கட்டுரை, தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
மொத்த கனத்தையும் ஒரு ஸ்டாலின் சுமக்க முடியாது
படம்: ஆர்.செந்தில்குமார், பிடிஐ
திமுகவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உற்சாகத்தைவிடவும் அழுத்தத்தை அதிகம் பார்க்க முடிந்தது. “மத்தளம் இரண்டு பக்கங்களிலும் அடி வாங்குவதைப் போல, தமிழக முதல்வராகவும், திமுகவின் தலைவராகவும் இரண்டு பக்க நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டதானது, தன் கட்சியின் முன் நிற்கும் இரு பெரும் சவால்களின் சுமையை உணர்த்துவதாகவே தோன்றுகிறது. பிரச்சினை என்னவென்றால், திமுக நிர்வாகிகள் இதை எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திமுகவின் செயல் தலைவர் பதவிக்கு 2017இல் வந்தது முதலாகவே சுக்கானின் முழுப் பொறுப்பும் ஸ்டாலினிடம் வந்துவிட்டது. இந்த ஐந்தாண்டுகளில் நிதானமாகவும், படிப்படியாகவும் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார்.
சித்தாந்தப் பாதையில் திமுகவின் பயணத்தை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மாநில அளவில் மட்டும் அல்லாது, தேசிய அளவிலும் பாஜக எதிர் வரிசையில் திமுகவை முன்வரிசையில் நிறுத்தினார். ஒப்பீட்டளவில் கட்சிக்குள் குடும்ப அரசியலின் தாக்கத்தைக் குறைத்தார். கட்சியின் நிர்வாகிகள் அமைப்பை அவர் தலைகீழாக்கம் செய்திடவில்லை. தந்தையார் கருணாநிதியின் அரை நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தில் கட்சியில் அவருக்குப் பக்கபலமாக இருந்த மூத்தவர்களை அனுசரித்தார். அதேசமயம், எல்லாமும் பழைய பாணியில் நடக்கப்போவதில்லை என்பதையும் உணர்த்தினார்.
விமர்சனங்களுக்கு ஸ்டாலின் ஆக்கபூர்வமாக முகங்கொடுப்பதும், கையோடு கட்சிக்குள் எடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படையாகப் பகிர்வதும் கட்சியினருக்குத் தலைமையின் எண்ணவோட்டத்தை உடனுக்குடன் உணர்த்தின. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவுக்கு மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிகளைக் கொடுத்தார். அரசின் முன்னவராக இந்திய அளவில் குறிப்பிடத்தக்க ஒரு முதல்வராகவும், தமிழகத்தின் பெரும் தலைவராகவும் தன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
கட்சிக்குள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கும் பெரிய பண்பு மாற்றம் என்னவென்றால், முன்னைக் காட்டிலும் அதிகாரம் மையப்படுகிறது. ஸ்டாலின் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்; அந்த வட்டத்திலிருந்தே பல முடிவுகளும் எடுக்கப்படுகின்றன; விஷயங்கள் கையாளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு கட்சியினர் இடையே பரவலாகக் கேட்கிறது. ஆட்சி சார்ந்தும் இதே விமர்சனத்தைக் கேட்க முடிகிறது. இந்த விமர்சனம் ஸ்டாலின் முகம் கொடுக்க வேண்டியது ஆகும்.
இந்திய அரசியலில் மோடிக்குப் பிந்தைய காலகட்டத்தில் பல கட்சிகளிலும் பரவலாக ஏற்பட்டுவரும் ஒரு மாற்றம் இது என்றாலும், மரபார்ந்து இதற்கு எதிராகவே வளர்ந்த திமுகவை அப்படி நடத்திட முடியாது என்பதே உண்மை. சித்தாந்த அடித்தளத்தில் மட்டும் அல்லாது, கட்சியின் கட்டமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட கட்சி அது. இந்திய அளவில் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்தும் வெகுசில கட்சிகளில் ஒன்று. கட்சியின் நிர்வாக நடைமுறைகள், செலவுகள், நிதித் திரட்டல்கள் எல்லாவற்றிலுமே கட்சியின் கிளை அமைப்புகளும், கீழே உள்ள நிர்வாகிகளும் பொறுப்பாளிகள். திமுகவின் பெரிய பலம் இது. இதையெல்லாம் நன்கு உணர்ந்தவர் ஸ்டாலின். அப்படியிருந்தும் இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு என்ன காரணம்? இதற்கு ஸ்டாலினைத் தாண்டி கட்சிக்குள் நுழைந்து பார்ப்பது அவசியம்.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையே எல்லாத் துறைகளிலும் வேகமான மாற்றங்கள் நடப்பது இயல்பு. இந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க தக்க வகையில் எந்த ஓர் அமைப்பிலும் புதியவர்களின் வருகை நிகழ வேண்டும்; புதிய சிந்தனைகள் நுழைய வேண்டும். பழையவர்கள் புதிய சிந்தனைகளை வரித்துக்கொண்டு தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படியான அமைப்புகளே தங்களை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும்.
திமுக கடந்த காலங்களில் இந்தச் சவால்களுக்கு ஈடு கொடுத்திருக்கிறது. கருணாநிதி காலத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். கீழே மன்னை நாராயணசாமியின் காலகட்டத்திலேயே கோ.சி.மணி, கோ.சி.மணியின் காலகட்டத்திலேயே எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் என்று அடுத்தடுத்த வரிசைகளை உருவாக்கினார். அவரோடு உடனிருக்கும் சகாக்களின் வரிசையிலும் இந்தப் பண்பு பிரதிபலித்தது. அவர் எதிர்கொண்ட காலகட்டத்தின் சவால்களுக்கும் கட்சிக்குள் இருந்தவர்கள் போதுமானவர்களாக இருந்தார்கள்.
அரசியல் அரங்கம் பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தன்னை நிறைய மாற்றிக்கொண்டிருக்கிறார். அவருடைய பெரும்பான்மை சகாக்கள் இப்படி மாறவில்லை என்பது நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். கருணாநிதியின் கடைசி பத்தாண்டுகளிலேயே திமுக பெரும் தேக்கத்தில் சென்றது. கட்சிக்குள்ளான அதிகார மாற்றங்கள் ஸ்தம்பித்தன. ஆட்சியில் இல்லாததாலும், அடுத்தடுத்து தோல்விகளை எதிர்கொண்டதாலும் கட்சி நிர்வாகிகளை மாற்றவோ, அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவோ கட்சித் தலைமை முற்படவில்லை.
இதன் விளைவாக, கட்சியின் முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் நடத்தையில் தேக்கம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்றதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் திமுகவுக்குள் இளைய சக்தியின் வருகை வெகுவாகக் குறைந்தது. அதிமுக, தேமுதிக, விசிக, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் காலகட்டத்தில் இளைஞர்களை ஈர்க்கும் மையங்களாக இருந்தன.
கட்சி கெட்டிப்படுவதைப் பார்த்தபடிதான் ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசியல் களத்தில் கட்சி எதிர்கொள்ளும் சவால்களையும், தனக்கான உதவிகளையும் வெளியிலிருந்து பெற அவர் முடிவெடுத்தார். ஒரு சுனில் அல்லது பிரசாந்த் கிஷோரை திமுக அமர்த்திக்கொள்ள வேண்டிய தேவை உண்மையில் கட்சிக்குள் அப்படியானவர்கள் இல்லாத நிலையிலிருந்தே உருவானது. அதன் நீட்சியாகவே இன்று ஸ்டாலின் உருவாக்கியிருக்கும் குழுக்களையும் எதிர்கொள்ளும் விமர்சனங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
அப்படியென்றால், இதற்கான பிரதான காரணகர்த்தாக்களாக திமுகவின் அடுத்த நிலைத் தலைவர்களையே கூற வேண்டியிருக்கிறது. பொதுவெளியில் பேசுகையிலேயே அவ்வளவு பொறுப்பற்று பேசும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால், உண்மையில் மாறிவரும் அரசியல் சூழலில் அவர்களுடைய பொருத்தமின்மையின் வெளிப்பாடுதான் அது.
திமுகவின் இந்த ஓராண்டு ஆட்சியைத் தரம் பிரித்து மதிப்பிட்டால் ஒரு விஷயம் நமக்குப் புரியவரும்: முதல்வராக ஸ்டாலின் சாதித்திருக்கிறார்; சில அமைச்சர்கள் தங்கள் துறையில் பெரிய வேலைகளைச் செய்திருக்கிறார்கள்; பல அமைச்சர்கள் செயல்படவே இல்லை. அரசு அதிகாரிகளின் சாதுரியச் செயல்பாட்டால் இந்தப் பிரச்சினை சமாளிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த அரசின் பல திட்டங்கள் பொதுச் சமூகத்திலிருந்தும், அரசு அலுவலர்களிடமிருந்தும் முதல்வருக்கு நேரடியாகச் சென்றவை என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுவது அவசியம். "கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிகளிடமிருந்து புதிய யோசனைகள் வருவதே அரிதாக இருக்கிறது; அப்படிச் சொல்லும் புதிய தலைமுறையினர் பொறுப்புக்கு வரவும் இவர்கள் தடையாக இருக்கிறார்கள்" என்ற குரலைக் கட்சியினர் மத்தியில் கேட்க முடிகிறது.
கட்சிக்குள் உருவாகும் இந்தச் சிந்தனை வறட்சி ஆபத்தானது. சீட்டுகளைக் கலைத்துப்போட்டு ஆடுவதே இதற்கான தீர்வு.
கட்சியின் மேல்மட்டத்தில் மூத்தத் தலைவர்களை அனுசரிக்க வேண்டும்; கீழ்மட்டத்தில் பத்தாண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது ஏராளமான சுமைகளை எதிர்கொண்ட நிர்வாகிகளை இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில் மாற்ற வேண்டாம் என்று எண்ணுகிறார் ஸ்டாலின். நல்ல எண்ணம். இன்னும் துடிப்பாகச் செயல்படுபவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கையாளலாம். ஏனையோரை விரைவில் மாற்றுவதே சரியான செயல்பாடு.
நீண்ட காத்திருப்புக்கு இன்றைய தலைமுறை தயார் இல்லை.
அரசியலில் ஸ்டாலின் அடியெடுத்துவைத்து, கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் கழித்து ஆட்சி அமைத்தபோதும்கூட 1989, 1996 இரு அரசுகளிலும் அவரை அமைச்சர் ஆக்கவில்லை அவருடைய தந்தையார் கருணாநிதி. பொதுமக்களிடம் மட்டும் அல்லாது, கட்சியினரிடமும்கூட முழுமையான ஏற்பு வரவில்லை என்று எண்ணினார். ‘உதயநிதியை இந்த ஆட்சியிலேயே அமைச்சர் ஆக்குங்கள்’ என்று கட்சியின் முன்னணித் தலைவர்களே பேசுகிறார்கள். ஸ்டாலின் காலத்தை ஒப்பிட உதயநிதி காலத்தில் பொது மன ஏற்பு வேகமாகியிருப்பதற்கு காரணம் என்ன? மாறிவரும் காலகட்டத்தின் மனநிலை இது. உதயநிதிக்குப் பொருந்துவது ஏனையோருக்கும் பொருந்தும்.
கட்சியின் மாவட்டச் செயலர் பதவிகளில் கால் நூற்றாண்டு காலம் நீடித்துவிட்டவர்கள் தங்கள் வாரிசுகளையும் உள்ளே நுழைத்துவிட்ட பின்னரும் இன்னமும் தன்னுடைய இடத்தை விடாமல் அடைத்துக்கொண்டிருப்பதும் எல்லா நிலைகளிலும் மூத்தவர்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்பதும் கட்சிக்கு அழிமானத்தையே தரும். கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இது பொருந்தும்.
திமுக ஒரு சுயசுத்திகரிப்புக்குத் தயாராக வேண்டும். கட்சியின் எல்லா மட்டங்களிலும் ஆலோசனைக் குழு எனும் பிரிவை உண்டாக்கி ‘கட்சிப் பதவிக்கு அதிகபட்ச வயது 80; அதற்கு மேல் ஆலோசகர்களாக மட்டுமே இடம்பெற முடியும்’ என்ற சூழலைக் கொண்டுவரலாம். எல்லா வாய்ப்புகளிலும் குறைந்தது 50% இடங்களை 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கலாம். மூத்தவர்களுக்கான மதிப்பையும், பதவியையும் தேர்தல் மூலம் கட்சி முறைப்படி கொடுத்துவிட்டது. இனி மூத்தவர்கள் அவர்களாக முன்வந்து தங்கள் இடங்களை விட்டுக்கொடுப்பதை யார் தடுத்திட முடியும்? திமுகவின் மூத்தத் தலைவர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் புதிய ஆட்களும் புதிய சிந்தனைகளும் உள்ளே வர இது வழியை அகலமாக்கும்.
தேசிய அளவில் துடிப்பான எதிர்க்கட்சி, மாநில அளவில் முன்னகரும் ஆளுங்கட்சி எனும் இரண்டு பொறுப்புகளை இன்று திமுக எதிர்கொள்கிறது. இந்த இரட்டைப் பொறுப்புகளையும் சுமப்பதோடு, அடுத்தத் தலைமுறைக்கேற்றபடி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் திமுகவுக்கு இருக்கிறது. இதற்கான பொறுப்பு அதன் தலைவர் ஸ்டாலினிடம் மட்டும் இல்லை; ஒரு ஸ்டாலின் மட்டும் இந்தக் கனத்தைச் சுமக்க முடியாது என்பதை அவரும் உணர வேண்டும்; தன்னுடைய முன்னணி சகாக்களுக்கும் உணர்த்த வேண்டும்!
7
6
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 2 years ago
திமுக வின் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தேவையான அருமையான கட்டுரை.... தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொண்டு, நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதி, ஒருபோதும் சாக்கடையாகாது... மக்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அரசியலை சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் வெகுஜன மக்கள்... திமுகவைப் பற்றிய எதிர்பார்ப்பு படிப்பறிவு கொண்ட அரசூழியர்களிடம் நீக்கமற நிறைந்திருந்தது... ஆனால் தற்போதைய நிலையில் அரசூழியர்களிடம் திமுகவிற்கு எதிர்ப்பான நிலை உருவாகி வருவதை எங்கும் காணலாம்... இதை முதல்வர் உணர்ந்தாரா இல்லையா என்று தெரியவில்லை... இது திமுகவின் எதிர்காலத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் என்று உணர்ந்தால் மகிழ்ச்சி...
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
பொருத்தமான நேரத்தில் வந்துள்ள கட்டுரை. தமிழரின் தனித்துவத்தைக் காப்பாற்ற திமுக-வை விட்டால் வேறு கதியில்லை என்ற இன்றைய சூழ்நிலையில், தமிழ் உணர்வு கொண்ட எவரும் இக்கட்டுரையைப் பாராட்டுவது நிச்சயம். இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ( அப்போது கலைஞர் இறந்திருக்கவில்லை) இந்து தமிழ் நாளிதழில் திராவிட முன்னேற்றக்கழகம் அழுகிக்கொண்டிருக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை கடும் சொற்களில் சாடியதின் மெல்லிய வடிவம்தான் தற்போதய கட்டுரையும். ஒரே வேறுபாடு கட்சியின் தலைமை மாறியிருக்கிறது. திமுகவின் முன்னணித்தலைவர்கள் மட்டுமென்ன கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மாறவில்லை. மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல நடந்து கொள்வது கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல.. ஸ்டாலினும் தன்னுடைய மன உளைச்சலை கடுமையான வார்த்தைகளால் அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றாலும் அடுத்தடுத்த நிலையிலுள்ளோர் மாறுவதாகத் தெரியவில்லை. அவரவர் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து கட்டுக்கோப்பாக செயல்படவில்லை என்றால் அரசியலில் எதிர்வரும் பிரச்சினைகளை கையாள திமுக பெரும் சவாலை சந்திக்க நேரிடும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Periasamy 2 years ago
குடும்ப அரசியிலால் இன்று காங்கிரஸ் கட்சிக்கு என்ன நேர்ந்து இருக்கிறதோ அது நாளை திமுகவிற்கும் நேரும்..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
V.AGORAM 2 years ago
சரியான நேரத்தில் சரியான முறையான கட்டுரை.தி.மு.க உண்மையான தொண்டர்களின் மனதில் உள்ளதில் பிரதிபலிப்பு.நன்றி
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.