கட்டுரை, வாழ்வியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

தான்சானியாவில் என் முதல் மாதம்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
19 May 2023, 5:00 am
0

தான்சானியா நாட்டில் என் முதல் நாள். இரவு நன்றாகத் தூங்கி எழுந்தேன். காலையில் மீண்டும் வெண்மணலில் நடை. உணவு உண்டு, குளித்து, 8 மணிக்கு அலுவலகம் சென்றேன். அங்கே என்னை வரவேற்றவர் ஒரு தமிழர்.

அவர் ராஜா என்னும் ராஜா ஸ்வாமிநாதன். திருச்சிக்குப் பக்கத்தில் உள்ள ஆங்கரை என்னும் கிராமம் அவரது சொந்த ஊர். தந்தை இரயில்வே ஊழியர். பெங்களூர், சென்னையில் பள்ளிக்கல்வி. லயோலா கல்லூரியில் இளநிலை கணிதம். கொல்கத்தா மேலாண் கழகத்தில் முதுநிலை மேலாண்மை படித்தவர். 5 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய பின்னர், ஆப்பிரிக்காவுக்கு வந்தவர். நைஜீரியா, கானா, தான்சானியா என 30 ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்தவர். 

அன்புடன் வரவேற்று முதலில் தொழிற்சாலையைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். அது 1970 - 80களின் இந்தியத் தொழிற்சாலைகளைப் போல் இருந்தது. முதலில் என்னைக் கவர்ந்த விஷயம், தொழிற்சாலை முழுவதும் பெண்கள். “எப்படி?” என்று ஆச்சர்யத்தில் கேட்டேன். ராஜா எனக்கு தான்சானியச் சமூகத்தின் கட்டமைப்பை விளக்கினார். “இங்கே சமூகப் பொருளாதார, அரசியல் தளங்களில், பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில், தேர்தலில் ஜெயிப்பது போக, 30% பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். எனவே, சமூகப் பொருளாதார அரசியல் வெளிகளில் பெண்கள் தென்படுவது சாதாரணம். இங்கே நமது தொழிற்சாலையில்கூட கிட்டத்தட்ட 75% பெண்கள்தான்” என்றார். எனக்கு முதல் நாளே இந்த நிறுவனத்தைப் பிடித்துவிட்டது. 

என் இனிய நண்பர்

பின்னர் வீடு தேடும் படலம். எங்கள் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை, டார் எஸ் ஸலாம் நகருக்கு வெளியே அமைந்திருந்தது. நான் “தொழிற்சாலைக்கு அருகிலேயே ஒரு வீட்டைப் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன். மிக அழகான வீடுகளைக் காட்டினார். கடற்கரையோரம் அமைந்திருந்த ஓர் அடுக்ககத்தில், வீட்டைத் திறந்ததும், ஜன்னல் வழியே கடல் தெரிந்தது. அதுதான் என் வீடு என முடிவெடுக்க ஒரு விநாடிகூட எனக்குத் தேவைப்படவில்லை.

வீட்டின் ஜன்னல் வழியே தெரியும் இந்து மகா சமுத்திரம்!

சில நாட்கள் கழித்து, என்னை இரவு விருந்துக்காக ஓர் உணவகத்துக்கு வருமாறு அழைத்தார் ராஜா. ‘அக்கெமி’ (Akemi) என்ற பெயர் கொண்ட அந்த உணவகம், டார் எஸ் ஸலாம் நகரின் மத்தியில் உள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தின் 23ஆம் மாடியில் உள்ள சுழலும் உணவகம். உணவகம் மெல்லச் சுழல, இரவில் ஜொலிக்கும் டார் எஸ் ஸலாம் நகரின் அழகைக் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். முக்கியமாக இடங்களில், சுழலும் உணவகத்தைவிட்டு விலகி நின்று நகரை நிதானமாகப் பார்க்க இடங்களும் உண்டு.

டார் எஸ் ஸலாம் நகரை அந்த உயரத்தில் இருந்து, அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் பார்க்கப் பார்க்க அழகாக இருந்தது. ராஜாவின் மனைவி ராதாவுக்கு நான் கொண்டு சென்றிருந்த சாய்பாபா டாலரைக் கொடுத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்துபோனார். அவர் புட்டபர்த்தியில் சாய்பாபா கல்லூரியில் படித்தவர். மிகவும் சமயோசிதமாக, எனக்கு டார் எஸ் ஸலாம் நகரை மிகச் சரியான முறையில் அறிமுகம் செய்த ராஜா அடுத்த 6 ஆண்டுகள் எனக்கு மிகவும் நெருங்கிய மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். 

சமமாக நடத்த வேண்டும்…

டார் எஸ் ஸலாம் நகரில் சில தியேட்டர்கள் உண்டு. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தித் திரைப்படங்கள், இந்தியாவில் வெளியாவதற்கு முதல் நாளே திரையிடப்படும். சென்னையில் வீட்டுக்காரம்மா பன்னிரண்டாம் வகுப்பு படிக்க மறுக்கும் மகனுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, நான் இங்கு வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை எல்லாம் முதல் நாளே பார்த்து அவரை வெறுப்பேத்திக்கொண்டிருந்தேன்.

டார் எஸ் ஸலாமில் எங்கே சோனா மசூரி பச்சரிசி கிடைக்கும், முருங்கைக் காய் கிடைக்கும், தேங்காய், மசாலா, ஊறுகாய், நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றெல்லாம் ஒரு சகோதரியைப் போல பரிவுடன் எனக்கு வழிகாட்டினார் ராதா. மிக விரைவில் விடுதியைக் காலிசெய்துவிட்டு, என் வீட்டுக்குக் குடிபோனேன். 

அடுத்து நான் செய்ய வேண்டியது வண்டி ஓட்டும் உரிமம் பெறுதல். நான் இந்தியாவில் வைத்திருந்த ஓட்டுநர் உரிமத்தின் மீது நம்பிக்கை வைத்து, கேள்வியே கேட்காமல் 40 ஆயிரம் ஷில்லிங் (நம்ம ஊர் மதிப்பில் 1,500 ரூபாய்) வாங்கிக்கொண்டு தான்சானிய உரிமம் கொடுத்தார்கள்.

என் நிறுவனத்தை உருவாக்கியவர் மூன்றாம் தலைமுறை இந்தியர். குஜராத்தி வம்சாவழியில் வந்தவர். ஆனால், தன்னை தான்சானியன் என்றே சொல்லிக்கொள்வார். சேர்ந்த முதல் நாள் எனக்குக் கொடுத்த முதல் அறிவுரை இங்கிருக்கும் தான்சானியர்களைச் சமமாக நடத்த வேண்டும். அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், அது என்னைப் பொருத்தவரையில் மன்னிக்க முடியாத குற்றமாகும் எனச் சொன்னார். அதேபோல தான்சானியக் கலாச்சாரம் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து மாறுபட்டது. இங்கே பாலியல் உறவுகள் தவறல்ல. ஆனால், அது எந்தவிதத்திலும் நிறுவனத்துக்குள் நுழையக் கூடாது. வணிகத்தைப் பாதிக்கக் கூடாது. நான் பேச வாயெடுக்கும் முன்னரே, “நீங்கள் புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், சொல்வது என் கடமை” என்று அதைக் கடந்துவிட்டார். எனக்கும் அதில் மேலே பேச ஒன்றுமில்லை.

நான் தான்சானியன் என்று சொல்லிக்கொண்டாலும், அவருக்கு இந்தியா மீதும் அபரிதமான அன்பு இருந்தது. எங்கள் நிறுவனத்தில், நாங்கள் தயாரிக்கும் பொருட்களை நாங்களே விநியோகம் செய்யும் வணிக அமைப்பு எங்களது. அந்த விநியோகத்துக்காக பயன்படுத்தும் எல்லா லாரிகளும் டாட்டா நிறுவனத்துடையது. எனது போக்குவரத்துக்காகக் கொடுக்கப்பட்ட வாகனம்கூட டாட்டா ஸ்டார்மே என்னும் நாலு சக்கரத்திலும் (4 வீல் ட்ரைவ்) ஓடக்கூடிய ஒரு வண்டிதான்.

டாலாவும் போடாவும் 

டாட்டா, கார்கள் தயாரிக்கத் தொடங்கிய காலத்தில், தங்களது 407 மினி லாரியையே, கார் எனச் சொல்லி விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தியாவில் ‘டாட்டா சுமோ’ என அழைக்கப்பட்ட அந்த வண்டியைக் கொஞ்சம் சொகுசாக்கி ஆப்பிரிக்காவில் எங்களுக்கு விற்றுவிட்டார்கள்.

‘தொட்டால் பூ மலரும்’ எனச் சென்னையில் நான் ஓட்டிக்கொண்டிருந்த மென்மையான ஹோண்டா சிட்டி காரிலிருந்து, தில்லி எருமை போன்ற டாட்டாவுக்கு மாறுவது சிரமமாக இருந்தது. மிக முக்கியமாக, வாகனத்தை நிறுத்தும்போது அது லாரி போலவே கிடுகிடுவென ஆடி நிற்பது கொஞ்சம் பப்பி ஷேமாக இருந்தது. என்னிடம் வரும்போதே அது பழைய காராக வந்தது. இன்று கிட்டத்தட்ட ரத்தன் டாட்டா போலாகிவிட்டது. அண்மையில் தலைவர்கூடச் சொன்னார் “புதுசா வாங்கிக்கய்யா”னு, ஆனால் நாம யாரு பாட்டா பாத்ரூம் செருப்பக்கூட தேஞ்சு, கால் தரையில் படும்வரை பயன்படுத்தும் பரம்பரை ஆச்சே… ஒருநாள் அதுவா சாலையில் கழன்று விழும் வரை ஓட்டுவோம் என ஓட்டிகிட்டு இருக்கேன். 

லைசென்ஸ் வாங்கி நானே அதைச் சாலையில் ஓட்டும்போது எதிர்கொண்ட பல விஷயங்கள் அலாதியானவை. முதலாவது, சாலையில் கார் போன்ற தனியார் வாகனம் ஓட்டும் மக்கள் அனைவரும் சாலை விதிகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. ஒருவரை ஒருவர் முந்துவதில்லை, லேன் மாறுவதில்லை, ‘பாங்… பாங்’ எனக் காட்டுத்தனமாக ஹாரன் அடிப்பதில்லை. மிக முக்கியமாக, “த்தா டேய்…” என்று இலக்கியத்தரமாக ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்வதில்லை.

ஆனால், இதைச் சமன் செய்வதுபோல நடந்துகொள்பவர்கள் இரு தரப்பினர். ‘டாலா டாலா’ (Dala Dala), என அழைக்கப்படும் மினி பஸ் ஓட்டுநர்களும், ‘போடா போடா’ (Boda Boda) என அழைக்கப்படும் மோட்டார் பைக் டாக்சிகளை ஓட்டுபவர்களும். அடுத்து எதிர்ப்படும் ஆசாமியை போட்டே தீர்வது எனக் கருமமே கண்ணாக ஓட்டுவார்கள். நான் ஊருக்கு வெளியே வசிப்பதாலும், விடுமுறை நாட்களிலும் அலுவலகம் செல்லவே வண்டியை பயன்படுத்துவதாலும், அவர்களை எதிர்கொள்ளும் பாக்கியம் இன்றுவரை கிட்டவில்லை.

நான் பணியில் சேர்ந்த அந்த மாதம்தான் தான்சானியாவின் தேர்தல் வந்தது. தேர்தல் சமயத்தில் கலவரம் நடக்கலாம் எனப் பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் சொல்லின. எனவே, அந்த மாதம் முழுவதும் நான் டார் எஸ் ஸலாமை விட்டு வெளியே பயணம் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் முடிவில், தான்சானியாவின் ஆளுங்கட்சியான சிசிம் (Chama Cha Mapinduzi – CCM – புரட்சிக் கழகம்) பிரதிநிதியான ஜான் பொம்பே ஜோசஃப் மகுஃபுலி என்னும் ஜான் மகுஃபுலி வென்று அதிபரானார். அவர் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வெற்றிப் பேரணியில் சென்ற மோட்டார் பைக்கின் ரியர் வ்யூ கண்ணாடி உடைந்தது மட்டும்தான் நான் நேரடியாகக் கண்ட வன்முறை. இப்படியாக என் முதல் மாதம் – பணியில் தேனிலவு எனச் சொல்லப்படும் மாதம் கழிந்தது. 

(தொடரும்…)

 

தொடர்புடைய கட்டுரை

ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்
எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

3





கால்பந்து வீரர்சுயாட்சித்தன்மைபூர்வீகக்குடி மக்கள்திருப்பாவைகொலையில் பிறந்த கடவுள்கள்கோபம்அபுனைவுசுறுசுறுப்புஓய்வுபெற்ற நீதிபதிகள்ஆயிரம் ஆண்டுசி.பி.கிருஷ்ணன் கட்டுரைகேரள இடதுசாரிகளுக்கு இழப்பு ஏன்?வடவர் ஆதிக்கம்பாடநூல் மரபுசிறுநீரகப் பாதிப்புபெண்ணியம்பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர்சட்டத் திருத்தம் அருஞ்சொல்வாரிசுஜர்னலிஸம்உபரி உற்பத்திபெஜவாடா வில்சன்விளக்கமாறுஇலங்கைஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்பிரபஞ்சம்பேட்ரிக் ஒலிவெல்ஷெஹான் கருணாதிலகஆம் ஆத்மி கட்சிமுகம் பார்க்கும் கண்ணாடி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!