வாழ்வியல், வேலையும் வாழ்வும் 9 நிமிட வாசிப்பு

வேலை இழப்பிலிருந்து மீள்வது எப்படி?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
05 Feb 2022, 5:00 am
0

ண்பர் ஒருவரின் வீட்டுக்கு கடைசியாகப் போயிருந்தபோது, அவர் மகன் ரமேஷ் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை என்பதைக் கவனித்தேன். "என்ன, வேலையில் பிஸியாக இருக்கிறாரா?" என்று கேட்டதற்கு, "இல்லை அவனுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு வேலை போய் விட்டது. அப்போதிலிருந்து மிகவும் மன அழுத்தமாக உணர்கிறான், யாரிடமும் சரியாகப் பேசுவதே இல்லை" என்று குறிப்பிட்டார். 

வேலையை இழப்பது என்பது கடும் மன அழுத்தம் தரும் ஒரு விஷயம். நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு முறையேனும் வேலையை இழந்திருப்போம். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இருக்கலாம். ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே ஓய்வுபெற்று திரும்புவதைச் சாதாரண விஷயமாக அணுகியவர்கள் அவர்கள். கணிசமானோர் அரசு வேலைபோலவே ஒரே இடத்தில் சேர்ந்து அங்கேயே ஓய்வு பெற்றவர்கள். அப்படிப்பட்ட நிலையில் ஒருவருக்கு வேலை போகிறது என்பதை வாழ்வே பறிபோகிறது என்ற அளவுக்கு அவர்கள் அணுகுவதில் ஆச்சரியமில்லை.

ஆனால், நவீன தலைமுறையினர் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் பல நிறுவனங்கள் மாற வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். நிறுவனத்தைவிட்டு விலகும் உரிமை நமக்கு இருப்பதுபோல, நிறுவனத்தைவிட்டு நம்மை விலக்கும் உரிமை நமது நிறுவனத்துக்கும் இருக்க வேண்டும்தானே? எனவே நவீன தலைமுறையினர் அப்படிப்பட்ட வேலை இழப்புகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இதை மீறியும் சிலர் பாதிப்புறுகிறார்கள். வேதனையும், மன அழுத்தமும் அவர்களை ஆட்கொள்கிறது. சிலர் 'கிளினிகல் டிப்ரஷ'னுக்கு  ஆட்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உளவியல் நிபுணரின் உதவி தேவை. ஆனால், அவர்கள் சிறு சதவீதம்தான். மீதிப் பேர் இதனை எப்படி எதிர்கொள்வது?

இன்றைய சமூக நிலவரத்தில் பல்வேறு காரணிகளுக்காக வேலை இழத்தல் நிகழலாம், எனினும் அவற்றை இரண்டு முக்கிய காரணிகளாகப் பிரிக்க இயலும்: 

  •  உங்கள் வேலைத் திறனில் உள்ள குறைபாடு காரணமாக வேலை இழக்க நேரிட்டது. 
  •  உங்கள் நிறுவனத்திடம் உள்ள பிரச்சினை காரணமாக வேலை இழக்க நேரிட்டது. 

இதில் இரண்டாவது நிகழ்வு இந்தியாவில் அதிகம் நடக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கரோனா  காலத்தில் அதிகம் நிகழ்கிறது. நிறுவனத்துக்கு இருந்த 'ப்ராஜக்ட்' கைவிட்டுப் போய்விட்டது அல்லது நிதிச் சிக்கலுக்கு ஆளாகி, செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அல்லது கம்பெனியே போண்டி ஆகி மூடும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட காரணங்களால் வேலை இழத்தலை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில் கொஞ்சம் சுலபம்.

காரணம், பிரச்சினை உங்களிடம் அல்ல. உங்கள் கம்பெனியிடம் இருக்கிறது. அதற்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. எனவே அப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியது மாதச் செலவுகள் குறித்தும் உங்கள் அடுத்த வேலை குறித்தும்தான். 

ஆனால், முதல் காரணியில் வேலை இழத்தல் கொஞ்சம் கடினமானது. நமது வேலைத்திறன் போதாமை காரணமாக நம்மை வேலையைவிட்டுத் தூக்கினால் அது நம்மைப் பெருமளவு பாதிக்கும். நமது சுயமரியாதையைக் குறைக்கும். நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர் போன்ற பிம்பங்களை மனம் உருவாக்க முயற்சிக்கும்.  அப்படிப்பட்ட தருணங்களில் நம்மை எப்படி மீளக் கட்டமைத்துக்கொள்வது? 

நீங்களா, நிறுவன சூழலா? 

முதலில் உங்களுக்கு வேலை போன காரணத்தை ஆராயுங்கள். உங்கள் மேலாளரிடம் பேசும்போது, பல்வேறு கேள்விகளைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயலுங்கள். பின்னர் அவர் கொடுத்த அந்த விளக்கங்களை ஆராய்ந்து பாருங்கள். உண்மையாகவே உங்கள் வேலைத்திறனில் பிரச்சினை இல்லை; உங்கள் மேலாளர்தான் திறன் குறைந்தவராக இருக்கலாம். பல நிறுவனங்களில் மேலாளர்களுக்குத் தங்கள் டீமில் உள்ளவர்களை எப்படி வெற்றிகரமாக வேலை வாங்குவது என்பதே தெரிவதில்லை. அதற்கான சரியான பயிற்சி அவர்களுக்கு இருப்பதில்லை. அல்லது, உங்கள் 'ப்ராஜக்ட்' டீமில் உள்ள சக ஊழியர்களில் சிலர் செய்த சொதப்பல்கள் காரணமாக இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய 'ப்ராஜக்ட்டை' எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பதற்கான தெளிவான வரையறை உங்கள் நிறுவனத்திடம் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்ட தருணங்களில் அந்த 'ப்ராஜக்ட்' தோல்வியில்தான் முடியும். அந்த சுனாமி உங்களையும் அடித்துக்கொண்டுபோயிருக்கலாம். இப்படி ஏதாவது காரணிகள் உங்கள் செயல்திறனைப் பாதித்ததா என்று ஆராய்ந்து பாருங்கள். இந்த அலசலை நீங்கள் மிகவும் நேர்மையாக நடத்திக்கொள்ளவேண்டும். சும்மா பழியைத் தூக்கி அடுத்தவர் தலையில் போடும் முயற்சியாக இருத்தல் கூடாது. 

நீங்களா, உங்கள் பயிற்சியின்மையா? 

உங்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலையைத் திறன்பட செய்வதற்கான பயிற்சி உங்களுக்கு இருந்ததா என்று ஆராயுங்கள். உதாரணத்துக்கு, கார் ஓட்டவே தெரியாத ஒருவரை ஓலா டிரைவராக நியமித்தால் அவர் வண்டியை எங்காவது கொண்டுபோய் மோதத்தானே செய்வார்? அப்போது பிரச்சினை அவரிடம் இல்லை; அவருக்குத் தேவைப்படும் பயிற்சியின்மைதான் காரணம் என்று முடிவுக்கு வர வேண்டும். "ஓட்டவே தெரியாம எப்படி டிரைவிங் சீட்ல உக்காந்தாரு?" என்று கேட்கலாம். இது சும்மா உதாரணம்தான். பல நேரம் அலுவலகச் சூழலில் ஒரு ப்ராஜக்ட்டுக்குத் தேவைப்படும் திறன் இல்லாதவர்களையும் உள்ளே போட்டுவிடுவார்கள். "ஆளு அந்த ஃபுளோல வேலை கத்துப்பாரு..." என்று மேனேஜ்மெண்ட் நம்பி இருக்கலாம். 

உங்களுக்குத் தேவையான பயிற்சியை அலுவலகம் கொடுக்கவில்லை என்று தெரியவந்தால் பிரச்சினை உங்களிடம் இல்லை. நிறுவன மேலாண்மையிடம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின் இது சம்பந்தமாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிதாக ஏதாவது பணி உங்களிடம் ஒப்படைக்கப்படும்போது அதற்கான தகுந்த திறன் உள்ளதா என்று நீங்கள் கேள்வியை எழுப்பிக்கொண்டு, தேவைப்படும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். 

நீங்களா, அலுவலக அரசியலா?

சில நேரங்களில் அவசியமே இல்லாமல் அலுவலக அரசியலில் உங்கள் தலை உருண்டு போகலாம். வேறு யாரோ செய்த சொதப்பலுக்கு நீங்கள் பலியாக்கப்பட்டிருக்கலாம். அப்போது அதுவும் உங்கள் தவறல்ல என்ற முடிவுக்கு வர வேண்டும். அடுத்த நிறுவனத்தில் உங்கள் பணிக்கான தெளிவான வரையறையையும் அதனை கண்காணிக்கும் வழிகளையும் உங்கள் மேலாளரிடம் கலந்தாலோசித்துவிட்டுப் பணிபுரிய ஆரம்பியுங்கள். அப்போதுதான் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், அடுத்தவர் என்ன செய்கிறார் என்பது மேலாளருக்குத் தெளிவாக புரியவரும். மின்னஞ்சல் வழியே அல்லது வாராந்திர அறிக்கை வழியே உங்கள் வேலை குறித்து தொடர்ந்து மேலாளருக்கு தெரிவித்து வாருங்கள். உங்கள் பணியில் அல்லது ப்ராஜக்ட்டில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் மேலாளருக்கு எழுத்து மூலம் பகிர்ந்துகொண்டிருங்கள். 

பிரச்சினை உங்களிடமா? 

இவை எல்லாம் காரணிகள் இல்லை என்று ஆகி, கடைசியில் பிரச்சினை நீங்கள்தான், அதாவது உங்களது வேலைத் திறன் இன்மைதான் உங்கள் வேலை இழப்புக்குக் காரணம் என்று உங்கள் அலசலின் முடிவில் உங்களுக்குப் புரிபடலாம். அப்படிப் புரிபட்ட பின் என்ன செய்வது? உங்களை நீங்களே கடிந்துகொள்ளலாம். கண்ணாடியில் பார்த்து திட்டிக்கொள்ளலாம். படுக்கையில் படுத்துக்கொண்டு அழலாம். 

ஆனால், இதையெல்லாம் சில நாட்கள்தான் செய்ய முடியும். எல்லாவற்றையும் முடித்துவிட்டுக் கடைசியில் எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு அடுத்த நடவடிக்கைகளைக் கவனிக்கத்தானே வேண்டும்? பிரச்சினைக்கு உங்கள் சோம்பேறித்தனம் காரணம் அல்லது திறன் குறைவுதான் காரணம் என்றால் அதனை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். 'ஈ-லேர்னிங்' எனப்படும் இணைய வழிப் பயிற்சிகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. உங்களுக்கு என்னென்ன தலைப்பில் பயிற்சிகள் தேவையோ அவற்றில் எல்லாம் இன்று ஆன்லைன் பயிற்சிகள் கிடைக்கின்றன. அது போதாதென்றால் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் நண்பர்கள் மூலம் துறை நிபுணர்களைத் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசலாம். நீங்கள் முந்தைய தலைமுறை ஆசாமி என்றால் பயிற்சிப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கலாம். 

இதையெல்லாம் செய்து உங்களைச் சரி செய்துகொண்டு, உங்கள் அடுத்த இன்டர்வியூவில் இதையே ஒரு முக்கிய கதையாகச் சொல்லலாம். அதாவது, "நான் மேற்கொண்ட ஆய்வில் என் திறன் குறைவுகளைப் பட்டியலிட்டேன். அதன் விளைவாக இந்தந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொண்டேன்" என்று சொல்லிப் பாருங்கள். இன்டர்வியூவில் உங்கள் மீதான பிம்பம் பற்பல மடங்கு உயரும்.  

கடைசியாக, வேலை போனதற்கு உங்கள் திறன் குறைவு நேரடிக் காரணம் அல்ல. நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு ஆர்வம் இல்லாததுதான் காரணம் என்றும் உணரலாம். அதாவது நீங்கள் தவறான துறையில் இருக்கிறீர்கள். தோனியை ஷங்கர் படத்துக்கு இசை அமைக்கச் சொன்னால் என்ன ஆகும்? ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுப்பினால் என்ன ஆகும்? இருவரும் படுதோல்வி அடைவார்கள்தானே? அப்போது அதை வைத்து அவர்கள் உருப்படாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? 

அதுபோலவே நீங்களும் உங்களுக்கு சம்பந்தமில்லாத துறையில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கக் கூடும். அதில் சரிவர இயங்க முடியாமல் வேலை இழந்துகொண்டிருக்கக் கூடும். அதைக் கண்டறிந்துவிட்டால் உங்களுக்குத் தோதான துறையை, திறனைக் கண்டறிவதுதான் முக்கியமான நோக்கமாக மாறும். அதைச் செய்து முடித்து உங்கள் அடுத்த வேலையைக் கவனமாக நீங்கள் தேர்ந்தெடுக்க உதவும். அப்படித் துவங்கும் அந்தப் பயணத்தில் யோசித்தே இராத வெற்றியை நீங்கள் காணவும் வாய்ப்பிருக்கிறது. 

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வோம். நம்மில் பலர் வெற்றியைவிட தோல்வியில்தான் பற்பல விஷயங்களை கற்று முன்னேறுகிறோம். வெற்றி வந்தால் சும்மா கொண்டாடிவிட்டுக் கடக்கிறோம். தோல்வி வந்தால்தான் உட்கார்ந்து யோசிக்கிறோம். யோசிக்கவும் வேண்டும். ஒரு தோல்வி நம்மைப் பற்றியே நமக்கு சொல்லிக் கொடுக்கும். தெரியாத பரிமாணங்களை நமக்குக் காட்டும். மூடிக் கிடக்கும் கதவுகள் சிலவற்றைத் திறக்கும். வேலை இழந்த பின்னர் பலர் புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து வெற்றிகளை ஈட்டிய கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. அந்தக் வெற்றிக் கதைகளில் உங்கள் கதையும் ஒன்றாக மாறலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


1

1





நவீன உலகம்உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்அமெரிக்க நாடளுமன்றம்பிராந்திய மொழிமோடியின் பரிவாரம்ஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புஎம்.பி.க்கள் சஸ்பெண்ட்1232 கி.மீ. அருஞ்சொல்எஸ்.வி.ராஜதுரை ஸரமாகோதமிழர் வரலாறுசாட்சியச் சட்டம்பொருளாதர முறைமைஉணவுக் கட்டுப்பாடுஇயற்கை விவசாயம் தெளிவோம்சட்டமன்ற உறுப்பினர்வாட்ஸப் தகவல்கள்போபால்பேராளுமைசெயலூக்கம்பொது வாழ்வுபரப்பும் உரிமைசட்ட மாணவர்கள்அரசுஇந்திப.சிதம்பரம் உரைசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுசமஸ் - சேதுராமன்புத்தாக்க முயற்சிஉயிர்த் திரவம்அருஞ்சொல் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!