கட்டுரை, தலையங்கம், கல்வி 5 நிமிட வாசிப்பு

முன்னுதாரணம் ஆகட்டும் மாதிரிப் பள்ளிகள்

ஆசிரியர்
06 Sep 2022, 5:00 am
6

மிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு பிரச்சினையை அங்கீகரித்து, அதற்கு முகம் கொடுத்திருக்கிறது அரசு. ஆசிரியர் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடர்பான  அறிவிப்பானது, நம்முடைய பள்ளிக்கல்வித் துறையில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு.

தமிழகத் தொடக்கக் கல்வி பெரும் சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இரு தசாப்தங்களாக இது படிப்படியாக நடந்தது. மாநிலத்தின் பெரும் பகுதி மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளுடைய தரம் வீழ்ச்சியடைந்தது இதற்கு முக்கியமான ஒரு காரணம். அரசுப் பள்ளிகளுக்கே உரித்தான ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள், ஆசிரியர் வேலைக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும்  நிர்வாகப் பணிகள், கற்பித்தல் சாதனங்களின் போதாமை போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் சமூகமும் தங்களுடைய உயிர்ப்புணர்வை இழந்தது.

ஒட்டுமொத்தக் கல்வி நீரோட்டத்தில் தாங்களும் முக்கியமான பங்கேற்பாளர்கள் எனும் உணர்வையே அரசுப் பள்ளிகள் பெருமளவில் இழந்தன. தரமான உயர்கல்விக்கான போட்டியிலோ நல்ல வேலைக்கான சந்தையிலோ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடம் என்ன என்ற கேள்வியையே அவை கேட்டுக்கொள்ளத் தவறின. ஏதோ ரேஷன் கடைக்காரர்கள் ஏழை எளியோருக்கு அரசு மூலமாக வரும் அரிசியை வழங்குவதுபோலத் ஏழைக் குழந்தைகளுக்குத் தேர்ச்சியை வழங்குவதோடு தம் பணி முடிந்தது என்ற மனநிலைக்குப் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வந்துவிட்டனரோ என்று எண்ணத் தோன்றியது.

உலகெங்கும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மக்கள் நல அரசுகள் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரிக்கப்படுவது எப்படி ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோல, இப்படிச் செலவிடப்படும் தொகைக்கான விளைவுகள் மதிப்பிடப்படுவதும் ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு துறையில் எவ்வளவு செலவிடுகிறோம், பலன்களாக எவற்றைப் பெறுகிறோம் எனும் கேள்விக்கு நியாயமான பதிலைப் பெறுவது முக்கியம். நம்முடைய கல்வித் துறையில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டால் கிடைக்கும் பதிலானது  பெரிய அளவில் ஏமாற்றத்தையும் ஆயாசத்தையுமே தரும்.

போதாமைகள் நிறைய இருந்தாலும் தமிழ்நாட்டில் அது திமுகவோ, அதிமுகவோ இரு கட்சிகளுமே கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இயன்ற அளவுக்கு வழங்கிவந்திருக்கின்றன. கால் நூற்றாண்டுக்கு முந்தைய சூழலை ஒப்பிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், "எங்கள் ஊருக்கு அரசுப் பள்ளி வேண்டும். எங்கள் ஊர் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்" என்று போராட்டங்கள் நடந்த காலம் போய் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும் / இணைக்கப்படும் சூழல் இன்று உருவாகிவருவது வெளிப்படுத்தும் செய்தி என்ன?

அரசுப் பள்ளிகள் தங்கள் செல்வாக்கை இழப்பதற்கு ஏராளமான காரணங்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, நல்ல உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுடைய எண்ணிக்கைச் சரிவு. ஊருக்கு ஒரு மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞரை உருவாக்கும் ஆற்றலைக்கூட இன்று நம் அரசுசார் பள்ளி அமைப்பு இழந்துவிட்டிருக்கிறது. எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம், என்எல்எஸ்யு போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தமிழகத்திலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொல்லப்போனால், பள்ளியிறுதித் தேர்வு எழுதி வெளியே வரும் பல லட்சம் மாணவர்களில் சில நூறு பேர்கூட இத்தகு உயர் படிப்புகளுக்கு இங்கே விண்ணப்பிப்பதே இல்லை. இதற்கான காரணம், நம் மாணவர்களின் தகுதியின்மை அல்ல; தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவர்களுக்கு உத்வேகம் தரும் பின்னணியின்மை. 

தேசிய அளவிலான உயர்கல்வி இடங்களில் தமிழக மாணவர்கள் - குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்தனர். ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதுமே இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. தமிழக அளவிலேயேகூட நல்ல உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைச் சென்ற ஆண்டில் முதல்வர் ஒருமுறை குறிப்பிட்டுப் பேசியதை இங்கே நினைவுகூரலாம்.

விளைவாக இந்த அரசு பிரதான கவனம் கொடுக்கும் துறைகளில் பள்ளிக்கல்வித் துறை ஒன்றானது. தலைமையாசிரியர்களை, ஆசிரியர்களை உத்வேகப்படுத்துவதற்கான புத்தாக்கப் பயிற்சிகளில் ஆரம்பித்து கற்பித்தல் முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான யோசனைகள் வரை பல நல்ல முயற்சிகள் இன்று நம் கல்வித் துறையில் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே இப்போது வெளியாகியிருக்கும் 'மாதிரிப் பள்ளிகள்' தொடர்பான அறிவிப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையே உத்வேகத்தை உருவாக்கவும், நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகத் தயார்படுத்தவும் முன்னதாக 'மாதிரிப் பள்ளிமுறை'யை 10 இடங்களில் பரீட்சார்த்தமுறையில் அரசு முயற்சித்திருக்கிறது. இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்திருப்பதன் விளைவாகவே  ஏற்கெனவே நடத்தப்பட்டுவந்த 10 பள்ளிகளோடு கூடுதலாக 15 பள்ளிகள் சேர்த்து இந்த ஆண்டு முதல் 25 மாதிரிப் பள்ளிகள் நடத்தப்படும் என்று அரசு இப்போது அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு 'மாதிரிப் பள்ளி' அமைப்பு புதிது இல்லை. இந்தப் பத்து ஆண்டுகளுக்குள் வெற்றிகரமான விளைவுகளை இருவேறு மாவட்டங்களில் ஏற்கெனவே தந்த அமைப்பு இது. தமிழ்நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களான ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூரில் இது பெரிய வெற்றிகளைத் தந்தது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், உத்தேசமாகப் பள்ளிக்கு ஒருவர் என்பதுபோல ஒரு விகிதாச்சாரத்தில் நன்கு படிக்கும்  மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, நல்லாசிரியர்களைக் கொண்டு தயார்ப்படுத்தும் பணியையே இந்த 'மாதிரிப் பள்ளி'கள் செய்தன.

இதற்கு நல்ல பலன் இருந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் எனப் பல்வேறு துறைகளிலும் நல்ல உயர்கல்வி வாய்ப்புகளை இங்கு பயின்ற மாணவர்கள் பெற்றார்கள். இந்தப் பள்ளிகளில் கைவரப் பெற்ற அனுபவங்களை இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் ஏனைய அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அது அந்த மாவட்டங்களில் ஒரு தொடர் மாற்றத்துக்கு வித்திட்டது. மிக நீண்ட காலமாகப் பின்தங்கியிருந்த அந்த மாவட்டங்கள் இன்று கல்வியில் முன்னோக்கி நகர்ந்திருக்கின்றன.

இப்போது அந்த அனுபவத்திலிருந்துதான் மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு 'மாதிரிப் பள்ளி' என்று அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுசெல்ல விழைகிறது. அடுத்தடுத்த நிலைகளில் வட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அளவுக்குப் பல நூறு பள்ளிகளாக இது விரித்தெடுக்கப்படும் என்கிறார்கள். இந்த 'மாதிரிப் பள்ளி'களிடம் இருந்து ஏனைய பள்ளிகள் புதிய கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகத்தான் 'தகைசால் பள்ளிகள்' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் நல்ல முறையில் செயல்படும் பள்ளிகள் தம்மை மேம்படுத்திக்கொள்ள அவற்றுக்குச் சிறப்பு நிதி வழங்கி அவற்றுக்கு முழு நிறைவான  கட்டமைப்பையும் வழங்கும் திட்டம் இது. மாதிரிப் பள்ளிகள் வழக்கமான, முழுமையான பள்ளிகள் கிடையாது. கிட்டத்தட்ட முகாம் பள்ளிகள் அவை. நர்சரியில் ஒரு தொட்டியில்  வளர்த்தெடுக்கப்பட்டு, ஒரு கன்று தழைத்ததும் வீட்டுத் தோட்டத்துக்கு மாற்றப்படுவதுபோல மாதிரிப் பள்ளிகளில் இருந்து படிப்படியாக தகைசால் பள்ளிகளுக்கு இந்தப் புதிய வகுப்புகளை மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மாதிரிப் பள்ளிகளுக்கும் தகைசால் பள்ளிகளுக்கும் இடையில் நடக்கும் பரிவர்த்தனைகள் ஏனைய எல்லாப் பள்ளிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று தெரிகிறது. அப்படியென்றால், விரிந்த பார்வையில் நிரந்தரமான ஒன்றாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது உறுதியாகிறது. 

திட்டமிடப்பட்டிருக்கும் விஷயங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக முதல்வரின் அறிவிப்பானது தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எதிர்கொள்ளும் மோசமான தேக்கம் முடிவுக்கு வரும். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான நல்ல உயர்கல்விவாய்ப்புகளை, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

நல்ல திட்டம். கல்வித் துறை அதிகாரிகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இதை வெற்றியடையச் செய்யட்டும். மாதிரிப் பள்ளிகள் ஏனைய பள்ளிகளுக்கு முன்னுதாரணப் பள்ளிகளாகத் திகழட்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

2

1




பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

Dear Sir, You have mentioned the root-cause correctly as below: "அரசுப் பள்ளிகளுக்கே உரித்தான ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள், ஆசிரியர் வேலைக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும் நிர்வாகப் பணிகள், கற்பித்தல் சாதனங்களின் போதாமை போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் " So, where the fault lies is most obvious! We have to attend to the root cause instead of making cosmetic changes or announcements!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சரவணமணிகண்டன்   2 years ago

‘மாதிரிப் பள்ளிகள்!’ ‘தகைசால் பள்ளிகள்!’ ஒரு சிறப்புப்பள்ளி ஆசிரியனாகச் சொற்களை மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் சொல்லிப் பார்க்கிறேன். ஆனால், விரக்தியோடும், ஏமாற்றத்தோடும். ஏனென்றால், பொதுபுத்தியில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் மட்டும்தான் பள்ளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள்?... அங்கே மாதிரிப் பள்ளிகள். இங்கே ஒரு மாதிரியாய்ப் பள்ளிகள். அங்கே தகைசால் பள்ளிகள். இங்கே தகைசான்ற பெருமக்கள் தங்கள் பாவ புண்ணியக் கணக்கு தீர்க்கும் அன்ன சத்திரங்கள். எத்தனையோ ஆண்டுகள், எவரெவரிடமோ முறையீடுகள். இங்கு எழுதினால் மட்டும் என்ன ஆகக்கூடும்? – ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் போகக்கூடும். – என்ன செய்ய நெஞ்சு பொறுக்குதில்லையே! ப. சரவணமணிகண்டன் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி.

Reply 1 0

Banu   2 years ago

சகோதிரர் கருத்து சிந்திக்க வைக்கிறது. 2001 வரை இதுபோன்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பள்ளிகள் சிறப்பாகவே செயல்பட்டன. ஒருங்கிணைந்த (inclusive education) கல்வி இம்மாணவர்களுக்குத் தேவை என்பதை NCF 2005 வலியுறுத்தவே இம்மாணவர்கள் சிறப்பு பள்ளிகள் தவிர்த்து சாதாரண பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் TOTAL BLIND எனப்படும் முழுமையாக பார்வைத்திறன் இழந்த மாணவன் Braille கற்காமல் எவ்வாறு 100% வகுப்பறை நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது கேள்வியாகவே இருக்கிறது. Deaf and dumb மாணவருக்கு சைகை மொழி தெரியாத ஆசிரியரின் வாயசைவு எவ்வாறு பாடக்கருத்தை புரிய வைக்கும் என்பது அறியப்படவில்லை. Multiple disability இருக்கும் மாணவர்களின் தேவைகள் சாதாரண வகுப்பறை நிகழ்வுகளில் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்பதும் கேள்வியாகவே உள்ளது. Inclusive education குறித்து இன்னும் சரியான வரையறைகள் தேவை. அதுவரை சிறப்பு பள்ளிகளின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படல் வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனம், சிறப்பான விடுதி வசதி என இவர்கள் தேவைகள் ஏராளம்.

Reply 1 0

Selvam K   2 years ago

மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் ஆகியன ஏறக்குறைய மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வருபவை. ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்பன போன்ற துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டங்கள் வந்திருக்க வேண்டுமல்லவா? பள்ளிகளை மாவட்டங்களுக்கு என்று பகிர்ந்து கொள்ளும்போது மற்ற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்கும் வழங்க வேண்டுமல்லவா? ஏனெனில் அவைகளும் அரசுப் பள்ளிகள் தாம். அதிலும் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் இரண்டாம் தரம் என்று கொண்டால், மற்ற துறைகளான மேற்குறிப்பிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகள் இரண்டாம் தரத்திலும் இரண்டாம் தரமாக இருக்கின்றன. அவற்றிலும் மாற்றுத்திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள் காண்பாரற்றும் கேட்பாரற்றும் கிடக்கின்றன. அபாய கட்டத்தில் இருக்கின்ற அந்தப் பள்ளிகளுக்கு அல்லவா இந்தத் திட்டங்கள் முதலில் கொண்டுவரப்பட வேண்டும்? சரி, ஒருவேளை முன்னுரிமை வழங்க இயலவில்லை என்றால் சம உரிமையேனும் வழங்க வேண்டும் என்று கேட்பது நியாயம் தானே? ஆகவே செவித்திறன் / பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் தலா ஒன்றிற்கு இந்தத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற சமூகநீதி நம்பிக்கையில் இக்கோரிக்கையை சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறேன். கா. செல்வம், பட்டதாரி ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, ஈரோடு.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

உலகமெல்லாம் அருஞ்சொல் கட்டுரைகள் உலவி , கருப்பொருள் கொண்டுவந்தாலும் மாதம் ஒரு முறையேனும் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் விமர்சிக்கத் தவறுவதில்லை. நன்றி! என்றும் உங்கள் நினைவில் நீக்கமற அமர்ந்துள்ளோம். ஆசிரியர்கள்"உயிர்ப்புணர்வு" இழந்துவிட்டனர் என்ற வார்த்தைகள் நெஞ்சைத் தைத்தன. பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டில் உள்ளோம். குறைக்கப்பட்ட, பாத்திட்டம், இணைப்பு பாடத்திட்டம், முழுமையான பாடத்திட்டம் என்று மாறி மாறி நாங்கள் எதை எப்படி நடத்த வேண்டும் என்ற அறிவுரைகளுக்கு ஏற்ப வகுப்பறை நிகழ்வுகளை சுருக்கியும், பெருக்கியும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம். கற்பித்தல் கற்றல் நிகழ்வுகளுக்கான மணித்துளிகள் மட்டும் பனி போல் கரைவதை காண முடிகிறது. நாங்கள் அரசின் கையசைவுகளுக்கு ஏற்ப செயல்படுவது நாங்கள் "உயிர்ப்புணர்வு" இன்றி இருப்பதாகவே உங்களுக்கு காட்சியளிக்கும். ஏழு வண்ணங்களும் இசைவாய், விரைவாய் சுழன்று உங்கள் கண்களுக்கு வெண்மையாய் , வெறுமையாய் நாங்கள். ரேசன் கடை பொருள், பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சியுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பது எங்கள் பொறுமையினை சீண்டுகிறது. பள்ளிகள் மூடப்பட்டன. ஈராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை உயர்ந்தன. ஆயிரக்கணக்கான காலிப் பணியிடம்.. பிறகு மீண்டும் எதற்கு கல்வித் துறைக்கு பயன்படுத்தப்படும் தொகை குறித்த அங்கலாய்ப்பு.. ஒரு முறையேனும் நிதி ஒதுக்கீடு தணிக்கை விபரங்களை தலைப்புவாரியாக பாருங்கள். கல்வித்துறையில் இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பகிருங்கள். வரவேற்கத்தக்க நிதி ஒதுக்கீடு என்பதை மக்கள் உணர உதவுங்கள் அல்லது ஒதுக்கீட்டிற்கு ஏற்ற பொருள்தானா என்பதை பொதுமக்களே ஆராய்ந்தறிய வழிகாட்டுங்கள். காகிதங்கள் விற்கும் விலையில் இன்று இலவசமாக புத்தகங்களையும், நோட்டுகளையும் வழங்குகிறோம்.. இது போல் பல. புத்தகம் வாங்க பணமில்லாமல் பள்ளிக்கு வருவதை நிறுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை பூஜியம் தானே... இதுவே நல்ல ஆட்சியின் குறியீடு. உயர் கல்வி குறித்து, உத்வேகம் தரும் பின்னணியின்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளீர். ஆசிரியர்கள் உயர்கல்வி குறித்த அறிவிப்புகளை மாணவர்களுக்குத் தெரிவிக்கிறோம், விண்ணப்பித்து தருகிறோம். மதிப்பெண்கள் உயர , போதிய நுழைவுத் தேர்வு பயிற்சி இல்லை என்பதை உணர்கிறோம். இதற்கான மதிப்பீட்டு முறை வகுப்பறைத் தேர்வுகளில் துவங்கி பொதுத் தேர்வுகள் வரை படர்தல் வேண்டும். மதிப்பீட்டுக் கருவிகளை மேம்படுத்துங்கள். நீங்கள் குறையாக குறிப்பிடும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை எம்பள்ளி மாணவர்கள் வெற்றியுடன் கடப்பதை காண்பீர்கள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

K SERALATHAN    2 years ago

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாதிரிப் பள்ளிகளுக்கும் மற்ற பள்ளிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சமஸ் - மு.க.ஸ்டாலின்ஒரு கட்சி ஜனநாயகம்இது மோடி 3.0 அல்லஉத்தராகண்ட் விஜயும் ஒன்றா?ஹலால்கல்லூரிகள்multiple taxation policiesஆணாதிக்கத்தின் சின்னம்விருதுஇயற்கை விவசாயம்ரமண் சிங்எண்களுக்கு ஏன் இத்தனை வண்ணங்கள்!ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறைடிரான்ஸ் ஃபேட்செர்ட்டோலிசைவம் - அசைவம்அருஞ்சொல் எல்.ஐ.சி.ஒற்றைக் குழந்தைத் திட்டம்யோகி அதித்யநாத்ரோஹித் சர்மாவளர்ச்சிப் பாதைTiruppurதிராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டனவா? குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன்!- ஜக்கநேரு-காந்தி குடும்பம்ஆமத்தம் உள்சத்திரியர்மாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிஇருமொழிக் கொள்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!