கட்டுரை, பொருளாதாரம், தொழில் 6 நிமிட வாசிப்பு

மின்சாரம் எந்த அளவுக்கு மாநில வளர்ச்சிக்கு முக்கியம்?

பக்ஷி அமித் குமார் சின்ஹா
24 Feb 2022, 5:00 am
0

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 135 கோடிக்கும் மேல். உலகிலேயே ஆறாவது பெரிய பொருளாதார நாடு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தராமல் இதைச் சாதிக்க முடியாது. ஆனால், எல்லோருக்கும் சம வாய்ப்பு இந்த நாட்டில் கிடைக்கிறதா என்பது முக்கியமான கேள்வி ஆகும். 

சம வாய்ப்பு கிடைக்கிறதா? 

இந்திய மாநிலங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.  ‘குறைந்த வருவாய் மாநிலங்கள்’ (குவமா), பல துறைகளிலும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றன. தொழில் தொடங்குவதற்கு கடன் அதிகம் கிடைப்பதில்லை, குறைந்த அளவே முதலீடுகள் பெறுகின்றன, மின்சாரம் கிடைப்பதும் குறைவு, மின்சாரத்தைப் பெறுவதற்கான வசதிகளும் குறைவு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு அவற்றுக்கு அதிக செலவு பிடிக்கிறது. அதேசமயம் ‘உயர் வருவாய் மாநிலங்கள்’ (உவமா) தொழில் – வர்த்தகத் துறைகளில் அதிகளவு பங்கு வகிக்கின்றன. காரணம் அவற்றுக்கு கடன், முதலீடு, மின்சாரம் என அனைத்துமே அதிக அளவில் கிடைக்கின்றன.

மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய ஆறு உயர் வருவாய் மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்தத் தொழிற்சாலைகளில் 56.4% உள்ளன. நாட்டின் உற்பத்தியில் 54.3% நிகர மதிப்பை இந்த ஆறு மாநிலங்களும் தருகின்றன. ஆனால், நாட்டின் மக்கள்தொகையானது இந்த ஆறு மாநிலங்களையும் சேர்த்து மொத்தமே 32.3% மட்டுமே ஆகும்.

தொழில் வர்த்தகம் செய்வதற்கான கடன் பெறுவதிலும் இதர நிதி வசதி, வாய்ப்புகளிலும் இந்த ஆறு மாநிலங்களும் அதிக பலன்களைப் பெறுகின்றன. உதாரணமாக, நாட்டின் அனைத்து நிதி நிறுவனங்கள் தரும் கடனில் 55%; தொழிலுக்கான கடனில் 56% இந்த உயர் வருவாய் மாநிலங்களுக்கே - கடனுக்கும் டெபாசிட்டுகளுக்கும் உள்ள அதிக விகிதாச்சார அடிப்படையில் - கிடைக்கின்றன.

ஆனால், பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் ஆகிய குறைந்த வருவாய் மாநிலங்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் மொத்தக் கடனில் 15%தான் கிடைக்கிறது. தொழிலுக்கான கடனில் 5% மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஆறு மாநிலங்களிலும் உள்ள மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 43%. அதேபோல, இந்த ஆறு மாநிலங்களும் தாங்கள் திரட்டும் மொத்த சேமிப்பு டெபாசிட்டுகளில் வெறும் 50% மதிப்புக்கே கடன் பெறுகின்றன.

இந்திய அரசு அறிவித்துள்ள ‘ஆத்மநிர்பார்’ தன்னிறைவுத் திட்டப்படி 20 லட்சம் கோடி ரூபாயும் உயர் வருவாய் மாநிலங்களுக்கே - தொழில் துறை வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதால் - கிடைக்கிறது என்பது இங்கே கவனம் அளிக்க வேண்டியது ஆகும்.  

மின்சாரமே காரணம்

இப்படி உயர் வருவாய் மாநிலங்களுக்கும் குறைந்த வருவாய் மாநிலங்களுக்கும் இடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கு  மின்சாரம் உள்ளிட்ட எரிபொருளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்றால், நீங்கள் நம்புவீர்களா? ஆம், அதுதான் உண்மை.  போதுமான அளவிலும் குறைந்த கட்டணத்திலும் தரமான மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களிலேயே தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வரும். அரசுத் துறை முதலீடாக இருந்தாலும், தனியார் துறை முதலீடாக இருந்தாலும் அந்த மாநிலங்களே தொழிலதிபர்களை ஈர்க்கும். எனவேதான் தொழில் துறை உற்பத்திக்கு மின்சாரமும் ஒரு முக்கியாமான ஊக்க சக்தியாகத் திகழ்கிறது. 

நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50%-க்கும் மேல், தொழில்-வணிகத் துறையால் மட்டுமே நுகரப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான ‘மின்சார ஆற்றல் கண்ணோட்டம்’ என்ற அறிக்கைப் பின்வருமாறு தெரிவிக்கிறது: “மின்சாரக் கட்டணங்கள் பயனீட்டாளர்களுக்கு இடையில் மட்டும் மாறுபடவில்லை, மாநிலத்துக்கு மாநிலமும் மாறுபடுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக மின்சாரத்தின் மீது தீர்வையை விதிக்கிறது, மானியச் சலுகையை அளிக்கிறது. இதனால் சில மாநிலங்கள் பக்கத்து மாநில நுகர்வோரைவிட ஐந்து மடங்கு அதிகமாக மின்சாரக் கட்டணம் செலுத்தும் அளவுக்கு இருக்கிறது.”

இரண்டு தீர்வுகள்

உயர் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தக் கட்டுரை இரண்டு தீர்வுகளைக் கூறுகிறது. 

முதலாவது, மின்சாரத் துறையில் விலை வேறுபாடுகளே கூடாது. மின்சாரத்தை உற்பத்திசெய்யும் மாநிலங்களுக்கு – குறிப்பாக புனல் (நீர்) மின்சார உற்பத்தி மாநிலங்களுக்கு குறைந்த உற்பத்திச் செலவு – என்பது சாதகமான அம்சமாகத் திகழ்கிறது. அனைத்து பிராந்திய மின்னுற்பத்தி நிலையங்களையும் தேசிய அளவில் இணைத்து ஒரே தொகுப்பின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும். இதனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு, தரம் ஏதும் குறையாமலேயே கொண்டுசென்று பயன்படுத்த முடியும். ‘ஒரே நாடு – ஒரே தொகுப்பு – ஒரே அலைவரிசை’ என்று உண்டாக்கிவிடலாம்.

இப்படிச் செய்வதால் துடிப்புள்ள மின்சார சந்தையை உருவாக்கிவிட முடியும். ஒரே கட்டணத்தில் மின்சாரத்தை நாட்டின் எந்தப் பகுதிக்கும் விற்க முடியும். இப்படியொரு கொள்கையைக் கடைப்பிடிக்காவிட்டால் அதிகம் செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலங்கள், அதிக மானியம் தந்து விலையைக் குறைத்து அதைத் தொழில் பிரிவுகளுக்கு விற்க வேண்டும். இதனால் இரட்டை இழப்பு.

மாநிலத்தின் அரிய நிதிவளம் உற்பத்திக்கும் – மானியத்துக்குமே செலவாகும். இதன் காரணமாகவே குறைந்த வருவாயுள்ள மாநிலங்களால் புதிய தொழில்களை ஈர்க்க முடிவதில்லை. ஒன்றிய மின்சார ஒழுங்காற்று ஆணையம், சந்தையின் தேவை அடிப்படையில் மின்சாரத்தைப் பிரித்து வழங்கும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், ‘ஒரே நாடு – ஒரே தொகுப்பு – ஒரே அலைவரிசை – ஒரே விலை’ என்ற ஒழுங்கை நோக்கி நகர்கிறோம்.

இரண்டாவது, பொது சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பின் கீழ் மின்சாரத் தீர்வையைக் கொண்டுவருவது. மின்சார உற்பத்திச் செலவு எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதைப் போலவே வெவ்வேறு மாநிலங்களானாலும் அவற்றின் மீதான தீர்வையும் ஒரே விகிதத்தில் இருந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு உறுதியாகிவிடும். வருமானத்துக்கும் மின்சார நுகர்வுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதிகம் சம்பாதிக்கிறவர்கள் அதிக மின்சாதனங்களை - அதிக நேரம் பயன்படுத்துவார்கள். எனவே உயர் வருவாய் மாநிலங்களில் நபர்வாரி மின்சார நுகர்வு அதிகம்.  இதை மத்திய மின்சார ஆணையம் உறுதிப்படுத்துகிறது.

உயர் வருவாய் மாநிலங்கள் 2020-21-ம் ஆண்டுகளில் மொத்த மின்சார உற்பத்தி நிறுவுதிறனில் 50% நுகர்ந்தன. அதாவது 32% மக்கள் 50% மின்சாரத்தைப் பயன்படுத்தினர். வருவாய் குறைவான ஆறு மாநிலங்களின் மொத்த மக்கள்தொகையில் 43%-ஆக இருந்தும் உற்பத்தியான மின்சாரத்தில் 25% அளவுக்கே நுகர்ந்தன.

மின்சாரத்துக்கு அளிக்கும் கட்டணத்தை நிறுவனங்கள் தங்களுடைய பொருள்களின் விற்பனை விலையில்தான் ஏற்றுகின்றன. உயர் வருவாய் மாநிலங்கள் மின்சார உற்பத்திக்கு மானியம் தந்தாலும், அதிகம் செலவு செய்தாலும் உற்பத்தியாகும் பொருள்களை வாங்கும் குறைந்த வருவாய் மாநிலங்களும் அதில் பெரும்பகுதியைச் சுமக்க நேர்கிறது. எனவேதான் பொது சரக்கு - சேவை வரி விதிப்பின் கீழ் மின்சாரத் தீர்வையைக் கொண்டுவருவது அவசியமாகிறது. அதேசமயம், மின்சாரம் மீதான தீர்வை மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் மாநிலங்களுக்கே பிரித்துத் தந்துவிட வேண்டும், ஒன்றிய அரசுக்கு இதில் பங்கு தரக் கூடாது.  காரணம் மின்சாரம் என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் மட்டும் வருகிறது.

உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் வலியுறுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரம்பில் மின்சாரத் தீர்வையையும் கொண்டுவர வேண்டும் என்று கேட்க வேண்டும். வரி வருவாயை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுப்பதால் மாநிலங்களுக்கான வருவாயும் கிடைக்கும். மின்கட்டண மாறுதலால் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த மாநிலங்களும் இனி உயர் வளர்ச்சி பெறும்!

பக்ஷி அமித் குமார் சின்ஹா

பக்ஷி அமித் குமார் சின்ஹா, பிஹாரைச் சேர்ந்த பொருளியல் ஆய்வாளர். தி இந்து, இபிடபிள்யு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழில் இவருடைய கட்டுரைகளை ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது.

தமிழில்: வ.ரங்காசாரி1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இரண்டில் ஒன்று... காந்தியமாதிட்டமிடுதல்ஆம்அமுல்காங்கிரஸ்: பாஜகவின் பி அணியா?புறநானூறுவெளிவராத உண்மைகள்சிறுநீரகத் தொற்றுநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தவில் வித்வான்வெளி மூலம்பிரதிநிதித்துவம்சோடாசர்ச்சைகள்அம்பேத்கர்பொறியாளர் மு.இராமநாதன்ஸ்ரீதர் சுப்ரமணியம்அகங்காரம்டேவிட் கிரேபர்வல்லரசு நாடுநிஹாங்நீராருங் கடலுடுத்தஜவாஹர்லால் நேருரொமான்ஸ்விடுதலை ஒரு போர் வாள்1232 கி.மீஅருஞ்சொல் சமஸ்மாற்றம்உள்ளூர் மாணவர்கள்கர்நாடக பிரச்சினை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!