கட்டுரை, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

வதைக்கப்பட்ட நகரங்களின் மீது எந்த மொழியில் மழை பொழிகிறது?

அருந்ததி ராய்
20 Feb 2022, 5:00 am
1

அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ஆஸாதி’. தன்னுடைய எழுத்துகளைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பேசுகிறார் அருந்ததி ராய்; முக்கியமாக மொழியைப் பற்றிப் பேசுகிறார்; புனைவு மொழிக்கும், அபுனைவு மொழிக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எழுப்புகிறார் என்றாலும், சமகால இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றான ஒற்றைத்துவத்துக்கு எதிரான அரசியல் இந்த நூல் முழுவதையும் இணைக்கும் சரடாகப் பயணிக்கிறது. கூர்மையான மொழிநடையைக் கொண்ட அருந்ததி ராய் எழுத்தானது, புனைவுகளில் மட்டும் அல்லாது, கட்டுரைகளிலும் எப்படி விளையாடுகிறது என்பதை இந்த நூலில் காண முடிகிறது.  மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மைக்கு ‘ஜி.குப்புசாமி’ எனும் பெயர் உத்தரவாதம். வாசகர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய நூல்களில் ஒன்று இது! நூலிலிருந்து ஒரு பகுதியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு இங்கே தருகிறது.  

னது முதல் நாவல், ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ வெளிவந்து ஒரு வாரம் கழித்து கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து மிகவும் கடுமையான தொனியில் என்னிடம் கேட்டார்: “எந்த எழுத்தாளராவது அந்நிய மொழியில் ஒரு மாஸ்டர்பீஸைப் படைத்திருக்கிறாரா? அதாவது, தனது தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியில்?”

நான் ஒரு மாஸ்டர்பீஸை எழுதிவிட்டதாக எப்போதும் பிரகடனம் செய்திருக்கவில்லை, எனினும் இந்தியாவில் வாழ்கின்ற எழுத்தாளராக இருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதி, அபத்தமான கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கும் என்மீது அவருக்கு இருக்கும் கோபத்தைப் புரிந்துகொண்டேன் அவரது கேள்விக்கு நான் அளித்த பதில் அவரை மேலும் கோபப்படுத்தியது: “நபக்கோவ்,” என்றேன். அவர் கோபமாக அரங்கை விட்டு வெளியேறினார்.

இன்று அந்தக் கேள்விக்கான பதில் ‘படிமுறையியல்’ - அல்காரிதம் - என்பதாக இருக்கும். மாஸ்டர்பீஸ்களைச் செயற்கை நுண்ணறிவு எந்த மொழியிலும் எழுதும் என்றும், மாஸ்டர்பீஸ்களை எந்த மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கும் என்றும் சொல்கிறார்கள். நாம் நன்றாக அறிந்துள்ள, ஓரளவு புரிந்துவைத்துள்ள இந்த யுகம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் நாம், அதாவது, பிறரைவிடக் கூடுதலாக வசதி வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் நாமேகூட, மொழிகுறித்த விளங்கிக்கொள்ள இயலாத ஆர்வம் கொண்ட, தேவையற்ற குழு என்றுதான் தோன்றுகிறது. இந்த ஆர்வத்தை நம்மிடையே தூண்டியவர்களும் நம்மைப் போலவே தேவையற்றவர்கள்தான்!

¶ 

தாய்மொழி / மாஸ்டர்பீஸ் சம்பவம் நடந்த சில வாரங்கள் கழித்து லண்டனில் நேரடி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். உடன் இருந்த இன்னொரு விருந்தினரான ஆங்கிலேய வரலாற்றாய்வாளர் தனது பேச்சின் இடையே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எல்லோரும் எந்த அளவுக்கு நன்றிகடன் பட்டிருக்க வேண்டும் என்று வாகைப்பாடல் பாடிவிட்டு, என்னிடம் திரும்பி, அதிகாரத் தொனியோடு, “நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உங்களுக்கு அளித்த கொடைதானே!” என்றார்.

வானொலி நிகழ்ச்சிகளுக்கு அப்போது பழகியிருக்காததால் கொஞ்ச நேரத்துக்கு நல்ல நடத்தை கொண்ட, சமீபத்தில் நாகரீகமடைந்துவிட்ட காட்டுமிராண்டியைப் போலச் சற்று அமைதி காத்தேன். சீக்கிரமே அந்த ஒப்பனை கலைந்துவிட, மிகமிக வன்மையான சொற்களைக் கொட்டத் தொடங்கிவிட்டேன். அந்த வரலாற்றாய்வாளர் மனம் புண்பட்டுவிட்டார், நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்து அவர் அதைப் பாராட்டாகவே சொன்னதாகவும், என் புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததென்றும் சொன்னார். நான் அவரிடம், ஜாஸ், ப்ளூஸ் இசை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எழுத்துக்கள், கவிதைகள் அனைத்துமே உண்மையில் அடிமைமுறை அளித்த கொடை என்று அவர் நினைக்கிறாரா என்று கேட்டேன். லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் ஸ்பானிய, போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கத்துக்குப் பாராட்டுரை வழங்குபவையா என்றேன்.

நான் கோபமாகப் பதிலளித்திருந்தாலும் மேற்சொன்ன இரண்டு சம்பவங்களிலும் என்னுடைய எதிர்வினைகள் தற்காப்புச் சார்ந்ததாக இருந்தனவேயொழிய போதுமான பதில்களாக இருக்கவில்லை. காலனியாதிக்கம், தேசியவாதம், நம்பகத்தன்மை, உயரடுக்கு அரசியல், சாதி, கலாச்சார அடையாளம் குறித்து இச்சம்பவங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் கோபத்தைத் தூண்டுவனவாக, சுயமரியாதை கொண்ட எந்த எழுத்தாளரையும் எரிச்சலில் வெடிக்க வைப்பனவாக இருந்தன. ஆனால், என்னிடம் விவாதத்துக்கு வந்த இந்த இரு மனிதர்களும் மொழியை உருவகப்படுத்தும் விதம் ஸ்தம்பிக்கவைக்கிறது. இந்நிலையில் எழுதப்பட்டவை அனைத்தும் முக்கியமற்றுப் போய்விடுகின்றன. 

இதைப் போன்ற விவாதங்களில் வழக்கமாக நடப்பதுதான் இது. ஆனால், இதனோடு உடன்படுவதற்குத்தான் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இருந்தும் மொழி என்பது மிகவும் அந்தரங்கமானது என்றும், அதே நேரத்தில் அனைவருக்கும் பொதுவானது என்றும் எனக்குத் தெரியும் - தெரிந்திருந்தது. அப்போது என்மீது தொடுக்கப்பட்ட சவால்கள் நேர்மையானவை, நேரடியானவை என்பதை அறிந்திருக்கிறேன். இன்றுவரை அதனால்தான் அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன், அவற்றைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

புத்தக அறிமுகம் நடந்த கொல்கத்தா, என் உறவறுந்த தந்தையாரின் நகரம். நீண்டு சிவந்த நாவும் பல கரங்களும் கொண்ட காளி என்ற தாய்த் தெய்வத்தின் நகரம். அங்கு அன்றிரவு என் தாய்மொழி உண்மையில் எதுவென்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் சிந்திக்கவும் எழுதவும் வேண்டிய அரசியல்ரீதியாகச் சரியான, கலாச்சாரரீதியாக இசைவான, அறப் பொருத்தமான மொழி எதுவாக இருந்தது? இருக்கிறது? 

என் தாய் உண்மையில் ஓர் அந்நியர் என்று எனக்குத் தோன்றியது. காளியைவிடக் குறைவான கரங்களும், ஆனால், அதிகமான நாவுகளும் கொண்டிருப்பவள். நிச்சயமாக ஆங்கிலம் என்பது அவற்றில் ஒன்று. எனது ஆங்கிலம் என் அந்நியத் தாயின் மற்ற நாவுகளின் தாளங்களாலும் தொனியாலும் விஸ்தரிக்கப்பட்டது, ஆழமாக்கப்பட்டது. ‘அந்நியர்’ என்று நான் சொல்வதற்குக் காரணம் அவளிடம் உயிர்பொருட்கூறானதாக அதிகம் எதுவும் இல்லை. தேச வடிவிலான அவள் உடம்பு முதலில் வலுக்கட்டாயமாக ஒருமைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் ஒரு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரிவாளால் தனித்தனியாக வெட்டப்பட்டது. அவளை ‘அந்நியர்’ என்று நான் சொல்வதற்கு மற்றொரு காரணம் அவளுக்குச் சொந்தமானவர்களாக இருக்க விரும்பாத சிலர் மீதும் (உதாரணமாக, காஷ்மீரிகள்) அவளுக்குச் சொந்தமானவர்களாக இருக்க விரும்புவர்கள் மீதும் (உதாரணமாக, இந்திய முஸ்லிம்கள், தலித்துகள்) அவள் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை. இவையெல்லாம் அவளைப் பெரிதும் தாய்மையற்ற தாயாக்குகின்றன.

அவளுக்கு எத்தனை நாவுகள்? கணக்கெடுப்பின்படி சுமார் 780. இவற்றில் 22 மட்டுமே அதிகாரப்பூர்வமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 38 மொழிகள் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய குடியேற்ற அல்லது குடியேற்றப்பட்ட வரலாறுகள் உண்டு. அவற்றில் சில இந்த மாற்றத்தில் பலியானவை, சில கொன்றழிக்கப்பட்டவை. தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இதுவரை இல்லை. இந்தியும் ஆங்கிலமும் ‘ஆட்சி மொழிகள்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி (இதுவே ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்), அது அமலுக்கு வந்த 15 வருடங்கள் கழித்து, அதாவது 26, ஜனவரி, 1965ஆம் தேதியுடன் மாநிலங்களில் ஆங்கிலத்துக்கான ஆட்சிமொழி அந்தஸ்து முடிவுக்கு வந்து, தேவநகரி வரிவடிவத்தில் உள்ள இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகத் தொடர வேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது.1 

ஆனால், இந்தியைத் தேசிய மொழியாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கலவரங்களை மூட்டத் தொடங்கின (ஐரோப்பா முழுவதிலும் ஒரே மொழியைத் திணித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்). இவ்வாறாகக் குற்றவுணர்வோடு, அதிகாரபூர்வமற்ற வகையில், வேறு வழியில்லாமல் ஆங்கிலம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டதோடு அல்லாமல் வலுவாக்கிக்கொண்டது. இந்த விஷயத்தில் குற்றவுணர்வு என்பது எதற்கும் பலனளிக்காத உணர்வு. எனவே, ஆங்கிலம் என்ற கருத்தாக்கம் இந்தியா என்ற கருத்தாக்கத்தைப் போலவே சரியானது அல்லது சரியில்லாதது. அந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாற்றாய்வாளர் சொல்ல முயன்றதைப் போல ஆங்கிலத்தில் எழுதுவதோ பேசுவதோ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அளித்த கொடை அல்ல; அது இந்தியாவில் ஏற்படுத்திச் சென்ற சூழ்நிலையில் நடைமுறை சார்ந்த ஒரே தீர்வு.

அடிப்படையில் இந்தியா இன்னும் ஒரு சாம்ராஜ்ஜியமாகத்தான் பல விதங்களில் இருந்துவருகிறது. அதன் பல பகுதிகள் ஆயுதப் படைகளால் கட்டுக்குள் வைக்கப்பட்டு, தில்லியிலிருந்து நிர்வகிக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலான இப்பகுதிகளுக்கு தில்லி என்பது ஏதோ ஒரு தூர தேசத்துப் பெருநகரத்தைப் போலவே இருந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவும் மொழிவாரியான குடியரசுகளாக உடைந்துபோயிருந்தால், ஆங்கிலம் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் அது இப்போதைக்கு நடப்பதற்குச் சாத்தியமில்லை. 

இப்போது ஆங்கிலம் அதிகபட்சமாகச் சுமார் ஒரு கோடிப் பேரால் மட்டுமே பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதுதான் வளர்ச்சிக்கான, வாய்ப்புகளுக்கான மொழியாக இருந்துவருகிறது. நீதிமன்றங்கள், தேசிய ஊடகங்கள், சட்டகுழுக்கள், அறிவியல், பொறியியல், சர்வதேசத் தொடர்புத் துறைகள் ஆகியவற்றின் மொழியாக இருக்கிறது. கௌரவத்துக்கும் தனித்துவத்துக்கும் அடையாளமாக மாறியிருக்கிறது. அடிமை ஒழிப்புக்கான மொழியாகவும் இதுதான் இருக்கிறது. ஆதிக்கச் சக்திகளை மிகக் கூர்மையான மொழியில் இடித்துரைத்திருப்பதும் ஆங்கிலத்தில்தான். 

இந்து சாதியமைப்பை மிகக் கடுமையாகத் தாக்கியும், பகிரங்கமாகக் கண்டித்தும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதிய ‘சாதி அழித்தொழித்தல்’ மிகப் பரவலாக வாசிக்கப்பட்ட, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல். உலகில் வேறெந்தச் சமுதாயத்திலும் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமான, நிறுவனமயமாக்கப்பட்ட சமூக அமைப்புமுறை மீது மிகவும் புரட்சிகரமான எதிர்வாதங்களை இந்நூல் முன்வைத்தது. 

அம்பேத்கரின் சாதியையும் இனத்தையும் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த மொழியில் இது எழுதப்பட்டிருந்தால் ஆதிக்கச் சாதிகள் இந்நூலைத் தடைசெய்து காணாமலாக்கிவிட்டிருப்பார்கள். அம்பேத்கரால் உத்வேகம் பெற்ற தலித் செயல்பாட்டாளர்கள் பலரும் (தேசியவாதம் அல்லது காலனிய எதிர்ப்பு என்ற பெயரில்) ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தரமான ஆங்கிலக் கல்வி மறுக்கப்படுவதை, சூத்திரர்கள் என்றும் கீழோர் என்றும் பிராமணர்களால் கருதப்பட்டவர்களுக்குக் கல்வி கற்கவும் பொருள் சேர்க்கவும் உரிமை இல்லை என்பதைப் பண்டைக்காலம் முதலாக மரபாக்கி வைத்திருந்த பிராமணிய ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கின்றனர். இக்கருத்தை வலியுறுத்துவதற்காக தலித் ஆங்கிலப் பெண் கடவுளுக்கு 2011ஆம் வருடம் தலித் அறிஞர் சந்திர பான் பிரசாத் கிராமத்துக் கோயில் ஒன்றைக் கட்டினார். “இந்தத் தெய்வம் தலித் மறுமலர்ச்சிக்கான அடையாளம்,” என்றார். “நாங்கள் ஆங்கிலத்தை ஏணியாகக் கொண்டு முன்னேறி நிரந்தர விடுதலை பெறுவோம்,” என்று தெரிவித்தார்.2 

புது உலகப் பொருளாதாரப் படிநிலை செயல்படத் தொடங்கிச் சிலரை வெளிச்சத்தை நோக்கியும், சிலரை இருட்டை நோக்கியும், நகர்த்தும்போது, ஆங்கிலத்தை ‘அறிந்திருப்பதும்’, ‘அறியாதிருப்பதும்’ வெளிச்சத்தையும் இருட்டையும் யார் யாருக்கு ஒதுக்குவது என்பதை நிர்ணயிக்கும் காரணியாகிவிடுகிறது.

மனக்கோணலின் வெளிப்பாடான இந்தப் பல்வண்ண ஒட்டுத் துண்டின் மீதுதான் தற்போதைய இந்து தேசிய ஆளும் வகுப்பாட்சி அதன் ‘ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி’ கண்ணோட்டத்தையும் பொருத்திவைக்க முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்து தேசியவாதத்தை முதலீடாகக் கொண்டிருக்கும் கம்பெனியும், இன்று இந்தியாவில் உள்ள மிக வலுவான அமைப்புமான ஆர்எஸ்எஸ், அது துவங்கப்பட்ட 1920களிலிருந்து தனது பிரச்சார முழக்கமாக ‘இந்தி - இந்து - இந்துஸ்தான்’ என்பதையே வைத்துக்கொண்டிருக்கிறது. இதில் உள்ள முரண் என்னவென்றால், இம்மூன்று சொற்களுமே பாரசீக - அரபுச் சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து பெறப்பட்டவை என்பதுதான். இந்துஸ்தான் என்பதில் உள்ள ‘ஸ்தான்’ (இடம்) என்ற பின்னொட்டைச் சமஸ்கிருதமாக நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சமஸ்கிருதத்திலும் ‘ஸ்தான்’ என்பது இடத்தையே குறிக்கும். இந்துஸ்தான் என்பது சிந்து நதிக்குக் கிழக்கில் உள்ள பிரதேசத்தைக் குறிப்பது. ‘இந்துக்கள்’ (மதம் அல்ல) என்போர் அங்கு வசிப்பவர்கள். மற்ற நாடுகளைப் பார்த்துக் கற்றுக்கொள்வார்கள் என்று ஆர்எஸ்எஸ்ஸிடம் எதிர்பார்ப்பது வீண்தான், ஆனாலும் பாகிஸ்தானிய இஸ்லாமியக் குடியரசு அதன் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியக் குடிமக்களிடம் உருதுவைத் திணிக்க முயன்று, அதன் ஒரு பாதியை இழந்தது. இலங்கை அதன் தமிழ்க் குடிமக்களிடம் சிங்களத்தைத் திணிக்க முயன்று பல வருடங்களாகத் தொடர்ந்து ரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தில் சீரழிய நேர்ந்தது.

இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் இந்தியாவில் உள்ள நாங்கள் வாழ்வதும் பணியாற்றுவதும் (எழுதுவதும்) ஒரு சிக்கலான நிலத்தில் என்பதால்தான். இங்கு எதுவும் எப்போதும் அமைதியாக அடங்கப்போவதில்லை. முக்கியமாக மொழி என்ற விஷயத்தில். அதாவது மொழிகள் என்ற விஷயத்தில். 

ஸூஸன் ஸொன்டாக் 2002ஆம் வருடம் டபிள்யூ.ஜி. ஸீபால்ட் உரையை நிகழ்த்துகையில் இந்தச் சிக்கல்களை உணர்ந்தே இருந்தார் என்பது தெரிகிறது. அவரது உரையின் தலைப்பு ‘இந்தியா எனும் உலகம்: இலக்கியச் சமுதாயத்துக்குள் மொழிபெயர்ப்பு என்னும் கடவுச்சீட்டு!’ 

நூல் விவரம்

ஆஸாதி
ஆசிரியர்: அருந்ததி ராய்
மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி
பக்கங்கள்: 224 விலை: ரூ. 275
பதிப்பகம்: காலச்சுவடு வெளியீடு 
தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அருந்ததி ராய்

அருந்ததி ராய், ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர். இவருடைய ‘சின்ன விஷயங்களின் கடவுள்’, ‘பெருமகிழ்வின் பேரவை’ நூல்கள் முக்கியமானவை.


1

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

A Thiruvasagam    2 years ago

உடனே இந்நூலை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் அருஞ் சொல் ஏற்படுத்தியுள்ளது. நூலுக்கான மதிப்புரை சிறப்பு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உழைப்பின் கருவிபலவீனமான செயற்கை நுண்ணறிவுதந்தை வழிஇந்திய அரசமைப்புச் சட்டம்குழந்தையின் அனுபவம்அமெரிக்கச் சிறைபாரத் சாது சமாஜ்அப்துல் வாஹித் கட்டுரைநிதியமைச்சர்அறிவுஜீவிகாந்தாராகருணாநிதியின் முன்னெடுப்புமோடியின் இரட்டை வெற்றி: சமஸ் பேட்டிதூக்கமின்மைமோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்பரத நாட்டியக் கலைஞர்கூட்டுக் குடும்பம்மாநில அரசு காவலர்கள்சீனப் பிள்ளையார்டிராம்ப் கதாபாத்திரம்எது தேசிய அரசு!இலக்கணங்கள்வன்மத் தாக்குதல்மாணவர் நலன்மன்னிப்புக் கடிதங்கள்தமிழ்நாடு 2022ரீவைண்ட்ஜி.குப்புசாமி கட்டுரைவேள்விஜவஹர்லால் நேரு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!