கட்டுரை, அரசியல் 8 நிமிட வாசிப்பு

மதுரைக்குக் கேட்பதற்குத் தமிழ்நாட்டிற்குத் தகுதி இல்லையா?

தென்யா சுப்
12 Jan 2022, 5:00 am
7

துரை விமான நிலையம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. மதுரையின் எல்லைக்குள் முடிந்திடும் பிரச்சினை இல்லை இது; தமிழ்நாடு மொத்தமும் கவனம் அளிக்க வேண்டியது. ‘மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா; இல்லையா?’ என்பதே சர்ச்சையின் மையம். 

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை சந்தித்து, “மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிக்க வேண்டும்” என்றொரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள். “பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம்தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக ஒன்று (மதுரைக்கு) கேட்பது என்ன நியாயம்? தர முடியாது!”என்று அமைச்சர் மறுத்துவிட்டதாக ‘ட்விட்டர்’ வழி பகிரங்கப்படுத்தினார் சு.வெ. 

இதை மறுத்து ‘ட்விட்’ செய்தார் விமானத் துறை அமைச்சர் சிந்தியா. எம்.பி. வெங்கடேசனின் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவும் அவரை சந்தித்தபோது, தான் அப்படிக் கூறவே இல்லை என்றும் சொன்னதுடன், மதுரை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். அதாவது, மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் ஆக்கப்படுமா என்பது தொடர்பில் அப்போதும் சிந்தியா வாய் திறக்கவில்லை. 

மதுரையில் நடந்த வாஜ்பாய் பிறந்த நாள் கருத்தரங்கில் பங்கேற்ற பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். “ஏற்கெனவே மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத்தானே இருக்கிறது… இதுகூடத் தெரியாமல்!” என்று வழக்கம்போல அநாகரிகமாக சு.வெங்கடேசனை ஒருமையிலும் பேசினார்.

உண்மையில் மதுரையின் நிலை என்ன?

சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவம்

மதுரை விமான நிலையமானது உண்மையில் தற்போது, சுங்க விமான நிலையமாகத்தான் (கஸ்டம்ஸ் ஏர்போர்ட்) இருக்கிறது. அதாவது, உள்நாட்டு (Domestic) விமான நிலையத்துக்கும், சர்வதேச (International) விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட நிலையில் – சுங்க விமான நிலையம் – ஆக அது இருக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (AAI) கட்டுப்பாட்டில் உள்ள 137 விமான நிலையங்களில் 24 சர்வதேச விமான நிலையங்கள், 10 சுங்க விமான நிலையங்கள், எஞ்சியவை அனைத்துமே உள்நாட்டு விமான நிலையங்கள்.

சர்வதேச விமான நிலையம் என்றால், அது 24 மணி நேரமும் செயல்படும். அதன் வசதிகளும் சர்வதேசத் தரத்தில் இருக்கும். மதுரை விமான நிலையமோ இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் செயல்படுவதில்லை. காரணம், விமான நிலையப் பணியாளர்கள், சுங்கத் துறையினர், பாதுகாப்புப் படையினர் எல்லோருக்குமே இரண்டு ஷிப்ட்தான் வேலை கொடுக்கப்படுகிறது. இரவில் கடையை மூடிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்.

அரிதாக இரவில் விமானங்கள் வந்தால், இருக்கிற பணியாளர்களையே ‘ஓவர் டைம்’ முறையில் கூடுதல் நேரம் இருக்கச் சொல்லிவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். விமான நிலையத்துக்குள் கேன்டீன் வசதி கிடையாது. கட்டிடத்துக்கு வெளியே இருக்கிற கேன்டீனானது, அம்மா உணவகத்தின் தரத்துடன் போட்டிப்போடக் கூடிய நிலையிலேயே இருக்கிறது.

மதுரைக்கு என்ன இழப்பு?

தென் தமிழகம் தொழில் துறையில் மிகமிக பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, பக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லாதது. மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை தொழில்வழிப் பெரும்பாதை (Industrial Corridor) என்று 2012-ல் அறிவித்தார் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு சிறு தொழிற்சாலைகூட அந்தப் பாதையில் உருவாகவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சென்னை, கோவைக்கு அடுத்து திருச்சியைப் பார்க்கிறார்களே தவிர, அவர்களது சிந்தனையில்கூட மதுரை என்ற நகர் இல்லை. பல காரணங்களில் முக்கியமான ஒன்று, சர்வதேச விமான நிலையப் பட்டியலில் மதுரை இல்லை என்பதும் ஆகும்.

ஒரு விமான நிலையத்துக்கு வெளிநாட்டு விமானங்கள் வர வேண்டும் என்றால், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் (bilateral air services agreements), அந்த விமான நிலையத்தின் பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான இருதரப்பு விமான ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தின் பெயரையும் சேர்த்தால்தான், அமெரிக்க விமானங்களை மதுரைக்கு இயக்க முடியும். அதேபோல, அவர்கள் தங்களது நகரங்களில் எதையெல்லாம் ஒப்பந்தத்தில் சேர்க்கிறார்களோ அந்த நகரங்களுக்கு மட்டும்தான் நம்முடைய விமானங்களை இயக்க முடியும்.

மதுரை விஷயத்தில் என்ன நடக்கிறது என்றால், மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவை அந்த இரு தரப்பு விமான ஒப்பந்தத்தில் மதுரையையும் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகின்றன. ஒன்றிய அரசோ அதை ஏற்காமல் இருக்கிறது.

மதுரையில் சிங்கப்பூர் விமானம் இறங்குகிறதே - அது சர்வதேச விமான நிலையம் இல்லையா? இப்படியொரு கேள்வியும் எழலாம். வெளிநாடு செல்லும் விமானங்கள் சில மதுரையில் தரையிறங்குவது உண்மைதான். ஆனால், அவை எல்லாமே இந்திய நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள். இப்படி அபுதாபி, மஸ்கட், சிங்கபூர், கோலாலம்பூர் போன்ற ஊர்களுக்கெல்லாம் மதுரையில் இருந்து விமானம் இயக்கப்போவதாகச் சொல்கிறார்களே, அவை எல்லாமே இந்திய விமானங்கள்தானே ஒழிய, வெளிநாட்டு விமானங்கள் இல்லை.

மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் என்று எதையுமே பார்க்க முடியாது. ஒரே விதிவிலக்கு இலங்கை விமானங்கள். காரணம், மதுரை சுங்க விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் முன்பே, இலங்கை - இந்திய இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில், மதுரை இடம்பெற்றுவிட்டது.

ஒரு வேளை நஷ்டமாகிவிடுமா?

இல்லவே இல்லை. இருதரப்பு விமான ஒப்பந்தம் ஏற்பட்டால், மலேசியாவோ, சிங்கப்பூரோ அந்நாட்டு விமானங்களை அவர்களின் சொந்தச் செலவில்தான் இயக்கப் போகிறார்கள். அதில் இந்தியாவுக்கான இருக்கைப் பங்கீட்டையும் அவர்களே தரப்போகிறார்கள். எனவே, ஒன்றிய அரசுக்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை என்கிறார்கள் இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர். 

ஒருவேளை பயணிகள் வரத்து குறைந்து அந்தச் சேவைகள் நிறுத்தப்பட்டால், அசிங்கமாகப் போய்விடுமே என்று கவலைப்படுகிறார்களா? அதற்கும் முகாந்திரம் இல்லை.

2019 – 20 நிதியாண்டில் மதுரை விமான நிலையத்துக்கு வந்து சென்ற சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 3,49,816. இந்தியாவில் உள்ள 10 சுங்க வரி விமான நிலையங்களில் சர்வதேசப் பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் மதுரை விமான நிலையம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வளவு ஏன்? அந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள 27 சர்வதேச விமான நிலையங்களில், 10 விமான நிலையங்கள் மதுரையைவிட குறைந்த அளவே சர்வதேசப் பயணிகளைக் கையாண்டிருக்கிறது. கரோனா காலத்திலும்கூட, மற்ற விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை விமான நிலையப் பயணிகள் எண்ணிக்கையில் பெரிய பாதிப்பு இல்லை. ஆக, சிறப்பாகச் செயல்படும் ஒரு விமான நிலையத்துக்குத் தர உயர்வு அளிக்க வேண்டியதில் என்ன பிரச்சினை?

பாரபட்சம் காட்டப்படுகிறதா?

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் வாரணாசி சர்வதேச விமான நிலையத்தைவிட அதிக வெளிநாட்டுப் பயணிகளைக் கையாண்டிருக்கிறது மதுரை விமான நிலையம். அப்படியிருந்தும், உத்தர பிரதேசத்துக்குக் கூடுதல் பரிசுபோல, 2021 அக்டோபரில் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இது போதாது என்று நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு கடந்த நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கூடவே, அயோத்தியிலும் அடுத்த ஆண்டே சர்வதேச விமான நிலையம் கட்டப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் என்றால் கட்டும்போதே சர்வதேச விமான நிலையம் என்று சொல்லியே கட்ட முடியும், தமிழ்நாடு என்றால் 1957 முதலாக 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுகிற மதுரை விமான நிலையத்தைத் தரம் உயர்த்த முடியாது என்றால், இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஜிஎஸ்டி சுட்டிக்காட்டல் சரியா?

இந்த விஷயத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்; “கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய ஜிஎஸ்டி வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியைவிட அதிகம். நாங்கள் 4 அல்ல... 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள்” என்று சொல்லியிருக்கிறார் அவர். நியாயமான வாதம் இது. ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டார் சு.வெங்கடேசன். நம்மில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஜிஎஸ்டி செலுத்துகிற, குட்டி மாநிலமான கேரளத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு.

தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுடன் அல்ல, வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடப்பட வேண்டியது என்கிற பொருளாதார நிபுணர்களின் குரலைத்தான் மதுரை எம்பி பிரதிபலித்திருக்கிறார். இது வெறும் மதுரை நகர், தென் தமிழ்நாடு சார்ந்த பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை. கட்சி வேறுபாடின்றி, பிராந்திய வேறுபாட்டை மறந்து அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் ஒரே குரலாக, உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். ஆளும் திமுக அரசும் இதைத் தன் கையில் எடுக்க வேண்டும்.

சர்வதேச விமான நிலையத்தைப் பெறுவதற்குத் தமிழகத்துக்கு தகுதி இல்லையா என்ன?

தென்யா சுப்

தென்யா சுப். பத்திரிகையாளர்.


7

3

2

பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

KMathavan   2 years ago

சரியான குரலாக, எப்போதும் தமிழ்நாட்டின் முன் மாதிரி மக்களவை உறுப்பினராக, தன் குரலை உயர்த்தி பிடிக்கும் அண்ணனுக்கு ஏன் மற்ற உறுப்பினர்கள் வழிமொழிய முன் வர மாட்டேன் என்கிறார்கள். பெரிதினும் பெரிது கேள் என்பார்கள். ஆனால் MP அவர்களோ நீதியிலும் நீதிதான் எப்போதும் கேட்கிறார். அவர் குரலை முன்னெடுப்போம் உயர்வடைவோம்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Maruthu K   2 years ago

மிகவும் அருமையான கட்டுரை, நான் அறிந்திராத பல விவரங்களை எனக்குத் தெரியப்படுத்தியது! 👍

Reply 10 1

Login / Create an account to add a comment / reply.

LOKESH P   2 years ago

அம்மா உணவகத்தின் தரத்தை மட்டுப்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

நிர்வாகம், மொழிக்கொள்கை, நிதிப்பங்கீடு என எந்த விஷயத்தில்தான் டெல்லிக்கு சமத்துவப் பார்வையிருக்கிறது? வாய்மை, சத்தியத்தை நேர்கொண்டு எதிர்கொள்ளும் துணிவு போன்றவை ஒரு அரசிற்கோ மாளவியா போன்ற பிரதிநிதிகளுக்கோ இல்லாமலிருப்பது அருவருப்பாக இருக்கிறது. எவ்வளவு கீழ்மைகளைச் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது?! எக்கீழ்மையையும் சகிக்கும்தன்மை அல்லது அறியாமையாக இருந்தால் இம்மண்ணில் நிம்மதியான வாழ்வு சாத்தியம். கடந்தகாலத்திலிருந்து பார்த்தால் நாம் எவ்வளவு வீழ்த்திருக்கிறோம் என்பதே சோர்வாக இருக்கிறது.

Reply 7 0

Ganeshram Palanisamy   2 years ago

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும்படி மத்திய அரசை அன்புடன், பணிவுடன், தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பி.கு. மான, ரோசமுள்ளவர்களை பலருக்கும் பிடிக்காது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   2 years ago

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளக்கியதுடன் தமிழ்நாட்டின் கோரிக்கையைத் தர்க்க நியாயத்துடன் விவரிக்கும் கட்டுரை

Reply 12 0

Login / Create an account to add a comment / reply.

Sivabalan Kannan   2 years ago

This area also didn't touch by other media of TN. A very good product from arunchol to the youngsters.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமஎதிர்கால வியூகம்தமிழ் புலமைதமிழ்நாடு கேடர்மூன்று மாநில தேர்தல்வெற்றிடங்கள்ரயில் விபத்துஇளமையில் வழுக்கை ஏன்?பனானா குடியரசுகள்சிறப்பு நீதிமன்றம்ஒழுங்கு வேண்டாமா?இயற்கை வேளாண்மைஎன்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?காஷ்மீர் விவகாரம்மாநிலக் கொடிகுஜராத் மாதிரிவலதுசாரிலலாய் சிங்கடவுள் கிறிஸ்தவர் அல்ல - இந்துவும் அல்ல!கட்டுமான ஆயுள்பொருளாதார நிர்வாகம்காவல்துறைஜி.குப்புசாமி கட்டுரைசேவை நோக்கம்ஆர்.எஸ்.சோதிகொட்டும் பனிசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைடி.எஸ்.பட்டாபிராமன்முடிவுக்காலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!