கட்டுரை, ஆளுமைகள், உற்றுநோக்க ஒரு செய்தி 7 நிமிட வாசிப்பு

தங்கம் சுப்ரமணியமும், மகேந்திர சிங் தோனியும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி
19 Dec 2021, 4:58 am
2

ந்துரு என்னும் சந்திரசேகர் கல்லூரியில் எனக்கு ஆறாண்டுகள் மூத்தவர். தான்சானியாவில் வேலை கிடைத்து, வருவதற்கு முன்பு ஊர் எப்படி என விசாரிக்க எனக்கு போன் பேசியிருந்தார். பின்னர் நேரில் தான்சானியாவில் சந்தித்தபோது, என்னைப் போல ஒரு மனிதர் என்று நினைத்துக்கொண்டேன்.

சில மாதங்கள் பொறுத்து, மீண்டும் இந்தியா சென்று, தன் குடும்பத்தை அழைத்து வந்தார். மனைவி சுதா, சுதாவின் அம்மா, அவர்களுடைய செல்லப் பூனைதான் அவர்கள் குடும்பம். சந்துருவின் மகன் அமெரிக்காவிலும், மகள் பெல்ஃபாஸ்ட்டிலும் படிக்கிறார்கள். முதன்முதலில் பார்த்தபோது, சுதாவின் அம்மா, மிகவும் தளர்வாக இருந்தார். 86 வயது. அதிகம் பேசவில்லை. அவர்கள் வீட்டுப் பூனையானது பூனைபோலவே பிகு பண்ணிக்கொண்டது.

கடற்கரையோரமாக ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்கள் வீடு. டார் எஸ் ஸலாம் என்றால், அமைதியின் நகரம் என்று பெயர். பெயருக்கேற்ற ஊர். இந்த ஊரில் வாழ்வது கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், சில தினங்களில் சுதாவின் அம்மாவுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. படுத்த படுக்கையானார்.  டிசம்பர் 7 அன்று இரவு காலமானார். இரவே அவரது உடலை மருத்துவமனை மார்ச்சுவரிக்கு மாற்றியிருந்தார்கள்.

காலை அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, “எந்தச் சடங்கும் செய்யவில்லை. விளக்கு மட்டுமே ஏற்றியிருக்கிறோம். அம்மா, அவ பாடிய மெடிக்கல் காலேஜுக்கு டொனேட் பண்ணச் சொல்லிட்டா” என்றார் சுதா.

திகைத்துப்போனேன். 1936-ல் பிறந்தவர் அவருடைய தாயார். சிதம்பரத்தில் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பாலக்காடு பிராமணர். மும்பையில் வளர்ந்தவர். தொட்டதற்கெல்லாம் சடங்குகளைக் கொண்டுவரும் சாதி. ‘உடல் தானம், அதுவும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கா!’ என மனதுக்குள் கேள்வி.

“எப்போ இந்த முடிவு எடுத்தாங்க?”

“ரொம்ப முன்னாடியே!”

“இங்க வந்த பின்னாடியும் அப்படிச் சொன்னாங்களா?”

“ஆமாம். எங்கிட்ட மட்டுமில்ல. சந்துருகிட்டயும் பல முறை சொல்லிட்டாங்க.  திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருந்தாங்க.”

சுதாவின் அம்மா மீது நினைவுகள் குவிந்தன.

அம்மாவின் பெயர் தங்கம். தங்கம் அவர் பெற்றோருக்கு மூத்த மகள். தந்தை ஒரு விசித்திரமான கேரக்டர். மும்பையில் கணக்காளர் வேலை. ஒரே அறை, பொதுக் கழிப்பறை என்று நெருக்கடியான மும்பை வாழ்க்கையை வாழ்ந்தவர். 7 தம்பி, தங்கைகள். தனது 8 வயதிலிருந்தே தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கொள்ள இரண்டாவது தாயாக மாற வேண்டிய நிர்ப்பந்தம். பள்ளிப்படிப்புடன் சமையலையும் பார்த்துக்கொள்ளும் வேலை. பள்ளியில் புத்திசாலி மாணவி. பள்ளியிறுதியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றும், மேலே படிக்க வைக்க மறுத்துவிட்டார் தந்தை. ஏன்? பெண்களுக்குப் படிக்கச் செலவிட்டால், ஆண்களுக்கு எதுவும் மிஞ்சாது என்னும் தர்க்கம். அது மட்டுமல்ல. திருமணத்துக்குப் பெண்ணுக்கு வரதட்சிணை தர மாட்டேன் என்றும் அவர் கொள்கை வைத்திருக்கிறார். 1950-களில் இப்படிப்பட்ட கொள்கைகள் எல்லாம் வைத்திருந்தால் என்ன நேரும்?

தங்கத்துக்கும் அது நேர்ந்தது. வரும் வரன்கள் எல்லாம் தட்டிப்போய்க்கொண்டே இருக்க, இறுதியில் தங்கத்துக்கு அவரது 28-வது வயதில் திருமணம் ஆனது. கணவராக வந்தவர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து வந்த தமிழர். பெயர் சுப்ரமணியம். வறுமையை எதிர்கொள்ள அக்காலத்தில் கேரள மக்களுக்குத் தெரிந்த ஒரே வழி, மும்பைக்கு ரயில் ஏறுவதுதான். அக்காலத்தில், வெள்ளைக்கார மேலாளர்கள், தென்னிந்தியாவிலிருந்து ரயில் மும்பை வரும் நேரத்தில், ரயில் நிலையம் வந்துவிடுவார்களாம். ரயிலிலிருந்து இறங்கும் முகங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பணிக்கமர்த்திக்கொள்வார்களாம். கோழிக்கோட்டிலிருந்து வந்த சுப்ரமணியம், அப்படி ஒரு வேலைவாய்ப்பைப் பெற்று, வோல்டாஸ் என்னும் நிறுவனத்தில் கிளார்க் வேலைக்குச் சேர்ந்து ‘வோல்டாஸ் மணி’யாக மும்பை என்னும் பெருநகர இயந்திரத்தின் ஒரு உதிரிப்பாகமாக மாறிப்போனார். இவர்தான், தங்கத்தின் நாயகர் ஆனார். ‘வோல்ட்டாஸ்’ நிறுவன ஊதியம் போதாமல், டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் எனப் பல உப தொழில்களைச் செய்து, தன் மகனையும், இரண்டு மகள்களையும் கடைத்தேற்றிய மும்பையின் கோடிக்கணக்கான தந்தைகளுள் ஒருவர். அவர் பிள்ளைகள் இன்று, உலகின் பல்வேறு பகுதிகளில், நல்ல நிலையில் வாழ்ந்துவருகிறார்கள்.

 

அம்மா மிக அற்புதமாகச் சமையல் செய்வார். சின்ன வயதிலிருந்தே வீட்டில் எல்லா பக்ஷணங்களையும், மிகச் சரியாகச் செய்யக் கற்பிக்கப்பட்டிருந்தார். பள்ளி முடித்து, பத்தாண்டுகளுக்கும் மேலாக, திருமணத்துக்குக் காத்துக்கொண்டிருந்த காலத்தில், தையல் கற்றுக்கொண்டார். வார இதழ்களில் வரும் தொடர்கதைகளை விடாமல் படித்துவிடுவார். தனது வெறுமையையும், ஆற்றாமையும் போக்கிக்கொள்ள அதுவே அவருக்கு வடிகாலாக இருந்தது. எங்கள் வீட்டில், அனைவரின் சட்டைகளும் அவரால் தைக்கப்பட்டவை. எதையும் நேர்த்தியாகச் செய்வது என்பது அவருள் ஊறிப்போன ஒரு பழக்கம்!”

தங்கத்தின் நினைவுகளில் மூழ்கினார் சுதா.

சந்துருவின் வீட்டில் இருந்து கிளம்பி இந்திய ஹை கமிஷன் சென்றோம். வாயிலில், எங்களுக்கு முன்பாக ஒரு இந்தியர், தனது பாஸ்போர்ட்டை, ஒரு தான்சானிய நிறுவனம் பிடுங்கிக்கொண்ட கண்ணீர்க்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாத முகபாவத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார் ஹைகமிஷனில் வேலை செய்யும் ஆள். வந்த காரியம் கெட்டுவிடக் கூடாது என்று நாங்கள் தமிழில் பேசிக்கொண்டோம்.

பின்னர், ஹைகமிஷனில் முடிக்க வேண்டிய சாங்கியங்களை முடித்துக் கிளம்பியபோது, மதியம் 1.15. அடுத்து, தங்கம் அம்மாவின் உடல் இருக்கும் இந்து மிஷன் மருத்துவமனைக்குச் சென்று, அவர் உடலைப் பெற்று, தான்சானியாவின் தலைமை மருத்துவமனையான முய்ம்பிலி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் அவர் உடலைச் சமர்ப்பிக்க வேண்டும். “எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாது.. சாப்ட்ருலாம்” என்று சொன்னார் சந்துரு.  “டெம்பிள் ஸ்ட்ரீட் போங்க” என்று தன் ஓட்டுநருக்கு ஆணையிட்டார். அங்கே, ‘ச்சௌப்பாட்டி’ என்னும் உணவகம் உண்டு. எல்லா வகை உணவும் கிடைக்கும். சுதாவும், சந்துருவும் ரவா தோசை ஆர்டர் செய்தார்கள். நான் சௌத் இண்டியன் தாலி.

சந்துரு சொன்னார், “டார் எஸ் ஸலாம் வந்த பின்னாடி, அம்மா வந்த ஒரே இடம் இந்த ரெஸ்டாரன்ட்தான்!”

அன்றைக்கு உணவகத்துக்கு அம்மா வந்திருந்த புகைப்படத்தைக் காட்டினார் சந்துரு. இளகிப்போனேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே வந்தவர், இன்று டார் எஸ் ஸலாம்  மருத்துவமனையின் மார்ச்சுவரியில் உயிரற்ற சடலமாகக் கிடக்கிறார். சிதம்பரத்தில் பிறந்து, மும்பையில் 8 குழந்தைகளுள் ஒருவராக வளர்ந்து, திருமணமாகி, குழந்தைகளை வளர்த்தெடுத்து, மூப்பெய்தி, மரித்தவர். வாழ்க்கை மனிதர்களை எங்கிருந்து எங்கிருந்தெல்லாம் கடத்துகிறது!

உணவு முடிந்து, இந்து மிஷன் மருத்துவமனை சென்றோம்.  பணம் செலுத்தி, உடலை வாங்கி, ஆம்புலன்சில் ஏற்றினோம். சந்துரு ஆம்புலன்சில் ஏறிக் கொண்டார். நானும், சுதாவும் காரில் பின்தொடர்ந்தோம். அங்கிருந்து முய்ம்பிலி தேசிய மருத்துவமனை. இதுதான் தான்சானியாவின் தலைமை மருத்துவமனை. மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் மருத்துவமனை. நம்ம ஊர் பொது மருத்துவமனைகளோடு ஒப்பிடுகையில், பல மடங்கு சுத்தமாக இருந்தது. தான்சானியாவின் பொதுவெளிகள், நம்ம ஊரை ஒப்பிடுகையில் மிகவும் சுத்தமாக இருக்கும். பொருளாதாரத்துக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தம் இல்லை.

ஆம்புலன்ஸைத் திறந்து, தங்கம் அம்மாவை இறக்கி, மார்ச்சுவரிக்குள் கொண்டு சென்றார்கள்.. அங்கிருந்தவரிடம், ‘பாத்துக்கங்க’, என்றேன் அபத்தமாக. அறையின் மேசையில் உடல் கிடத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் அங்கிருந்தவர்களைப் பார்த்து, இந்த உடல் எப்போது பயன்படுத்தப்படும் எனக் கேட்டோம். ‘அடுத்த ஏப்ரலுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டுவிடும்!’ என்றார்கள். அதன் பின் இந்த உடல், ‘எப்படி டிஸ்போஸ் செய்யப்படும்?’ எனக் கேட்டோம். அவர்கள் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னதில் இருந்து, அங்குள்ள பயோ மெடிக்கல் வேஸ்ட்போல எரிக்கப்பட்டுவிடும் எனப் புரிந்துகொண்டோம்.

காரில் திரும்புகையில், சுதா தன் தங்கையிடம் ஃபோனில், “யூஸ் பண்ணப்பறம், இன்சினரேட்டர்ல எரிச்சிடுவாங்கபோல” என்றவர் கொஞ்சம் தயங்கி, “எப்படி இருந்தாலும் எரியத்தானேபோகுது!” எனச் சமாதானமாகச் சொல்லிக் கொண்டார். காரில் அமைதி.

2011-ம் ஆண்டு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 4 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி பந்தை உயர அடித்துவிட்டு, அது போகும் திசையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பார். பந்து எல்லையைத் தாண்டியதும், ‘வேலை முடிந்தது’, என்பதுபோல, மட்டையைக் கக்கத்தில் இறுக்கிக்கொண்டு, வலது கையில் ஒரு ஸ்டம்பைப் பிடுங்கிக்கொண்டு அமைதியாகப் பெவிலியனுக்குத் திரும்புவார். தங்கம் சுப்ரமணியமும் தன் வாழ்க்கையின் இறுதிப் பந்தில் அப்படி ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு, அலட்டிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

3

2



1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

உடல்தனம் பற்றிய அற்புதமான வாழ்வியல் பதிவு. சில நாட்களுக்கு முன் உடல்தனம் குறித்த செய்திகளை வாசிக்கும்போது கிடைத்த புள்ளிவிவரங்கள் வருந்தத்தக்கதாக இருந்தன. மருத்துவக்கல்லூரிகளுக்கு போதிய அளவில் உடல்கள் கிடைப்பதில்லை; இந்திய அளவில் வருடாவருடம் கிடைக்கும் உடல்கள் எழுநூறுக்கும் கீழ். அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; நடிகர்களில் கமலஹாசன் அதைச் செய்திருக்கிறார்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Senthil   2 years ago

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் தோழர்: 011-ம் ஆண்டு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 4 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி பந்தை உயர அடித்துவிட்டு, அது போகும் திசையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பார். பந்து எல்லையைத் தாண்டியதும், ‘வேலை முடிந்தது’, என்பதுபோல, மட்டையைக் கக்கத்தில் இறுக்கிக்கொண்டு, வலது கையில் ஒரு ஸ்டம்பைப் பிடுங்கிக்கொண்டு அமைதியாகப் பெவிலியனுக்குத் திரும்புவார். தங்கம் சுப்ரமணியமும் தன் வாழ்க்கையின் இறுதிப் பந்தில் அப்படி ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு, அலட்டிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார்! சிறப்பு!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கொங்குபிரியங்கா காந்தி அரசியல்ஃபுளோரைடு கலந்த பேஸ்ட்தொடர் உரையாடல்கூடங்குளம்பாலுறவுபுராஸ்டேட் வீக்கம்கார்கே: காங்கிரஸின் புதிய நம்பிக்கைஅரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17திறன் வளர்ப்புஜன் சுராஜ்எருமைத் தோல்குடும்ப அமைப்புஆப்பிரிக்க டயரிக் குறிப்புகள்பல் வலிக்கு என்ன செய்வது?பார்ட்புத்தகத் திருவிழாஅகில இந்திய ஒதுக்கீடுவர்க்க பிளவுதிருமூர்த்திகோர்பசெவ் ஆண்டுகள்துப்புரவுப் பணிஅறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!லலாய் சிங் பெரியார்writer samas thirumaஇதிகாசம்ஸ்ரீநிவாசன்ஆன்லைன் வகுப்புபிறகுமகாதேவ் தேசாய்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!