கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம், தொழில் 4 நிமிட வாசிப்பு

விளிம்புநிலை மக்கள் நலனில் நல்ல முன்னெடுப்பு

பாலசுப்ரமணியம் முத்துசாமி
22 Feb 2023, 5:00 am
1

ழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பில், கல்வியின் வழியாக உயர்ந்த இரண்டு மனிதர்களின் கதைகள் உண்டு. ஒருவர் பெயர் வணங்கான் நாடார். ஒரே தலைமுறையில், அவர் உயர்ந்து சமூகத்தின் உயர்நிலையை அடைந்துவிட முடிகிறது. ஐம்பது ஆண்டுகளில், நாடார் சமூகமே தமிழ்ச் சமூகத்தில் மிக மரியாதையான சமூகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 

இன்னொருவர் பெயர், காப்பன். நாயாடி என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். கல்வியின் வழியே வணங்கான் நாடாரைவிட உயர்வான இடத்தை அடைந்தாலும், வாழ்நாளும் முழுதும் சாதி என்னும் சிலுவையில் திரும்பத் திரும்ப அறையப்படுகிறார்.

இரண்டுமே உண்மை மனிதர்களின் கதைகள்.

இடைநிலைச் சாதிகள் சமூகத்தில் மிக விரைவில் கல்வி வழியே உயர்ந்துவிட முடிகிறது. ஆனால், தலித்துகள், பழங்குடி மக்களால் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தலைமைப் பொறுப்புகளில் எளிதில் அமர்ந்துவிட முடிவதில்லை. 

விளிம்புநிலை மக்களுக்கான திட்டம்

எல்லாச் சமூகங்களிலும், மேதமைகள் உண்டு. ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் அம்பேத்கர் தொடங்கி இன்றுவரை பல மேதைகள் தோன்றி இருந்தாலும், சமூகத்தின் கட்டமைப்பு மாறாமல் இன்றுமே அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவது தொடர்ந்துவருகிறது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்னும் தளங்களில் 75 ஆண்டு கால இடஒதுக்கீடுகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சமூகநிலையைப் பெரிதும் மாறிவிடவில்லை.

இதற்கு பல சமூகக் காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான காரணம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் கைகளில் நிலமும், தொழிலும் இல்லை என்பதே பழங்குடி மக்களின் நிலை இன்னும் மோசம். இந்தியாவின் மத்தியப் பகுதியில், மிக அதிக மக்கள்தொகையில் அவர்கள் வசித்துவருகிறார்கள். தண்டகாரண்யம் என அவர்கள் வாழ்ந்த பகுதி ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டிருந்தால், இன்று பெரும் அரசியல் சக்தியாக உருவாகியிருப்பார்கள்.

ஆனால், விடுதலை பெற்ற காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது, அவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, மத்தியப் பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள் 4 - 5 மாநிலங்களுக்கு சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பட்டன.

அப்போது அவர்களின் அரசியல் முக்கியத்துவம் மங்கிப்போனது. பின்னர் 70களில், இந்திய வனப் பாதுகாப்புச் சட்டங்கள் உருவாகிவந்தபோது அவர்களின் நில உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே அகதிகளாகிப் போனார்கள். வன அலுவலர்கள், வனக் கொள்ளையர்கள் என்னும் கூட்டுக் களவாணித்தனத்தால் சிதைக்கப்பட்டார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்த மிகப் பெரும் அரச பயங்கரவாதம் இதுதான். இது பற்றிய அறிதலும் விவாதங்களும் நம் சமூகத்தில் போதுமான அளவு நிகழவில்லை.

இந்தப் பின்புலத்தில்தான், தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான புத்தாக்கத் தொழில்களில், தமிழ்நாடு அரசு ரூ.30 கோடி முதலீடு செய்யும் என்னும் திட்டத்தை நம்பிக்கையுடன் பார்க்க வேண்டியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள்

இந்த முதலீட்டை, தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்கத் திட்ட நிறுவனம் (டான்சிம் - TANSIM) முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே ‘அருஞ்சொல்’ இதழ் அதை வரவேற்று, இதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என  எழுதியிருந்தது.

பட்ஜெட் அறிவிப்பின் அடுத்த கட்டமாக, கடந்த ஜனவரி இறுதியில், ஒடுக்கப்பட்ட தரப்பில் இருந்து 5 முக்கியமான தொழில் முன்னெடுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் தமிழ்நாடு அரசு ரூ.7.5 கோடி முதலீடு செய்யும் அறிவிப்பு வெளியானது. இந்தத் திட்ட அறிவிப்புக்கு 330 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவை பரிசீலிக்கப்பட்டு, முதல் கட்டமாக, ஐந்து தொழில் முனைப்புகளில் அரசு முதலீடு செய்துள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நிறுவனம் யுனிபோஸ் டெக்னாலஜி ஆகும். இந்தத் தொழில் நிறுவனம், அபாயகரமான தொழிற்சூழல்களில், பெரும் கொள்கலன்களைச் சுத்தம் செய்யும் ரோபோக்களைத் தயாரிக்கிறது. மனிதக் கழிவுக்கிடங்குகளில் (சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பலியாகும்) பயன்படுத்தப்படும் ரோபோக்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்யும். இந்த ரோபோக்கள் தனியார் வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு ரூ.2.5 கோடி முதலீடு செய்திருக்கிறது. 

இரண்டாவது நிறுவனத்தின் பெயர் பேக் அண்ட் பேக் சொல்யூஷன்ஸ் (Pack and Back) என்பதாகும். மின்னணு அட்டைகள் வழியே (RFID), நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் போக்குவரத்து மற்றும் கிடங்குகளை இயந்திரமயமாக்கும் தீர்வுகளை முன்னெடுக்கும் நிறுவனம். தமிழ்நாடு அரசு இதில் ரூ.2 கோடி முதலீடு செய்திருக்கிறது.

ஒய்வி ஆட்டோ அசிஸ்ட் என்னும் இன்னுமொரு நிறுவனம், தெருவில் நின்றுவிடும் வாகனங்கள், சர்வீஸுக்காக வாகனங்களை எடுத்துச் சென்று திருப்பிக்கொண்டுவருதல் போன்ற சேவைகளைச் செய்யும் புத்தாக்க நிறுவனம். இதன் சேவைகளைத் தமிழ்நாடு முழுதும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளுக்காக, ரூ.1 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஈகோ ஸாப்ட் என்னும் நிறுவனம் நிதித் தொழில்நுட்பத் துறையில் இயங்கிவருகிறது. இதன் சேவைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ரூ.1 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பீஸ் ஆட்டோமேஷன் என்னும் நிறுவனம், மொபைல் வேளாண் பதனிடும் இயந்திரங்களை உருவாக்கி, தேவைப்படும் உழவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை அவர்கள் வயலுக்கே கொண்டுசென்று பதனிடும் சேவையைச் செய்துவருகிறது. இத்தொழிலும் தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி முதலீடு செய்திருக்கிறது.

அரசு நிர்வாகத்தின் உந்துதல்

இந்தத் தொழில்களில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்துள்ளது என்பதே, இத்தொழில் முனைவர்களுக்குப் பெரும் பலமாகவும் அங்கீகாரமாகவும் உள்ளது. 

“இதனால் பெரும் நிறுவனங்களில் ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களுமே, டான்சிம் நிறுவனத்தின் பரிசீலனை விதிகளின் அடிப்படையில், தகுதி பெற்றவை. எந்த இடையீடும், பரிந்துரைகளும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் முதலானோர் கொடுத்த ஆதரவும், வழிகாட்டுதலும் எங்கள் பணியை எளிதாக்கியது” என்கிறார் டான்சிம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சிவராஜா.

தமிழ்நாட்டில், ஒடுக்கப்பட சமூகங்களில் இருந்து தொழில்முனைவோர் பல புத்தாக்கத் தொழில்களில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், சமூகக் காரணங்களுக்காக, அவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குகிறார்கள். இந்தத் தொழில்களில் சில பெரும் உயரங்களைத் தொடும் சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால், இந்தத் தொழில்முனைவோர்களின் கலாச்சாரப் பின்னணியும், உண்மையான புத்தாக்கத் தொழில் முதலீட்டு நிறுவனங்களின் கலாச்சாரமும் வேறுவேறானவை. நிறுவனத்துக்குத் தேவையான நிதி பெற அணுகுவதில் இருக்கும் முக்கியமான தடை இது. 

டான்சிம் இந்தக் கலாச்சார வேறுபாடுகளை இணைக்கும் பாலமாக விளங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கேற்ற வகையில் பெரும் முதலீட்டாளர்களை அணுகுவதில் உதவி செய்ய முடியும். 

இந்தியாவுக்கான முன்மாதிரி

இந்த ஐந்து நிறுவனங்களில் முதலீடு என்பது முதல் கட்டம்தான். இன்னும் பல நிறுவனங்களில் மேலும் முதலீடுகளை அரசு செய்யவிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக பழங்குடி மக்களுக்கான தொழில் நிறுவனங்களிலும் முதலீடுகள் நிகழவிருக்கின்றன.

தமிழ்நாட்டில், பழங்குடியினரின் மக்கள்தொகை மிகக் குறைவு. அவர்கள் பெரும்பாலும் சத்தியமங்கலம், நீலகிரி, கூடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வசித்துவருகிறார்கள். தேன், அறைகலன்கள், நெசவு, தேயிலை, காப்பி போன்ற பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தத் தளங்களில் உண்மையான தன்னார்வல நிறுவனங்கள் கடந்த 30-40 ஆண்டுகளாக உழைத்துவருகின்றன. இவர்களுக்கான தொழில்களை உருவாக்குவதிலும், உதவி செய்வதிலும் டான்சிம் அடுத்து ஈடுபடவிருக்கிறது

அரசும், முதல்வரும், டான்சிம் நிர்வாகமும் இணைந்து, வழக்கமான அரசு அணுகுமுறையை விடுத்து, தனியார் நிறுவனங்கள் தொழில்களை அணுகுவது போன்ற ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளார்கள். இந்த அணுகுமுறை வெற்றிபெற்றால், அது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழக பட்ஜெட்: தொழில் துறை சவால்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

Informative and interesting article! Hats off to the initiative by authorities!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

போர்கள்வீரப்பன்தேசிய வருமானம்ராம் – ரஹீம் யாத்திரைப.சிதம்பரம் பேட்டிசிந்து சமவெளிஹிண்டன்பெர்க்பேராதைராய்டு ஹார்மோன்சோழர் நிர்வாகம்தானியங்கித் துறைதமிழ்த்தன்மையார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி?தொடக்க நாள்பயங்கரவியம்சாதி முறைகால மாற்றத்தை ஏற்க வேண்டும்: நூலகர் தியாகராஜன் பேடஉலகின் மனநிலைவலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைஇரண்டு முறை மனவிலகல்இளைஞர் திமுகவி.பி.சிங் உரைரூ.8 லட்சம் வருமானம்அண்ணாவின் மொழிக் கொள்கைமீள்கிறது நாசிஸம்கலை விமர்சகர்தெற்கு ஆசியாவிரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிவெஸ்ட்மின்ஸ்டர் முறைபுஞ்சைஅரசியல் மாற்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!