கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

பீட்டரிடம் ஆட்டை போடப்படும் கதை

ப.சிதம்பரம்
30 May 2022, 5:00 am
1

ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் இதுவரையில் இந்த அளவுக்கு மோசமானதில்லை என்று கடந்த வாரம் எழுதியிருந்தேன். கடந்த சில நாள்களில் மேலும் ஒரு மோதல் களம் உருவாகியிருக்கிறது: வரிகளை அதிகம் குறைப்பது யார்? 

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 21இல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'உற்பத்தி வரி'களை பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.8, ரூ.6 எனக் குறைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாக அதில் தெரிவித்திருந்தார். அது தொடர்பான அறிவிக்கை வெகுதாமதமாகத்தான் அன்றைய தினம் மற்றவர்களுக்குக் கிடைத்தது. மாநில அரசுகளுடன் வரி வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் இனத்தில்தான் அந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்தி ஒளிபரப்பும் சேனல்களும் காலை பத்திரிகைகளும் கருதி அப்படியே ஒளிபரப்பின, பிரசுரித்தன.

ஆனால், அவை அனைத்துமே தவறு. அந்த விலைக் குறைப்பானது ‘கூடுதல் உற்பத்தி வரி’ என்கிற இனத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த இனத்தில் வசூலாகும் பணம் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. 

மே 22ஆம் தேதி, மாநிலங்களை அவமானத்துக்குள்ளாக்க நிதியமைச்சர் விரும்பினார். “நான் உற்பத்தி வரியைக் குறைத்துவிட்டேன், நீங்கள் மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறையுங்கள்” என்றார். மாநிலங்களைவிட ஒன்றிய அரசு வலிமையானது, செல்வாக்கு மிக்கது என்று காட்டும் தொனி அவருடைய பேச்சில் இருந்தது. ஆனால், வரிகள் தொடர்பாக முழுதாக ஆராய்ந்த பிறகு, பெட்ரோல் – டீசல் மீது ‘வாட்’ வரியைக் குறைக்குமாறு ஒன்றிய அரசு கோருவதற்கு நியாயமே இல்லை என்பது புரிந்தது.

எண்கள் பொய் சொல்வதில்லை

முதலில் நாம் இந்த விலைக் குறைப்பையே ஆராய்வோம். கூடுதல் உற்பத்தி வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு பெரிய புதையலே கிடைத்துக்கொண்டிருக்கிறது. ‘சாலையிடல் – அடித்தளக் கட்டுமானத்துக்கான கூடுதல் தீர்வை’ (RIC), ‘சிறப்புக் கூடுதல் உற்பத்தி வரி’ (SAED), ‘வேளாண்மை – அடித்தளக்கட்டுமான வளர்ச்சி கூடுதல் வரி’ (AIDC) ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும் வருவாய் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை.

2014 மே மாதம் எல்லாவித உற்பத்தி வரிகளும் சேர்ந்து பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.9.48 ஆகவும் டீசலுக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தன. 2022 மே 21இல் ஒன்றிய அரசு இந்த உற்பத்தி வரித் தீர்வையைப் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.27.90 ஆகவும் டீசலுக்கு ரூ.21.80 ஆகவும் உயர்த்தியது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உயர்த்தப்பட்டது ரூ.18க்கும் மேல்!

அடுத்தபடியாக, மாநிலங்களுடன் வருமானத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் உற்பத்தி வரியும், பகிர்ந்துகொள்ளப்படாத கூடுதல் உற்பத்தி வரியும் எவ்வளவு என்று பார்ப்போம்:

பகிரப்படும் உற்பத்தி வரி வருவாய் இனத்தில், ஒன்றிய அரசு 59%ஐ தான் வைத்துக்கொண்டு எஞ்சும் 41% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. இந்தப் பகிர்வு நிதிக் குழு பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களும் ஒன்றிய அரசிடமிருந்து இந்த வரிவிதிப்பில் பெறுவது மிகவும் அற்பமான தொகையே. பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 57.4 பைசாவும், டீசலில் ஒரு லிட்டருக்கு 73.8 பைசாவும் கிடைக்கிறது. அடிப்படை உற்பத்தி வரிகள் மூலம் மாநிலங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு வருமான ஆதாயமும் இல்லை, இழப்பும் இல்லை.

உண்மையான வருவாய் ஆதாரம், பகிர்ந்துகொள்ளப்படாத கூடுதல் உற்பத்தி வரிகள்தான். பெட்ரோல் – டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.18 வீதம் 2022 மே 21இல் உயர்த்தியது ஒன்றிய அரசு. நிதியமைச்சர் அதில்தான் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.8, டீசலில் ரூ.6 குறைத்திருக்கிறார். இதைத்தான், ‘பீட்டரிடம் அதிகம் கொள்ளையடித்து பீட்டருக்கே குறைத்துக் கொடுப்பது’ என்கிறேன்!

‘வாட்’ தான் முக்கிய ஆதாரம்

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு வரிகளை உயர்த்துவதால் மாநிலங்களுக்குக் கிட்டத்தட்ட எதுவுமே வருவாயாகக் கிடைப்பதில்லை. அவர்களுக்கான வருமானமெல்லாம் அவற்றின் மீதான ‘மதிப்பு கூட்டப்பட்ட வரிகள்’ (வாட்) மூலம்தான் கிடைக்கிறது. மதுபானங்கள் மீதான வரி விதிப்பு மாநிலங்களுக்கு மற்றொரு வருவாய் ஆதாரம். மாநிலங்களுடைய வரி வருமானத்தில், அவர்களுடைய சொந்த வரி வருமான அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் ‘வாட்’ வரியை மேலும் குறையுங்கள் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்பது, கிடைப்பதையும் இழந்துவிட்டு பிச்சை எடுங்கள் என்று சொல்வதற்குச் சமம்.

வரி வருவாய் குறைந்தால் அவர்கள் கிட்டத்தட்ட திவால் நிலைக்கு வந்துவிடுவார்கள். கடன் வாங்கித்தான் செலவுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியும். அப்படிக் கடன் வாங்கவும் மத்திய அரசிடம் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டும். அல்லது மானிய உதவியை அதிகப்படுத்துங்கள் என தில்லிக்கு கப்பரை ஏந்தி செல்ல வேண்டும். மாநிலங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நிதிச் சுதந்திரமும் இனி வற்றிவிடும். அப்படியிருந்தும் நான்கு மாநிலங்கள் ‘வாட்’ வரியைக் குறைத்துள்ளன. அவை தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான்.

முழு மறுபரிசீலனை அவசியம்

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி அதிகாரங்கள், நிதி உறவுகள் குறித்து ஒட்டுமொத்தமாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என நடுநிலையான பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக பொது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான சட்டக் கூறுகள் 246 ஏ, 269 ஏ, 279 ஏ ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆராயப்பட வேண்டும். தங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதி அதிகாரங்கள் வேண்டும்.

நிதி பற்றாக்குறையால் அவதிப்படும் மாநில அரசுகளால் நகர்ப்புற – கிராமப்புற உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்குப் போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை. இதனால்தான் அரசமைப்புச் சட்டத்துக்கு இயற்றப்பட்ட 73வது, 74வது திருத்தங்கள் நீண்ட காலத்துக்குச் செயல்பட முடியாமல் உறைந்து கிடக்கின்றன. நிதியோ, செயல்பாடுகளோ, செயல்பட வைப்பதற்கான ஆள்களோ நகராட்சிகள், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட முடியாமல் இருக்கிறது.

ஒன்றிய அரசிடம் குவிந்துவிட்ட ஏகபோக நிதியதிகாரங்கள், இதர அதிகாரங்களும் அதனிடமே குவிய வழிவகுத்துவிட்டன. மாநிலங்களுடைய சட்டமியற்றும் அதிகாரங்களில்கூட ஒன்றிய அரசு தலையிட்டு ஆக்கிரமிக்கிறது, உதாரணம் வேளாண்மை தொடர்பாக அது இயற்றிய மூன்று சட்டங்கள். ஒன்றிய அரசு தன்னுடைய வரி அதிகாரத்தை அளவுக்கு மீறிப் பயன்படுத்துகிறது.

கப்பல்களின் சரக்குக் கட்டணம் தொடர்பான ஐஜிஎஸ்டி வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் நிகழ்வே இதற்கு உதாரணம். மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மிஞ்சும் வகையில் ஒன்றிய அரசு அடிக்கடி நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ஓய்வுபெற வேண்டிய நாளில் தண்டிப்பதற்காக, அவரை மையப் பணிக்கு மாற்றி உத்தரவிட்டது இதற்கு உதாரணம்.

ஒன்றிய அரசின் கொள்கைகள் நாடு முழுக்க ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்வு, கல்விக் கொள்கைகளைக் கொண்டுவருகிறது. ‘நீட்’, ‘நெப், ‘க்யூட்’ (NEET, NEP, CUET). மருத்துவக் கல்லூரிகளிலிலும் ஒன்றிய அரசுகளின் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள பொது நுழைவுத் தேர்வு நடத்துகிறது. புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயப்படுத்துகிறது.

கூட்டாட்சித்தன்மை சிதைக்கப்பட்டு கூட்டாட்சிக் கொள்கைகள் வலுவிழக்கச் செய்யப்படுகின்றன. இப்படியே போனால் கூட்டாட்சிமுறை என்பதே கைவிடப்பட்டு ஒன்றிய அரசின் கட்டளைப்படி நாடு முழுக்கச் செயல்பட்டாக வேண்டிய ஒற்றையாட்சி ஏகபோகமுறை அமலுக்கு வந்துவிடும். அப்படி நேரக் கூடாது என அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை மிகத் தெளிவாக நிராகரித்திருக்கிறது.

உங்களுக்கு எது வேண்டும் என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்? மனிதத்தன்மையே அற்ற, ஒற்றைத் தலைமையையும் சீர்மையையும் நாடு முழுக்கத் திணித்து, மாநிலங்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என வலியுறுத்தும் இந்தியாவா? துடிப்பான, ஒத்துழைத்துச் செயல்படக்கூடிய, வளர்ச்சிப் பாதையில் போட்டிபோடும் மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி இந்தியாவா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

பொய் சொல்லும் நிதி அமைச்சர். எவ்வளவு பெரிய வீழ்ச்சி?! அவர் தமிழர் என்பது எவ்வளவு பெரிய அவமானம்.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

இந்திரா என்ன நினைத்தார்?போக்குவரத்து கழகங்கள்அமெரிக்க ஆப்பிள் உற்பத்திஜமீன்தார் வி.பி.சிங்ஆர்பிஐவாக்கு அரசியல்பத்திரிகையாளர்கள்அணுக்கருமீனாட்சி தேவராஜ் கட்டுரைமாநில உரிமைகள்பல்லடம்பூடான்இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!வெகுஜன எழுத்தாளர்மாம்பழம்ஆண்டாள்மராத்தா சமூகம்என்.ஐ.ஏ. அருஞ்சொல் தலையங்கம்கூட்டரசுவெற்றிடம்சாதி அரசியல்ஊழியர் சங்கங்களின் இழிநிலை1963பத்து காரணங்கள்இந்தி மொழிலெப். ஜெனரல் எச்.எஸ்.பனாக் கட்டுரைபஜாஜ் ஸ்கூட்டர்கள்காந்தி சாவர்க்கர் பெரியார்செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்பெலகாவி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!