கட்டுரை, அரசியல், வரலாறு 5 நிமிட வாசிப்பு

மக்கள் முன்னுள்ள தலையாய கடமை

பி.ஆர்.அம்பேத்கர்
26 Nov 2023, 5:00 am
0

ம்பேத்கர் உரைகளில் முக்கியமான ஒன்று, டிசம்பர் 25, 1949ல் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரை. வரலாற்று மாணவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், படைப்பாளிகள் என்று எவரும் வாசிக்க வேண்டிய அவ்வுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை 'அருஞ்சொல்' வாசகர்களுக்காக இங்கே அளிக்கிறோம்.

நாம் ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம்.

அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர், ஒரு ஓட்டு, ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.

இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்? நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம்?

இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.

சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்

அடுத்ததாக நாம் விரும்புவது, சகோதரத்துவம் என்ற தத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே. சகோதரத்துவம் என்றால் என்ன? எல்லா இந்தியர்களும் சகோதரர்களே என்ற உணர்வு. அதாவது, இந்தியர்கள் ஓரினத்தவராக இருப்பார்கள் எனில்.

இந்தத் தத்துவம்தான் சமூக வாழ்க்கைக்கு ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தருகிறது. எனினும் அடைவதற்கு மிகவும் கடினமானது அது.

எவ்வளவு கடினமானது அது என்பதற்கு ஜேம்ஸ் பிரைஸின் நூலிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். "சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புராட்டஸ்டண்டு திருச்சபை ஒன்று தனது பிரார்த்தனைகளை மறுபார்வையிட்டுக் கொண்டிருந்தது. பிரார்த்தனை வாசகங்களில் எல்லா மக்களுக்குமான பிரார்த்தனை வாசகத்தைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ‘ஓ தேவனே, எமது தேசத்தை ஆசிர்வதியும்!’ என்ற வாசகத்தை ஒரு குருமார் பரிந்துரைத்தார். இந்த வாசகத்தைச் சட்டென்று ஏற்றுக்கொண்டார்கள். அடுத்த நாள் இந்த வாசகம் மறுபரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டபோது ‘தேசத்தை’ என்ற சொல்லுக்குச் சாதாரண மக்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. தேசிய ஒருமைப்பாடு என்பதை அந்தச் சொல் மிகவும் குறுக்குவதாகக் கருதினார்கள். எனவே, அந்தப் பிரயோகம் தவிர்க்கப் பட்டது, அதற்குப் பதிலாக ‘ஓ தேவனே, ஐக்கிய (அமெரிக்க) மாகாணங்களை ஆசிர்வதியும்’ என்ற வாசகம் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது."

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அமெரிக்காவும் இந்தியாவும்

அந்தச் சமயத்தில் அமெரிக்க மக்களிடையே மிகவும் குறைவாகவே ஒருமைப்பாடு நிலவியது. அமெரிக்க மக்களே தங்களை ஒரே தேசமாக நினைக்காதபோது, இந்தியர்கள் தங்களை ஒரே தேசத்தினராக நினைப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்! ‘இந்திய மக்கள்’ என்ற பிரயோகத்தை அரசியல் பார்வை கொண்ட இந்தியர்கள் பலர் வெறுத்த நாட்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பிரயோகத்தைவிட ‘இந்திய தேசம்’ என்ற பிரயோகத்தை அவர்கள் விரும்பினார்கள்.

நாமெல்லாம் ஒரே தேசத்தினர் என்று நம்புவதன் மூலம் பெரும் மாயையையே நாம் போஷிக்கிறோம் என்று நான் நம்புகிறேன். ஆயிரக் கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரே தேசமாக ஆவார்கள்?

தேசம் என்ற சொல்லின் சமூகவியல்ரீதியிலான அர்த்தத்திலும் உளவியல்ரீதியிலான அர்த்தத்திலும் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவெடுக்கவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரே தேசமாக நாம் உருவாவதன் அவசியத்தை உணர்வதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தீவிரமாக நாம் சிந்திப்போம்.

இந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும், அமெரிக்காவை விடவும். அமெரிக்காவில் சாதிப் பிரச்சினை என்பதே இல்லை. இந்தியாவிலோ சாதிகள் இருக்கின்றன. சாதிகள் என்பவை தேசத்துக்கு எதிரானவை. சமூக வாழ்வில் அவையெல்லாம் பிளவை ஏற்படுத்துகின்றன என்பதே அதற்கு முதற்காரணம்.

அது மட்டுமல்லாமல், அந்த சாதிகளுக்கிடையே பொறாமையையும் ஆழ்ந்த வெறுப்பையும் உருவாக்குவதாலும் சாதிகள் தேசத்துக்கு எதிரானவையாக இருக்கின்றன.

உண்மையிலேயே ஒரு தேசமாக நாம் உருவெடுக்க விரும்பினால் இந்த முட்டுக்கட்டைகளையெல்லாம் நாம் தாண்டிவந்தாக வேண்டும். ஏனென்றால், தேசம் என்ற ஒன்று இருந்தால் தான் சகோதரத்துவம் என்பது நிதர்சனமாகும்.

சகோதரத்துவம் என்பது இல்லையென்றால் சமத்துவம், சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் மேற்பூச்சுக்களைப் போலவே ஆகிவிடும்.

இதையும் வாசியுங்கள்... 28 நிமிட வாசிப்பு

அம்பேத்கரின் 10 கடிதங்கள்

பி.ஆர்.அம்பேத்கர் 17 Apr 2022

ஆற்ற வேண்டிய பணிகள்

நாம் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்த என் சிந்தனைகள் இவைதான். இந்தச் சிந்தனைகள் சிலருக்கு உவப்பாக இல்லாமல் போகலாம். ஆனால், அரசியல் அதிகாரம் என்பது நீண்ட காலமாக ஒருசிலரின் ஏகபோகமாக இருந்தது என்றும், மக்களில் பலர் சுமை சுமக்கும் விலங்குகள் போல மட்டுமல்ல, இரையாகும் விலங்குகள் போலவும் நடத்தப்பட்டார்கள் என்றும் சொன்னால் அதை யாரேனும் மறுக்க முடியுமா? இந்த ஏகபோகம்தான், மேலான வாழ்வுக்கான சாத்தியங்களை அந்த மக்களிடமிருந்து பறித்தது.

அது மட்டுமல்ல, வாழ்க்கை என்பதன் சாரம் எதுவோ அதையும் அவர்களிடமிருந்து உறிஞ்சியெடுத்துவிட்டது. நசுக்கப்பட்ட இந்த மக்களெல்லாம் காலம்காலமாக மற்றவர்களால் ஆளப்படுவதில் களைத்துப்போய்விட்டார்கள், தாங்களே ஆள்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எது நல்லது?

நசுக்கப்பட்ட இந்த மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வு வர்க்கப் போராட்டமாகவோ வர்க்கப் போராகவோ மாறிவிட அனுமதிக்கக் கூடாது. அது நாடாளுமன்றத்திலும் பெரும் பிளவை ஏற்படுத்திவிடும். அதுவே ஊழி முடிவாகவும் ஆகிவிடும். பிளவுண்ட மக்கள் மன்றம் என்பது வெகு நாட்கள் நீடிக்க முடியாது. எனவே, அந்த மக்களின் லட்சியங்கள் சீக்கிரம் நிறைவேற்றப்படுவதென்பது குறிப்பிட்ட அந்த சிலருக்கும் நல்லது; தேசத்துக்கும் நல்லது; நாம் சுதந்திரத்தைப் பேணுவதற்கும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பைத் தொடர்வதற்கும் நல்லது.

வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிறுவுவதன் மூலமே இதைச் சாதிக்க முடியும். அதனால்தான் இதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறேன்.

இந்த அவைக்கு இதற்கு மேலும் களைப்பூட்ட நான் விரும்பவில்லை. சுதந்திரம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்பதில் சந்தேகமேயில்லை. என்ன பிரச்சினை என்றாலும் ஆங்கிலேயரின் மீது பழிபோடும் வாய்ப்பை சுதந்திரத்தின் மூலம் நாம் இழந்துவிட்டோம். இனிமேல் என்ன பிரச்சினை என்றாலும், அதற்கு நம்மையன்றி வேறு யாரும் பொறுப்பல்ல.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ரவிக்குமார் 07 Dec 2022

மக்களின் உறுதிப்பாடு

எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாத அபாயம் இப்போது நிலவுகிறது. காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நமது மக்கள் புதுப்புதுச் சிந்தாந்தங்களால் உந்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது.

மக்களுக்கான அரசை அமைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே நடத்தும் அரசாக இருப்பதில் அவர்களுக்கு ஈடுபாடு ஏதும் இல்லை. ‘மக்களால், மக்களே, மக்களுக்காக நடத்தும் அரசு’ என்ற தத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பை நாம் பாதுகாக்க விரும்பினால், நமது பாதையில் குறுக்கே கிடக்கும் தீமைகளை அடையாளம் காண்பதை நாம் தாமதப்படுத்தக் கூடாது, அவற்றை அகற்றுவதில் நாம் பலவீனமாக இருந்துவிடக் கூடாது.

ஏனென்றால், அந்தத் தீமைகள்தான் மக்களால் நடத்தப்படும் அரசைவிட, மக்களுக்காக நடத்தப்படும் அரசை நாட வைத்துவிடும். எனவே, நாட்டுக்குப் பணியாற்றுவதற்கு அந்தத் தீமைகளை அகற்றுவதே வழி!

- © ‘தி இந்து’ 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

புனா ஒப்பந்தம்: தலித்துகளை ஏமாற்றினாரா காந்தி?
எப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?
அரசமைப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறோம்?
அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?
அம்பேத்கரின் 10 கடிதங்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: ஆசை

1


கற்பவர்களின் சுதந்திரம்நடப்பு நிகழ்வுகள்பாலியல் வழக்குபணப் பரிவர்த்தனைலோக்நீதிபுறக்கணிப்புவடகிழக்கு: புதிய அபிலாஷைகள்கூட்டுறவுபகுஜன்கல்வி மொழிசமஸ் - பிரசாந்த் கிஷோர்ஜி ஜின்பிங்கலால் வரிமாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவுகரன் தாப்பர் பேட்டிஜொமெட்டோவிவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்samas interviewஉலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022தமிழ்க் கல்விஎழுத்து என்றொரு வைத்தியம்thiruma interviewஇறப்பு - வறுமை - வரி வருவாய் கணக்கிடுவது எப்படி?காலை உணவுத் திட்டம்குறுந்தொகைதிபெத்வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைதலைநகரம்மகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!மசோதாக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!