கும் ஒவ்வொரு மோசடியையும் அதன் பின்னணியோடும், எதிர்கொள்ளும் முறையோடும் வாராவாரம் பேசுவோம். இடையிடையே வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. பேசுவோம்!) 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


6

2

3




பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ramesh Ramalingam   2 years ago

Need of time article. Very well written. Congrats.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

நல்ல முயற்சி, சரி கேள்விகள் எந்த முகவரிக்கு அனுப்பலாம்?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

பொதுவெளியில் நிச்சயம் உரையாடப்படவேண்டிய பிரச்சினையோடு இத்தொடர் துவங்கியிருப்பதில் மகிழ்ச்சி. நல்ல முன்னெடுப்பு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நீதிபதி பி.சதாசிவம்ரஷ்ய ராணுவம்கோவை ஞானி பேட்டிசமூக உறவுAgricultureநடுவில் இரண்டு வர்ணத்தைக் காணோம்தென்னாப்பிரிக்காவிவசாயிகள் போராட்டம் எப்படித் தொடர்கிறது?போலி அறிவியல்தேசியத்தன்மைவட கிழக்கு மாநிலம்இந்துத்துவத்தின் இத்தாலியத் தொடர்புமூன்று களங்கள்இஸம்மூட்டுவலிதிருமா - சமஸ் பேட்டிஓம் பிர்லாஓப்பன்ஹைமர் காலநிலை மாற்றம்பொறியாளர்கள்ஹார்ட் அட்டாக்ஃபேஸ்புக்பனிப்பொழிவுபிடிஆர்பொதுக் கணக்குஜெய்பீம்சித்த மருந்துகோயில்களில் என்ன நடக்கிறது?கி.ரா. பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!