கட்டுரை, தொடர், வாழ்வியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

தான்சானியாவை அண்மையில் அறிதல்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி
18 Jun 2023, 5:00 am
0

டிகர் எம்ஜிஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்துக்கு பிறகு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்னும் திரைப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. அந்தக் காலக் கனவுக் கன்னிகளான மஞ்சுளா, லதா, ராதா சலூஜாவை எல்லாம் ஆப்பிரிக்கக் கவர்ச்சி உடைகளில் காணும் பாக்கியம் ஏனோ தமிழ்ச் சமூகத்துக்கும் எனக்கும் கிடைக்காமல் போயிற்று. எனது நிறைவேறாத கனவை நிறைவேற்ற முடிவுசெய்து, கடவுள் எனக்கு தான்சானியாவில் பணி கொடுத்து அனுப்பிவிட்டார் போல. 

சில பாடங்கள்

பணியில் சேர்ந்த அடுத்த மாதமே எங்கள் ஆண்டு விழா நடந்தது. அதில் கோட்-சூட் போட்டு காயர் என க்ளாஸாகத் தொடங்கிய நிகழ்வு, சில நிமிடங்களுக்குப் பிறகு மாஸாக மாறியது. மிகவும் அந்தரங்கமான அசைவுகளைக் கொண்ட நடனங்களை ஆண்களும் பெண்களும் ஆட, மொத்த சூழலும் மாறிப்போனது. இந்தியக் கலாச்சார வெங்காயத்தை எல்லாம் தூக்கி எறியும் நடனம் அது. கூட்டம் ஆர்ப்பரித்தது. எனக்குத்தான் மூஞ்சியை எங்கே வைத்துக்கொள்வது என்னும் சிக்கல்.

பணிபுரியத் தொடங்கியவுடன் சில கலாச்சாரச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகளில் என்ன கேட்பது என்பதும், உடன் பணிபுரியும் தோழர்கள் முக்கியமாகத் தோழியர்களுடன் என்ன பேசுவது என்பதும் பற்றிக் கிடைத்த பாடங்கள் முக்கியமானவை. 

எடுத்துக்காட்டாக, இந்தியர்கள் மற்றவர்களுடன் பேசத் தொடங்கிய உடனேயே, குடும்பம், குழந்தைகள் எனப் பேசத் தொடங்கிவிடுவோம். பணிக்கான நேர்காணல்களில்கூட குடும்ப விவரங்கள் பேசப்படும். இங்கே தனி வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதை யாரும் விரும்புவதில்லை. எதிர்கொண்ட சில சில முகக் குறிப்புகளிலேயே புரிந்துகொண்டு தவிர்க்கத் தொடங்கினேன்.

தான்சானியர்கள் பொதுவாகவே தங்கள் சொந்த விவகாரங்களை நம்மிடம் பேசுவதில்லை. கலாச்சார வேறுபாடுகள்கூடக் காரணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக என் வாகன ஓட்டுநர் ம்ஷாங்கா 8 ஆண்டுகளில் மொத்தமாக என்னிடம் 3 மணி நேர அளவு பேசியிருந்தால் அதிகம். வெளியூர் பயணங்களில், மாலை நேரத்தில் உணவு உண்ணும்போது பேசுவார். துருவித் துருவிக் கேட்டால், தன் குடும்பம் பற்றிக் கொஞ்சம் சொல்வார். அப்படி ஒரு மாலை நேரத்தில்தான் அவருக்கு 5 குழந்தைகள் என்றும், மூத்தவர் மகள் என்று அறிந்துகொண்டேன். “என்ன செய்கிறாள்?” எனக் கேட்டேன். “பள்ளி முடித்துவிட்டாள்” என்று சொன்னார். மேலே படிக்கவில்லையா எனக் கேட்டதும் அமைதியாகிவிட்டார். பேசவில்லை. மீண்டும் கேட்டபோது, இயலாமை முகத்தில் தெரியச் சொன்னார் “நோ மணி.” மகளின் வருடாந்திரக் கல்லூரிக் கட்டணம், அவரது நான்கு மாத ஊதியம். (இன்று அவர் மகள் கல்லூரி செல்கிறார். நிதி ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது).

இப்படியாகச் சில மாதங்களிலேயே தான்சானியச் சமூகம் தொடர்பான பல நுட்பங்களைப் புரிந்துகொண்டேன். மிக முக்கியமாக நமது கலாச்சார சொம்பை எடுத்துக்கொண்டு பஞ்சாயத்துக்குப் போகக் கூடாது என்பதே நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம். 

தூய்மை…

பணியில் சேர்ந்தவுடன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, ரத்த தான முகாம் ஒன்று நடந்தது. தானம் செய்யும் முன்பு படிவம் ஒன்றை நிரப்ப வேண்டி இருந்தது. பெயர், வயது என்பதை அடுத்து சில வில்லங்கமான கேள்விகள். ‘திருமணம் ஆகிவிட்டதா?’ ஆமெனில், ‘எத்தனை மனைவிகள்?’ ‘மண உறவு தாண்டிய பாலியல் தொடர்புகள் உண்டா?’ எனக் கேள்விகளைப் படிக்கையில் கிளுகிளுப்பாக இருந்தாலும், இதற்கான பின்னணியை உணர்ந்த பின்னர் அது அடங்கிவிட்டது.

பணி தொடர்பாக முதலில் தான்சானியா எங்கும் பயணம் செய்யத் தொடங்கியபோது, என்னை ஈர்த்த முதல் விஷயம் சுத்தமான பொதுவெளிகள். ஐரோப்பியா அளவு எனச் சொல்ல மாட்டேன். ஆனால், இந்தியாவைவிடப் பல மடங்கு சுத்தம். என் தொழிலின் மிக முக்கியமான அங்கம் மொத்த வணிகச் சந்தைகளுக்குச் செல்லுதல். ஒப்புநோக்குகையில், இந்தியாவின் மொத்த வணிக வளாகங்கள் மிகவும் தூய்மைக் குறைவானவை. 

விடுமுறைக்காக தான்சானியா வந்திருந்த, மனைவியும் மகளும் ஒருநாள் டார் எஸ் ஸலாம் நகரில் தனியே உலவப்போய் வந்தார்கள். இந்தியாவில் வழக்கமாகப் பெண்கள் தனியே செல்கையில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் ‘ஆண் பார்வை’ (Male Gaze) இங்கே இல்லை. “அந்தப் பார்வையின்மை தரும் விடுதலை உணர்வை உணர்ந்தோம்” எனச் சொன்னார்கள். அதேபோல, செரெங்கெட்டி தேசியப் பூங்காவின் மத்தியில் இருந்த பொதுக் கழிவறை தூய்மையாக இருந்ததாகவும் சொன்னார்கள்.

தான்சானியா வந்து 8 ஆண்டுகள் ஆயிற்று. இதுவரை தெருவில் சிறுநீர், மலம் கழிக்கும் மனிதர்களைக் கண்டதில்லை. தெருவில் இளநீர் விற்கும் மனிதர்கள்கூட வெட்டிய இளநீர்க் கழிவை தெருவில் கொட்டிச் செல்வதில்லை. இந்தியராக நாம் கற்க வேண்டிய குடிமைப் பண்பு இது என்பது என் புரிதல்.

அதற்காக தான்சானியாவில் ஏழ்மைப் பகுதிகளே இல்லை எனச் சொல்ல முடியாது. மிகவும் ஏழைகளும் வாழ்கிறார்கள். அவர்கள் வாழிடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்ஸில் பயணம் செய்யப் பணமின்றி பல கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் மனிதர்களை சாலையில் பார்க்கலாம். சாலைச் சந்திப்புகளில் பிச்சைக்காரர்களும் உண்டு. ஆனாலும் நகரின் பொதுவெளிகளை அசுத்தமாக்காமல் பராமரிக்கிறார்கள்.

தான்சானியாவில் இந்தியர்கள்!

இந்தியர்கள், தான்சானியாவின் ஸான்ஸிபார் தீவுகளில் 13 - 14ஆம் நூற்றாண்டுகளியே இருந்ததாகப் பல தகவல்கள் சொல்கின்றன.  இந்தியர்கள் பல அலைகளாக தான்சானியா வந்திருக்கக்கூடும் என்பது இன்னொரு தகவல். முக்கியமாக குஜராத் பகுதியிலிருந்தும், பஞ்சாபில் இருந்தும் தான்சானியாவுக்கு வணிகர்கள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். குஜராத்தின் படேல், லோஹானா எனப் பல வணிகச் சாதிகளும், இஸ்லாமியர்களில் ஷியா, இஸ்மாயிலி, போஹ்ராப் பிரிவுகளைச் சார்ந்த வணிகர்களும் வந்து குடியேறி இருக்கிறார்கள். 

மிக அண்மையில் தொழில்முனைவோராக பெருமளவில் தெலுங்கு தேச வணிகர்கள் வந்துள்ளார்கள். இவர்கள் தவிர தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரம், கேரளம், கோவா போன்ற மாநிலங்களில் இருந்து மக்கள் பணிபுரிய (என்னைப் போல்) இங்கே வந்துள்ளார்கள். டார் எஸ் ஸலாம் உள்பட தான்சானியாவின் பல நகரங்களிலும், இவர்கள் தங்களுக்கான கோவில்களை, குருத்வாராக்களை, மசூதிகளை நிறுவியுள்ளார்கள். டார் எஸ் ஸலாமில் இந்தியச் சமூகத்தின் பல்வேறு தரப்பின் கோவில்களை நாம் ஒரே வீதியில் காண முடியும். திருப்பதி பாலாஜி, ஸ்வாமி நாரயண் மந்திர், முதல் சாய் மந்திர் வரை. அந்தத் தெருவின் பெயரே கோவில் தெருதான்.

டார் எஸ் ஸலாம் கோவில் தெருவில் உள்ள ஸ்வாமி நாராயண் மந்திர்

தான்சானியா விடுதலை பெற்ற காலத்தில், பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்தியர்களிடம் இருந்தது. 1967 - 1970கள் காலத்தில், தேசியமயமாக்கம் என்னும் பெயரில், தனி மனிதர்களிடம் இருந்த செல்வங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. இதனால், ஒப்பீட்டில் செல்வந்தர்களாக இருந்த இந்தியர்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். தான்சானியாவில் மெல்ல மெல்ல இந்தியர்களின் நிலை வலுவிழக்கத் தொடங்கினாலும், தங்களது உழைப்பால் மீண்டும் பலர் தங்களை மீண்டும் வலுவாக நிறுவிக்கொண்டனர். ஆனால், சிறு நகரங்களில் இருந்த இந்தியர்கள், தங்களுக்கான எதிர்காலத்தைத் தேடி தான்சானியாவை விட்டு வெளியேறினர். இதில் முக்கியமானவர்கள் சீக்கியர்கள். அவர்களைத் தான்சானியர்கள் ‘சிங்கா சிங்கா’ என்று அழைக்கின்றனர்.

ஆனாலும் இந்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் தான்சானியாவில் வலுவாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். சப்பாத்தி இன்று தான்சானியாவின் மிக முக்கியமான உணவு. இந்தித் திரைப்படப் பாடல்கள் இங்கே மிகவும் பிரபலம். ஷாருக்கான் நடித்த ‘குச் குச் ஹோத்தா ஹே’ படத்தில் வரும் ‘தும் பாஸூ ஆயே’ பாடல் ஒருகாலத்தில் தேசிய கீதம் போலவே பிரபலமாக இருந்தது.

பிரபல டிக்டாக் கலைஞர் கிலி பாலும் அவரது சகோதரியும்

இந்தி பாடலுக்கு வாயசைத்து டிக்டாக் வீடியோக்களை வெளியிடும் கிலி பால் என்னும் தான்சானிய மசாய் இனத்தவரும் அவருடன் நடனமாடும் அவரது சகோதரியும் தான்சானியாவின் மிகப் பெரும் சூப்பர் ஸ்டார்கள். அண்மையில் விஜய் படத்தின் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலுக்கும் நடனமாடியிருந்தார். அவரிடம் பெண்மை சாயல் கொண்ட நளினம் இருக்கிறது. அது ஒரு அழகு!

தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி என இந்தியாவின் எல்லா மாநில மக்களுக்கும் சங்கங்கள் உண்டு. பண்டிகைகள் தாண்டி, இந்தியாவின் பெருமிதமான சினிமா எல்லோரையும் ஆட்கொள்ளும் சக்தி. டார் எஸ் ஸலாமில் கிட்டத்தட்ட 4 - 5 சினிமா தியேட்டர்கள் உண்டு. எல்லா புதிய படங்களுக்கும் குடும்ப சகிதம் ஆஜாரகிக் கொண்டாடுவார்கள். தான்சானியர்களுக்கும் இப்போதுதான் சினிமா பைத்தியம் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி
தான்சானியாவின் வணிக அமைப்பு
தான்சானியாவில் என் முதல் மாதம்
ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.




1




அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மையவாதம்எலும்பு மூட்டுராஜ்பவன்கள்கோபாலகிருஷ்ண காந்தி கட்டுரைரத யாத்திரைவாசகர் குரல்தங்கம் தென்னரசுசேவை மையம்பல்கலைக்கழகங்களில் அதிகாரம்ஜோதிராதித்யா சிந்தியாஇன்டியாஉணவுப் பதப்படுத்துதல்நிர்வாகக் கலாச்சாரம் வேஷதாரியா?மகாபாரதம்இளையராஜாமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்சமாஜ்வாதி கட்சிதுப்புரவுப் பணியாளர்கள்கல்கியின் புத்தகங்கள்ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடுமதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்பிரேம் ஆனந்த்வேலு கட்டுரைதனி வாழ்க்கைலோன் செயலிகள்மலையாளப் படம்பெக்கி மோகன் கட்டுரைஅதிமுகவின் அதிகார மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்பைத்தியக்காரத்தனங்கள்மணி மண்டபம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!