கட்டுரை, கலாச்சாரம், புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

சாதியினால் சுட்ட வடு

திருக்குமரன் கணேசன்
18 Sep 2022, 5:00 am
0

சாதிய ஒடுக்குமுறையையும், அது தரும் வலியையும் தமிழில் பேசும் முக்கியமான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்க ஒன்று கறி விருந்தும் கவுளி வெற்றிலையும். தலித்தாகப் பிறந்த ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு, பணி உலகம், நட்புலகம், காதல், அரசியல் என எந்த ஒரு தளத்திலும் சாதி என்னும் இழிவைச் சுமந்துகொண்டே வாழ வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும், அவர்களுடைய வளர்ச்சிகளும் சாதனைகளும் இந்தச் சுமையிலிருந்து அவர்களை முழுவதுமாக விடுவித்துவிடுவதில்லை. இத்தகைய அனுபவங்களை, அவை தரும் ஆழமான காயங்களை அவற்றின் ரத்தக் கவிச்சியோடு  எழுதியிருக்கிறார் திருக்குமரன் கணேசன். பாசாங்கற்ற மொழியில் தன் அனுபவங்களைக் கூறிச்செல்லும் கணேசனின் எழுத்து பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிச் சிறிதேனும் வெட்கப்படவும் சுய பரிசோதனை மேற்கொள்ளவும் வைக்கக்கூடிய வலிமை படைத்தது. நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கே தன் வாசகர்களுக்கு அருஞ்சொல் தருகிறது.

“பறச்சியாட்டம் இருக்காடா…” 

தேனீக்களாய் உலவும் மனிதர்களை வியந்த வண்ணம், சென்னை மாநகரிலிருந்து முற்பகல் வேளையில் கோவாவை நோக்கிய இரயில் பயணம் தொடங்கியது. சேலம், ஈரோடு, கேரள மாநிலம் பாலக்காடு வழியாக மங்களூர் செல்லும் அதிவேகத் தொடர்வண்டி, தமிழக மலையரசிகளின் தரிசனங்களைக் கண்ட வண்ணம், பகுத்தறிவுப் பகலவன் பிறந்த ஈரோட்டைக் கடந்து ஆதவன் அந்திப் பொழுதில் நர்த்தனமாடும் இனிய வேளையில் கேரள எல்லைக்குள் பிரவேசிக்க மனம் துள்ளியது. மரங்களும் மனித மனங்களும்தான் எத்தனை எத்தனை! வழித்துணையாய் வந்த சக பயணிகளும், வழியெங்கும் வியாபித்திருந்த மரங்களும் ஒவ்வொன்றும் ஓரழகாய், அடர்ந்த வனப்பகுதியில் ஆளரவமற்ற பாதையில், காடு, மலைகளைக் கடந்துபோகிறது இரயில். தொலைந்து போகிறது மனம்.

பாலக்காட்டில் இரவு உணவை முடித்த பிறகு, கர்நாடக மாநிலத்தின் காலைப் பொழுதைத் தரிசிக்கக் கண்களுக்கு ஓய்வு கொடுக்கத் தொடங்கினேன். தடதடக்கும் இரயிலோசை, தாலாட்டும் கனவுகளோடு புலர்ந்த நல்பொழுது இயற்கை எழில் சூழ்ந்த கர்நாடக எல்லைக்குள் சூரியக் கதிர்கள் ஊடுருவும் முன்பாகப் பெருத்த கம்பீரத்துடன் ஊடுருவிக்கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதும் அடர்ந்த வனமும், ஆங்காங்கே பாரதி கேட்டதைப் போன்ற காணி நிலமும் அற்புதத் தோட்டங்களும், தெருக்களற்ற தனித்தனி வீடுகளுமென அங்கேயே வசிக்கத் தொடங்கியது மனம். இந்த ஆனந்தம் அதிகரித்த வண்ணம், ஆயிரமாயிரம் வண்ணத்துப் பூச்சிகள், நிறங்களைக் கொட்டிவைத்த தொட்டியாய் ஆனது மூளை. கலைகளும் சமூகப் பண்பாடுகளும் மனிதனை இன்னுமின்னும் அழகாய் வைத்திருக்கின்றன. பெரும் மலைகளும் பேரெழில் சூழ்ந்த ஏரிகளும் கொத்துக் கொத்தாய் வளர்ந்து நிற்கும் தென்னைகளும் இன்னும் பெயர் தெரியாத மரம், செடி, கொடிகளும் அதில் பூத்துக் குலுங்கிய பல வண்ணப் பூக்களும் சிதறிக் கிடந்தன, எம் விழிகளில் பட்டுத் தெறித்தன ஒளியின் வெளிச்சங்கள். 

இரவு, ஒரு பகல் பயணித்து மறுநாள் மதியப் பொழுதில் மங்களூர் இரயில் நிலையச் சந்திப்புக்குச் சென்றோம். அங்கு மதிய உணவு முடித்து, அதற்கடுத்து கோவா பயணம். மகாராஷ்டிரா மாநில மலைப் பாதை. தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்துகொண்டிருந்த வேளை. கோவாவை நோக்கிய பயணப் பொழுதில் சுட்டெரிக்கும் வெயில். ஐந்தாறு மலைக்குகைகளில் ஊடுருவியது தொடர்வண்டி. பத்து நிமிட இடைவெளியில் உலகமே இருளாகிப் பின் பகலாகும் அதிசயம். குகைகளில் எதிரொலித்த தொடர் வண்டியின் பேரிரைச்சலும் நண்பர்களின் பெருங்கூச்சல்களும் எங்களோடு பயணித்த குழந்தைகளை அழவைத்தன. கர்நாடக எல்லையைக் கடந்து மகாராஷ்டிரா எல்லையைக் கடக்கும் வேளை. நாம் பார்த்த நம்மூர் நதிகளெல்லாம் மேற்கிலிருந்து கிழக்காகத்தான் ஓடி மறையும். அங்கே நதிகளெல்லாம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. யோசித்த பின்புதான் புரிந்தது அது மேற்கில் இருக்கும் அரபிக் கடலால் நிகழும் அற்புதம் என்று. நதிக்கரையெங்கும் வளர்ந்து நிற்கும் தென்னைகள் தண்ணீரில் வளைந்து கிடப்பது பேரழகு.

சர்வதேச நகரம் கோவா. வேடந்தாங்கலுக்கு வந்துசெல்லும் பறவைகளைப் போலப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துசெல்லும் மாந்தர் கூட்டம். சர்வதேசத் திரைப்பட விழா அந்நகரின் முப்பெரும் திருவிழா! திரைத்துறை சாராத மனிதர்களும் அத்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வர். சர்வதேசத் திரைப்பட விழா நடந்த பதினைந்து நாட்களும் பல்வேறு நாட்டினரின் திரைப்படங்களையும், பலதரப்பட்ட படைப்பாளர்களையும் கண்டு ரசித்தோம். அதனினும் இன்ப நிகழ்வு தமிழ்த் திரைப்படத் துறையில் நான் வியந்து நோக்கும் திரைக் கலைஞன் இயக்குநர் மகேந்திரனைச் சந்தித்தது. திரையரங்கிற்குள் செல்லும் அவசர கதியில் நடிகர் சரத்பாபு இயக்குநர் மகேந்திரனை அறிமுகம் செய்துவைக்க, சில நொடிப்பொழுதில், பதில் வணக்கத்தோடு ஒரு மெல்லிய புன்னகை வீசி அவர் சென்றுவிட, நண்பர்களோடு இருள்சூழ்ந்த அரங்கிற்குள் சென்று, ஒரு ஈரானிய சினிமாவில் கலந்தாயிற்று. ஆயினும் அந்த அரபிக் கடலோரம் ஓர் கலையழகைக் கண்டுணர்ந்த பேரின்பம் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. மறுநாள் பனாஜி சந்தை வீதியில் நண்பர்களுடன் சென்றுகொண்டிருக்கையில் இயக்குநர் மகேந்திரனை மீண்டும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. எளிதில் எங்களை அடையாளம் கண்டுகொண்ட அவர் திரைத்துறை பற்றி எங்களோடு பேசத் தொடங்கினார். 

எப்போதும் ஈரப்பதம் நிறைந்த தட்பவெப்ப நிலையுடன் அழகு மிகுந்த கோவா நகரைத் தழுவிய எழில்கொஞ்சும் மலைகள், இருபத்தியொரு ஜொலிக்கும் கடற்கரைகள், ஏரிகள், பவளப் பாறைகள், கடற்பாசிகள். அத்தண்ணீர் தேசத்தின் குடிகளெனப் பெருமிதமாய் நீந்தும் கிளி மீன்கள், தேவதை மீன்கள், அணில் மீன்கள், பட்டாம்பூச்சி மீன்களெனக் கடல்வாழ் உயிரினங்கள் அம்மண்ணின் இயற்கையழகு. தமிழகக் கிராமப்புறக் கடைவீதிகளில் இருக்கும் டீக்கடைகள்போலச் சாராயக் கடைகள். நவநாகரீகமாக உச்சரிக்கப்படும் ஒயின் ஷாப்புகள். அவ்வளவு மலிவு விலை மதுபானக் கடைகள் இருந்தும் குடித்துவிட்டுப் புலம்புவோரையோ மது மயக்கத்தில் தெருவில் தள்ளாடுபவர்களையோ பார்க்க முடியவில்லை. அழகு ததும்பும் பல்வேறு வடிவிலான மதுப் புட்டிகள், கலைப் பொருட்களைப் போலவே மதுபானக் கடைகள் எங்கும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதிகமான முந்திரிக் காடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள கோவாவில் முந்திரிப் பருப்புகளால் செய்யப்படும் விதவிதமான திண்பண்டங்கள், முந்திரிப் பழச்சாற்றில் தயாரிக்கப்படும் மதுபான வகைகள் அங்கே பிரபலம். எல்லாவற்றிற்கும் மேலாக ஆதவன் அந்திசாயும் அழகைக் காணக் கோடிக் கண்கள் வேண்டும். சூரியனை விழுங்கிக் கொள்ளும் கடலின் ஆனந்தத் தாண்டவம் அலையலையாய்ப் பரவும். கடலின் காட்சியும் செவ்வானமெங்கும் படர்ந்திருக்கும் மேகத் தாரகைகளும் அழகின் இரகசியம். 

பதினைந்து நாள் திரைத் திருவிழா முடிந்து, பதினாறாம் நாள் கோவா நகரிலிருந்து புறப்படுவதற்கு நள்ளிரவு 12 மணிக்குத்தான் தொடர்வண்டி. ஆகவே அன்றைய பொழுதை அங்கேயே கழிக்க நினைத்து வாடகைப் பேருந்து ஒன்றில் பாகா கடற்கரைக்குச் சென்றோம். பேருந்திலிருந்து இறங்கிய நண்பர்கள், குழுக்குழுவாகப் பிரிந்து சென்றனர். அப்படி நான்கு பேர் அடங்கிய குழுவில் நானுமிருந்தேன். கலைப் பொருட்களும் மதுபானக் கடைகளும் நிரம்பிய ஒரு வீதியின் முடிவில் கடற்கரையின் நுழைவாயில் தென்பட்டது. முதலாவதாக அக்கடற்கரை மணலில் காலடி பதித்த எங்கள் குழுவை இந்தி கலந்த ஆங்கிலத்தில் இந்திய சினிமாவின் வில்லன்போலத் தோற்றம் கொண்ட வாலிபனொருவன் வரவேற்றான். நாங்கள் தமிழர்கள் என்பதை அறிந்ததும், மலையாளம் கலந்த தமிழில் தொடர்ந்து பேசத் தொடங்கினான். ‘சார் மசாஜ் செய்யணுமா 500 ரூபாய்தான் நல்ல கம்பெனி தருவாங்க’ என்றான். பளிச்சென்று புரிந்தது அவன் பலான ஆளென்று. ஏதோ ஒருவிதத் தயக்கத்துடன் அவனைக் குறுகுறுக்கப் பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட அவன், எங்களை அழைத்தான். நண்பர்களும் அப்படி என்னதான் நடக்கும் போய்ப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வர அவன் பின் செல்லத் தொடங்கினோம். 

ஐந்து நிமிட நடைக்குப் பின் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த ஒரு குடிலருகே அழைத்துச் சென்றான். அதே போன்று பல குடில்கள் கடற்கரை நெடுகக் காட்சி தந்தன. அவற்றையெல்லாம் அவன் ‘பிரிட்டோஸ்’ என விளித்தான். அதில் ஒரு சில குடில்களுக்கு முன் வெள்ளை நிற மனிதர்கள் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு உல்லாசமாகச் சூரிய குளியலில் திளைத்திருந்தனர். எங்களை அழைத்துச் சென்றவனோ எங்கள் நால்வருள் ஒருவரை மட்டும் உள்ளே சென்று பார்த்துவரச் சொன்னான். ஆர்வ மிகுதியில் முதலில் உள் சென்ற மதுரைக்கார நண்பனொருவன், ‘சொரட்ட டிக்கட்டுப்பா. . .’ என்றபடி வெளியே வந்தான். அடுத்து திருநெல்வேலி நண்பனொருவன் உள்ளே சென்று, ‘எலே இதுக்காலே 500?’ என்றான். அவனை அடுத்து பார்த்துவிட்டு வந்த கடலூரைச் சேர்ந்த நண்பனொருவன் எள்ளல் தொனிக்க, ‘மச்சி பறச்சியாட்டம் இருக்காடா…’ என்று கூறிவிட்டு, சடுதியில் சுதாரித்து எனைப் பார்க்க, கோபத்தில் அவனைச் சுட்டெரித்த என் பார்வையைக் கண்டு அசடுவழிய என் கரம் பற்றினான். அவன் பிடியை உதறிவிட்டு அந்தக் குடிசைக்குள் சென்று பார்த்தேன். 

இருபது வயதுத் தோற்றமுடைய மாநிறத்தில், இளம் பெண்ணொருத்தி இளைக்கவும் இல்லாமல் கொழுக்கவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டவளாய் முக்காலி ஒன்றில் அமர்ந்து அலங்காரம் செய்துகொண்டிருந்தாள். அவளெதிரே வளையல், பூ, பொட்டு, வாசனைத் திரவியங்கள் என ஏராளமான அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிறிய அறைக்குள் அழகிய படுக்கை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அரையிருட்டில் அவள் என்னை நோக்கினாள். குற்ற உணர்ச்சி பெருந்தீயாய்ப் பற்றிக்கொள்ள, கூனிக் குறுகியது நெஞ்சம். கடலூர் நண்பனின் உடல் தோற்றத்தோடும் முக அழகோடும் ஒப்பிடுகையில் அவனைவிட அவள் பேரழகிதான். ஒரு வழியாக அவனிடம் பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டு, நண்பர்களின் எள்ளலோடு அவ்விடம் விட்டு நகர்ந்தோம் 

இன்னுமிருக்கின்ற குடிசைகளிலெல்லாம் வாழ்வைத் தொலைத்த பெண்கள் எண்ணிக்கையில் எத்தனையோ. புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் அறிந்த இத்தகைய பெண்களின் நிலையை முதன்முறையாக நேரில் பார்த்து உணரத் தொடங்கினேன். அத்தோடு நண்பனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட சாதி இழிவும் மனதைக் காயப்படுத்தியிருந்தது. அலை அலையாய்ப் பொங்கிய அரபிக் கடலில் நண்பர்களோடு நீராடத் தொடங்கினேன். சிப்பிகள் பொறுக்கினேன். நண்பர்களோடு பேருந்து ஏறினேன். மீண்டும் ஒரு நெடிய தொடர்வண்டிப் பயணத்திற்குப் பிறகு ஊர் வந்துசேர்ந்தோம். எல்லாப் பொழுதிலும் என்னைப் பின்தொடர்கின்றன சொற்களில் தெறிக்கும் வன்மங்கள்.

அந்த நான்காவது ஆணி

அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். புதிதாக, எங்கள் பள்ளிக்கு வந்திருந்த தலைமையாசிரியர், பள்ளியை அழகுபடுத்துவதில் ஆர்வத்தோடு இருந்தார். அவர் பணியாற்றிய காலத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்தான் ஓங்கி வளர்ந்து, அடர்ந்து படர்ந்து இன்றும் நிழல் தந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே, வகுப்பறைகளை அழகுபடுத்த வும், மாணவர்களின் சிந்தனை விரியவும், அறிஞர் பெருமக்களை மனதில் பதியவைக்கவும், தேசத் தலைவர்கள், கவிஞர்கள் எனக் கண்ணாடிச் சட்டங்களால் தரிக்கப்பெற்ற புகைப்படங்களை வாங்கி வந்திருந்தார். அவற்றையெல்லாம் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நான்கு நான்கு படங்களாகப் பிரித்துக் கொடுத்து, மாணவர்களின் பார்வையிலேயே இருக்கும் வண்ணம், ஆணியடித்து மாட்டச் சொல்லியிருந்தார். அப்படி எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியரிடமும் நான்கு படங்களைக் கொடுத்திருந்தார் தலைமையாசிரியர். 

எங்கள் வகுப்பில் இருக்கும் உயரமான மாணவர்களில் நானும் ஒருவன். அதுவும் வடக்குத் தெருவைச் சேர்ந்தவன். ஆணியடித்துப் புகைப்படம் மாட்டும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடுவதற்கு மரக்கன்றுகளைப் பிடுங்கி வரச் சொல்வது, வகுப்பறையில் ஒட்டடை அடிப்பது, கடைவீதிக்குச் சென்று வெற்றிலைச் சீவல் வாங்கி வருவது, விரல் சொடுக்கெடுப்பது . . . இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் வடக்குத் தெரு, தெற்குத் தெரு மாணவர்களையே தெரிவுசெய்வார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பிரிந்துகிடக்கும் இவ்விரு தெருக்களும் பறத்தெருக்கள். பறத்தெருப் பிள்ளைகளை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வேலைவாங்கினால் அது பாவக் கணக்கில் சேராது. அதைத் தட்டிக் கேட்கவும் பெற்றோர்கள் முன்வர மாட்டார்கள். வகுப்பாசிரியர் கரும்பலகைக்கு மேலே வரிசையாக ஒவ்வொரு படங்களுக்கும் இடைவெளி விட்டு ஆணியடிக்கச் சொன்னார். பக்கவாட்டாக ஒரே நேர்க்கோட்டில் ஒன்று, இரண்டு, மூன்று என ஆணிகளை அடித்தாயிற்று. 

நான்காவது ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொன்னார். ‘ஐயா நாலு படமும் ஒரே மாதிரிதானே இருக்கு. ஏன் இந்த ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொல்றீங்க?’ ‘இதெல்லாம் என்ன கேள்வி? சொன்னதைச் செய்யுடா கூமுட்ட,’ என்ன காரணமாக இருக்கும்? அமைதியாகி நான்காவது ஆணியைச் சற்றுக் கீழிறக்கி அடித்தேன். ஆசிரியர் ஒவ்வொரு புகைப்படங்களாக எடுத்துத்தர மேசைமீது நிற்கும் நான் ஆணியில் மாட்ட ஆயத்தமானேன். 

முதலில் தேசத் தந்தை காந்தியின் படத்தைக் கொடுத்து மாட்டச் சொன்னார். இரண்டாவது ஆணியில் ஜவகர்லால் நேரு படம். மூன்றாவது ஆணியில் பாலகங்காதர திலகர் படம். கீழிறக்கி அடிக்கப்பட்ட அந்த நான்காவது ஆணியில் மாட்டப்போகும் படத்தில் யாருடைய படமிருக்கும்? ஆவலாக நீளும் என் கைகளில் முனகிக்கொண்டே அம்பேத்கர் படத்தைக் கொடுத்தார். நான்கு படங்களையும் மாட்டிவிட்டு மேசையிலிருந்து கீழிறங்கி மேலே மாட்டப்பட்டுள்ள படங்களைப் பார்த்தேன். ஒரு படம் மட்டும் தனித்துக் கீழிறங்கி இருப்பது எனக்கென்னவோ அழகாகப் படவில்லை. திரும்பவும் அந்த வகுப்பாசிரியரிடம் ‘ஐயா நாலாவது படமும் நேரா மாட்டியிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்’ என்றேன். 

அவ்வளவுதான்; அவருக்குக் கோபம் தலைக்கேறி எனது கையை நீட்டச் சொல்லி மூங்கில் குச்சியால் ஓங்கி அடித்தார். வலி பொறுக்க முடியாமல் கையை உதறிக்கொண்டே எங்கள் தெரு மாணவர்கள் அமர்ந்திருக்கும் சுவரோரக் கடைசி வரிசையில் போய் அமர்ந்தேன். வலியையும் மீறி அந்தக் கேள்வி மட்டும் என் மூளையைக் குடைந்துகொண்டே இருந்தது. அந்த ஆசிரியரின் அச்செயலுக்கு அப்போது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை.

பாபாசாகேப் அம்பேத்கர்மீது அவருக்கு ஏன் அப்படியொரு வன்மம்? மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றையும், இந்து மத சாதிவெறி அரசியலையும் உணர்ந்த பின்னாளில் அர்த்தம் விளங்கியது எனக்கு. சாதி இந்துவான அந்த ஆசிரியருக்கும் அவரைப் போன்று எண்ணம் கொண்டோருக்கும் அம்பேத்கர் இன்னும் எங்கெல்லாம் என்னென்ன வழிகளிலெல்லாம் கடுப்பேற்றிக் கொண்டிருப்பாரோ தெரியவில்லை. 

எத்தகைய வலிமையானவர்களானாலும் மற்ற தலைவர்களோடு பொருத்திப் பார்க்க முடியாத தனித்துவமானவர் அம்பேத்கர். கீழிறக்கப்பட்டேனும் தனித்திருப்பதுதான் அவர் புகழுக்கு அழகென்று உணர்கிறேன். தீண்டாமை வன்மம் கொண்ட அந்த ஆசிரியனின் அகநிலை அம்பேத்கரின் படத்தை அப்புறப்படுத்த நினைக்கிறது. ஆனால் புறநிலையோ, அவரது கைகளாலேயே படத்தை மாட்டவும் செய்திருக்கிறது. சாதி இழிவை அழித்தொழிக்கத் தம் அறிவை ஆயுதமாக்கிய அம்பேத்கரின் வெற்றி அது என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

                                                                   

கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் (தன்வரலாறு)
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
விலை: 175
பதிப்பகம்: காலச்சுவடு 
தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com

இணையதள இணைப்பு: https://books.kalachuvadu.com/catalogue/u0b95u0bb1-u0bb5u0bb0u0ba8u0ba4u0bae-u0b95u0bb5u0bb3-u0bb5u0bb1u0bb1u0bb2u0bafu0bae-u0b9au0ba4u0bafu0ba9u0bb1-u0b9au0b9fu0b9f-u0bb5u0b9f_1084/
அச்சுநூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0BCZ6GSG5/
மின்நூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0BCS5WB2M/


1

2
1

அதிகம் வாசிக்கப்பட்டவை

அம்பேத்கர்மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்தே. தாமஸ் பிராங்கோமொழிப்போர் தியாகிகள்ஃபெட்எக்ஸ்மிரியா2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுவிடுதலைசுவேந்து அதிகாரிஆசை பேட்டிஆச்சரியங்களின் தேசம்ஜோ பைடன்கல்லூரிகள்தை புத்தாண்டுசவுரவ் கங்குலிபிரேசில்: மீண்டும் லூலா ராஜ்ஜியம்அப்பாவுவின் யோசனை இந்திய ஜனநாயகத்துக்கு முக்கியமானமருத்துவர் கணேசன்நாகூர் தர்காஇந்தியும் ஹிந்துவும்தான் இந்தியாவுக்குச் சொந்தமா?மாதிரிகள்சுயநிதிக் கல்லூரிகள்வ.ரங்காசாரிLICபி.ஏ.கிருஷ்ணன் சாவர்க்கர்பன்னாட்டுக் கல்விக் கூட்டாண்மைமெய்நிகர்நிவேதிதா லூயிஸ் கட்டுரைவளரிளம் பருவம்புதிய பயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!