கட்டுரை, தொடர், வாழ்வியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

ஜாம்பியாவும் கென்னெத் கவுண்டரும்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
12 Nov 2023, 5:00 am
0

ப்பர், சுந்தரர், ஆளுடைப் பிள்ளை உள்ளிட்ட 63 நாயன்மார்களாலும், 12 ஆழ்வார்களாலும் பாடப் பெறாத புண்ணியத் தலம் எங்க ஊர் தளவாய்ப்பேட்டை. அங்கே இருக்கும் நால்ரோடுதான் தளவாய்ப்பேட்டையின் டைம்ஸ் சதுக்கம். அதில் இரண்டு புவியியல் அடையாளங்கள் முக்கியமானவை. ஒன்று ‘ரவியண்ணன்’ டீக்கடை, இன்னொன்று மாதேஸ் அண்ணனின் சைக்கிள் கடை. மாதேஸ் அண்ணன்தான் பால் சொசைட்டி செக்ரடரி என்பதால் அருகிலேயே பால் சொசைட்டி. 

ஈரோட்டில் 1983ஆம் ஆண்டு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, தொழிற்கல்வி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் விடுமுறைக் காலத்தில் தளவாய்ப்பேட்டைக்கு வந்து தங்கியிருந்தேன். தினமும் காலையில் பால் சொசைட்டியில் பால் ஊற்றிவிட்டு, அங்கேயே காத்திருந்து ‘தி இந்து’ பேப்பர் வாங்கிப் போவேன். அடுத்த நாள் காலை வரை ‘தி இந்து’ பேப்பரின் காற்புள்ளி விடாமல் படிப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. சொசைட்டியில் கூட்டமில்லை என்றால், தலைப்புச் செய்திகளை வாசிக்கச் சொல்வார் மாதேஸ் அண்ணன். அன்று முதல் பக்கத்தில், ஜாம்பியா அதிபரின் புகைப்படம் பெரிதாக வந்திருந்தது.

“யாரு கண்ணு இது?” என்று மாதேஸ் அண்ணன் கேட்டார்.

“இது கென்னெத் கவுண்டா, ஜாம்பியாவோட அதிபர்” என்று சொன்னேன்.

“நம்மாளா?” எனக் கேட்டுவிட்டு, அருகில் வந்து பேப்பரைப் பார்த்தவர் திகைத்துப்போனார்.

“இல்லீங்ணா… இவுரு ஆப்பிரிக்காவுல இருக்கற ஒரு நாட்டுக்குத் தலைவர்” என்றேன்.

“அதான பாத்தேன்” என்று முனகிக்கொண்டே போனார்.

தமிழ் சினிமா இயக்குநர்கள் சொல்வதுபோல, அதை அப்படியே கட் பண்ணி 2017க்கு வர்றோம். நானும் எனது ஏற்றுமதி மேலாளர் சதீஷும் முதன்முறையாக ஜாம்பியா செல்கிறோம். வழக்கம்போல மாதம் மும்மாரி விற்பனை மழை பொழிகிறதா எனப் பார்த்துவரும் வேலைதான்.  

ஜாம்பியாவில் இரண்டு முக்கிய நகரங்கள் உண்டு. தலைநகரம் லூஸாகாவும், தொழில் நகரம் ந்டோலாவும். நாங்கள் முதலில் ந்டோலா செல்லத் திட்டமிட்டோம். டார் எஸ் ஸலாமில் இருந்து காங்கோவின் லுமும்பாஷி வழியாக ந்டோலா செல்லும் விமானம். விமானத்தில் இருந்து இறங்கிய 100 அடிக்குள்ளாகவே விமான நிலைய அலுவலகம் வந்துவிட்டது. குடியேற்றச் சோதனை என்னும் போர்டுக்குப் பின்னால். ஒருவர் அமர்ந்திருந்தார். கடவுச் சீட்டை வாங்கி ஓங்கி ஒரு அச்சை எடுத்து ஓங்கிக் குத்திக் கொடுத்தார். அவரது நாற்காலிக்குப் பின்னாடியே எங்களது பயணப் பைகள் வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்கொண்டு சில அடிகள் நடந்த உடனேயே விமான நிலையக் கட்டிடம் முடிந்து சாலைக்கு வந்திருந்தோம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விமானத்தில் இருந்து ஒரு தவ்வுத் தவ்வினாலே சாலைக்கு வந்துவிடலாம் போல. ஆனால், 2021ஆம் ஆண்டிலிருந்து புதிய நவீன விமான நிலையம் வந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில், கிழக்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் விமான நிலையம், சாலைகள் எனக் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல போக்குவரத்துக் கட்டுமானங்கள் உருவாகிவந்துள்ளன. பெரும்பாலானவை சீன அரசின் நிதியுதவியோடு, சீன கட்டுமான நிறுவனங்களால் உருவாக்கப்படுபவை.

ந்டோலாவின் புதிய பன்னாட்டு விமான நிலையம்

இரண்டு கோடி மக்கள்தொகை கொண்ட ஜாம்பிய நாட்டின் பரப்பளவு 7.5 லட்சம் கிலோமீட்டர்கள். (தமிழ்நாடு 1.2 லட்சம் கிலோமீட்டர்). மிகப் பழங்காலத்தில் இருந்தே மனிதர்கள் வசித்த தடயங்கள் இங்கும் உள்ளன. அதில் முக்கியமானவை ந்சாலுக் குகை பாறைக் கோட்டோவியங்கள். இவை 36 ஆயிரம் வருடங்களுக்கு முந்தயவை எனச் சொல்லப்படுகின்றன. அதன் பின்னர் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பல்வேறு இன மக்கள் புலம்பெயர்ந்துவந்தனர். இதுபோன்ற புலப்பெயர்வை பல்வேறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, தான்சானியா செரெங்கெட்டி புல்வெளியில் வசிக்கும், மிகப் பிரபலமான மசாய் இன மக்கள் தான்சானியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களே.

செம்புத் தாது ஏற்றுமதி

ஜாம்பியா முழுக்க முழுக்க மற்ற நாடுகளால் சூழப்பட்ட ஒரு புவியியல் பகுதி. ஏற்றுமதி இறக்குமதிக்காகப் பெரும்பாலும் தான்சானியாவின் டார் எஸ் ஸலாம் துறைமுகத்தையும் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தையும் சார்ந்திருக்கிறது. 

ஜாம்பியப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அங்கம் செம்புத் தாது ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 77%. நம்ம ஊர் வேதாந்தா இங்கே கொங்காலா செம்புச் சுரங்கங்களில் முதலீடு செய்திருந்தார்கள். 250 மில்லியன் டன் செம்புத் தாது உள்ள சுரங்கம். ஆனால், 2019ஆம் ஆண்டு அரசுக்கும், வேதாந்தாவுக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடுகள் காரணமாக, அரசு இந்தச் சுரங்கங்களைத் தேசியமயமாக்கியது.

இதை எதிர்த்து வேதாந்தா லண்டன் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது. சட்டப்பூர்வமாக இதற்கு எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், தற்போது இரு தரப்புகளும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விலக்கிக்கொண்டு, மீண்டும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. அதன்படி வேதாந்தா, இந்தச் சுரங்கங்களில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடு செய்வதாகவும், சுரங்கப் பணியாளர்களுக்கு 20% கூடுதல் ஊதியம் வழங்குவதாகவும் அண்மையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஜாம்பியாவில் நிக்கல், யுரேனியம், தகரம் முதலிய தாதுக்கள் பெருமளவில் உள்ளன. இவற்றை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது

ஜாம்பியாவின் வடக்குப் பகுதியில் செம்புச் சுரங்கங்கள் உள்ளன. இப்பகுதியின் தலைநகர் ந்டோலா நகரம். இது ஜாம்பியாவின் மூன்றாவது பெரிய நகரம். 5 லட்சம் மக்கள்தொகைக் கொண்ட இந்நகரம், காங்கோவின் லுபும்பாஷி நகரத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காங்கோ நாட்டிற்குள் இறக்குமதி செய்வதில் பல பிரச்சினைகள் உள்ளதால், ந்டோலா நகரத்தில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், ஜாம்பியாவின் மிக முக்கியமான வணிக நகரமாக ந்டோலா விளங்குகிறது. 

இடி போல் முழங்கும் புகையருவி! 

ஜாம்பியாவுக்கு முதலில் வந்த ஐரோப்பியப் பயணி, ஃப்ரான்சிஸ்கோ டே லாசேர்டா என்னும் போர்த்துக்கீசியர். கிழக்கே மொஸாம்பிக் நாட்டின் இந்து மகா சமுத்திரத்தின் கடற்கரையிலிருந்து, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலின் கரையை அடைவதே அவர் நோக்கம். அதன் பின்னர் ஜாம்பியா வந்த முக்கியப் பயணி டேவிட் லிவிங்ஸ்டோன். அவர் ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஒரு மருத்துவர்.

ஆப்பிரிக்க நாட்டின் அடிமை வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு வந்தவர். ஜாம்பியாவில் பயணம் செய்கையில், ஜாம்பேஜி நதியில் ஒரு பெரும் அருவியைக் கண்டார். ஆக்கப்பட்ட அனைத்தும் (பிரிட்டிஷ்) அரசுக்குச் சொந்தம் என்னும் மெய்ஞானம் கொண்ட அவர் அந்த மாபெரும் அருவிக்கு, ‘விக்டோரியா அருவி’ எனப் பெயரிட்டார். அதை ஒட்டிய நிலப்பரப்பு, ‘லிவிங்ஸ்டோன்’ என அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

உள்ளூர் மொழியில் அதன் பெயர் ‘இடி போல் முழங்கும் புகை’ (Mosi-oa-Tunya). அடிமை முறையை ஒழிக்கிறேன் என இந்த ஆசாமி ஆப்பிரிக்காவில் பயணம் சென்ற வழிகள் வழியே ஐரோப்பியக் கொள்ளையர்கள் அரசு முத்திரையோடு ஆப்பிரிக்காவில் காலனிய ஆதிக்கத்தை உருவாக்கி, ஆப்பிரிக்க நாகரிகத்தைச் சிதைத்ததுதான் சோகம். 

விக்டோரியா அருவி

விக்டோரியா அருவி, ஜாம்பியா – ஜிம்பாப்வே நாடுகளுக்கிடையில் உள்ளது. நயாகரா போலவே. 1.7 கிலோமிட்டர் நீளமான இந்த அருவி, 108 மீட்டர் உயரத்தில் இருந்து கீழ் தளத்தில் வீழ்கிறது. (நயாகராவைவிட இரு மடங்கு அகலமும், நீளமும் கொண்டது). 2019ஆம் ஆண்டு உண்டான வறட்சிக் காலத்தில் ஜாம்பேஜி ஆறு வறண்டுபோய், அருவியில் நீர் கிட்டத்தட்ட நின்றுபோனது ஒரு தேசிய துக்கம்போல மக்களால் உணரப்பட்டது. காலநிலை மாற்றத்தின் விளைவு எனச் சூழலியர்கள் சொல்கிறார்கள்.

வறண்டு போன விக்டோரியா அருவி

இந்த அருவியும் இதை ஒட்டியுள்ள தேசியப் பூங்கா பகுதியும் யுனெஸ்கோவால் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

லூஸாகா

ந்டோலாவில் பணிகளை முடித்துக்கொண்டு, லூஸாகா புறப்பட்டோம். 300 கிலோமீட்டர் தூரம். மிக அருமையான நெடுஞ்சாலை. காலை 8 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் ஒரு மணி அளவில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உணவை முடித்தோம். அதன் அருகில் ஓர் அம்மையார் சாலையில் கடலைக்காய் விற்றுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கடலையும் இரண்டு பெருவிரல் தடிமனாக இருந்தது. உடனே ஒரு பை நிறைய வாங்கினேன். அன்று பறிக்கப்பட்ட பச்சைக்காய், அதன் வாசனையும், சுவையும் அலாதி!

ந்டோலா லூஸாகா நெடுஞ்சாலை

ஜாம்பியாவின் தலைநகரான லூஸாகா கோயமுத்தூர் போன்ற ஒரு நகரம். நவீன கட்டிடங்களும், மால்களும் உள்ள ஊர். அதேசமயம், சாலைகளில் பெருநகரங்களைப் போல் இல்லாமல் குறைவான போக்குவரத்து. மிதமான குளிர்.

நகர் முழுவதும் பெரும் பெரும் நவீன பல்நோக்கு அங்காடிகள். நாங்கள் டிசம்பர் மாதத்தில் சென்றிருந்தோம். ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உலவிக்கொண்டிருந்தனர். அலங்கார வண்ண விளக்குகள், ஆங்காங்கே இசைக் குழுக்கள் இசைத்துக்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல மொத்த வணிகவளாகம் சென்றோம்.

முதல் கடையிலேயே ‘கேம் சோ?’ (எப்படி இருக்கீங்க?), என்னும் குஜராத்தி விளி வரவேற்றது. வளாகத்தின் மிக முக்கியமான கடைகள் எல்லாமே குஜராத்தி இஸ்லாமிய வணிகர்கள் வசம் உள்ளன. சில சிந்திகளும் இருந்தார்கள். மொத்த அங்காடிகளில் இருந்து பொருட்கள் மினி பஸ்களில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பெரும்பாலும் ஏழை, ஊரக முகங்கள்.

லூஸாகா நகரம்

ஆனால், நவீன வணிக அங்காடிகளில் பெரும்பாலானவை தென் ஆப்பிரிக்க மற்றும் பன்னாட்டுக் குழுமங்கள். அங்கே இளவயதினர் மற்றும் மேட்டுக்குடியினர்களைப் பார்க்க முடிந்தது. டார் எஸ் ஸலாமில்கூடக் காண முடியாத விலை உயர்ந்த கார்களை சகஜமாக இங்கே பார்க்க முடிந்தது.

எங்கள் வணிகத் தொடர்பு, எங்களை இரவு உணவுக்கு உள்ளூர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். நிம்மதியாக உறங்கினோம். அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்து, தங்கியிருந்த ஓட்டலுக்குள்ளே நடை பயின்றேன். ஆப்பிரிக்கா வந்த பின்பு, முதன்முதலாக வெள்ளைக் காகத்தைப் பார்த்தேன். உடலின் கீழ்ப்பாகம் மட்டும் வெள்ளையாக இருக்கும் ‘ராவன்’ (Raven) என்னும் வகைக் காகம். 

ராவன்

நிதானமாகக் கிளம்பி விமான நிலையம் வந்தோம். 5 நாட்கள் வணிகப் பயணம் ஒரு உல்லாசச் சுற்றுலா போல கழிந்தது. ஜாம்பியாவின் இதமான தட்பவெப்ப நிலை முக்கியக் காரணம். டார் எஸ் ஸலாம் விமான நிலையத்தில் இறங்கியதும், சென்னையில் இருக்கும், அட்டெண்டென்ஸ் நிமித்தம் மனைவிக்குத் தொலைபேசியில் பேசினேன். ஜாம்பியாவில் என்ன வாங்கினாய் எனக் கேள்வி வந்தது. ‘பச்சைக் கடலைக்காய்’ என்றேன். என்ன பதில் வந்திருக்கும் என்பதைப் படிப்பவர்களே ஊகித்துக்கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கோ: விதியே... விதியே என்ன செய்ய நினைத்தாய்?
உகாண்டா: இடி அமின் தேசத்தில் இட்லி, தோசை!
பக்கிரி பிள்ளையும் உப்புப் பருப்பும்
தான்சானியாவின் பிரதான நகரங்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

3





ஏ.பி.ஷா கட்டுரைசெலவுக் குறைப்புசர்வாதிகாரம்நாட்டுப்பற்றுக் கல்விச் சட்டம்அஜய் பிஸாரியா கட்டுரைஅனல் மின் நிலையம்அரசுகளுக்கிடையிலான கவுன்சில்புத்தமதம்அந்தக் காலம்துணை தேசியம்நளினிதிருமண வலைதள மோசடிகள்போர்விழிப்பு கண்காணிப்புக் குழுகட்சிப் பிளவுஎதிர்வினைக்கு எதிர்வினைமோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்ஐஎஃப்எஸ்வணிக அங்காடிகால் பாதிப்புமூன்றாவது கட்டம்: 272 நிச்சயமில்லைகாலிபேஃட்மாநில மொத்த உற்பத்தி மதிப்புஜனரஞ்சகப் பத்திரிகைவேளாண் ஆராய்ச்சிமலம் அள்ளும் வேலைசுழற்பந்து வீச்சாளர்கள்துரத்தப்பட்டார்களா தமிழ் பிராமணர்கள்?வர்ண தர்மம்கோணங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!