கட்டுரை, வாழ்வியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி
09 May 2023, 5:00 am
2

ப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் பணிபுரிய விருப்பமா என தில்லியில் இருந்து ஒரு பிரபல தலைக் கொய்வாள (Head Hunters) நிறுவனத்தின் இயக்குநர் அழைத்தபோது, உடனடியாக அந்த நாடு எங்கிருக்கிறது என ஆப்பிரிக்க வரைபடத்தில் தேடிக் கண்டுபிடித்தேன்.  

பின்னர் நேர்முகத் தேர்வு செல்வதற்கு முன்பு, தான்சானியா தொடர்பான விவரங்களையும், நான் பணிபுரியப்போகும் நிறுவனம், பிராண்டு போன்ற விஷயங்களையும் சேகரித்துக்கொண்டேன். நேர்முகத் தேர்வு சரியாகப் போகவில்லை. சில சமயங்களில் அது நம் கைகளில் இருப்பதில்லை. ஆனால், ஆச்சர்யமாகப் பணி கிடைத்தது.

ஆப்பிரிக்காவின் அமைப்பு

தான்சானியா செல்ல முடிவெடுத்து நண்பர்களிடம் சொன்னபோது, ஒருவர் “ஆப்பிரிக்காவில் சிறப்பாக ஒட்டகம் மேய்த்து வெல்ல வாழ்த்துகள்” என்று ஒரு செய்தியை அனுப்பியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். ஆப்பிரிக்கா தொடர்பான பொதுவான சித்திரம் இப்படித்தான் இருக்கிறது. ஆப்பிரிக்கா என்றாலே பாலைவனம், ஒட்டகம், பசியால் வயிறு ஒட்டிய குழந்தைகள், வாழைக் குடியரசுகள் என்று. ஆப்பிரிக்கா பற்றிய அந்தச் சித்திரம் நமக்குப் பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகக் கிடைப்பதுதான். இதில் உண்மை இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனால், அது முழுமையான சித்திரம் அல்ல. 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மொத்த பரப்பளவு 30 மில்லியன் கி.மீ. மக்கள்தொகை 140 கோடி. பொருளாதார அளவு 3 ட்ரில்லியன் டாலர்கள். இந்தியாவின் பரப்பளவு 3.2 மில்லியன் கி.மீ. மக்கள்தொகை 142 கோடி.  பொருளாதார அளவு 3.7 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது இந்தியாவுக்கு இணையான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கா, இந்தியா போன்று ஒன்பது மடங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் இருக்கின்றன. இந்தியா ஒரே நாடு. 

உலகின் மிகப் பெரும் ஏரிகளை, ஆறுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா. உலகின் மிக நீளமான பத்து நதிகளில் இரண்டு ஆப்பிரிக்காவில் உள்ளன – நைல் மற்றும் காங்கோ நதிகள். உலகின் மிகப் பெரிய பத்து ஏரிகளில் மூன்று ஆப்பிரிக்காவில் உள்ளன – விக்டோரியா ஏரி, டாங்கினிக்கா ஏரி மற்றும் மலாவி ஏரி. உலகின் மிகப் பெரிய பத்துப் பாலைவனங்களில் இரண்டு ஆப்பிரிக்காவில் உள்ளன – சஹாரா மற்றும் கலஹாரி.

உலகில் சிந்திக்கத் தெரிந்த மனித இனம் ஹோமோ சேப்பியன்ஸ் கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. உலகின் மிக முக்கியமான நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரிகம் நைல் நதிக்கரையில் தோன்றியது. ஆனாலும், ஆப்பிரிக்கா என்றவுடன் அதைப் பற்றிய எதிர்மறைச் சித்திரங்களே பொதுவெளியில் உலவுகின்றன என்பது ஒரு சரித்திரச் சோகம்.

தடுப்பூசியுடன் தொடங்கிய பயணம்

ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டும் எனில் மஞ்சள் காய்ச்சலுக்கான (Yellow fever) தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு, தான்சானியாவின் வர்த்தகத் தலைநகர் டார் எஸ் ஸலாமில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மாலை வந்திறங்கினேன். பூமத்திய ரேகைக்குத் தெற்கே உள்ள நாடு என்பதால், அக்டோபர் மாதம் என்பது வெயில் காலம் தொடங்கும் காலம். எனினும், உஷ்ணமாக இல்லை. என்னை அழைத்துச் செல்வதற்கு வந்த ஓட்டுநரின் பெயர் இடி.

இடி என்றதும் உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன்தான் நினைவுக்கு வந்தார். ஆனால், இவர் மிக அழகான கண்களுடன், கனிவான புன்னகையுடன் வரவேற்றார்.  இஸ்லாமியப் பண்டிகையான ஈத் சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பொதுவாக இங்கே இடி எனப் பெயரிடுவது வழக்கம் எனப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வேலை கிடைத்தது

ம்பேஜி பீச் என்னும் இடத்தில் கடற்கரையின் மீது அமைந்திருந்த வெண்மணல் (White Sands) என்னும் விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். விடுதியில் எனது பெட்டிகளை வைத்துவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு, கடற்கரையில் உலவச் சென்றேன். ரவை போன்ற வெண்மையான மென்மணல், கடலுக்குள் கட்டப்பட்ட அழகான காட்டேஜ் என அந்த விடுதி எனது 30 ஆண்டுகள் வணிகப் பயணத்தில் கண்ட அழகிய விடுதிகளுள் ஒன்று. இரவு வரை கடற்கரையில் உலவினேன்.

அப்படி உலவிக்கொண்டிருக்கும்போது, நான் ஆப்பிரிக்கா வருவதற்கு எடுத்த முடிவை மனம் மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தது. நேர்காணல் சமயத்தில், என் வருங்காலத் தலைவர் ஒரு கேள்வியைக் கேட்டார், “உனக்கு ஆப்பிரிக்கா பற்றி ஒன்றுமே தெரியாது. என்ன தைரியத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பித்தாய்?” என்று.

நான் சொன்னேன், “ஐயா! என் பள்ளிக்காலம் தாண்டி எனது ஒவ்வொரு முடிவும் என்னால் எடுக்கப்பட்டது. இழப்பதற்கு என்னிடம் பெரிதாக ஒன்றுமில்லை. எனக்கு வழி சொல்ல என் பெற்றோருக்குத் தெரியாது. அவர்கள் அதிகம் படிக்காதவர்கள். ஆனால், ஒன்று மட்டும் என் நினைவில் எப்போதும் உள்ளது. அது என் அம்மாவின் அம்மா சொன்னது. “ஒரு வேலையை ஒரு மனிதன் செய்ய முடியும் என்றால், அது உன்னாலும் செய்ய முடியும்!” 

ஆப்பிரிக்காவிலும் மனிதர்கள்தாம் இருக்கிறார்கள். இந்தியாவில் நான் பெற்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு, சின்சியராக உழைத்தால், வெற்றிபெற முடியும் என நம்புகிறேன். மேலும் எனக்கு ‘டெஸ்டினி’ (destiny) மீது நம்பிக்கை உண்டு – அதுதான் இன்று என்னையும் உங்களையும் சந்திக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்” என்று சொல்லியிருந்தேன்.

அந்த நேர்காணலில் சில விவாதங்கள் எழுந்தன. சில சமயம் தோன்றுமல்லவா, இந்த நேர்காணல் ஒரு தோல்வி என்று. அப்படி ஓர் எண்ணம் எழுந்தது. போகட்டும் எனக் கிளம்பி, அதை மறந்துவிட்டிருந்தேன். ஆனால், வேலைக்கான ஆர்டர் வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

நிறைவான உறக்கம்

ஆப்பிரிக்க வேலை என்பது நிரந்தரமானது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வேலை செய்ய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இப்போதைய வேலைக்கான ஒப்பந்தம் என்பது 2 ஆண்டுகள்தாம்.

எங்கள் மகள் ஐஐடியில் முதுகலை மேம்பாட்டுக் கல்வி (MA – Developmental Studies) படித்துக்கொண்டிருந்தாள். மகன் சென்னை கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மனைவி சென்னையில் உள்ள ஒரு மேலாண் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எந்த ரிஸ்க்கும் எடுக்காமல், முதல் இரண்டு ஆண்டுகள் தான்சானியா செல்வோம். பணி தொடரத் தொடரப் பார்த்துக்கொள்வோம் என முடிவெடுத்திருந்தோம்.

திடீரென மனைவியின் நினைவு வந்தது. எங்கள் வீட்டில் நான் சினிமா பைத்தியம், எல்லா இடங்களுக்கும் ஒரு சிச்சுவேஷன் பாடல் பாடுவது நான்தான். இங்கே கிழக்கு ஆப்பிரிக்காவின், இந்து மகா சமுத்திரத்தின் கடற்கரையில் உலவிக்கொண்டிருக்கும்போது என் மனதில் வந்த பாடல், 

‘கொத்தும் கிளி இங்கிருக்க... கோவைப் பழம் அங்கிருக்க…
தத்திவரும் வெள்ளலையே… நீ போய் தூது சொல்ல மாட்டாயோ...’ 

வாட்ஸப்பில் டைப் செய்து அனுப்பினேன். அதற்கு, “அடி செருப்பாலே... மூணு கழுத வயசுல என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு” எனும் தொனியில் பதில் வந்தது. அப்போது, “காதலைக் கொல்லச் சிறந்த வழி, கல்யாணம் செய்துகொள்வதுதான்” என்னும் ஓஷோவின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. என் கடற்கரை உலாவலை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினேன். 

பிறகு குளித்துவிட்டு, உணவுக்கூடத்துக்குச் சென்றேன். அந்த விடுதியில் இந்தியச் சமையல்காரர்கள் இருக்கிறார்கள் எனச் சொன்னார்கள். அது ஆச்சர்யம் அளிக்கவில்லை. தான்சானியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள். பெரும்பாலும் குஜராத்திகள். நல்ல இந்திய உணவு கிடைத்தது. உணவுக்குப் பின் அறைக்குத் திரும்பும்போது, இது ஓர் அன்னிய நாடு என்றே தோன்றவில்லை. மனநிறைவுடன் உறங்கினேன். 

(தொடரும்...)

 

தொடர்புடைய கட்டுரை

எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

9

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

தி ந ச வெங்கடரங்கன்   5 months ago

காலனிய அதிக்கக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பல கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு மக்கள், கொத்தடிமைகளாக / கூலித் தொழிலாளர்களாய் போய் அங்கேயே தங்கி, இன்றைக்கு எண்ணிக்கையில் உணரக்கூடிய அளவில் இருக்கிறார்கள், இருந்தும் பெரும்பாலான தமிழக மக்களுக்கு (என்னையும் சேர்த்து) அவர்களைப் பற்றி, அந்த நாடுகளைப் பற்றித் தெரிந்திருப்பதில்லை என்பது எனக்கு வருத்தமே. அதனால் ஆப்பிரிக்காவைப் பற்றிய நண்பர்களின் பேஸ்புக் பதிவுகளாகட்டும், யூ-ட்யூப் வீடியோக்களாகட்டும் கண்ணில்பட்டால் கூடுதல் ஆர்வத்தோடு பார்ப்பேன். பயணக் கட்டுரைகளுக்குத் தமிழில் பஞ்சமேயில்லை: முன்னோடியான திரு ஏ.கே.செட்டியார் தொடங்கி, தி. ஜானகிராமன், சாவி, இதயம் பேசுகிறது மணியன் என வளர்ந்து, திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் வரை தொடர்கிறது. இவர்களில் பலரும் அங்கே பயணிகளாகப் போய் வந்தவர்கள். அங்கேயே சில, பல ஆண்டுகள் வாழ்ந்து, ஒரு தமிழரின் பார்வையில் அந்த நாட்டை, மக்களைப் பற்றி விவரமாக எழுதியவர்கள் குறைவே என நினைக்கிறேன். இந்த இரண்டு குறைகளுக்கும் பதில் சொல்லும் வகையில் இந்த தொடர் எனக்கு இன்று அகப்பட்டது, தீவிரத் தமிழ் இணைய வாசகர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஒரு கட்டுரையைப் படித்ததும் நிறுத்த முடியாமல், இதுவரை வெளிவந்துள்ள எல்லாக் கட்டுரைகளையும் படித்துவிட்டேன். அவ்வளவு சுவாரஸ்யம், யதார்த்தம். ஒவ்வொரு கட்டுரையும் இரண்டு, அல்லது இரண்டரைப் பக்கங்கள் தான், படிக்க சில நிமிடங்களே ஆகும். கடந்த இருபது ஆண்டுகளில் ஆனந்த விகடம், குழுதம், அமுதசுரபி, கல்கி போன்ற பெரிய பத்திரிகைகளின் வீழ்ச்சியால், பலருக்கும் இப்படியான எழுத்துக்கள் போய்ச் சேராமல் இருந்தது, தமிழில் இது போன்ற முயற்சிகளால் சரியாகும் என்ற நம்பிக்கை வருகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K Chitra   7 months ago

மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்தியாவையும் ஆப்ரிக்காவையும் மிக எளிமையாக பொருத்தி எழுதிய தகவல் ஆச்சர்யத்தை தந்தது. நன்றி

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தேவி லால்திமுக அரசுஎன்எஸ்ஓstate autonomyகாலி இடங்கள்தமிழக அரசுமொழியியல் தத்துவம்தனிமங்கள்ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்பத்திரிகையாளர்தலிபான்பதவி விலகல்ராகுலை யாரும் சந்திக்க முடியவில்லை: ஆசாத் பேட்டிபுலனாய்வு இதழாளர்வினோத் காப்ரிஆர்.எஸ்.நீலகண்டன்சீமாறுவரிபசுமைப் புரட்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம்திராவிடப் பேரொளிஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மைமழை குறைவுகுடல்வால் அழற்சிசமத்துவம்ராஜன் குறை சமஸ்குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணல்) மசோதா-2022ப.சிதம்பரம் உரைகணேசன் வருமுன் காக்கஅரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!