கட்டுரை, தொடர், அரசியல், சர்வதேசம் 3 நிமிட வாசிப்பு

தான்சானியா: அரசியலும், புவியியலும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
20 Aug 2023, 5:00 am
0

தான்சானியா, ஆப்பிரிக்க நாட்டின் 12ஆவது பெரிய நாடு. இதன் மொத்தப் பரப்பளவு, 9.47 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். மொத்த தென்னிந்தியாவையும், மஹராஷ்ட்ராவையும் சேர்த்தால், 9.43 லட்சம் சதுர கிலோமீட்டர்கள்.  தான்சானியாவின் மக்கள்தொகை 6.13 கோடி. மேலே சொன்ன இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை 36 கோடி.  தான்சானியாவின் பொருளாதார அளவு 76 பில்லியன் டாலர்கள். தமிழ்நாட்டின் பொருளாதார அளவு 350 பில்லியன் டாலர்கள்.  

தான்சானியா முதன்மையாக வேளாண்மையை நம்பியிருக்கும் நாடு. ஆனால், வேளாண்மை என்பது இந்தியா அல்லது வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்ற ஒன்றாக இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான ஒன்று, இங்கே நில உடமை என்பது இல்லை. நிலங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம். இதில் உழுபவர்கள் அனைவரும் குத்தகைதாரர்களே. நிலம் சொந்தமில்லை என்பதால், அதில் நிரந்தரமான நீர்ப் பாசனக் கட்டமைப்பை ஏற்படுத்த உழவர்கள் தயங்குகிறார்கள். அதுபோக இங்கே நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு குறிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  

பதப்படுத்தும் தொழிற்சாலைகள்

எனது ஐரோப்பிய நண்பர் ஒருவர், இங்கே 600 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையை ஒட்டிய விவசாயம் செய்ய முயன்றுவருகிறார். நிலத்தை சட்டபூர்வமாக வாங்க முடியாது என்பதால், தான்சானிய முதலீட்டுக் கழகம் வழியே முதலீடுசெய்து, நிலப் பத்திரங்களை வாங்கி என அவர் சொன்ன வழி கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பதைப் போலக் கடினமானது. இன்னொரு நண்பர் 3,000 ஏக்கரில் மா பயிரிட்டுவருகிறார். அவர் கதை, ‘நல்ல தங்காள்’ கதை போல நீண்ட நெடும் சோகக் காவியம். இவை என்று லாபகரமாக மாறும் என உலகைப் படைத்த ஆண்டவனுக்கும் தெரியாது. 

இரண்டாவது முக்கியக் காரணம், இந்தியா போல ஓர் ஒருங்கிணைந்த அரசுத் திட்டங்கள் இங்கே இல்லை.  எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், அரசின் தொழில்நுட்ப உதவி, வீரிய விதைகள், வேதியுரங்கள் என ஒரு சூழல் இல்லை. இருந்தபோதிலும், இங்கு விளையும் வேளாண் பொருட்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முந்திரி, எள், பருப்பு, கற்றாழை நாரினால் உருவாக்கப்படும் கயிறுகள் முதலியன முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள்.

கற்றாழை எஸ்டேட், இடையில் பௌபார்ப் மரங்கள்

தான்சானியாவின் 70 - 75% மக்கள் நம்பியிருக்கும் வேளாண்மை பெரும்பாலும் வானை நம்பியிருப்பது. நிலத்தடி நீர், பெரும் நீர்ப் பாசனக் கட்டமைப்புகள் என இல்லை. இதனால், உற்பத்தி, சந்தை விலை என எல்லாத் தரப்புகளிலுமே சோதனைகளைச் சந்திக்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

அதேபோல, வேளாண் உற்பத்தியைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இங்கே உருவாகிவரவில்லை. எடுத்துக்காட்டாக, இந்தியா இங்கிருந்து முந்திரிக்கொட்டையை இறக்குமதி செய்து பதப்படுத்தி, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது. அப்படி எந்தப் பெருநிறுவனங்களும் இங்கே உருவாகிவரவில்லை. 

ஏற்றுமதி என்பது மதிப்புக் கூட்டாமல் செய்யப்படுவதால், மதிப்புக் கூட்டலின் பலன்கள் கிடைக்காமல் போகிறது. இது தான்சானியாவுக்கு மட்டுமல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளும் சந்திக்கும் பிரச்சினை. எடுத்துக்காட்டாக, உலகின் மிகப் பெரும் கச்சா எண்ணெய் வளம் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான நைஜீரியா, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்கிறது. 

மத அரசியல் 

தான்சானியாவின் இன்னுமொரு தனிச் சிறப்பு, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதுகாக்கப்பட்ட இடங்களாக இருக்கிறது. உலகின் மிகவும் புகழ்பெற்ற செரெங்கெட்டி தேசியப் பூங்கா உள்ளிட்ட 22 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இவை சுமார் 1 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. (தமிழ்நாட்டின் பரப்பளவு 1.3 லட்சம் சதுர கிலோமீட்டர்). சுற்றுலா என்பது தான்சானியாப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளிக்கிறது.

ஆப்பிரிக்காவின் மிக உயரமான இடமும் (கிளிமஞ்சாரோ மலைச் சிகரம்), மிகவும் தாழ்வான இடமும் (தாங்கினிக்க ஏரி) தான்சானியாவில் உள்ளன என்பது இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சம். 

தான்சானியாவின் மக்கள்தொகையான 6 கோடியில், 63% மக்கள் கிறிஸ்தவர்கள், 34% மக்கள் இஸ்லாமியர்.  தான்சானியா ஒரு மதச்சார்பற்ற நாடு. விடுதலை பெற்றதில் இருந்து, தான்சானியாவின் தலைவர்கள் கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மாறி மாறி இருந்திருக்கிறார்கள்.  இது கிட்டத்தட்ட எழுதப்படாத விதி போல உள்ளது ஆச்சர்யம்தான்.  

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

என் நண்பர் ராஜா ஸ்வாமிநாதன், அவர் தான்சானியா வந்த காலத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான கதை ஒன்றைச் சொன்னார். ஒருமுறை இரு பதின்பருவச் சிறுவர்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில், ஒருவர் இஸ்லாமிய மதநூல் மீது சிறுநீர் பெய்துவிட, அது பெரும் சர்ச்சையானது. உள்ளூர் மௌலானா சிறுநீர் பெய்த சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்க ஃபட்வா கொடுத்துவிட, டார் எஸ் ஸலாம் நகரம் பதற்றத்தில் ஆழ்ந்தது. கொஞ்சமும் தாமதிக்காமல், தான்சானியாவின் ஜனாதிபதி ராணுவத்தை வரவழைத்து சிறுசிறு கலாட்டக்கள் நடக்கும்போதே தடுத்து நிறுத்தி, அமைதியை நிலைநாட்டினார். ஃபட்வா விதித்தவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனாதிபதி பின்னர் நேரடியாக, சண்டையில் ஈடுபட்ட சிறுவர்களின் வீட்டுக்குச் சென்று, இருவரையும் நேரில் சந்தித்து, அவர்கள் செய்தது தவறு என அறிவுரை கூறி அதை முடித்துவைத்தார். அந்த ஜனாதிபதி ஓர் இஸ்லாமியர்.

அதேபோல, அண்மையில் ஒரு கிறிஸ்தவ அரசு ஊழியர் வாட்ஸப் வழியே இஸ்லாமியர்களை இழிவுசெய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அது நிகழ்ந்த கணமே, அந்த அரசு ஊழியர் வேலையில் இருந்து விலக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதைச் செய்த ஜனாதிபதி ஜான் பொம்பே ஜோஸஃப் மகுஃபுலி கிறிஸ்தவர்.  

இங்கே கிறிஸ்தவ - முஸ்லீம் என மத மோதல் விளையாட்டை அரசியல் தலைவர்கள் யாரும் விளையாடுவதில்லை. அவரவருக்கு அவரவர் மதம்.

மக்களாட்சி – நாடாளுமன்றம் - தேர்தல் முறை

விடுதலை பெற்ற காலமான 1961 முதல் 1994 வரை, தான்சானியா ஒரே கட்சி ஜனநாயகமாக இருந்தது. நாட்டின் ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் குடியரசு முறை.

இதில் 1994 வரை ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததனால், இன்னுமே எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான சிசிம் கட்சியை வீழ்த்த முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலுக்கு முன்பும், தேர்தலில் போட்டியிட விரும்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். அப்படிப் பெறப்படும் விண்ணப்பங்கள் சிசிஎம் கட்சியின் தனிக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. பின்னர், இறுதியில், சிசிஎம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடையே நடக்கும் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.  

வெற்றிபெறும் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் தலைவராக பிரதமரையும், மந்திரி சபையையும் நியமிக்கிறார். தான்சானிய அரசமைப்புச் சட்டப்படி, ஒருவர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். பதவியில் இருக்கும்போதே ஜனாதிபதி மறைந்துவிட்டால், துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.  2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகுஃபுலி பதவியில் இருக்கும்போதே இறந்துபோக, துணை ஜனாதிபதியான சமியா சுலுஹு ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆட்சிசெய்கிறார். (அமெரிக்காவின் நடைமுறையும் இதுதான்).

சாமியா சுலுஹூ, தான்சானிய ஜனாதிபதி

புங்கே என அழைக்கப்படும் நாடாளுமன்றத்தில் மொத்தம் 393 இடங்கள். இவற்றுள் 264 இடங்களுக்கு பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கூடுதலாக 113 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்கள் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப பிரநிதிகளை நியமிக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள்.  இதனால் வழக்கமான வாக்கரசியல் தேர்தல் களத்தில் களமாட முடியாமல் போகும் பெண்களுக்கு ஓரளவேனும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி ஏற்படுகிறது. தற்போதைய தான்சானிய நாடாளுமன்றத்தில் 142 பெண் எம்பிக்கள் (36%) உள்ளார்கள். ஒப்பீட்டளவில் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் 15% உள்ளார்கள். 

இந்தியாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தரும் மசோதா நிரம்ப நாட்களாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. தான்சானியா போல் ஒருமுறை கொண்டுவரப்பட்டால், வாங்கிய வாக்கு சதவீத அடிப்படையில் பல கட்சிகளின் பெண் உறுப்பினர்கள் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. நமது அரசியல் கட்சிகள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.

(தொடரும்…)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியாவின் வணிக அமைப்பு
தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி
தான்சானியாவை அண்மையில் அறிதல்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

2

ஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாஹைச்டிஎல்ஜெயலலிதா – தமிழிசைஉடை சர்வாதிகாரம்பங்குச் சந்தைஎன்னால் செய்யப்பட்டதுகார்த்திக் வேலு கட்டுரைமாற்றம் வேண்டும்பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்யேசு கிறிஸ்துபந்து வீச்சாளர்கள்துணை முதல்வர்குதிகால் வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?லட்சியவாதம்ஹேக்கர்கள்பசி மயக்கம்வரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!பள்ளிக்கூடங்கள்தன்பாலின ஈர்ப்புசமையல் எண்ணெய்பெரும் பணக்காரர்கள்டிஸ்ட்டோப்பியாநீதிபதி சந்துருசென்னையை நாசப்படுத்திவிட்டோம்: ஜனகராஜன் பேட்டிமதுதிரிக்குறள்சாரிநேர்காணல்கட்டமைப்பு வரைபடம்வேளாண் புரட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!