கட்டுரை, தொடர், வரலாறு, ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

நைரேரேவின் விழுமியங்களும், திட்டங்களும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
06 Aug 2023, 5:00 am
0

ரசியல் தலைவர், செயல்பாட்டாளர் என்பதைத் தாண்டி, நைரேரே வாசிப்பதிலும், எழுதுவதிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அவரது சொந்த நூலகத்தில் 8,000க்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன. அவற்றுள் பெரும்பாலானவை அவர் படித்தவை என்பதிலிருந்தே அவர் வாசிப்பதை எவ்வளவு முக்கியமாகக் கருதினார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில், ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியரின், ‘ஜூலியஸ் சீசர்’ மற்றும் ‘வெனிஸ் நகரத்து வணிகன்’ என்னும் இரண்டு படைப்புகளை ஸ்வாஹிலியில் மொழிபெயர்த்தார்.  தன் வாழ்நாளின் இறுதியில், மரணப் படுக்கையில் இருக்கும்போது, ப்ளேட்டோவின் ‘குடியரசு’ என்னும் நூலை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார்.

ப்ளேட்டோ முன்மொழிந்த ‘ஞானியான அரசன்’ (Philosopher King) என்னும் உருவாக்கம் நைரேரேவை மிகவும் பாதித்த ஒரு கருதுகோள் எனச் சொல்லலாம். அவருடைய நிர்வாக அணுகுமுறையைப் பெருமளவில் பாதித்த ஒன்று எனவும் கருத இடமிருக்கிறது. 

மொழிவழித் தேசியம்

தாங்கினிக்க விடுதலைப் போராட்ட காலத்தில், கிழக்கு ஆப்பிரிக்க விடுதலைப் போரை இணைக்கும் உத்தியாக நைரேரே, ஸ்வாஹிலி மொழியை முன்னெடுத்தார். அப்போது கிட்டத்தட்ட 1.4 கோடிப் பேர் இருந்த தாங்கினிக்காவில், அப்போது சுமார் 129 குறு மொழிகள் இருந்தன. அதாவது, சராசரியாக 1 லட்சம் மக்களுக்கு ஒரு மொழி. ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்குமான தொடர்புகளில் மிகப் பெரும் சிக்கல்கள் இருந்தன.

எனவே, அனைத்துக்கும் பொது மொழியாக ஸ்வாஹிலி மொழியை, தாங்கினிக்காவின், கிழக்கு ஆப்பிரிக்காவின் குரலாக முன்வைத்தார் நைரேரே. இந்த இணைப்பை மக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ள, இதன் வழி விடுதலைக்கான குரல் பொதுமக்களிடையே திரண்டு எழுந்தது. இன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் அலுவல் மொழியாக (ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழிகளுடன்) மாறியிருக்கிறது. இது ஒருவகையில் நைரேரேவின் தனிப்பெரும் பங்களிப்பு எனலாம்.

ஒரு கட்சி ஜனநாயகம்

தான்சானியா விடுதலை பெற்ற பின்னர், ஒரு ஜனநாயகக் குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டாலும், நாட்டில் ஒரே கட்சிதான் இருக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார் நைரேரே. இங்கிலாந்து போன்ற பல கட்சி ஜனநாயகம் என்பது, ஆப்பிரிக்கா போன்ற இனக் குழுக்கள் நிறைந்த நாடுகளில், தேவையற்ற போட்டியை உருவாக்கி, நாடு சிறு சிறு துண்டுகளாகப் பிளந்துவிடும் என்பதே அதற்கு அவர் முன்வைத்த காரணம். இதை ஒரு மேற்கத்திய, நவீனப் பார்வையிலிருந்து பார்க்கையில், ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு காரணம் போலத் தோன்றினாலும், ஆப்பிரிக்கச் சமூக இயங்கியலின், வரலாற்றின் பார்வையிலிருந்து நோக்குகையில், அந்த வாதத்தில் கொஞ்சம் பொருள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.

நைரேரே இருந்த வரை அவர் பல கட்சி ஜனநாயகத்தை ஆதரிக்கவில்லை. நைரேரே ஆட்சியின் இறுதிக் காலத்தில், இதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் எழுந்தன. இவரை அடுத்து வந்த அலி ஹஸன் ம்வெயினி காலத்தில், 1992ஆம் ஆண்டுதான் பல கட்சிகள் பங்கு பெறும் ஜனநாயகமாக மாறியது. ஆனாலும், இன்றுவரை எதிர்க்கட்சிகளுக்கான அரசியல் இடம் என்பது கனவாகவே உள்ளது.

உழைப்பாளி!

அதிபரான தொடக்க காலத்தில், மிகக் கடுமையான உழைப்பாளியாக இருந்தார். இதனால், அவரது குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மனைவி குழந்தைகளிடம் செலவிட அவருக்கு நேரமே இருந்ததில்லை. இதனால் பெரிதும் தகராறுகள் ஏற்பட்டு அவர் மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு பல முறை அவர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்.

அவர் தான்சானியாவின் தலைவரானதும், அவரது நெருங்கிய தோழமையான ஜான் விக்கன் என்பவரை அவரது காரியதரிசியாக நியமித்தார். ஜான் விக்கன் இங்கிலாந்து நாட்டின் உழைப்பாளர் கட்சியின் காமன்வெல்த் துறையின் பணியாற்றிக்கொண்டிருந்தவர். பணியின் ஒரு பகுதியாக இங்கிலாந்து நாட்டின் காலனிகளில் இருந்துவரும் அரசியலர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படி ஒரு உரையாடல் வழியே நைரேரேவுடன் நட்பானவர், நைரேரேவின் அழைப்பில் நிரந்தரமாக தான்சானியா வந்து பணியாற்றத் தொடங்கினார்.

ஆப்பிரிக்கத்துவம், சோஷலிஸம், தான்சானியாவுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் முதலியவற்றில், நைரேரேவின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பவராக இருந்தவர். கிட்டத்தட்ட இதேபோன்ற ஓர் உறவை நாம் இந்திரா காந்தி மற்றும் ஹக்சரின் இடையில், ஜெய்ராம் ரமேஷ் எழுதிய, ‘ஒன்றிணைந்த வாழ்வுகள்’ (Intertwined lives) என்னும் புத்தகத்தில் காண முடிகிறது. நைரேரேவின் இறுதிக்காலம் வரை அவரது காரியதரிசியாக இருந்த ஜான் விக்கன், அவர் மரணத்துக்குப் பிறகு, ஒய்வுபெற்று, தன் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்.

அதிபராகப் பதவியேற்ற உடன், உள்நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்பை நைரேரே உருவாக்க முனைந்தாலும், ஓர் இறையாண்மை பெற்ற நாட்டின் தலைவராக, ஆப்பிரிக்க கண்டத்தின் நலன்களிலும் கவனம் செலுத்தினார்.  அமெரிக்காவுக்குப் பயணம் செய்த அவர், அன்றைய அமெரிக்கத் தலைவர் ஜான் கென்னடியுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக்கொண்டாலும், அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை எதிர்ப்பதில் அவர் பின்வாங்கவே இல்லை.  தென் ஆப்பிரிக்க நிறவெறிக் கொள்கை அரசுக்கு எதிராக, விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு வெளிப்படையான ஆதரவை அளித்தார். காங்கோவில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பு என்னும் கொள்கையில் மிக உறுதியாக நின்றார்.

ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளும் இணைந்து, ‘ஒரே ஆப்பிரிக்கா’ என்னும் அரசியல் பொருளாதார அமைப்பாக மாற வேண்டும் என்பதே அவர் கனவாக இருந்தது. ஆனாலும், பரந்து விரிந்த ஆப்பிரிக்க கண்டத்தில், அது உடனடியாக சாத்தியமில்லை என்பதை உணர்ந்தவர் அவர். எனவே, அதன் முதற் கட்டமாக, பிராந்தியக் கூட்டமைப்புகளை அவர் உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார். அதற்கு பல நாடுகள் ஆதரவாக இருந்தாலும், அவை மெல்ல மெல்லத்தான் நிறைவேறின.

இதன் முதல் முனைப்பு 1980ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டுக் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இது 1992ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டுக் கூட்டமைப்பாக மாறியது. இதில் தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, போட்ஸ்வானா, காங்கோ, லெஸோத்தோ, மடகாஸ்கர், மலாவி, மௌரிஷியஸ், மொஸாம்பிக், நமீபியா, ஸ்வாஜிலேண்ட், தான்சானியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்தன. இந்த நாடுகளில் உற்பத்தி செய்து இந்தக் குழுவின் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி கிடையாது என்னும் முதல் படியில் தொடங்கி, இந்தக் குழுவின் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை ஒன்றிணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

அவர் மிகவும் விரும்பிய தான்சானியா. கென்யா, உகாண்டா என்னும் மூன்று நாடுகளும் ‘கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம்’ (East African Community) என்னும் பெயரில் 1999ஆம் ஆண்டு இணைந்தன. இன்று ஆப்பிரிக்காவில் இதுபோல, மொத்தம் 8 பிராந்திய வர்த்தகக் கூட்டமைப்புகள் உள்ளன. மெல்ல மெல்ல அவற்றினூடே வர்த்தக மேம்பாடு நடந்துவந்தாலும், என் போன்ற வர்த்தகத்தில் இருப்போருக்கு இதன் முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை. 

பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (International Monetary Fund) முனைப்பில் உருவாகியுள்ள ஆப்பிரிக்க சுதந்திரச் சந்தை (African Continent Free Trade Area) என்னும் அமைப்பில், மொத்த ஆப்பிரிக்காவையும் ஒன்றிணைந்த வணிகக் கட்டமைப்பில் கொண்டுவரும் முனைப்பில் 2018ஆம் ஆண்டு மொத்தம் 44 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இன்னும் 10-15 ஆண்டுகளில், மொத்த ஆப்பிரிக்காவும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பாக உருப்பெற்றுவிடும் என்கிறார்கள். இதுபற்றிய முழுமையான பார்வையை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

ராணுவக் கலகம்

ஆட்சிக்கு வந்தவுடன், இராணுவத்திலும், அரசு நிர்வாகத்திலும் தான்சானியர்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த முன்னுரிமை மூன்றாண்டுகளில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக ராணுவத்தில் சலசலப்புகள் ஏற்பட்டன. நைரேரேவின் மூன்றாவது ஆண்டில் (1964 ஜனவரி), அவரை எதிர்த்து ஒரு ராணுவப் புரட்சி ஏற்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் உதவியுடன் அந்தப் புரட்சி இரண்டு நாட்களிலேயே நாட்களிலேயே அடக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் அரசு நிர்வாக அமைப்புகளில் பெரும் மாறுதல்களைச் செய்தார். ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

ஸான்ஸிபார் புரட்சி

அதே மாதத்தில், தான்சானியாவை ஒட்டியிருந்த ஸான்ஸிபார் தீவுகளில் அரசாங்கத்தை எதிர்த்து, ஒரு கலகம் ஏற்பட்டது.  1963ஆம் ஆண்டு விடுதலை பெற்றிருந்தாலும், ஸான்ஸிபார் தீவுகளின் ஆட்சி அரேபியர்களிடம் இருந்தது. பெரும்பான்மை கறுப்பின மக்கள் இதனால் பெரும் கொதிப்பு ஏற்பட்டிருந்தது. பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த ஆஃப்ரோ - ஷிராஜி கட்சியின் கருமே ஸான்ஸிபார் தீவுகளின் முதல் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். 200 ஆண்டுகளாக அரேபியர்களின் தலைமையின் கீழ் இருந்த அரசு, உள்ளூர் கறுப்பின மக்களின் கைகளில் வந்தது.

கம்யூனிஸ நாடுகளும் சீனமும் ஸான்ஸிபாரின் உதயத்தை வரவேற்றன. ஆனால், மேற்கத்திய நாடுகள் அமைதியாக இருந்தன. உள்ளூர் மக்களின் விடுதலை வேட்கையை மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பதைக் கண்டு நைரேரே கோபம் கொண்டார். இதனால், ஸான்ஸிபார் கம்யூனிசத் தரப்பில் சேர்ந்துவிடும் அபாயம் இருந்தது.

ஏப்ரல் மாதத்தில் ஸானிஸிபார் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட, நைரேரே, அடுத்த நாளே, ஸான்ஸிபார் தீவுகளும், தாங்கினிக்காவும் இணையும் என்னும் அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் நடந்துகொண்டிருந்த பனிப் போர் மிக முக்கியமான காரணமாக இருந்தது. ஏனெனில், ஸான்ஸிபார் தீவுகள், தாங்கினிக்க நாட்டின் அன்றைய தலைநகரான டார் எஸ் ஸலாமுக்கு மிக அண்மையில் (4 கிலோ மீட்டர்) இந்து மகா கடலில் இருக்கும் ஒரு குட்டித் தீவு. மொத்தமே 3.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாடு. அங்கே சோவியத் யூனியன் தனது மேலாதிக்கத்தைக் கொண்டுவந்தால், புதிதாக விடுதலை பெற்ற தாங்கினிக்காவையும் அது பாதிக்கலாம் என அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், பொதுவெளியில், ஆப்பிரிக்க கண்டத்தை இணைப்பதன் முதல் படி என்றே சொன்னார்.

இரண்டு நாடுகளும் இணைந்து, தற்காலிகமாக, ‘தாங்கினிக்கா மற்றும் ஸான்ஸிபார் ஐக்கியக் குடியரசு’ என்னும் பெயரில் இயங்கத் தொடங்கின. சில மாதங்களுக்குப் பிறகு, ‘தான்சானியா ஒன்றியக் குடியரசு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தொடக்கத்தில் மந்திரி சபையிலும், நாடாளுமன்றத்திலும், ஸான்ஸிபார் மக்கள்தொகைக்கு ஏற்ப இல்லாமல், அதிகமான இடங்கள் அளிக்கப்பட்டன. ஸான்ஸிபாரின் தனித்துவம் தான்சானியப் பெரும்பான்மையில் காணாமல் போய்விடக் கூடாது என்னும் பெருந்தன்மையின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக நைரேரே இதை நியாயப்படுத்தினார்.

தான்சானியப் நாடாளுமன்றத்துக்கு 1965ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடந்தது. ஸான்ஸிபாரில் நடக்கவில்லை. ஒரு கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலையில் இருந்தபோது, ஆளும் கட்சியான தான்சானியா ஆப்பிரிக்க தேசிய யூனியன், மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுக்க நினைத்தது.  ஆறு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் தலா இரண்டு பேரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில், 2 மந்திரிகள், 6 துணை மந்திரிகள், 9 மக்களவை உறுப்பினர்கள் தோற்றுப்போனார்கள். ஆனால், அதிபர் தேர்தலில் நைரேரேவை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. 96% வாக்குகளைப் பெற்று நைரேரே மீண்டும் அதிபரானார்.

இந்தக் காலகட்டத்தில், மிக வேகமாக உயர்ந்த தான்சானிய மக்கள்தொகைக்கு ஏற்ப, பொருளாதாரம் வளரவில்லை. இதனால், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி நிலவியது.  சிக்கன நடவடிக்கையாக, தன்னில் தொடங்கி, அரசு ஊழியர்கள் ஊதியத்தைக் குறைத்தார் நைரேரே. 

ஆருஷா பிரகடனம்!

நைரேரே தான்சானியாவின் தலைவராகி ஆறு ஆண்டுகளாகியும், விரும்பிய வண்ணம் சமூகப் பொருளாதார மேம்பாடுகள் நிகழாமல், அதிருப்தி வெளியே தெரியத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் தனது கொள்கைகளை ஒரு பிரகடனமாக கட்சி மாநாட்டில் முன்வைத்தார். இது தான்சானியாவின் அழகிய நகரமான ஆருஷாவில் நிகழ்ந்ததால் ‘ஆருஷா பிரகடனம்’ என அழைக்கப்படுகிறது.

இந்தப் பிரகடனம் தான்சானியா ஒரு ஜனநாயக சோஷலிஸ நாடாக, தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும் என்பதைத் தன் முதன்மைக் குறிக்கோளாக அறிவித்தது. நாட்டை முன்னேற்ற விவசாயமே பிரதானம் என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

ஆருஷா பிரகடன மாநாட்டில் நைரேரே

இதையடுத்த சில நாட்களில், வங்கிகள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள், பெரும் வேளாண் பண்ணைகள், சிமெண்ட், சிகரெட், காலணித் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தேசியமயமாக்கப்பட்டன. இவற்றை நிர்வகிக்கப் போதுமான தான்சானிய நிர்வாகிகள் இல்லாததால், வெளிநாட்டு நிர்வாகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தெற்காசிய நாட்டைச் (பெரும்பான்மை இந்தியர்கள்) சேர்ந்தவர்கள்.  

வெற்றி பெறாத ‘உஜாமா’

வேளாண்மையில் மிக முக்கியமான முன்னெடுப்பு ‘உஜாமா’ என்னும் கூட்டுறவு வேளாண்மை முறை. உழவர்கள் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருப்பெற்று, நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கூட்டுறவுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. 

இந்த உஜாமா திட்டத்துக்கு முன்னோடி 1960களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘ருவுமா மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ (Ruvuma Development Association) என்னும் கூட்டுப்பண்ணை முயற்சியாகும். ருவுமா என்பது தான்சானியாவின் தென்கோடியில் உள்ள பிற்படுத்தப்ப்பட்ட பகுதி.  இங்கே நைரேரேவின் முயற்சியால், நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, தன்னிறைவுத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதனால், வேளாண்மை உற்பத்தி அதிகரித்து, வறுமை குறைந்தது. குழந்தை இறப்பு சதவீதம் குறைந்தது. கல்வி மேம்பட்டது. 

ஆனால், தேசிய அளவில் இந்த முயற்சி வெற்றியடையவில்லை. இந்த முயற்சியினால், வேளாண் உற்பத்தி பெருகி, ஏற்றுமதி அதிகரித்து, அதன் வழியே நுகர்பொருள் தொழில்களில் முதலீடு செய்யலாம் என அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறாமல் போனதால், அது நிகழவில்லை. பெரும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டது அரசு.

தான்சானியா அரசு 1970களில், தனியார் கட்டிடங்களையும் தேசியமயமாக்கியது. வாழ்வதற்கு ஒரு வீடு மட்டும் போதும் என உரிமையாளர்களின் மற்ற கட்டிடங்களைப் பறிமுதல் செய்து உள்ளூர் மக்களிடையே மறுவிநியோகம் செய்தது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்களும் மற்ற தெற்காசியர்களும்தான்.

உகாண்டாவுடன் போர்

உகாண்டாவில் ராணுவக் கலகம் 1971ஆம் ஆண்டு மூண்டது. ராணுவத் தளபதி இடி அமீன், உகாண்டாவின் தலைவர் ஒபாட்டேவைப் பதவியில் இருந்தது இறக்கிவிட்டு, புதிய அதிபராகப் பதவியேற்றார். இடி அமீன் தலைமையிலான அரசை நைரேரே அங்கீகரிக்க மறுத்தார். ஒபாட்டேவுக்கு தான்சானியா அடைக்கலம் கொடுத்தது.  தான்சானியாவில் இடி அமீனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தார் நைரேரே. இதனால், உகாண்டாவுக்கும், தான்சானியாவுக்கும் இடையே பகை வளர்ந்தது.

இது முற்றிப்போய் 1978ஆம் ஆண்டு உகாண்டா, தான்சானியா மீது போர் தொடுத்து, ககேரா என்னும் பகுதியைப் பிடித்தது. உகாண்டாவின் ராணுவத்தைத் தோற்கடித்து, இடி அமீனைப் பதவியில் இருந்து இறக்குவது என்னும் முடிவுடன் நைரேரே பதில் தாக்குதலைத் தொடங்கினார்.  தான்சானியா ராணுவம் வெற்றிகரமாக உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவைக் கைப்பற்றியது. இடி அமீன் வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். ராணுவ ஆட்சி முடிந்து, மீண்டும் உகாண்டாவில் சகஜ நிலை திரும்பியது.

ஆனால், இந்தப் போர் மிகப் பெரும் பொருளாதாரச் சுமையைத் தான்சானியா மீது சுமத்தியது. அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. ஆனாலும், உலக நிதி மையத்தில் நிதி உதவி பெறுவதை நைரேரே பெரிதும் விரும்பவில்லை.

நாட்டில், 1980 - 1895 காலகட்டத்தில் பெரிதும் அதிருப்தி நிலவியது. நைரேரே தனது காலகட்டம் முடிவுக்கு வருவதை உணர்ந்திருக்க வேண்டும். தனக்கு அடுத்தவராக, ஸான்ஸிபார் பகுதியைச் சேர்ந்த அலி ஹஸன் ம்வெய்னியைத் தனக்கு அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்து, பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார்.

இன்று இருக்கும் முதிய தலைமுறை, பெரும்பாலும் 1970 - 1980 களில் நிலவிய பொருளாதார வளர்ச்சியின்மை, அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, சொத்துக்கள் பறிமுதல் போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு ம்வாலிமு நைரேரே மீது கொஞ்சம் கசப்பு இருப்பதை உணர முடிகிறது.  தங்கள் செல்வத்தையும், உடமைகளையும் இழக்க நேரிட்டதால், தெற்காசிய மக்களுக்கு வருத்தம் கூடுதல்.

ஆனால், காலனி ஆதிக்கம் முடிந்து கால் நூற்றாண்டுக் காலம், ஆப்பிரிக்கா போன்ற பல நூறு பழங்குடிகள் இணைந்த ஒரு நாட்டை மொழிவழித் தேசியமாக ஓரளவு நிலையான நாடாக நிலைநிறுத்தியதில், நைரேரேவின் பங்கு அளப்பரியது. அண்டை நாடான கென்யாவும் ஸ்வாஹிலி பேசும் நாடுதான் எனினும், அங்கு இனக் குழுக்களுக்கு உள்ளே நடைபெறும் மோதல்கள் தான்சானியாவில் இல்லை.  தான்சானியா முன்னெடுத்த சோஷலிஸ அணுகுமுறை என்பது நாட்டின் எல்லாப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெற உதவியிருக்கிறது. இன்று ஆப்பிரிக்காவில் ஓரளவு நிலையான ஆட்சிமுறையைக் கொண்ட அமைதியான நாடு தான்சானியா என உலகம் மதிப்பிடுகிறது எனில், அதில் நைரேரேவின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஜூலியஸ் நைரேரே: தான்சானியாவின் தேசத் தந்தை
நைரேரே: நவீன தான்சானியாவின் சிற்பி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2






சுய சிந்தனைமாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்பி.எஸ்.மூஞ்சிபாதம்இந்தித் திணிப்புஆட்சிப் பணிவீழ்ச்சியும் காரணங்களும்இலக்கியவாதிதேசியத்தன்மைசோஷலிச சிந்தனைஆனந்த விகடன்குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரிவிஹாங் ஜும்லெவாழ்க்கை முறைஇறையாண்மைராஜமன்னார் குழுஎதிர்ப்புபெரியாரும் வட இந்தியாவும்எழுத்தாளர்கள்குலசேகரபட்டினம்சோம்பேறித்தம்அருஞ்சொல் முதல் பிறந்த நாள்இடைநுழைப்பு நியமனங்கள் தீர்வாகிவிடாதுடி.எம்.கிருஷ்ணாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?ஊழல்கால் பாதிப்புவல்லரசு நாடுவழக்கு நிலுவைதேர்தல்கள்: மாறாத உண்மைகள்தனிநபர் வருமான வரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!