கட்டுரை, அரசியல், கலாச்சாரம், வரலாறு 4 நிமிட வாசிப்பு
மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?
மணிப்பூர் மாநிலத்தின் மலைகளிலும் பள்ளத்தாக்கிலும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்கள் வாழ்வதால் அங்கு கலவரங்களும் மோதல்களும்தான் வரலாறு. இம்பால் பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் வாழும் சமூகங்களுக்கு இடையே சமீப காலமாகவே பரஸ்பர அவநம்பிக்கையும் சந்தேகங்களும் வலுத்துவந்தது. அதிலும் குறிப்பாக மெய்தி - குகி இரு சமூகங்களுக்கும் இடையே பகைமை கொழுந்துவிட்டு எரிகிறது. ‘மெய்திகளுக்கு பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்குவது குறித்து மணிப்பூர் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் மார்ச் 27இல் ஆணை பிறப்பித்த பிறகு பிரச்சினை தீப்பற்றியது.
பாஜக அரசின் நகர்வு
இந்த உத்தரவுக்கு முன்னதாக, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலிருந்து வனப் பழங்குடியினரை வெளியேற்றும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது. இதைத் தங்களுக்கு எதிரான அரசின் திட்டமிட்ட நடவடிக்கை என்று பழங்குடிகள் அதிலும் குகி இன மக்கள் குற்றஞ்சாட்டினர். பல ஆயிரம் குகி இன மக்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய அரசு அவர்கள் வாழ்வதற்கான மாற்று இடத்தைத் தயார் செய்யவே இல்லை. குகி சமூகத்தவர் சார்பில் சட்டப்பேரவையில் 10 பேர் இடம்பெற்றிருந்தும் அவர்களும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசில், ‘குகி மக்கள் கூட்டணி’ என்ற பெயரில் பங்கு வகித்தும் இந்த நிலைமை ஏற்பட்டது.
மோதல்களின் பின்னணி
இந்த மோதல்களுக்கும் பதற்றத்துக்கும் காரணமான வெவ்வேறு சமூகக் குழுக்களுக்கு இடையிலான சமூக இயக்கவியலை நாம் புரிந்துகொள்வது முக்கியம். குகிகள், மெய்திகள் இரு தரப்பினரும் மணிப்பூரின் முக்கியமான இனக் குழுக்கள்.
மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 53% பேர் மெய்திகள். இவர்கள் பெரும்பான்மையாக மலைக்குக் கீழே பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள்; மாநிலத்தின் 10% நிலப்பரப்பில் இவர்கள் இருக்கிறார்கள். மாறாக, குக்கிகள் பெரும்பான்மையாக மலைப் பகுதியில் வசிக்கிறார்கள்; இவர்களை அடுத்த எண்ணிக்கையில் வாழ்பவர்கள் நாகாக்கள். இந்த இரு தரப்பினரும் சிறுபான்மையினர் என்றாலும், மலைப் பகுதியில் 90% நிலப்பரப்பில் இவர்கள் விரவி வாழ்கிறார்கள்.
எண்ணிக்கைப் பெரும்பான்மையினர் என்பதோடு அரசியல் பலமும் மிக்கவர்கள் மெய்திகள். ஆட்சியதிகாரத்திலும், அரசு இயந்திரத்திலும் மெய்திகளுடைய பலம் மணிப்பூரில் அதிகம். மெய்திகளும் பழங்குடியின மரபில் வந்தவர்கள் என்றாலும், தங்களை வைணவர்களாகவும், இந்துக்களாகவும் கருதுபவர்கள். பழங்குடியினப் பட்டியலில் இவர்கள் இடம்பெறவில்லை. ஆகையால், இந்து மதத்தைப் பின்பற்றுவதால் இவர்களுக்குப் பொருளாதார, அரசியல் பயன்கள் கிடைப்பதில்லை என்ற கருத்து அவர்களிடையே வலுத்துவருகிறது.
மெய்திகளின் முன்கதை
மெய்திகள் இந்திய அடையாளத்துடனும் இந்து மத அடையாளத்துடன் பிணைத்துக்கொண்டதானது எல்லாம் பின்கதை. உண்மையில் மெய்திகள் மங்கோலிய இனத்தவர். சீனா, பர்மா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் சில வடகிழக்கு மாநிலங்களிலும் வாழும் மங்கோலிய இனத்தவரின் ஒரு பகுதியாகவே தங்களை மெய்திகள் நீண்ட காலமாகப் பார்த்துவந்தனர். மெய்திகள் - பிற பழங்குடிகள் இடையேயான மோதல் நீண்ட காலமாக நீடித்துவருகிறது.
முன்னதாக, பல பகுதிகளிலும் வாழும் மங்கோலிய சமூகங்களைச் சேர்த்து, ஒரே கூட்டமைப்பாகச் செயல்படும் கனவில் மெய்திகளும் இருந்தனர். அந்த வகையில், வடகிழக்கில் பரவிய வங்க மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் எதிர்த்தனர். வங்கதேசத்திலும் பர்மாவிலும் (மியான்மர்) தளங்களை அமைத்துக்கொண்டு மக்கள் விடுதலை சேனை (பிஎல்ஏ) என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகளுடன் ஒருகாலத்தில் மோதலில் ஈடுபட்டனர். மணிப்பூரில் ‘மற்றவர்கள்’ இருக்கக் கூடாது என்றும் பேசினர். மணிப்பூர் முஸ்லிம்களை ‘பங்கால்’ என்று குறிப்பிட்டனர். இந்த மோதலின் எதிர்வினையாக பங்கால்கள் ‘வடகிழக்கு சிறுபான்மை முன்னணி’ என்ற ஆயுதக் குழுவை உருவாக்கி மோதல்களில் ஈடுபட்டனர்.
பிற்காலத்தில், வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வுகளாலும், ராணுவம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சமாதானப் பேச்சுகளாலும் ஓரளவுக்கு அமைதிச் சூழல் திரும்பியது. இதன் ஒரு பகுதியாக இந்திய அடையாளத்துடனும், இந்து அடையாளத்துடனும் மெய்திகள் இணையலாயினர். ஆயினும், ஏனைய இனக் குழுக்களுடனான அவர்களுடைய பகை நீடித்தது. இந்தப் பகை இப்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.
மீண்டும் ராணுவம்
இரு சமூகத்தவருக்கிடைய பரஸ்பர சந்தேகம் அதிகமாகிவிட்டதாலும் இதுதரப்புமே ஏகே 47 உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களைக் கொண்டிருப்பதாலும், மணிப்பூர் இப்போது கலவர நிலமாகக் காட்சியளிக்கிறது. இந்திய ராணுவம், மத்திய ஆயுதக் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, விமானப்படைகூட இப்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் வந்து இருதரப்பு தலைவர்களையும் சந்தித்துச் சென்றார். சிஆர்பிஎஃப்பில் மூத்த அதிகாரியாக முன்னர் வட கிழக்கில் பணியாற்றியவர் மணிப்பூர் அரசுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், மோசமான சூழலே நிலவுகிறது.
மிகக் குறுகிய காலத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாக்கப்பட்டதும் பெரிய இழப்புகளாகும். சமரச முயற்சிகளை ராணுவத் தலைமைத் தளபதி, உள்துறை அமைச்சர் போன்றோர் மேற்கொண்டாலும் ‘40 குகி பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றோம்’ என்று மணிப்பூர் முதல்வர் சொன்னது அந்த சமரச முயற்சிகளையெல்லாம் நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
என்னதான் தீர்வு?
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை வட கிழக்கு மாநிலங்களுக்குள் செல்லக்கூட யாரும் முயன்றதில்லை. இனக் குழுக்களின் மோதல்களாலும் வன்முறைகளாலும் அந்தப் பகுதியை வேறொரு உலகமாகவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருதினர். சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் பிற மாநிலங்களில் வன்முறைகள் நிகழ்ந்தபோதுகூட வட கிழக்கு அமைதியாக இருந்தது வினோதமாக உணரப்பட்டது. தங்களுக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் அதிகரித்தது.
இன்று சாலை மார்க்கமாகவும் ரயில் பாதைகள் மூலமும் வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கும்கூட தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டுகின்றனர். வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடிகள் தேசிய நீரோட்டத்தில் சேருவது படிப்படியாகத்தான் நடைபெற வேண்டும். அதை விரைவுபடுத்துவதற்காக, அவர்களுடைய மனப்போக்கை அறியாமல் எடுக்கப்படும் நிர்வாக, நீதித் துறை நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்திவிடும். எல்லா பழங்குடி சமூகங்களும் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் செயல்களையே ராணுவமும் அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்!
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.