தான்சானியாவில் சில முக்கிய நகரங்கள் உள்ளன. அதன் வரலாற்றுப் பின்னணி தொடங்கி, தற்போது அது வந்தடைந்திருக்கும் நிலையை, நாம் இந்தக் கட்டுரையில் காண்போம்.
டொடோமா
டொடோமா தான்சானிய நாட்டின் தலைநகரம். 1974ஆம் ஆண்டு, தான்சானிய அரசு, நாட்டின் தலைநகரை டார் எஸ் ஸலாம் நகரில் இருந்து, நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நகரமான டொடோமாவுக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்தது. காலனிய ஆட்சியின் அடையாளங்களைத் துறந்து, தான்சானியாவுக்கான தனித்துவம் கொண்ட ஒரு நகரைத் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பதே இதன் பின்ணணி.
மேலும், நாட்டின் மத்தியில் அதன் தலைநகர் அமைந்திருந்தால், நாட்டின் வளர்ச்சி எல்லாப் பகுதிகளுக்கும் சீராகச் சென்றடையும் என்றும் ஆட்சியாளர்கள் கருதினார்கள். 1974ஆம் ஆண்டு, பொது மக்கள் கருத்தும் கேட்கப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு 24 ஆண்டுகள் கழித்து, 1996ஆம் ஆண்டு, தலைநகரம் டொடோமாவுக்கு மாற்றப்பட்டது.
ஆனால், நாட்டின் பொருளாதாரத் தலைநகரான டார் எஸ் ஸலாமில் இருந்து மாறிச் செல்லும் முயற்சி வெற்றிபெறவில்லை. அரசின் நாடாளுமன்றம் டொடோமாவில் இருந்தாலும், டார் எஸ் ஸலாம் நகரமே இன்றும் தான்சானியாவின் முக்கிய நகரமாக விளங்கிவருகின்றது. இன்று டொடோமா 4 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சிறு நகரம் மட்டுமே.
டார் எஸ் ஸலாம்
நான், என் பணி வாழ்க்கையை 1990ஆம் ஆண்டு பெங்களூரூ மாநகரத்தில் தொடங்கினேன். மனதுக்குப் பிடித்த வேலை. கல்லூரித் தோழியே வாழ்க்கைத் துணையாக வந்த காலம். வாழ்க்கையின் வசந்த காலத்தின் முக்கியப் பகுதியாக, இனிய நினைவுகளாக மனதில் எஞ்சி நிற்கிறது.
மேலும், 25 ஆண்டுகளுக்குப் பின்னர், பணி வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் டார் எஸ் ஸலாம் வந்து சேர்ந்தேன். வந்து இறங்கிய முதல் நாளே மிதமான தட்பவெப்பமும், அன்பான மனிதர்களும், கடற்கரையும் என டார் எஸ் ஸலாம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊராகிப் போனது. என் வீட்டின் ஜன்னல் வழியே தெரியும் இந்துமா கடலை நெருங்கிய நண்பனாகவே மனது உணர்கிறது.
டார் எஸ் ஸலாம் என்றால், அரபி மொழியில் ‘அமைதியின் உறைவிடம்’ என்று பொருள். மஜீத் பின் செயித் என்னும் ஸான்ஸிபார் சுல்தானால், 1866ஆம் ஆண்டு இந்த நகரம் உருவாக்கப்பட்டது. பின்னர் ஜெர்மானிய காலனி ஆட்சிக்காலத்தில் இது தலைநகராக வளர்த்தெடுக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் பிரிட்டனிடம் ஜெர்மனி தோற்ற பின்னர், இந்த நகரமும், நாடும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.
டார் எஸ் ஸலாம், 1990கள் வரையில் பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. கெய்ரோ, அட்டிஸ் அபாபா, ஜோஹன்னஸ்பர்க், நைரோபி என ஆப்பிரிக்க கண்டத்தின் பெரிய நகரங்கள் வரிசையில், டார் எஸ் ஸலாம் இறுதியில் இருந்தது. ஆனால், 1990க்குப் பிறகு, தான்சானியா தன் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி, சந்தைப் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பியது. அதன் பின்னர் டார் எஸ் ஸலாம் நகரம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது.
இன்று உலகின் மிக வேகமாக வளரும் நகரங்களுள் ஒன்றாக டார் எஸ் ஸலாம் விளங்குகிறது. 60 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரத்தின் மக்கள்தொகை, 2035 வாக்கில் 1.5 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், புதிய விமான நிலையம், மிகவும் நவீனமான சாலைகள், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடல் வழிப் பாதை என தன்னைத்தானே மிக நவீன நகரமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கட்டுமானங்கள் அண்மையில் மறைந்த அதிபர் ஜான் மகுஃபுலியின் முன்னெடுப்பில் உருவானவை.
இந்தக் கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியமைப்பு நிறுவனம் (national social security fund – NSSF) ஆகும். இது நம் ஊர் ஃப்ராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் போன்ற ஒன்று. முறைசார் தொழில்களில், அரசுப் பணிகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் இருந்து, நம் ஊர் போலவே, 10% பிடிக்கப்படுகிறது. நிறுவனமும் தன் பங்காக ஊழியரின் சம்பளத்தில் 10%தை அரசுக்குச் செலுத்துகிறது.
இந்த நிதியை வைத்துக்கொண்டு, என்.எஸ்.எஸ்.எஃப் (NSSF) நிறுவனம், நாடெங்கிலும் முக்கிய நகரங்களில், பெரும் கட்டிடங்களைக் கட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகிறது. இந்தக் கட்டிடங்கள், மிக உயர் தரமானவை. நகரின் மிக முக்கியமான அடையாளங்களாக இவை விளங்குகின்றன.
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில், மொம்பாசா, டர்பன் துறைமுகங்களுக்கு அடுத்த படியாக முக்கியமான துறைமுக டார் எஸ் ஸலாம். ரவாண்டா, புருண்டி, கிழக்கு காங்கோ, ஸாம்பியா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் தங்கள் தேவைக்கான பொருட்களை இறக்குமதி செய்யவும், தங்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்யவும் டார் எஸ் ஸலாம் துறைமுகத்தையே நம்பியுள்ளன.
தான்சானியாவின் பெரும்பாலான தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்களும், நுகர்வுப் பொருள் தொழிற்சாலைகளும் டார் எஸ் ஸலாமைச் சுற்றியே அமைந்துள்ளன. உலகநாடுகளின் தூதரங்களும் இந்நகரிலேயே உள்ளன. தான்சானியாவின் வர்த்தகத் தலைநகரம். நம்ம மும்பை போல.
வழக்கமாக பல ஆப்பிரிக்க நகரங்களில் உள்ளது போல் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், இனக் கலவரங்கள் எதுவும் இல்லை. அன்பான மக்கள். சுத்தமான பொதுவெளிகள், சீரான பொருளாதார வளர்ச்சி என உலகின் மிகச் சிறந்த காஸ்மோபாலிட்டன் நாகரீக நகரங்களுள் ஒன்றாக வளர்ந்து வருகிறது டார் எஸ் ஸலாம்.
ஆருஷா
முந்தைய கட்டுரைகளில், கிழக்கு ஆப்பிரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு (East African Community) என்னும் 7 நாடுகள் கொண்ட அமைப்பைப் பற்றி எழுதியிருந்தேன். இந்த அமைப்பின் தலைநகரம் தான்சானியாவின் ஆருஷா நகரம். 6 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம்.
பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள ‘மேரு’ என்னும் மலையை ஒட்டி அமைந்துள்ள நகரம். கடல் மட்டத்தில் இருந்தது 1,400 மீட்டர் உயரத்தில் (பெங்களூர் கடல் மட்டத்தில் இருந்து 910 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நகரம்). பெங்களூர் போலவே எப்போதும் குளு குளுவென்னும் சூழல்.
இந்நகரில் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. 1961ஆம் தான்சானியாவின் (அன்று தாங்கினிக்கா) விடுதலைச் சாசனம் இங்கேதான் கையெழுத்தானது. சுதந்திர தான்சானியாவின் தொடக்க கால பொருளாதாரக் கொள்கைகளை பாதித்த, ஜூலியஸ் நைரேரேவின் சோசலிசக் கொள்கை, 1967ஆம் ஆண்டு, இங்குதான் வெளியிடப்பட்டது. அது ‘ஆருஷா பிரகடனம்’, என்றே அழைக்கப்படுகிறது.
அண்மைக் காலத்தில், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான ரவாண்டாவில் மிகப் பெரும் இனக் கலவரம் நிகழ்ந்தது. நாட்டில் உள்ள ஹூட்டு மற்றும் டூட்ஸி பிரிவு மக்களிடையே நிகழ்ந்த இன மோதலில், கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் டூட்ஸி பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்கள் ரவாண்டா நாட்டில் நிறுபான்மையினர்.
இதன் பின்ணணியில் நிகழ்ந்த போரை டூட்ஸிகளின் தலைவரான பால் ககாமே (Paul Kagame) முன்னின்று நடத்தி, பெரும்பான்மை ஹூட்டுகளையும், அரச இராணுவத்தையும் பணிய வைத்தார். போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சு வார்த்தைகள் ஆருஷாவின் நடைபெற்றன. ஐநா சபை மற்றும் தான்சானிய அதிபர் அலி ஹஸன் ம்வெயினி முதலியோர் முன்னிலையில், ‘ஆருஷா ஒப்பந்தம்’ கையெழுத்தாகியது. ரவாண்டா நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இதேபோல, புருண்டி, தெற்கு சூடான் நாடுகளின் பிரச்சினைகளுக்கான பேச்சு வார்த்தைகளும் இங்கே வெற்றிகரமாக நடந்து முடிந்தன. இங்கிருக்கும் இதமான தட்பவெப்பத்தினால் ஈர்க்கப்பட்டு, கிழக்கு ஆப்பிரிக்க மக்களைக் கடைத்தேற்றும் முக்கியமான பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள், தங்கள் அலுவலகங்களை இங்கே அமைத்துள்ளனர்.
செரெங்கெட்டி, மன்யாரா, கிளிமஞ்சாரொ, ஆருஷா தேசியப் பூங்கா, ங்கொரொங்கொரோ, தரங்கிரே என தான்சானியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள் இந்நகரைச் சுற்றி அமைந்திருப்பதால், இந்த நகரம் தான்சானியாவின் மிக முக்கியமான நகரமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்ல உலகத்தரம் வாய்ந்த விடுதிகள் உள்ளன.
இதர நகரங்கள்
மேற்சொன்ன நகரங்கள் தவிரவும் முக்கியமான நகரங்கள் உள்ளன. பகமாயோ (Bagamoyo) என்னும் கடலையொட்டிய சிறு நகரம், ஒரு காலத்தில் அடிமைகளை ஏற்றிச் செல்லும் துறைமுகநகரமாக இருந்தது. இன்று சிதிலமடைந்து, சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்து செல்லும் சிற்றூராக உள்ளது.
டாங்கா (Tanga) என்பது இன்னொரு முக்கியமான துறைமுக நகரம். ம்ட்வாரா (Mtwara) என்னும் நகரம் தான்சானியாவின் மிக முக்கியமான வேளாண் விளைபொருளான முந்திரி உற்பத்தித் தலம். இங்கிருந்து முந்திரி இந்தியாவுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல கிகோமா (Kigoma) நகரமும் ஒரு துறைமுக நகரம்தான். தாங்கினிக்கா ஏரியின் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரம். இங்கிருந்து பொருட்கள் காங்கோ மற்றும் புருண்டி நாடுகளுக்கு படகுகள் வழியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தொடர்புடைய கட்டுரைகள்
தான்சானியா: முக்கியத் தலங்களும், நகரங்களும்
தான்சானியா: பார்க்க வேண்டிய இடங்கள்
தான்சானியா: அரசியலும், புவியியலும்
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.