கட்டுரை, இலக்கியம், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

மனிதர்கள் மீது மரணம் இடும் முத்திரை

ஆசுதோஷ் பரத்வாஜ்
04 Feb 2023, 5:00 am
0

க்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்டது ‘மரணத்தின் கதை’ எனும் நூல். நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற ஊடகர் ஆசுதோஷ் பரத்வாஜ், வனாந்தரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்நூலில் எழுதியிருக்கிறார். முக்கியமான ஓர் ஆவணமாக வந்திருக்கும் இந்நூலைத் தன்னுடைய நல்ல மொழிபெயர்ப்பின் வழி தமிழ் வாசகர்களுக்குத் தந்திருக்கிறார் அரவிந்தன். நூலின் முக்கியத்துவம் கருதி நூலிலிருந்து ஒரு பகுதியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

வர்கள் என் குழந்தைகள். சுகுனி, சுக்தா, சூரியா, பூத்னி, லத்குனி என்று நான் அவர்களுக்குப் பெயரிட்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு முடித்ததும் இனிமேல் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். கன்ஹர் ஆற்றின் கரையில் என் குழந்தைகளுடன் நான் விளையாடுவேன் என்று சொன்னேன். சுன்சுனா மலை, எங்கள் குடிசையைச் சுற்றியுள்ள பெரிய காடு. 

நான் இப்போது உயிருடன் இல்லை. என்னுடைய ஐந்து குழந்தைகளும் என் தங்கையை வெறித்துப் பார்க்கிறார்கள். அக்காவின் குழந்தைகள் தன்னுடைய குழந்தைகளாகிவிட்டன என்பது அவளுக்குத் தெரியவில்லை. இந்தப் பருவத்தில் மழை விடாமல் பெய்கிறது. எங்களுடைய குடிசை சுத்தமாக நனைந்துவிட்டது. அவர்களுக்குப் பசிக்கிறது. என் தங்கை கட்டிலுக்குப் பக்கத்தில் இருக்கும் உடைந்த குடையை எடுத்துக்கொண்டு அவர்களைக் கன்ஹர் ஆற்றுக்கு அருகில் இருக்கும் புல்வெளிக்கு அழைத்துச் செல்கிறாள். அதுதான் இப்போது என்னுடைய நிரந்தரமான வசிப்பிடம்.

என்னுடைய துணிகள், உடைந்த பொம்மைகள், பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் என்று என்னுடைய பொருள்களை எல்லாம் என்னுடன் வைத்துப் புதைத்துவிட்டார்கள். அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு படம் மட்டும் எஞ்சியிருக்கிறது. நான் அதில் பள்ளிச் சீருடை அணிந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் அது. கிராமத் திருவிழாவில் எடுத்தது என்று நினைக்கிறேன். அல்லது வேறு எங்காவதா? என்னால் நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை.

பல இடங்களிலிருந்தும் பல பேர் இப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அப்பா குடிசைக்குள் போய் தகரப் பெட்டிக்குள் இருக்கும் ரேஷன் கார்டுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் வெளிறிப்போன அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு வந்து அவர்களிடம் காட்டுகிறார். அதை மார்புக்கு அருகில் வைத்தபடி கேமராவை நேராகப் பார்க்கும்படி அவர்கள் சொல்கிறார்கள். பிறகு என்னுடைய படத்தைப் படமெடுத்துக்கொள்கிறார்கள்.

“முதல்ல அவங்க அவளைக் கொன்னாங்க. அப்புறம் அவள் நக்சலைட்டுன்னு சொன்னாங்க. இப்போ அவளை வேசின்னு சொல்றாங்க” என்று அப்பா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் அவர் ஐந்தரை அடி உயரம் இருப்பார். இப்போது வருஷா வருஷம் ஒவ்வொரு அங்குலமாகக் குறைந்துகொண்டே வருகிறார். அம்மா எப்போதுமே கந்தலான அரிசி மூட்டை மாதிரித்தான் இருப்பாள். எங்கள் குடிசையின் சிவப்பு நிறச் சுவர்கள் மழையில் நனைந்து சாயம் போய்விட்டன. எங்கள் கிராமத்துக் குடிசைகள் பல நிறங்களில் இருக்கும். அவரவருடைய ரேஷன் கார்டின் கலரைப் போல இருக்கும். சிவப்பு கார்டு என்பது மிக மிக ஏழைகளுக்கானது. ரத்தத்தின் நிறத்துக்கும் இலவச அரிசிக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரிந்ததே இல்லை.

எங்கள் குடிசையிலிருந்து 500 அடி தள்ளி எங்கள் பக்கத்துக் குடிசை இருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி சாண்டோ என்ற இடத்தில் என்மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன. ஒன்று என்னுடைய மார்பில் பாய்ந்தது. இன்னொன்று இடுப்புக்குக் கீழே. “35 நக்சலைட்டுகளைக் கொண்ட படை”யுடன் மோதுவதற்காகப் போலீஸ் படை வந்திருந்தது. ஆனால், அவர்களுடைய தோட்டாக்கள் என்மீதுதான் மோதின. இருட்டில் இப்படி நடந்துவிட்டது என்றார்கள். 35 நக்சலைட்டுகளைக் கொல்ல அவர்கள் வெறும் மூன்று தோட்டாக்களைத்தான் சுட்டார்கள். அதில் இரண்டு என்மீது பாய்ந்தன. எப்போது என்று நினைவில்லை. அதிகாலை 3 மணி என்று அவர்கள் சொல்கிறார்கள்.

என்னுடைய சடலத்தைப் பரிசோதித்த மருத்துவர் என்னுடைய உடம்பிலும் ஆடைகளிலும் ஆண்களின் கை பட்ட அடையாளங்கள் இருந்ததாகப் பதிவுசெய்திருக்கிறார். அரசாங்க அறிக்கையில் என்னைப் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கிறார்.

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. இதைக் கேட்டால் அப்பா ரொம்ப வருத்தப்படுவார். “பூமிக்கு அடியில உனக்குன்னு ஒரு வீடு கிடைச்சது நல்லதுதான்” என்று அம்மா சொல்கிறார். “நாங்களும் உன்னோடு வந்திருக்கணும்” என்றும் சொல்கிறார். அப்படியானால் என் குழந்தைகள், அந்த ஆடுகள், எங்கே போவார்கள்? அவர்களுக்கு யாராவது வேண்டுமே. என்னைப் புதைத்திருக்கும் இடத்திற்கு வந்து அவர்கள் முகர்ந்து பார்க்கிறார்கள். என் தங்கை வந்து அவர்களை அழைத்துக்கொண்டு போவாள். ஆனால், எவ்வளவு நாளுக்கு அவளால் போக முடியும்? அவளும் இந்தக் காட்டில்தானே இருக்கிறாள்.

2011, செப்டம்பர் 1. கர்ச்சா கிராமம், சுர்குஜா 

மரணத்தைப் பற்றி எழுதுபவர். மரணச் செய்தியாளர். ஒன்பது மாதங்கள். வாழ்வின் மாபெரும் உண்மையோடு கொண்ட தொடர்பினால் ஒரு மனிதனின் வாழ்வு இவ்வளவு விரைவாகவும் தலைகீழாகவும் மாறிவிடுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் மழை பெய்துகொண்டிருந்த இருண்ட காலை நேரத்தில் தில்லியை விட்டுக் கிளம்பினேன். கையில் சில புத்தகங்கள், மடிக்கணினி, கூடவே ஆசிரியரின் அறிவுரை: “எந்தச் செய்திக் கட்டுரையும் உயிரைவிட மேலானது அல்ல.” அதன் பிறகு 275 இரவுகள். இதில் பாதி காரிலேயே கழிந்தது. அல்லது பஸ்தர், சுர்குஜா காடுகளில். பலவகையான துப்பாக்கிகள் எனக்கு நெருக்கமாகிவிட்டன. தோட்டாவின் வலிமை என்ன என்பதைப் பார்த்துவிட்டேன். தாக்குதல் நடந்த இடங்களில் வெடி மருந்துக் குப்பிகள் சிதறிக் கிடந்தன. சிறிது நேரத்திற்கு முன்பு மண்ணில் சிந்திய ரத்தத்தின் வாசனை எழுந்தது. இறந்த உடல்களை அறுக்கும் வீடியோ பதிவுகள் – பிணக்கூராய்வு என்று இது சொல்லப்படுகிறது – என்னுடைய நோக்கியா 5130 மாடல் போனில் பளிச்சிடுகின்றன. மருத்துவர்ஒரு மார்பைத் திறக்கிறார். உறை அணிந்த கையை உள்ளே நுழைக்கிறார். உள்ளே துழாவி ஒரு தோட்டாவை வெளியே எடுக்கிறார். அது ஒன்றும் மருத்துவமனை அல்ல. உறவினர்கள் அக்கம்பக்கத்துக்காரர்கள் ஆகியோர் எதிரில் பிணம் கூறுபோடப்படுகிறது.

சாவுடன் கழித்த ஒன்பது மாதங்கள். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நேர்ந்த மரணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவற்றில் கண்ணெதிரில் நடந்த ஒரே ஒரு மரணம் மட்டும் நினைவில் தங்கியிருக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் என் மடிக்கணினியில் சுமார் 60 சடலங்கள் பதிவாகியிருக்கின்றன. இவர்களில் பலருடன் என்னுடைய உரையாடல் அவர்கள் மறைந்த பிறகே தொடங்கியது. கொலை வழக்குகள் பற்றி விசாரிக்கும்போது ஒரு பத்திரிகையாளர் மேற்கொள்ளும் உரையாடல்களைப் போன்றதல்ல இது. இறந்தவர்களின் கடந்த காலத்தைப் பற்றி ஆழமாக யோசிப்பதால் உருவாகும் நெருக்கம். ஒரு கொலை எப்படி நடந்தது என்பதைக் கண்டறியும்போது இறந்தவருடைய உறவினர் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

சாதியினால் சுட்ட வடு

திருக்குமரன் கணேசன் 18 Sep 2022

உயிரிழந்தவர்களின் கடந்த காலம் என்னுடைய பிரக்ஞையில் வெடித்துச் சிதறுகிறது. இளம் காவல் அதிகாரி தன்னுடைய நெற்றியில் ரிவால்வரை வைத்துச் சுட்டுக்கொண்டார். மரணத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு அவர் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மிகவும் அமைதியாக இருந்ததாக அவருடைய மனைவி சொன்னார். அதற்கு முதல்நாள் இரவு அவர்கள் இருவரும் தங்கள் மகனுடைய பிறந்த நாள் விழாவிற்கு யாரையெல்லாம் அழைக்கலாம், என்ன உணவு சமைக்கலாம் என்று அவர்கள் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். காலையில் அலுவலகத்திலிருந்து அவர் தொலைபேசியில் பேசியபோது, உங்களுக்குப் பிடித்த ராஜ்மா செய்திருக்கிறேன் என்றார் மனைவி. “அப்படியானால் டிஃபன் அனுப்பாதே. நான் லஞ்சுக்கு வந்துடறேன்” என்றாராம் அவர்.

சில நிமிடங்களில் அவருடைய சடலம்தான் வந்தது.

அவர் மனைவி பிலாஸ்பூரில் வேலை செய்துவந்தார். அவருடன் சேர்ந்து வசிப்பதற்காக ராஜ்கருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்தார் அந்த இளைஞர். துப்பாக்கியின் விசையை இழுப்பதற்கு முன் அவருடைய மனதில் என்ன போராட்டம் நடந்திருக்கும்? 

இதே போன்றதொரு தருணத்தில்தான் யாரோ ஒருவர் பொலிடிகல் ரிப்போர்ட்டர், கிரைம் ரிப்போர்ட்டர் என்பதுபோல டெத் ரிப்போர்ட்டர் என்னும் வகையையும் ஏற்படுத்த வேண்டும் என்றார். டெத் ரிப்போர்ட்டர். டெத் நியூஸ் பீரோ சீஃப், டெத் காப்பி எடிட்டர். டெத் நியூஸ் எடிட்டர். டெத் எடிட்டர் இன் சீஃப்.

செய்திக் கட்டுரையில் வெறும் எண்ணாக இருக்கும் மரணம், செய்தியாளரின் நாட்குறிப்பின் பக்கங்களில் இடம்பெற்று அவருடைய சக பயணியாக மாறுகிறது. ஒரு மனிதர் எந்தக் கவனமும் பெறாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால், ஒரு சடலம் பலவிதமான வடிவங்கள் எடுத்துப் பார்வையாளருடன் கண்கட்டு வித்தைகளை நிகழ்த்துகிறது. 

பல்வேறு சடலங்களில் ஒன்று மட்டும் சதையைக் குத்திக் கிழிக்கும் கழுகுபோல என் தலைக்கு மேல் வட்டமிடுகிறது. அந்தச் சடலம்கூட அல்ல. பிணக்கூராய்வு அறிக்கை. அதிலுள்ள மருத்துவரின் குறிப்பு: Having diluted Vagina/ Habitual about sexual intercourse.

ஏழே ஏழு சொற்கள்.

மருத்துவர் ஒரு பெண்ணின் ‘பாலியல் நடத்தை’ குறித்து அழுத்தம் தருகிறார். பிறகு அதற்கான ‘தடய’த்தைத் தருகிறார். பிணக்கூராய்வு அறிக்கையில் மிக அரிதானது இது. அந்தப் பெண் வறுமையில் உழலும் ஓராவ்ன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவள். வடக்கு சத்தீஸ்கரில் தன்னுடைய ஐந்து ஆடுகளுடன் அவ்வப்போது விளையாடிக்கொண்டிருப்பாள். 2011, ஜூலை மாத நாளொன்றில், நான் அங்கே செல்வதற்கு 45 நாட்கள் முன்னதாக, அவள் போலீஸின் தோட்டாக்களால் கொல்லப்பட்டாள். அவளுடைய கர்ச்சா கிராமத்திற்கு நான் போனபோது அவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் வனத்தின் மீது சத்தியம் செய்து ஒரு விஷயத்தைச் சொன்னார்கள்: “அவள் நக்சலைட் அல்ல. இது வல்லுறவுக் கொலை.”

அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நான்சி ராம் கன்வரும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் விடுத்த அறிக்கையில் இப்படிக் கேள்வி எழுப்பியிருந்தார்: “பாலுறவு வைத்துக்கொள்வது அந்தப் பெண்ணுக்குப் பழக்கமானது என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை குறிப்பிடவில்லையா? அத்தனை போலீஸ்காரர்களும் அவரை ஏதோ செய்திருக்கிறார்கள் என்றால் அங்கே வீக்கம் இருந்திருக்குமே? காலையில் 3 மணிக்கு அவர் எங்கேயிருந்து வந்துகொண்டிருந்தார்?”

மரணத்தின் தன்மையையும் காரணத்தையும் பதிவுசெய்வதுதான் பிணக்கூராய்வு செய்யும் மருத்துவரின் கடமை. காயம் என்னும் பத்திக்குக் கீழே இந்த ஏழு சொற்கள் என்னும் குறியிட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. அறிக்கை தயாரித்த பிறகு யோசித்துச் சேர்த்தது என்பது கண்கூடு. கருப்பை கிழிந்திருப்பதை அறிக்கை ஒப்புக்கொள்கிறது. பிணக்கூராய்வு செய்தது முழுமையாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அதன் குறுந்தகட்டைத் தர முடியும் என்றும் அந்தப் பழங்குடி மருத்துவர் கூறுகிறார்.

இவை எல்லாமே உண்மையிலேயே நடந்தனவா?

அவளுக்குப் பதினைந்து வயதுதான் என்றும் அறிக்கை சொல்கிறது.

2011, செப்டம்பர் 1. மழை பெய்துகொண்டிருக்கிறது. அவர்கள் ஐவரும் ஒரு குடிசைக்கு அருகில் உள்ள கொட்டகையின் அருகில் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். ஐந்து குழந்தைகள். அவர்களுடைய அம்மா வேலை செய்வதற்காக வெளியே போயிருக்கிறாள். தான் வீட்டில் இல்லாதபோது மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமல் சமர்த்தாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அவர்களுக்குப் பதற்றமாக இருக்கிறது. ஆனால், அம்மா முதல் முறையாகத் தங்களைத் தனியாக விட்டுச் சென்றிருப்பதால் அவள் பேச்சை மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மழை தூறும் வானத்திற்கு அடியில் அமைதியாக அந்த ஆடுகள் நிற்கின்றன. வாழ்க்கை என்பதே மரணத்தின் தூறல்கள்தான் என்று தோன்றுகிறது.

கொட்டிலுக்குப் பக்கத்தில் வந்து அவர்களுடன் நானும் மழையில் நிற்கிறேன். காட்டுக்கு வந்து இது 15ஆவது நாள். 13ஆவது மரணம்.

இது வெறும் தொடக்கம்தான். வரும் மாதங்களில் இந்த மழை எனக்குள் கூடுகட்டி வசிக்கும் குருவிகளை எரித்து அவற்றின் பிய்ந்த சிறகுகளால் என்மீது முத்திரையிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குடிமக்களின் மீதான நிரந்தர அதிகாரத்தைக் குறிப்பதற்காக அரசு அவர்கள் வீடுகளின் முகப்பில் பொரிக்கும் முத்திரை அல்ல இது. ஒரு மனிதனை நிரந்தரமாகத் தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவராக மாற்றுவதற்காக மரணம் இடும் முத்திரை.

2012, மே 17, தண்டேவாடா 

நூல்: மரணத்தின் கதை
ஆசிரியர்: ஆசுதோஷ் பரத்வாஜ்
தமிழில்: அரவிந்தன் 
விலை: 430
பதிப்பகம்: காலச்சுவடு
 தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com 
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/u0baeu0bb0u0ba3u0ba4u0ba4u0ba9-u0b95u0ba4_1150/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0BSX96J7P/

மின்நூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0BSLSBH3G/

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: அரவிந்தன்

1

1




2

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

திருநம்பிகள்மகமாயிவெளிநாடுகள்கோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்கார்போஹைட்ரேட்தனித் தொகுதிகள்மகாஜன் ஆணையம்கபால நகரம்நாக்பூர்வரி செலுத்துபவர்கள் யார்?மூவேந்தர்கள்அருணாசல பிரதேசம்பள்ளிப்படிப்புமூன்றாவது மகன்மீனாட்சி தேவராஜ் கட்டுரைசீராக்கம்அலிகார்கள்ளக்குறிச்சி கலவரம்: காவல் துறையின் அம்மணம்மசாலா18 லட்சம் வீடுகள்பெரும்பான்மைக் குறிபாஜக வெற்றியைத் தடுக்க மூன்றுவித உத்திகளே போதும்!கடகம்அர்விந்த் கெஜ்ரிவால்இந்திய வேளாண் துறைஇலங்கைக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏன்?ஷரம் எல் ஷேக் மாநாடுகேசரிஉச்சபட்ச செயற்கை நுண்ணறிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!