கட்டுரை, கல்வி, தொழில் 5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஆக்கபூர்வ முதலீடு

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
22 Jun 2022, 5:00 am
1

மிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 மாதம், ஹுண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது காரைக் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். சென்னையில் 1996இல் நிறுவப்பட்ட ஆலை அது. அப்போது பேசுகையில், “தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதில், தெற்கு ஆசியாவிலேயே முதல் இடமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்” என்றார். 

2022 மார்ச் மாதம், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த கொள்கை முடிவின் தொடர்ச்சியைக் காண முடிந்தது.  தமிழ்நாட்டின் தொழில் துறைக்கான ஒதுக்கீடு ரூ.4,170 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 51% அதிகமாகும்.

மட்டுமல்லாமல், அந்த பட்ஜெட்டில் தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும், அடிப்படைக் கட்டமைப்பிற்கும், தனியார் துறையின் உதவியோடு 71 தொழில்நுட்ப நிலையங்களில் நிறைவேற்றப்படும் என்றும், அதற்கு ரூ.2,900 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அந்தக் கொள்கையின் செயல்திட்டம், ஜூன் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தை டாட்டா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்போவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்கான முதலீடு ரூ.2,204 கோடியாகும். இத்திட்டம் ஐந்தாண்டுகள் செயல்படும். தமிழ்நாட்டில், 71 தொழில்நுட்பப் பள்ளிகளில் (ITI) இது செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்தில், 71 தொழில்நுட்பப் பள்ளிகளில், நான்காவது தொழில் துறைத் தளத்திற்கான ‘இண்டஸ்டிரி 4.0’ (Industry 4.0) நவீன இயந்திரங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகள் நிறுவப்படும். தொழில் துறை 4.0 தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை டாட்டா தொழில் துறை நிறுவனம் அளிக்கும். இத்திட்டத்தில், 20 பன்னாட்டுத் தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப்போவதாக டாட்டா அறிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, முதல்வர் மற்றும் டாட்டா தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் ராமதுரை முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாட்டின் தொழில்நுட்பப் பயிற்சி நிலைய மேம்பாட்டில் இது முக்கியமான நிகழ்வாகும். கடந்த சில பத்தாண்டுகளாகவே, தமிழகத் தொழில் துறை, தமிழ்நாட்டில் இருந்தது வெளிவரும் தொழில்நுட்ப மாணவர்களின் திறன் குறைபாடுகளைப் பற்றிக் கவலை தெரிவித்திருந்தார்கள். அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம். இதிலிருந்து பயிற்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், எதிர்காலத் தொழில் துறையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் துறை 4.0 என்றால் என்ன?

தொழில் துறை வரலாற்றாசிரியர்கள், தொழில் துறை வரலாற்றை 4 கட்டங்களாகப் பிரிக்கிறார்கள். அவை,

தொழில் துறை 1.0

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டம் முதலாம் தொழில் துறைப் புரட்சியின் காலகட்டமாகும். இக்காலத்தில்தான், கைகளால் பயன்படுத்தப்படும் கருவிகளைத் தாண்டி, அடிப்படை இயந்திரங்கள் உருவாகத் தொடங்கின. நீராவியால் இயங்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக தொழில் துறை உருவாகத் தொடங்கியது.

தொழில் துறை 2.0

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டம், இரண்டாம் தொழிற்புரட்சியின் காலகட்டமாகும்.

மின்சாரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை முக்கியமான சக்திகளாக உருவெடுத்தன. டீசல் எஞ்சின், விமானம், தொலைபேசி போன்ற கண்டுபிடிப்புகள் எழுந்து மனித சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. வேளாண் பொருளாதாரத்தைப் பின்னொதுக்கி, நவீனப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் அங்கமாக தொழில் துறை உருவெடுத்தது.

தொழில் துறை 3.0

20ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தொடங்கிய இக்காலகட்டத்தில், அணுசக்தி, மின் அணுவியல், கணிணி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எழுந்து வந்தன. இயந்திரங்களின் செயல்திறனை மின் அணுவியலும், கணிணியும் பெருமளவு மேம்படுத்தின. விண்ணுக்கு செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டு, தொலைத்தொடர்புத் துறையும், வானியலும் மேம்படுத்தப்பட்டு சமூகத்துக்குப் பெரும் பயன் அளித்தன.

தொழில் துறை 4.0

தற்போதைய காலகட்டம் தொழில் துறை 4.0 என அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் இயந்திரங்கள் மனிதச் செயல்பாடுகளை மேம்படுத்திய வெறும் உலோக இயந்திரங்கள் மட்டுமே. பின்னர், மெல்ல அதில் மின்சாரம்  நுழைந்து செயல்திறனை மேம்படுத்தியது. அடுத்து, அதில் மின்ணணு நுழைந்து செயல்பாடுகளை மேலும் நுட்பமாக்கி, செயல்திறனை மேம்படுத்தியது.

அதன் அடுத்தபடியாக, இன்று, இணையம் வழியே இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளையே கணிணி வழி மேலாண்மை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இன்று இந்தியாவின் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களை, அமெரிக்காவில் இருந்து இயக்க, கண்காணிக்க, மேம்படுத்த முடியும். கணிணிகள் இன்று இயந்திரங்களின் மூளைகளாக மாறிவிட்டன.

இதனால், இயந்திர, வணிகச் செயல்பாடுகள் குறுகிய காலத்தில் தொடர் மாறுதல்களை அடைந்தபடியே இருக்கும் என்னும் நிலை உருவாகியுள்ளது. தொழில் துறையில், ரோபாட்கள் நுழையத் தொடங்கிவிட்டன. இதன் சாத்தியங்கள் பிரமிக்க வைக்கின்றன.

தேவை: நவீன இயந்திரச் சூழலும், தொடர் மாற்றத்தை வரவேற்கும் மனநிலையும்!

தமிழ்நாட்டின் தொழில்நுட்பப் பயிற்சி மையங்களும், பாலிடெக்னிக்குகளும், இந்தத் தொழில் துறை 4.0-க்கான அடிப்படைக் கட்டமைப்புகளும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இல்லாத நிலையில் உள்ளன. இந்நிலையில், இங்கே முதலீடுகள் வந்தாலும், நவீன இயந்திரங்களை இயக்க, தொடர் மாற்றங்களை வரவேற்கும் மனநிலை இல்லாத பணியாளர்கள் இல்லையெனில், அது முதலீடுகளுக்குச் சாதகமாக இருக்காது.

எனவேதான், தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. டாட்டா தொழில்நுட்ப நிறுவனம், இத்திட்டத்தில் ஐந்தாண்டுகள் இருந்து, தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, அதற்கான பாடத் திட்டங்களைத் தயாரித்து, பயிற்சி அளிப்பார்கள் என்பதும், இத்திட்டத்தில் உலகின் மிகப் பெரும் 20 தொழில் நிறுவனங்கள் பங்கெடுப்பார்கள் என்பதும், இத்திட்டத்தின் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்ப நிலையங்களில் இருந்து, 20%-30% நிறுவனங்கள் இதுபோல உயர்தர நிறுவனங்களாக உயர்த்தப்படுவது காலத்தின் கட்டாயம். இந்த நிறுவனங்களில், மற்ற அரசு கல்வி நிலையங்களில் உள்ளது போன்ற அரசியல் தலையீடு, ஊழல், லஞ்சம் முதலியவை அணுகாமல், தரத்தை உயர்த்துவது மிக முக்கியமான தேவை. இல்லையெனில், அரசு முடிவுசெய்திருக்கும் இந்த முதலீட்டிற்கு பலன் கிடைக்காமல் வீணாகும். தமிழ்நாடு தெற்கு ஆசியாவின் மிகச் சிறந்த முதலீட்டு இலக்காக வேண்டும் என்னும் கனவும் நிறைவேறாது. 

டாட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் மிகவும் மதிப்பு வாய்ந்த தனியார் நிறுவனங்கள். நூறாண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில், அடிப்படை அறிவியல் மற்றும் தொழில் கல்வி நிலையங்களில், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களான பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் முதலியவற்றைத் தோற்றுவித்த வரலாற்றுப் பின்ணணி கொண்ட குழுமம்.

தமிழ்நாடு அரசும், டாட்டா நிறுவனமும் இணைந்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டன் என்னும் வெற்றிகரமான தொழில் நிறுவனத்தை நடத்திவருகின்றன. இந்த முன்னெடுப்பும் அதேபோல வெற்றியடைய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4

4





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Andrew Sam   2 years ago

தொழில்துறை 4.0 மிகவும் முக்கியம்.. கூடவே தமிழ்நாட்டு அரசு உயர்தர ஆராய்ச்சிக்கு பணம் செலவிடவும் திட்டங்கள் தீட்டவும் வேண்டும்! R&D R&D R&D R&D என்ற முழக்கம் ஓங்கவேண்டும்!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

மத்திய பட்ஜெட்சாதி அணிதிரட்டல்மார்ட்டென் மெல்டால்ஏஐஐஎம்எஸ்பெரிய கோயில்மூன்றே மூன்று சொற்கள்சந்துரு பேட்டி அருஞ்சொல்தீவிரவாதம்பண்பாட்டுப் பின்புலம்இரக்கத்துடன் துடிக்கும் இந்திய மனச்சாட்சி நயன்தாராநவீன இந்திய சமூகம்சிட்லின் கே. சேத்தி கட்டுரைசத்திரியர்கள்ரவிச்சந்திரன் அஸ்வின்சென்னை மாநாகராட்சிஇராம.சீனுவாசன் கட்டுரைஅரசுப் பணிகள்அரசியல் ஆலோசகர்கள்குறட்டைஅக்னி பாதைஆகார் படேல்காஷ்மீர்: தேர்தல் அல்லரத்தக்கசிவுஇலக்கியப் பிரதிகி.ரா. பேட்டிவிஷச் சுழலை உடையுங்கள்மனுஷ் விமர்சனம்ramachandra guha articles in tamilமாணவர் நலன்முசோலினி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!