கட்டுரை, கலை, சினிமா, அரசியல், கலாச்சாரம், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

மீனாட்சியம்மன் கதை, மதுரை வீரன் கதை, விஜயகாந்த் கதை

சோ.கருப்பசாமி
29 Dec 2023, 5:00 am
0

விஜயகாந்த் காலமானார் என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்த மாத்திரத்தில், நெஞ்சைத் துயரம் கவ்விக்கொண்டது. ஏதேதோ நினைப்புகள். 

அது 40 வருஷம் இருக்கும். நான் பள்ளிச் சிறுவன். எங்கள் கிராமத்திலும் சரி, அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் சரி... சிறுவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும்போதே, ‘நீ யாரு ரசிகன்?’ என்ற கேள்வியும் வந்துவிடும். ஊர்ப் பக்கத்தில், ரஜினிக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் பெயரையே அதிகம் பேர் சொல்வார்கள். ரஜினி – கமல் மாதிரி ரஜினி – விஜயகாந்த் பேச்சும் அப்போது இருந்தது. 

ஜாதி கடந்த ரசிக அபிமானம்

நெல்லை பிராந்தியத்தில், கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு ஜாதியினர் வாழும் ஊர் என்னுடையது. ஒவ்வொரு தெருவிலும் கோயில் விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் ‘திரைக்கட்டி படம் போடும்’ வைபவம் கட்டாயம் இடம்பெறும்.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு விருப்பமான நடிகர் உண்டு. நவரச நாயகன் கார்த்திக் தொடங்கி மக்கள் நாயகன் ராமராஜன் வரையில். எந்தத் தெருவில் யார் படம் ஓடுகிறது என்பதை வைத்து, அந்த நடிகர் எந்த ஜாதி என்று கண்டுபிடித்துவிடலாம். எல்லாத் தெருக்களிலும் திரையிடப்பட்ட, எல்லா ஜாதிக்காரர்களாலும் விரும்பப்பட்ட நடிகர்கள் குறைவு. அவர்களில் ஒருவராக விஜயகாந்த் இருந்தார். அவர் முன்னிறுத்திய தமிழ் அடையாளம் இதனைச் சாத்தியப்படுத்தியது. 

என்னுடைய அப்பா எம்ஜிஆர் ரசிகர்; அம்மா சிவாஜி ரசிகர்; நானும் அண்ணனும் ரஜினி ரசிகர்கள்; என் அக்காள் விஜயகாந்த் ரசிகர். ஊத்துமலை ரத்னா திரையரங்கில் விஜயகாந்த் படம் போட்டால் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கிராமத்துப் பின்புலத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த், ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘மாநகரக் காவல்’ படங்கள் மூலம் நகரத்து ரசிகர்களையும் இளைய தலைமுறையினரையும் வசீகரித்தார். அதற்கு முன்பே பல அதிரடி நாயகர்கள் வெள்ளித்திரையை அலங்கரித்திருந்தாலும், விஜயகாந்த்தின் உடல்வாகு அவர் நிஜமாகவே சண்டை போடுவது போன்ற தோற்றத்தைத் தந்தது.

நான் எட்டாம் வகுப்பு முடிக்கையில், அப்பா என்னை விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தார். அந்தப் பள்ளிக்கூடம் பற்றி அப்பா எனக்குப் புரிகிற மொழியில் கொடுத்த அறிமுகம் இதுதான். “ஏடே... இது விஜயகாந்த் படிச்ச ஸ்கூலு!”

குடும்பத்தையும், சேக்காளிகளையும் பிரிந்து விடுதியில் சேரப்போகும் துயரத்தையெல்லாம் மறந்து, அதே சேக்காளிகளிடம் இதையே பெருமிதமாகச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். பள்ளியில் சேர்ந்த பிறகுதான் தெரிந்தது, ‘விஜயகாந்த் அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்... ஆனால், படிக்கவில்லை... பாதியிலேயே மதுரைக்கு ஓடிவிட்டார்’ என்பது!

கல்லூரி படிக்கும்போது, முதன்முதலில் விஜயகாந்த்தை நேரில் பார்த்தேன். அப்போது, ‘மீனாட்சி டாக்கீஸ்’ என்று ஒரு திரையரங்கம் இருந்தது. அங்கு விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் ரமேஷின் திருமணம்! வெறும் ரமேஷ் என்று சொல்ல மாட்டார்கள். ‘ரமேஷ் பிஏ’ என்பார்கள். “விஜயகாந்த் தலைமையில்தான் கல்யாணம்... இல்லையென்றால், கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன்” என்று அடம்பிடித்து 35 வயதுக்குப் பிறகு விஜயகாந்த் தலையில் திருமணம் செய்துகொண்டவர் அவர்.

திருமணத்துக்கு கண்ணாடி ஏற்றிய ஏசி காரில் வரவில்லை விஜயகாந்த். திறந்த வேனில் கை காட்டியபடியும், கை கூப்பியபடியும் ஊர்வலமாக வந்தார். ரமேஷுக்கு ஊரெல்லாம் பெயர். தன்னுடைய ரசிகர்களுக்காக இப்படிப் பல காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

கருப்பு எம்ஜிஆர் கதை

படிப்பை முடித்து முதன்முதலில் பணியில் சேர்ந்தேன். முதல் பணியிடம் விஜயகாந்த் ஊர் என்று பரவலாக அறியப்பட்ட மதுரை. அங்கு போன பிறகு விஜயகாந்த் பற்றிய கதைகள் அதிகமாகவே என் காதில் விழுந்தன. மீனாட்சியம்மன் கதை, மதுரை வீரன் கதைபோல விஜயகாந்த் கதை!

இதுதான் விஜயகாந்த் ரைஸ்மில், இதுதான் அவர் டாப் அடிக்கிற இடம், இதுதான் அவரை சினிமாவுக்கு அழைத்துப்போன தயாரிப்பாளர் ஆபீஸ் என்று ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். ஊரே கதை சொல்லும்.

மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாக 1952 ஆகஸ்ட் 25இல் பிறந்த விஜயகாந்த், சின்ன வயதிலேயே தாயை இழந்தவர். படிப்பில் நாட்டம் இல்லாததால், கீரைத்துறையில் இருந்த தனது அரிசி ஆலையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை விஜயகாந்திடம் அவருடைய தந்தை அழகர்சாமி ஒப்படைத்திருக்கிறார். அப்போதே ஆலைத் தொழிலாளர்களிடம் பரிவாக நடந்துகொள்வார்; அவருடைய ஆலையில்தான் கூலி அதிகம் என்ற பேச்சு உண்டு.

விஜயகாந்திடம் சினிமா ஆசையை உண்டாக்கியது அவருடைய நண்பர்கள் வட்டாரம். மதுரை ‘சேனாஸ் ஃபிலிம்ஸ்’ விநியோகஸ்தர் முகமது மர்சூக், “தம்பி, நீங்க ரஜினிகாந்த் மாதிரியே இருக்கீங்க” என்று சொன்னதும், அவர் மூலமாகக் கிடைத்த இயக்குநர் எம்.ஏ.காஜா அறிமுகமும் விஜயகாந்தை ‘இனிக்கும் இளமை’ மூலமாக சினிமாவில் நிறுத்தியது.

சிரமப்பட்டுதான் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் விஜயகாந்த். அவருடைய கருப்பு நிறத்தைச் சுட்டிக்காட்டி பல நடிகைகள் வெளிப்படையாகவே அவருடன் நடிக்க மறுத்தனர். கடுமையாகப் போராடினார் விஜயகாந்த். சினிமாவுக்கு அவர் வருவதற்கு ரஜினிகாந்த் முன்னோடி என்றாலும், அவருடைய தாக்கம் தன் மீது விழாமல் தனக்கு என்று ஒரு பாணியை மிக கவனமாக உருவாக்கிக்கொண்டார்.

புறக்கணிப்பும் போராட்டமும் பழகியவர் என்பதால், எல்லா காலகட்டங்களிலும் புதியவர்களுக்கும், சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கும் படம் கொடுத்தார். உடன் பணியாற்றியவர்களுக்கு தேவை நிமித்தம் வந்து நின்றபோது உதவினார். நடிகர் சங்கத்திலும் உத்வேகமாக பங்கெடுத்துக்கொண்டார். இதெல்லாமும் இணைந்து அவருக்கு என்று துறையில் ஒரு தனியிடத்தை உருவாக்கின. அடுத்தடுத்து வந்த படங்களும் ஓடின.

ஆரம்பத்திலிருந்தே அரசியல்

சிறு வயதிலேயே அரசியலில் ஈடுபட்டவர் விஜயகாந்த். அவருடைய தந்தை கவுன்சிலராக இருந்தவர். மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்த வரலாறு அவருக்கு உண்டு. இதனால், சினிமாவுக்கு வந்த ஆறேழு வருடங்களிலேயே – 1985இல் தனது ரசிகர் மன்றத்தை வளர்த்தெடுக்க ஆரம்பித்தார்.

தனது வருவாயில் 10% வரை ரசிகர் மன்றங்களுக்கு அவர் செலவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, உதவிகள் வழங்குவது, மன்ற நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்குச் சென்று வாழ்த்துவது என்று மக்களோடு தொடர்பில் இருந்தவர் மன்றத்துக்கென தனிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவியில் அவர் இருந்த காலகட்டத்தில், தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நட்சத்திரக் கலை விழா நடத்தி, நடிகர் சங்கக் கடனை வட்டியும் முதலுமாக அடைத்தார். மீதித் தொகை சுமார் ரூ.1 கோடியை வங்கியில் டெபாசிட் செய்து, நலிந்த கலைஞர்களுக்கு உதவிசெய்தார். இதெல்லாம் பொதுவெளியில் அவரை ஒரு நல்ல நிர்வாகியாகவும் வெளிப்படுத்தியது. 

தேமுதிக 2005இல்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், 2001 உள்ளாட்சித் தேர்தலிலேயே அவரது ஆதரவுடன் மன்ற நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றனர்.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

கருப்பு எம்ஜிஆர்  

திமுக சார்ந்த அடையாளத்தோடும், விடுதலைப் புலிகள் ஆதரவு சாய்வோடும் திரைத் துறையில் வளர்ந்தாலும், விஜயகாந்துக்கு எம்ஜிஆர் மீதே பெரும் அபிமானம் இருந்தது. கலைஞர் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டார், பிள்ளைக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டினார்; ஆனால், எம்ஜிஆர் வழியிலேயே படிப்படியாகப் பயணப்பட்டார். ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று ரசிகர்கள் அழைப்பதில் அவருக்குப் பெரும் உவகை இருந்தது.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த திருப்பரங்குன்றம் மாநாட்டைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு வாய்த்தது. அப்போதெல்லாம் திமுக மாநாட்டுக்குத்தான் மதுரையில் அவ்வளவு பெரிய பந்தல் போடுவார்கள். தேமுதிக மாநாட்டுக்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் சொன்னபோது, நம்பவே முடியவில்லை. ஆனால், 3 லட்சம் பேர் வந்து குவிந்துவிட்டார்கள். மாநாட்டில் சுமார் ஒன்றை முக்கால் மணி நேரம் பேசினார் விஜயகாந்த். அடுக்கு மொழியிலோ, சினிமா பாணியிலோ அல்லாமல், மக்கள் மொழியில் அவர் பேசியதைக் கூட்டம் ரசித்தது.

திமுக, அதிமுக இரு கட்சிகளையும் சாடிய அவர், “ஊழலை ஒழிப்பேன். மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி வைப்பேன்” என்று பிரச்சாரம் செய்தார். பிரதான கட்சிகள் எல்லாமே அவரால் பெரும் பதற்றம் அடைந்தனர். மேம்பாலப் பணியின் பெயரால், அவருடைய திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டபோது, திமுக மீது குற்றஞ்சாட்டினார். பல ஊர்களிலும் கட்சிக் கொடிகள் வெட்டி வீழ்த்தப்பட்டபோது அதிமுக மீது குற்றஞ்சாட்டினார். ‘கஜேந்திரா’ படப் பெட்டி தூக்கப்பட்டபோது பாமக மீது குற்றஞ்சாட்டினார். ஆனாலும், அஞ்சாமல் எல்லோரையும் எதிர்த்து நின்றார்.

2006 சட்டமன்றத் தேர்தலில், 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், சம்பந்தமே இல்லாத விருத்தாச்சலத்தில் நின்று வென்று தனக்குள்ள செல்வாக்கைக் காட்டினார். கட்சி ஆரம்பித்த ஏழே மாதங்களில் தமிழகம் முழுக்க 28 லட்சம் வாக்குகளை (8.38%) தேமுதிக பெற்றதோடு, தமிழகத்தின் மூன்றாவது பெரும் கட்சியாகவும் நிமிர்ந்து நின்றது. ஒரு புதிய படை அரசியல் நோக்கி வந்ததோடு, அதிகாரத்தை நோக்கியும் நகர்ந்தது.

கலைந்த கனவு

அரசியல் பயணமானது இடையறா ஓட்டம். திமுக, அதிமுக எனும் இரு பெரும் கட்சிகள், அவற்றின் பிரம்மாண்ட கட்டமைப்பு, பண பலம் இதற்கெல்லாம் மத்தியில், சித்தாந்த தெளிவற்ற தேமுதிக தடுமாறியது. விஜயகாந்த் கவர்ச்சி மட்டுமே அதன் மைய விசையாக இருந்தது. தன்னுடைய உடல்நிலையை முறையாகப் பராமரிக்காததால், சீக்கிரமே அவருடைய ஓட்டத்தின் வேகம் குறைந்தது.

விஜயகாந்தின் தள்ளாட்டம் தேமுதிகவின் தள்ளாட்டம் ஆனது. சுற்றியுள்ளோர் கொடுத்த அழுத்தத்தில் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது, தேமுதிக 29 தொகுதிகளில் வென்றது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். 

முதல் முறையாக சட்டசபை கூடியபோதே அதிமுக – தேமுதிக இடையே மோதல் வெடித்தது. அடுத்தடுத்து எடுத்த தவறான முடிவுகளாலும், 2014இல் பாஜகவுடன் கொண்ட உறவினாலும், படிப்படியாக தேமுதிகவின் செல்வாக்கு சரிந்தது.

2016 சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டு, மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டபோதே அவர் உடல்நிலை பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவு தேமுதிகவுக்கு மோசமான முடிவாக அமைந்தது. எல்லா இடங்களிலும் தோற்றதோடு, 2.41%ஆக கட்சியின் வாக்கு வங்கி சரிந்திருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில், நிலைமை மேலும் மோசமானது.

இவ்வளவுக்கும் மத்தியில், இந்த இருபதாண்டுகளாக உயிரைக் கொடுத்து கட்சி வேலை செய்யும் தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தேமுதிகவுக்கு இருந்தார்கள். விஜயகாந்த் மீதான அன்பே அவர்களுடைய இயக்க சக்தியாக இருந்தது.

விஜயகாந்த் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியானதுமே, கட்டுக்கடங்காத கூட்டம் சென்னையில் கூடியதில் ஆச்சரியம் இல்லை. விஜயகாந்தின் அரசியல் மீது கடும் விமர்சனங்கள் உள்ளவர்கள், விஜயகாந்த் படங்கள் மீது எந்த ஆர்வமும் இல்லாதவர்களுக்கும்கூட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மரியாதை தமிழ்ச் சமூகத்தில் எப்போதுமே இருந்திருக்கிறது.

தன்னை நோக்கி உதவி கேட்டு வந்தவர்களுக்கு முடிந்த வகையில் எல்லாம் உதவியவர். ‘விஜயகாந்த் இருக்கும் இடத்துக்குப் போன ஒருவர், பசியோடு திரும்பினார் என்ற சொல் இருக்கக் கூடாது’ என்பதற்காகவே பல நூறு பேருக்கு அன்னமிட்ட கை அவருடையது.  சரியோ, தவறோ மனதில் பட்டதைப் பேசியவர். நல்லுள்ளம்.

மதுரையில் பல வீதிகளில் விஜயகாந்த் படத்தை வைத்து மாலையிட்டிருந்தார்கள். கதறியழுதார்கள். தமிழனின் மதுரைக் கதைகளில் விஜயகாந்த் நிலைத்திருப்பார்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சோ.கருப்பசாமி

சோ.கருப்பசாமி, எழுத்தாளர். பத்திரிகையாளர். தொடர்புக்கு: chokaruppasamy@gmail.com


5






உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?சியரா நூஜன்ட்மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்இந்திய பிரதமர்தெற்கும் முக்கியம்தயாரிப்புவேறு துறை நிபுணர்கள்நாஞ்சில் சம்பத்மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடிகடுமைசமஸ் கடிதம்பாலின சமத்துவம்கல்விக் கொள்கைஅரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம்தேசிய அடையாளம்எம்.ஜி.ஆர்விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டிஅறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!பிரீமென்ஸுரல் சின்ட்ரோம்அரசியல் சட்ட நிர்ணய சபைஅம்பேத்கரின் 10 கடிதங்கள்புதையல்இளம் வயதினர்உறுதியான எதிரிடம்சாதி வாக்குகள்கட்டுமானம்அரசியலர்குறைந்தபட்ச ஆதரவு விலைசிற்றிலக்கியங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!