கட்டுரை, அரசியல், வரலாறு 5 நிமிட வாசிப்பு

எப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?

ரவிக்குமார்
24 Sep 2023, 5:00 am
0

காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தில், பாஜகவை நிலைகுலைய வைக்கும் ஒரு கேள்வியை எழுப்பினார். தற்போதைய இந்திய அரசின் ஆட்சி நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட துறைச் செயலர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (ஓபிசி) என்பதைக்  குறிப்பிட்டார். “நாட்டின் மொத்த பட்ஜெட்டில், இந்த மூவரும் 5%ஐ மட்டுமே கையாள்கிறார்கள். நாட்டின் மக்கள்தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு இது மாபெரும் அவமானம்” என்று குற்றஞ்சாட்டினார் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி இப்படிப் பேசியபோது, சொல்லாமல் உணர்த்திய விஷயமும் உண்டு. ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கே இந்நிலைதான் என்றால், தலித்துகள், பழங்குடியினர் சமூகங்களின் நிலை என்ன?’ என்பதே அது. இதில் சந்தேகம் என்ன? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலையைவிடவும் மோசமான நிலையில்தான் தலித்துகள், பழங்குடியினர் நிலை இருக்கிறது. 

செயலர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல; அமைச்சர்களின் எண்ணிக்கையிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலையைவிடவும் மோசமான நிலையில்தான் தலித்துகள், பழங்குடியினர் பிரதிநிதித்துவம் உள்ளது. 

இன்றைய பாஜக அமைச்சரவை பிரதமரை உள்ளடக்கி 29 கேபினட் அமைச்சர்களும், சுதந்திரமான அதிகாரம் கொண்ட 3 இணை அமைச்சர்களும்; 44 இணை அமைச்சர்களும் என  ஒட்டுமொத்தமாக 76 அமைச்சர்களைக் கொண்டிருக்கிறது. 

2001 கணக்கின் அடிப்படையில் இந்திய மக்கள்தொகையில் 16.2% பேர் தலித்துகள்;  8.2% பேர் பழங்குடியினர். இரு தரப்பையும் சேர்த்தால் 24.2% பேர். 

மக்கள்தொகைக்கு ஏற்ப பிரநிதித்துவம் அமைச்சரவையில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால், கேபினட் அமைச்சர்கள் 29 பேரில் 5 பேர், இணை அமைச்சர்களில் 8 பேர் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, கேபினட் அமைச்சர்களில் 2 பேர், இணை அமைச்சர்களில் 3 பேர் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

ஆனால், தற்போது கேபினட் அமைச்சர்களில், வீரேந்திர குமார் மட்டும்தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் எனத் தெரிகிறது. அதேபோல, அர்ஜுன் முண்டா ஒருவர் மட்டும்தான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. 

2021இல் மோடி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது 12 தலித் சமூக  அமைச்சர்களும், 8 பழங்குடி சமூக அமைச்சர்களும் இருப்பதாக பாஜக அரசால் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் இணை அமைச்சர்களாகவே நியமிக்கப்பட்டனர். நம்முடைய அமைப்பில் இணை அமைச்சர்கள் எனும் பொறுப்புக்கான அதிகாரம் மிகக் குறைவு; கிட்டத்தட்ட அது அடையாளபூர்வ பதவியாகவே இருக்கிறது.

இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தலித்துகள், பழங்குடியினருக்கான  இட ஒதுக்கீடு இருந்தாலும் அமைச்சரவையில் இட ஒதுக்கீடு இல்லை என்பதே ஆகும். 

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஆட்சி மாற்றம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப்பற்றி ஆராய்வதற்காக் கூட்டப்பெற்ற வட்ட மேசை மாநாடுகளின்போதே இந்தப் பிரச்சனை பேசப்பட்டது. அமைச்சரவையிலும் எஸ்சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கர் வலியுறுத்தினார். ” வட்ட மேசை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின் போது தொடக்கத்திலிருந்தே நான் ஒன்றை வலியுறுத்திக் கொண்டிருந்தேன்; அதாவது தீண்டாத மக்களுக்குச் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை இருந்தால் மட்டும் போதாது. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் உரிமை வேண்டும் என்றேன்” என அம்பேத்கர் அதைப் பற்றிக் கூறினார் (காண்க: ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூல்). 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இதற்கான காரணங்களையும் அம்பேத்கர் விளக்கினார்: “தீண்டாத மக்களின் துன்ப துயரங்களுக்கு மோசமான சட்டங்கள் ஒரு காரணம் என்றால், இந்துக்களின் பிடியிலிருக்கும் நிர்வாகத்தின் பகைமை உணர்ச்சி அதைவிடவும் முக்கியக் காரணம். இந்துக்கள் தீண்டாத மக்களுக்கு எதிராகக் காலங்காலமாய் வளர்த்துக்கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சிகளை நிர்வாகத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள். அரசுப் பணிகளில் தொடர்ந்து இந்துக்களே இடம்பெற்றிருக்கும் வரை, காவல் துறையிடமிருந்து பாதுகாப்போ, நீதித் துறையிடமிருந்து நீதியோ, நிர்வாகத் துறையிடமிருந்து சட்ட வழிபட்ட நன்மையோ கிடைக்கும் என்று தீண்டாத மக்கள் ஒருநாளும் நம்புவதற்கு இல்லை. அரசுப் பணிகளைத் தீண்டாத மக்களின் தேவைகள் பால் குறைந்த பழியுணர்வும் கூடுதல் பொறுப்புணர்வும் கொண்டவையாக மாற்ற முடியும் என்று நம்புவதற்கு ஒரே ஆதாரம் உயர் நிர்வாகத் துறையில் தீண்டாத மக்களை இடம்பெறச் செய்வதுதான். இந்தக் காரணங்களால்தான் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது, தீண்டாத மக்கள் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்ததுபோலவே, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறும் தங்களது உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீண்டாத மக்களின் கோரிக்கையையும் அழுத்தம் திருத்தமாய் வலியுறுத்தினேன்!”

வட்ட மேசை மாநாடு அம்பேத்கரின் இந்தக் கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்துப் பரிசீலித்தது. ஆயினும், 1935 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அங்கமாக அதை ஆக்காமல்  ஆளுநரின் பொறுப்பில் விட்டது. “அமைச்சரவைக்கு நியமனங்கள் செய்யும்போது நம்முடைய ஆளுநர் பின்வரும் விதத்தில் தம் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கத் தம்மால் இயன்ற வரை முயற்சி எடுப்பார்; அதாவது அவரது விருப்பப்படி நிலையான பெரும்பான்மை வகிக்கக் கூடியவரைக் கலந்து ஆலோசித்துச் சட்ட மன்றத்தின் நம்பிக்கையைக் கூட்டாகப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு உடையவர்களை (நடைமுறையில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவுக்கு முக்கியச் சிறுபான்மைச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் உட்பட) நியமனம் செய்வார். இப்படிச் செய்யும்போது அவர், தம்முடைய அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டிய தேவையை எந்நேரமும் மனத்தில் கொள்வார்!" என்று ஆக்கியது. 

ஆனால், பல்வேறு காரணங்களுக்காக 1935 சட்டத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்த காங்கிரஸ் கட்சி அதன் பிறகு அரசுக்கும் தனக்கும் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தில் “மாகாண அமைச்சரவைகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளைச் சேர்த்துக்கொள்ளும்படி செய்வதற்காக மாகாண ஆளுநர்களுக்குத் தரப்பட்டிருந்த அதிகாரங்களையும் அவர்கள் செலுத்தக் கூடாது” என்பதை வலியுறுத்தி அவ்வாறே முடிவெடுக்கச் செய்துவிட்டது. 

அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் பெறும் தலித் மக்களுடைய உரிமையை 1937இல் காங்கிரஸ் பறித்ததன் பின்னணியில் காந்தி இருந்தார் என்பதுதான் வேதனையான விஷயம். இதை அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

1942இல் தீண்டாத மக்களின் அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தீண்டாத மக்களின் அரசியல் கோரிக்கைகளை எடுத்துரைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீண்டாத மக்களில் ஒருவர் காந்தியடிகளிடம் சென்று ஐந்து கேள்விகளைக் கேட்டார். “பட்டியல் சாதியினரில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ள பட்டியல் சாதி சட்டமன்ற உறுப்பினர்களிடையிலிருந்து அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்கும்படி காங்கிரஸுக்கும் மாகாணச் சட்ட மன்றங்களில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும் ஆலோசனை கூறுவீர்களா?” என்ற கேள்வியும் அவற்றில் ஒன்று. 

இதற்கு காந்தி அளித்த பதில்: “இந்தக் கோட்பாடு ஆபத்தானது. புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்குத் தரப்படும் பாதுகாப்பு அவர்களுக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்யக் கூடிய அளவிற்குப் போய்விடக் கூடாது. அமைச்சர் என்பவர் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றுள்ள உயர்ந்த மனிதராய் இருத்தல் வேண்டும். தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பு ஒன்றில் இடம்பிடித்த பிறகு ஒருவர் ஆசைப்படும் பதவிகளை அடைவதற்குத் தம்முடைய தகுதியையும் மக்கள் செல்வாக்கையுமே சார்ந்திருக்க வேண்டும்! (‘அரிஜன்’ இதழ், 1942 ஆகஸ்ட் 2) 

தகுதியற்ற தலித் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று எவரும் வலியுறுத்தவில்லை. காந்தியின் இந்தப் பதில் அவரது உள்மனதில் தலித் மக்களைப் பற்றி அவர் என்ன கருதினார் என்பதன் வெளிப்பாடாகவே இருந்தது. 

தலித் மக்களுக்கு அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் நிர்ணய சபையிலும் எழுப்பப்பட்டது.

சென்னை மாகாணத்திலிருந்து அரசியல் நிர்ணய சபையின் உறிப்பினராக இருந்த தலித் தலைவர்களில் ஒருவரான வி.ஐ.முனிசாமி பிள்ளை 1947 ஆகஸ்ட் 27 அன்று அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்யப்பட்ட ‘சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த அறிக்கை’ மீது பேசியபோது அந்த கோரிக்கையை எழுப்பினார். 

வி.ஐ.முனுசாமி கேட்டார்: “மக்கள்தொகை அடிப்படையில் நீங்கள் இடஒதுக்கீடு கொடுக்கும்போது, அதே விகிதத்தில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஐயா, அமைச்சர்களாகவும் சட்டசபை சபாநாயகர்களாகவும் பல்வேறு அலுவலகங்களுக்கு தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தங்கள் கடமைகளை ஆற்றுவதில் சமமாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை இந்நாட்டு நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்தச் சமூகங்களிலிருந்து உயர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் திறமையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பெரும்பான்மைச் சமூகங்களின் மனதில் இருக்கக்கூடாது. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, 1935 சட்டத்தின்படி ஒரு மரபு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அமைச்சரவையில் நல்ல பிரதிநிதித்துவம் பெறுவதற்கு பெரும்பான்மைச் சமூகத்தினர் எப்போதும் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்று குறிப்பிட்டார். 

முனுசாமியைப் போலவே 1949 ஆகஸ்ட் 24 விவாதத்தில் பேசிய உறுப்பினர்  எச்.ஜே.கண்டேகரும் வலியுறுத்தினார். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அமைச்சரவையில் இட ஒதுக்கீடு இல்லாததால் ஒன்றிய அமைச்சரவையில் மட்டுமின்றி மாநில அமைச்சரவைகளிலும், தலித் - பழங்குடி மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாத நிலை உள்ளது. அது இன்னமும் தலித் அல்லாதவர்களின் கருணையை மட்டுமே நம்பியதாக இருக்கிறது. 

பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியின மக்கள் உரிய பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டும் என்பதில் இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று அக்கறை காட்டுகிறது. இதற்கு ராகுல் காந்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்; காங்கிரஸ் இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கட்டும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்களுக்கு காங்கிரஸ் கொடுக்காமல் விட்ட உரிமையை இந்தத் தருணத்திலாவது கொடுக்க முன்வர வேண்டும். கடந்த காலத்தில் எம்.கே.காந்தி மறுத்ததை வரும் காலத்தில் ராகுல் காந்தி வழங்குவார் என நம்புகிறேன்! 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இறவாணம்எதிர்புரட்சி14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டா?சத்யஜித் ரே: ஓர் இந்திய இயக்குநர்வானவியல்பீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ் அருஞ்சொல் பேட்டிஊழல்கள்இளபுவ முகிலன் பேட்டிநிதியாண்டுபல்லவிசிறப்புக் கூட்டத் தொடர்கள்ளக்குறிச்சிஅரசியல் கட்சிகளின் நிலைபாலியல் வண்புணர்வுஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்?சிலுவைபெண்களின் வெயிட்டிங் லிஸ்ட்மறைந்தது சமத்துவம்தனிச் சட்டம்இடதுசாரிகள்தமிழ்நாடு முதல்வர்மதிப்புக்கூட்டு வரிஏறு தழுவுதல்விழிஞ்சம்பெரிய கோயில்ஹேக்கர்கள்சுய மெச்சுதல்மாணிக்கம் தாகூர்ஜர்னலிஸம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!