கட்டுரை, அரசியல், வரலாறு 5 நிமிட வாசிப்பு

புனா ஒப்பந்தம்: தலித்துகளை ஏமாற்றினாரா காந்தி?

அ.அண்ணாமலை
25 Sep 2023, 5:00 am
2

காந்தி மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, “பூனா ஒப்பந்தத்தின் மூலம் தலித்துகளுக்குக் கிடைக்கவிருந்த அதிகாரத்தை அவர் சீர்குலைத்துவிட்டார்” என்பது ஆகும். மெத்த படித்த அறிவுஜீவிகளும்கூட பலர் காந்தி - அம்பேதர் இடையில் பூனாவில் நடந்த உரையாடலையும், அதன் தொடர்ச்சியாக உருவான ‘பூனா ஒப்பந்தம்’ தொடர்பாகவும் இந்த விஷயத்தில் காந்தி தவறிழைத்துவிட்டார் என்று பேசுவதைக் காண முடிகிறது. இதற்கான காரணம், பூனா ஒப்பந்தம் தொடர்பாக முழுமையான தகவல்களை அவர்கள் அறிந்திராதவதும், இன்றைய ஆட்சி நிர்வாக அமைப்பின் பின்னணியில் அந்தக் கால ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுமே ஆகும்.

தன்னுடைய அரசியல் வாழ்வின் பிரதான இலக்குகள் என்று மூன்று விஷயங்களை காந்தி குறிப்பிட்டார். மத ஒற்றுமை, சுதேசிக்கு இணையாக அந்த மூன்றில் ஒன்று, தீண்டாமை ஒழிப்பு. இந்திய வரலாற்றில் தீண்டாமைக்கு எதிராகக் களத்தில் போராடியவர்களில் - தலித்துகள் அல்லாத தரப்பில் - காந்திக்கு இணையாக ஒருவரைச் சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட காந்தி எப்படி தலித்துகளுக்குக் கிடைக்கவிருக்கும் அதிகாரத்தைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பார்? 

உண்மையில் பூனா ஒப்பந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பார்ப்போம்!

காந்தியின் நிலைப்பாடு

பிரிட்டிஷ் அரசாங்கம் தலித்துகளுக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முனைந்தபோது, அந்த ஏற்பாட்டை எதிர்த்து காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். என்ன காரணம்?

காந்தி உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரும், உண்ணாவிரதம் இருக்கும்போதும் தன்னுடைய கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டுவந்துள்ளார். “நான் தனித் தொகுதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறேன். இடஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

காந்தி உண்ணாவிரதம் தொடங்கக் காரணம், 1931இல் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டின்போது தலித்துகளுக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட  வேண்டும் என்று அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பிரிட்டிஷாரிடம் கேட்கிறார்கள். மதச் சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதிகள் வழங்குவது போன்றே தலித்துகளுக்கும் தனித் தொகுதிகள் வழங்க ஆங்கில அரசாங்கம் திட்டமிடுகிறது. இதில் காந்தி முரண்பட காரணம், தலித்துகளை ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தும் பிளக்கும் முன்னெடுப்பாக இது அமைந்துவிடும் என்பதே ஆகும்.

முதலில் இந்த வட்ட மேஜை மாநாட்டின் மைய நோக்கம் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘இந்தியா என்ற நாடு தனித் தனிப் பிரிவுகளாக, குழுக்களாகப் பிரிந்துதான் கிடக்கிறது. அவர்களை ஒற்றுமைப்படுத்தவே முடியாது. ஆகவே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கை என்பதை நமக்குத் தெரிவிப்பதற்காகக் கூட்டப்பட்டதுதான் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு.

இரட்டைமலை சீனிவாசன் மற்றும் இதர தலைவர்களுடன்

வட்ட மேஜை மாநாட்டின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் நாங்கள் வெறுங்கையுடன் திரும்பிவிட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். சிறிது நாளில் தலித் மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனித் தொகுதிகளை உள்ளடக்கிய ஆணையை ஆங்கில அரசாங்கம் வெளியிடுகிறது.

இது நம்மிடையே பிரிவினையை வளர்க்கும். மதச் சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், அவர்கள் காலங்காலமாக அந்த மதத்தில்தான் இருக்கப்போகிறார்கள். ஆனால், தலித் மக்கள் இந்து மத அமைப்புக்குள் இருப்பவர்கள். தீண்டாமை அநீதி. ஆகவே, அதுதான் அகற்றப்பட வேண்டுமே தவிர, தனித் தொகுதிகள் என்ற பெயரில் அவர்களைத் தனித்தீவாக ஆக்கிவிடக் கூடாது. இந்த ஏற்பாடு தலித் மக்களை அப்படி ஆக்கிவிடும் என்பதே காந்தியின் பார்வையாக இருந்தது. இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை காந்தி எதிர்க்கவில்லை என்பதே ஆகும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஆங்கில அரசாங்கம், உண்ணாவிரதம் பற்றிக் குறிப்பிட்டு காந்தியடிகள் எழுதிய கடிதத்திற்கு பதிலில் “சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் முரண்பாடான கோரிக்கைகளைப் பரிசீலித்து திறந்த மனதுடன் அரசாங்கம் செய்த முடிவை மாற்றுவதற்கு அந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பேசி உடன்பாட்டுக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்கத்தின் முடிவை மாற்றுவது சாத்தியப்படும். இதுதான் உங்கள் கடிதத்திற்கு என்னுடைய பதில்” என்று பிரிட்டிஷ் பிரதமர் மெக்டொனால்டு கூறிவிட்டார். ஆங்கில அரசுக்கு முரண்பாடான கருத்துகளைக் கொண்டவர்கள் உட்கார்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாது என்று மிகவும் நம்பிக்கையோடு இந்த உறுதிமொழியைக் கொடுத்துவிட்டார்கள்.

தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த எம்.சி.ராஜா இந்தப் பிரச்சினை உருவாக்கவிருந்த சிக்கலை முழுமையாக உணர்ந்தவர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பார்வை காந்தியின் பார்வைக்கு நெருக்கமானதாக இருந்தது. “ஒருமனதான உடன்படிக்கை (கருத்து) என்று பேசுவது இந்தியர்களைப் பிரித்து வைக்கின்ற தந்திரம், தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டுத் தொகுதி முறையை ஆதரிக்கிறார்கள். ரிஷர்வேஷன் உள்ள கூட்டுத் தொகுதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்ற பிரதமர் ஏன் கூறுகிறார்? பிரதமரின் தீர்ப்பு எங்களை சமூகத்திலிருந்து பிரிக்கிறது. அரசியலில் தீண்டத்தகாதவர்களாகச் செய்கிறது. சாதி இந்துக்கள் எங்கள் வாக்குகளைக் கேட்டு வருவார்கள் என்பதால், இன ஒதுக்கல் கிடையாது என்று பிரதம மந்திரி கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆம், அவர்கள் எங்கள் வாக்குகளைக் கேட்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களுடைய வாக்குகளைக் கேட்டுப் போகத் தேவை இல்லை. இது பொதுவான குடியுரிமை ஆகுமா?”

உண்ணாவிரதத்தின் தாக்கம்

காந்தியின் உண்ணாவிரதத்தின் தொடர்ச்சியாக அம்பேத்கர் ஒரு புதிய ஏற்பாடு நோக்கி வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்னொரு பக்கம் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் ‘தீண்டாமை ஒழிப்பு’ தொடர்பில் சிந்திக்கவும் விவாதிக்கவும் வைத்தார். பன்னெடுங்காலமாகப் புழங்கிய ஒரு கொடும்பழக்கத்தை அடியோடு அகற்றுவதற்கான வாய்ப்பாக இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டார் காந்தி. ஒட்டுமொத்த இந்துக்களின் மனச்சாட்சியையும் தட்டி எழுப்பிவிட்டார். ஒரே ஒருவர் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள் அது நாள் உள்ளே நுழைய முடியாதவர்களாக இருந்தவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவே மின்சாரம் பாய்ச்சப்பட்டதுபோல உணர்ந்தது.

காந்தியின் உண்ணாவிரதம் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் என்று அனைத்து சார்பாரும் இதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. கூடி விவாதிக்கிறார்கள். இரு சாராரும் விட்டுக்கொடுக்கிறார்கள். முடிவாக ஒரு உடன்பாட்டுக்கு வருகிறார்கள். அந்த உடன்பாடு காந்தியோடு கலந்து ஆலோசித்துத்தான் ஏற்படுகின்றது.

இரட்டை வாக்குரிமை அல்ல; ஆனால், தொகுதிகள் இரட்டிப்பானது!

பிரிட்டிஷார் எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் அன்றைய தினம் இந்து உடன்பாட்டை ஏற்றுக்கொண்டது.

இந்த உடன்படிக்கையின் விபரங்களின்படி தனித் தொகுதிகள் என்கிற முறையில் தேர்தல்கள் நடைபெறும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தலித்துகள் ஒற்றை வாக்குச் சீட்டு நான்கு வேட்பாளர்களைப் பட்டியலுக்குத் தேர்வுசெய்வார்கள். அந்த முதனிலைத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற நான்கு நபர்கள் பொதுத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களாக இருப்பார்கள்.

இந்த உடன்பாட்டின்படி மொத்தத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அம்பேத்கர் மாநிலவாரியாக மக்கள்தொகை அடிப்படையில் மாகாண சட்டசபைகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கேட்ட இடங்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இடங்கள் மற்றும் இந்த உடன்படிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் என்ற மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

மாகாண சட்டசபைகளில் 71 இடங்கள் என்பதற்கு மாற்றாக 148 இடங்கள் கிடைத்தன. ஆனால், இரட்டை வாக்குரிமை மாற்றியமைக்கப்பட்டு தனித் தொகுதி எனும் ஒதுக்கீட்டு முறை ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த உடன்பாட்டை ஆதரித்து பம்பாயில் செப்டம்பர் 27ஆம் நாளன்று நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் பேசுகிறார். “இந்தியாவின் தலைசிறந்த மனிதருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். அதேசமயத்தில் என்னுடைய சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்புடன் மகாத்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்டப் பிரிவினருடைய நலன்களுக்கு அவசியமான பாதுகாப்பையும் அமைத்தோம்.

சமரசப் பேச்சு வார்த்தைகள் மகாத்மா காந்திஜியால்தான் வெற்றியடைந்தன. அவரைச் சந்தித்துப் பேசியபொழுது அவருக்கும் எனக்கும் உள்ள பொதுவான அம்சங்களை நினைத்து நான் அதிகமாக வியப்படைந்தேன். வட்ட மேஜை மாநாட்டில் எனக்கு எதிரான நிலையெடுத்தவர் என் உதவிக்கு வந்தார், மாற்றுத் தரப்புக்கு அல்ல என்பது எனக்கு வியப்பளிக்கிறது. சிக்கலான நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக நான் காந்திஜிக்கு நன்றி செலுத்துகின்றேன். காந்திஜி வட்ட மேஜை மாநாட்டில் இந்த நிலையை எடுக்கவில்லை என்பதைப் பற்றி நான் வருந்துகின்றேன். அன்று அவர் என் கருத்தை அனுதாபத்தோடு பரிசீலித்திருந்தால் இந்த அக்னிப் பரீட்சையைத் தவிர்த்திருக்க முடியும், ஆனால், அவை கடந்த கால விஷயங்கள்.

இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். தாழ்த்தப்பட்டப் பிரிவினர் எல்லோரும் இந்த உடன்பாட்டை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியைப் பத்திரிகைகள் எழுப்பியுள்ளன. என்னைப் பொறுத்தமட்டில் என் தலைமையிலுள்ள கட்சியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உடன்பாட்டை ஆதரிக்கிறோம். இங்கு வந்திருக்கின்ற எனது நண்பர்கள் சார்பிலும் உடன்பாட்டுக்கு ஆதரவை அறிவிக்கின்றேன். இதைப் பற்றி சந்தேகம் வேண்டாம். இந்து சமூகம் இந்த உடன்பாட்டைப் புனிதமாகக் கருத வேண்டும். கௌரவமான உணர்ச்சியுடன் அதை அமுலாக்க வேண்டும்.”

அம்பேத்கரின் பேச்சு மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் வந்தது.

அம்பேத்கரின் நிலைபாடு

அன்றைய சூழலில் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள், இந்து அமைப்புகள், தாழ்த்தப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று அனைவரும் உட்கார்ந்து பேசி ஓர் உடன்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் ஒவ்வொரு குழுவினரும் எவ்வளவு தூரம் போராடியிருப்பார்கள், விட்டுக்கொடுத்திருப்பார்கள்? இந்தியச் சமூகம் எவ்வளவு சிக்கல்களைக் கொண்டது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்கால இந்திய சமூகத்தையும், அதனுடைய வளர்ச்சியையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான் அந்த உடன்படிக்கை. இவையெல்லாம் 1932இல் முடிந்துவிட்டது.

ஆனால், 1945இல் அம்பேத்கர் ‘வாட் காங்கிரஸ் அண்ட் காந்தி ஹேவ் டன் ஃபார் அன்டச்சபிள்ஸ்’ (What Congress and Gandhi have done for Untouchables) புத்தகத்தில் இந்த உடன்படிக்கையையும், காந்தியையும், காங்கிரஸையும், இந்த உண்ணாவிரதத்தையும் கடுமையாகச் சாடுகிறார். அந்த உண்ணாவிரதத்தில் எந்தப் புனிதமும் கிடையாது, அந்த உண்ணாவிரதம் தீண்டத்தகாதவர்களின் நன்மைக்காக இருக்கவில்லை. ஆதரவற்ற மக்களுக்கு ஆங்கில அரசாங்கத்தால் கிடைத்த சட்டரீதியான பாதுகாப்பை பறிக்க அவர் எடுத்துக்கொண்ட மோசமான வழிமுறை என்று விவரிக்கிறார்.

இதுதான் இன்றைய தலைமுறையினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அடிப்படை. ஆனால், அதே அம்பேத்கர் 1954இல் ‘பிபிசி’க்கு ஒரு பேட்டி அளிக்கின்றார். அதில் அவரிடம், “புனா ஒப்பந்தத்தில் தங்களை நிர்பந்தப்படுத்தினார்களா?” என்று கேட்கிறார்கள். அதற்கு அம்பேத்கர் அளிக்கும் பதில்: “என்னுடைய மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை, நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறினேன். காந்தி அதை ஒப்புக்கொண்டார் (I dictated Gandhi). மாளவியா மற்றும் சில தலைவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்கள். நான் தனித் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆனால், ஒரு மாற்றுத் திட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தேன். தனித் தொகுதி என்பதை இதுபோல மாற்றிக் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதன்படி தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பின் சார்பாக நிற்கும் வேட்பாளர்கள் முதலில் தங்களுக்குள் ஓட்டளித்து நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு முதன்மை தேர்தல் போன்றது (Primary election).  இந்த நான்கு பேரும் தேர்தலில் நிற்பார்கள். இந்த நால்வரில் சிறந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீங்களாக ஒருவரை நிறுத்தக் கூடாது. இந்த முறை மூலம் பாராளுமன்றத்தில் எங்களுடைய குரலை ஒலிக்க முடியும். பிறகு காந்தி இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால், இதன் பலனை 1937இல் நடந்த ஒரேயொரு பொதுத் தேர்தலில்தான் அனுபவித்தோம் (But we have benefited in only one election in 1937).”

ஆக, புனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் எவ்வாறு தயாரானது, அதில் நடந்த விஷயங்களை அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார். இதைப் படிப்பவர்கள் இந்த வரலாற்று உண்மைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதில் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

அன்று ஓட்டுரிமை சொத்து வைத்திருந்தவர்களுக்கும், படித்த, வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. அப்படி எடுத்துக்கொண்டால் எத்தனை சதவீதம் தலித் மக்கள் வாக்குரிமை பெற்றிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சைமன் கமிஷன் முன்னர் அம்பேத்கர் கொடுத்த வாக்குமூலத்தில், “வயது வந்தோருக்கான வாக்குரிமையோடு எங்களுக்கென்று இடஒதுக்கீடு வேண்டும்” என்று கேட்டார். “வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, “எங்களுக்கென்று தனித் தொகுதி வேண்டும் என்று கேட்போம்” என்றார்.

ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினால் இடஒதுக்கீடு போதும் என்பதே சைமன் கமிஷன் முன் அம்பேத்காரின் நிலைப்பாடு. புனா ஒப்பந்தத்திலும் நடந்தது அதுதான். இதில் குறை சொல்வதென்றால் யாரைக் குறை சொல்வது?

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?

அ.அண்ணாமலை

அ.அண்ணாமலை, காந்தியர். ஆய்வாளர். டெல்லியிலுள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர். தொடர்புக்கு: nationalgandhimuseum@gmail.com


4


1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Natarajan Srinivasan   2 months ago

1) தனித்தொகுதிகள் அளிப்பதால் தலித் மக்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்காது; காரணம்- ‘தனிப்பட்ட வாக்காளர்’ முறையின்படி, தாழ்த்தப்பட்டோருக்கு இரண்டு வாக்குரிமைகள்! தம் இனத்தவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை; பொது வாக்குரிமையின் காரணமாகத் தொகுதியில் நிற்கும் எந்தவொரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை! பொது வாக்குரிமை இல்லையென்றால் காந்தியடிகள் பயந்தது போல நடந்திருக்கக்கூடும்- பொது வாக்குரிமை இருந்ததனால் தலித் மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறியிருக்க வாய்ப்பில்லை. காந்திக்குப் பதிலளிக்கும் விதத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் இராம்சே மெக்டோனால்டு இதைத் தெளிவாக விளக்கியிருந்தார். 2) தலித் மக்கள் மீதான காந்தியடிகளின் உண்மையான எண்ணம் என்னவென்பதை அறிய, கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் உதவும்: அ) தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, எத்தனை முறை காந்தியடிகள் சத்தியாகிரகம் செய்தார்? ஆ) 1937இல் பரபரப்பாகப் பேசப்பட்ட "கரே சம்பவம்" என்றால் என்ன? பம்பாய் மாகாண அமைச்சரவையில் தலித்தைச் சேர்த்ததற்கு காந்தியடிகளின் எதிர்வினை என்ன? இ) ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் அளவில் வசூலிக்கப்பட்ட "திலக் சுயராஜ்ஜிய நிதி"யிலிருந்து தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.43,381/-. ஏனோ? ஈ) தனி வாக்காளர் முறை இரத்து செய்யப்பட்ட பிறகு, மதறாஸ் மாகாணத்தில் இராவ் பகதூர் இராஜா அவர்கள் கொண்டுவந்த தலித்களின் ஆலய நுழைவு குறித்த மசோதாவில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? தன் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர்களை இம்மசோதா குறித்துத் தன்னிச்சையாக முடிவெடுக்கச் சம்மதித்ததா காங்கிரஸ்? இறுதியில் என்னவாயிற்று? கட்டுரை ஆசிரியர் இவை குறித்தும் எழுதியிருந்தால், தலித் மக்களின் பிரச்சனை குறித்த காந்தியடிகளின் நிலை என்னவென்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். "நான்கை உனக்குத் தருகிறேன்; மூன்றை எனக்குத் தா!" என்று அவ்வையார் சமத்காரமாகப் பாடியதைப் போன்றதே பூனா ஒப்பந்தம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 months ago

ஒரு நெடுநாள் வழக்கை அம்பேத்காரை வைத்தே முடித்துவிட்டீர்கள். தொடர்ந்து ஊடகங்களில் எழுதுங்கள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

குறைந்த பட்ச ஆதரவு விலைவிளம்பரம்பெயர் மாற்றம்தலைமைச் செயல் அதிகாரிகிராமக் கூட்டுறவுபுனா ஒப்பந்தம்மனிதச் சமூகம்வாழ்க்கை வரலாறுராமேசுவரம்கர்த்தம் நாதம்சர்வதேச உறவுநினைவு நாள்விழுமியங்களும் நடைமுறைகளும்சமஸ் - ஜெயமோகன்எஸ்.அப்துல் மஜீத் பேட்டிபா.வெங்கடேசன்திறன் வளர்ப்புஅசோகர் கல்வெட்டுகள்பாலஸ்தீன விடுதலை இயக்கம்லாலுகிறிஸ்தவர்பொதுக்கூட்டம்சுதந்திரப் போராட்டம்முரண்களின் வழக்குமோடியின் செயல்திட்டம்மீன்கள்கூட்டுறவு முறையிலான சூரிய ஒளி மின் உற்பத்திதர்ம சாஸ்திர நூல்பஞ்சாப் முதல்வர்ஆழி செந்தில்நாதன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!