கட்டுரை, கலை, சினிமா, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு
விஜயகாந்த்: ஒரு மின்னல் வாழ்க்கை
தமிழர்களின் சினிமா பைத்தியத்தை நாடி பிடிக்க வேண்டும் என்றால், மதுரைதான் அதற்கான இடம். மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை பிரம்மாண்ட நகரங்களின் மக்கள்தொகையோடு மதுரையையும் இன்று நினைவாகிவிட்ட தங்கம் திரையரங்கத்தையும் இணைத்துப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.
உள்ளூர்க்காரர் பிச்சைமுத்துவால் 52,000 சதுர அடி வளாகத்தில் கட்டப்பட்ட தங்கம் திரையரங்கத்துக்கு ‘ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம்’ என்ற பெருமை உண்டு. 2,563 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். பெரிய கால்பந்து மைதானம் போன்ற அமைப்பு. 1950இல் மதுரை நகரத்தின் மக்கள்தொகை எவ்வளவு? சற்றேறத்தாழ மூன்றரை லட்சம். சென்னையோடு ஒப்பிட பத்தில் ஒரு பங்கு.
நகரின் முதல் திரையரங்கான சென்ட்ரல் தியேட்டர் 1939இல் அறிமுகமாகி அடுத்த 13 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பிரம்மாண்ட அரங்கத்துக்கு ஊர் நகர்ந்துவிட்டிருந்தது என்றால், மதுரைக்காரர்களின் சினிமா காதலை என்னவென்று சொல்வது? ஒரு திரைப்படம் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையுமா என்று மோப்பம் பார்ப்பதற்கு மதுரை பரிசோதனைக் கூடமாக இருந்தது. மதுரையில் ஹிட் அடித்தால், முழுத் தமிழ்நாடும் ஹிட்.
பன்னெடுங்கால ‘தூங்க நகர’ அடையாளத்தில், சினிமா இரவுக் காட்சிகளையும் கச்சிதமாகப் பிணைத்துக்கொண்டது மதுரை. “தங்கத்துல ராத்திரி ஆட்டம் பார்த்துட்டு, தள்ளுவண்டி கடையில மூணுச் சட்னி, இட்லிப் பொடியோட சூடா நாலு இட்லியையும், கோழி குருமாவுல பிச்சுப்போட்டு ரெண்டு புரோட்டாவையும் உள்ளே எறக்குனா… அட, அட, அட!”
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சென்னையும் ஏனைய நகரங்களும் சினிமாவில் புதிதாக உருவாகிவந்த நவீன நகர்ப்புறப் பண்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தன என்றால், கிராமப்புறத் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக மதுரை இருந்தது. நெகிழ்ச்சியோ, சோகமோ, ஆவேசமோ எதுவாயினும் அந்தக் கொந்தளிப்பு நிலத்தின் வேகத்துக்கு சினிமாவால்தான் ஈடு கொடுக்க முடிந்தது. தமிழ்நாட்டில் உருவாகும் எந்தப் புதிய நடிகருக்கும் ரசிகர் மன்றம் அங்கேதான் உருவானது.
சினிமா நாயகராக இருந்து அரசியல் நாயகராக உயர்ந்த எம்ஜிஆர், திமுகவுக்கு எதிரான தன்னுடைய கலகப் பேச்சை திருப்பரங்குன்றத்தில் நிகழ்த்தியதும், அவர் உருவாக்கிய அதிமுகவுக்கான முதல் தேர்தல் வெற்றி திண்டுக்கல்லிலிருந்து கிடைத்ததும் தற்செயலா என்ன? நாடெல்லாம் ஜெயிக்க ஒரு படம் 100 நாள் ஓட வேண்டும் என்றால், தங்கம் திரையரங்கில் 50 நாட்கள் ஓடினாலே போதும். எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ இங்கே 175 நாட்கள் ஓடியது.
மதுரையின் பிரதிநிதி விஜயகாந்த். 1952, ஆகஸ்ட் 25இல், அழகர்சாமி – ஆண்டாள் தம்பதிக்கு, நான்கில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தாயை இழந்தார். எல்லோரும் தூக்கி ஊட்டியதாலோ என்னவோ ஊர்ப் பிள்ளையாகத்தான் வளர்ந்தார்.
படிப்பில் ஆர்வம் இல்லாதவரை அரிசி ஆலைப் பணியில் உட்கார வைத்தார் அழகர்சாமி. முதலாளி இருக்கையிலேயே அமர்ந்துகொள்ளாமல், தொழிலாளர்களோடு இணைந்து வேலை பார்த்தார். மூட்டை தூக்கினார். நல்ல கூலி கொடுக்கப்பட்டதாலும், அவருடைய அன்பினாலும், மதுரை பிராந்தியத்தில் எல்லாத் தொழிலாளர்களும் ஒருசமயம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோதும்கூட அவருடைய ஆலை எப்போதும்போல் இயங்கியது. ஆலைக்கு வெளியே இன்னொரு உலகம் அவருக்கு இருந்தது. அது சினிமா.
வெள்ளை நிற எம்ஜிஆர், சர்வ லட்சண முகம் சிவாஜி பாரம்பரியம் இடையே கருப்பு நிற ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமாகியிருந்தார். விஜயகாந்தின் சினிமா ஆசைக்கும் சென்னை வந்து அவர் மேற்கொண்ட இடையறாத முயற்சிகளுக்கும் இது உத்வேகம் தந்தது.
விஜயகாந்தின் முதல் படமான ‘இனிக்கும் இளமை’ 1979இல் வெளியானது என்றாலும், 1981இல் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ அவருக்கான நல்ல அறிமுகமாக அமைந்தது. கடும் போராட்டங்களினூடேதான் முன்னகர்ந்தார் என்றாலும், இதற்குப் பின் பெரும் வேகத்தில் அவர் பயணித்தார். அடுத்த பத்தாவது ஆண்டில், ‘கேப்டன் பிரபாகரன்’ மூலம் அவர் நூறாவது படத்தை முடித்துவிட்டிருந்தார். 1984இல் மட்டும் 18 படங்கள் அவர் நடித்திருந்தார். மதுரையில் அவருடைய ‘செந்தூரப் பூவே’ 285 நாட்கள் ஓடியது.
தமிழர்களின் இயல்பான தோற்றத்தைப் பிரதிபலிக்கும் கருப்பு நிறம், சினிமாவில் வெளிப்படுத்திய ஆவேசமான தோற்றம், வெளிப்படையான பேச்சு, தேடி வருவோருக்கு உதவும் குணம், தமிழ் அரசியல் சார்பு இவை எல்லாமுமாக இணைந்தே ‘விஜயகாந்த்’ எனும் உருவம் கொண்டன. சினிமாவில் அவர் கோலோச்சிய மூன்று தசாப்தங்களில் முதல் சரி பாதி காலம் அவருக்கு உற்ற துணையாக இருந்தார் இப்ராஹிம் இராவுத்தர்.
இளவயதிலிருந்து உருவாகிவந்த இருவர் இடையிலான நட்பு விஜயகாந்த் உலகத்தைத் தீர்மானிப்பதில் தீர்க்கமான பங்காற்றியது. ராவுத்தருக்கு இருந்த சினிமா அறிவு விஜயகாந்தின் படத் தேர்வுகளின் வெற்றியோடு, அவருடைய ஆளுமையைக் கட்டமைப்பதிலும் உதவியது. இருவரும் இணைந்து படங்களைத் தயாரித்தனர். சென்னை ராஜாபாதர் தெருவில் இருந்த அவர்களுடைய அலுவலகத்துக்கு யார் வந்தாலும் சாப்பாடு இருந்தது. இருநூறு முந்நூறு பேருக்கு அன்றாடம் சமைத்தார்கள். இதற்கென்றே தன்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை விஜயகாந்த் ஒதுக்கினார்.
துறையில் புதிய இயக்குநர்களுக்கு களம் கொடுத்தார் விஜயகாந்த். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்து முடிந்த மாணவர்கள் அவருடைய அலுவலகத்தையே தேடிச் சென்றனர். தன் வாழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இயக்குநர் ஆக அவர் உதவினார். பல நடிகர்களுக்கும் வாய்ப்பளித்தார். வாய்ப்பிழந்து கஷ்டப்படுவோர் அவர் வீட்டுக்குச் சென்றபோதெல்லாம் தன்னாலானதை உதவினார். படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அப்படித்தான் லைட்மேன்கள் வரை தரப்பட வேண்டும் என்ற முறையைத் தன்னுடைய படங்களின் மூலம் உருவாக்கினார்.
வணிகத்துக்கு ஏற்ற மசாலா படங்கள்தான் விஜயகாந்தின் களம் என்றாலும், அநீதிக்கு எதிராக அவை பேசின. சாதி, மத வேறுபாடுகளை மறுக்கும் தமிழ் நல்லிணக்கத்தை அவை முன்னிறுத்தின. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் நாமக்கல் கவிஞரின் வரிகளை அவர் தொடர்ந்து உச்சரித்தது, இயல்பான தமிழ்க் குரலின் திரைப் பிரதிபலிப்பாக மக்களிடம் அவரைக் கொண்டுசென்றது.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
மீனாட்சியம்மன் கதை, மதுரை வீரன் கதை, விஜயகாந்த் கதை
29 Dec 2023
அரசியலில் சிறுவயதிலிருந்தே விஜயகாந்துக்கு ஆர்வம் இருந்தது. பள்ளிப் பருவத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார். சினிமாவுக்கு வந்த அடுத்த ஐந்தாறு ஆண்டுகளிலேயே அவருடைய அரசியல் பிரவேசம் தொடர்பான யூகங்கள் உருவாகியிருந்தன. 1986இல் வெளியான ஒரு பேட்டியிலேயே தன்னுடைய மன்றங்கள், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக அவர் பதில் அளித்தார். “சின்ன வயசிலிருந்து மனசுல பதிஞ்சுட்ட பழக்கம் மாதிரிதான் தமிழுணர்வும். நான் நடிகனாக இல்லாவிட்டாலும் தமிழைப் பத்தி பேசுவேன்... என் படத்தைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கறாங்க. வேண்டாம்னாலும் அவங்க கேக்கப் போறதில்லே! மன்றத்து இளைஞர்களை நாங்க கைடு பண்றோம். அதனால் அவங்களுக்கு ஒரு பொறுப்பு வருது. ஏன், இளைஞர்கள் மன்றங்கள் ஆரம்பிக்கறாங்க? வேலையில்லாத் திண்டாட்டம், கிராமங்கள்ல மழை கிடையாது, விவசாயம் படுத்துருச்சு. உழைக்க வழியில்லை. அந்த இளைஞர்கள் மனசுல ஆயிரம் கற்பனைகள். இந்த மன்றங்கள் மூலமாகத் தங்களுக்கு ஓர் அங்கீகாரம் தேடிக்கிறாங்க, அவ்வளவுதான்!”
அரசியலில் கருணாநிதி, மூப்பனார் இருவரோடும் விஜயகாந்துக்கு நல்ல உறவு இருந்தது. இவர்கள்தான் அவருடைய திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தனர். முற்பகுதியில் திமுகவில் அவர் சேர்வார் என்றும் பிற்பகுதியில் காங்கிரஸில் அவர் சேர்வார் என்றும் அடிக்கடி பேசப்பட்டது. ஆனால், எம்ஜிஆர் பாதையே அவரை வசீகரித்தது.
எம்ஜிஆர் போலவே தன்னுடைய மன்றங்களை விஜயகாந்த் பராமரித்தார். வெளியூர்களுக்கு ஷூட்டிங் செல்லும்போது, இரவில் அருகில் உள்ள கிராமங்களுக்குத் திடீர் என்று செல்வது, அங்குள்ள நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்று பார்ப்பது, திரும்புகையில் அவர்களை காரில் விடுதிக்கு அழைத்து வந்து பணம், பரிசுப் பொருள் கொடுத்து அனுப்புவது என்று கதைகளை உருவாக்கினார். மன்றத்துக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். ரசிகர்களின் திருமணங்களுக்குச் சென்றவர் வழியோரக் கிராமங்களில் மன்றக் கொடியை ஏற்றினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவியில் அமர்ந்தபோது, தன்னுள் இருந்த நிர்வாகியை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார். வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடிகர் சங்கக் கடனை வட்டியும் முதலுமாக அவர் அடைத்தது துறையில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியது.
மதுரையில் 2005இல் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த் நடத்திய முதல் மாநாட்டிலேயே மூன்று லட்சம் பேர் குவிந்ததும், திமுக - அதிமுக இரு கட்சிகளின் உள்ளடி வேலைகளைத் தாண்டியும் 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றதும், எந்த சம்பந்தமும் இல்லாத விருத்தாசலத்தில் நின்று விஜயகாந்த் வென்றதும், எடுத்த எடுப்பிலேயே தேமுதிக மாநிலம் முழுவதும் 8.5% ஓட்டுகளை அள்ளியதும் பெரும் பேசுபொருள் ஆயின.
திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விஜயகாந்த் சாடினார். ஏற்கெனவே உள்ள கட்சிகளின் மீது அதிருப்தி அடைந்தவர்களும், விஜயகாந்தின் ரசிகர்களும் தேமுதிகவின் ஆதார பலமாக இருந்தனர். திராவிடக் கட்சிகளைப் போன்றே ஊருக்கு ஊர் கட்சியமைப்பை விஜயகாந்த் கட்டினார். ஊழல் எதிர்ப்பானது தேமுதிகவின் மையப் பேசுபொருளாக இருந்தது. இதைத் தாண்டி எந்தச் சித்தாந்த அடிப்படையும் சமூகவியல் தெளிவும் அதற்கு இல்லாதது பெரும் பலவீனமாக அமைந்தது. விஜயகாந்த் மீதான கவர்ச்சிக்கு அப்பாற்பட்டு அரசியல்ரீதியாக கட்சியின் ஒருங்கிணைவை வளர்த்தெடுக்க ஏதும் இல்லை.
விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்வில் இதற்கிடையே நடந்த இரு விஷயங்கள் மெல்ல அவருடைய வாழ்வின் போக்கை மாற்றியமைத்தன. 1990இல் பிரேமலதாவுடன் நடந்த திருமணமும் படிப்படியாக நண்பர் ராவுத்தருடன் நிகழ்ந்த நட்பு முறிவும்.
ராவுத்தரின் இடத்தில் தன்னுடைய தம்பி சுதீஷைக் கொண்டுவந்து அமர்த்தினார் பிரேமலதா. மனைவியாக எல்லா வகைகளிலும் விஜயகாந்த்துக்கு உறுதுணையாக பிரேமலதா இருந்தார். அதேசமயம், சினிமாவிலும் அடுத்து அரசியலிலும் விஜயகாந்த்துக்கு நெருக்கமான எல்லோருடைய இடங்களையும் அவர் அபகரித்துக்கொண்டார்.
மெல்ல பிரேமலதா – சுதீஷ் இருவரையும் தாண்டி விஜயகாந்தை அணுகுவது கடினம் என்ற சூழல் உருவானது. ஆளுமைகளின் தனிப்பட்ட வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இடையிலான கோட்டைப் பராமரிக்கும் குடும்பங்கள் நம்முடைய சமூகத்தில் குறைவு. இந்த விஷயம் விஜயகாந்தைச் சரித்து மெல்ல கீழே தள்ளியது.
அடுத்து, 2009 மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக தனித்து நின்றது. இந்த முறை அதன் வாக்கு வங்கியை 10% ஆக உயர்த்தியிருந்தார் விஜயகாந்த். திமுக – அதிமுக இடையிலான வெற்றி வித்தியாசத்தைவிடவும் பல தொகுதிகளில் தேமுதிக பெற்றிருந்த ஓட்டுகள் அதிகமாக இருந்தன. இது இரு கட்சிகள் மத்தியிலும் பதற்றத்தை உண்டாக்கியதோடு, தேமுதிகவிடம் பெரும் பேர சக்தியை உருவாக்கியது. இதனூடாகவே குடிநோய்க்கு மெல்ல விஜயகாந்த் ஆட்படலானார். விஜயகாந்தின் சிந்தனையையும் அவருடைய வீட்டார் ஆக்கிரமித்தினர். கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கட்டுக்குள் சென்றுகொண்டிருந்தது. குடும்ப அரசியலில் விஜயகாந்துக்கு எந்தக் கூச்சமும் இருக்கவில்லை.
மக்களுடனும் கடவுளுடனும் மட்டுமே கூட்டணி என்று பேசிவந்த விஜயகாந்த் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தார். கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேமுதிக 29 தொகுதிகளை வென்றதோடு, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் அமர்ந்தார் என்றாலும், அவருடைய வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது இது.
மிக விரைவில் ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்திலேயே நேரடியாக மோதினார் விஜயகாந்த். கூட்டணி முறிந்தது. தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்து தன் பக்கம் இழுத்தார் ஜெயலலிதா. விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானது. பல சமயங்களில் அவர் நிதானமிழந்து பேசினார். குடி அவரைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது என்ற பேச்சானது, புதிதாக உருவாகிவந்த மீம்ஸ் உலகில் அவரை ஒரு கேலி கதாபாத்திரம் ஆக்கியது.
2014 மக்களவைத் தேர்தலின்போது மோடியை முன்னிறுத்தி பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தபோது கட்சியின் ஓட்டு வங்கி சிதையலானது. 2016 சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில், பிரதான கட்சியாக இணைந்தது தேமுதிக. பிரச்சாரத்தின்போதே நிலைதடுமாறினார் விஜயகாந்த். பேச்சு குழறியது. அவருடைய உடல் சிதைந்துகொண்டிருப்பதை அவருடைய தொண்டர்கள் வலியோடு பார்த்து, கண்ணீர் வடித்தார்கள். கட்சியின் ஓட்டு வங்கி 2.4% ஆக சரிந்ததோடு உளூந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த்தும் டெபாசிட் தோல்வியை அடைந்தார். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மேலும் மோசமான இடத்துக்குக் கட்சியைக் கொண்டுசென்றன.
வெறும் 16 ஆண்டுகளுக்குள் 9 தேர்தல்களை எதிர்கொண்டதும், அவற்றில் ஆகப் பெரும்பாலனவை தோல்வியில் முடிந்ததும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பலருடைய வாழ்வில் நிலைகுலைவை உண்டாக்கியது. ஓரளவுக்கு மேல் விஜயகாந்தின் பொருளாதாரச் சூழலும் சரிந்தது. கடைசி சில ஆண்டுகளில் பேச முடியாமல் வீட்டுக்குள்ளேயே விஜயகாந்த் முடங்கினார். பிரேமலதாவும் சுதீஷும் கட்சியை முழுமையாகத் தங்கள் குடும்ப வாகனமாக ஆக்கிவிட்டிருந்தனர். இன்னும் தலையெடுக்காத விஜயகாந்த் பிள்ளைகளையும் அடுத்த வாரிசுகளாக அரசியலில் இறக்கினர். கட்சி நிர்வாகிகள் ஏவலாட்களாக நடத்தப்படுவதைக் கட்சிக் கூட்டங்களில் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது நடந்ததாகச் சொல்லப்படும் பணப் பரிமாற்ற பேரங்கள் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்புப் பேச்சை முற்றிலும் அபத்தமாக்கின. கட்சி மேலும் சிறுத்தது. இவ்வளவுக்கு மத்தியிலும் மிச்சமுள்ள கூட்டம் தங்கள் சொந்த வலுவில் கட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
விஜயகாந்த் மறைந்துவிட்டார் எனும் செய்தி 2023, டிசம்பர் 28 அன்று தொலைக்காட்சிகளில் வெளியானபோது ‘விடுதலை’ என்றுதான் தோன்றியது. அரசியலும் நோய்மையும் ஒரு நல்ல மனிதரை அழித்துவிட்டிருந்தது. கூடவே அவர் மீதான அளப்பரிய அன்பின் காரணமாகவே ஒரு பெரும் கூட்டம் அழிந்துகொண்டிருந்தது. இருவருக்குமே இது விடுதலை. நல்லெண்ணமும் தயாள குணமும் மட்டுமே ஒரு தலைவரின் அரசியலையோ, கட்சியின் உயிரையோ காப்பற்றிட முடியாது. தலைவர்களின் தவறான முடிவுகளும் அலட்சியமான செயல்பாடுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சீரழிக்கக் கூடியவை.
அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி வரிசையில் பெரும் கூட்டம் விஜயகாந்த் மறைவின்போது கூடியது. விஜயகாந்தின் தொண்டர்கள், ரசிகர்களைத் தாண்டியும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் அஞ்சலி செலுத்த குவிந்தனர். தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிகள் இரு நாட்கள் முழுவதும் அவரது இறுதி நிகழ்வில் மூழ்கின. விஜயகாந்துக்கு நெருக்கமான பல நூறு பேர் பேட்டிகள் ஒளிபரப்பாயின. அவர் ஓர் அரசியல் தலைவர் என்பதை மறப்பது அன்றைய நாளின் அவசியமாக இருந்தது. சினிமா வாழ்க்கையை மட்டும் பேசினார்கள். ஒரு செய்தியை எல்லோருமே குறிப்பிட்டனர். “வீட்டுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் சோறு போட்டார். தேவை என்று சென்றோருக்கெல்லாம் உதவி செய்தார். எம்ஜிஆர் மாதிரி வாரி வழங்கினார்.”
மதுரையிலிருந்து சென்னை நோக்கி விஜயகாந்தை உந்தித் தள்ளிய சக்தி எம்ஜிஆர் கனவு. ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று தான் அழைக்கப்படுவதை அவ்வளவு அவர் விரும்பினார். கட்சி தொடங்கி முதல் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றபோது எம்ஜிஆர் பயன்படுத்திய வேனைப் பயன்படுத்தினார் – எம்ஜிஆர் மனைவி ஜானகியிடமிருந்து பரிசாகக் கேட்டு அவர் அதைப் பெற்றிருந்தார். எம்ஜிஆர் அடைய முடிந்த இடத்தை விஜயகாந்தால் எட்ட முடியாமல் போயிருக்கலாம். தன்னால் கொடுக்க முடிந்த இடத்தில் எம்ஜிஆரை விஜயகாந்த் நெருங்கியிருந்தார்!
-‘குமுதம்’, டிசம்பர், 2023
தொடர்புடைய கட்டுரைகள்

5






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.